49-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

19.SEPT.2012
புதன்

இளையராஜா மற்றும் மூன்றாம்பிறை தயாரிப்பாளர் ஜி.தியாகராஜனுடன் நான்.. (1981)

பாலு மகேந்திரா தொடர்கிறார்…(இளையராஜா என்ற மகாவித்வானும் நானும்.. -2)

–நன்றி 
http://ilayaraja.forumms.net/

எனது மூடுபனி படத்திலிருந்துதான் நான் இளையராஜாவுடன் பணியாற்றத் தொடங்கினேன் என்று சொல்லியிருந்தேன். மூடுபனி எனக்கு மூன்றாவது படம். ஆனால் இசைஞானிக்கோ அது நூறாவது படம். என்றும் சொல்லியிருந்தேன். மூடுபனி ஒரு சஸ்பென்ஸ் திரில்லர்.

–நன்றி 
http://ilayaraja.forumms.net/

எனது மானசீக ஆசான்களில் ஒருவரான ஆல்ஃபிரெட் ஹிச்காக் என்ற மாமேதைக்கு மரியாதை செலுத்தும் முகமாகத் தமிழில் நான் எடுத்த சஸ்பென்ஸ் திரில்லர். எனது ஷோபாவும் அழியாத கோலங்களில் நான் அறிமுகப்படுத்திய பிரதாப் போத்தனும் சேர்ந்து அற்புதமாக நடித்திருந்த படம்.

எனது இயக்கத்தில் வந்த முதற் படமான கோகிலாவில் மோகன் என்ற வங்கி ஊழியரை நான் நடிகராக அறிமுகப்படுத்தியிருந்தேன். கன்னடிகரான அவரை எனது மூடுபனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்துவைத்தேன். பிற்காலத்தில் தமிழ்த் திரை வானில் அவர் ஜொலிக்கும் நட்சத்திரமாகத் திகழ்ந்தது சந்தோஷம்.

மூடுபனி படத்திற்கு முன்பும் அதன் பின்புமாக யேசுதாஸ் பல நூறு பாடல்களைப் பாடியிருக்கிறார். இருப்பினும்,தனக்கு மிகவும் பிடித்த சினிமாப் பாடல் என்று இன்றுவரை அவர் சொல்லிக்கொண்டிருப்பது மூடுபனி படத்தில் வந்த ‘ என் இனிய பொன் நிலாவே ‘ பாடல் தான்.

https://i0.wp.com/www.salilda.com/images/kokila.jpgஅது ஒரு கனாக் காலம்

71 முதல் 76 வரை ஐந்து வருடங்கள் ஒளிப்பதிவாளனாக மட்டும் பணியாற்றிவிட்டு 76-ல் நான் திரைப்பட இயக்கத்தில் ஈடுபடுகிறேன். நான் இயக்கிய முதல் படம் கோகிலா. கன்னடப் படம். நான் இயக்கும் படங்களின் திரைக்கதை, ஒளிப்பதிவு, மற்றும் படத்தொகுப்பு ஆகியவற்றையும் நானே செய்வது வழக்கம்.

எனது முதற்படமான கோகிலாவிலிருந்து கடைசியாக வெளிவந்த அது ஒரு கனாக்காலம் வரை அப்படித்தான். நான் இயக்கும் படங்களுக்கான இசை, குறிப்பாக பின்னணி இசை எங்கு தொடங்கி எங்கு முடிய வேண்டும், அது எப்படிப்பட்ட இசையாக இருக்கவேண்டும் என்பவற்றில் நான் வெகு உன்னிப்பாக இருப்பேன். இவற்றையெல்லாம் அந்தந்தப் படங்களுக்கான திரைக்கதைகளை எழுதும்போதே நான் தீர்மானித்துக் கொள்வேன்.

Balu%20Mahendraஅது ஒரு கனாக் காலம்

படத்தொகுப்பு முற்றிலுமாக முடிந்து, அடுத்த கட்டமான இசைச் சேர்க்கைக்குத் தயாரானதும், அந்தப் படத்திற்கான இசை பற்றிய எனது எண்ணங்களை எனது இசையமைப்பாளருக்குத் தெளிவாகத் தெரியப்படுத்துவேன். எனது படங்களில் பிரக்ஞைப்பூர்வமாக நான் வைக்கும் மௌனங்களை, உணர்வு பொதிந்த, அர்த்தமுள்ள அந்த மௌனங்களை இசைகொண்டு கலைக்க வேண்டாம் என்றும் என் இசையமைப்பாளரிடம் நான் கேட்டுக் கொள்வேன்.

நான் இயக்கிய முதல் இரண்டு படங்களுக்கும் இசை அமைத்த இந்தியத் திரையிசையின் மாமேதைகளில் ஒருவரான சலீல் சௌத்ரி அவர்களிடமும் அந்தப் படங்களுக்கான இசை பற்றிய எனது எண்ணங்களைத் தெரியப்படுத்தியே அவற்றிற்கான இசையைப் பெற்றுக்கொண்டேன்.

மூடுபனி படத்தின் இசைச் சேர்க்கைக்கு முன், அதற்கான இசை எப்படி இருக்க வேண்டும் என்ற எனது எண்ணங்களை இளையராஜாவுக்கு மிக நுணுக்கமாகத் தெரியப்படுத்தியிருந்தேன்.

எனது மூன்றாவது படமான மூடுபனி இளையராஜாவுக்கு நூறாவது படம். மூடுபனிக்கு முன் 99 படங்களுக்கு இசையமைத்து வெற்றியின் உச்சத்தில் அவர் இருந்த காலம் அது. இசைஞானியுடன் பணியாற்றத் தொடங்கிய அந்த ஆரம்ப நாட்களில் ஒரு நாள் ராஜா என்னிடம் கேட்டார்.

” ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது? ”

என்ன மன நிலையில் அந்தக் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது என்பதை உடனடியாக நான் புரிந்துகொண்டேன். இசை அமைப்பதில் அதுவரை அவர் அனுபவித்து வந்த படைப்புச் சுதந்திரத்திற்குள் நான் மூக்கை நுழைக்கிறேனோ என்ற சந்தேகம் எனக்கே தோன்ற ஆரம்பித்திருந்தது. கொஞ்சம் யோசித்துவிட்டு நான் சொன்னேன்.

”  Raja. let me answer your question this way ” என்ற முன்னுரையுடன் பேச ஆரம்பித்தேன்.

ஒரு நதியானது அது ஆரம்பிக்கும் இடத்திலிருந்து அதாவது ‘நதிமூலம்’ என்று சொல்லப்படும் அதன் தொடக்கத்திலிருந்து கடலில் சென்று கலக்கும் வரை மாறிக் கொண்டே இருக்கும் அதன் தோற்றத்தையும், வேகத்தையும், ஆழத்தையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்…

ஆரம்பிக்கும் இடத்தில் அது ஒரு சிறிய ஊற்றாக இருக்கலாம். அப்படி ஆரம்பிக்கும் அந்த நதி சற்றுத் தள்ளி ஒரு சிறிய அருவியாக ஓடுகிறது. இன்னும் சற்றுத் தொலைவில் வேறு சிற்றருவிகள் சில அதனுடன் சேர்ந்து கொள்ள,அது ஒரு காட்டருவியாக உருமாறுகிறது. அதன் தோற்றத்திலும், வேகத்திலும் கணிசமான மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. இன்னுமொரு இடத்தில் நெடிதுயர்ந்து நிற்கும் பாறைகளிலிருந்து பேரழகும், பேரிரைச்சலும் கொண்ட நீர்வீழ்ச்சியாகக் கொட்டுகிறது. வேறு ஒரு இடத்தில் அது விரிந்து பரந்த நீர்த்தேக்கமாக ஸ்தம்பித்து நிற்பது போன்ற தோற்றத்துடனும் அதிக ஆழத்துடனும் காட்சியளிக்கிறது. அந்த நீர்த்தேக்கத்திலிருந்து வழிந்து கீழே உள்ள கூழாங்கற்களின் மீது ஒரு குட்டிப் பெண்ணின் குதூகலத்துடனும் சிலு சிலு என்ற சத்தத்துடனும் ஸ்படிகம் போன்ற தெளிவுடனும் துள்ளிக் குதித்தபடித் தொடர்கிறது.

இன்னும் சில இடங்களில் அது நிலத்தடி நீராக மாறிக் காணாமல் போய் விடுகிறது. பிறிதொரு இடத்தில் பொங்கும் சுனையாக அது வெளியே வந்து அகலம் குறைந்து, வேகம் அதிகரித்து அவசரம் அவசரமாக ஓடிச்சென்று கடலுடன் கலக்கிறது.

இப்படியாக ஒரு நதியானது அது ஆரம்பிக்கும் இடத்திலிருந்து இறுதியில் கடலுடன் சென்று கலக்கும் வரை அதன் தோற்றத்திலும் வேகம் மற்றும் ஆழம் ஆகியனவற்றிலும் மாறிக் கொண்டே இருக்கின்றது.

இந்த மாற்றங்களையெல்லாம் நதியா தீர்மானிக்கிறது?  இல்லவே இல்லை. ஒரு நதியின் அனைத்து மாற்றங்களையும் அதன் கீழேயுள்ள நிலப்படுகை தானே – நிலத்தின் அமைப்பு தானே தீர்மானிக்கிறது !

நான் பேசப் பேச ராஜாவின் அகத்தில் ஏற்பட்ட தெளிவு அவர் முகத்தில் தெரிகிறது.

இதுபோலத்தான் ஒரு திரைப்படத்தின் இசையும். ஒரு திரைப்படத்திற்கான இசையை, குறிப்பாக அதன் பின்னணி இசையை, அந்தப் படம் தான் – அந்தப் படத்தின் திரைக்கதை தான் script-தான் தீர்மானிக்கிறது. இசை மட்டுமல்ல, ஒளிப்பதிவையும், ஒலி அமைப்பையும், நடிப்பையும், படத்தொகுப்பையும், உடைகளையும் மற்றும் அந்தப் படத்தின் சகலத்தையும் தீர்மானிப்பது அதன் திரைக்கதை தான்! அதன் script-தான்.

கேட்டுக் கொண்டிருந்த ராஜாவின் முகத்தில் புன்னகை மலர்கிறது. கைதட்டி ஆமோதிக்கிறார்.

ஒரு திரைப்படத்தில் அதன் திரைக்கதையே மிக முக்கியமான அம்சம். அதன் தேவையை ஒட்டியே எல்லாம் இருக்க வேண்டும். திரைக்கதையின் தேவைக்கு அப்பாற்பட்டு, தன்னிச்சையாகச் செயல்படும் இசையோ, ஒளிப்பதிவோ, ஒலி அமைப்போ, நடிப்போ, அல்லது வேறு எதுவோ தனக்குத் தானே கவன ஈர்ப்பைக் கோரி நிற்குமே தவிர, சம்பந்தப்பட்ட படத்தோடு ஒட்டாது.

அவர் கேட்ட கேள்விக்கு நான் சொன்ன பதில் ராஜாவை வெகுவாகத் திருப்திப்படுத்தியது. முழுவதுமாகப் புரிந்துகொண்டார். அன்று முதல் இன்று வரை எனது படங்களுக்கான அவரது இசை அந்தந்தத் திரைக்கதைகளின் தேவையை ஒட்டியே இருந்து வருகிறது.

எனது படங்களில் வரும் பிரக்ஞைப்பூர்வமான மௌனங்களை மதிக்கத் தெரிந்தவர் அவர். எனது அர்த்தமுள்ள மௌனங்களின் அழுத்தத்தை என்றுமே இசைகொண்டு அவர் கலைத்ததில்லை. That is my Raja..!

அடுத்த பகுதி இத்தொடரின் நிறைவுப் பகுதி…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s