42-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

இந்தப் பாடல் பதிவு நடைபெற்றுக்கொண்டிருந்த நாளன்று வெளியூரில் இருந்து நிறைய கல்லூரி மாணவ மாணவிகள் ஸ்டுடியோவிற்கு ஷூட்டிங் பார்க்க வந்திருந்தார்கள். அப்படியே இளையராஜாவின் ரெக்கார்டிங் நடக்கிறது என்று கேள்விப்பட்டவர்கள் அனுமதியுடன் ரெக்கார்டிங் தியேட்டருக்குள் வந்திருக்கிறார்கள்.

இளையராஜா conduct செய்து கொண்டிருக்கிறார். அமைதியாக நின்று எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது திடீரென்று கமல்ஹாசன் வந்துவிட்டார். ரிகர்சல் முடிந்து எல்லோரும் அமைதியாக நிற்க இளையராஜா தான் மியுசிக் எழுதிய பேப்பரை கையில் எடுத்துக் கொண்டு கமலிடம் சென்று சற்று சத்தமாக, “கமல் சார்! எல்லாம் நீங்கள் சொன்னது போல எழுதி ரிகர்சல் செய்துவிட்டேன். சரியா இருக்கா? இல்லே வேறு எதாவது மாற்றணுமா? பார்த்துட்டு சொல்லுங்க” என்றிருக்கிறார். “கொஞ்சமும் இதை எதிர்பார்க்காத கமல் சற்று சுதாரித்துக் கொண்டு, “எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனால் இந்த இடத்தில் மட்டும் கொஞ்சம் மாற்றுங்கள், நான் எழுதியது போல வரவில்லை. கொஞ்சம் மாற்றினால் பர்ஃபெக்ட்டாக வந்துவிடும்” என்று ஒரு இடத்தை சுட்டிக்காட்டி சொல்ல, ஆர்க்கெஸ்ட்ரா குழுவினருக்கு இவர்கள் நாடகம் புரிந்ததால் தங்களுக்குள்ளேயே சிரித்துக் கொண்டார்கள்.

பார்த்துக்கொண்டிருந்த மாணவ மாணவிகளுக்கு இவர்கள் நாடகம் புரியாததால் அதை அப்படியே நம்பிவிட்டார்கள். “அய்யே, இவ்வளவுதானா? கமல்ஹாசன் சொல்வதைத்தான் இந்த இளையராஜா செய்கிறாராக்கும்” என்று தங்களுக்குள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டே கலைந்து சென்றிருக்கிறார்கள். அவர்கள் வெளியே போகும்வரை அமைதியாக இருந்துவிட்டு, அதற்கப்புறம், கமலும் இளையராஜாவும் அப்படியொரு சிரிப்பு சிரித்திருக்கிறார்கள்.

இந்த அளவிற்கு ஜாலியாக இருக்கும் இளையராஜா இசை விஷயத்தில் எப்போதுமே மிகவும் கண்டிப்பானவர். இசையில் மட்டும் ஏதாவது தவறு வந்துவிட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டார். அது யாராக இருந்தாலும். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், ஒரு முறை தனது அண்ணனான பாஸ்கர் மீதே கோபப்பட்டிருக்கிறார்.

ரெக்கார்டிங்கின் போது காங்கோ என்ற இசைக்கருவியை பாஸ்கர் வாசிப்பார். சில சமயம் அவர் இஷ்டப்படி வாசித்துவிடுவார். அதை வேண்டாம் என்று இளையராஜா சொன்னாலும், தம்பிதானே என்ற எண்ணத்திலோ அல்லது அவரை வேண்டுமென்று வெறுப்பேற்றவோ மீண்டும் தவறாக வாசிப்பார். இளையராஜாவிற்கோ கோபம் தலைக்கேறிவிடும். சத்தம் போட்டு வெளியே அனுப்பியிருக்கிறார்.

இந்த சம்பவம் போலவே நடந்த இன்னொரு சம்பவத்தைப் பற்றி இளையராஜாவே சொன்னது…

“ஒரு சமயம் ஒரு பாடல் பதிவிற்கு ஓபோ என்ற ஒரு இசைக்கருவியையும் பயன்படுத்தியிருந்தேன். அதற்காக கணேசன் என்பவர் வாசிக்க வந்திருந்தார். அவரை நாங்கள் கணேசண்ணா என்றுதான் அன்போடு அழைப்போம். நான் இசையமைப்பாளர் என்ற நிலைக்கு வருவதற்கு முன்னதாக கிடார் வாசித்த காலத்தில் என்னோடு எத்தனையோ ரெக்கார்டிங்கில் வாசித்திருக்கிறார். ஒரே டாக்சியில் போய் வந்திருக்கிறோம்.

இந்த பாடல் பதிவின்போது வரும் அந்த பிட் மியூசிக் நான் எதிர்பார்த்ததுபோல் வரவில்லை. இருந்தாலும் அந்த இடத்தில் நான் எதிர்பார்த்தபடி வரவேண்டும் என்று பலமுறை கேட்டும் ரிகர்சல் கொடுத்தும் வரவில்லை. கோவர்த்தன் மாஸ்டரும் சில முறை ரிகர்சல் கொடுத்து “இது எப்படி இருக்கு என்று கேளு” என்றார். எனக்கு நூற்றில் இருபத்து ஐந்து சதவீதம்கூட சரிப்படவில்லை. கடைசியில் “அவர் வாசிக்கவேண்டாம். போகட்டும்” என்று சொல்லிவிட்டேன்.

எத்தனையோ கால அனுபவம் உள்ளவர். எவ்வளவோ இசையமைப்பாளர்களைப் பார்த்தவர். இதெல்லாம் எனக்கு பெரிதாகப்படவில்லை. இதில் நான் நினைத்தபடி வரவில்லை என்றால் வேண்டாம் எதற்கு அந்த வாத்தியம். இதுதான் என் பக்க நியாயம்.

அவர் கொஞ்ச நேரம் அமைதியாக வாடிய முகத்துடன் இருந்துவிட்டு டாக்சி வந்ததும் வாத்தியத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார். அப்போது வருத்தப்படாத என் மனம் பல நாட்களுக்குப் பிறகு நினைத்து நினைத்து வருந்தியது.

தன் இசையில் காம்ப்ரமைஸ் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது கூடப் பிறந்த அண்ணனே ஆனாலும் தவறாக வாசித்தால் வெளியே போய்விட வேண்டியதுதான் என்பதை இசைக் குழுவில் இருந்த அனைவரும் தெரிந்து வைத்திருந்தார்கள். இதனால் சரியாக வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை இவர்களுக்குள் ஏற்படுத்தி ஒரு ஒழுக்கத்தைக் கொண்டுவரச் செய்திருந்தார் இளையராஜா.

தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s