37-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

1977-ல் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பாரதிராஜா போல இந்த ஆண்டு இன்னொருவர்.

செயற்கை ஜோடனை, மிதமிஞ்சிய வசன – நாடகப் பாணிகள் ஆகியவற்றில் இருந்து மீண்டு, யதார்த்தமான போக்கிற்கும் சினிமாவின் விஷுவல் தன்மைகளுக்கும் தாவ வேன்டும் என்று எத்தனித்துக்கொண்டிருந்தவர். இவர் வேறு யாருமல்ல, முன்னாள் பத்திரிக்கையாளரும், கதைவசனகர்த்தாவுமான அலெக்சாண்டர் என்ற மகேந்திரன்.

–நன்றி http://ilayaraja.forumms.net/

தன் முதல் படத்தை இந்த ஆண்டில் இயக்கினார். படத்தின் பெயர் முள்ளும் மலரும். எழுபதுகளின் “பாசமலர்”. பாசமலரிலே நடிப்புத்துறையிலும் இசை அமைப்பிலும் சில அபூர்வமான சுகந்தங்கள் காற்றில் கமழ்ந்து கதையின் செயற்கைத்தனங்களை மறக்கடித்தன. ஆனால் இந்த முள்ளும் மலரில் அளவான நடிப்பு, நம்பகமான கதாபாத்திரங்கள், அழகான பாடல்கள், அருமையான காட்சியமைப்புகள், அவற்றுக்கு ஏற்ற பின்னணி இசை இவையெல்லாம் படத்தைக் கலாசிருஷ்டியின் உச்சத்திற்குக் கொண்டுபோனது.

–நன்றி http://ilayaraja.forumms.net/

இந்தப் படத்தைப் பற்றி ஒரு சமயம் மகேந்திரன் சொன்னது…

“பின்னணி இசை சேர்ப்புக்கு முன் தயாரிப்பாளர் வேணு செட்டியார் படத்தை பார்த்துவிட்டு கலை அது இது என்று சொல்லி படத்தை செல்லாக்காசாக்கிவிட்டாரே என்று பயந்து தன் நண்பர்களிடம் சொன்னவர், பின்னணி இசை கொடுக்கப்பட்டபின் தான் அவருடைய பயம் முழுமையாக நீங்கியது.”

பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்திற்கு இளையராஜா எந்த அளவு முக்கியமாக இருந்தாரோ அதைவிட அதிக அளவு இந்தப்படத்திற்கு இளையராஜா காரணமாக இருந்தார். நான் என்ன எதிர்பார்த்து படத்தை எடுத்தேனே அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்தது இளையராஜாவின் இசை.

இப்படிக் காட்சிக்கும், அதை உயிரூட்டிய இசைக்கும் ஒரு தொடர்பு தமிழ் சினிமாவில் ஏற்பட ஆரம்பித்தது இளையராஜாவால் என்றால் அது மிகையாகாது. திரையில் ஒளியும்-ஒலியும் சிவ – சக்தி ஆயின.

அண்ணன் காளியிடம்(ரஜினி) திருமணமான தங்கை வள்ளி(ஷோபா) திரும்பும் காட்சியில் இந்த விந்தையைக் காணலாம்.

இந்த படத்தில் பாடல்கள் மிக அற்புதமாக அமைந்தன. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு பாடலை அமைத்திருந்தார் மகேந்திரன்.

நாயகன்(சரத்பாபு) இயற்கையின் வனப்பைக் கண்டு வியந்து பாடுவதுதான் பாடலுக்கான சிட்சுவேஷன். அப்படி ஒன்றும் இதில் புதுமை இல்லை. ஆனால் கண்ணதாசனின் வரிகளும், இளையராஜாவின் இசையும் நம்மை அந்த பாடலில் ஒன்றச்செய்தது. இயற்கையை வியந்து பாடவேண்டும் என்றாலே உடனே நம் மனதில் தோன்றும் ஒரு பாடலாக அமைந்தது இந்த “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா…”. இயற்கையை விட்டுச் செயற்கையின் எந்திர சூழலில் வாடும் (என்னைப் போன்ற) கோடிக்கணக்கான தமிழர்களுக்கு இதுபோன்ற பாடல்கள்தானே டானிக். அந்த சமூகப் பயன்பாட்டை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்? அதை யேசுதாசின் குரலில் அருமையாக நிறைவேற்றினார் இளையராஜா.

அடங்காப்பிடாரனான காளி(ரஜினி), ஒரு விபத்தில் கையை இழக்கப்போகிறான். அதற்கு முன் அவன் பாடும் “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே” பாடலில் என்ன ஒரு செருக்கு! இளையராஜாவோடு எஸ்.பி.பிக்கும், கங்கை அமரனுக்கும் சபாஷ் போட்டே ஆகவேண்டும்.

மண்வாசனையோடு வந்து நித்தம் நித்தம் நம்மை அள்ளிச்செல்லும் ” நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா…” பாடலை என்னென்று சொல்வது. கங்கை அமரன் ரசித்து ரசித்து எழுதியிருப்பார். படாபட் ஜெயலட்சுமிக்கான பாடல் இது.

இந்தப் படத்தில் இன்னொரு வித்தியாசமான குரல் ஒலித்தது. எம்.எஸ். ராஜேஸ்வரியின் பாப்பா குரலுக்கு தாவணி கட்டும் வயதில் ஜீன்ஸ் போட்டுவிட்டதைப் போல பாடகியின் குரலை “அடி பெண்ணே…. பொன்னூஞ்சல் ஆடும் இளமை….” என்று சிறகடிக்கவிட்டிருப்பார் இளையராஜா. படத்தில் ஷோபா பாடும் இந்த பாடலைப் பாடியவர் பிரபல பாடகி ஜென்சி.

பாடல்களும் பின்னணி இசையும் இந்தப்படத்திற்கு ஒரு முக்கிய பலமாக இருந்தது.

தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

முள்ளும் மலரும்…

– சுஜாதா தேசிகன்

ப்ரியா படம் நேற்று இரவு 11மணிக்கு சன் டிவியில் ஆரம்பித்த போது ஆர்வமாக பார்க்க உட்கார்ந்தேன். வசந்தாக வந்த அந்த நடிகரை பார்த்த போது ஸ்ரீதேவியை நினைத்து வருத்தப்பட்டேன். ரஜினி எப்படியும் அவரை காப்பாத்திவிடுவார் என்று டிவியின் மெயின் சுவிட்சை அணைத்த போது ஒரு மாசம் முன்பு அருண் “முள்ளும் மலரும் பார்த்துவிட்டு உங்க அப்பிராயத்தை எழுதி தாங்க” என்று சொன்னது நினைவுக்கு வந்தது.

முள்ளும் மலரும் நான் சின்ன வயசில் பார்த்திருக்கிறேன். எப்போது என்று நினைவில்லை ஆனால் சரத்பாபு பாடும் ‘செந்தாழம் பூவில்…” மட்டும் நினைவு இருக்கிறது. சின்ன வயசு கருப்பு வெள்ளை ஃபோட்டோவை பார்க்கும் போது ஒரு விதமான மகிழ்ச்சி ஏற்படும். அதே மகிழ்ச்சி எனக்கு நேற்று முள்ளும் மலரும் படம் பார்க்கும் போது ஏற்பட்டது.

இந்த கதையை தற்போது எடுக்க வேண்டும் என்றால் யாரும் தங்கள் கை காசை போட மாட்டார்கள். அதே போல ரஜினி இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிப்பாரா என்று தெரியாது. கதை என்று பெரிசாக ஒன்றும் இல்லை, ஆனால் பாத்திரப்படைப்பு, காட்சிகள் என்று போகிற போக்கில் கதையைச் சொல்லியுள்ளார்கள். சிவாஜி படங்களில் வருவது போல உதடு துடிக்க அழுவது மாதிரியும், பெரிய பெரிய வசனங்கள் எதுவும் இல்லாமல், அண்ணன் தங்கை பாசம் என்ற ஒரு சின்னக் கருவை படம் முழுக்க சொல்லியுள்ளார்கள். சரத்பாபுவை சுலபமாக வில்லனாக காட்டியிருக்கலாம் ( ரஜினியின் தங்கையை ஏமாற்றுவது மாதிரி ) ஆனால் அப்படி செய்யாமல் விட்டது தான் இந்த சினிமாவிற்கு பிளஸ்.

ஆரம்பக் காட்சியில் ரஜினியின் தங்கையாக வரும் அந்த சின்னக் குழந்தையின் கண்களில் தெரியும் சோகம் எப்படிக் கிடைத்தது ? அந்த சோகத்தை சாலையில் பிச்சைக்காரர்களின் குழந்தைகளிடம் தான் நான் பார்த்திருக்கிறேன்.

இன்று டைரக்டர்கள் படத்தில் நுணுக்கமான சில விஷயங்களைச் செய்யும் போது பாராட்டுகிறோம். ஆனால் இந்த படத்தைப் பார்க்கும் போது பல நுணுக்கமான விஷயங்களைக் கவனித்தேன். உதாரணத்துக்கு – ரஜினியைப் பற்றித் தப்பாக சரத்பாபுவிடம் சொல்லும் தன் சக ஊழியரைப் போட்டு அடித்துவிட்டு தன் நண்பர்களுடன் தெருவில் நடந்து வரும் போது அவர் தங்கை(ஷோபா) ஒளிந்துகொண்டு பார்ப்பார். ரஜினி கேஷுவலாக தெருவில் சாதாரணமாக பேசிக்கொண்டு போவார். அதில் வரும் அந்த வசனங்கள், அப்பறம் ரஜினி தூரமாக போகும் போது ஒலி fade out ஆவது எல்லாம் ‘அட’ போட வைக்கிறது. இதை 1978-ல் யாராவது கவனித்தார்களா என்று தெரியாது.

அடுத்து ரஜினி ரஜினியாக நடிக்காமல், காளி என்ற கதாபாத்திரமாக நடித்தது. தேவை இல்லாமல் சிகரெட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பது, பஞ்ச் வசனம் என்று எதுவும் இல்லாமல் டைரக்டர் சொல்வதைச் செய்தது இந்தப் படத்துக்கு பலம். இந்த கதாபாத்திரத்தை வேறு யார் செய்திருந்தாலும், படத்துக்கு பாதிப்பு வந்திருக்காது – very well crafted screenplay.

அதே போல எடிட்டிங் என்று பார்த்தால் செந்தாழம் பூவில் பாடலில் ஷோபாவின் முகபாவங்களைப் பொருத்தியது. குறிப்பாக ‘ராஜகுமாரி’ என்று வரும் இடத்தில். பல இடங்களில் பின்னணி இசை இந்தப் படத்தில் கிடையாது ஆனால் வரும் இடங்களில் தனியாகத் தெரியாமல் படத்துடன் கலந்து இருக்கிறது.

ஒளிப்பதிவு பாலுமகேந்திரா. அவரின் ஒளிப்பதிவு பற்றி சொல்ல வேண்டும் என்றால் உலகம் உருண்டை என்று சொல்வது போல. பல இடங்களில் ஷோபாவை ஸ்பெஷலாக தன்னுடைய கேமராவில் கவர்ந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். செந்தாழம் பூவில் பாடல் கடைசி சரணத்தில் வரும் சில காட்சிகள் ‘அடி பெண்ணே என்ற பாடலில் வரும் காட்சிகளே இதற்கு சாட்சி. கிராமத்து பெண்ணாக வரும் ஷோபா திடீர் என்று ஷாம்பு போட்ட தலையுடன் பூக்களுக்கு முத்தம் கொடுத்து சினிமா கதாநாயகியாக மாறிவிடுகிறார்.

வெண்ணீர் ஆடை மூர்த்தி வரும் காட்சிகளில் ஒரு படுக்கையும், அடுத்தவன் பெண்டாட்டியும் கூட வந்துவிடுகிறது. அடுத்தவன் பெண்டாட்டியை வைத்திருக்கும் ஒருவருக்கு பாசமிகு அண்ணன் எப்படித் தன் தங்கையைக் கொடுக்க முன் வந்தார் என்பது ஒரு நெருடல்.

நாவலைப் படம் எடுக்கும் போது கதையை முழுவதும் உள்வாங்கிக்கொண்டு அதை எடுக்க வேண்டும். இந்த நாவலைப் படித்ததில்லை ஆனால் மகேந்திரன் கதையை முழுவதும் உள்வாங்கிக்கொண்டு எடுத்திருக்கிறார் என்பது மட்டும் தெரிந்துகொள்ள முடிகிறது. அதே போல கதையைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறார் என்றும் தெரிகிறது.

முள்ளும் மலரும்” நாவலை நான் படித்த போது கதாபுருஷன் காளி வேலை செய்யும் Winch operator உத்தியோகமும் அவனுடைய வித்தியாச சுயகெளரவமும் என்னைக் கவர்ந்தன. நாவலில் காளியை புலி ஒன்று தாக்கி அவனது ஒரு கை போய் விடும். அந்த அத்தியாயத்தோடு நாவலை மூடி வைத்து விட்டேன். பிறகு காளி அவனது தங்கை வள்ளி இருவரின் குழந்தைப் பருவம் என்று ஒவ்வொன்றாகப் புதிது புதிகாகச் சேர்த்துக் கொண்டே போய் திரைக்கதையின் கடைசிக் காட்சி வரை என் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி திரைக்கதை எழுதி முடித்து விட்டேன். அப்போது நான் இயக்குனராகும் எண்ணத்திலேயே இல்லை.” – என்று மகேந்திரன் சொல்லியுள்ளார் என்ற தகவலைப் பார்த்தேன்.

வசனங்கள், மேதாவித்தனமாக இல்லாமல் படம் முழுவதும் இயல்பாக இருக்கிறது (மேதாவித்தனம் இருந்தால் சில சமயம் செயற்கைத்தனமும், நாடகத்தன்மையும் கலந்துவிடுகிறது.) அது எதுவும் இந்த படத்தில் இல்லை. நிச்சயம் சினிமா எடுக்கும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த பாடமாக அமையும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.

கவர்ந்த மேலும் சில விஷயங்கள்:
படம் ஆரம்பிக்கும் போது, என்னைக் கவர்ந்தது அதனுடைய டைட்டில் கார்ட். டைட்டில் கார்டில் பலருடைய பேர் இருந்தது என்றால் படம் பார்ப்பவர்களுக்கு அதை முழுவதும் படிக்க அவகாசம் தருகிறார்கள்.

படம் முடிந்தவுடன் “அண்ணன் தங்கை உறவு… ” என்று ஏதாவது போடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். “நன்றி” என்று போட்டு முடித்துவிட்டார்கள். அவர்களுக்கு என் நன்றி.

–நன்றி பேசாமொழி

தமிழ் சினிமாவின் உச்சகட்ட காட்சிகளிலேயே வெறும் தாள ஒலியில் இளையராஜா கொடுத்திருக்கும் அற்புதமான இசைப் பின்னணியில் நிகழும் முள்ளும் மலரின் க்ளைமாக்ஸ் காட்சி நிஜமான காவியத்தன்மை கொண்டது.

– பாஸ்கர்சக்தி

நான்கே பாடல்கள். ஒவ்வொன்றும் தனிவிதம். ராஜாவின் ஆகச்சிறந்த பாடல்கள் பத்தை பட்டியலிடச் சொன்னால், என்னளவில் “செந்தாழம்பூவில்” பாடலுக்கு நிச்சயம் ஒரு இடமுண்டு. மயக்கும் இசையும், உருக்கும் குரலும், கண்ணதாசனின் வரிகளுக்கு உயிரூட்டி உலவ விட்டிருக்கும். அதிலும் பாடலின் ஆரம்பத்தில் வரும் யேசுதாசின் ஹம்மிங் இருக்கிறதே அதை எப்படி எழுத்தில் வர்ணிக்க?!. இந்தப் பாடலுக்கு பாலுமகேந்திரா மாண்டேஜ் ஷாட்களை கையாண்டிருப்பார். இப்போது பரவலாக அனைவராலும் கையாளப்படுகின்றது.

மலைவாழ் மக்களின் இசைப்பின்புலத்தில் ஆரம்பிக்கும் “ராமன் ஆண்டாலும்” பாடலை எப்போது கேட்டாலும் உற்சாகம் தீயாக பற்றிக் கொள்ளும். காளி கதாப்பாத்திரத்தின் தன்மையை உள்வாங்காமல் எஸ்.பி.பியால் இதனை இத்தனைச் சிறப்பாக பாடியிருக்க முடியாது. நம் நாட்டுப்புறப் பாடல்களை திரையிசையில் திறம்பட கையாண்ட ஒரே இசையமைப்பாளர் ராஜா மட்டுமே. அன்னக்கிளியில் “மச்சானைப் பாத்தீங்களா”வில் ஆரம்பித்தது. இந்தப் படத்தில் வரும் ” நித்தம் நித்தம் நெல்லுச் சோறு” அவ்வகையில் சேர்த்தி. “மானினமே” பாடல் அண்ணன் தங்கை பாசப்பாடலாக ஆரம்பக் காட்சிகளில் வரும். இந்தப் பாடலை விட இதன் இசையை ஆங்காங்கே காளிக்கும், வள்ளிக்குமான உணர்வுப் பூர்வமான காட்சிகளில் பயன்படுத்தியிருப்பார் ராஜா. இந்த உத்தியை இவருக்குப் பின் வந்த இசையமைப்பாளர்கள் அனைவரும் பின்பற்றினர். பின்பற்றுகின்றனர்.

கையில் கட்டுப் போட்டு கிடக்கும் காளியை இஞ்சினியர் பார்க்க வரும் இடத்தில் வரும் இசை காளியின் மனநிலையை அத்தனை கச்சிதமாய் பிரதிபலிக்கும். கடைசிக் காட்சியில் வெறும் தாள வாத்தியத்தை மட்டும் வைத்தே ஆத்திரம், கோபம், இயலாமை எனப் பலவித உணர்ச்சிகளை கொட்டி நிறைத்திருப்பார். அதே நேரத்தில் வள்ளித் திரும்ப வந்து காளியைச் சேருமிடத்தில் அண்ணன் தங்கைப் பாசத்தை உணர்த்தும் அந்தப் பின்னணி இசை ஒலிக்கும். இப்படி படத்தை இசையால் நிரப்பியிருப்பார் ராஜா.

ராஜா, பின்னணி இசையில் தன் தனித்துவமான ராஜநடையை அழுத்தமாக பதித்த படம் இது.

– கார்த்திக் பாலசுப்பிரமணியன்

மனதை வருடும் இளையராஜாவின் அற்புதமான இசையில் வெளிவந்த ‘செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்’, ‘அடி பெண்ணே பொன்னூஞ்சலாடும் இளமை’, ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல’, ‘நித்தம் நித்தம் நெல்லுச் சோறு’ ஆகிய பாடல்கள் காலத்தால் அழியாத கானங்கள். ‘பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்’ என இயற்கையோடு, மனித மனங்களையும் வர்ணித்து எழுதியிருக்கும் கவிஞர் கண்ணதாசனின் வரிகளை உணர்வோடு வெளிப்படுத்தியிருக்கிறார் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ். அதே போல பாடலாசிரியர் பஞ்சு அருணாசலத்தின் ‘அடி பெண்ணே’ பாடலைத் தனது அற்புதமான குரலில் மிக மென்மையாக வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார் பாடகி ஜென்சி.

– எம்.ரிஷான் ஷெரீப்

முள்ளும் மலரும் காலம் தாண்டியும் நிலைத்திருக்க இன்னொரு முக்கிய காரணம், இளையராஜாவின் இசை. இந்த திரைப் படத்தில் நான்கு பாடல்கள் வருகிறது. நான்கிலும், பாடல் வரிகளும், மெட்டும், அதன் பின்னணி இசையும், அதை மகேந்திரன் காட்சி படுத்தி இருக்கும் விதமும் அழகின் உச்சம். எவ்வித தடங்கல்களும் இல்லாமல், மிக பத்திரமாக தாயின் கருப்பையில் இருக்கும்போது நாம் உணரும் கதகதப்பை இந்த பாடல்கள் மனதுக்குள் ஏற்படுத்துகிறது. குறிப்பாக செந்தாழம்பூவில் பாடல் கொடுக்கும் பரவசம் அமைதியின் இழப்பை நமக்கு உணர்த்துகிறது.

ராவன் ஆண்டாலும், பாடலில் இடையிடையே வரும், கோரஸ் நம்மை அந்த மலை வாழ் இடத்திற்கே அழைத்து செல்கிறது.

– அருண்

நன்றி பேசாமொழி

4 thoughts on “37-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

 1. Arvind June 3, 2013 at 4:23 AM Reply

  ”முள்ளும் மலரும்” கதை எழுதியவர் உமா சந்திரன். அது கல்கி வெள்ளி விழாப் போட்டியில் பரிசு பெற்ற தொடர் நாவல். ராஜாஜி அப்பரிசை வழங்கினார். உமா சந்திரன், நட்ராஜ் ஐ.பி.எஸ் அவர்களின் தந்தை.

 2. Arvind June 3, 2013 at 4:25 AM Reply

  இது பற்றி நட்ராஜ் சொல்கிறார் :

  “என் அப்பா கொஞ்சம் காலம் டெல்லியில் இருந்தார். பின் சென்னைக்கு வந்து விட்டார். அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். அப்பா பேச்சிலும் எழுத்திலும் எப்போதும் கண்ணியத்தைப் பின்பற்றியவர். Discipline of writing என்பது அவர் எப்போதும் வலியுறுத்திய விஷயம். ஏதாவது எழுத வேண்டும் என்றால் சமயங்களில் வீட்டில் அதற்கான சூழல்கள் இருக்காது. அதற்காக விடியற்காலையிலேயே எழுந்து கொண்டு வேலை நேரத்துக்கு முன்னதாகவே அலுவலகம் சென்று அங்கே அமர்ந்து எழுதுவார். எழுத்தை அவர் மிகுந்த dedication உடன் தியானம் போல, தவம் போலச் செய்வார். அது போல தான் செல்லும் இடங்களை, சந்திக்கும் நபர்களை, விஷயங்களை எல்லாம் ’நோட்ஸ்’ ஆக எடுத்து வைப்பது அவர் வழக்கம். இப்படி நிறைய ’நோட்ஸ்’ என்னிடம் இருக்கிறது. அப்பா ஒருசமயம் சென்னை வானொலியில் five years plan publicity project in charge ஆக இருந்தார். அப்போது நீலகிரி மாவட்டத்தில் குந்தா அணைக்கட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு ஒரு மாதத்திற்கு மேல் தங்கியிருந்தார். விஞ்சில் எல்லாம் சென்று பலரைச் சந்தித்து உரையாடினார். பேட்டி எடுத்தார். அப்போதுதான் ”முள்ளும் மலரும்” கதைக் கரு உருவானது. அங்கிருந்து வந்ததும் அதை எழுதி கல்கிக்கு அனுப்பினார். கல்கி வெள்ளிவிழாப் போட்டியில் அந்த நாவல் பரிசு பெற்றது. மூதறிஞர் ராஜாஜி அந்தப் பரிசைக் கொடுத்தார்.”

  மேலும் வாசிக்க : http://www.tamilonline.com/thendral/Auth.aspx?id=150&cid=4&aid=8549&m=m&template=n

  • BaalHanuman June 4, 2013 at 4:03 AM Reply

   நன்றி அரவிந்த் சார் கூடுதல் தகவல்களுக்காக…

 3. நெடுங்காலம் உமா சந்திரனையும் ரமணி சந்திரனையும் மாற்றி குழப்பிக் கொண்டிருந்தேன்.

  அடிக்கடி ரஜினி தனக்கு பிடித்த படமாக கூறுவது முள்ளும் மலரும். இதை எப்படி படிப்பது முள்ளும், மலரும் அல்லது முள் கூட மலரும் என்பதாகவா?

  எனக்கு மிகவும் பிடித்த படம். சிறுவர்களாக இருக்கும் போது வரும் அந்த மெலிதான மேளம், கடைசிவரை பயன்படுத்தப்பட்டிருக்கும். இறுதி காட்சியில் அதே மேளம், பார்வையாளர்களுடன் சேர்ந்து பயணிக்கும்.

  ராஜாவிற்காகவும், வித்தியாசமான ரஜினிக்காகவும் திரும்ப திரும்ப பார்த்த படம். ஜானி – அதுவும் இதே காரணங்களுக்காக.

  தெரிந்திருக்க கூடிய தகவல். செந்தாழம் பூவில் பாடலை படமாக்க உதவி செய்தவர் கமல். தயாரிப்பாளர் மகேந்திரன் மீது அவ்வளவு வெறியில் இருந்திருக்கின்றார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s