34-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர் அடிக்கடி போய் சந்திக்கும் நண்பர்களில் ஒருவர் கலைஞானம். அவர் அப்போது தேவர் பிலிம்ஸ் கதை இலாகாவில் இருந்தார். அவர் அப்போது ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும், இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவியாளராக இருந்த பாஸ்கர் என்பவர் படத்தை இயக்கப்போவதாகவும் இளையராஜாவின் அண்ணன்  பாஸ்கரிடம் சொல்லி, படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க ஒப்பந்தம் செய்யவேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். அவரும் இளையராஜாவிடம் இவரை அழைத்துச் செல்ல, கதை கேட்ட இளையராஜா இசையமைக்க ஒப்புக் கொண்டார்.

–நன்றி http://ilayaraja.forumms.net/

படத்தின் பெயர் பைரவி. படத்தின் நாயகன் ரஜினி. நாயகி ஸ்ரீப்ரியா. இயக்குனர் பாலசந்தரிடம் இரண்டு ஹீரோக்களாக கமலும் ரஜினியும் நடித்து கொண்டிருந்தவர்கள், தனித்தனி ஹீரோக்களாக நடிக்க முடிவெடுத்த காலகட்டம் இது. பாடல்பதிவிற்கு முன்னமே படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பில் ஒருமுறை ரஜினியை நேரில் பார்த்த இளையராஜா சொன்னது,

“ரஜினியை படப்பிடிப்பில் நேரில் பார்த்தபோது, ஒரு நெருப்பு கனன்று கொண்டிருப்பது போல இருந்தது. எனக்குள்ளும் அப்படி ஒரு நெருப்பு ஓடிக்கொண்டிருந்தது. அன்று எங்கள் இருவருடைய பேச்சும் சாதிக்க வேண்டிய இலக்கு பற்றியே இருந்தது.”

இன்று இருவரும் அவரவர் வழியில் சாதித்து விட்டனர்.

படப்பிடிப்பில் கலைஞானமும், பாஸ்கரும் இளையராஜாவிடம் சென்று தேவையான பாடல்களை உடனடியாக ரெக்கார்டிங் செய்யவேண்டும் என்று கேட்டதும், கவிதா ஓட்டலில் கவியரசர் கண்ணதாசனுடன் கம்போசிங் தயாரானது.

–நன்றி http://ilayaraja.forumms.net/

இயக்குனர் பாடல்களுக்கான சிச்சுவேஷனை சொல்ல ட்யூன்களை வாசித்துக்காட்டினார் இளையராஜா. ஒரு பாடலுக்கான சிச்சுவேஷனைக் கேட்டதும், கிராமப்புறத்தில் பாடப்படும் குழந்தைகளின் விளையாட்டுப்பாடலான நண்டூருது நரியூருது என்ற பாடலை பல்லவியாக வைத்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி ட்யூனை நண்டூருது நரியூருது… என்ற சந்தத்தை வைத்தே தொடங்கினார் இளையராஜா. கவியரசரும் நண்டூருது என்றே தொடங்கி பாடலை எழுதினார். இந்தப் பாடலின் சரணத்தில் தங்கையை இழந்து, தங்கையை கொன்றவர்களைப் பழிவாங்கத்துடிக்கும் அண்ணன் உச்சஸ்தாதியில் வரும் “ஏழைக்கு வாழ்வு என்று எழுதியவன் எங்கே?” என்ற வரிகள் அருமையாக இருக்கும்.

இந்த வரிகளுக்கு ஏற்ப படத்திலும் மிக அருமையாகப் படமாக்கியிருப்பார் இயக்குனர். இந்த வரிகளைப் படமாக்கும் போது இளையராஜாவும் படப்பிடிப்புத்தளத்தில் இருந்திருக்கிறார்.

இந்தப்படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களில் சொல்லவேண்டிய இன்னும் ஒரு பாடல் கவியரசர் அவர்கள் எழுதிய “கட்டபுள்ள குட்டபுள்ள… கருகமணி போட்ட புள்ள…” பாடல். இந்தப் பாடலின் கம்போசிங்கும் கவிதா ஓட்டலில்தான் நடந்தது.

இயக்குனர் கலைஞானத்தைப் பார்ப்பதற்காக சில வினியோகஸ்தர்கள் வந்திருந்தனர். அவர்களை கண்ணதாசன் அவர்களிடம் அறிமுகப்படுத்தினார் இயக்குனர். இவர்களைப் பார்த்ததுமே இளையராஜாவிற்கு கவிக்குயில் படத்தின் பாடல்பதிவின் போது ஏற்பட்ட சம்பவம் ஞாபகத்திற்கு வர பாடலை யாராவது பாடிக்காட்டுங்கள் என்று கேட்டால் பாடிக்காட்டக்கூடாது என்று முடிவு செய்துவைத்திருந்தார் இளையராஜா.

இந்த நேரத்தில் கண்ணதாசன் அவர்களுக்கு அறிமுகப்படுத்திய பின் கலைஞானம் இளையராஜாவைப் பார்த்து “பாடலை கொஞ்சம் வாசித்துக்காட்டுங்கள்” என்றார். எல்லோரும் ஆவலுடன் இளையராஜா பாடுவார் என்று எதிர்பார்க்க இளையராஜாவோ ஆர்மோனியத்தை மூடிவிட்டு எழுந்து கலைஞானம் அவர்களிடம் கூலாக, “இங்கே பாடினால் ஒன்றும் புரியாது. டி.எம்.எஸ்., சுசீலாவை பாடவைத்து மியூசிக்கோடு ரெக்கார்டு செய்து போட்டுக்காட்டிவிடுவோம். அப்போது நன்றாக இருக்கும்” என்றிருக்கிறார். இதை பார்த்த எல்லோரும் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்திருக்கிறார்கள்.

இதுபோன்றதொரு நிகழ்ச்சியை பார்த்ததில்லை என்பது கண்ணதாசன் அவர்கள் பார்த்த பார்வையிலேயே தெரிந்தது என்று ஒருமுறை இளையராஜாவே இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தபோது சொல்லியிருக்கிறார்.

இந்தப்படத்தின் பின்னணி இசைச் சேர்ப்பின் போது கலைஞானத்திற்கும் இளையராஜாவிற்கு ஒரு சிறு பிரச்சனை ஏற்பட்டது. இதற்கு மேலே சொன்ன சம்பவம்தான் காரணமா என்று தெரியவில்லை. பின்னணி இசைசேர்ப்பிற்கு படம் தயாரானதும் கலைஞானம் இளையராஜாவிடம் வந்து இன்னும் மூன்று நாட்களுக்குள் பின்னணி இசையை முடித்தாகவேண்டும். அதற்கு மேல் ஆககூடாது என்றும் அந்த அளவிற்குதான் என்னிடம் பணம் உள்ளது என்றும் சொல்லியிருக்கிறார்.

இளையராஜாவோ, “படத்தின் ஆரம்பத்திலேயே கிளைமாக்ஸ் காட்சிகள் போல ஹீரோவின் தங்கையை கெடுப்பது, அவளின் மரணம், அதன் இறுதிக்காட்சிகள், வில்லனின் ஆட்களோடு சண்டை என்று போய்க்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாது படம் முழுவதுமே மிகவும் சீரியஸாக மனதை தொடும் விதத்தில் அமைந்திருக்கிறது. மூன்று நாட்களுக்குள் முடிக்கமுடியுமா என்பது சந்தேகம்” என்றிருக்கிறார். கலைஞானமோ வேறு எதுவும் சொல்லாமல், அதெல்லாம் தெரியாது மூன்று நாட்களுக்குள் முடித்தாகவேண்டும் என்றே சொல்லியிருக்கிறார். இளையராஜாவிற்கோ கோபம். மூன்று நாட்களுக்கு மேல் போனால் யார் சம்பளம் கொடுப்பது? அப்படி மூன்று நாட்களுக்கு மேல் போனால் எனக்கு நீங்கள் சம்பளம் தரவேண்டாம், ஆனால் ஆர்கெஸ்ட்ராவிற்கு கொடுத்துவிடுங்கள் என்று சொல்லி பின்னணி இசைசேர்ப்பை ஆரம்பித்தார் இளையராஜா.

கிட்டதட்டப் படத்தின் எல்லா ரீல்களிலுமே மியூசிக். மூன்று நாட்களுக்குள் முடியவில்லை. இரவு 9 மணிக்கு முடியவேண்டிய கால்ஷீட் இரவும் தொடர்ந்தது. அதிகாலை 4.30க்கு படத்தை முடித்தார் இளையராஜா. கலைஞானம் பாக்கி சம்பளப் பணத்தை இளையராஜாவின் கையில் வைத்தார். ” நீங்கள்தான் பணம் இல்லை என்றீர்களே பரவாயில்லை எனக்கு எந்த வருத்தமுமில்லை. ஆர்க்கெஸ்ட்ராவிற்கு மீதிப் பணத்தை தந்துவிடுங்கள்” என்றார் இளையராஜா. கலைஞானமே, “இல்லை இல்லை கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு பேசிய தொகை கொடுத்தால்தான் மரியாதை” என்று சொல்லி இளையராஜாவை வேறு வார்த்தை பேசவிடாமல் சம்பளப் பணத்தை அவருடைய கையில் வைத்திருக்கிறார்.

முதல்முறையாக மூன்றே நாட்களில் படத்தை முடிக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலை இந்த படத்தில்தான் வந்தது என்று சிறு வருத்தத்தோடு இளையராஜாவே பகிர்ந்து கொண்ட ஒரு சம்பவம் இது. வேகமாகவும், அதே சமயம் நல்ல இசை தருவதில் எந்த ஒரு Compromise-ம் இல்லாமல் தந்ததில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் என்று சந்தோஷப்பட்டும் இருக்கிறார் இளையராஜா.

தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s