27-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

மேற்கத்திய இசையில் நல்ல தேர்ச்சி பெற்ற எனக்கு ஒரு இசையமைப்பாளராவதுதான் லட்சியமாக இருந்தது. அப்போதுதான் என் வாழ்வில் இன்னொரு திருப்பம் நிகழ்ந்தது. அப்பா ஒரு தீவிரமான நாத்திகர். அம்மா ஒரு தீவிரமான கத்தோலிகர். அதனால் எனக்கு எப்போதும் சர்ச் சார்ந்த இசை அறிமுகமே இருந்தது. ஒருநாள் என் நண்பன் ஒருவன் வற்புறுத்தி கல்கத்தா வந்திருந்த உஸ்தாத் பிஸ்மில்லா கானின் கச்சேரிக்கு அழைத்துச் சென்றான். அதுவரை மேற்கத்திய இசையை மட்டுமே பெரிதாக நினைத்த என் மனத்தின் அகங்காரம் முற்றாகக் கழன்று விழுந்தது. ஒரே அழுகை, என்னவோ என்னைப் பிடித்து உலுக்கிவிட்டது. அந்த நாளை இன்னும் கூட என்னால் தெளிவாக எழுத்தில் வடிக்க முடியவில்லை.

அப்போது என் தந்தைக்கு மகாராஷ்டிராவுக்கு மாற்றலானது. புனேயின் கலாசாரச்சூழல் பிடிக்காமல் என் அப்பா, எங்கள் குடும்பத்தை கோலாப்பூரில் குடியமர்த்தினார். வார இறுதிகளில் வந்துவிடுவார். உள்ளுக்குள் ஹிந்துஸ்தானி நெருப்பு எனக்குத் தீராமல் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. என் பக்கத்துவீட்டுக்காரர்களின் பரிந்துரையின் பேரில் என் குருவை சந்தித்தேன். அவரிடம் என்னை அறிமுகப்படுத்தியவர்கள் என்னை எச்சரித்தே அனுப்பியிருந்தார்கள். அவர் சரியான முசுடு. யாரையும் மதிக்க மாட்டார் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். அவருக்குள் மூச்சுக்காற்று போல இசை ஓடிக்கொண்டேயிருந்தது. கூடவே ராமஜபமும்.

என்னை ஏற இறங்கப்பார்த்த அவர், எதற்காக நான் இசை கற்றுக்கொள்ள நினைக்கிறேன் என்று கேட்டார். உஸ்தாத் பிஸ்மில்லா கானின் இசை என்னை உலுக்கி அழவைத்தது. அந்த மனநெகிழ்வு எப்போதும் என்னுடனே இருக்க வேண்டுமென்பதற்காக இசை கற்றுக்கொள்ள நினைக்கிறேன் என்றேன். என்னையே பார்த்துக்கொண்டிருந்த அவர் முகம் உடனே கலங்கி எந்தக் கட்டுப்பாடுமின்றி கண்ணீர் வரத்தொடங்கியது. ‘எப்பேர்ப்பட்ட கலைஞர் இல்லையா? அவர் பெயரைச் சொன்னதற்காகவே உனக்கு சங்கீதம் கற்றுத்தர முடிவு செய்துவிட்டேன். தினம் ஒரு ரூபாய் காணிக்கை அந்த உண்டியலில் போட்டுவிடு. அது என் ராமருக்கு’ என்று என் சிட்சை தொடங்கியது.

ஊரெல்லாம் முசுடு என்று ஒதுங்கிப்போகும் அவர், உள்ளுக்குள் ஒரு குழந்தை என சில நாட்களிலேயே தெரிந்தது. எந்நேரமும் நாத லயிப்புதான் அவருக்கு. மோகமுள்ளில் பாபுவின் குரு ரங்கண்ணாவைப் போல. இந்தியாவின் கிட்டத்தட்ட அத்தனை இசைமேதைகளையும் கேட்டுவிட்ட என்னால் அவர் ஒரு மாமாபெரும் இசைமேதை என நிச்சயம் சொல்ல முடியும். திடீர் திடீரென்று மனம் நெகிழ்ந்து ஏதாவது இசைமேதையைப் பற்றிப் பேசத்தொடங்கிவிடுவார். ரோஷன் இசையமைத்த ‘ஏ இஷ்க்கு இஷ்க்கு ஹைன் இஷ்க்கு இஷ்க்கு’ கவ்வாலியைக் குறித்து அவரால் கண்ணீர் சிந்தாமல் பேசவே முடியாது. எல்லா இடத்திலும் அவருக்கு ஏதோ இசை கேட்டுவிடும்.

ஒருநாள் மிகவும் நெகிழ்ந்த மனநிலையிலிருந்த அவர், என்னைப் பார்த்ததும் ஓடிவந்து ஆரத்தழுவிக்கொண்டார். ‘எப்பேர்ப்பட்ட கலைஞன்! நீயும் தமிழந்தானே… நீதான் எத்தனை கொடுத்துவைத்தவன்!’ என்று புலம்பத் தொடங்கிவிட்டார். அவர் பல கர்நாடக இசைமேதைகளை – ஜி.என்.பி, ராம்நாட் க்ருஷ்ணன், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்றவர்களைக் கொண்டாடுபவர் எனத் தெரியும். அதுபோக அந்தக்கால தியாராஜ பாகவதர், சின்னப்பா தொடங்கி கே.வி.மகாதேவன், சி.ராமச்சந்திரா, சுப்பாராவ், ஜி.ராமநாதன் என அத்தனை பேரின் முக்கியமான படைப்புகளையும் கேட்டவர். வருடத்தின் பாதியை அவர் பயணத்தில், கோயில்களை தரிசிப்பதில் செலவழிப்பவர். இந்தியாவின் அத்தனை பகுதிகளையும் அவர் நடந்தே சுற்றியிருக்கிறார். ஒவ்வொரு பகுதியின் முக்கியமான பல இசைக்கலைஞர்களையும் அதனால் அவர் தெரிந்து வைத்திருந்தார். அப்படித்தான் தமிழக இசைமேதைகளும் அவருக்கு அறிமுகம். அதனால் அன்றைய உருப்படி யாராயிருக்கும் என்று எனக்குள் குழப்பம்.

‘என்ன கலைஞனடா இவன்! இவனுடைய பிற பாடல்கள் கிடைக்குமா? உனக்கு நிச்சயம் தெரிந்திருக்குமே?’ என்றார். அவர் அப்படி உருகிக்கேட்ட இசைக்கலைஞனின் பெயர் ‘இளையராஜா’.

–ராபர்ட் சின்னதுரை

தொடரும்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s