துரித உணவுகளின் தலைவன் – RVS


Venkatasubramanian Ramamurthy

முதலில் நண்பர் RVS பற்றி ஓர் சிறிய அறிமுகம். Facebook மூலமாக சமீபத்தில் தான் இவர் பரிச்சயம். மன்னார்குடிக்காரர். நகைச்சுவை உணர்வு அபாரம். எழுத்து இவருக்கு வசப்பட்டுள்ளது. அவரது முன் அனுமதி பெற்று அவரது ‘துரித உணவுகளின் தலைவனை’ இங்கே பகிர்கிறேன்…

அதற்கு முன் நம் சாவி உப்புமா பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்…

ஊரே மணக்கும் சேமியா உப்புமா – சாவி (பழைய கணக்கு)

சிறு பையனாக எங்கள் கிராமத்துத் தெருக்களில் சுற்றி வந்த போது நான் எந்தக் கலரில் சட்டை போட்டிருந்தேன் என்பது கூட இப்போது எனக்கு நினைவிருக்கிறது. தினமும் எங்கள் வீட்டுப் பசு மாட்டை மேய்ச்சலுக்குக் கொண்டு போய் ‘மந்தை’யில் விட்டு வருவது என் அன்றாட வேலைகளில் ஒன்று.

ஒரு நாள் குண்டு அய்யர் என்று ஒருவர் குண்டு போட்ட மாதிரி எங்கள் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார். அந்தக் காலத்தில் கன்னையா கம்பெனி போன்ற நாடகக் கம்பெனிகளில் நடிகராக இருந்து ஓய்வு பெற்றதும் சொந்த ஊருக்கே (மாம்பாக்கம்) திரும்பி வந்து விட்டார். காமெடியன் என்பதால் எனக்கு அவரிடம் ஒரு தனிப் பற்றுதல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் வாரம் சாப்பிடுவது என்று ஒரு பழக்கம் உண்டு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் அவருக்குச் சாப்பாடு போட்டு அவர் கடைசிக் காலத்தைச் சிரமப்படாமல் பார்த்துக் கொள்வது என்று ஊரார் முறை வைத்துக் கொண்டார்கள். குண்டு அய்யர் எங்கள் வீட்டுக்கும் வாரம் சாப்பிட வருவார். கிராமங்களில் பகல் சாப்பாட்டுக்கு உச்சி வேளை ஆகி விடுமாதலால், குண்டு ஐயரால் அதுவரை பட்டினி கிடக்க முடியாது. காலையில் டிபன் சாப்பிட்டுப் பழக்கமானவர். எனவே தினமும் அவர் தங்கியிருந்த வீட்டில் அவரே எதாவது டிபன் தயார் செய்து கொள்வார். அவர் சேமியா உப்புமா செய்தால் ஊரே மணக்கும்.

காலை வேளையில், ஒரு சின்ன வாணலியில் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சேமியாவையும், முந்திரியையும் பொன் முறுகலை வறுத்து அந்த வாசனையில் ஆளைக் கிறங்க அடித்து விடுவார். தினமும் காலை நேரத்தில் நான் மந்தைக்கு மாடு ஓட்டிச் செல்லும்போது என்னைக் கூப்பிட்டு ஒரு சின்னக் கிண்ணத்தில் வைத்துத் தருவார். மோர் சாதமும் நார்த்தங்காய் ஊறுகாயும் தவிர வேறெதுவும் கண்டிராத என் நாக்கு இன்னும் கொஞ்சம் தர மாட்டாரா என்று ஏங்கும். இன்றைக்கும் எங்காவது சேமியா உப்புமாவைக் கண்டால் குண்டு அய்யரின் கை வண்ணம் அடி நாக்கில் ருசி தட்டும். கண் முன்னே ஒரு வினாடி கிராமம் தோன்றி மறையும்.

சுவையான சாப்பாடு, மணக்கும் காஃபி இரண்டுமே சாவிக்கு ரொம்பப் பிடித்தவை. ‘நான் சாப்பாட்டு ரசிகன்; சாப்பாட்டு ராமன் அல்ல‘ என்று சொல்வார் அவர். ரொம்பவும் குறைவாகத் தான் சாப்பிடுவார். சாப்பாடு சுவையாக இருக்க வேண்டும். ருசியாகச் சமைக்கவும் தெரியும் அவருக்கு. ரவா உப்புமா பற்றி ‘வாஷிங்டனில் திருமணத்‘தில் ஒரு வர்ணனை வரும். அதைப் படிக்கும்போதே நாக்கில் ஜலம் ஊறும். அவ்வளவு ரசனையோடு எழுதியிருப்பார். ரவா உப்புமா என்றால் அதற்கு என்னென்ன போட வேண்டும், எவ்வளவு போட வேண்டும் என்பதை அவர் மிக நேர்த்தியாகச் சொல்வார். அவரோடு நான் ஜப்பான், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்குப் போயிருந்தபோது சமையல் பற்றிய அவரது நுணுக்கமான அறிவைக் கண்டு வியந்து போயிருக்கிறேன்.

ஹாங்காங்கில் நண்பர் பாலன் சச்சித் அவர்கள் வீட்டிலும், சிங்கப்பூரில் நண்பர் யாகப் அவர்களின் வீட்டிலும் “இப்படிச் செய்… அப்படிச் செய்…” என்று அவர் சொல்லச் சொல்ல நான் சாம்பார், உருளைக் கிழங்கு வறுவல் எல்லாம் செய்திருக்கிறேன். மணக்க மணக்க கிச்சடியும்ரவா உப்புமாவும் கிண்டிய நாட்கள் மறக்க முடியாதவை.
– ராணி மைந்தன் சாவி – 85   
சாவி-85  நூலின் ஆசிரியர், திரு. ராணிமைந்தன், ஒரு கால் நூற்றாண்டு காலம், அமரர் சாவியோடு, நெருங்கிப் பழகி, பணியாற்றியவர்.

ராணி மைந்தன் குறிப்பிட்ட ரவா உப்புமா பற்றிய சாவி அவர்களின் வர்ணனை இதோ வாஷிங்டனில் திருமணத்திலிருந்து…

வாஷிங்டனில் திருமணம்

கிச்சனுக்குள் இருந்த வந்த கம்மென்ற வாசனை உள்ளே ரவா உப்புமா தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதை அறிவித்துக் கொண்டிருந்தது.

‘மொத்தமாக ரவா உப்புமா கிண்டுகிறபோது, வருகிற வாசனையே அலாதிதான்’ என்று மூக்கை உறிஞ்சி இழுத்தார் அம்மாஞ்சி.

கறிவேப்பிலை, இஞ்சி, எலுமிச்சம்பழம், பச்சை மிளகாய், முந்திரிப் பருப்பு இந்த ஐந்தும் சேருகிறபோது ‘அடடா‘ என்று நாக்கில் தண்ணீர் சொட்டக் கூறினார் சாம்பசிவ சாஸ்த்ரிகள்.

‘பச்சைப் பசேல்னு வாழை இலையைப் போட்டு, அதன் மேலே புகையப் புகைய நெய்யுடன் மினு மினுக்கும் உப்புமாவை வைக்கிறபோது , அதில் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டிருக்கும் முந்திரியை விரலாலே தள்ளிச் சாப்பிட்டால் அந்த ருசியே விசேஷம்தான்!’ என்றார் அம்மாஞ்சி.

‘வாஷிங்டன் நகரத்திலே வாழை இலை போட்டுச் சாப்பிடறது அதை விட விசேஷம்!’ என்றார் சாம்பசிவ சாஸ்த்ரிகள்.

உப்புமா பற்றி நமது தாளிக்கும் ஓசை ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்…

பல ஆண்களுக்கு உப்புமா என்றால் அலர்ஜி. பல பெண்களுக்கு உப்புமா (செய்வது) வரப்பிரசாதம் மாதிரி. சின்ன கேப் கிடைத்தாலும் சுலபமாகச் செய்து, தலையில் கட்டிவிடுவார்கள். மரத்தடியில் ஷைலஜா உப்புமா என்றதும் ‘கூப்டீங்களா?’ என்று ஓடோடி வருவார். பொறாமையாக இருக்கும்.

என்னைப் பொருத்த வரை உப்புமா ஒரு தெய்வம். அல்லது அதற்கும் மேலே. ஏனா? தெய்வத்தைவிட அதிகமாகவே என் வாழ்க்கையை சோதித்த உப்புமாவை வேறு எப்படிச் சொல்வது? மிகவும் அடிபட்டுப் (ஏன் என்ற காரணம் தான் தெரியவில்லை) போனேன். தொலைப்பேசி என்பதே அரிதாக இருந்த காலத்தில், கஷ்டப்பட்டு அம்மாவைப் பிடித்து ‘என்ன தப்புன்னே தெரியலை, சரியாவே வரலைம்மா’ என்றால், ’இதைச் சொல்ல வெக்கமா இல்லையா?’ என்று மேம்போக்காகக் கேட்டுவிட்டு வேறு கதை பேச ஆரம்பித்துவிடுவார். கடைசி வரை எனக்கு வெட்கமும் வரவில்லை; அம்மாவிடமிருந்து விடையும் வரவில்லை. 

ரவை சரியில்லையா இருக்கும்  என்றெல்லாம் சொல்லிப் பார்த்து, ப்ராண்ட் மாற்றி ப்ராண்ட் உபயோகித்தும் சரிவராமல், வாணலி சரியில்லை என்று விதவிதமாக மாற்றிப் பார்த்தும் சரிவராமல்– அதற்காக மனைவியையா மாற்ற முடியும்?– உன்னோட ’வாழறதுக்காக சாகற அளவுக்கு ரிஸ்க் எடுக்கமுடியாது’ என்ற சொல்லிக்கொண்டு கணவரே சுய நினைவுடன் அந்தப் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொண்டார். அப்பாவை சமையலறையில் பார்த்தாலே, ‘இன்னிக்கி உப்புமாவா?’ என்று பெண் கிண்டலடிக்கும் அல்லது சலித்துக்கொள்ளும் அல்லது என்னை முறைக்கும் அளவுக்குப் பிரசித்தம்.

எப்பொழுதாவது சில சமயம் எனக்கும் மிகப் பிரமாதமாக வந்து ஆட்டத்தில் அதிர்ச்சி வெற்றியும் கிடைத்திருக்கிறது. ஆனாலும் விருந்தினர் யாராவது இருந்தால், எந்த அவசரத்திலும் கூட இந்த முயற்சி எல்லாம் எடுப்பதே இல்லை. ‘சீ, சீ அதெல்லாம் ஒரு டிபனா? நீங்க வராதவங்க வந்திருக்கீங்க!’ என்று கெத்தாகப் பேசி நழுவிவிடுவேன். இப்பொழுதும் உப்புமாவை மட்டும் ஒரு புதுப்பெண் மாதிரி பயத்துடனேயே தயாரிக்கிறேன். :( ((

Note from BalHanuman: Over to RVS now…

Venkatasubramanian Ramamurthy

இந்தப் பெருமை வாய்ந்த பாரத தேசத்தில் சிலருக்கு தமிழில் உப்புமா, தெலுங்கில் உப்பிண்டி, கன்னடத்தில் உப்பிட்டு என்றால் ரமணா விஜயகாந்த் ஸ்டைலில்(கண்கள் சிவக்கச் சிவக்க) “பி-டி-க்-கா-த வா-ர்-த்-தை”. காதை மூடிக்கொண்டு காத தூரம் ஓடிவிடுவார்கள். ஏன் என் சுற்றம் நட்பில் நிறைய பேருக்கு அதைக் கண்டால் முகத்தை சுளிக்க வைக்கும் ஒருவித அஜீரண அலர்ஜி. அஷ்டகோணலாகிவிடும்.

அதையே தாராளமாக அரைப்படி சர்க்கரையைக் கொட்டி ரெண்டு ஏலக்காய் தட்டிப்போட்டு கேசரி பவுடர் கொஞ்சம் தூவி இறக்கினால் சிங்கிள் ரவை மிச்சம் வைக்காமல் அந்தக் கேசரியை எல்லோரும் தட்டை நக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விடுவார்கள். எனக்கு ரவா உப்புமாவும் ரொம்ப பிடிக்கும். அதுவும் கல்யாணம் ஆன புதிதில் என் தர்மபத்தினி கொழகொழன்னு மாரியம்மன் கோயில் கூழ் மாதிரி கிண்டின “ரவா உப்புமா” (எ) “ரவா பேஸ்ட்” ரொம்ப ரொம்ப பிடிக்கும். அடடா.. என்ன ருசி. என்ன ருசி. அல்வா போல தொண்டையில் வழுக்கிக்கொண்டு உள்ளே இறங்கியது. பதிலுக்கு மல்லிப்பூ வாங்கிக் கொடுத்தேன். “பிடிச்சிருக்கா?” என்று கையில் கரண்டியோடு ஏக எதிர்பார்ப்பில் கேட்டபோது சின்னவ மானஸா மாதிரி கை ரெண்டையும் சிறகாக அகல விரித்து “அவ்ளோ பிடிச்சிருக்கு”ன்னு மனமாரச் சொன்னேன்.

ராத்திரி பதினொன்னரைக்கு பொட்டியும் கையுமாக வந்திறங்கும் திடீர் மாமா-மாமிக்களுக்குப் பசிப்பிணி தீர்க்கவல்லது ரவா உப்மா. பத்து நிமிடத்தில் சாப்பிட்டுவிட்டு பனிரெண்டுக்கு காலை நீட்டிப் படுத்து குறட்டை விடுவார்கள். செய்வதும் ஈசி, உண்பதும் ஈசி. ஜீரணமும் ஈசி. தொட்டுக்க ரெண்டு ஸ்பூன் சர்க்கரை யதேஷ்டம். முதல்நாள் ராத்திரி மாங்காய்த் தொக்கோடு ரவா உப்புமாவை பிசிறி சாப்பிட்ட என்னுடைய உறவினர் ஒருவர் மறுநாளும் நாக்கைச் சப்புக் கொட்டி அதே காம்பினேஷன் ரிப்பீட்டு கேட்டார். ரவா உப்புமா இந்தக் கால ஃபாஸ்ட் ஃபுட்டுக்கேல்லாம் தலைவன்.

அரிசி நொய் உப்புமா வித் கத்திரிக்கா கொஸ்த்து தேவாமிர்தமா இருக்கும். வெங்காய சாம்பார் கூட அதன் பொருத்தமான ஜோடிதான். ஒரு சமயம் கோயில் குளம் என்று மாயவரம் பக்கம் சுற்றியபோது ஊருக்கு வெளியே வாசலில் “டிபன் ரெடி” போர்டு போட்ட சிற்றுண்டி ஹோட்டலில் போய் உட்கார்ந்து ஆசையாய் “இட்லி”ன்னு கேட்டா “ஒரு அரை மணி ஆவும்”ன்னு சொல்லிட்டு பதிலுக்கு அழுக்கு கையை உள்ளே விட்டு தம்ளர்ல தண்ணீர் கொண்டு வந்து வைத்தார்கள். அந்த அகாலத்தில் “வேறென்ன இருக்கு?” என்று பசியில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஈனஸ்வரத்தில் முனகியதில் வந்த பதில் “உப்பூ……மா…”. திருப்தியாக ஒரு கட்டு கட்டினேன்.

என்னுடைய உறவினர் வட்டத்தில் காற்றடித்தால் பறந்து மாயமாய் மறையும்படி ஒல்லியாக ஒரு மாது இருப்பார். கை, கழுத்து மற்றும் காதுகளில் அணிந்திருக்கும் நவீன அணிகலன்களின் எடை அவரை தென்றலாக இருக்கும் வாயுதேவனிடமிருந்து காப்பாற்றும். கைலாயத்தில் சிவபெருமானுக்குச் சேவை புரியும் கிம்புருடர்கள் கழுத்தில் கிடக்கும் எலும்பாபரணமாக இருப்பார். “தெரு நாய்களிடம் ஜாக்கிரதையாக இரு” என்று அடிக்கடி எச்சரிப்பேன். ஒரு உறவினர் வீட்டு விசேஷத்தில் முதல்நாள் முகாமில் இரவு சாப்பிடுவதற்கு தட்டை ஏந்தி “எனக்கு உப்புமா..” என்று கும்பலாக நீட்டியபோது “நீ உப்புமா” என்று நான் சொன்னதற்கு வெகு நேரம் யோசித்தார். “கிண்டல்” என்று புரிந்தும் அர்த்தம் புரியாமல் அடிக்க வந்தபோது அவளைச் சுட்டி “நீ”, கையிரண்டையும் இடுப்பருகில் மடக்கி குண்டு போல அபிநயித்து காட்டி “உப்பு”, சிரித்துக்கொண்டே “மா” என்று மோனோ ஆக்டிங் செய்து காண்பித்தேன். சற்றுநேரம் வரை மலங்கமலங்க விழித்தது தட்டை கீழே போட்டுவிட்டு கொலைவெறியோடு என்னை துரத்த ஆரம்பித்துவிட்டது. அன்றிலிருந்து விசேஷங்களில் வாய் பொத்தி அடக்கி வாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். இன்னமும் அமுல்படுத்தவில்லை.

“அது ஒரு உப்புமா கம்பெனி சார், எல்லாத்தையும் சுருட்டிகிட்டு ஓடிப் போய்ட்டானுங்க” என்று இகழ்வோர் ஏன் உப்புமாவைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்கிறார்கள் என்று இன்றுவரை தெரியவில்லை. கொஞ்சம் பொடியாய் நறுக்கின கத்திரிக்கா, சாறுள்ள தக்காளி, உருளைக்கிழங்கை சின்னதா நறுக்கிப் போட்டு கடுகு தாளிச்சுக் கொட்டி கிளறி இறக்கினா “கிச்சடி நல்லா இருக்கு.. கிச்சடி பேஷா இருக்கு”ன்னு ஐந்தாறுமுறை கேட்டு வாங்கி உள்ளே தள்ளுகிறார்கள். “இன்னிக்கி ஏன் இட்லிக்கு தேங்காய் சட்னி அரைக்கலை?” என்று சிரம் தாழ்த்தி அனேக கோடி நமஸ்காரங்களுடன் பவ்யமாக கேட்டால் கூட “ச்சே. இந்த உப்புமா பொறாத விஷயத்துக்கு ஏன் இப்படி கூச்சல் போடரான்”ன்னு சொல்லி நிராகரித்து விடுகிறார்கள். ஒதுக்கித் தள்ளட்டும், இருந்தாலும் “உப்புமா பொறாத விஷயம்” என்று சொல்லவேண்டுமா?

சாம்பாரில் வெல்லம் கரைத்து தித்திப்பாக சாப்பிடும் கர்நாடக தேசத்தில் “ரவா பாத்” என்று ஸ்டைலாக பெயர் வைத்து விற்கிறார்கள். பணி நிமித்தம் பெங்களூரூ செல்லும்போதெல்லாம் ரவா பாத்தும் கொஞ்சம் இனிப்பு தூக்கலாக இருக்கும் சாம்பாரும் சேர்ந்து வயிற்றை நிரப்புகிறது. அங்கே பந்தியில் பாயசத்திற்கு பதில் சாம்பார்தான் முதலில் இலையில் வைப்பார்களோ? ஆயாசமாக இருக்கிறது.

இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லும் விதமாக சாட்டையடியாக இந்த வாரத்தில் ஒரு விஷயம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் நாக்கு செத்துப் போன இந்திய கும்பலுக்கு வடிச்சு கொட்டும் Floyd Cardoz என்பவருக்கு சமையல் போட்டியில் $100,000 பரிசு கிடைத்துள்ளது. நியூயார்க் நகரத்தில் மூன்று நட்சத்திர அந்தஸ்த்தில் இருந்த தப்லா என்ற இந்திய உணவு உபசரிக்கும் ஹோட்டலில் பணிபுரிந்தார் ஃபிளாயிட். தப்லா இப்போது யூனியன் ஸ்கொயர் ஹாஸ்பிடாலிட்டி குரூப்பிடம். கான்சரில் இறந்த தன் தந்தையின் நினைவாக தான் கெலித்த பரிசுத்தொகை முழுவதையும் கேன்சர் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் ஒன்றிற்கு தானமாக கொடுத்துவிட்டார். இப்படி ஒரு உன்னதமான நோக்கத்திற்கு உதவிய உப்புமாவை இனிமேல் யாரும் எடுத்தெறிந்து பேசாமல் இருப்பார்களா?

ஐரோப்பிய அமெரிக்க இத்தாலிய பீட்ஸா பாஸ்தா போல ஒரு ஆறு மாதத்தில் “டயல் எ உப்புமா” என்று சிகப்பு கலர் பொட்டியை டூவீலர் பின்னால் கட்டிக்கொண்டு அரை மணி நேரத்தில் வீட்டு வாசலில் கொண்டு வந்து பொட்டலமாய் கொடுத்துவிட்டு போவார்கள். கெட்டிச் சட்னி சாஷேக்களில். “பிச்சூஸ் உப்மா இஸ் மை ஃபேவரிட் ஃபுட்” என்று கூந்தலை விரித்துப் போட்டுக்கொண்டு கால் மேல் கால் போட்ட திரையுலகக் கனவுக் கன்னி யாராவது பனியனோடு கவர்ச்சியாக விளம்பரங்களில் வருவார்கள். “சூப்பி உப்புமா” என்று குடிக்கலாம் சாப்பிடலாம் வகையறாவாக வெளியிடுவார்கள். உப்புமாவை நீர்க்க காண்பித்து காஜோலை உறிஞ்சி சாப்பிட வைத்து விளம்பரப் படுத்துவார்கள். இட்லி தோசைக்கு பதில் திஹாரில் உப்மா பரிமாறப்படலாம். வேண்டாத மாப்பிளைக்கு தான் மாமனார் வீட்டில் உப்புமா கிண்டி போடுவார்கள் என்ற எண்ணம் மாறுவது திண்ணம். எனக்கு நம்பிக்கையிருக்கிறது. இனிமேல் உப்மா பிக்கப் ஆயிடும்.

[இன்றைக்கு ஃபேஸ்புக்கில் இரா.முருகன் சார் ரவா உப்புமாவைப் பற்றி எழுதினதும் தலைதெறிக்க இரண்டு வருடம் பின்னால் ஓடினேன். Floyd Cardoz என்கிற மும்பையில் பிறந்து வெளிநாட்டில் வடித்துக்கொட்டிய நளபாகருக்கு உப்புமா கிண்டியதால் $100,000 பரிசு கிடைத்தபோது எழுதியதை இப்போது இங்கே பகிர்கிறேன்.

நான் ஒரு உப்புமா எழுத்தாளன் என்பது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம். அதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் இது மற்றுமொரு உப்புமா பதிவு. ]

13 thoughts on “துரித உணவுகளின் தலைவன் – RVS

 1. ரசிக்க வைத்தது உப்புமா புராணம்…!

 2. EraMurukan Ramasami May 5, 2013 at 3:59 AM Reply


  காலை நடையின்போது யார் வீட்டிலோ ஆன்மீக வேடம் பூண்ட டிவி அலறியது – ‘ சிவனடியார் வேடம் பூண்ட சிவபெருமான் இவர் வீட்டுக் கதவை நள்ளிரவில் தட்டினார். ரொம்பப் பசியாக இருக்கு, சாப்பிட ஏதாவது கொடு என்றார். இந்த அர்த்த ராத்திரியில் இவருக்கு என்ன உண்ணக் கொடுப்பது என்று வீட்டுக்காரர் குழம்பினார்…’.

  புராண காலத்தில் இல்லாமல் போன ஒரு முக்கியமான சமாசாரம் – ரவை. இருந்தால் உப்புமா கிண்டி ஒப்பேற்றி இருக்கலாம். பிள்ளைக்கறி வரை எல்லாம் போயிருக்காதோ என்னமோ..

  ரவா உப்புமாவுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் என்ன உறவு?

  எனக்குத் தெரிந்து சாவியின் ‘வாஷிங்டனில் திருமணம்’ நகைச்சுவை நாவலில் அது தலை காட்டியது. கல்யாண கோஷ்டி சென்னையில் இருந்து வாஷிங்க்டன் போய் இறங்கியதுமே ’மணக்க மணக்க ரவா உப்புமா’ கிண்டுவார்கள். ‘அதில் நடுவில் முழித்துக் கொண்டிருக்கிற முந்திரியை விரலால் நெம்பி எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும் சுகம்’ – ஒரு கதாபாத்திரத்தின் அல்லது சாவியின் ரசனை உணர்வின் எடுத்துக்காட்டு.

  அடுத்த ரவா உப்புமா? இது மேடை நாடகமாக வந்தது. ’பாவம் ரொம்பப் பசிக்கறதா.. சூடா இருக்கு.. மெதுவா சாப்பிடுங்க.. நாக்கு பொள்ளிப் போயிடும்..’ .பூரணம் குரலில் குழைவு, வாஞ்சை, அப்பாவித்தனம் எல்லாம் சேர்ந்து வரும். ( ’வந்தவன்’ மேடை நாடகம்)

  சுஜாதா சார் எழுதினது எல்லாம் இலக்கியம் இல்லையா? சொன்னா நாக்கு பொள்ளிப் போயிடும்..

 3. Ranganathan Kothandaraman May 5, 2013 at 4:02 AM Reply


  பெங்களூரூ வந்த புதிது.

  காலை டிஃபன் மெனுக்களில் ‘சௌசௌ பாத்’ என்று பார்த்தவுடன் ‘என்னடா? இவ்வளவு காலங்காத்தால சௌசௌ கூட்டு/சாதம் சாப்பிடுவாங்களா?’ என்று வியந்தேன். ஏனென்றால், ‘பிஸிபேளா பாத்/ரைஸ் பாத்’இங்கு காலை டிஃபனில் சேர்த்தி! அப்புறமாத்தான் ’ரவா உப்புமா/ரவா கேசரி’கொண்ட ரவாவின் ஜாயிண்ட் ஃபேமிலி ஐட்டம் எனத் தெரிந்தது.

  ரவா உப்புமாவின் விசேஷம் அதை ‘வெறுமனே’ எதுவும் போடாமல் கிண்டினாலும் சாப்பிடச் சுவையாக இருக்கும் என்பதே.

  இரா. மு. ஐயா! இருந்தாலும் ரவா கேசரியைப் பற்றி ஒண்ணுமே சொல்லாதது அநியாயம்

 4. Rajan Venkatasubramaniam May 5, 2013 at 4:04 AM Reply


  ஆமாம் , ரவா உப்மா ஒரு ஆபத்பாந்தவன் தான்….சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வரும் அர்த்த ராத்திரி விருந்தாளிகளுக்கு, கல்யாணமான பிரம்மச்சாரிகளுக்கு, அவசரப் பயணத்துக்கு முன் , உபவாச காலங்களில், தெவச சாப்பாடு நேரமாகும்னுட்டு டயாபடிக் வயோதிக அன்பர்களுக்கு என்று பல வகைகளில்…

 5. EraMurukan Ramasami May 5, 2013 at 4:07 AM Reply


  ரவா உப்புமாவின் விசேஷம் அதை ‘வெறுமனே’ எதுவும் போடாமல் கிண்டினாலும் சாப்பிடச் சுவையாக இருக்கும் என்பதே.// கல்யாண சமையல்காரர்கள் பலரும் வியர்வையில் முக்குளித்து கிட்டத்தட்ட அப்படித்தான் கிண்டுகிறார்கள்

  > இரா. மு. ! இருந்தாலும் ரவா கேசரியைப் பற்றி ஒண்ணுமே சொல்லாதது அநியாயம் // ஜே.எஸ்.ராகவன் சார் ஒரு தமாஷா வரி நகைச்சுவைக் கட்டுரையில் (600 கட்டுரை இதுவரை மாம்பலம் டைம்ஸில் எழுதி விட்டார்) கேசரிக்கும் சொஜ்ஜிக்கும் உள்ள வேறுபாட்டைச் சொல்வார் –

  ‘பெண் பார்க்கப் போகும்போது ரவையைச் சர்க்கரை போட்டுக் கிண்டிக் கொடுத்தால் அது சொஜ்ஜி. பெண் பிடித்துப் போய், கல்யாணம் நிச்சயம் ஆகி மண்டபத்தில் மாப்பிள்ளை அழைப்பு மாலை டிபனுக்கு ரவையைச் சர்க்கரை போட்டுக் கிண்டிக் கொடுத்தால் அது கேசரி’. அப்பீலே இல்லாத டெபனிஷன்!

 6. S.K.Morthy May 5, 2013 at 4:08 AM Reply


  “நிலைய வித்துவான்” என்று நக்கலாக அழைக்கப்பட்ட வஸ்துவாக ரவா உப்புமா இருந்தாலும், அதற்கு விஐபி அந்தஸ்து கொடுத்த இடம் ஒன்று உண்டு. அதுதான் இப்போது காணாமல் போன டிரைவ்-இன் வுட்லண்ட்ஸ்!
  மாலை வேளைகளில் கிடைக்கும் ஒரு ஸ்பெஷல் அயிட்டம் மணக்கும் ரவா உப்புமாதான்.

 7. R. Jagannathan May 5, 2013 at 9:16 AM Reply

  ஆஹா.. என்னமா எல்லோரும் உப்புமாவை தாளித்துக் கொட்டிவிட்டார்கள்! இன்னும் கொஞ்ஜம் டீப் ஆகப் போய் ரவாப் பொங்கல் பற்றியும் எழுதியிருக்கலாம்! வெஜிடபிள்களுடன் கொஞ்ஜம் மஞ்ஜள் தூளை சேர்த்து கிச்சடியோ, பொங்கலோ செய்தால் அபாரம்! ரவா உப்புமாவுக்குப் போட்டியான அரிசி உப்புமாவை எழுதாத மன்னார்குடிக்காரரும் மன்னார்குடிதானா என்று சந்தேகப்பட வைக்கிறது! ஸ்ரீரங்கத்தில் கீழ உத்திரை வீதியில் ஸ்ரீ க்ருஷ்ணபவன் ஓட்டலில் ‘அம்மாவாசைகளில் மாலை 6 மணிக்கு மேல் அரிசி உப்புமாவும் தேங்காய்த் துகையலும் கிடைக்கும்’ என்று போர்ட் இருக்கிறது!

  RVS, இராமுருகன், சாவி, ராணிமைந்தன், ஜே.எஸ்.ராகவன் எல்லோருக்கும் நன்றி! – ஜெ.

 8. ranjani135 May 5, 2013 at 1:02 PM Reply

  ரவை உப்புமாவிற்கு இத்தனை ஏற்றமா? துரித உணவுகளின் தலைவன் என்ற பட்டப்பெயர் வேறே!மெய் சிலிர்த்து விட்டது!

  பெங்களூரில் செய்யும் உப்பிட்டு பன்சி ரவையில் செய்யப் படுவது. அதேபோல கேசரி பாத் எனப்படும் ரவா கேசரி மெல்லிசு ரவையில் செய்யப்படுவது. நம்மைப்போல பம்பாய் ரவையில் செய்வதில்லை. அதனால் நாம் செய்யும் உப்புமா ரொம்பவும் ஸ்பெஷல்!

  எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த டிபன் ரவா உப்புமா. எலுமிச்சை ஊறுகாய் இருந்தால் போதும். உப்புமா கிடுகிடுவென உள்ளே போய்விடும்!

  ‘உப்பு’ மா – ரசிக்க வைத்தது. நீங்கள் சொல்வதுபோல டயல் எ உப்புமா வந்தால் நான் கூட துரித உணவுகளின் தலைவனை பண்ணி ஆண்ட்ரப்ரன்யூர் ஆகிவிடுவேன்!

 9. பா.ராகவன் May 5, 2013 at 10:56 PM Reply


  இட்லி உப்புமாவின் ருசி ஏன் இட்லியிலோ உப்புமாவிலோ இருப்பதில்லை ?

  –குற்றியலுலகம் – தேர்ந்தெடுத்த ட்விட்டர் குறிப்புகளின் தொகுப்பு

 10. bganesh55 May 6, 2013 at 1:49 AM Reply

  உப்புமாவை சாவியின் எழுத்திலும் ஆர்.வி.எஸ்.ஸின் எழுத்திலும் ரசித்துச் சுவைகக முடிந்தது. பா.ரா. ஸார், சூப்பர்! நீங்க கேட்டிருக்கற அதே கேள்விதான் என் மனசிலயும்!

 11. பா.ராகவன் May 6, 2013 at 2:18 AM Reply


  அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் செய்யும்போதுதான் அரிசி உப்புமா அதன் நிஜ ருசியைக் காட்டுகிறது.

  –குற்றியலுலகம் – தேர்ந்தெடுத்த ட்விட்டர் குறிப்புகளின் தொகுப்பு

 12. பா.ராகவன் May 6, 2013 at 6:32 AM Reply


  ரஷ்யர்களின் மதிய உணவில் பிரதான ஐட்டம் உருளைக்கிழங்கு. ஒவ்வொரு ரஷ்யரும் ஒரு நாளைக்குக் குறைந்தது பன்னிரண்டு பெரிய சைஸ் உருளைக்கிழங்கையாவது சாப்பிடாமல் இருக்க மாட்டார். நமக்கு அரிசிச் சோறு எப்படியோ, ரஷ்யர்களுக்கு உ.கி. அப்படி.

  உருளைக் கிழங்கைத் தோல்சீவி நீளவாக்கில் குச்சி குச்சியாக நறுக்கிக் கொண்டு அதைப் பாலில் வேகவைப்பார்கள். அதன் தலையில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றுவார்கள். ஒரு மாதிரி திருவாதிரைக் களி ஷேப்பில் அது திரண்டு வந்த பிறகு எடுத்து வாணலியில் எண்ணை ஊற்றி அதில் இதைப் போட்டுக் கிளறுவார்கள். ஒரு சுமார் பிரவுன் கலருக்கு வர வேண்டும். மேலுக்குக் கொஞ்சம் புதினா, இஞ்சி, மிளகு, பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்துக் கொள்ளலாம். Sour Cream கூடச் சேர்ப்பார்கள். உப்பு, சொல்லவே வேண்டாம், தேவையான அளவு.

  இந்த உருளைக்கிழங்கு உப்மா அல்லது களிதான் ரஷ்யாவில் தினசரி மதிய உணவு. அதிக அளவு கார்போஹைட்ரேட்டையும் கொழுப்புச் சத்தையும் சேர்த்துத் தரக் கூடிய இதுதான் அவர்களுடைய அடிப்படை உணவு. ஒரு நாலு கை வளைத்து இழுத்து அடித்துவிட்டு ஒரு சொம்பு தண்ணீர் குடித்துவிட்டால் போதும். வயிறு திம்மென்று ஆகிவிடும்.

  –உணவின் வரலாறு (குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியான, முற்றிலும் மாறுபட்ட தொடரின் நூல்வடிவம்)

 13. M.gurulingam August 28, 2013 at 12:24 PM Reply

  interesting news like it

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s