சிதம்பரம் கொத்சு! – சமஸ்


‘சமஸ்’ஸி ன் சாப்பாட்டுப் புராணத்துக்குள் போவதற்கு முன் கொஞ்சம் சுய புராணம்…

எனது சொந்த ஊர் கும்பகோணம் என்பதால், இங்கே சமஸ் குறிப்பிட்டிருக்கும் கொத்சும், சிதம்பரம் நடராஜரும் ரொம்பவே பரிச்சயம். சிதம்பரத்தில் மட்டுமல்ல, கும்பகோணத்திலும் கொத்சு ரொம்பவே பிரபலம்.

‘சாப்பாட்டுப் புராணம்’ புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்தவர் நண்பர் திருமலை ராஜன். இவர் இங்கே Berkeley Labs-ல் பணி புரிகிறார். மரத்தடி மற்றும் ராயர் காபி கிளப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கேள்விப்பட்டதில்லை என்றால் உங்களுக்கு வயது நாற்பதுக்கும் குறைவு என்று அர்த்தம் 🙂 ராயர் காபி க்ளப்பில் ராஜனும் ஒரு ராயர் 🙂 – மற்றவர்கள், லாஸ் ஏஞ்செல்ஸ் ராம், இரா.முருகன் ஆகியோர். நண்பர் திருமலை ராஜனின் இலக்கிய நண்பர்கள் வட்டம் மிகப் பெரியது – ஹரன் பிரசன்னா, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், சுஜாதா தேசிகன், லாஸ் ஏஞ்செல்ஸ் ராம், விருமாண்டி படத்திலும் அவ்வப்போது மற்ற சில படங்களிலும் தலை காட்டும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்…


கடந்த வருடம் அமெரிக்கா வந்திருந்த நாஞ்சில் நாடன் தனது கலிஃபோர்னியா விஜயத்தின்போது, ராஜனின் இல்லத்தில் தான் தங்கியிருந்தார்.

தாளிக்கும் ஓசை‘ ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் கூட எனக்கு ராஜன் மூலமாகத்தான் பரிச்சயம். JSri என்று சுஜாதாவால் அன்புடன் அழைக்கப்பட்ட ஜெயஸ்ரீ, சுஜாதா இறந்தவுடன் மன வருத்தத்தில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக எழுத்தின் பக்கமே வரவில்லை என்று ராஜன் ஒரு முறை குறிப்பிட்டார். சுஜாதாவை ‘பொறுக்கி’ என்று செல்லமாக குறிப்பிடும் அளவுக்கு சுஜாதாவின் வெறி பிடித்த ரசிகை இவர். அப்பாடா, இந்தப் பதிவிலும் நமது சுஜாதாவை இழுத்து வந்து விட்டேன் 🙂

‘சமஸ்’ஸி ன் நடையில் கவரப்பெற்று இந்த ‘சாப்பாட்டுப் புராணம்’ புத்தகத்தை எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது 🙂 ராஜனிடம் இரவல் வாங்கிய புத்தகத்தைப் பத்திரமாகத் திருப்பிக் கொடுத்து விட்டு எனக்கே எனக்கு என்று சொந்தமாக ஒரு புத்தகம் வாங்கி விட்டேன் 🙂

என்னைக் கேட்டால் புத்தகங்களை இரவல் தரவே கூடாது – திரும்பக் கேட்கா விட்டால் புத்தகங்களையும் – திரும்பக் கேட்டால் நண்பர்களையும் இழக்க வேண்டி வரும் 🙂

போதுமே என்னுடைய சுய புராணம்  🙂

ஓவர் டு சமஸ்…

[samsatmjpg.jpg]

ல்லா ஊர்களிலும் கோயில்கள் இருக்கின்றன. ஆனால், சில ஊர்கள் மட்டுமே கோயிலோடு பிணைந்துவிடுகின்றன. அந்த ஊர்களின் பெயரை உச்சரித்தால் மனம் முதலில் கோயிலையே அவதானிக்கிறது – வாடிகன்போல, கேன்டர்பெரிபோல, சிதம்பரம்போல!

சிதம்பரத்தையும் நடராஜர் கோயிலையும் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. மேலோட்டமாய் யோசித்தால் ஒரு நாட்டியக்காரனின் சாஸ்வதம் தோன்றி மறையும் இந்த இடத்தில், சற்று தீவிரமாய்ப் போனால் ஓர் அமானுஷ்ய உலகம் உங்களை இழுத்துக்கொள்ளும். பஞ்சபூத ஸ்தலங்களில் சிதம்பரம் ஆகாய ஸ்தலம். மூன்று நிலைகளில் இறைவன் இங்கு உறைந்திருக்கும் நிலை அருவ நிலை. இறைவனை எப்படி வழிபடுகிறார்கள் தெரியுமா? மந்திர வடிவில். மந்திரத்தில் இறைவன் இருக்கும் இடத்தைத் திருவம்பலச்சக்கரம் என்பார்கள். தன்னையே தேடுவோருக்குத் தன்னையே தரும் இறைவன், லோகாயுதவாதிகளுக்குத் தன்னிடத்தில் ஒன்றை மட்டும் விட்டுவைத்திருக்கிறான்; அது… அவனே சொக்கிக் கிடக்கும் கத்திரிக்காய்க் கொத்சு. சிதம்பரத்தில் சாயங்காலம் இரண்டாம் கால பூஜையின்போது இறைவனுக்குச் சம்பா சாதத்துடன் கொத்சு நைவேத்தியம் செய்கிறார்கள். வேகவைத்த கத்திரிக்காயை இடித்து, உப்பு, புளி சேர்த்து, சுண்டக் கொதிக்கவிட்டு, பசைப் பக்குவத்தில், காரமல்லிப் பொடி சேர்த்து, நல்லெண்ணையில் கொதிக்கவிட்டு, தாளித்த சூட்டோடு இறக்கப்படும் கொத்சை ஒரு துளி சுவைத்துப் பார்த்தால் இறைவனின் மீது பொறாமையே வரும். கடவுளர்களுக்குத்தான் சாப்பாடு எப்படியெல்லாம் வாய்க்கிறது?! இருந்த இடத்திலேயே வேளாவேளைக்கு நோகாமல் கடவுளர்களுக்கு மட்டும் இப்படி விதவிதமான சாப்பாடு கிடைப்பது பொறுக்காமல்தான் கடவுளர்களை மனிதன் சாப்பிடவிடாமல் செய்துவிட்டான்போலும்! அது போகட்டும், சிதம்பரத்தில் கொத்சு நிலைத்து நின்றதே ஒரு பெருமைதான் தெரியுமா?

சிதம்பரத்தில் பெயர் வாங்கினால் நீங்கள் எல்லா ஊரிலும் பெயர் வாங்கிவிடலாம். அதிலும், கச்சேரிக்காரர்களும் சமையல்காரர்களும் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டிய ஊர் இது. அக்காலத்தில் வித்வான்களையோ சமையல்காரர்களையோ, “சிதம்பரத்தில் உற்சவம், போவோமா?” ஏன்று யாராவது சும்மா கேட்டால் வம்புக்கு இழுக்கிறார்கள் என்று பொருள். ஏனென்றால், இங்கு வித்வான்கள் ராகத்தைச் சுதி பிறழாமல் வாசித்தால் மட்டும் போதாது. எந்த நேரத்தில், எந்த இடத்தில், எந்த ராகத்தை இசைக்க வேண்டும் என்றும் தெரிந்து வாசிக்க வேண்டும். இதை அறியாமல் மேல வீதியில் காலையில் வாசிக்க வேண்டிய ராகத்தைக் கீழ வீதியில் ராத்திரியில் வாசித்தால் வித்வானை ஊருக்கு மூட்டை கட்ட வைத்துவிடுவார்கள். இப்படிச் சமையலிலும் ஆயிரம் பணிக்கிச் சொல்வார்கள். இதனாலேயே, சிதம்பரத்தில் பல சாப்பாட்டு ஒட்டங்கள் வந்த வேகத்தில் காணாமல் போய்விட்டன. ஒரே விதிவிலக்கு கொத்சு.

அந்தக் காலத்தில் சிதம்பரம் போனால் கடைகளில் இட்லிக்குச் சட்னி, சாம்பார் வேண்டும் என்று யாரும் கேட்க மாட்டார்கள்; கொத்சைத்தான் தேடுவார்கள். அந்நாளில், சிதம்பரத்தில் கொத்சுக்குப் பெயர் போன கடைகள் நிறைய இருந்தன. “முருக முதலியார் கடை’, “நாராயணசாமி அய்யர் கடை’, “குமரவிலாஸ்’, “உடுப்பி கிருஷ்ண விலாஸ்’ என்று அக்காலத்துக் கடைகள்  ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையில் கொத்சு செய்வார்கள். பார்வைக்கு ஒன்றுபோல இருந்தாலும் ருசி வித்தியாசப்படும். ஒவ்வொரு கடை கொத்சுக்கும் தனி ரசிகர் கூட்டமே உண்டு. யார் கடை கொத்சு சிறந்தது என்ற பட்டிமன்றத்தைச் சிதம்பரம் வீதிகளில் சகஜமாகக் கேட்கலாம். இப்போதோ கலிகாலம். சிதம்பரத்திலேயே சாப்பாட்டுக் கடைகளில் கொத்சைத் தேட வேண்டியிருக்கிறது. நல்ல வேளையாக பாரம்பரியம் போய்விடாமல் “உடுப்பி கிருஷ்ண விலா’ஸில் மட்டும் கொத்சு இன்னமும் கிடைக்கிறது. உணவகத்தின் ஒவ்வோர் அங்குலத்திலும் தெரியும் பழமை கொத்சு ருசியிலும் இருக்கிறது. கடை நிறுவனர் லக்ஷ்மி நாராயண பட் இப்போது இல்லை. கடையை அவருடைய மகன் சுப்ரமண்ய பட் நிர்வகித்துவருகிறார். அவருடன் பேசினோம். “எங்கள் பூர்வீகம் உடுப்பி. சிதம்பரத்தில் கடையைத் தொடங்கியபோது கொத்சு ருசியில் ஏதாவது மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்த எங்கள் தந்தையார் கொத்சில் கத்திரிக்காயுடன் சின்ன வெங்காயத்தையும் சேர்த்தார். தவிர, உடுப்பி சமையல் பாணியில் கொஞ்சம் வெல்லத்தையும் சேர்த்தோம். இந்தப் புதிய ருசி எல்லோருக்குமே பிடித்துப்போயிற்று. இன்றும் அதே பாணி, அதே பக்குவம், அதே ருசி” என்றார் சுப்ரமண்ய பட்.

இப்போது மேஜை முன் நாம். மேஜையில் சுடச்சுட இட்லி, சுண்டியிழுக்கும் கொத்சு. அடுத்து ஏன்ன ஆகியிருக்கும் என்று நீங்கள் யூகித்தது சரிதான். ஆடாத ஆட்டத்தால் அண்டத்தையே ஆட்டிவைக்கும் தில்லையம்பலத்தானே கொத்சில் சொக்கிக் கிடக்கிறான். அப்புறம் நீங்களென்ன, நானென்ன, நாமென்ன பராபரமே?!

சாப்பாட்டுப் புராணம் புத்தகத்திலிருந்து…
தினமணி 2008

[samsatmjpg.jpg]

04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.செய்தியாளராகப் பணிபுரிகிறேன். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு? அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன்.

தொடர்புக்கு… writersamas at gmail dot com

நூலின் பெயர்: சாப்பாட்டுப் புராணம்

ஆசிரியர்: சமஸ்
விலை: ரூ.60
புத்தக வெளியீடு :  தான் பிரசுரம்,
திருச்சி.
கைப்பேசி:  94427 07988

தமிழில் சமையல் குறிப்புகள் போன்ற புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் வெளிவந்திருக்கின்றன. ஆனால், நமது உணவுப் பண்பாட்டைப் பதிவு செய்யும், அதன் நவீன கால மாற்றங்கள், பாதிப்புகள் போன்றவற்றை விளக்கும் வகையிலான புத்தகங்கள் அநேகமாக இல்லை என்றே கூறலாம். இத்தகைய சூழலில் வெளிவருகிறது சமஸின் ‘சாப்பாட்டுப் புராணம்’. இந்தப் புத்தகத்தில்  நமது பாரம்பரிய உணவு வகைகளைப் பற்றி மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் மேல் நாடுகளிலிருந்தும் வந்து இங்கு காலூன்றி தனித்துவம் பெற்றுவிட்ட உணவு வகைகளைப் பற்றியும் சமஸ் அழகாக எழுதியுள்ளார். ஒரு குறிப்பிட்ட உணவு வகையைப் பற்றி எழுதும்போது, அதன் வரலாற்றையும் அந்த உணவுப் பொருளுக்கும் குறிப்பிட்ட இடத்துக்கும் இடையிலுள்ள உறவையும் பற்றி இவர் எழுதுவது இவ்வகை எழுத்துக்கு ஒரு புதுப்பரிமாணத்தை அளிக்கிறது. ‘அடையார் ஆனந்த பவன்’, ‘முருகன் இட்லிக் கடை’ போன்ற பெரிய உணவகங்களோடு தெருவோரம் சின்ன மேஜையில் வைத்துப் பால்திரட்டு விற்கும் ‘மாரியப்பன்-ஜோதி தம்பதி கடை’, ‘மலைக்கோட்டைக் கையேந்திபவன்’காரர்கள் என்று யாராலும் அறியப்படாதவர்களையும் பற்றி சமஸ் எழுதியிருக்கிறார். சாப்பாட்டைப் பற்றி இவர் எழுதுவதைப் படிக்கும்போதே சாப்பிட்ட நிறைவு உண்டாகிறது; அதே நேரத்தில் அவர் சொல்லியுள்ள உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும் என்ற ஏக்கமும் உண்டாகிறது. சுருங்கச் சொன்னால் அனுபவித்துச் சாப்பிடுபவர்களுக்குத்தான் இந்தப் புத்தகத்தின் அருமை தெரியும் எனலாம்.

இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் ‘தினமணி’ இணைப்பிதழான ‘கொண்டாட்ட’த்தில் ‘ஈட்டிங் கார்னர்’ பகுதியில் ஓராண்டாக வெளிவந்தபோது சமஸுக்குக் கிடைத்த வாசகர்கள் ஏராளம். அவர்களுக்குக் கையேடுபோல் இப்போது இந்தப் புத்தகம் வெளியாகிறது.

Advertisements

5 thoughts on “சிதம்பரம் கொத்சு! – சமஸ்

 1. vidya (@kalkirasikai) May 4, 2013 at 4:29 PM Reply

  இலக்கியமானாலும் சரி, உணவியமானாலும் சரி, சுவையின் விளிம்புகளைத் தொட்டு விடுகிறீர்கள் கொத்சு.. த்சு.. த்சு…..

  • BaalHanuman May 5, 2013 at 12:48 AM Reply

   கொத்சு உங்களையும் கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி வித்யா 🙂

 2. R. Jagannathan May 4, 2013 at 6:18 PM Reply

  உங்கள் நண்பர்கள் வட்டம், நண்பர்களின் நண்பர்கள் வட்டம் எல்லாம் ரொம்பப் பெரிதாக இருக்கின்றன! சாதாரணமாக quantity அதிகமானால் quality குறையும் என்பார்கள், ஆனால் உங்கள் வட்டம் is of highest quality!

  சிதம்பரத்தில் (அண்ணாமலை யூனிவர்ஸிடி) 5 வருஷம் படித்தும் கொஸ்துக்கு அந்த ஊர் famous என்று தெரியாது! ஹாஸ்டல் வாசம் – உண்மையிலேயே எங்கள் ஹாஸ்டல்களில் சாப்பாடு Top Class ஆகத்தான் இருக்கும்.

  சுஜாதாவை ‘பொ..கி’ என்று எதற்கு சொன்னார் என்று தெரிந்தால் கொஞ்ஜம் interest ஆக இருக்கும்!

  கடைசியாக – கலிஃபோர்னியாவில் wild fire என்று படித்தேன், உங்கள் பகுதி safe என்று நம்புகிறேன்.

  -ஜெ.

  • BaalHanuman May 5, 2013 at 12:46 AM Reply

   அன்புள்ள ஜெ,

   JSri கூறுகிறார்…

   தாயோடு
   அறுசுவை போகும்;
   தந்தையோடு
   கல்வி போகும்
   குழந்தையோடு
   பெற்ற செல்வப் பெருமை போகும்;
   செல்வாக்கு
   உற்றாரோடு போகும்;
   உடன்பிறந்தாரோடு
   தோள் வலிமை போகும்;
   ……
   ……
   எல்லாம் இருக்க,
   போடா (பொர்க்கி)
   உன்னோடு இளமை போச்!

   அவருடைய முழுப் பதிவையும் நீங்கள் இங்கே படிக்கலாம்…

   வருட வரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம்….

 3. R. Jagannathan May 5, 2013 at 10:03 AM Reply

  திரு ‘பால்ஹனுமான்’ அவர்களுக்கு ஜெஸ்ரீ அவர்களின் லிங்க் கொடுத்ததற்கு மிக்க நன்றி. 2010-ல் அவர் எழுதிய நீண்ட பதிவை ஒரே மூச்சில் படித்தேன், அத்தனை பின்னூட்டங்களையும் சேர்த்து. என்ன சொல்வது? சுஜாதாவின் இத்தனை ரசிகர்களையும், அவர்களின் எழுத்துத் திறமையும், அவர்களுக்கிடையே ஆன நட்பும் நெகிழவைக்கின்றன. (நான் புரிந்துகொண்டது – கடைசி வரையில் ஜெஸ்ரீ தன் ஆதர்ச எழுத்தாளரை நேரில் பார்க்காமலேயே நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறார் – அது சரியா?)

  ஜெஸ்ரீயின் பதிவு எங்கெங்கோ சுற்றினாலும் சுஜாதாவை மையமாகவே வைத்து எழுதப் பட்டிருக்கிறது. அவரின் வேறு / மற்ற பதிவுகளை நான் படித்ததில்லை. எனக்கு இணயத்துடன் 2 வருஷமாகத்தான் பழக்கம். நானும் ஒரு காலத்தில் ஸ்ரீரங்கத்துக்காரன் (அதிக காலம் மேல அடையவளஞ்ஜான்), அதனால் இந்தப் பதிவுடன் நன்றாக ஒன்ற முடிகிறது. ‘பொர்க்கி’ – என்ன ஒரு வாத்சல்யத்துடன் அழைக்கிறார்!

  -ஜெ.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s