10-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

1976-ன் பிற்பாதியில் நாவல்களிலிருந்து திரைப்படமாக்கப்பட்ட “சில நேரங்களில் சில மனிதர்கள்“, “ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது“, “பத்ரகாளி” பட வரிசை 1977-லும் தொடர்ந்தது. தினமணி கதிரில் சுஜாதா எழுதிய பரபரப்பான கதை “காயத்ரி” இந்த ஆண்டு திரைப்படமாக்கப்பட்டது. புதிதாக மணமானவள் தன்னை சூழ்ந்துள்ளவர்களின் நடவடிக்கைகளால் திகிலுருவதும், அதிலிருந்து மீள்வதும்தான் கதை.

ஸ்ரீதேவி நாயகியாக நடித்த இந்த படத்தில் வில்லன் ரஜினிகாந்த், நாயகன் ஜெய்சங்கர். (ஒரு மூன்றே ஆண்டுகளில் ரஜினி முரட்டுக்காளை, ஜெய்சங்கர் வில்லன், இதே இளையராஜா இசையில்)

காயத்ரி பட நாயகியின் திகில், சோகம், அச்சம் ஆகியவற்றை பிரதிபலிக்க “வாழ்வே மாயமா” பாடல் பயன்பட்டது. வார்த்தைகளை வெட்டி வெட்டி பாடும் பாணியும், திகிலை புலப்படுத்தும் தாளக்கட்டும், “திரை போட்டு நீ மறைத்தால் என்ன தெரியாமல் போகுமா” என்று மேல் ஸ்தாதியில் அலறும் போதும், வேகமாக செல்லும் காரின் திடீர் பிரேக்கால் டயர் கீறிச்சிடுவது போன்ற அபாய உணர்வும், இதற்கெல்லாம் பக்கதுணையாக சசிரேகாவின் குரல் திரையின் கருப்பு நிகழ்வுகளுக்கு பொருத்தமான திகில் உணர்வுகளை பாடலின் மூலம் உசுப்பிவிடுகின்றன.

இதற்கு நேர்மாறாக “காலைப்பனியில்” என்ற பாடலில் சுஜாதாவின் குரலில் ஒரு குளிர்ச்சியும், இயற்கையோடு ஒட்டிய ஒரு மென்மையும் இழையோடும். மாறுபட்ட திரைச்சூழல்களை மெட்டுக்களாலும், இணைப்பு இசையாலும் வெளிப்படுத்துகிற இளையராஜாவின் ஆற்றல் வெளிப்படும்.

1977-ம் ஆண்டின் இளையராஜாவைப் பற்றிச் சொல்லும் போது பாரதிராஜா பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. இளையராஜாவும் பாரதிராஜாவும் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பிருந்தே நல்ல நண்பர்கள். பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி. பிறந்த ஊர் தேனி மாவட்டதில் உள்ள அல்லி நகரம். இளையராஜாவின் பண்ணைப்புரத்திற்கு மலேரியா தடுப்பு அதிகாரியாக வந்தபோது நட்பு ஏற்பட்டது. பாரதிராஜாவிற்கு சினிமா கனவு உண்டு. இயக்குனர் ஆகவேண்டும் என்றல்ல. நடிகர் ஆகவேண்டும் என்றுதான் ஆசை. சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பை அணு அணுவாக ரசித்த பாரதிராஜா அவரைப்போலவே பெரிய நடிகர் ஆகவேண்டும் என்று விரும்பினார்.

இதன் காரணமாகவே தன் வேலையை விட்டு சென்னைக்கு வந்தார். சரியான வாய்ப்பு கிடைக்காததால் பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். பின் பயனியர் மெட்ராஸ் என்ற மோட்டார் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது அவருக்கு சம்பளம் 120 ரூபாய். இளையராஜா, கங்கைஅமரன், பாஸ்கர் ஆகியோர் சென்னை வந்தபோது பாரதிராஜாவுடன் ஒரே அறையில்தான் இருந்தனர்.

புட்டண்ண கனகல் இயக்கத்தில் வெளிவந்த “சரபஞ்சரா” என்ற கன்னட படத்தை ராஜகுமாரி திரையரங்கத்தில் (இப்போது ஷாப்பிங் சென்டர்) பார்த்த பாரதிராஜா பிரமித்துப்போனார். நடிகனாகவேண்டும் என்ற ஆசையில் இருந்த பாரதிராஜாவிற்கு இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசைக்கு வித்தூன்றிய படம். புட்டண்ணாவிடம் தான் உதவி இயக்குனராகச் சேரவேண்டும் என்று உறுதியோடு இருந்தார். இந்த நிகழ்ச்சி நடந்த நேரத்தில் இளையராஜா ஜி.கே.வி. அவர்களிடம் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். ஜி.கே.வி. அவர்களுக்கு புட்டண்ணா நல்ல பழக்கம் என்பதால் ஜி.கே.வி. அவர்களிடம் இதுபற்றி இளையராஜா கூறியிருக்கிறார். யார் அந்த பாரதிராஜா என்று அவர் கேட்க தன் சித்தப்பா மகன், அண்ணன் முறையாக வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இளையராஜா, மற்றும் ஜி.கே.வி. ஆகியோரின் மூலம் புட்டண்ணா அவர்களிடம் பாரதிராஜா உதவி இயக்குனராகச் சேர்ந்தார்.

எப்போதும் போல கடற்கரையோரமாக நடந்து செல்லும் பாரதிராஜாவும், இளையராஜாவும் ஒரு நாள் சென்றபோது, பாரதிராஜா ஒரு பந்தயம் போட்டிருக்கிறார். யாருடைய பெயர் முதலில் திரையில் வரும் என்று பார்க்கலாம் என்று. புட்டண்ணா இயக்கிய “இருளும் ஒளியும்” என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பாரதிராஜாவின் பெயர் திரையில் உதவி இயக்குனர் என்று பெயர் போடப்பட்டது. இசையைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் மட்டுமே இருந்த இளையராஜா இதுபற்றி எதுவும் கவலைகொள்ளவில்லை. ஆனால் பாரதிராஜா இயக்குனர் ஆவதற்கு முன்பே இளையராஜா இசையமைப்பாளர் ஆகிவிட்டார் என்பது வேறு விஷயம்.

ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு கே.ஆர்.ஜி. அவர்கள் “சொந்த வீடு” என்ற படத்தை தயாரிக்க முன்வந்தார். இந்த படத்தின் இயக்குனர் பொறுப்பை பாரதிராஜாவிற்கு வழங்கினார். கதை ஆர்.செல்வராஜ், இசை வி.குமார் என்றும் முடிவானது. ஆனால் ஏனோ ஒரு சில காரணங்களால் தடைபட்டது. பாரதிராஜாவின் முதல் படத்திற்கு இசையமைப்பாளராக இளையராஜாதான் அமையவேண்டும் என்ற காலத்தின் கட்டாயம் போலும்.

இளையராஜாவின் முதல் பிரவேசத்தை சாத்தியமாக்க அவருக்கு கிடைத்த பஞ்சு அருணாசலம் போல பாரதிராஜாவிற்கு எஸ்.ஏ.ராஜ்கண்ணு கிடைத்தார். சப்பாணியும், மயிலும், பரட்டையும் தங்களது கிராமப்பரிவாரங்களுடன் பாரதிராஜா வைத்த கோணங்களில் வலம் வரத்தொடங்கினார்கள். “16 வயதினிலே” உருவாகிக் கொண்டிருந்தது…

16 வயதினிலே… கதாபாத்திரங்கள் தேர்வு எல்லாம் முடிவானது. இசை யார் என்று ராஜ்கண்ணு கேட்க, இளையராஜாதான் என்று பாரதிராஜா சொல்லியிருக்கிறார். ஆனால் இளையராஜா இசையமைக்க மறுத்துவிட்டார். காரணம், பாரதிராஜா உதவி இயக்குனராகவும், இளையராஜா ஜி.கே.வி. அவர்களிடம் உதவி இசையமைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் பாரதிராஜா இளையராஜாவிடம் ஒரு பந்தயம் போட்டிருக்கிறார்.

“இப்படி எல்லோருடைய இசைக் குழுவிலும், கிடார் வாசிக்கக் கூப்பிடுகிறார்கள், கோம்போ வாசிக்கக் கூப்பிடுகிறார்கள் என்று போய்க்கொண்டிருந்தால் எப்போதுதான் இசையமைப்பாளர் ஆவது, நீ வேணா பார், நான் ஒரு இருபது இருபத்தைந்து படங்கள் எடுத்தபின் போனால் போகுது ஒரு படத்திற்கு உன்னை இசையமைக்கச் சொல்லலாம் என்று இசையமைப்பாளர் ஆக்கினால்தான் உண்டு” என்று. அதற்கு இளையராஜா, “முதலில் ஜி.கே.வி அவர்கள் உன் படத்திற்கு இசையமைக்க வேண்டும், அதன்பின் தான் உன் படத்திற்கு நான் இசையமைப்பேன். அதுவும் ஜி.கே.வி. அவர்கள் என்னிடம் வந்து போனால் போகுது இவன் படத்திற்கு நீ இசையமை என்று சொன்னால் மட்டுமே இசையமைப்பேன்” என்றார்.

பாரதிராஜா ஒருவேளை இதை மறந்திருக்கலாம். அதனால்தான் 16 வயதினிலே படத்திற்கு யார் என்று கேட்டதும் இளையராஜாதான் என்று சொல்லியிருக்கிறார். ஜி.கே.வி. அவர் வந்து சொன்னதற்குப் பிறகுதான் இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கவே ஒப்புக்கொண்டார்.

16 வயதினிலே படத்தின் உண்மையான கதை, மயிலு டாக்டர் கதாபாத்திரத்திடம் கெட்டுப் போவது போலவும் இறுதியில் இப்போது உள்ளதுபோல சப்பாணிக்காகக் காத்திருப்பது போலவும் தான் பாரதிராஜா கதை விவாதத்தின்போது சொன்னது. ஆனால் கெட்டுப்போவது போல் இருந்தால் அவ்வளவு நன்றாக இருக்காது என்றும் இப்போது உள்ள கதையமைப்பைச் சொன்னதும் பாக்யராஜ் தான்.

16 வயதினிலே படத்தைப்பார்த்து இளையராஜா சொன்னது…

பாரதிக்குள் இப்படி ஒரு கலைஞன் இருக்கிறானா, கூடவேதான் இருந்தோம், ஒன்றாக வளர்ந்தோம், ஆனால் திரையில் இப்படி ஒரு எளிமையான, அழகான, உயிரோட்டமான படத்தை வடித்திருப்பதைப் பார்த்து வியந்து போனேன். இந்தப்படம் எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தனை நாள் தொழிலாக அமைத்த இசை பாணியை பின்பற்றி இசையமைத்து வந்த எனக்கு நமது பாணியை மாற்றவேண்டும் என்று தோண வைத்தது. இந்தப்படத்தில் இருந்து மாற்றிக்கொள்ள வேண்டியதுதான் என்ற முடிவை எடுக்கவைத்தது. இந்த படத்தில் இருந்துதான் பின்னணி இசை பற்றிய எனது அணுகுமுறை மாறியது. அடுத்த சாதாரண படங்களில்கூட வித்தியாசமான பரிசோதனை முறையிலான இசையைக் கொடுத்துப்பார்க்க வித்திட்டது.

இந்த படத்தின் பாடல்களாகட்டும், பின்னணி இசையாகட்டும் இளையராஜா விளையாடியிருப்பார். இந்தப்படத்தில் வரும் செந்தூரப்பூவே பாடலுக்கு இன்னொரு பெருமையும் உண்டு. கங்கை அமரன் அவர்கள் எழுதிய இந்த பாடலைப்பாடிய ஜானகி அவர்களுக்கு தேசியவிருதை பெற்றுத்தந்த பாடல். கங்கை அமரன் அவர்கள் திரைப்பட பாடலாசிரியர் ஆனதும் இந்தப்பாடலால்தான்.

இந்தப்படத்தில்தான் இளையராஜா முதல் முறையாக ஒரு முழுப்பாடலைப் பாடியிருக்கிறார். “பாடல் –சோளம் விதைக்கயில சொல்லிப்புட்டு போனபுள்ள“. அன்னக்கிளியின் கிராமிய மணமுள்ள பாடல்களாகட்டும், பத்ரகாளி பட மெல்லிசை கோலங்களாகட்டும், 16 வயதினிலே இதற்கு முந்தைய காலகட்ட இசையமைப்பில் இருந்து முற்றிலும் வேறுபட்ட இசையாக எனக்கு கேட்கத் தோன்றுகிறது. இந்த காலக்கட்டத்தில் இருந்துதான் திரைஉலகில் பெரிய மாறுதல்கள் தோன்றியது.

15.9.77 அன்று 16 வயதினிலே படம் வெளியானது. கமலஹாசன் அவர்களின் உதவியாளரான சேசு என்பவர் படத்தை பார்த்துவிட்டு சொன்னது…

இந்தப்படம் ஒரு வாரம்தான் ஓடும், மிட்லண்ட் தியேட்டரில் படம் பார்க்கும் ஜனங்கள் கிண்டல் செய்கிறார்கள். இதுபோதாதென்று டைட்டிலிலேயே சினிமாவிற்கு பொருத்தம் இல்லாத குரலில் இளையராஜா பாடியிருக்கிறார். இது ஜனங்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது. (எத்தனையோ இதயங்களைக் கட்டிப்போடப்போகும் குரல் இது என்று அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை)

ஆனால் ஒரு இரும்புக்கதவை ஒரு சாதாரண சோளக்குச்சியால் தகர்த்த மாதிரியாகிவிட்டது. படம் இமாலய வெற்றி பெற்றது. பாரதிராஜா என்ற அந்தக் கலைஞனும், இளையராஜாவும் இதற்கு காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை.

தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

Advertisements

7 thoughts on “10-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

 1. ரெங்கசுப்ரமணி April 23, 2013 at 10:23 AM Reply

  பாரதிராஜாவிற்கும் இளையராஜாவிற்கும் அன்று முதல் இதே வேலைதான் போலிருக்கின்றது. இன்னும் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பின்னணி இசை என்றால் என்ன என்பதை காட்டியது ராஜாதான். இதில் முக்கிய பாட்டை விட்டு விட்டீர்களே… ஆட்டுக்குட்டி முட்டையிட்டு …….

  • BaalHanuman April 23, 2013 at 2:02 PM Reply

   >>பாரதிராஜாவிற்கும் இளையராஜாவிற்கும் அன்று முதல் இதே வேலைதான் போலிருக்கின்றது. இன்னும் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

   🙂

 2. கிரி April 25, 2013 at 7:23 AM Reply

  இது போல பழைய சம்பவங்களை படிக்கையில் ரொம்ப சந்தோசமாகவும் .. அட! இப்படி எல்லாம் நடந்து இருக்கிறதா என்று ஆச்சர்யமாகவும் உள்ளது.

  ரெங்கசுப்ரமணி சொன்னது போல அப்ப இருந்து சண்டை போட்டுட்டே இருந்து இருக்கிறார்கள் போல 🙂

  • BaalHanuman April 25, 2013 at 1:30 PM Reply

   >>இது போல பழைய சம்பவங்களை படிக்கையில் ரொம்ப சந்தோசமாகவும் .. அட! இப்படி எல்லாம் நடந்து இருக்கிறதா என்று ஆச்சர்யமாகவும் உள்ளது.

   நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். ஆனால் இளையராஜா மற்றும் SPB தொடர்கள் சம மொக்கை என்று இன்னொரு நண்பர் கூறுகிறாரே 🙂

   • கிரி April 26, 2013 at 7:29 AM

    ஹா ஹா ஹா அப்படியா சொன்னார்!! ரசனைகள் பலவிதம் அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் 🙂

    ஒருவேளை இளையராஜா சுயபுராணத்தை படித்து காண்டாகி இருப்பாரோ! 🙂 🙂

    நிச்சயம் இது போல தொடர்கள் சுவாரசியம் தான் சந்தேகமே இல்லை. இது தான் மெஜாரிட்டி மக்களின் உணர்வாக இருக்க முடியும் காரணம், நாம் தற்போது பார்க்கும் கலைஞர்கள் வளர்ந்து மிகப் பிரபலமான நிலையில் இருக்கிறார்கள் அதனால் அவர்கள் எப்படி வளர்ந்தார்கள் என்பது தெரியாது ஆனால், இது போன்ற கட்டுரைகளைப் படிக்கும் போது யாருக்கும் எதுவும் எளிதில் கிடைத்து விடுவதில்லை.. ஒவ்வொருவரும் இந்த நிலையை அடைய கஷ்டப்பட்டு வந்து இருக்கிறார்கள் என்று அறிய முடிகிறது.

    எனக்குக் கூட இளையராஜா பேசுவது பிடிக்காது ஆனால் அவர் இசையையும் திறமையையும் ரொம்பப் பிடிக்கும். இரண்டையும் குழப்பிக்கொள்வதில்லை.

    இளையராஜா மட்டும் தனது வாயை கொஞ்சம் அடக்கிக் கொண்டு இருந்தால் இன்னும் பெரிய புகழ் பெற முடியும். இருக்கும் புகழைக் கூட தன் வாயாலேயே கெடுத்துக்கொண்டு இருக்கிறார். அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளவே இல்லையோ என்று தோன்றுகிறது.

    இது போன்ற தொடர்களை கண்டிப்பாக பிரசுரிங்க.. பிடிக்காதவங்க படிக்காமல் ஸ்கிப் பண்ணிடட்டும்.. என்னைப் போன்றவர்கள் நிச்சயம் ஆர்வமாக படிப்பார்கள் 🙂

 3. Doss.A, Tirupur May 30, 2013 at 4:37 AM Reply

  “நிச்சயம் இது போல தொடர்கள் சுவாரசியம் தான் சந்தேகமே இல்லை. இது தான் மெஜாரிட்டி மக்களின் உணர்வாக இருக்க முடியும் காரணம், நாம் தற்போது பார்க்கும் கலைஞர்கள் வளர்ந்து மிகப் பிரபலமான நிலையில் இருக்கிறார்கள் அதனால் அவர்கள் எப்படி வளர்ந்தார்கள் என்பது தெரியாது ஆனால், இது போன்ற கட்டுரைகளைப் படிக்கும் போது யாருக்கும் எதுவும் எளிதில் கிடைத்து விடுவதில்லை.. ஒவ்வொருவரும் இந்த நிலையை அடைய கஷ்டப்பட்டு வந்து இருக்கிறார்கள் என்று அறிய முடிகிறது.

  எனக்குக் கூட இளையராஜா பேசுவது பிடிக்காது ஆனால் அவர் இசையையும் திறமையையும் ரொம்பப் பிடிக்கும். இரண்டையும் குழப்பிக்கொள்வதில்லை.

  இளையராஜா மட்டும் தனது வாயை கொஞ்சம் அடக்கிக் கொண்டு இருந்தால் இன்னும் பெரிய புகழ் பெற முடியும். இருக்கும் புகழைக் கூட தன் வாயாலேயே கெடுத்துக்கொண்டு இருக்கிறார். அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளவே இல்லையோ என்று தோன்றுகிறது.

  இது போன்ற தொடர்களை கண்டிப்பாக பிரசுரிங்க.. பிடிக்காதவங்க படிக்காமல் ஸ்கிப் பண்ணிடட்டும்.. என்னைப் போன்றவர்கள் நிச்சயம் ஆர்வமாக படிப்பார்கள்”

  மிக உண்மை… நானும் வழி மொழிகிறேன்.
  தங்கள் பணி தொடரட்டும் நண்பரே..

  • BaalHanuman June 4, 2013 at 4:05 AM Reply

   தொடரைப் பின் தொடரும் உங்களுக்கு என் நன்றி…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s