8-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…


இதன் முந்தைய பகுதி…

ஜி.கே.வி அவர்களிடம் உதவி இசையமைப்பாளராக சேர்ந்தபின் இளையராஜாவின்  ஏழ்மை நிலை மாற ஆரம்பித்தது. இவரின் திறமைகளுக்கு சரியான களம் அமைந்தது. அழகிய இசை “அரேஞ்மென்ட்” செய்யும் முறைகள் வசப்பட ஆரம்பித்தது. வாத்தியங்களை மேற்கத்திய இசையின் நேர்த்தியுடன் அமைப்பதும் நன்கு பழக்கமானது. ஜி.கே.வியின் இடத்தில் இருந்து மெட்டுக்களை பாடகர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது, சில சமயம் வாத்திய இசை அமைத்து, ஒலிப்பதிவு வரை போவது என்று இசை அமைப்பின் நெளிவு சுளிவுகளில் நேரடி அனுபவம் கிடைத்தது.

கோவர்த்தனம் பாடல்கள் அமைத்து 1975-ல் வெளிவந்த “வரப்பிரசாதம்” என்ற படத்திற்கு பின்னணி இசை அமைக்கும் பொறுப்பை நிர்வகித்தார். பாடல்கள் அமைப்பதில் தன்னுடைய பாணியைக் காண்பிக்க ஒரு தனி எல்.பி. இசைத்தட்டை “பாவலர் பிரதர்ஸ்” என்ற பெயரில் இளையராஜா உருவாக்கினார்.

பாப் ஹிட்ஸ் ஆஃப் 1975” என்ற தலைப்புடன் மலேசியாவில் ஒரு இசைத்தட்டை வெளியிட்டார். கங்கை அமரன் எழுதிய பாடல்களை எஸ்.பி.பி, பூரணி, பாஸ்கர், மலேசியா வாசுதேவன், டி.எம்.செளந்திரராஜன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

ராஜாவை இளையராஜா என்று பெயர் மாற்றியதும் இவரே. (70-களில் ராஜா என்ற ஒரு இசையமைப்பாளர் இருந்ததுதான் காரணம்) பெயரிடப்படாத செல்வராஜின் கதையின் காட்சியமைப்பிற்கு மெட்டமைக்குமாறு இளையராஜாவை கேட்டார் பஞ்சு அருணாசலம். மெட்டோடு ஒரு சில வார்த்தைகளையும் போட்டு “அன்னக்கிளியே உன்னத்தேடுதே” பாடிக்காட்டினார். மெட்டும் பிடித்து போனது. படத்திற்கு பெயரும் கிடைத்தது.

1976 – முதல் பிரசவம் இளையராஜா சினிமாவில் தன் முதல் அடியை எடுத்து வைத்த ஆண்டு.

ஜி.கே.வெங்கடேஷின் குழுவில் கிடைத்த அனுபவத்தோடு, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, வி.குமார், சலீல் சவுத்ரி மற்றும் மலையாளம் தட்சினாமூர்த்தி ஆகியோரிடம் பணியாற்றிய அனுபவமும் இளையராஜாவிற்குத் துணைபுரிந்தது. தான் திரையுலகிற்கு வந்த காலத்தில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த எம்.எஸ்.வி அவர்களின் நாதத்தின் தன்மைகளையும், அதனின்று மாறுபட்டு ஒலிக்கவேண்டிய உத்திகளையும் நன்றாக உணர்ந்துகொண்டு, சுயமான கற்பனை பலத்துடன் நுழைந்தார்.

ஆரம்பத்தில் இளையராஜா ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் சொன்னது…”ஒரு பாட்டை எவ்வளவு இனிமையா கொண்டு வரணும்கறதுலதான் என் கவனம் இருந்தது. சக்ஸஸ் ஆகுமா ஃபெய்லியர் ஆகுமாங்கற பயமெல்லாம் எனக்கில்லை.” வெற்றி தோல்வியைக் குறித்து கவலை இல்லாத ஒரு தனிப்படைப்பாளியின் உள்ளத்தில் அலை அலையாக இன்ப ரசம் எழுப்பிய இசை வடிவங்கள், எந்தவித குறுக்கீடும் இல்லாமல் பொது அரங்கத்திற்கு வரும் போது கேட்போரின் காதுகளுக்கு ஜீவனுள்ள கீதங்களாகப் பரவசப்படுத்தத்தானே செய்யும்?

தன் முதல் படமான அன்னக்கிளியில், “அன்னக்கிளியே உன்னத்தேடுதே” என்று ஜானகி உருகியபோது பாட்டின் ஒவ்வொரு வரியிலும் அதை கனபரிமாணத்தோடு தொடர்ந்த இணைப்பு இசையிலும் ஒரு ஈர்ப்பும் இனிமையும் பெருக்கெடுத்தது. குறிப்பாக… ஒன்று, இரண்டு, மூன்றாவது சரணங்களில் முறையே “உறங்காத” என்றும், “மழைபெய்ஞ்சா” என்றும், “புள்ளிபோட்ட” என்றும் ஜானகி இழுக்கும் சுகமும், அதற்கு முத்தாய்ப்பு வைக்கும்போது தபேலா தத்தி வரும் நேர்த்தியும் என்ன ஒரு இனிமை. “மச்சான பாத்தீங்களா” பாடலில் இதுபோலவே அவரின் இசைவளம் நன்கு தெரியும். “கஸ்தூரி கலைமான்களே”, “தலவாழை இலைபோடுங்க”…. இப்போதும் என் காதுகளில் தாளமிட்டுக்கொண்டிருக்கின்றது.

“என்னவோ படத்துக்கு பாட்டு மட்டும் போட்டால் ஆச்சா… ஆளைப் பார்க்கலாம் ரீ-ரெக்கார்டிங்கில்…” என்றார் ஒருவர் இளையராஜாவின் காதுபடவே. அவரும் இசையமைப்பாளரே (ஒரு பத்திரிகையில் வெளியானது)

“இந்த அலட்சியப்பேச்சே என்னுள் இருந்த சக்தியை உசுப்பி விட்டது.” என்றவர், 14 ரீல்களுக்கும் நானே இசை அமைத்தேன் என்பாராம். (ஆம் இசையமைப்பாளர்தானே பின்னணி  இசையையும் அமைக்க வேண்டும் என்று கேட்டுவிடாதீர்கள். சில இசையமைப்பாளர்கள் மெட்டை போட்டுவிடுவதோடு சரி… மெட்டின் ஸ்வரங்களைகூட சிலர் அறியமாட்டார்கள்… கூட இருக்கும் உதவியாளர் தன்னன்னாவை ஸ்வரம் எழுதிக்கொள்ளவேண்டும்… இன்னொருவர் பின்னணி இசை போடுவார்கள்….)

வானொலியிலிருந்தும், இசைத்தட்டுகளிலிருந்தும், திருமண வீடுகள் மற்றும் திருவிழா ஒலிப்பெருக்கிகளிலிருந்தும் ஒலித்த “மச்சானைப்பாத்தீங்களா”வும், “அன்னக்கிளியே உன்னத்தேடுதே”வும் காற்றின் அலைவரிசையை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. ஏதோ வெற்றிப்பாடல் என்பதால் மட்டுமல்ல, காதுள்ளவர்களுக்கு இது ஒரு புதிய நாதம் என்று புரிந்தது.

“லாலி லாலிலலோ…” என்று அன்னத்தின் தேடலை அறிவிக்கும் ஜானகியின் குயில்பாட்டிலும், தன்னுடைய நாயகன் இன்னொருத்தியின் மணவாளன் ஆகப்போகிறான் என்ற ஏக்கச்சுமையை ஓரம்கட்டி வைத்துவிட்டு ” நம்ம வீட்டுக்கல்யாணம்” என்று அவளது துள்ளலை எதிரொலிக்கும் பாட்டிலும் இசையின் வண்ணங்களை எண்ணங்களுடன் கலந்து திரைக்கு அளிக்கக்கூடியவர் வந்துவிட்டார் என்று பறைசாற்றியது .

நட்சத்திர ஆதிக்கமும், வண்ண ஊர்வலங்களும், பிரபலங்களின் அணிவகுப்பும் கொண்ட படங்களுக்கு இடையே, கருப்பு வெள்ளை “அன்னக்கிளி” ஜெயித்ததென்றால் வண்ணமும் வாசமும் கொண்ட இளையராஜாவின் இசையும் ஒரு காரணம். அந்த ஆண்டு வெளிவந்த படங்களில் நூறு நாள் ஓடியதோடு வெள்ளி விழா கண்ட ஒரே படம் “அன்னக்கிளி.”

மதுரையில்தான் படத்தின் நூறாவது நாள் விழா நடந்தது. இளையராஜாவும், குழுவினரும் மேடையில் இசை வழங்க வந்திருந்தார்கள். “பயணங்கள் முடிவதில்லை” படத்தில் வரும் “முதல் முதல் ராகதீபம் ஏற்றும் நேரம்” பாடல் காட்சி போல மழை கொட்டித்தீர்த்தது. விழாவை நடத்த விடாத அளவிற்கு கொட்டியது. திரை உலகை ஆக்கிரமிக்கப் போகிற இளையராஜா எனும் வெள்ளத்திற்கு முகமன் கூறியது போல.

தொடரும்…

Raja – ராஜா வேலாயுதம்

3 thoughts on “8-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

 1. R. Jagannathan April 20, 2013 at 6:43 AM Reply

  //தன் முதல் படமான அன்னக்கிளியில், “அன்னக்கிளியே உன்னத்தேடுதே” என்று ஜானகி உருகியபோது பாட்டின் ஒவ்வொரு வரியிலும் அதை கனபரிமாணத்தோடு தொடர்ந்த இணைப்பு இசையிலும் ஒரு ஈர்ப்பும் இனிமையும் பெருக்கெடுத்தது. குறிப்பாக… ஒன்று, இரண்டு, மூன்றாவது சரணங்களில் முறையே “உறங்காத” என்றும், “மழைபெய்ஞ்சா” என்றும், “புள்ளிபோட்ட” என்றும் ஜானகி இழுக்கும் சுகமும், அதற்கு முத்தாய்ப்பு வைக்கும்போது தபேலா தத்தி வரும் நேர்த்தியும் என்ன ஒரு இனிமை. “மச்சான பாத்தீங்களா” பாடலில் இதுபோலவே அவரின் இசைவளம் நன்கு தெரியும். “கஸ்தூரி கலைமான்களே”, “தலவாழை இலைபோடுங்க”…. இப்போதும் என் காதுகளில் தாளமிட்டுக்கொண்டிருக்கின்றது.
  // //“லாலி லாலிலலோ…” என்று அன்னத்தின் தேடலை அறிவிக்கும் ஜானகியின் குயில்பாட்டிலும், தன்னுடைய நாயகன் இன்னொருத்தியின் மணவாளன் ஆகப்போகிறான் என்ற ஏக்கச்சுமையை ஓரம்கட்டி வைத்துவிட்டு ” நம்ம வீட்டுக்கல்யாணம்” என்று அவளது துள்ளலை எதிரொலிக்கும் பாட்டிலும் இசையின் வண்ணங்களை எண்ணங்களுடன் கலந்து திரைக்கு அளிக்கக்கூடியவர் வந்துவிட்டார் என்று பறைசாற்றியது .//

  Absolutely true! What a great tune in these songs! The writer has expressed his feelings very well and I share them whole heartedly. – R. J.

 2. ரெங்கசுப்ரமணி April 20, 2013 at 11:48 AM Reply

  இன்னும் அன்னக்கிளி பாடல்களை முழுவதும் கேட்டதில்லை. 🙂

 3. rathnavelnatarajan April 28, 2013 at 5:56 AM Reply

  ஆரம்பத்தில் இளையராஜா ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் சொன்னது…”ஒரு பாட்டை எவ்வளவு இனிமையா கொண்டு வரணும்கறதுலதான் என் கவனம் இருந்தது. சக்ஸஸ் ஆகுமா ஃபெய்லியர் ஆகுமாங்கற பயமெல்லாம் எனக்கில்லை.” வெற்றி தோல்வியைக் குறித்து கவலை இல்லாத ஒரு தனிப்படைப்பாளியின் உள்ளத்தில் அலை அலையாக இன்ப ரசம் எழுப்பிய இசை வடிவங்கள், எந்தவித குறுக்கீடும் இல்லாமல் பொது அரங்கத்திற்கு வரும் போது கேட்போரின் காதுகளுக்கு ஜீவனுள்ள கீதங்களாகப் பரவசப்படுத்தத்தானே செய்யும்?

  அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு பாலஹனுமான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s