ராஜாவை சந்தித்த திருவண்ணாமலை டாக்டர் ஸ்ரீதர்…


இப்போது நினைத்தாலும் கனவு போல உள்ளது! இன்னும் அதன் தாக்கத்திலிருந்து நான் விடுபடவில்லை.பிரசாத் ஒலிப்பதிவுக்கூடத்தில் தலைவர் பணிபுரியும்போது அதை அருகிருந்து பார்க்க வேண்டும் என்பது என் பல ஆண்டுகள் கனவு. சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பதற்கு ஒப்பான அந்த நிகழ்வு அவரின் கோடானுகோடி ரசிகர்கள் பலரின் கனவும் கூட!.இளையதளம் மூலம் அந்த வாய்ப்பு இவ்வளவு சீக்கிரம் திடீரென்று கிடைக்குமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை! உங்களுக்கு எத்தனை கோடி முறை நன்றி சொன்னாலும் தகும்.மிக்க நன்றி இளையதளம்!

பிரசாத் ஒலிப்பதிவுக் கூட அரங்கின் நடுநாயகமாக ஒரு பியானோ வைக்கப்பட்டிருக்க, அதன் பின் என் குலச்சாமி இசைஞானி எழுந்தருளியிருக்க,அவர் எதிரில் அரை வட்ட வடிவில் தேவர்கள் போல இசை ஜாம்பவான்கள் புல்லாங்குழலுடன் திரு.நெப்போலியன், வயலினுடன் திரு.”எம்பார்” கண்ணன், லீட் கிட்டாருடன் திரு.சதானந்தம், பேஸ் கிட்டாருடன் திரு.சசிதரன், ட்ரம்ஸுடன் எனக்கு பெயர் தெரியாத ஒரு கலைஞர் ஆகியோர் சூழ அந்த இடம் ஒரு கோயில் போலத் தான் இருந்தது! எத்தனையோ சாகாவரம் பெற்ற பாடல்களின் பிறப்பிடமான அந்த இடத்தில் சில பாடல்கள் உருவான கதையை அவ்வப்போது பியானோவுடனும் மற்ற இசைக்கருவிகளின் துணையுடன் பாடி விளக்கினார். மேலும் திரு.சி.ஆர்.சுப்பராமன், திரு.எம்.எஸ்.வி போன்ற மேதைகள் இசையமைப்பின் மேன்மைகளையும் விளக்கி ஒரு வரி கூட மறவாமல் பல பாடல்கள் பாடி பரவசப்படுத்திக் கொண்டிருந்தார்! மேற்சொன்ன இசை வல்லுனர்கள் மற்றும் பாடகர்கள் திரு.செந்தில்தாஸ் மற்றும் திரு,சத்யன் ஆகியோர் தங்களுக்கு எழுந்த சந்தேகங்களை கேட்க அவர்களுக்கு தனக்கே உரிய பாணியில் விடையளித்து அசத்தினார்.அவை விரைவில் உங்களின் விழிகளுக்கு விருந்தாகப் போவதால் அதைப்பற்றி நான் இங்கு விரிவாக எழுதவில்லை.

இந்நிலையில் திரு.கார்த்திக்ராஜா அவர்கள் நாங்கள் அமர்ந்திருந்த இடம் நோக்கி வந்து, நீங்கள் யாராவது கேள்வி கேட்க விரும்புகிறீர்களா? என்று கேட்டார். நான், விருப்பம் இருக்கிறது ஆனால் பயமாக இருக்கிறதே என்றேன். என்ன கேள்வி கேட்க விரும்புகிறீர்கள் என்று ஒவ்வொருவரிடமும் கேட்க, ஒருவருக்கும் ஒன்றும் பிடிபடவில்லை. பொதுவாக அவரின் இசையமைப்பின் மேன்மைகளை சொல்லவும், தனக்காக தன் விருப்பப் பாடல் ஒன்றை பாடச்சொல்லி கேட்கப்போவதுமாகத் தான் பலரும் கூறினார்கள். இது போன்ற சாதாரண கேள்விகள் வேண்டாமே என்று கார்த்திக் கூறினார். நான் ரமணரைப் பற்றி ஒரு கேள்வியைச் சொன்னேன், அதில் கூட அவர் பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை, அங்கிருந்து சென்றுவிட்டார். நிகழ்ச்சி தொடர்ந்து கொண்டிருந்தது, ’மரி மரி நின்னே’ என்ற தியாகராஜ கீர்த்தனைக்கு சிந்துபைரவியில் இசையமைத்ததை விளக்கிவிட்டு, ஒரு சிறிய இடைவேளை விடலாமா? என்று கார்த்திக்கை கேட்க, நான் எதிர்பாராத சமயத்தில் என்னைச் சுட்டிக்காட்டி ‘இவர் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறார்’ என்றார். நீங்க போங்க! என்று என்னிடம் சொன்னார். உடம்பெல்லாம் அதிர, சொல்லமுடியாத ஒரு உணர்ச்சிப்பெருக்குடன் நான் நடந்து சென்று ‘இதோ, இசைஞானி முன்பு நிற்கின்றேன்!

ஒருமுறை என்னைக் கிள்ளிப் பார்த்து அது கனவல்ல என்று உறுதிபடுத்திக் கொண்டேன்!.  இசைஞானி என்னை நேர்ப்பார்வை பார்த்தார், நானும்  பார்த்தேன். என் இருகை விரல்கள் சேர்த்து வணக்கம் கூறினேன். அவரும் பதிலுக்கு கை கூப்பினார். என் வாயிலிருந்து வார்த்தை எதுவும் வரவில்லை.என் மனதுக்குள் யுவன் பாடத்தொடங்கினார்.
                  ” விழியோடு விழி பேச
                                                  விரலோடு விரல் பேச
                                                  அடடா………………………
                   வேறு என்ன பேச…!?”
என் கையில் மைக் வழங்கப்பட்டது. சுதாரித்துக் கொண்டு பேசத் தொடங்கினேன். “ நான் திருவண்ணாமலையிலிருந்து வரேன் சாமி” என் பெயர் டாக்டர். ஸ்ரீதர்! என்றேன், புன்னகைத்தார். நீங்கள் கூறிய ‘மரி மரி நின்னே’ கீர்த்தனை உங்கள் இசையில் தானே அமைந்ததை சொன்னீங்க! எனக்கும் அப்படி வேறு ஒரு பாட்டு தோணுது சாமி! என்றேன். என்ன என்பது போல் பார்த்தார். நீங்க திருவாசகம் வெளியிட்ட போது பல பேர், ராஜா சார் ஏன் நாலாயிர திவ்ய பிரபந்தத்துக்கு இசையமைக்கலைன்னு கேட்டாங்க! ஆனா என்னைப் பொருத்த வரைக்கும் நீங்க அதுக்கும் சேர்த்து தான் இசையமைச்சு இருக்கீங்க! என்றவுடன் வினோதமாக பார்த்தார். திருவாசகத்துல ”புற்றில் வாழ்அரவும் அஞ்சேன்” பாட்டுக்கு நீங்க இசையமைச்ச அதே மெட்டில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய “பச்சைமாமலை போல் மேனி” என்று வரும் பாசுரம் பொருந்தி வருகிறது! என்று கூறி பச்சைமாமலை போல் மேனி பாடலை “புற்றில் வாழ் அரவும்” பாடலின் மெட்டில் முழுவதுமாகப் பாடினேன். ராஜா எதிரில் இருந்த அருண்மொழியைப் பார்த்து என்னை நோக்கி ஒரு கண் ஜாடை காட்டிவிட்டு பெரிதாக சிரிக்கத்தொடங்கினார். நான் பாடி முடித்ததும் அரங்கில் இருந்த அனைவரும் கைதட்டத் தொடங்கிவிட்டனர்.
பிறகு, சாமி! உங்கள் ரமணா சரணம் சரணம் பாடல் தொகுப்பில் ஒரு பாட்டு இருக்கு, “ஆராதருமருந்து அருள் ரமண நாமமே” என்ற பாடலில் ஒருவருக்கு மனதிலோ உடலிலோ ஏற்ப்படும் எத்தகைய காயங்களுக்கும் “ரமண நாமம்” ஒன்றே மருந்தாக அமையும்னு பாடி இருக்கீங்க! அந்த ரமண நாம ஜெபத்தைமட்டும் சொல்லக்கூடிய பாடல் ஒன்று நீங்க இன்னும் செய்யலையே சாமி! ’இன்றொரு நாள் கழிந்தது என் வாழ்நாளில்’ பாடலில் “ஒம் நமோ பகவதே ஸ்ரீரமணாய”ன்ற மந்திரம் வரும், ஆனா நாமாவளியை மட்டும் பாடுற மாதிரி நீங்க எனக்காக இப்ப ஒரு பாட்டு கம்போஸ் பண்ணித் தரணும்!ன்னு சொன்னேன். மிகுந்த உற்சாக முகபாவனையுடன் பியானோவில் கைவைத்தார்! அதற்க்குள் தான் என் முந்திரிக்கொட்டை முட்டாள்தனம் என்னை முந்திக் கொண்டு விட்டது. நாங்கள் இப்போ எப்படி பாடிக்கிட்டு இருக்கோம்னா, உங்க ஜனனி ஜனனி மெட்டில் “ரமணா ரமணா” என்று பொருத்தி முழுவதுமாகப் பாடிக் கொண்டிருக்கிறோம்ன்னு சொல்லி ஜனனி ஜனனி மெட்டில் “ரமணா ரமணா” என்ற வார்த்தையை மட்டும் பொருத்தி பல்லவி முழுவதையும் பாடிக் காட்டினேன். இதைப் போலவே சரணம் உட்பட முழுபாடலிலும் இந்த நாமத்தை பொருத்தி பாடலாம், அட்சரம் பிசகாமல் வருகிறது என்றேன். இப்போது மேலும் பலமாக சிரிக்கத் தொடங்கிவிட்டார்! “உன்னோட கேள்வியிலேயே தான் விடை இருக்கேய்யா! அந்த விடை தான் உனக்கே தெரிஞ்சிருக்கே” என்று கூறினார்.
சாமி, திருவண்ணாமலையிலேயே இந்த கேள்வியை உங்களிடம் கேட்டேன்.எல்லோரும் உங்க இசையமைப்பின் மேன்மையை இங்கு சொன்னாங்க,அதோடு உங்க தமிழுக்கும் நான் பெரிய ரசிகன் ஐயா! ரமணமாலை பாடல் தொகுப்பில் வரும் “காரணம் இன்றி கண்ணீர் வரும்” பாடலில் ’கருக்குழி வழிதனை அடைக்கும் விழி, கருவினில் திரு வந்து நிறைந்த விழி, இருவிழிதரும் மொழி, திறந்திடும் அருள்வழி’ன்னு பாடி இருக்கீங்க. இதுல கருக்குழின்னா என்ன சாமி? எனக்கு கொஞ்சம் விளக்குங்க ன்னு கேட்டேன்.கருக்குழின்னா என்னன்னு உனக்கு தெரியாதா? என்று கேட்டார். இல்ல சாமி,என்னைப் போன்ற பாமரனுக்கு புரியலையேன்னு சொல்லி முடிக்கலை, நடுவே குறுக்கிட்டு “யாருய்யா பாமரன்!?” நீயா பாமரன்? உனக்கு திருவாசகம் தெரிஞ்சிருக்கு, நாலாயிர திவ்ய பிரபந்தம் தெரிஞ்சிருக்கு, ரமணரைத் தெரிஞ்சிருக்கு, நீயா பாமரன்? இல்ல, நீ சாமான்யன் கிடையாதுய்யா!  உனக்கேஇது புரியும், கருக்குழின்னா என்னன்னு உனக்கு தெரியாதா?” என்று மீண்டும் கேட்டார். பிறவியை சொல்றீங்களான்னு கேட்டு முடிக்கும் முன் கருக்குழின்னா கருக்குழிதான்யா! உனக்கே புரியும் நல்லாக் கேள்! என்று கூறி சிரித்தார். எனக்கு உடம்பெல்லாம் ஏதோ செய்யத் தொடங்கிவிட்டது, அதற்கு மேல்அங்கு நிற்க திராணி இல்லை. கார்த்திக்ராஜாவைப் பார்த்தேன், அவர் வந்துவிடும்படி கையசைத்தார். மீண்டும் என் தெய்வத்தைப் பார்த்து ஒருமுறைதொழுதேன், அப்போது கொஞ்சம் அழுதேன்! “உன்னைத் தொழுதல் பெரும் பேறு, செய்தேன் என்ன கைம்மாறு!” என்று உள்ளத்துக்குள் ஒலித்தது. என்தலைவர் சிரித்தபடி இருகைகூப்பி எனக்கு விடை கொடுத்தார்.
நம் நண்பர்கள் என்னைப் பாராட்டினார்கள். பாடகர்கள் செந்தில் தாஸ், சத்யன் ஆகியோர் என்னிடம் வந்து “கலக்கிட்டீங்க பாஸ், நல்ல கேள்வி கேட்டீங்க!?”என்றனர். நான் என்ன கேள்வி கேட்டேன்னு ஒருமுறை என்னை நானே கேட்டுக்கொண்டேன் யாரை யார் கேள்வி கேட்பது!?. இடைவேளை விடப்பட்டது நண்பர்களுடன் சென்று ”பால் நிலாப் பாதை” புத்தகத்தை நீட்டி கையெழுத்துக் கேட்டேன், போட்டுக் கொடுத்தார். போட்டோ என்றோம்,எடுக்கச் சொல்லி பொறுமையாக ஒத்துழைத்தார். அவர் அறைக்குள் செல்வதற்கு முன் தான் சட்டென்று நினைவுக்கு வந்து “இம்மையே உன்னைச் சிக்கென பிடித்தேன்” என அவர் பாதம் தொட்டு வணங்கினேன். அவர் என் தலை தொட்டார். பின் அவர் அறைக்குச் சென்றுவிட்டார். அருண்மொழி சார், சதா சார், சசி சார் ஆகியோர் என் கேள்வியைப் பாராட்டினார்கள். அவர்களுடன் சிறிது நேரம் தலைவரைப் பற்றி பேசிக் கொண்டிருந்து விட்டு அந்த மிதப்புடனேயே ஊர் திரும்பி விட வேண்டும் என்று ஊருக்குப் புறப்பட்டேன்.
எத்தனை பெரிய பாக்கியம் இது! எத்தனையோ ஜாம்பவான்கள் பாடிய அந்தஇடத்தில், எத்தனையோ பாடல்களை உள்வாங்கிய அந்த ஒலிவாங்கி என் குரலையும் உள்வாங்கி அங்கு ஒலிக்கச் செய்தது, அதுவும் என் தலைவர் முன்பு பாட வாய்ப்பு கிடைத்தது, இறைவனின் அருள் அன்றி வேறு என்ன சொல்ல முடியும்! வீட்டுக்கு வந்து அம்மாவிடம் நடந்ததைச் சொன்னேன்.அம்மா தான் விளக்கினார், கருக்குழி என்பது ஒரு குழந்தையின் பிறப்பிடம் என்றும் அதனால் தான் அதனை உன்னிடம் விளக்கத் தயங்கினார் என்றார். அந்த கோணத்தில் அப்போது தான் யோசிக்க ஆரம்பித்தேன். அடடா! இதைத்தான் அவரிடம் கேட்டோமா என்று ஒரு மாதிரி ஆகிவிட்டது. ஆனால் உண்மையிலேயே நான் புரியாமல் தான் கேட்கிறேன் என்று இசைஞானி நன்கு உணர்ந்திருந்தார் என்று மட்டும் உறுதியாக நம்புகிறேன்! இந்த ஜென்மம் முழுதுக்கும் இது போதும் எனக்கு! வேறு என்ன பேறு வேண்டும்!
Advertisements

5 thoughts on “ராஜாவை சந்தித்த திருவண்ணாமலை டாக்டர் ஸ்ரீதர்…

 1. ரெங்கசுப்ரமணி April 12, 2013 at 11:27 AM Reply

  ராஜாவின் பிரச்சினையே இது போன்ற பக்தர்கள்தாம். ராஜாவின் இசை ரசிகர்களால் அவருக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் யாராலும் அவரது இசையை ஒன்றும் குறை கூற முடியாது. ஆனால் இது போன்ற பக்த கோடிகள் அவரது இசையோடு சேர்த்து அவரை ஆராதிக்க தொடங்கி விடுகின்றனர். அவரை ஒரு நிறை குறை உள்ள மனிதராக நினைக்க விடுவதில்லை. இவர்கள் கூறும் அனைத்து கருத்துக்களும் அவரை தூற்ற நினைப்பவர்கள் கையில் நல்ல ஆயுதமாக கிடைக்கின்றது. அடடா ஆன்மீக வாதி எப்படி பேசுகின்றார், இப்படி பேசலாமா, ஆன்மீக வாதிக்கு கோபம் வரலாமா, கடவுள் இப்படி செய்யலாமா……… வரிசையாக இவர்களது வார்த்தைகளையே போட்டு வாங்குகின்றனர்.

  அவர் ஒரு இசை மேதை. அவரது இசைக்கு இணை அவரே. அவர் ஒரு கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு பக்தர். பக்தியுடன் ஞானத்தையும் தேட ஆசைப்படும் ஒருவர். அதோடு நிறுத்திக் கொள்வது நலம், அதைவிட்டு அவரை கடவுள், துறவி, ஞானி என்ற நிலைக்கு கொண்டு போய், அதை முழுவதும் நம்பவும் தொடங்கினால் (அவரையே கொஞ்சம் நம்ப வைத்து விட்டனர்), யார் பேச்சையாவது கேட்டு வருத்தப்படுவதில்தான் முடியும்.

 2. ரெங்கசுப்ரமணி April 12, 2013 at 12:02 PM Reply

  முக்கிய டிஸ்க்ளெய்மர், திட்ட விரும்புவர்களுக்கு நான் ஏ.ஆர் ரகுமான் ரசிகனோ இல்லை தேவா (!!) ரசிகனோ இல்லை. இளையராஜ ரசிகன். சந்தேகப் படுவர்கள் என் ப்ளாக்கில் சரி பார்த்துக் கொள்ளலாம்.

 3. R. Jagannathan April 12, 2013 at 3:24 PM Reply

  Well said Mr. Ranga Subramani. Hero-worshipping has crossed the limits here. Such devoted fans become blind to faults. – R. J.

 4. இளையராஜாவை பற்றி ஒன்றை படித்தால் தொடர்ச்சியாக ஏதாவது படிக்க கிடைத்து விடுகின்றது.

  கேபிள் சங்கரின் பதிவில் இருந்த லின்க்.

  அவரின் பேச்சின் உண்மை அவர் கண்களில், முகத்தில் தெரிகின்றது. துளி கூட போலித்தனமான வார்த்தைகள் கிடையாது. சட்டென்று பண்ணைபுரத்தான் எழுந்து உட்கார்ந்து கொண்டு விட்டான்.

 5. ILAMURUGAN April 14, 2013 at 7:58 AM Reply

  இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s