9-ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…


காவ்ய கண்ட கணபதி முனிவர் என்ற மகா பண்டிதர் இருந்தார்.  நினைத்தவுடன் கவிதை எழுதும் ஆற்றல் கொண்டவர். ஏராளமான நூல்களைக் கற்றவர், எழுதியவர்.  பல மொழிகளைப் பேசும் ஆற்றல் உள்ளவர். கடும் தவம் புரிந்தவர்.  பெரும் புகழ் படைத்தவர்.

அப்படிப்பட்ட பெரிய மனிதருக்கு ஒரு சந்தேகம் மட்டும் இருந்துகொண்டே இருந்தது. அதற்கான விடை தேடி அவர் அலையாத இடமில்லை.

1907-ம் ஆண்டு கணபதி முனிவர் திருவண்ணாமலை வந்தார். கிரிவலப் பாதையில் ஒரு மண்டபத்தில் தியானத்தில் ஆழ்ந்திருந்தபோது அவருக்குள் மின்னல் வெட்டியது.  ‘பகவான் அழைக்கிறார்’ என்றது அந்த மின்னல். உடனே எழுந்தார். விடுவிடுவென நடந்தார். அருணாசலேஸ்வரர் வீதி புறப்பாடாகி வந்து கொண்டிருந்தார். நடுச்  சாலையில் இறைவனை விழுந்து நமஸ்கரித்தார்.

தன் நெடுநாள் கேள்விக்கு விடை கிடைக்கப் போகிறது என்று அவருக்குத் தோன்றிற்று.

விடுவிடுவென மலை மீது ஏற ஆரம்பித்தார். நல்ல வெயில் நேரம் அது. எதையும் அவர் பொருட்படுத்தவில்லை. விரூபாட்ஷி குகைக்கு வந்துதான் நின்றார்.

குகையின் முன் தாழ்வாரத்தில் பகவான் ரமணர் தனியே அமர்ந்திருந்தார்.
கணபதி முனிவர், ரமணர் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். தன் இரு கைகளாலும் பகவானின் பாதங்களைப் பற்றிக் கொண்டு கண்ணீர் உகுத்தபடியே, ”கற்க  வேண்டிய யாவையும் கற்றேன். வேதாந்த சாஸ்திரங்களையும் பயின்றேன். மனம் கொண்ட மட்டும் மந்திரங்களையும் ஜபித்தேன். ஆனாலும் மனம் அடங்க வழியின்றித்  தவிக்கிறேன். தவம் என்பது யாதென தெரியவில்லை. ஐயனே, உன் திருவடியைச் சரணடைந்தேன்.’’ என்றார்.

பகவான், காவ்ய கண்ட கணபதி முனிவரையே பார்த்தார். ரொம்ப நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தார். ஆம். பார்வையிலேயே பதிலை  விளக்கி விட்டு பின்னர்  உபதேசமும் அருளினார்.

”‘நான்’ என்பது எங்கேயிருந்து புறப்படுகிறதோ அதை கவனித்தால் மனம் அங்கே ஒன்றிவிடும். அதுவே தவம்.

ஒரு மந்திரத்தை ஜபம் பண்ணும்போது மந்திரத்வனி (ஓசை) எங்கிருந்து புறப்படுகிறது என்று கவனித்தால் மனம் அங்கே ஒன்றிணைகிறது. கரைந்து போகிறது, அதுதான்  தவம்.’’

கணபதி முனிவரின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிய ஆரம்பித்தது, அவரது நெடுநாள் சந்தேகத்துக்கு விடை கிடைத்த திருப்தி. அவரது ஐயங்கள் எல்லாம்  தீர்ந்து விட்டன.

அன்றைய தினம் விரூபாட்ஷி குகையிலேயே பகவானுடன் தங்கிக் கொண்டார் கணபதி முனிவர். அதுவரை பிராமண சுவாமிகள் என்றே அழைக்கப்பட்டு வந்த ரமணரை,  ‘பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி’ என்றே அனைவரும் அழைக்க வேண்டும் என்று  அப்போதுதான் சொன்னார் கணபதி முனிவர். ஆமாம்.  ‘மருவிலாக் காட்சிப் பெரியனை  இனிமேல் மகரிஷி என்றே வணங்கிப் பணிக.’ என்று பாடி வணங்கினார். அன்று முதல்தான் பகவான் ரமண மகரிஷி என்ற பெயர் நிலைக்க ஆரம்பித்தது.

ஆமாம். விரூபாட்ஷி குகைதான் அந்தப் பெயரை முதலில் கேட்ட  முதல் இடம். புனித  பூமி.

ஏற்கெனவே புகழ்பெற்ற மனிதராக கணபதி முனிவர் இருந்ததால், அவரது வருகைக்குப் பிறகு, பகவானைக் காண பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. பக்தர்களின்  வினாக்களும் அதிகரித்தன.

அவர்களுக்கு பகவான் அருளிய பதில்களை எல்லாம் தொகுத்து, வட மொழி ஸ்லோகங்களாக அவற்றை அமைத்து எழுதியவர் யார் தெரியுமா?
காவ்ய கண்ட கணபதி முனிவர்தான்.

ரமண கீதை என்ற பெயரில் அற்புதமான நூலாக ஆக்கினார் அவர்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!

Welcome to Arunachala Live!

4 thoughts on “9-ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…

 1. விளக்கங்களுக்கு தகவல்களுக்கு நன்றி…

  • BaalHanuman April 5, 2013 at 11:21 PM Reply

   ரமணரை விடாமல் தொடரும் பின்னூட்டப் புயலுக்கு மனமார்ந்த நன்றி 🙂

 2. Arvind April 5, 2013 at 11:15 AM Reply

  பகவானை ”ரமண மஹர்ஷி” என்று முதன் முதல் அழைத்தவர் காவ்ய கண்ட கணபதி முனி. ஆனால், கணபதி முனி வருகைக்கு முன்னாலேயே பகவானுக்கு ”ரமணர்” என்ற பெயர் வந்து விட்டது.

  பகவானை காவ்யகண்டர் சந்திப்பதற்கு முன்னாலேயே சந்தித்தவர் சத்தியமங்கலம் வேங்கடராம ஐயர். அவர் எழுதிய நூல் “ரமண ஸ்துதி பஞ்சகம்.” அதில் பகவான் “ரமணர்” என்றே அழைக்கப்படுகிறார். பகவான் தான் எழுதிய ’அக்ஷரமண மாலை’யிலும் ’ரமணன்’ என்றே தன்னைக் குறிப்பிடுகிறார். இவையெல்லாம் காவ்ய கண்டர் வருகைக்கு முன்னர் இயற்றப்பட்டவை.

  ஆனால், பகவானை ”ரமண மஹர்ஷி” என்று முதன்முதலில் அழைத்தவர் காவ்ய கண்டர்தான்.

  சத்தியமங்கலம் வேங்கடராம ஐயரைப் பற்றி சுவையான குறிப்பு ஒன்று உண்டு. ரமணரது வாழ்க்கை வரலாற்றை எழுத முற்பட்ட பி.வி.நரசிம்ம சுவாமிகள், அவர் யாரெனத் தேடி அலைந்தார். சத்தியமங்கலம் என்ற பெயர் கொண்ட ஊர்களிலெல்லாம் போய் விசாரித்தார். பயனில்லை. அப்படிப் பெயர் கொண்ட ஒருவரைக் கண்டறியவே இயலவில்லை. அநேகமாக அருணாசலேஸ்வரர் தான் அந்தப் பெயரில் வந்து அந்தப் பாடலை இயற்றினார் என்பது சில பக்தர்கள் நம்பிக்கை. (ஆனால் அதிலும் ஒரு பாடல் – ரமண சத்குரு என்னும் ஐந்தாவது பாடல் – பின்னாளில் தபாலில் வந்து சேர்ந்ததாக ஒரு குறிப்பு இருப்பதால் அதை சிலர் ஏற்க இயலவில்லை)

  ரமணரது வாழ்க்கை வரலாற்றை உண்மையில் எழுத முற்பட்டவர் குழுமணி நாராயணி சாஸ்திரிகள். ஆனால் அவர் தான் சேகரித்த விவரங்களை நரசிம்மசுவாமியிடம் கொடுத்து விட்டு, தான் ஸத்குரு சேஷாத்ரி சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். பி.வி. நரசிம்ம சுவாமியோ பின்னாளில் ஷிர்டி பாபா பக்தராகி, மயிலை சாயி சமாஜ் மற்றும் பாபா ஆலயம் அமைத்தார்

  ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!

  • BaalHanuman April 5, 2013 at 11:20 PM Reply

   அருமையான தகவல் அரவிந்த் சார்.. நிறை குடம் நீங்கள்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s