6-ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…


மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.

–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

திருவண்ணாமலை கிரிவலத்தை பகவான் எப்போதும் ஊக்குவித்தார். உடல் நலம் குன்றியவர்கள்,முதியவர்கள் கூடகிரிவலம் செல்வதை ரமணர் தடுத்ததில்லை. ‘‘அமைதியாக இறைவனை நினைத்துக் கொண்டு நடந்து செல்லுங்கள்’’என்றே அவர் கூறுவார். அனைவரும் திருவண்ணாமலையைச் சுற்றி வந்து இறைவனின் ஆசியைப் பெற வேண்டும் என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். பகவானும் பல முறை கிரிவலம் சென்றுள்ளார். அண்ணாமலையைச் சுற்றி வருவது பற்றி ஒரு உண்மைக் கதையையும் பகவான் பக்தர்களிடம் சொல்வார்.கதையின் க்ளைமாக்ஸ் பகுதியை மட்டும் அவர் சொன்னதேயில்லை.அந்த க்ளைமாக்ஸை பகவானின் அனுக்ரஹத்துடன் நான் உங்களுக்கு இங்கே சொல்லப் போகிறேன்.

திருவண்ணாமலை கிரிவலத்தின் சிறப்பைப் பற்றி பகவான் சொல்லும் உண்மைக் கதை இதுதான்.

கால்கள் இரண்டும் உணர்விழந்து தொங்கிப் போன ஒரு பெரியவர், கவட்டுக் கட்டைகளின் உதவியுடன், நொண்டி நொண்டி கிரிவலம் வந்து கொண்டிருந்தார்.அவர் அதுபோல் அடிக்கடி மலை வலம் வருவது உண்டு. ஆனால் இந்த முறை வழக்கமான உற்சாகமின்றி, மிகுந்த சோர்வுடனும் கலக்கத்துடனும் அந்த மாற்றுத் திறனாளி மலையைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.

அதற்குக் காரணம் இருந்தது.பல முறை கிரிவலம் வந்திருந்தாலும் இதுதான் கடைசி முறை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார்.
ஏன்?

கால்கள் தொய்வுற்ற தான் தன் குடும்பத்திற்கு பாரமாக இருந்து வருவதாக அவருக்குத் தோன்றிற்று. குடும்பத்தினருக்குத் தன்னால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.அவர்களுக்குச் சிரமம் மட்டும் கொடுப்பது சரியில்லை என்று அவருக்குப் புலனாகவே, பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்களை விட்டு விலகி, யாரிடமும் சொல்லாமல் கண் காணாமல் ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்றுவிடலாம் என்று அந்தப் பெரியவர் முடிவெடுத்தார்.அதனால் கடைசி முறையாக திருவண்ணா-மலைக்கு கிரிவலம் செய்ய வந்திருந்தார்.

விந்தி,விந்தி சூம்பிய கால்களுடன் பெரியவர் திருவண்ணாமலையை வலம் வந்து கொண்டிருந்தபோது,பாதி வழியில் ஒரு வாலிபன் எதிர்ப்பட்டான்.

பெரியவரை நெருங்கிய வாலிபன், “ஓய், கால் சரியில்லாத நீ கவட்டைக்கட்டையுடன் கிரிவலம் வரவேண்டும் என்று யார் அழுதார்கள்? இப்படி நடந்தால் எல்லாம் நீ மலையைச் சுற்றி வர முடியாது. இதெல்லாம் உனக்குச் சரிப்படாது’’ என்று கூறிக் கொண்டே, எதிர்பாராத ஒரு செயலைச் செய்தான்.

ஆமாம்.அந்தப் பெரியவருக்கு உதவியாக இருந்த கோல்கள் இரண்டையும் வெடுக்கெனப் பிடுங்கித் தூர எறிந்துவிட்டு,அவன் பாட்டுக்குச் சென்றுவிட்டான்.

அந்தப் பெரியவருக்குத் தாங்க முடியவில்லை. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வந்தான், திட்டினான், கவட்டைக் கட்டையைப் பிடுங்கினான், தூர எறிந்தான். இப்படியா ஒருத்தன் மனிதாபிமானமே இல்லாமல் இருப்பான்? ஆவேசத்துடன் அவனைத் திட்ட ஆரம்பித்த அந்தப் பெரியவர், ஒரு நிமிடம் தன்னைப் பார்த்தார். உடம்பும் மனமும் சிலிர்த்து, அப்படியே நின்றார்.

ஆமாம்.கால் ஊனம் காணாமல் போய்,கவட்டுக் கட்டைகளின் உதவியின்றி ஜம்மென்று நேராய் நின்று கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். அந்த இளைஞன் சென்ற திசை நோக்கி அவர் தொழுதார். அவர் கண்களிலிருந்து ஆனந்தம் அலை பாய்ந்தது.

அதற்குப் பிறகு திருவண்ணாமலையை விட்டு அந்தப் பெரியவர் எங்குமே செல்லவில்லை.

இந்த உண்மைச் சம்பவத்தை பக்தர்கள் பலரிடமும் சொல்லியிருக்கிறார் பகவான். இதோ இந்த விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது நடந்த சம்பவம் இது. அந்தப் பெரியவர் அதற்குப் பிறகு பல்லாண்டுகள் இதே திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்ததைப் பலரும் அறிவார்கள். அருணாசல மலையைச் சுற்றி வருவதால் அத்தனை பலன் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டவே ரமண மகரிஷி இதைச் சொல்வார்.

ஆனால் இந்த உண்மைக் கதையில் பகவான் சொல்லாத ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன். பகவான் கடைசி வரை அதன் க்ளைமாக்ஸைத் தன் வாயால் சொல்லவே இல்லை.

ஆமாம். அது என்ன தெரியுமா?

விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது அவரது வயது என்ன? 20. கால் சுவாதீனமில்லாத பெரியவரின் ஊன்றுகோலைப் பிடுங்கி எறிந்து குறும்பு செய்தது யார்? ஓர் இளைஞன்.

ஆமாம். நம் பகவான் ரமண மகரிஷிதான் அந்த இளைஞன்!

எழுதும்போதே மெய் சிலிர்க்கிறது.கால்கள் கொடுத்தவர் பகவான்தான். அவர் செய்யாத அற்புதங்கள் இல்லை.ஆனால் அவர் அதையெல்லாம் சொல்லிக் கொண்டதும் இல்லை.தட்சிணாமூர்த்தியின் அம்சமாயிற்றே. கடவுள் எல்லாம் நன்மைகள் செய்துவிட்டு, தான்தான் செய்தோம் என்று என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா என்ன?நம் குரு தேவரும் அப்படித்தான்.

அப்போது என்று இல்லை.இப்போதும் நீங்கள் ரமணாச்ரமம் சென்று பகவானின் சன்னதி முன்னால் நின்று பாருங்கள்.உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதையெல்லாம் உடனே தருவார் பகவான். இந்த அனுபவத்தை உணர்ந்தவர்கள் ஆயிரம், ஆயிரம்!

கிரிவலம் சென்றால் இத்தனை நன்மை இருக்கிறதே, அப்படி என்னதான் இருக்கிறது அந்தத் திருவண்ணாமலையில்?

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!

Welcome to Arunachala Live!

Advertisements

4 thoughts on “6-ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…

 1. அறிய தொடர்கிறேன்…

  நன்றி…

  • BaalHanuman April 2, 2013 at 11:23 PM Reply

   கண்டிப்பாகத் தொடருங்கள் தனபாலன். உங்களுக்காக மேலும் பல சுவையான தகவல்கள் காத்திருக்கின்றன 🙂

 2. Arvind April 2, 2013 at 6:10 AM Reply

  இந்தச் சம்பவம் ‘அருணாசல புராணத்தில்’ சொல்லப்பட்டிருப்பதாக பகவான் சொல்லியிருக்கிறார். அவ்வாறு இளைஞனாக வந்து ஊன்றுகோலைப் பிடுங்கியவர் யார் என்று ஒரு பக்தர் கேட்டதற்கு, வேறு யாராக இருக்கும் அந்த அருணாசலர் தான் என்றும் பதில் சொல்லியிருக்கிறார்.

  ஆனால், சில பக்தர்கள் பகவான் ரமணரே அப்படி அந்தப் பெரியவர் முன் இளைஞராகத் தோன்றி அருள் புரிந்ததாக நம்புகின்றனர்

  அதுசரி அருணாலர் வேறு, பகவான் ரமணர் வேறா என்ன?

  ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாசல ரமணாயா!!

  • BaalHanuman April 2, 2013 at 11:28 PM Reply

   >>அதுசரி அருணாலர் வேறு, பகவான் ரமணர் வேறா என்ன?

   உண்மைதான் அரவிந்த். இளையராஜாவும் இதேதான் கூறுகிறார்…

   ? திருவண்ணாமலையைப் பற்றி ?

   ! திருவண்ணாமலை வெறும் மலை இல்லைய்யா. அதுதான் சிவபெருமானே. பகவான் ரமணரே. ரமணர் ஆத்மா தேக நீக்கம் ஏற்பட்டபோது ஒளி வடிவாகி அந்த மலையில் கலந்து விட்டார். அதனால் வெறும் கல்லாலும் மண்ணாலும் ஆனதல்ல. சிவபெருமானே மலை வடிவாகியிருக்கிறார் என்றுதான் அர்த்தம். பிரம்மா, விஷ்ணு இருவரின் வேண்டுகோளுக்கிணங்க தன்னை குறுக்கிக்கொண்டு மலையாக மாறி பூமியில் எழுந்தருளியிருக்கிறார். அந்த மலையில் பகவான் ரமணரே ஜோதியாகக் கலந்து விட்டார். அதனால் நாம் பார்ப்பது ரமணரே, சிவபெருமானே அன்றி மலை அல்ல.

   இந்தத் தொடருக்கான முக்கிய காரணமே உங்கள் ‘ரமணர் ஆயிரம்’ தான்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s