அப்பாவின் ரேடியோ – சுஜாதா தேசிகனின் சிறுகதைகள் – விமர்சனம் – ரெங்கசுப்ரமணி


அப்பாவின் ரேடியோ 
சிறுகதைகள் 
பத்து பைசா பதிப்பகம் 
பக்கம் 169
விலை ரூ 110/=
https://www.nhm.in/shop/home.php?cat=1207

Desikan Narayanan[DSC_1523.JPG]

இணையத்தில் மேயும் போது அங்கங்கு கண்ணில் படும் சில பின்னூட்டங்கள் சிரிப்பை வரவழைக்கும்.

“தல அப்படியே வாத்தியார் ஸ்டைல்ல எழுதியிருக்கீங்க”
“சுஜாதா டச்”
“வாத்தியார் எழுதினது போலவே இருக்கு”

கொஞ்சம் கலகலப்பான நடையில் எழுதினால் அது இவர்களுக்கு சுஜாதா நடையாகி விடுகின்றது. சுஜாதாவின் பாதிப்பு இல்லாமல் எழுதுபவர்கள் குறைவுதான். இருந்தாலும் சும்மா சாதாரண பேச்சு நடையில் எழுதுவதையும், கொஞ்சம் நகைச்சுவை கலந்து எழுதுவதையும் சுஜாதாவின் எழுத்துடன் ஒப்பிட்டால் எப்படி? சுஜாதாவிற்கு இணை அவர்தான்.

ஆனால் சுஜாதாவின் எழுத்தோ என்று ஒரு தோற்ற மயக்கத்தைத் தரும் எழுத்தை படிக்க நேர்ந்தது. தேசிகன், சுஜாதா தேசிகன் அவர்களின் புதிய புத்தகம் அப்பாவின் ரேடியோ.

தேசிகனின் தளம் பல வருடங்களுக்கு முன்னரே அறிமுகம். வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் கழிந்தபின், புதிய வேலையின் பிரமிப்பும், நம் தலையில் எவ்வளவு பொறுப்பு என்ற பிரமையும் போன பின், எல்லாரையும் போல இணையத்திற்கு நடுவில் வேலை என்று ஊரோடு ஒத்து வாழ ஆரம்பித்தேன். அப்போது தேடும் போது சிக்கியது இவரின் தளம். பல சுஜாதா கதைகளை வைத்திருந்தார். தளத்தின் டெப்ளேட்டே ஒரு டைப்பாக இருக்கும். சென்ற வருடம் ஸ்ரீரங்கத்து கதைகள் புத்தகத்தை படிக்கும் போதுதான் அவரைப் பற்றி முழுவதும் தெரிந்தது. தேசிகன் சுஜாதாவின் தீவிர ரசிகர், விசிறி,ஒரு ஓவியர் என்றுதான் தெரியும். அருமையான ஓவியங்கள். மிகவும் பிடித்திருந்தது. கணையாழியின் கடைசி பக்கங்கள் புத்தகம் உருவானதில் இவரது பங்கு பிராதானம்.சுஜாதா அவரின் எந்த ரசிகரை பற்றியும் வெளியே அதிகம் பேசியதில்லை, இவரைத் தவிர.

பால் ஹனுமான் புண்ணியத்தால்தான் அவர் ஒரு எழுத்தாளர் என்பதே தெரியும். முதலில் சட்டென்று கவர்ந்தது அவரின் எழுத்து நடை. அவர் அப்படியே சுஜாதாவைப் போல் எழுதுகின்றார் என்று அவரிடம் கூறினால் அவர் அதைப் பெருமையாகத்தான் கருதுவார் என்றாலும் தேசிகனின் தனித்துவமும் தெரிகின்றது. தேசிகனைப் பற்றி கூறும் போது சுஜாதாவை பற்றி பேசாமல் இருக்க முடியாது. அனைவரும் சுஜாதாவின் எழுத்து தொழில்நுட்பத்தை மட்டும் கைக்கொள்ள முனையும் போது அவரின் எழுத்தில் இருக்கும் உயிரோட்டத்தையும் தேசிகனின் எழுத்தில் உணர முடிகின்றது.

ஒரு சிறிய சம்பவத்தை பலவிதமாக மற்றவர்களுக்கு கடத்த முடியும். ஒரு சிறிய துணுக்கு, ஒரு கட்டுரை, ஒரு சிறுகதை, ஒரு நாவல். இதில் வலிமையான முறை சிறுகதை. கட்டுரை பெரும்பாலும் ஒரு செய்தி வாசிப்பாளரின் பார்வையில்தான் இருக்கும். சிறுகதை என்பது பாத்திரங்களின் பார்வையில் விரிந்து நம்மை அதனுள் இழுத்துச் செல்லும். சில சமயம் சிறுகதை கூட கட்டுரையாக அமைந்து நம்மை படுத்தும். ஒரு சம்பவத்தை ஒரு கட்டுரையை ஒரு சிறுகதையாக மாற்றுவதில்தான் ஒருவரின் திறமை வெளிப்படுகின்றது. அத்திறமை தேசிகனிடம் ஏராளமாக இருக்கின்றது.

தேசிகனின் எழுத்து நடை வெகு எளிதில் கதைக்குள் இழுத்துச் செல்கின்றது. பெரிய பெரிய வாக்கியங்களைப் போட்டு நம்மை கொடுமைப்படுத்தாமல் சுருங்கச் சொல்லி முழுப் பரிமாணத்தையும் காட்டுகின்றார். கதை சொல்லும் முறையும் வெகு எளிமை, கதாபாத்திரங்கள், சம்பவங்கள் அனைத்தும் பெரும்பாலும் நாம் அன்றாடம் பார்க்கும் கேள்விப்படும்  ஒன்றுதான். அதை சொல்லும் முறையில் தேசிகனின் எழுத்து நம்மை வசீகரிக்கின்றது.

அவர் விகடன், குமுதம், கல்கி, குங்குமம் மற்றும் சொல்வனம் போன்ற இதழ்களில் வெளியான கதைகளின் தொகுப்பு. ஒரு கதையை எழுத நமக்கு மிக ஈசியாக ஐடியாவை தருவது நமது வாழ்க்கைதான். அதில் எவ்வளவு கற்பனை எவ்வளவு உண்மை என்பதுதான் தொழில் ரகசியம். சிறுவயது சம்பவங்கள் மட்டுமன்றி கற்பனை கதைகள், ஏதோ ஒரு சிறு பொறியை கதையாக்குதல் என விதவிதமான கலவை. கதைகள் அனைத்தும் ஒரே மாதிரியான அமைப்பில் இல்லாமல் அனைத்துவித அமைப்புகளிலும் எழுதியுள்ளார். குட்டிக் கதைகள், நான் லீனியர் அமைப்பிலான கதைகள், இரண்டு மூன்று ட்ராக்கில் ஓடி சேரும் கதைகள், கதைக்குள் கதை, சம்பந்தமே இல்லாதது போல் சென்று ஒரு குட்டி சுவாரஸ்யமான முடிச்சில் இணையும் கதைகள். சுமாரான கதைகள் என்று தோன்றிய இரண்டும் தழுவல் கதைகள் அவை மட்டும் கொஞ்சம் ஒட்டவில்லை.

சிறுவயது சம்பவங்களைக்  கதையாக எழுதுவதில் ஒரு சிரமம் இருக்கும். அது வயது, அனுபவம். அனுபவத்தைப்  பெற்ற சிறுவனை இப்போது காண முடியாது,   சிறுவன் வளர்ந்து எழுத்தாளன் ஆகிவிட்டான். அச்சிறுவனின் பார்வையில் சம்பவங்களைக்  கூற வேண்டும். அதே சமயம் எழுத்தாளன் அதை விவரிக்கும் போது காலத்தை தாண்டி எங்கோ அது நிகழ்காலத்தைத் தொடும்போது அது மிகச் சிறந்த கதையாக மாறும். அது போன்ற கதைகளை சுஜாதாவிடமும், அசோகமித்திரனிடமும் படித்துள்ளேன். இப்போது தேசிகனின் கதைகளும்.

வின்னி, அப்பாவின் ரேடியோ, சாமி படம், மூக்குப் பொடி, தோசை, பக்திபடம் ஆகியவை ஒரு சிறுவனின் கதைகள். சிறுவயதில் அனைவருக்கும் எங்கோ, எப்போதோ கிடைத்த அனுபவங்கள். அதைப் படிக்கும் போது நமக்கும் அடடே இதுமாதிரி நமக்கும் நடந்திருக்கே என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அனைவராலும் அதை கதையாக்க முடிவதில்லை.

அப்பாவின் ரேடியோ புத்தகத்தின் தலைப்பு. அதைப் படித்ததும் என் அப்பாவின் ரேடியோ நினைவிற்கு வந்தது. அதே போல ஒரு வால்வ் ரேடியோ வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் டிவி வந்ததும் அது பரணிற்கு சென்று கொஞ்ச நாள் இருந்துவிட்டு சுமங்கலியாய் போய் சேர்ந்தது. பக்திப் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை. கல்லூரியின் போது யார் வீட்டிலாவது ஊருக்கு போனால் உடனே மொத்த ஜனமும் கிளம்பிவிடும். கவனமாக “அய்யிரே நீ வர மாட்ட, உனக்கு பிடிக்காது. நீ கிளம்பு” என்று பத்திரமாக வண்டியேற்றி அனுப்பிவிட்டுப் போகும். நல்லவேளை எனக்கு யாரும் “தயிர்வடை” என்று பெயர் வைக்கவில்லை. ஆனால் நானும் இவரைப் போல அராஜக சகமாணவனிடம் மாட்டி பயந்து ஓடியிருக்கின்றேன்.

நகைச்சுவை எழுத்து பலவிதம் கல்கி, தேவன் டைப், பாக்கியம் ராமசாமி டைப். லேட்டஸ்டாக ஜெயமோகன் ஸ்டைல் (புரிந்து கொண்டு சிரிக்க தனிப் பயிற்சி வேண்டும். முன்பதிவு செய்து கொண்டால் வட்டத்தில் பயிற்சி அளிப்பார்கள்) இதில் முற்றிலும் மாறுபட்டது சுஜாதா டைப். மெலிதான பகடி, சாதாரணர்களின் நகைச்சுவை. அபத்தமான அச்சு பிச்சு கிடையாது. இவரின் கதைகளில் நகைச்சுவை கதைகளில் உள்ளோடி கிடக்கின்றது. (நேரில் பார்க்கும் போது கொஞ்சம் சீரியஸ் டைப்பாகத் தெரிந்தார்). கல்யாண வைபோக கதையை படித்து விட்டு வெடித்துச் சிரித்துவிட்டேன் ( முடிவை முன்னே யூகிக்க முடிந்தது. ஒரு சின்ன லீட் இருக்கின்றது) பூவா தலையாவின் கடைசி வரி நச். ப்ளாக் ஹ்யூமர்.

நிறைய இடங்களில் குசும்பு கொப்பளிக்கின்றது. // என்ன டிஃபன் சாப்ட்றீங்க? வழியில் பாத்துக்கிறேன் என்று ஓடப்பார்த்தது மணி ஒன்பதே கால் என்பது மட்டும் தான்//, //ஸ்கைப் மாமனார்//.

பெருங்காயம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, பணத்திற்கு ஊரை விட்டு ஓடிவிட்டு, அதன் குற்ற உணர்ச்சியை மறைக்கச் செய்யும் போலித்தனங்களை உடைக்கின்றது. அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி அற்புதம். இன்னும் கிராமங்களில் உள்ள இது போன்ற குடும்பங்களால் தான் நாம் சுகமாக இணையத்தில் மதச்சார்பின்பை அது இது என்று ஜல்லியடிக்க முடிகின்றது. ராமானுஜலுவும் பிடித்திருந்தது.

த்ரில்லர்களையும் எழுதியிருக்கின்றார். முடிவை யூகிக்க முடியாமல் வைத்துள்ளார். இசை பற்றியும், வைஷ்ணவம் பற்றியும் அவருக்கு இருக்கும் ஞானம் வெவ்வேறு கதைகளில் தெரிகின்றது. கடைசி கதையான துக்கடா, ஒரு நிஜ இசைக் குடும்பத்தை நினைவு படுத்துகின்றது. இன்ஸ்பிரேஷனா இல்லை உண்மையா? உஷ்ஷ்ஷ் தொழில் ரகசியம்.

அவர் முன்னுரையில் கூறுகின்றார் . “முடிவை எழுதி வைத்துவிட்டு அதற்கு கதை பிடிப்பது மிகவும் பிடிக்கும்.” சிறுகதைகளுக்கு முடிவுதான் ஜீவனை அளிக்கும். அம்முடிவுகள் அனைத்து கதைகளுக்கும் சரியாக அமைந்துள்ளது.

பெரும்பாலான புத்தகங்களை வாங்கும் போது அதன் அட்டைப்படத்தை முதலில் பார்ப்பேன். பெரும்பாலான அட்டைப்படங்கள் திருப்தி தந்ததில்லை. இப்புத்தகத்தின் அட்டைப்படத்தை வரைந்தவர், தேசிகனின் மகள் ஆண்டாள் தேசிகன். பெண்ணைப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்.

சிறுகதைகளை குடலாப்ரேஷன் செய்து விவாதிக்க நிறைய பேர் இருக்கின்றார்கள். இவரின் அப்பார்ட்மெண்ட் கதை ஒரு மெலிதான நகைச்சுவை கலந்த கிண்டல் கதை. அதை கீறி, ஆசிரியருக்கே தெரியாத பல புதிய பரிமாணங்களை காட்டியிருந்தார்கள். இலக்கியவாதிகள்(?) இதை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கட்டும். நாம் நிம்மதியாக கதைகளில் வரும் உலகை ரசிப்போம்.

முன்னுரையில் கூறப்பட்டுள்ளபடி சுஜாதாவைப் பிடிப்பவர்களுக்கு தேசிகனையும் பிடிக்கும்.

புத்தகத்தை அவரே பதிப்பித்துள்ளார் பத்து பைசா பதிப்பகம். பதிப்பகத்தின் பெயரைப் போல விலையும் குறைவுதான் 110.  புத்தகம் கிழக்கில் கிடைக்கின்றது.

ரெங்கசுப்ரமணி  பெங்களூரு

[DSC_1523.JPG]

தேசிகன் பற்றி சுஜாதா…

தேசிகன், நான் எழுதிய அத்தனை கடைசிப் பக்கங்களையும் தொகுத்து முடித்து விட்டார். பிரமிக்கத்தக்க சாதனை! எழுத்தாளன்பால் அளவிலாத வாத்சல்யமும் நிறையப் பொறுமை கொண்ட ஒரு வாசகனால் தான் சாத்தியம். என் இனிய நண்பர் தேசிகனுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். எனக்கே என் கதைகளைப் பற்றி எப்போது எழுதினேன், எந்த இதழில் எழுதினேன் என்று சந்தேகம் ஏற்படும்போது அவரைத்தான் கேட்பேன். அந்த அளவுக்கு நான் எழுதியது அனைத்தையும் ஆராய்ந்து ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார்.

நண்பர் தேசிகன் என் தீவிர வாசகர், ரசிகர். அவர் குடும்பத்தினர் அனைவரும் என் கதைகளை விரும்பி வாசிப்பவர்கள். தேசிகன் என் கதைகளில் ஒரு ‘அத்தாரிட்டி‘ என்று கூட சொல்லலாம். பல சமயங்களில் நான் எழுதிய கதைகளைப் பற்றிய சந்தேகங்களை நானே அவரிடம் கேட்பேன். இந்த வருஷத்தில் இந்த பத்திரிகையில் எழுதியது என்று தெளிவாக தகவல் கொடுப்பார். மேலும் நான் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் என்னிடம் இல்லை. தேசிகனிடம் இருக்கிறது. புத்தக வடிவில் இன்னும் வராத கட்டுரைகள் கூட வைத்திருக்கிறார்.

ஓர் எழுத்தாளனுக்கு இவ்வகையிலான வாசகர்கள் அமைவது ஒரு அதிர்ஷ்டமே. தேசிகன் நல்ல வாசகர் மட்டுமல்ல. நல்ல எழுத்தாளர். நல்ல கணிப்பொறி மென்பொருளாளர். நல்ல நண்பர் எல்லாமே.

சுஜாதா

சென்னை 26/5/2001

சிறுகதைகள் முடிவுகள் பற்றி தேசிகன்…

Desikan Narayanan

கதையை எப்படி சொல்ல வேண்டும் என்ற கேள்விக்கு “கண்ணீர் வர சொல்லலாம், சிரிக்கச் சிரிக்க சொல்லலாம், கோபம் வர, ஆர்வம் வர, வெறுப்பு-வர,படிப்பவருக்கு ஒன்பதில் ஏதேனும் ஒரு உணர்ச்சியைத் தந்தால் போதும்.” என்று சுஜாதா சிறுகதை எப்படி எழுதுவது என்ற குறிப்பில் எழுதியிருக்கிறார். பல கதைகளின் முடிவுகளை பற்றி அவரிடம் பேசியிருக்கிறேன்.

ஒரு முறை மலைக்கோட்டை ரயிலில் என் கூட படித்த நண்பன் டீ விற்றுக்கொண்டிருந்ததை பார்த்து அதை வைத்து எழுதிய கதை வின்னி.சுஜாதாவிடம் பல அடித்தல் திருத்தல் வாங்கிய கதை இது. முடிவை வைத்துக்கொண்டு எழுதுவது என்பது சுவாரஸியமான விஷயம் என்று கற்றுக்கொண்டேன்.

சிறுகதையின் முடிவை எழுதி வைத்துக்கொண்டு எப்படி கதை எழுதலாம் என்ற சவால் எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று. கூகிள் உதவி செய்யாது நீங்களாகவே வாசகனாகவும், எழுத்தாளனாகவும் மாறி மாறி கதை எழுத வேண்டியிருக்கும். பல மாதமாக ஒரு முடிவை வைத்துக்கொண்டு எப்படி கதையாக்கலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போது சட் என்று கதை தோன்றும். அந்த கணம் எப்போதும் சந்தோஷமாக இருக்கும்.

– 0 – 0 – 0 – 0 – 0 – 0

Advertisements

2 thoughts on “அப்பாவின் ரேடியோ – சுஜாதா தேசிகனின் சிறுகதைகள் – விமர்சனம் – ரெங்கசுப்ரமணி

 1. R. Jagannathan April 2, 2013 at 5:57 AM Reply

  விமரிசகர் ரங்கசுப்பிரமணி அவர்களும் தேர்ந்த எழுத்தாளர் என்று நிரூபித்துவிட்டார். மிகச் சரியாக தேசிகன் அவர்களின் கதைகளை அவர் எழுத்து நடையை விருப்பு வெறுப்பு இல்லாமல் அறிமுகப் படுத்தி இருக்கிறார். தேசிகன் பரவலாக அறியப்பட்டவர், வாசிக்கப் பட்டவர் என்றாலும், இந்த விமரிசனம் புதியவர்களையும் புத்தகம் வாங்கத் துண்டும். வாய்ப்புக் கிடைக்கும்போது வாங்கிவிடுகிறேன்! – ஜெ.

  • BaalHanuman April 2, 2013 at 11:22 PM Reply

   உண்மைதான் R.J. ரெங்கசுப்ரமணியின் தளத்திலும் அவருடைய பல சுவாரஸ்யமான விமர்சனங்களை நீங்கள் காணலாம்…

   http://rengasubramani.blogspot.in/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s