3-பரிசு – சுஜாதா


இதன் முந்தைய பகுதி…

Madhyamar

இங்கேயும் இல்லாமல் அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது. இவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள். பெரும்பாலும் கோழைகள். பணக்கார சௌகர்யங்களுக்குத் தொட்டும் தொடாத அருகாமையில் இருப்பவர்கள்.

பக்தி, காதல், பரிவு, பாசம், தியாகம், நேர்மை போன்ற குணங்களைத் தேவைக்கும் அவசரத்துக்கும் ஏற்பச் சற்று மாற்றிக் கொள்பவர்கள். சமூகம் வாசல் கதவைத் தட்டுவதைக் கேட்காதவர்கள்… இந்த மௌனப் பெரும்பான்மையினருக்கு ஒரு பெயர் உண்டு.

மத்யமர்.

இவர்களைப் பற்றிய கதை இது.
– சுஜாதா

பாச்சா கடிதத்தை மடித்து நிமிர்ந்து,

“அண்ணா, உனக்கு நிஜமாகவே மச்சம்! நாலே நாலு வார்த்தைகளுக்கு இத்தனை மவுசா? மன்னி, நீ போய்த்தான் ஆகணுமா? இல்லை, நான் போகட்டுமா?”

“அ! ஆசையைப் பாரு! முதல் முதலா உங்கண்ணாவோட இந்த எலி வளையை விட்டுக் கிளம்பற சான்ஸ் வந்திருக்கு!”

“சும்மா சொன்னேன். சந்தோஷமாப் போயிட்டு வாங்கோ!”

“பாச்சா, முதல்ல மேப்பைப் பாரு. ஆக்ரா எங்கே இருக்குன்னு. ஐ.சி.ஃஎப்.க்கு வடக்கே போனதில்லை நான்” என்றான் சுவாமி.

“நான் தெருக்கோடி தாண்டியதில்லை” என்றாள் பூர்ணிமா.

“பொய்! ஐதராபாத் போயிருக்கே இல்லை?”

“சின்ன வயசில்.”

“குளிரா இருக்குமா?”

“டில்லிலயா? எல்லாம் லெட்டர்ல போட்டிருக்கான் பாரு.” பாச்சா கடிதத்துடன் இணைத்திருந்த குறிப்புகளைப் படித்தான். ‘பருவ நிலை சீராக இருக்கும். ஒரு லேசான ஸ்வெட்டர் அல்லது சால்வை போதும்…’ “மன்னி உங்கிட்ட சால்வை இருக்கா?”

“சால்வைன்னா?”

“ஷால்! புஸுபுஸுன்னு போத்திக்க!”

“என்ன விளையாடறியா, கிழிஞ்சு போன பவானி பெட் ஷீட்டைப் போத்திண்டு இருக்கேன்!”

“அது எங்கே கிழிஞ்சிருக்கு? சும்மா சொல்லாதே” என்றான் சுவாமி.

“பூர்ணிமா, அந்த ஒல்டால் என்ன ஆச்சு?”

“அது எப்பவோ கிழிஞ்சு போயி தரை துடைக்க எடுத்துண்டாச்சே!”

“என்னோட பச்சை ஸ்வெட்டர்?”

“அது அந்துப் பூச்சி பாதி சாப்பிட்டாச்சு…”

“அண்ணா! டில்லிக்குப் போகணும்னா மினிமம் ஒரு ஸ்வெட்டர், நல்ல செருப்பு, டீசண்டா ஒரு ஷூ, மன்னிக்கு மைசூர் சில்க்கில் ஒரு புடவை கட்டாயம் வாங்கித்தான் ஆகணும்!”

“சின்னதா ஒரு லிஸ்ட்டு போட்டுடலாம்.”

புதன்கிழமை அந்தப் பட்டியல் பெரிதாகியிருந்தது. டார்ச் லைட், உலன் ஸாக்ஸ், பருப்புப்பொடி போன்ற உபரிச் சமாச்சாரங்களும் சேர்ந்து கொண்டன. பூர்ணிமா மூன்று நாட்களாக ‘பேக்’ பண்ண ஆரம்பித்தாள். ஒண்டுக் குடித்தனக்காரர்களின் பட்டியலும் நீண்டு கொண்டு வந்தது. கம்பளி நூல், தாஜ் மஹால் மாக்கல் பொம்மை, மயிலறகு விசிறி, மோடா, சப்பாத்திக்கல், மடக்கு நாற்காலி, போட்டோ ஆல்பம், அரை ஸ்வெட்டர்…

“உற்சாகத்தில் எல்லோருக்கும் தலையாட்டாதே மன்னி. நீங்க ரெண்டு பேரும் போய் என்ஜாய் பண்ணிட்டு வாங்கோ.” வியாழன் இரவு பூர்ணிமாவும் பாச்சாவும் பேக்கிங் முடித்து விட்டார்கள்.

“கல்யாணம் ஆனதிலிருந்து நாங்க ஹனிமூன்கூடப் போனதில்லை பாச்சா! நேரா இங்க வந்தவதான். விவித்பாரதி, முதலியார் வீட்டு டி.வி., இதை விட்டால் வேற என்டர்டெய்ன்மெண்ட் கிடையாது. உங்கண்ணா ஓவர் டைம், ஓவர் டைம்னு பணம் சம்பாதிக்கிறதிலேயே இருக்கார்.”

“என்ன பண்றது மன்னி? ரங்குடு படிப்பு முடிச்சாகணும். ரேவதி கல்யாணம் பாக்கியிருக்கு. அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ணணும். எனக்கு வேலை ஸ்திரமாகணும்…”

“நான் ஒண்ணும் குறையாச் சொல்லலை. டில்லிக்குப் போறது, தாஜ்மகால் பார்க்கிறது என்கிறதெல்லாம் நினைச்சுக் கூட பார்க்க முடியாத இந்தச் சமயத்தில் சட்டுன்னு பெருமாள் பார்த்து ஒரு பரிசு கொடுத்திருக்கார் பாரு! அதைச் சொன்னேன். இல்லாட்டா என்னைப் போல அசமஞ்சத்துக்கு ஆக்ரா தட்டுக்கிடறதா!”

“ஏன் மன்னி அப்படிச் சொல்றே? அண்ணா பாரு, இனிமே ரெண்டு வருஷம் பல்லைக் கடிச்சுண்டு இருந்துட்டா! எனக்கும் ஸ்திரமா வேலை கிடைச்சு உங்களுக்கும் எல்லாப் பொறுப்புகளும் முடிஞ்சு போயி…! சொந்தப் பணத்திலேயே எட்டூருக்கு அழைச்சுண்டு போவார் பாரு!”

“யார் கண்டா? அப்ப ஏதாவது தங்கை பிரசவம் வருமோ என்னவோ! இதெல்லாம் அதிக ஆசை வெச்சுக்கக் கூடாது! அதிகமா எதிர்பார்க்கவும் கூடாது!”

வெள்ளிக்கிழமை டிக்கெட் முதலான சமாச்சாரங்களைக் கொடுக்க அந்த விண்டாஸ் ஆசாமி வருவதன் முன் பூர்ணிமா எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்து விட்டாள். பக்கத்துப் போர்ஷனில் நித்யாவிடம் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்து விட்டு, வேலைக்காரி காலை ஒரு வேளை மட்டும் வந்து துணி தோய்த்து விட்டு, அறையைப் பெருக்கி, வாசற்படியருகில் கோலம் போட்டுவிட்டுப் போகும்படி ஏற்பாடு செய்தாள். பாச்சாவின் சாப்பாடு, பஸ் செலவுக்கு என்று நூறு ரூபாயும் சனிக்கிழமை தேய்த்துக் கொள்ள நல்லெண்ணையும் அரை லிட்டர் பால் சப்ளை, காப்பிப் பொடி என்று சகல ஏற்பாடும் செய்திருந்தாள்.

சாயங்காலம் கிருஷ்ணஸ்வாமி திரும்பி வந்தபோது களைத்திருந்தான். அவனுக்குக் காப்பி கொடுத்துவிட்டு, அறையைச் சுற்றி வரப் பார்த்தாள். ஒல்டால், பெட்டி, பிளாஸ்டிக் பை, கூஜா, பாட்டிலில் தண்ணீர் எல்லாம் காத்திருந்தன.

“எல்லாத்தையும் தயாரா எடுத்து வெச்சுண்டாச்சா?”

“ஒரு வாரமாத் தயாரா இருக்கேன். பாச்சாவுக்குத் தேச்சுக்க எண்ணெய்கூட பாத்ரூம்ல எடுத்து வெச்சாச்சு!”

“எல்லாம் வேஸ்ட்டு!” என்றான் விரக்தியுடன்.

“ஏன் என்ன ஆச்சு, அவன் வரலையா? ஏமாத்தலா?” என்றாள் அதிர்ந்து போய்.

“இல்லை. நான்தான் டில்லி – ஆக்ரா ட்ரிப் வேணாம்னுட்டேன். அவங்களுக்கு ஃபோன் பண்ணி அதுக்குப் பதிலாப் பணமாக் கொடுப்பாங்களான்னு கேட்டேன். பத்தாயிரம் ரூபாய் தர்றதாச் சொல்லிட்டா! வாங்கிண்டுட்டேன்!”

“அப்ப டில்லி கிடையாதா?” அவள் முகம் சின்னதாகி வாடி விட்டது.

“இல்லை.”

“எதுக்கு இப்பப் பணம்?”

“பாச்சாவுக்கு ஸ்டோர்ல காஷியர் வேலை ஆகும் போல இருக்கு. அதுக்கு காஷன் டெபாசிட் கட்டணும். அப்புறம் அம்மாவுக்கு ஆபரேஷனை வெச்சுண்டுரலாம்னுட்டார் டாக்டர்!”

பூர்ணிமா சற்று நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எல்லாம் வேஸ்ட் இல்லை?” கண்களில் அவசரப்பட்ட கண்ணீரை உதிரவிடாமல் தடுத்தாள்.

சுவாமி அவளருகில் வந்து பரிவுடன் கன்னத்தைத் தடவி, “உனக்குத்தான் கொஞ்சம் ஏமாத்தம், அப்படித்தானே>”

“பரவாயில்லை. இன்னொரு தடவை ப்ரைஸ் விழுந்தால் ஆக்ரா பார்த்துக்கலாம்” என்றாள்.

–முற்றும்.

11 thoughts on “3-பரிசு – சுஜாதா

 1. மகேஸ்வரன் April 1, 2013 at 12:24 AM Reply

  தங்கள் உலகம், தங்கள் தினசரி வாழ்க்கை (நான் தாம்பரத்தையே தாண்டினது இல்லை) என ஒரு குறுகிய வட்டத்தில் இருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு சுற்றுலா எல்லாம் எட்டாக்கனவு. அப்படி ஒரு வாய்ப்பு இலவசமாக வந்து அவர்களால் அதை அனுபவிக்க முடியாததை, அதற்கு காரணமான priorities-ஐயும் இந்த கதையில் சொல்லியிருக்கிறார்.

 2. சுரேஷ் கண்ணன் April 1, 2013 at 12:29 AM Reply

  சுஜாதாவின் ‘பரிசு‘ என்கிற சிறுகதையை உங்களில் பலபேர் படித்திருக்கக்கூடும்.

  ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவருக்கு ஏதோ ஒரு போட்டியில் கலந்து கொண்டு, டெல்லி, ஆக்ரா சென்று குடும்பத்துடன் தங்கிவரும் முதற்பரிசு கிடைக்கிறது. குடும்பமே சந்தோஷத்தோடு அதற்கான முஸ்தீபுகளில் இறங்க, அக்கம்பக்கத்தினரும் தங்கள் பங்குக்கு சில பொருட்களை வாங்கிவரச் சொல்கின்றனர். நிதிப்போதாமை காரணமாக, கணவன் எங்குமே வெளியில் அழைத்துச் செல்லவில்லையே என்று மறுகிக் கொண்டிருக்கும் அந்த அப்பாவி மனைவிக்கு இது பெருத்த அதிர்ஷ்டமாக தோன்றுகிறது.

  இறுதியில் அந்தக் கணவனின் பல்வேறு பொருளாதார பிரச்சினைக்கு ஈடுகட்ட அந்த பிரயாணத்திற்குப் பதில் பணம் வாங்கி விட்டு, மனைவியையும் உருக்கத்துடன் சம்மதிக்கச் செய்கிறான்.

  நடுத்தர குடும்பத்தினருக்கே உரிய எலலா பிரத்யேக அம்சங்களுடன் தன் வழக்கமான பாணியில் இந்தச் சிறுகதையை சிறப்பாக எழுதியிருப்பார் சுஜாதா.

 3. vidya (@kalkirasikai) April 1, 2013 at 2:28 AM Reply

  1990ல் கல்கியில் வெளி வந்த போது படித்தது. பைண்ட் பண்ணி வைத்திருக்கிறேன். அதையும் ஓரிரு முறை படித்ததுண்டு. இப்போது உங்கள் தயவில் ஒருமுறை இணையத்திலும் படித்தாகி விட்டது. ஆனால் இருபது வருஷங்களுக்குப் பின்னும் கதையின் கடைசி வரி ஏற்படுத்திய உணர்வில் சற்றும் மாற்றம் இல்லை. அது தான் சுஜாதாவின் வெற்றி.
  வெளியிட்டமைக்கு நன்றி பால் ஹனுமான்.

 4. மத்யமரின் தனிக்குண முத்திரைகள்:

  நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை, ஒரே ஒரு சிறுகதையில் இவ்வளவு சிறப்பாகச் சொல்ல முடியுமா? ஆச்சரியம்தான்! ‘ஏர் டிக்கெட்னா, ஏரோப்ளேனா? என்று கேட்கும் அப்பாவித்தனமாகட்டும்; பரிசு கிடைத்த செய்தியை வாரபலனுடன் ஒப்பிடுவதாகட்டும் எல்லாமே மத்யமரின் தனிக் குணத்தைக் காட்டும் முத்திரைகள். “இன்னும் சரியாத் தெரியலை மாமி” என்று கூட்டுக்குள் சுருங்குவது போல் பேசுவதும், எப்போதும் தன் காரியமே பெரிது என்று எண்ணும் பட்டம்மாள் போன்றோரின் ‘சப்பாத்திக்கல்’ கோரிக்கையும், “ஏதாவது ட்ரிக் இருக்கப் போறது. எல்லாமே ப்ளேனா?” என்ற பொறாமைப் பேச்சும் மத்யமரின் விசேஷக் குணங்களலல்லவா?

  “நான் தெருக்கோடி தாண்டினதில்லே.” “கிழிஞ்சு போன பெட்ஷீட்டைப் போர்த்திக் கொண்டிருக்கேன்..” போன்றவை காட்டும் சுய பச்சாதாபம். டெல்லிக்கு ‘பேக்’ செய்யும் ஆர்வம். ஓரளவு வெளி உலகம் தெரிந்ததால் ‘வாங்க வேண்டிய லிஸ்ட்’டைக் குறைக்கச் சொல்லும் பாச்சாவின் ஆலோசனை. ஊரில் இல்லாத நேரத்தில் வீட்டைக் கவனிச்சுப் பூர்ணிமா செய்யும் ஏற்பாடுகள் இவை அனைத்துமே அக்குடும்பத்தைக் கண்முன் நிறுத்துகின்றன. “இன்னொரு தடவை ப்ரைஸ் விழுந்தால் பார்க்கலாம்” என்று கூறும்போது கண்ணில் இருந்து நீரை உதிரவிடாமல் நிறுத்தி விட்டாள். ஆனால் படித்த நான்…

 5. அலை ஓயும்போது…

  சம்சாரம் என்ற கடலின் அலை ஓயுமானால் பூர்ணிமா போன்ற பெண்களின் ஆசைக் கனவுகளும் நிறைவேறும். “கல்யாணம் ஆனதிலிருந்து நாங்க ஹனிமூன் கூடப் போனதில்லை. பாச்சா!” என்று தன் மைத்துனனிடம் பூர்ணிமா அப்பாவித்தனமாகக் குறைபட்டுக் கொண்டே “நான் ஒண்ணும் குறையாச் சொல்லலை. டில்லி போறது, தாஜ்மகால் பார்க்கிறது என்றெல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாத சமயத்தில் பெருமாள் பார்த்து ஒரு பரிசு கொடுத்திருக்கார் பாரு?” என்றும் பிறகு மைத்துனன் வேலைக்குக் காஷன் டிபாசிட், மாமியார் ஆபரேஷன் என்று தன் கணவன் கூறும் காரணம் கேட்டு, “பரவாயில்லை! இன்னொரு தடவை ப்ரைஸ் விழுந்தால் ஆக்ரா பார்த்துக்கலாம்” என்று தன் கண்ணீரை அடக்கிக் கொண்டு சொல்லும் சந்தர்ப்பங்களில் என் கண்கள் குளமாகின. என் வாழ்க்கையின் மலரும் நினைவுகளைப் போன்றே அமைந்திருந்தது.

 6. கனத்துப் போனது நெஞ்சம்…

  சிறகு முளைத்ததும் சொந்தபந்தங்களை அறுத்துக் கொண்டு பறந்தோடுபவர்கள் நிறைந்துள்ள இந்த நாளில், தனது குடும்பத்தாருக்கு ஆற்ற வேண்டிய கடமைக்காக, கிடைத்தற்கரிய ஒரு வார ஐந்து நட்சத்திர ஓட்டல் வாழ்வைத் துறக்கும் கிருஷ்ணஸ்வாமிகள் இன்னும் நம்மிடையே உண்டு.

  கடைசியில் ஆசை நிறைவேறாது போகையில், ஒருவர் மற்றவருக்கு ஆறுதல் கூறி ஏமாற்றத்தைப் போக்கிக் கொள்ள முயல்வது நம் நெஞ்சைக் கனமாக்குகிறது. அதே ஒண்டுக் குடித்தனத்தில் இருந்து கொண்டு நேரில் கண்டது போன்ற நிறைவைப் பெற்றுத் தந்தது இந்தப் ‘பரிசு.’

 7. தனித்துவ நடை…

  தனித்துவங்களுள் பலப் பல தனித்துவங்கள் கொண்ட நடைக்குரியவர் சுஜாதா! எழுதுகோல் காமிரா போன்று செயற்படும் ‘பரிசு’ கதையில் தமிழ்ச் சமுதாயத்தின் ஒட்டு மொத்த ‘சராசரி’த்தனத்தை அப்பட்டமாகக் கண்கள் முன் காட்சியாக்குகிறார். முடிவில்தான் மூச்சு விடுகிறோம். நம்மை எட்டிப் பார்க்கிற ‘பனியன் அணிந்த சீனிவாசன்களும் ராமசாமிகளும்’ நேற்றைய இளையராஜாவை முணுமுணுத்துக் கொண்டே நெற்றிக்குப் போட்டு ஓட்டும் வயது வந்த பெண்களும் அட்டைக் கிரிக்கெட்டும் தையல் மிஷின், ட்ரான்சிஸ்டரின் சப்த கலவையும் – இவரின் சொல்கிற பாணிக்குள் சூட்சுமமாய் மறைந்து கொண்டு, ஒலிக்கிற பாங்கு நமக்குக் கிறக்க மூட்டுகிறது. அந்தக் கிறக்கத்திலும் வாழ்முறையின் நிலைகள், அதன் சிக்கல்கள், கசப்பான முடிவுகள், அவற்றைத் தாங்கும் உயர் பண்புகள், உன்னதக் கோட்பாடுகள் அனைத்தையும் நமக்குத் தெள்ளத் தெளிவாய் உணர்த்தி விடுகிறார். இது தனித்துவம், சுஜாதாவின் தனித்துவம்!

 8. R. Jagannathan April 1, 2013 at 6:34 AM Reply

  10,000 த்தில் ஒரு 1,000 எடுத்து பக்கத்தில் எங்காவது 4 நாள் போய் வந்திருக்கலாம்!

  எங்களுக்கும் வருஷம் ஒரு முறை ஒரு மாசம் லீவு கிடைத்தும், இந்தியா வந்தால் சொந்தக்காரர்களை விட்டுவிட்டு எப்படி ஊர் சுற்றுவது* என்று இத்தனை வருஷம் கழித்து ரிடையர் ஆனா பின் 2011 ல் சிம்லா, மனாலி, குளு, டெல்லி ஹனிமூன் போய்வந்தோம்! கொடைகக்கானலுக்கு ஹனிமூன் கிளம்பி அங்கு குளிர் அதிகம், வர வேண்டாம் என்று அட்வைஸ் வந்ததால் மதுரையோடு திரும்பினோம், இன்னும் கோடை போக கை வரவில்லை! (2 தடவை இந்தியா – வயா – சிங்கபூர் வந்தோம், Flight டிக்கெட் அதிக வித்தியாசம் இல்லாததால்!) பணம் இருந்தாலும் நாம் மிடில் கிளாஸ் தான்!

  -ஜெ.

 9. கொடுத்து வைக்காத தாஜ்மகால்!

  கிடைத்தர்க்கரிய வெற்றிக்கனியாகக் கிடைத்த நெல்லிக்கனியைப் பாச்சாக்களுக்கும் அம்மாக்களுக்கும் பங்கு போட்டுக் கொடுத்து விடும் குணம் உள்ள கிருஷ்ணசாமிகளுக்கும் பூர்ணிமாக்களுக்கும் முன்னர், தாஜ்மகால் கூட களையிழந்தே தான் காணப்படுகிறது. கிருஷ்ணசாமியையும் பூர்ணிமாவையும் பார்க்கக் கொடுத்து வைக்காத அந்தத் தாஜ்மகாலுக்குக்காக வருந்தத் தான் முடிகிறது.

 10. ஒளி கொடுத்து உருகும் பூர்ணிமா!

  ஒரு சாதாரண டப்பா சினிமாவுக்கு டிக்கெட் கிடைக்காமல் வீடு திரும்பினாலே ஒரு வாரம் முகத்தைக் கோணிக்கொள்ளும் பெண்கள் உலவும் இச்சமுதாயத்தில் பிறருக்காக ஒளி கொடுத்து, தான் உருகும் மெழுகுவர்த்தி போன்ற ஒரு பாத்திரப்படைப்பு பூர்ணிமா. எவரெஸ்ட் சிகரத்துக்கு ஏறிவிட்ட அவள் ஏமாந்து போன பின்பும் ‘இன்னொரு தடவை ப்ரைஸ் விழும்’ என்ற நம்பிக்கையில் வாழ்கிறாள். அந்த உத்தமியின் கதையைப் படிக்கும்போது, ‘பிறருக்காக வாழ்பவரே வாழ்பவர்கள். மற்றவர்களெல்லாம் இறந்தவருக்குச் சமமானவர்கள்’ என்ற விவேகானந்தரின் கூற்றுதான் நினைவுக்கு வருகிறது.

 11. சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை!

  ‘ஆட்சி பீடத்தில் அமரச் சொன்னபோதும் ‘நாடேது உனக்கு? காடேது!’ எனச் சொன்னபோதும் முகபாவத்தில் மாற்றம் ஏதுமின்றிச் சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரையை ஒத்த முகமாயிருந்தது ராமர் முகம்’ என வர்ணிக்கிறார் கம்பர். அவர் அவதார புருஷர். அவருக்கு அது சாத்தியம்.

  தெருக்கோடியையே தாண்டியிராத பூர்ணிமாவுக்கு, தனது எலி வளையை விட்டுக் கிளம்பி டில்லி, ஆக்ராவுக்குச் செலவின்றிப் பயணித்து, ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கி ஆடம்பரம்…அந்த ‘யோகம்’ கிட்டிய நிலையிலும் சிறிதும் ஆர்ப்பாட்ட அடம்பரமில்லாமல் பக்கத்துப் போர்ஷன்காரர்களின் அற்பத் தேவைகளை அமைதியாகச் செவிமடுக்கிறாள். இறுதியில், பணத்தேவை உந்தல் காரணமாக பிரயாணத்துக்கு ஈடாகப் பணம் பெற்றுக் கொண்டுவிட்டதாகக் கணவன் கனத்த நெஞ்சோடு அறிவிக்கும் போதும், சோக ரேகை ஏதுமின்றி, “பரவாயில்லை. இன்னொரு தடவை ப்ரைஸ் விழுந்தால் ஆக்ரா பார்த்துக்கலாம்…” என்று சாத்தியக் கூறு இல்லாத ஒன்றுக்குப் பாத்தியதை கொண்டாடுவது போல் படு இயல்பாகச் சொல்லுகிறாரே…அப்போது அந்த மத்யமக் குடும்பத் தலைவி அந்த அவதாரபுருஷனைப் போல மிக மிக உயர்ந்து மிளிர்கிறாள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s