ஞாபகம் இருக்கிறதா ? – என்.சொக்கன்


ங்கள் ஞாபக சக்தி எப்படி?

உலக மக்கள்தொகையில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவானவர்கள்தான் நல்ல நினைவாற்றலோடு இருக்கிறார்கள். மற்றவர்கள் பத்து மணிக்குக் கேட்ட விஷயத்தைப் பத்தேகாலுக்குள் மறந்துவிட்டுத் திருதிருவென்று விழிக்கிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்னால்,டோனி என்கிற சின்னப் பையன். பள்ளியில் படித்ததையெல்லாம் அக்கறையாக நோட்ஸ் எடுத்துவைத்தான். பரீட்சை நேரத்தில் அவற்றை மும்முரமாகப் படித்து ரிவிஷன் செய்தான்.

ஆனால் டோனியின் பிரச்னை,அவன் வகுப்பில் படித்த எல்லா விஷயங்களும் தேர்வுக்குப் படிக்கிறபோது மறந்துவிடுகின்றன.மறுபடி ஆரம்பத்திலிருந்துதான் தொடங்கவேண்டியிருந்தது.

இந்தப் பிரச்னையோடு பள்ளிப் படிப்பை முடித்த டோனி கல்லூரிக்குச் சென்றான். அங்கே கிரேக்கக் கலாசாரத்தைப் பற்றிப் படிக்க ஆரம்பித்தான்.
கிரேக்கர்கள் ஞாபக சக்திக்குப் புகழ் பெற்றவர்கள். ஏராளமான தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் வல்லமை பெற்றிருந்தார்கள்.அதற்கு அவர்கள் பயன்படுத்திய ஆயுதம், கற்பனை!

அதாவது ‘இந்தியாவின் தலைநகரம் டெல்லி’ என்று படித்தால் மறந்துவிடும்.அதே இந்திய வரைபடத்தின் உச்சியில் ஒரு சிவப்புப் புள்ளிவைத்து அங்கே டெல்லி என்று எழுதியிருப்பதுபோல் கற்பனை செய்துகொண்டால், தகவல் மறந்தாலும் இந்தக் கற்பனை உங்கள் நினைவில் தங்கிவிடும்.

சுவாரஸ்யமான டோனி,இந்தத் துறைபற்றி நிறையப் படிக்க ஆரம்பித்தார். உலகின் மிகப் பெரிய மேதைகளெல்லாம் தங்களுடைய சிந்தனைகளை வெறும் எழுத்துகளாக அல்லாமல், கோட்டுச் சித்திரங்கள், வண்ணங்கள், வடிவமைப்புகளாகப் பதிவு செய்திருப்பதைக் கவனித்தார்.

இந்த டோனி புஜான் பின்னர் இந்தத் துறையில் மிகப் பல ஆராய்ச்சிகளைச் செய்தார். பல அற்புதமான உத்திகளை உருவாக்கினார். ஏராளமான புத்தகங்களை எழுதினார். அவை தமிழ் உள்பட எண்ணற்ற மொழிகளில் வெளிவந்துள்ளன. அவற்றில் அதிமுக்கியமானது, ‘ஹவ் டு மைண்ட் மேப்’ (How To Mind Map Thorsons வெளியீடு ரூ 125/). புத்தகம்.

அதென்ன மைண்ட் மேப்?அப்படியே மொழிமாற்றம் செய்தால் ‘மன வரைபடம்’ என்று சொல்லலாம். நாம் எப்படி அதை வரைவது?

முதலில், எந்த விஷயத்தைப்பற்றி யோசிப்பதற்கும், அடுத்தவர்கள் பேசுவதை நோட்ஸ் எடுத்துப் பதிவு செய்து வைப்பதற்கும் மைண்ட் மேப் பயன்படுகிறது.இதற்கு நீங்கள் பெரிய ஓவியராக இருக்க வேண்டியதில்லை. இந்தப் புத்தகத்தில் டோனி புஜான் சொல்லித்தருகிற ஏழே ஏழு எளிய உத்திகளைப் பின்பற்றினாலே போதும்:

1. காகிதத்தைப் படுக்கை வசமாகத் திருப்பிக்கொண்டு அதன் மையத்தில் ஒரு வட்டம் போடுங்கள். நீங்கள் எதைப்பற்றிச் சிந்திக்கிறீர்களோ அதை எழுதிக்-கொள்ளுங்கள்.

2. வெறும் எழுத்துகள் போதாது. முடிந்தவரை படங்கள், கிறுக்கல்கள், எளிய கோட்டுச் சித்திரங்களைப் பயன்படுத்துங்கள்.

3. படங்களைப்போலவே வண்ணங்களும் முக்கியம். ஒவ்வொரு தலைப்புக்கும் வெவ்வேறு வண்ணங்கள், புதிய யோசனைகளுக்குப் பச்சை நிறம், ஆபத்தான விஷயங்களைப்பற்றிப் பேசும்போது சிவப்பு நிறம் என்று உங்கள் கற்பனையை ஓடவிடுங்கள்.

4. நடுவில் உள்ள வட்டத்திலிருந்து எல்லாத் திசைகளிலும் கோடுகளை வரையுங்கள். அவற்றில் உப தலைப்புகளை எழுதுங்கள். உதாரணமாக, நடுவட்டத்தில் ‘சுற்றுலா’ என்று எழுதினால், இந்தக் கோடுகளில் ‘எங்கே போகலாம்?’, ‘எப்போது போகலாம்?’, ‘எப்படிப் போகலாம்?’ என்பது போன்ற உப தலைப்புகள் இடம் பெறும்.

இப்படி உங்களால் முடிகிறவரை கோடு கிழித்துக் கிளை பிரித்து எழுதிக்கொண்டே போகலாம்.

5. மைண்ட் மேப்பில் நேர்க் கோடுகளைவிட வளைவான கோடுகள் சுவாரஸ்யம் சேர்க்கும்.நிஜ மரக் கிளைகளைப்போல் என்று வைத்துக்-கொள்ளுங்களேன்!

6.முடிந்தவரை சுருக்கமாக எழுதுங்கள். மைண்ட் மேப்பில் வளவளா என்று கதை வேண்டியதில்லை. முக்கியமான விஷயங்களை மட்டும் ஒன்றிரண்டு வார்த்தைகளில் விவரியுங்கள். தேவைப்பட்டால் எக்ஸ்ட்ரா கிளைகளை வரைந்து கூடுதல் விஷயங்களைப் பதிவு செய்யலாம். எல்லாவற்றையும் ஒரே கிளையில் போட்டுப் பாரம் ஏற்றாதீர்கள்.

7. அவ்வப்போது வார்த்தைகளுக்குப் பதில் படம் வரைந்து வையுங்கள். உங்கள் மைண்ட் மேப்பில் படங்களும் எழுத்துகளும் கிட்டத்தட்ட சம விகிதத்தில் இருந்தால்தான் அது நன்றாக மனத்தில் பதியும்.

அதிகம் வேண்டாம். ஒரே ஒரு மைண்ட் மேப் முயற்சி செய்து பாருங்கள். எப்போதும் விடமாட்டீர்கள்.உங்கள் நினைவாற்றலிலும் சிந்தனை வளத்திலும் மிகப் பெரிய மாற்றங்கள் தெரியும்.அதற்கு,டோனி புஜானைப் பின்பற்றிப் பலன் அடைந்துவரும் கோடிக்கணக்கான மக்கள் சாட்சி.

–நன்றி குமுதம்

Rs.120N. Chokkan

நூலின் தலைப்பு : வெற்றிக்கு சில புத்தகங்கள்
நூலின் ஆசிரியர் : என். சொக்கன்
பதிப்பகம்         : மதி நிலையம் , சென்னை 86
மொத்த பக்கங்கள்: 184, விலை ரூ 120

வெற்றிக்கு சில புத்தகங்கள் (சுய முன்னேற்ற வகையைச் சேர்ந்த முப்பது ஆங்கிலப் புத்தகங்களைப் பற்றிய சிறு அறிமுகக் கட்டுரைகள், நூல் சுருக்கம், குமுதம் வார இதழில் இரண்டரை ஆண்டுகள் வெளிவந்த ‘வெற்றிக்கு ஒரு புத்தகம்’ தொடரின் முதல் பகுதி)

புத்தகம் படிக்கும் பழக்கமே குறைந்துவரும் காலகட்டம் இது. என்னதான் பயனுள்ள விஷயங்களைப் புத்தக வடிவில் தந்தாலும், ‘அதையெல்லாம் உட்கார்ந்து படிச்சுகிட்டிருக்க முடியாதுங்க. சுருக்கமா அஞ்சு நிமிஷத்துல சொல்லுங்க சார்’ என்று கேட்கிறவர்கள் ஏராளம்.


குமுதம் இதழில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வெளியான ‘வெற்றிக்கு ஒரு புத்தகம்’ தொடர் இதனைச் சாதித்துக் காட்டியது. பல பிரமாதமான புத்தகங்களை எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு வாரமும் நான்கே பக்கங்களுக்குள் அதனைச் சுருக்கமாகவும், சுவை குறையாமலும் அறிமுகப்படுத்திய விதம், லட்சக்கணக்கான வாசகர்களை ஈர்த்தது. இதைப் படித்துவிட்டு அந்தப் புத்தகங்களைத் தேடிச் சென்று முழுப்பலன் பெற்ற வாசகர்களும் ஏராளம்

அந்தத் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நூல் அறிமுகங்களை இங்கு தொகுத்து அளித்திருக்கிறோம். ஒரு அலமாரி முழுக்க நிரம்பக்கூடிய புத்தகங்களை ஒன்றிரண்டு மணி நேரத்துக்குள் படித்துப் புரிந்துகொள்ளக்கூடிய அபூர்வமான வாய்ப்பை இது உங்களுக்குத் தரும்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s