வன்னி யுத்தம்


ழத் தமிழர்கள் கொத்துக்குண்டுகளுக்குப் பலியான கண்ணீர்க் கதை குறித்து எத்தனையோ பதிவுகள் வெளியாகி விட்டன. மேலும் ஒரு புத்தகம் அல்ல இது. இறுதிக்கட்டப் போரின்போது புலிகள் அமைத்த போர் வியூகங்கள் எப்படி அமைந்திருந்தன? அவை ஏன் தோற்றன?… என்பது குறித்த ஆழமான விமர்சனத்தை நேர்நின்று பார்த்த அப்புவின் எழுத்தில் படிக்கும்போது ஆர்வமும் அதிர்ச்சியும் ஏற்படுகிறது.

பள்ளிப் பருவம் முதல் காதலித்த பெண்ணைக் கைப்பிடித்து, 33 ஆண்டுகள் வாழ்ந்து, போர் இறுதிக் கட்டத்தில் எந்தச் சூழ் நிலையிலும் பிரியக்கூடாது என்று வாழ்ந்து, இருவருமே குண்டுக் காயம்பட்டு, இறுதியில் ராணுவத்தின் கையில் சிக்கி, துப்பாக்கியால் கொல்லப்படும் சூழலில் அதிர்ஷ்டவசமாகத் தப்பி, இன்று உயிர்வாழும் மனிதர் அப்பு. புலிகள் அமைப்பின் முக்கியப் பொறுப்பாளர்களாக இருந்த நடேசன், ரமேஷ் ஆகியோருக்கு நெருக்கமானவராக இருந்தவர். அதனால்தான் போர்ச்சூழல் குறித்து இதுவரை வெளிச்சத்துக்கு வராத பல்வேறு தகவல்களை அப்பு சரளமாகச் சொல்கிறார்.

ராணுவ வலிமையைப் பலப்படுத்தினால் போதும் என்று நினைத்த புலிகள், மக்களை அரசியல்மயப்படுத்தத் தவறியதன் விளைவுதான் இந்தத் தோல்விக்குக் காரணம் என்பது இவரது கணிப்பு. கட்டாய ராணுவச் சேவை செய்ய வேண்டும் என்று புலிகள் அறிவித்ததை… தமிழ் வர்த்தகர்கள், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், புலிகள் அமைப்பில் இருந்த சில வசதிபடைத்த வலதுசாரி எண்ணம் கொண்டவர்கள் எதிர்த்தனர். அவர்களுக்காக புலிகளின் தலைமை சமரசம் செய்ய மறுத்தது. இறுதிக் கட்டத்தில் இந்தத் தரப்பினர், புலிகளுக்கு எதிராகச் செயல்பட்டனர் என்றும் அப்பு சொல்கிறார். ‘வறிய கூலி மக்களின் வீரத்தையும் கூட்டு உணர்வையும் சரியாகப் புரிந்துகொண்டு அவர்களை அமைப்பு ரீதியாக அணி திரட்டி அரசியல்மயப்படுத்தாமல், மேல் மத்தியதர வர்க்கத்தின் பிரச்னைகளான மொழி, உத்தியோகம், தரப்படுத்துதல் போன்ற அரசியல் கோரிக்கைகளுக்காக வறிய கூலிகளைப் பயன்படுத்தியமையே விடுதலைப் புலிகள் செய்த பெரும் அரசியல் தவறாக இருந்தது. இந்த அரசியல் தவறே, இன்றைய அவர்களது தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது’ என்று சொல்லும் அப்பு, 1983-ம் ஆண்டு இந்திய அரசு, புலிகளுக்கும் போராளிகளுக்கும் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தபோதே, ‘இந்தப் போராட்டம் தோல்வியில்தான் முடியும்’ என்பதை தான் உணர்ந்ததாகச் சொல்கிறார். அளவுக்கதிகமான ஆயுதங்கள் கிடைத்தது, அரசியல் பயிற்சியைக் குறைத்துவிட்டது என்கிறார்.

சொர்ணம் தலைமை வகித்த புதுக்குடியிருப்பு தாக்குதல் தோல்வி அடைந்தது ஏன் என்றும், கோப்பாப்புலவு தாக்குதலில் 2,000 சிங்கள ராணுவத்தினரைப் புலிகள் கொன்றாலும் அவர்களிடம் இருந்து ஆயுதங்களை எடுத்துக்கொண்டு செல்ல முடியாத சூழல் ஏன் ஏற்பட்டது என்றும், பிரபாகரனின் முக்கியத் தளபதிகளான தீபன், விதூஷா, துர்கா மரணத்துக்குக் காரணமான ஆனந்தபுரம் சமர், சிங்கள ராணுவத்துக்கு முன்கூட்டியே தெரிந்தது எப்படி என்றும் அப்பு சொல்வது அனைத்துப் போராட்டக்காரர்களும் படிக்க வேண்டியது. புலிகளை விமர்சிக்கும் புத்தகங்கள் அவர்கள் மீது அவதூறு கிளப்புபவையாக மட்டுமே இதுவரை வந்துள்ளது. அன்பாய் அவர்களுக்குச் சுட்டிக்காட்டும் முதல் புத்தகம் இது!

–  புத்தகன் (ஜூ.வி. நூலகம்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s