85 ரூபாய் சம்பளத்தில் 51 ரூபாய்க்கு ரிக்கார்டு வாங்கினேன்! – திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன்


தமிழ் சினிமாவின் முதல் பேசும்படம் ‘காளிதாஸ்’ தொடங்கி அதன் ஒவ்வொரு கட்டத்தையும் அதிசயிக்கும் விதத்தில் ஆவணப்படுத்தி இருக்கிறார் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் சந்தான கிருஷ்ணன். தமிழக தலைமைச் செயலகத்தில் இணைச் செயலாளராக ஓய்வு பெற்ற இவருக்கு இசை மீது அலாதிப்பிரியம். தமிழ்த் திரைப்படப் பாடல்கள் தொடங்கி வெஸ்டர்ன் இசைவரை நீண்டுக் கிடக்கிறது இவரது இசைச் சேகரிப்புகள். ஒரு மதிய வேளையில் இவரது அறுபது ஆண்டுகால சேகரிப்புகள் நிறைந்து கிடக்கும் இவரது வீட்டில் சந்தித்தோம். இசைத்தட்டுகளாலும், சினிமா புத்தகங்களாலும் நிறைந்திருக்கும் அறையில் அமர வைத்துப் பேசினார்.

1931ம் ஆண்டிலிருந்து 37ம் ஆண்டு வரை தமிழ்சினிமாவின் இருண்ட கால கட்டம்னு சொல்வாங்க. அந்தக் காலத்தில் வந்த திரைப்படங்களுக்கான ஆவணங்கள் ஏதுமில்லை. தமிழுக்கு மட்டுமல்ல தெலுங்குக்கும் முதல் பேசும் படம் காளிதாஸ். ஏன்னா அந்தப் படத்தில் கதாநாயகனுக்குத் தெலுங்கு தெரியும்; கதாநாயகிக்குத் தமிழ் தெரியும். இதனால இரண்டு மொழியையும் கலந்து எடுத்திருக்காங்க!

1950ம் ஆண்டிலிருந்து 65ம் ஆண்டு வரை இந்திய சினிமாவுக்கு மிகச் சுவையான கால கட்டம். ஏன்னா அப்போ வந்த படங்களும் பாடல்களும் ஒரு தனிச் சிறப்போட இருந்துச்சு. என்னோட ஒன்பதாவது வயசிலிருந்தே சினிமா, இசை சம்பந்தப்பட்டவற்றைச் சேகரிக்கத் தொடங்கிட்டேன். ஒரு ரூபாய்க்கு எட்டுபடி அரிசி வித்த அந்தக் காலத்துல ஒரு ரிக்கார்டின் விலை 2.50ரூபாய். சாதாரணமானவங்கள்லாம் அதை வாங்க முடியாது. அப்படி இருந்த சூழ்நிலையில பெரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ரிக்கார்டு வாங்கினேன்.

படிப்பை முடிச்சுட்டு 1964ம் ஆண்டு தலைமைச் செயலகத்தில் இளநிலை உதவியாளராக 85 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தேன். அப்ப வீட்டு வாடகை 4 ரூபாய். வீட்டுச் செலவு 30 ரூபாய் போக மீதம் 51 ரூபாய்க்கும் ரிக்கார்டாவே வாங்கிக் குவிச்சேன். யாரு என்ன சொன்னாலும் பரவாயில்லை; எனக்கு இசைத்தட்டுகளையும் சினிமா சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் சேகரிக்கிறது மனசுக்கு நிறைவாய் இருந்தது. இதுக்காக நான் செலவு செஞ்சது பல லட்சங்களைத் தொடும். இப்படியொரு சேகரிப்புக்காக பல கோடிகளைச் செலவு செஞ்சிருந்தாலும் நான் அதைப்பத்திக் கவலைப்பட்டிருக்க மாட்டேன்.

கனடாவிலிருந்து ஒலிபரப்பப்படும் ‘தமிழ் ஓசை’ வானொலியிலிருந்து ஒரு கணிசமான தொகைக்கு என்னுடைய இந்தச் சேகரிப்புகளைக் கேட்டாங்க. கொடுக்க மனசில்லை. பணம் எனக்குப் பெரிசில்லை. என்னோட சேகரிப்பு மக்களுக்குப் பயன்படணும்” என்றவர் தன் சேகரிப்புகளை ஆர்வமாகக் காட்டினார்.

வீடு முழுக்க ரிக்கார்டுகள் நிரம்பி வழிகின்றன. ஒரு ஷெல்ஃப் முழுக்க 1950களில் வெளியான வெஸ்டர்ன் இசைத் தட்டுகள். ராமநாதன், சுப்பராமன், வெங்கட்ராமன், சுப்பையா நாயுடு, விஸ்வநாதன் – ராமமூர்த்தி, இளையராஜா… என தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவான்களின் பாடல்கள் அடங்கிய இசைத் தட்டுகள் பளபளப்புடன் ஜொலிக்கின்றன.

பல்லாயிரக்கணக்கில் குவிந்து கிடக்கும் ரிக்கார்டுகளில் எந்தப் பாடல் வேண்டுமென்று கேட்டாலும் எடுத்து கிராம போனில் பாட வைத்துக் காட்டும் இவர் முகத்தில் அவ்வளவு பெருமிதம்.

சில ஆல்பங்களைக் காட்டினார். எங்கு தேடினாலும் கிடைக்காத ஊமைப் படங்கள் தொடங்கி தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா மட்டுமில்லாமல் இவர்களுக்கும் முற்பட்ட சினிமா காட்சிகளின் ஃபோட்டோக்கள் நிரம்பி வழிகின்றன.

‘பேசும்படம் ‘காளிதாஸ்’ தினசரி 3 காட்சிகள், சினிமா சென்ட்ரல் மதராஸ் என்ற அறிவிப்பைச் சுமந்து நிற்கும் அந்தக்கால விளம்பரத்தைக் காண்பித்து, இன்றைய ஸ்ரீ முருகன் தியேட்டர்தான் அன்றைய கினிமா சென்ட்ரல்” என்றார்.

அந்தக் காலத்தில் நூறுக்கும் மேற்பட்ட சினிமா பத்திரிகைகள் வெளி வந்திருக்கின்றன. அவற்றுள் 52 பத்திரிகைகளின் பிரதிகள் இவரிடம் உள்ளது. ‘பேசும் படம்’, ‘குண்டூசி’ போன்ற சினிமா பத்திரிகைகளை பைண்டிங்க் செய்து பாதுகாத்து வருகிறார். இவரது சேகரிப்புகள் முழுவதையும் பார்க்க ஒருநாள் போதுமானதாக இருக்காது. அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம் போல மேலும் மேலும் பார்த்துக் கொண்டிருக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

இசை, சினிமா சேகரிப்புகள் மட்டுமில்லாமல் இவர் 2001-04 வரை ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘சினிமா நேரம்’ ஆகிய நிகழ்ச்சிகளை ஆல் இந்தியா ரேடியோவில் நடத்தியிருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ‘வாலி 1000’ புத்தகத்தைத் தொகுத்ததில் முக்கியப் பங்கு இவருக்குண்டு.

இந்தச் சேகரிப்புகளை வைத்து நூலகம் ஒன்றைத் தொடங்க இருக்கிறார் சந்தானகிருஷ்ணன். இது சினிமா சம்பந்தப்பட்ட ஆய்வாளர்களுக்கும், சினிமாவின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் உதவும்” என்கிற இவரின் முகத்தில் பெருமிதம் ஒரு இசைத் தட்டைப் போல சுழல்கிறது!

சந்தானகிருஷ்ணனின் சேமிப்பில் சின்ன சாம்பிள்:

கிராமபோன் ரிக்கார்டர் = 23,000; ஸ்டேண்டர்டு ப்ளே ரிக்கார்டர் = 7,000; எக்ஸ்டண்டண்ட் ப்ளே ரிக்கார்டர் = 12,000; லாங் ப்ளே ரிக்கார்டர் = 15,000; சி.டி (ஆடியோ) = 15,000; சி.டி (வீடியோ) = 10,000

கி.ச. திலீபன் (நன்றி கல்கி)

Advertisements

7 thoughts on “85 ரூபாய் சம்பளத்தில் 51 ரூபாய்க்கு ரிக்கார்டு வாங்கினேன்! – திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன்

 1. venkat March 12, 2013 at 1:31 AM Reply

  அசாத்தியமான நபர்….. சந்திக்க ஆசை.

  • BaalHanuman March 12, 2013 at 5:40 PM Reply

   உங்கள் ஆசை நிறைவேற எனது வாழ்த்துகள் வெங்கட் 🙂

 2. வியக்க வைக்கிறது அவரின் சேமிப்பு…

  • BaalHanuman March 12, 2013 at 5:40 PM Reply

   உண்மைதான் தனபாலன்…

 3. GiRa ஜிரா March 12, 2013 at 3:05 AM Reply

  இவருடைய தொலைபேசி எண் கிடைக்குமா? எனக்கு சில அபூர்வமான பழைய பாடல்கள் தேவைப்படுகின்றது.

  • BaalHanuman March 12, 2013 at 5:38 PM Reply

   அன்புள்ள ஜிரா,

   கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். உங்களால் முடிந்தால் கல்கி அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

 4. rathnavel natarajan March 18, 2013 at 11:44 AM Reply

  அருமை. வாழ்த்துகள் திரு திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன்.
  நல்ல பதிவுக்கு நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s