கணித மேதை ராமானுஜன் – ரகமி – தொகுப்பும் குறிப்பும்: த.வி.வெங்கடேஸ்வரன்


”என் கணவரைப்பற்றி நம் நாட்டில் தெரிந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். ஆனால், அதைவிட வெளிநாடுகளில் அறிந்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கிறார்கள்” என்றார் கணித மேதை ராமானுஜன் மனைவி ஜானகி. விளம்பர வெளிச்சங்களில் மின்னும் அரசியல் மற்றும் திரைத்துறை நட்சத்திரங்களை அறிந்துள்ள நம் சமூகம், நம்மில் பிறந்து வளர்ந்த அறிஞர்களை, அறிவியலாளர்களை உணர்ந்ததும் இல்லை; போற்றியதும் இல்லை. அப்படி மறந்துபோன மனிதர்களில் ஒருவர்தான் கணிதமேதை ராமானுஜன். நூற்றாண்டு விழா, 125-வது பிறந்த நாள் விழா என்று கொண்டாடப்படும்போதுதான் ராமானுஜன்கள் நினைக்கப்படுகிறார்கள். ராமானுஜன் பற்றி ஆங்கிலத்தில் ஏராளமான பதிவுகள் இருந்தாலும், தமிழில் முதன்முதலாக ஒரு தொகுப்பை கொடுத்தார் ரகமி. அதில் முக்கியமான பல குறிப்புகளைச் சேர்த்து த.வி.வெங்கடேஸ்வரன் வெளியிட்டு இருக்கிறார்.

‘எனக்குத் தேவை என்பதெல்லாம் ஒரே ஒரு வேளை உணவுதான். எனக்கு அதுவும் கிடைப்பது மிகஅரிதாக இருக்கிறது. ஆகவே, தாங்கள் எனது கணித முயற்சிகளைப் பிறர் அறிய எழுதினால் நல்லது. ஏனெனில், என் நிலைமையை அறிந்து பல்கலைக்கழகமோ அல்லது அரசோ ஏதேனும் உதவிசெய்ய முன்வரக் கூடும். இதனால் எனது வறுமை சற்று நீங்குவதுடன், கணித ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்ய உற்சாகம் ஏற்படும்’ என்று, லண்டன் கணித மேதை ஜி.எச்.ஹார்டிக்கு ராமானுஜன் எழுதிய கடிதம் அவரது வறுமை நிலையை உணர்த்துகிறது. வறுமை காரணமாக மதராஸ் போர்ட் டிரஸ்ட்டில் ராமானுஜன் வேலைக்குச் சேர்ந்தபோது உதவிய பிரான்சிஸ் ஸ்பிரிங் முதல், லண்டனுக்கு அவரை வரவழைத்துக்கொண்ட ஜி.எச்.ஹார்டி வரை எத்தனையோ ஆங்கிலேயர்கள் ராமானுஜனின் வாழ்க்கைக்கு உதவியுள்ளனர். வறுமையைப் புலமையால் வென்ற ராமானுஜனை காசநோய் காவு வாங்கியது. 32 வயதில் மரணம் அடைந்து விட்டார். அவரது நோட்டுப் புத்தகங்கள் 100 ஆண்டுகள் கழித்தும், கணித மேதைகளால் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது! ராமானுஜனின் வரலாற்றை தன்னம்பிக்கையின் வரலாறாகத்தான் பார்க்க வேண்டும்.கும்பகோணம் போர்டர் டவுன் ஹாலில் நடந்த ஆரம்பப் பள்ளித் தேர்வில் ராமானுஜனின் நண்பன் சாரங்கபாணி கணக்குப் பாடத்தில் 45-க்கு 43 வாங்கினார். ராமானுஜனால் 42-தான் வாங்க முடிந்தது. ‘இதனால் எனக்கு அவமானமாக இருக்கிறது’ என்று, சாரங்கபாணியிடம் பேசாமல் இருந்துள்ளார் ராமானுஜன். அன்று முதல் கணக்குப் பாடத்தை திரும்பத் திரும்பப் போட ஆரம்பித்திருக்கிறார். பாடத்தைத் தாண்டி மற்ற கணக்குகளில் மனது ஈடுபட்டது. நூலகர் உதவியுடன் பல கணித நூல்களைப் படித்தார். எப்போதும் நோட்டு, பெரிய பலகை வைத்துக்கொண்டு கணக்குப் போட்டுக்கொண்டே இருந்தார். பள்ளியில் இருந்து பச்சையப்பன் கல்லூரிக்கு வந்தும் இது தொடர்ந்தது. கணிதப் பேராசிரியர் என்.ராமானுஜாச்சாரியார், இவரது நோட்டை வாங்கிப் பார்த்து ஆச்சர்யப்பட்டார். இந்தத் தகவல் கல்லூரி முதல்வருக்குத் தெரிவிக் கப்பட்டது. இதே கல்லூரியின் முன்னாள் கணிதப் பேராசிரியரான சிங்காரவேலு முதலியார்தான், ‘உனது கணித ஆராய்ச்சிக் குறிப்புகளை இங்கே யாரிடமும் காட்டி நேரத்தை வீணடிக்காதே… கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பு’ என்றனர். ராமானுஜன் திறமை, உலகத்துக்கு பரவியது இப்படித்தான்.

– புத்தகன் (ஜூ.வி. நூலகம்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s