எய்தவன் – சுஜாதா (பிப்ரவரி 27, சுஜாதாவின் நினைவு நாள்!)


Sujatha_0

பெசன்ட் நகரில் ஒரு வீடு – டிசம்பர் 4, 1995…

சுந்தரலிங்கம் காலையில் தன் வீட்டு வாசலிலேயே குத்தப்பட்டார். கோர்ட் விடுமுறை நாள்… பெசன்ட் நகர் வீட்டில் காலை நிதானமாகவே எழுந்திருந்து தோட்டத்துக்கு நீர் இறைத்து காபி சாப்பிடுகையில் ‘ஹிண்டு’வில் விளையாட்டுப் பக்க ஓரத்தில் யார் இறந்தார்கள் என்பதை முதலில் பார்த்துவிட்டு முன் பக்கத்துக்கு வந்தார். பொடி எழுத்தில் காலமானவர்களின் வயதையெல்லாம் தன் வயதுடன் ஒப்பிடுவது வழக்கம். காபி குடித்துவிட்டு வராந்தா பிரம்பு நாற்காலியில் இருந்து எழுந்த போது அந்த அந்நியன் அணுகினான். நாய் குரைக்கும். இன்று மரகதம் அதை வாக் அழைத் துப் போயிருந்தாள். போன வாரம்தான் பாதுகாப்புக்காக பாரி ஏஜென்ஸியில் இருந்து ஒரு ஆள் போட்டிருந்தார். அவன் மரகதத்துடன் போயிருந்தான். கவனக்குறைவான வேளை. வலுவான இரும்புக் கதவு தாளிடாமல் இருந்தது. தள்ளித் திறந்து வந்தான்.

குறுகிய சமயத்தில் அவன் நடுத்தர வயது, சதுர முகம், மாநிறம், காலர் இல்லாத சட்டை, அதனுள் தெரிந்த சங்கிலி. மீசை ஏன்… அடர்த்தியான காதோர முடியைக்கூடக் கவனித்தார். ஒருவிதத்தில் இவனை உள் மனதில் எதிர்பார்த்திருந்தாரோ…

”யாருப்பா?”

”சாரைப் பார்க்கணும்.”

”என்ன விஷயமா?”

”கேஸ் விஷயமா.”

”அதுக்கெல்லாம் தம்புசெட்டித் தெருவில் ஆபீஸ் இருக்குது… அங்க வாப்பா…” என்று சொல்லி முடிப்பதற்குள், அவன் ஒளித்துவைத்து இருந்த இரண்டு ஆயுதங்களை முதுகுப் பக்கத்தில் இருந்து எடுப்பதைப் பார்த்தார். வாசலில் ஆட்டோ ரிக்ஷா இன்ஜின் அணைக்காமல் ஓடிக்கொண்டு இருந்தது. ஆபத்து என்று அவருக்குள் அட்ரினலின் பாய்வதற்குள், அவன் நேராக மார்பைக் குறிவைத்துக் குத்தினான். சற்றே திரும்பிவிட, விலா எலும்புக்குள் தாக்குதலின் வேகத்தினாலும் பலத்தினாலும் மென்மையான தசைகளுக்குள் புகுந்து கத்தியின் நீளத்துக்கு அதிகமாகவே கிழித்தது. தடுமாறி ”மரகதம், மரகதம், மணி…” என்று அலறுவதற்குள் மற்றொரு குத்து. இந்த முறை கழுத்தில் மற்றொரு ஆயுதத்தால் மண்டை மேல் பக்கவாட்டில் பாய்ந்து, நெற்றிக்கு அருகில் பட்டு, வலது கண்ணைச் சேதப்படுத்தி, தாடைக்குள் பாய்ந்து வராந்தாவில் அலங்காரத்துக்கு வைத்திருந்த ‘டெரகோட்டா’ குதிரை மேல் ரத்தம் தெறித்தது. ரத்த சேதத்தில் நினைவிழப்பதற்கு முன் அவன் முகத்தின் தழும்பையும் வியர்வை நாற்றத் தையும் மூச்சில் சாராய நெடியையும் உணர்ந்தார்.

அக்கம்பக்கத்தினர் குரல் கேட்டு ஓடி வருவதற்குள் அவன் ஆட்டோ ரிக்ஷா ஏறி வேகமாகச் சென்றுவிட்டான். தெரு முனையில் மற்றொரு ஆட்டோ காத்திருந்தது. இந்த ஆட்டோ அவனை உதிர்த்துவிட்டுக் கூட்டத்தில் கரைந்து விட்டது. 40 தூரத்தில் ஒரு டி.வி. சீரியலுக்குப் படம்பிடிக்க டிபன் பாக்ஸ், ஜெனரேட்டர் எல்லாம் வந்து இறங்கிக்கொண்டு இருந்தன. அவர்கள் யாரும் கவனிக்கவில்லை.

சுந்தரலிங்கம் மயங்கிவிழுந்தார். அவர் மகன் முகச்சவரம் பண்ணிக்கொண்டு இருந்தவன் ஓடிவந்தான். கொஞ்ச நேரம் செய்வது அறியாமல் தடுமாறிய பின், மாருதியில் அவரைத் திணித்து (பின் சீட் எல்லாம் ரத்தம்) அருகே இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசென்றான். ‘போலீஸ் கேஸ்’ என்று அவர்கள் எடுக்க மறுத்து, ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு போன் செய்து ஆம்புலன்ஸ் கொடுத்தார்கள். அடையாறில் இருந்து ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு மயக்க நிலையில் எடுத்துச் செல்கையில், மிகுந்த ரத்த சேதத்தில் அழுத்தம் குறைந்து, மூச்சு நூல்போல வெளிப்பட்டுக்கொண்டு இருந்தது. இதயம் நின்றுபோகும் அவசரத்தில் இருந்தது. எமர்ஜென்ஸியில் அவருக்கு ரத்தம் மணிவாசகம்தான் கொடுத்தான். வெளிப்புறக் காயங்களை மிகக் கவனமாகச் சுத்தம் செய்து எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்தார்கள்… தையல் போட்டார்கள். மார்பில் பாய்ந்திருந்த கத்திக்குத்து அகலக் குறைவாக, ஆனால், எட்டு இன்ச்சுக்கு மேல் ஆழமாக இருந்த அதன் பாதையில் டிஷ்யூக்களை எல்லாம் சேதப்படுத்தியிருந்தது.

ராயப்பேட்டை ஆஸ்பத்திரி      மாலை 5 மணி…

அதே தினம் டெலிவிஷன் கேமராக்களும் நிருபர்களும் ஆஸ்பத்திரியைச் சூழ்ந்துகொள்ள… போலீஸ் டி.ஐ.ஜி. வந்தபோது, கேள்விக்கணைகளால் துளைக்கப்பட்டபோது…

”மணிமோகன் ஆளுங்கதான் செய்திருப்பாங்கன்னு சொல்லிக்கிறாங்களே.?”

”நோ கமென்ட்ஸ் ப்ளீஸ்…”

”கொலைகாரனைப் பிடிச்சுருவீங்களா?”

”முதல்ல இது கொலை இல்லை. கொலை முயற்சி… சுந்தரலிங்கம் உயிருடன் இருக்கார். ட்ரொமா வார்டில் உயிருக்கு ஊசலாடிக்கிட்டு இருக்கார்…”

”இது ஏற்பாடு செய்த கொலைனு…”

”நாங்க எந்த முடிவுக்கும் வரலை…”

”கொலை முயற்சி செய்தவனைப் பிடிச்சுருவீங்களா?”

”அதுக்குத்தானே போலீஸ் இருக்கு.”

”பிடிக்க மாட்டீங்கன்னு சொல்றீங்க?”

”எனக்குக் கோபம் வரலை” என்று சிரித்தார் டி.ஐ.ஜி.

”ஆட்டோ நம்பர் தெரியுமா?”

”முதல்ல ஆட்டோவான்னே ஊர்ஜிதமாகலை. அவருக்கு நினைவு வந்தப்புறம்தான் மேல் விவரம் தெரியும். அவர் குத்தப்பட்ட சமயத்தில் பக்கத்துல யாரும் இல்லை. 40 அடி தள்ளி ஷூட்டிங் செய்துக்கிட்டு இருங்காங்க… அவங்க யாரும் கவனிக்கலை. போலீஸ் என்ன செய்யும், சொல்லுங்க…”

”சுந்தரலிங்கம் போலீஸ் பாதுகாப்பு கேட்டு, கொடுக்க வேணாம்னு மேலிடத்து உத்தரவு வந்தது உண்மையா?”

”பொய்… அவர் எங்ககிட்ட புரொட்டெக்ஷன் எதும் கேக்கவே இல்லை.”

சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சுந்தரலிங்கத்துக்கும் அவர் மனைவி மரகதத்துக்கும் நிகழ்ந்த உரையாடல்…

மரகதம்: ”எதுக்காகங்க உங்களுக்கு வம்பு? அவன் ஆளைவெச்சு அடிப்பானாம். இப்பவே நீங்க பாட்டுக்கு கோர்ட்டுக்குப் போயிர்றீங்க. தெனம் ரெண்டு போன்கால் வருது… ‘தாலி அறுக்கணுமா… உம் புருஷனை ஜாக்கிரதையா இருக்கச் சொல்லு… கேஸை வாபஸ் வாங்கச் சொல்லு’னு.”

சுந்தரலிங்கம்: ”இதுக்கெல்லாம் பயப்படக் கூடாது மரகதம்…”

மரக: ”பின்ன எதுக்குத்தான் பயப்படணும்?”

சுந்: ”கடவுளுக்கும் மனசாட்சிக்கும்தான் பயப்படணும்.”

மரக: ”எனக்கு மணிமோகன்கிட்டயும் பயம்.”

சுந்: ”இவனெல்லாம் மந்திரியா இருக்க லாயக்கு இல்லை. சாராய சாம்ராஜ்யம், ஹவாலா மார்க் கெட்னு கோடி கோடியா சம்பாதிச்சு வெச்சிருக்கான். இவன் தொழிற்சாலையில வொர்க்கர்ஸ் கேஸ்ல அப்பியர் ஆனேன். எத்தனை ஊழல் தெரியுமா..? ரிஜிஸ்தர்ல ஒரு சம்பளம்… கொடுக்கறது ஒரு சம்பளம். ‘லேபர் லா’வுக்குப் பயந்து பர்மனென்ட் ஆக்காம ஆறு மாசத்துக்கு ஒரு முறை டிஸ்மிஸ் செஞ்சு மறுபடி வேலைக்கு எடுத்துக்கற ட்ரிக்… 200 பேரை அப்படி வெச்சிருக் கான். சைல்டு லேபர்… வயசை அதிகமாகச் சொல்லி சைல்டு லேபர் பதினஞ்சு ரூபா சம்பளம் உயர்த்த அழறான். பதினஞ்சு நாளைக்கு ஒருமுறை வெளிநாடு போறான். கட்சிக்காக ஓப்பனாவே இன்டர்வியூ ஒன்றுக்கு ஒரு லட்சம் வெச்சாத்தான் பேட்டியே உண்டு. தினம் 20 பேர்கிட்ட வாங்கறான் இப்படி.”

மரக: ”அவங்க எல்லாருமே இப்படித்தான் இருக்காங்க. இந்த உலகத்தையே திருத்துவீங்களா?”

சுந்: ”இல்லை, மணிமோகன் ஒரு டெஸ்ட் கேஸ்… நான் எடுக்கறதெல்லாம் டெஸ்ட் கேஸ்தான். பப்ளிக் இன்ட்ரஸ்ட் கான்ஸ்டிட்யூஷனல் லா… கன்ஸ்யூமர் மேட்டர் இப்படித்தான் எடுப்பேன். மணிமோகன் மாதிரி ஆளுகளையெல்லாம் கேள்வி கேக்காம சுட்டுருவாங்க சைனாபோல நாட்ல.”

மரக: ”அங்கேயும் கரப்ஷன் இருக்குன்னு கல்கண்டுல படிச்சேன்.”

சுந்: ”கரப்ஷன் எல்லா இடத்துலயும்தான் இருக்கு. ஏன்… அமெரிக்காவுல இல்லையா? ஆனா, அதை எதிர்த்துப் போராடறவங்களும் எல்லா இடத்துலயும் என்னை மாதிரி நிறையப் பேர் இருப்பாங்க. இங்க நான் ஒருத்தன்தான்.”

ராயப்பேட்டை ஆஸ்பத்திரி டாக்டர் ராம்குமார் தன் டீனுடன் பேசிய பேச்சு…

டீன்: ”என்ன ராம்… எப்படி இருக்கார். புரட்சி வக்கீலு?”

ராம்குமார்: ”சுந்தரலிங்கம் ஸ்கல்ல அடிபட்டு கன்கஷன் உள்ளே கொஞ்சம் ரத்தம் கசிந்து, கட்டி தட்டிப் போயிருக்குது… ஸ்கேன்ல தெரியுது பாருங்க… காயங்கள்லாம் நல்லாவே ஆறிக்கிட்டு வருது… ஸுச்சர் போட்டது… நல்லவேளை டயாபட்டிக் இல்லை.”

டீன்: ”தெரியுது. மூளைல கட்டி கரையறத்துக்கு மருந்து கொடுத்துருங்க. ரொம்ப பேஜார் கேஸுங்க… பத்திரிகைக்காரனுவ, போலீஸ்காரனுவ, ஜீ.டி.வி-லருந்து ஒரு பொம்பளை உயிரை எடுக்கறா… ‘பேட்டி கொடு, விவரம் எப்ப வரும்’னு.”

ராம்: ”சுயநினைவு வந்து, யார் தாக்கினார்கள் என்கிற விவரம் வெளிப்பட ஒரு வாரமாவது ஆகும் சார்.”

டீன்: ”பொழைச்சுருவார் இல்ல?”

ராம்: ”பிழைச்சுருவார். ஆனா, ஒரு கண்ணு போயிருச்சு. க்ளாஸ் ஐதான் பொருத்தணும். முகத்துக்குக் குறுக்கே தழும்பு. ஆனாலும் ரொம்ப அதிர்ஷ்டக்காரர். கத்திக்குத்து இதயத்தை அரை இன்ச்ல தவறவிட்டிருக்குது.”

22.1.96 பெசன்ட் அவென்யூ சுந்தரலிங்கத்தின் வீட்டில்…

டிஸ்சார்ஜ் ஆகி காரில் இருந்து இறங்கியவரைக் கண்ணீருடன் வரவேற்றாள் மரகதம்.

”உயிர் பிழைச்சு வந்தீங்களே… அஷ்டலட்சுமி கோயிலுக்கு ஒரு முறை போயிட்டு வந்துருவம்…”

”இல்லை, மரகதம் இப்ப டயர்டா இருக்குது… டி.ஐ.ஜி. வேற வரேன்னு சொல்லியிருக்காரு.”

”உங்க கண்ணு… உங்க கண்ணு..?”

”ஒரு கண்ணு போனது போனதுதான். எதையோ கோலிக்குண்டை வெச்சுப் பொருத்தியிருக்காங்க. ஊசிநூல் கோக்க சிரமமா இருக்கும்னாங்க. படிக்கறதுல அதிகம் ஸ்ட்ரெயின் வேண்டாம்னாங்க. அதும் இடது கண்ணு. அழுவாத கண்ணு. நீ சொன்னாப்பல உயிரோட திரும்பினதே பெரிசு. காயம் ஆறிடுச்சு. தழும்பு போயிடும்… இந்தத் தழும்பு! ஆனா, இன்னொரு தழும்பு போகாது.”

”ஐயோ! இந்த வக்கீல் வேலையே வேணாங்க. இருக்கறதை வெச்சுக்கிட்டு ஏதாவது கம்பெனியில லீகல் அட்வைஸர் வேலை பாத்துக்கங்க. பையனும் படிப்பை முடிச்சுருவான். ஊருக்காக பிராது கொடுத்து அலைஞ்சு உசிரைவிட்டது போதுங்க. என்னங்க… இத்தனை ஃபீல் பண்ணிச் சொல்லிக்கிட்டு இருக்கேன்… சிரிக்கிறீங்களே?”

”ஒண்ணும் ஆகாது, கவலைப்படாதே. கடவுள் காப்பாத்துவார்.”

”உங்களைத் திருத்தவே முடியாதுங்க.”

23.1.96 பிற்பகல் – டி.ஐ.ஜி. வந்து நலம் விசாரித்தபோது…

டி.ஐ.ஜி.: ”மிஸ்டர் சுந்தரலிங்கம்… சும்மா ஒரு கர்ட்டசி விசிட்தான். உங்க கேஸு ரொம்ப ஹாட் ஆயிருச்சு. நீங்க எப்ப ஐடென்டிபிகேஷனுக்கு வர முடியும்னு சொல்லுங்க. ஒரு மாதத்துக்கு செக்யூரிட்டி போட்டிருக்கோம். பார்த்திங்கல்ல…”

சுந்தரலிங்கம்: ”கண்டுபிடிச்சுட்டீங்களா ஆளை?”

டி.ஐ.ஜி.: ”நாலு பேரைப் புடிச்சுவெச்சிருக்கோம். இந்த மாதிரி காசு வாங்கிட்டுக் கொலை செய்யற நாலஞ்சு கும்பல் இருக்குதுங்க. எல்லாருக்கும் கான்டாக்ட் உண்டு. ஹிட்மென் போலீஸ்லயும் இவங்களுக்குத் தொடர்பு உண்டு. நீங்க குத்துப்பட்டஉடனேயே அவங்கள்ல சேகர்னு ஒருத்தன் கன்னியாகுமரில தக்கலைன்னு ஒரு ஊர்க்காரன்… தலைமறைவாய்ட்டான். ஆறு இன்ச், எட்டு இன்ச் கத்தி எல்லாம் அவன்தான் பயன்படுத்திட்டு ஆட்டோ மாத்திப் போயிருவான். இப்பத்தான் ஒரு மாசம் விட்டு மெட்ராஸ் திரும்பியிருக்கான். அவனாத்தான் இருக்கும்னு தோணுது. உங்களைக் குத்தினவன், முகம் ஞாபகம் இருக்குமா உங்களுக்கு?”

சுந்: ”கண்டிப்பா… அந்த முகத்தை மறக்கவே மாட்டேன்.”

டி.ஐ.ஜி.: ”தட் மேக்ஸ் அவர் ஜாப் ஈஸி. மேலும், உங்க கேஸ் ரொம்ப பொலிட்டஸைஸ் ஆயிருச்சு. யாரையாவது கைது பண்ணியே ஆகணும்… பத்திரிகைக்காரங்க துளைக்கிறாங்க. அதும் தனியார் டி.வி-லருந்து மாயானு ஒரு பொண்ணு… என்னென்னவோ வரம்பில்லாமக் கேக்குது. என் மக வயசு தான் இருக்கும்.”

சுந்: ”நீங்க சேகரோ எவனோ… அவனைப் பிடிச்சு என்னங்க பிரயோஜனம்? அவன் ஒரு அம்புங்க. எய்தவன் யாருனு.”

டி.ஐ.ஜி.: ”முதல்ல அடையாளம்… அப்புறம் அவனைச் செலுத்தியது யாருனு கண்டுபிடிக்கறம்.”

சுந்: ”அவனைச் செலுத்தியது மந்திரினு தெரிஞ்சா, மந்திரிய அரெஸ்ட் பண்ணுவீங்களா?”

டி.ஐ.ஜி.: (சற்றுத் தயக்கத்துக்குப் பின்) ”நீங்க யாரைச் சொல்றீங்கனு தெரியுது. ஆனா, மினிஸ்டர்ங்க எல்லாருமே தடயங்களை மறைச்சுருவாங்க. என்ஃபோர்ஸ்மென்ட் டைரக்டரேட்லயே திணர்றாங்களே. எதையும் கோர்ட்ல நிரூபிக்கறது கஷ்டம். என்னைக் கேட்டா, நீங்க இந்தக் கோணத்தை விட்டுர்றதுதான் நல்லது.”

சுந்: ”மழுப்பறீங்க… நான் கேக்கறது, ‘ஒரு மந்திரிதான் குத்த வெச்சார்’னு அவன் சொன்னா, அந்த மந்திரியைக் கைது பண்ண மனோபலம் உங்களுக்கு இருக்கா? சந்திரலேகா கேஸ்ல என்ன ஆச்சு… ஏன் விட்டீங்க..?”

டி.ஐ.ஜி.: ”நீங்களும் மாயா மாதிரியே கேள்வி கேக்கறீங்க. ஒருமுறை நான் அஃபீஷியலா இல்லாம தனியா வரேன். அப்ப பேசலாம்… அடுத்த சனிக்கிழமை வெச்சுக்கலாமா?”

சுந்: ”என்ன?”

டி.ஐ.ஜி.: ”அடையாள பரேடு. அஞ்சு பேர்ல யாருன்னு நீங்க அடையாளம் காட்டணும்.”

சுந்: ”எய்தவன் இருக்க அம்பைக் கொண்டுவர்றீங்க.”

டி.ஐ.ஜி.: ”அம்பையும் அடைக்கணும் இல்ல.”

சுந்: ”ஒண்ணு பண்ணுங்க முதல்ல… அந்த சேகர்ங்கறவனை இங்க கூட்டிட்டு வாங்க.”

டி.ஐ.ஜி.: (சற்று யோசித்து விட்டு) ”இல்லைங்க. அது முறைப்படி தவறுங்க. முதல்ல ஐ.டி. பரேடு ஆவட்டும். அப்புறம் அவன்தான்னு நிச்சயமா தெரிஞ்சா தனியா அழைச்சுட்டு வரேன். அவனை எல்லாம் அடிச்சுக் கிடிச்சு வழிக்குக் கொண்டுவர முடியாதுங்க. சரியான உதை தாங்கு வாங்க.”

சுந்: ”அடிக்கிறதுக்கு இல்லைங்க…”

எழும்பூரில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் அந்த பரேடு நடை பெற்றது. கொண்டுவந்த ஐந்து பேரில் சேகர் என்பவனைப் பார்த்த மாத்தி ரத்திலேயே கண்ணாடிக்குப் பின்னால் இருந்து ”இவன்தான்” என்றார்.

”எப்படிச் சொல்றீங்க?”

”முகத்துல தழும்பை மறக்கவே மாட்டேன். அவ்வளவு கிட்டத்தில் பார்த்தேனே. கை வேத்திருக்கு பாருங்க. முகம்கூட… இவன்கூடக் கொஞ்சம் தனியா பேச விரும்பறேன்.”

”ஏற்பாடு பண்றேங்க. ப்ரஸ் கான்ஃபரன்ஸ் போட்டுச் சொல்லிரவா… நிஜ குற்றவாளியைக் கைது பண்ணிஆச்சுன்னு.”

”நான் பேசிடறேங்க முதல்ல…” என்றார் சுந்தரலிங்கம்.

கமிஷனர் அலுவலகத்தின் பின்பகுதி. கார் பார்க் அருகில் தனியான இருண்ட ஒற்றை பல்பு அறையில்…

சேகர் என்பவன் அழைத்து வரப் பட்டான். வெளியே காவற்படையினர் எச்சரிக்கையுடன் இருக்க, இருவருக்கும் நிகழ்ந்த, முழு உரையாடலின் வடிவாக்கம் –

சுந்தரலிங்கம்: ”உன் உண்மைப் பேரு என்ன?”

சேகர்: ”என்னவா இருந்தா உனக்கென்ன… எனக்கு நிறையப் பேர் உண்டு.”

சுந்: ”டிசம்பர் 5-ம் தேதி காலைல பெசன்ட் நகர்ல என் வீட்டுக்கு வந்து கத்தியால வயித்துல குத்திட்டு, மண்டை மேல கீறிட்டுப் போனியே… இதப் பாரு, என் கண்ணு போச்சு. (சட்டையைக் கழற்றி) தழும்பைப் பாரு. நான் சாவலைடா, என்னைச் சாவடிக்க முடியாது.”

சே: ”இதெல்லாம் என்கிட்ட எதுக்குச் சொல்ற?”

சுந்: ”எத்தனை முறை ஜெயிலுக்குப் போய் இருக்கே?”

சே: ”எத்தனையாயிருந்தா உனக்குஎன்ன?”

சுந்: ”நான் ஒரு வக்கீல். உன்னைப் பதினஞ்சு வருஷம் ஜெயிலுக்கு அனுப்ப முடியும். உன்னைப் பார்த்தது நான் ஒருத்தன்தான். நீதான்னு அடையாளம் காட்டிட்டா நீ காலி. உள்ள போனா வெளிய வரவே முடியாது. சொல்லு, உன்னை அனுப்பிச்சது மணிமோகன் ஆளுங்கதானே?”

சே: ”எனக்கு எதும் தெரியாது. என்னை அடிச்சு உதைச்சாலும் எந்த வெவரமும் கெடைக்காது. நல்லா உதை தின்னுவேன்?”

சுந்: ”என்ன செஞ்சா வெவரம் கெடைக்கும்?”

சே: ”பாரு… எனக்கு மந்திரியும் தெரியாது, முந்திரியும் தெரியாது. காதர் பாச்சானு ஒரு பார்ட்டி வருவான். ‘இந்த மாதிரி ஒரு பார்ட்டி இருக்குது. இந்த விலாசத்தில் பார்ட்டி இருக்குது’னு காட்டி வுடுவான். ‘மூணு நா பார்த்து வெச்சுட்டுத் தீர்த்துரு’னு. கைல காசு மெய்ல குத்து. அவ்ளவ்தான். ஆளை வுடு.”

சுந்: ”என்னைத் தீர்க்கச் சொன்னாங்களா, காயம்படுத்தச் சொன்னாங்களா?”

சே: ”கட்சில உன்னைத் தீர்க்கத்தான் சொன்னாங்க. காயம்படுத்தணும்னா கதியே வேற. ரூட்டே வேற. பால் காட்டிக்கிட்டே நாலு தட்டு தட்டிரலாம். உன்னைய மார்லதான் வெச்சுக் குத்தினேன். கொஞ்சம் அதிகப்படியாவே சரக்கு ஏத்திருந்தனா… கை நடுங்கிருச்சு. தப்பிச்சுக்கிட்ட, சாவலை. மண்டைக்குத்தான் குறிவெச்சேன். நீதான் முட்டாத்தனமா திரும்பி கண்ல வாங்கிக்னே… அது உன் தப்பு. முதக்க சும்மா ஒரு கீறல் கீறிட்டுப் பயங்காட்டிட்டுத்தான் வரச் சொன்னாங்க. அன்னைக்குக் காலைலதான் சொன்னாங்க… ‘பார்ட்டி ரொம்ப பேஜார் பண்ணுது. தீர்த்துரு’னு.”

சுந்: ”உனக்கு எத்தனை பணம் கொடுத்தாங்க?”

சே: ”ஏளாயிரத்துச் சில்லறை. இன்னும் ஒரு ரெண்டு ரூபா வரணும்.”

சுந்: ”இப்ப ‘மேன் ஸ்லாட்டர்’னு சட்டத்தில் உனக்குச் சிறை தண்டனை நிச்சயம் வாங்காம நான் உன்னை விடமாட்டேன்.”

சே: ”எனக்கு வக்கீல் வெப்பாங்க. பெயில் அப்ளிகேஷன் போடுவாங்கனு காதர் பாய் சொன்னாரு. இதுக்கு மிந்தி செய்திருக்காங்க. பெங்களூர்ல ஒரு மார்வாடியைக் குத்தினப்ப.”

சுந்: ”இப்ப மாட்டாங்க. கேஸ் சூடாயிருச்சு. யாரும் உனக்கு பெயில் அப்ளிகேஷன் கொடுக்க மாட்டாங்க. பாத்துக்கிட்டே இரு.”

சே: ”அப்படிங்கறே நீ?”

சுந்: ”பெயில் கேட்டாக்கூடக் கடுமையா அதை எதிர்ப்பேன். இந்த கேஸ்ல யாரும் தலையிட மாட்டாங்க. நீதிபதிங்களே பயப்படுவாங்க. நீ தப்பிக்கிறதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு.”

சே: ”என்ன வளி? மந்திரி யாருன்னே எனக்குத் தெரியாதுபா. சொல்றனில்லை. நான் ரொம்ப அடிமட்டத்தில் இருக்கற ‘பார்ட்டி’பா. பெரிய மனுசங்களுக்காகத் தொளில் செய்றம தவிர, பெரிய மனுசன் யாருன்னே தெரியாது. மிஞ்சிப் போனா, கட்சித் தொண்டனுங்க அல்லது அந்த அந்தப் பேட்டைக்குக் கட்சி ரவுடிங்க, கலெக்ஷன் மாஸ்டர்ங்க உண்டு. குடுமிங்களை வீட்டைக் காலி பண்ணவெக்க… கடையைக் கொளுத்தணும்… பொறம்போக்குல கடை போடறப்ப துணை வேணும்… கொருக்குப்பேட்டை, அபிராமபுரம்னெல்லாம் கூப்பிடுவாங்க… போவேன். எவனுக்குக் காரியம் செய்யறோம்னுலாம் தெரியாது. ஏதோ வவுத்துப் பொயப்புக்கு அஞ்சு பத்துக்குப் பளுதில்லாம செய்யறன். அகஸ்தியர் கோயில்ல கலசம் திருடலாம், வரயான்னாங்க… போவலை. இந்த வருசம் மாலை போடலாம்னிருக்கேன்.”

சுந்: ”பதினஞ்சு வருஷமாவது ஜெயில் வாங்கிக் கொடுக்காம விட மாட்டேன் உன்னை. கமிஷனரை வேணா கேட்டுப் பாரு. யோசிச்சுப் பாரு… இளமையா இருக்கே. உன் வாழ்க்கைல முக்கியமான பதினஞ்சு வருஷத்தை சிறைச்சாலையிலயே கழிக்கச் சம்மதமா?”

சே: (கலவரத்துடன்) ”என்ன செய்யணுங்கறீங்க?”

சுந்: ”சேகர், நீ செஞ்ச பாரு காரியம்? அரைகுறை. வெட்டுருத்தில இதைப் போல அமெச்சூர்த்தனமான முயற்சி இருக்க முடியாது. காலை வேளையில செய்திருக்கக் கூடாது. மேலும், மோடஸ் ஆப்பரண்டின்னு சொல்வாங்க. உன் முறை ஆறு இன்ச் கத்தியைப் பயன்படுத்தறது. ஆட்டோவுல ஓடிட்டு தெரு முனையில மற்றொரு ஆட்டோவுக்கோ, மோட்டார் சைக்கிளுக்கோ மார்றது இதெல்லாத்தையும் போலீஸ் கவனிக்கிறாங்க. சுலபமா கண்டுபிடிச்சுருவாங்க.”

சே: ”என்ன சொல்ற வாத்யாரே, புரியும்படி சொல்லு?”

சுந்: ”ஒவ்வொரு தடவையும் முறைய மாத்தணும். அடுத்த கொலை செய்யறப்ப ராத்திரில போகணும். கத்தியால குத்தக் கூடாது… துப்பாக்கி பழகியிருக்கியா… ரைஃபிள் ஏகே-47?”

சே: ”இல்ல, வாத்யாரே. நான் சில்ற ஆசாமி.. எனக்கென்னவோ நீ டமாஸு பண்றனு பச்சி சொல்லுது.”

சுந்: ”தமாஷ் இல்லை சேகர்… நான் கத்துக்கொடுக்கறேன். போலீஸுக்கு ஸ்டேட்மென்ட் கொடுக்கறப்ப உன்னைக் காட்டிக் கொடுக்கப்போறது இல்லை. ‘இவன்தானான்னு சந்தேகமா இருக்குது. ஐம் நாட் ஷ்யூர்’னு சொல்லி உன்னை விடுதலை செய்துடப்போறேன். ஒருத்தன் கெடுதல் செஞ்சாலும் அவன் வெக்கப்படும்படி நன்மை செய்துரணும்னு திருவள்ளுவர் சொல்லி இருக்காரு… சேகர், நீ படிச்சிருக் கியா?”

சே: ”ஆறு கிளாஸ், பாளையங்கோட்டைல இருக்கறப்ப… என்னைக் காப்பாத்தறியா? என்ன சொல்ற?”

சுந்: ”ஆமாம், உன்னைக் காப்பாத்தறேன்.”

சே: ”அதுக்கு நான் இன்னா செய்யணும்… திருந்திடணுமா… கதர் குல்லாய் மாட்டிக்கிட்டு சுதந்திர தினத்துல கொடி ஆட்டணுமா?”

சுந்: ”அதெல்லாம் எதும் வேண்டாம். அடுத்தமுறை காரியத்தைச் சுத்தமா செய்யணும். யாரும் நீதான்னு கண்டுபிடிக்க முடியாதபடி. வேட்டைக்குப் போன தடயங்களை மறைக்கணும். நான்தான் உன்னை ஏவினேன்னு தெரியக் கூடாது. சரியான சந்தர்ப்பம் பார்த்து கிரீன்வேஸ் ரோட்டில அந்த வீட்டைக் கண்காணிக்கணும். எப்ப கோட்டைக்குப் போறான், எப்ப வாக் போறான், எப்ப சின்ன வீட்டுக்கு… எல்லாத்தையும் கவனிச்சு, ராத்திரியில ரைஃபிள் வெச்சுச் சுடணும். ஸ்தலத்தை விட்டு விசில் அடிச்சுட்டே நடந்து போகணும். எல்லாம் சொல்லித் தரேன்.”

சே: ”யாரைச் சுடணும்!”

சுந்: ”மணிமோகனை… அதுக்கு என்ன விலை தெரியுமா… உன் விடுதலை… பதினஞ்சு வருஷம் சுதந்திரம்.”

சே: (யோசித்து!) ”சரிங்க…”

28-4-1996

–நன்றி விகடன்

15 thoughts on “எய்தவன் – சுஜாதா (பிப்ரவரி 27, சுஜாதாவின் நினைவு நாள்!)

 1. xavier February 27, 2013 at 6:38 AM Reply

  Good Story… I love the writings of Sujatha Sir… Unfotrunately I started to read his stories very late only… anyway thanks for this story & please publish more articles about him…

 2. Varagooran Narayanan February 27, 2013 at 6:47 AM Reply

  அருமையான பதிவு. நன்றி.நன்றி,நன்றி.

 3. RAVIKUMAR VARADARAJAN February 27, 2013 at 8:29 AM Reply

  Hai
  Being a Chennaite I have already read this in AV.
  However thanx.

  *Ravikumar Varadarajan*
  *NTPC, Chennai.*

 4. ரெங்கசுப்ரமணி February 27, 2013 at 1:58 PM Reply

  நல்ல பதிவு. நன்றி பால்ஹனுமான் 🙂

  • BaalHanuman March 2, 2013 at 12:35 AM Reply

   உங்களையும் இந்தப் பதிவு கவர்ந்ததில் மகிழ்ச்சி ரெங்கசுப்ரமணி 🙂

 5. ரெங்கசுப்ரமணி February 27, 2013 at 2:03 PM Reply

  கதையைவிட சுவாரஸ்யமானது அந்த படங்கள். அந்தந்த பத்திரிக்கை நடையை கவனித்து எழுதியுள்ளனர். யூகிக்க முடிந்த முடிவுதான் என்றாலும், சுஜாதாவின் நடை சுவாரஸ்யப்படுத்துகின்றது.

  //திருந்திடணுமா… கதர் குல்லாய் மாட்டிக்கிட்டு சுதந்திர தினத்துல கொடி ஆட்டணுமா?”// இதைப் படிக்கும் போது அவரது இன்னொரு கதை நினைவுக்கு வருகின்றது. எந்தக் கதையாக இருக்கும். யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்? இதைப் படிக்கும் போது சுஜாதாவின் அக்கதைதான் நினைவில் வருகின்றது.

  கதைகளுக்கு நடுவில் ஒற்றுமை இல்லை. இவ்வரிகளின் பின்னால் இருக்கும் நக்கலும், திருந்துவது என்பதற்கான விளக்கத்தின் அபத்தமும் பொருந்தும். ஒரு வேளை எனக்கு மட்டும் கூட தோன்றியிருக்கலாம். வேறு யாருக்காவது இதே போல் தோன்றுகின்றதா பார்க்கலாம்.

 6. vimal February 28, 2013 at 4:20 AM Reply

  good story.

  sujatha rocks

  please read this link…

  சுஜாதாவின் ஆட்டோகிராஃப்

  http://www.skpkaruna.com/?p=507

  • BaalHanuman March 2, 2013 at 12:32 AM Reply

   அருமையான இணைப்புக்கு நன்றி விமல்…

 7. vidya (@kalkirasikai) March 1, 2013 at 5:20 PM Reply

  என்ன கதை? நினைவில்லை. சஸ்பென்ஸ் தாங்கவில்லை. சொல்லிவிடுங்கள் திரு ரங்கசுப்ரமணி.

 8. vidya (@kalkirasikai) March 1, 2013 at 5:22 PM Reply

  பரிசு முதல் பாகம் வெளியிட்டீர்கள். மீதி எங்கே பால் ஹனுமான்?

  • BaalHanuman March 2, 2013 at 12:30 AM Reply

   விரைவில் பரிசு தொடர்ச்சி உங்கள் பார்வைக்கு…

 9. கதையின் பெயர் நினைவில் இல்லை. சுஜாதா ஒரு பாலியல் தொழிலாளியை பேட்டி எடுப்பது போன்று எழுதப்பட்ட ஒரு கதை. அப்பெண்ணிடம் திருந்துவதைப் பற்றி கூற, அவள் இதே போல கூறுவாள். திருந்தி ஆசிரமத்துக்கு போய, நாள் முழுக்க ஒரே துணிய மறுபடி மறுபடி தைக்க சொல்வாங்க, எல்லாம் பாத்தாச்சு. அதில் இருக்கும் அதே த்வனி, இதிலும் உள்ளது.

  இதுதான் சம்பந்தம்ம என்றுஅடிக்க வராதீர்கள். எனக்கு தோன்றியது. அவ்வளவுதான்.

 10. vidya (@kalkirasikai) March 2, 2013 at 12:04 PM Reply

  எனக்கும் நீங்கள் சொன்ன அந்தக் கதை படித்த நினைவு வருகிறது. தலைப்பு நினைவில்லை.

 11. Raju March 5, 2013 at 5:35 AM Reply

  கதையின் பெயர் “” எப்படியும் வாழலாம் “‘.பாலியல் தொழிலாளி ”ராணி “‘

  ராஜூ -துபை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s