மாசி மகம் – திங்கள் – 25.2.13


இன்னும் சில நாட்களில் உலகம் அழியப் போகிறதே என்ற கவலையில் இருந்தார் பிரம்மா. பிரம்மா உள்ளிட்ட அனைத்து தேவர்கள் முதல் பூலோகத்து சாக்கடையில் ஊறிக்கிடக்கும் கிருமிகள் வரை அத்தனையும் பிரளயத்தின் போது அழிந்து போவார்கள். சிவன் மட்டுமே நிலையானவர். ஆதியந்தமில்லா அவர் மட்டுமே மீண்டும் உலகை சிருஷ்டிக்கத்தக்கவர். பிரம்மனுக்கு ஒரு சந்தேகம். உலகம் அழியும் போது, நம்மிடம் உள்ள இந்த படைப்புக்கலன்களும் அழிந்து போகும். இது அழிந்தால், உலகம் மீண்டும் உருவான பிறகு, எப்படி படைப்புத் தொழிலை தொடர்ந்து செய்ய முடியும்? சிவனிடம் சென்று, இந்த சந்தேகத்தை தீர்த்து வருவோம், என தனக்குள் சொல்லிக் கொண்டவராய் சிவலோகம் சென்றார். லோக நாயகரே வணக்கம்! இன்னும் சில நாட்களில் இந்த உலகத்தை அழிக்கப் போவதாக சொல்லி விட்டீர்கள். புதிய உலகம் படைக்கப்பட்டு, அதில் உயிரினங்களை உற்பத்தி செய்ய, எனது கலன்கள் பத்திரமாக இருக்க வேண்டுமல்லவா? அவை, அழிந்தால் நீங்கள் புதுக்கலன்கள் தரும் திட்டம் வைத்திருக்கிறீர்களா? என்றார். பிரம்மனே! இப்போதிருக்கும் கலன்களை நான் அழிக்க மாட்டேன். நான் சொல்வதை மட்டும் செய். ஒரு கும்பத்தை எடு. அதற்குள் அமுதத்தை நிரப்பு. உன் கலன்களை வைத்து கட்டு. குடத்தின் நாற்புறமும் வேதம், ஆகமம், வேதங்கள், புராணங்கள், இதிகாசங்களை வை. குடத்தின் வாயில் மாவிலை, தேங்காய் வை. சுற்றிலும் நூல் கட்டு. உறி ஒன்றில் வை. இவ்வுலகத்தை நான் வெள்ளத்தால் அழிக்க உத்தேசித்துள்ளேன்.அந்த வெள்ளத்தில் கும்பத்தை மிதக்க விடு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், சிவன் இவ்வாறு சொன்னதும் பிரம்மா ஆறுதலடைந்தார். ஒரு குறிப்பிட்ட நாளில் மழை கொட்டியது. ஆறு, குளங்கள் உடைந்தன. கடல்கள் நிரம்பி உயர்ந்தன. உலக உயிர்கள் அனைத்தும் மடிந்தன. பிரளய கால ருத்ரராக வடிவெடுத்த, சிவன் அந்த கும்பத்தையே கவனித்துக் கொண்டிருந்தார். அந்த கும்பம் ஒரு இடத்தில் தட்டி நின்றது. அதன் பிறகு நகரவில்லை. வெள்ளம் வற்றியது. உலகத்தில் யாருமே இல்லை. சிவன் வேட வடிவம் கொண்டு, தன் மகன் தர்மசாஸ்தாவை அழைத்தார். அப்பா! இது என்ன கோலம்? வேடன் வடிவம் கொண்டுள்ளீர்களே! இவ்வுலகில் வேட்டையாட ஒரு பூச்சி, புழு கூட இல்லையே, சாஸ்தா சிரித்தார். சிவன் அவரிடம், மகனே! அதோ அந்த கும்பத்தை உடைக்க வேண்டும். தூரத்தில் கிடக்கிறதே என யோசிக்கிறேன்,. இவ்வளவுதானா! நீங்கள் சற்று ஒதுங்குங்கள். நான், குறி வைத்து அதை உடைக்கிறேன்,. சாஸ்தா குறி வைத்தார். குறி தவறி விட்டது. . மகனே! கவலை வேண்டாம். அந்த குடத்தை உடைக்க என்னைத் தவிர யாராலும் ஆகாது, என்றார். தங்கள் சித்தம் என் பாக்கியம் தந்தையே.தந்தை விரும்புவதைச் செய்வதே மகன் கடமை. இதோ! பிடியுங்கள், சாஸ்தா வில்லையும், அம்பையும் கொடுத்தார். சிவன் கும்பத்தை குறி வைத்தார். அதன் மீது அம்பு வேகமாக பாய, கும்பத்தின் மூக்கு உடைந்தது. அந்த இடத்திற்கு குடமூக்கு என்ற பெயர் வந்தது. சிவன் அம்பெறிந்த இடம் பாணத்துறை எனப்பட்டது. கும்பத்தின் கோணம் (மூக்கு) உடைந்ததால், அவ்விடம் கும்பகோணம் என்றும் அழைக்கப்பட்டது. உடைந்த வேகத்தில் உள்ளிருந்த அமுதம் சிதறி பல இடங்களிலும் பரவியது. அப்படி பரவிய இடங்கள் குளங்கள் போல் காட்சியளித்தன. அதில் ஒன்று தான் கன்னகா தீர்த்தம் எனப்படும் மகாமகக்குளம். அந்தக் கும்பம் தங்கிய இடத்திலும் சில அதிசயங்கள் நிகழ்ந்தன. வெள்ளத்தின் வேகத்தில் கும்பத்தில் இருந்த தர்ப்பையும், மாவிலையும் கீழே விழுந்தன. மாவிலை வன்னிமரமாக மாறிவிட்டது. தர்ப்பை ஒரு லிங்கமாக வடிவெடுத்தது. அது தர்ப்பை லிங்கம் எனப்பட்டது. தர்ப்பை லிங்கம் தண்ணீரில் மிதந்து வடமேற்கு பகுதியில் தங்கி விட்டது. குடம் வைக்கப்படிருந்த உறியும் ஒரு லிங்கமாக வடிவெடுத்து, குடம் தங்கிய இடத்தின் கிழக்கே தங்கி விட்டது.

கும்பத்தின் மீதிருந்த தேங்காய் ஒரு இடத்தில் நின்று நாரிகேளலிங்கம் என பெயர் பெற்றது. நாரிகேளம் என்றால் தென்னை எனப் பொருள். கும்பத்திலிருந்த வில்வங்கள் ஒவ்வொன்றும் மரங்களாக வடிவெடுத்தன. அவற்றின் கீழ் பாதாளலிங்கம் தோன்றியது. கும்பத்தில் சுற்றியிருந்த நூலும் அறுந்து விழுந்து ஒரு லிங்கமானது. அம்பு தாக்கிய வேகத்தில் குடம் மேலெழுந்து பறந்தது. அங்கு ஒரு லிங்கம் தோன்றியது. அதுவே குடவாசல் எனப்பட்டது. இதன் பின் அமுதத்தில் நனைந்த மணலை சிவன் அள்ளினார். அதை ஒரு லிங்கம் ஆக்கினார். அந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். பின்பு அந்த லிங்கத்திலேயே ஐக்கியமாகி விட்டார். அமுதம் கலந்த மணலில் உருவானவர் என்பதால் அமுதேஸ்வரர் என்றும், கும்பத்தில் இருந்து அமுதம் கொட்டியதால் கும்பேஸ்வரர் என்றும் பெயர் பெற்றார். தன் கணவர் கும்பகோணம் நகருக்கு வந்து விட்ட தகவல் பார்வதிதேவிக்கு எட்டியது. அவள் கணவனைக் காண மங்களகரமாக உடையணிந்து இத்தலம் வந்தாள். தனக்கு இடப்பாகத்தில் அமர்ந்து மங்களநாயகி என்ற பெயருடன் தங்கி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பாயாக, என்றார் சிவன். புதிய உலகம் தோன்றிய பின், அம்பாள் வந்தமர்ந்த முதல் தலம் என்பதால், இது சக்திபீடங்களில் முதல் தலமாயிற்று. இதன் பின் உலகம் பரந்து விரிந்தது.

பிரம்மனிடம் அமுத கலசத்தில் மறைத்து வைக்கப்பட்ட படைப்பு கலன்களை சிவன் ஒப்படைத்தார். ஆறுகள், கடல்கள், மலைகள், உயிரினங்கள் தோன்றின. பிறப்பில் உயர்ந்த மானிடர்கள், கங்கை, யமுனை உள்ளிட்ட நவநதிகளுக்கு சென்று தீர்த்தமாடி தங்கள் பாவத்தை போக்கினர். இதனால், நவகன்னியரான அந்த நதிகள், பாவச்சுமை தாளாமல் கண்ணீர் விட்டனர். கங்கா,யமுனா, நர்மதா, சரஸ்வதி, கோதாவரி, பொன்னி, சரயு, கன்யாகுமரி, பயோட்டணா ஆகிய ஒன்பது கன்னியரும், கைலாயத்திற்கு ஓடினர். மகாதேவா! மனிதர்கள் எங்களில் கரைக்கும் பாவப் பொதியை சுமக்க இயலவில்லை. தாங்கள் தான் எங்கள் வேதனையைப் போக்க வேண்டும், என்றனர். சிவன் சிரித்தார். பெண்களே! தியாக உள்ளம் படைத்த உங்களுக்கு நிரந்தர விமோசனம் தருகிறேன். தென்புலத்திலுள்ள கும்பகோணம் கன்னிகாதீர்த்தத்திற்கு மாசி மக நட்சத்திர நாளில் செல்லுங்கள். அந்த தீர்த்தம் மிகவும் விசேஷமானது. அதில் நீங்கள் அனைவரும் மூழ்கி எழுந்தால், உங்கள் பாவச்சுமையெல்லாம் கரைந்து போகும். தூயவர்காளாக திரும்புவீர்கள், என்றார். இதன்படி நவகன்னியரும் இத்தீர்த்தத்தில் மூழ்கி பாவம் நீங்கப் பெற்றனர். குரு பகவான் சிம்மராசியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் காலம் மகாமக காலம் ஆயிற்று.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s