காற்றில் கரையும் திருவையாறு அசோகா! – சமஸ்


 திருவையாறு.

காவிரிக் கரையோரம் அமைந்திருக்கும் இந்த அழகான ஊரின் பெயரை வாசிப்பதே இசை ரேகைகளை மனமெல்லாம் பரவச் செய்யும். நீண்ட இசை மரபைக் கொண்ட இந்த ஊரின் பெருமையை உலகம் அரை நூற்றாண்டுக்கு முன்னர் வரை இசையால் மட்டுமே அறிந்திருந்தது. ஆனால், நிகழ்காலத் திருவையாற்றின் கதையை அசோகாவை விட்டுவிட்டு எவரேனும் எழுத முற்பட்டால் அது ஒருபோதும் நிறைவடையாது. வெற்றுப் புகழ்ச்சியல்ல; அத்தனையும் உண்மை!

திருவையாறு தெற்கு வீதியில் அமைந்திருக்கும் அந்தப் பழமையான கடையைக் காலை 10 மணிக்குத் திறக்கிறார்கள். ஆனால், திறப்பதற்கு முன்னதாகவே காத்திருக்கிறது கூட்டம். வாழை இலையில், கொசுறாகக் கொஞ்சம் காரத்துடன் பரிமாறப்படும் அசோகாவை ஏதோ பசி நேரத்தில் சாப்பாடு சாப்பிடுவதுபோல் சுடச்சுடச் சாப்பிட்டு முடித்து,நிறைவுக்காக ஒரு காபியையும் குடித்து(!)  வீட்டுக்குப் பொட்டலமும் கட்டிக்கொண்டு வெளியேறுகிறது அந்தக் கூட்டம்.காலையில் தொடங்கும் இந்த அட்டகாசம் இரவு 10 மணி வரை தொடர்கிறது. ஏதோ ஒரு நாள் மட்டும், ஒரு சிலர் மட்டும் அல்ல. நாள்தோறும், நூற்றுக்கணக்கானோர்!
தொடக்கத்தில், வண்டியில் கடையைக் கடந்து செல்லும்போது சுற்றுவட்டாரக்காரர்களைச் சாப்பிடவைத்தஅசோகா ருசி, காலப்போக்கில் அதற்காகவே வண்டி கட்டிக்கொண்டு வரும் அளவுக்குக் கட்டிப்போட்டுவிட்டது. சுற்றுவட்டாரக்காரர்கள் மட்டுமல்ல; திருவையாறு இசை விழாவுக்கு வரும் பாடகர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் பலரும் கச்சேரிமுடிந்ததும் அடுத்து தேடுவது அசோகாவைத்தான். அப்படி என்னதான் இருக்கிறது திருவையாறு அசோகாவில்?
இனிப்புப் பண்டங்களிலேயே இந்த அசோகாவின் விசேஷம் என்னவென்றால், இதைச் சாப்பிட வேண்டியதில்லை என்பதுதான். நாக்கில் பட்டாலே போதும்; காற்றில் இசை கரைவதுபோல அசோகா கரைந்துவிடும். சாப்பிடுபவர் செய்யவேண்டியதெல்லாம் அதன் ருசியை மெய் மறந்து அனுபவிக்க வேண்டியது மட்டும்தான். சில பண்டங்களைச் சூடாக சாப்பிட்டால்தான் ருசிக்கும். சில பண்டங்களை ஆற வைத்துதான் சாப்பிட வேண்டும். அசோகாவோ எப்படிச் சாப்பிட்டாலும் ருசிக்கும். நெய், பாசிப்பருப்பு, மைதா, பால்திரட்டு, ஜாதிக்காய், முந்திரி, திராட்சை இன்னும் பல இத்யாதி கொண்டு தயாரிக்கப்படும் திருவையாறு அசோகாவின் தன்னிகரற்ற ருசிக்கு மற்றொரு முக்கியக் காரணம் காவிரித் தண்ணீர். அதனாலேயே, திருவையாறு தவிர்த்து வேறெந்த ஊரிலும் அசோகா பெயரெடுக்க முடியாமல் போய்விட்டது என்று சொல்வோரும் உண்டு.
திருவையாற்றில் இந்தச் சுவையான பாரம்பரியத்துக்கு வித்திட்டவர் பி.வி. ராமய்யர். தேர்ந்த சமையல்கலைஞரான ராமய்யருக்கு வழக்கமான ஐட்டங்களில் விருப்பமில்லை. எதையும் வித்தியாசமாகவே செய்து பழகிய அவர்,தன் வாழ்வில் கண்டறிந்த அரிய பண்டம்தான் இந்த அசோகா. அந்தக் காலத்தில் ராமய்யர் கடையின் அசோகாவும் அவருடைய மற்றொரு கைப்பக்குவமிக்க தயாரிப்பான தூள் பஜ்ஜியும் இந்த வட்டாரத்தில் ரொம்பப் பிரபலம். ராமய்யர் காலத்துடன் தூள் பஜ்ஜி போயிற்று. அசோகாவை, காலம் ‘ஆண்டவர் கடை‘ மூலம் மீட்டெடுத்தது. ஒரு சின்ன இடைவெளிக்குப் பின் அதே கட்டடத்தில் ராமய்யரின் அதே கைப்பக்குவம், அதே சிறப்புமிக்க உபசரிப்புடன் ‘ஆண்டவர் கடை‘யில் அசோகா பாரம்பரியம் தொடர்கிறது. கடை உரிமையாளர் கோவி. கணேசமூர்த்தி கடைக்கு வரும் ஒவ்வொருவரையும் இரு கைகளையும் கூப்பி வணங்கி வரவேற்று உபசரிக்கிறார். “எந்த மாற்றத்தையும் புகுத்தாமல் பாரம்பரியமான அதே முறையில் அதே தரத்தில் அசோகா தயார் செய்கிறோம். மற்றபடி, ஊர்வாகுக்கொண்ட எந்தப்பண்டமும் ருசிக்கும். அசோகாவைப் பொறுத்த அளவில் அதில் திருவையாற்றுவாகு கலந்திருக்கிறது. அதுதான் ருசி” என்கிறார் கணேசமூர்த்தி.
உண்மைதான். அசோகாவில் திருவையாற்றுவாகு இருக்கிறது. திருவையாற்றிலிருந்து புறப்படும்போது வீட்டுக்கு வாங்கி வந்த அசோகா பொட்டலத்தைப் பிரித்ததும் மனம் திருவையாற்றுக்குச் செல்கிறது. காற்றில் கரைகிறது மனம், இசை,அசோகா!
தினமணி-2008
‘சாப்பாட்டுப்-புராணம்’ புத்தகத்திலிருந்து…
[samsatmjpg.jpg]

04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.செய்தியாளராகப் பணிபுரிகிறேன். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு? அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன்.

தொடர்புக்கு… writersamas at gmail dot com

நூலின் பெயர்: சாப்பாட்டுப் புராணம்

ஆசிரியர்: சமஸ்
விலை: ரூ.60
புத்தக வெளியீடு :  தான் பிரசுரம்,
திருச்சி.
கைப்பேசி:  94427 07988

தமிழில் சமையல் குறிப்புகள் போன்ற புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் வெளிவந்திருக்கின்றன. ஆனால், நமது உணவுப் பண்பாட்டைப் பதிவு செய்யும், அதன் நவீன கால மாற்றங்கள், பாதிப்புகள் போன்றவற்றை விளக்கும் வகையிலான புத்தகங்கள் அநேகமாக இல்லை என்றே கூறலாம். இத்தகைய சூழலில் வெளிவருகிறது சமஸின் ‘சாப்பாட்டுப் புராணம்’. இந்தப் புத்தகத்தில்  நமது பாரம்பரிய உணவு வகைகளைப் பற்றி மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் மேல் நாடுகளிலிருந்தும் வந்து இங்கு காலூன்றி தனித்துவம் பெற்றுவிட்ட உணவு வகைகளைப் பற்றியும் சமஸ் அழகாக எழுதியுள்ளார். ஒரு குறிப்பிட்ட உணவு வகையைப் பற்றி எழுதும்போது, அதன் வரலாற்றையும் அந்த உணவுப் பொருளுக்கும் குறிப்பிட்ட இடத்துக்கும் இடையிலுள்ள உறவையும் பற்றி இவர் எழுதுவது இவ்வகை எழுத்துக்கு ஒரு புதுப்பரிமாணத்தை அளிக்கிறது. ‘அடையார் ஆனந்த பவன்’, ‘முருகன் இட்லிக் கடை’ போன்ற பெரிய உணவகங்களோடு தெருவோரம் சின்ன மேஜையில் வைத்துப் பால்திரட்டு விற்கும் ‘மாரியப்பன்-ஜோதி தம்பதி கடை’, ‘மலைக்கோட்டைக் கையேந்திபவன்’காரர்கள் என்று யாராலும் அறியப்படாதவர்களையும் பற்றி சமஸ் எழுதியிருக்கிறார். சாப்பாட்டைப் பற்றி இவர் எழுதுவதைப் படிக்கும்போதே சாப்பிட்ட நிறைவு உண்டாகிறது; அதே நேரத்தில் அவர் சொல்லியுள்ள உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும் என்ற ஏக்கமும் உண்டாகிறது. சுருங்கச் சொன்னால் அனுபவித்துச் சாப்பிடுபவர்களுக்குத்தான் இந்தப் புத்தகத்தின் அருமை தெரியும் எனலாம்.

இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் ‘தினமணி’ இணைப்பிதழான ‘கொண்டாட்ட’த்தில் ‘ஈட்டிங் கார்னர்’ பகுதியில் ஓராண்டாக வெளிவந்தபோது சமஸுக்குக் கிடைத்த வாசகர்கள் ஏராளம். அவர்களுக்குக் கையேடுபோல் இப்போது இந்தப் புத்தகம் வெளியாகிறது.

Advertisements

One thought on “காற்றில் கரையும் திருவையாறு அசோகா! – சமஸ்

  1. ரெங்கசுப்ரமணி February 26, 2013 at 5:04 PM Reply

    இது பல காண்டிராக்ட் சமையல்காரர்களால் காலை டிபனுக்கு செய்யப்படுவது. என்ன பெரும்பாலும் கரையாது. அடுத்து எந்த ஐட்டமும் கேட்க முடியாத படி செய்யும் ஒரு அற்புத பண்டமாக கருதி செய்கின்றார்கள். வெகு ரேராக நாக்கில் கரையும் அசோகா கிடைக்கும். அது சரி அது என்ன தலைப்பு காற்றில் கரையும் அசோகா? புதுமுக சமையல்காரர்கள் செய்து இறுகி போய், பொடி செய்து காற்றில் கரைத்தால் தான் உண்டு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s