ஒரு கோப்பை டீ – சமஸ்


“என்னய்யா உங்க ஊர்? ஒரு இது இல்ல; ஒரு அது இல்ல. இதெல்லாம் ஒரு ஊரா” என்று எதற்கெடுத்தாலும் வாயால் அவல் அரைக்கும் ஆட்களைப் பார்த்திருப்பீர்கள். நம் நாட்டில் ஊர் என்று ஓர் இடத்தை அழைக்கலாம் எனில், அதற்கு என்னென்ன தகுதிகளை வரையறுக்கலாம் என்று ஒரு முறை உண்மையாகவே விவாதம் வந்ததாம். பலரும் பல மாதிரி தீவிரமாய்ப் பேசிக்கொண்டிருக்க, திடீரென எழுந்த ஒருவர், “ஒரு டீக்கடை இருந்தால் அதை ஊர் ஏன்று ஒத்துக்கொள்ளலாம்” என்றாராம். கூடியிருந்த அத்தனை பேரும் சிரித்துக்கொண்டே, “இதையும் ஒரு தகுதியாக வைத்துக்கொள்ளலாம்” என்றார்களாம்.


நம் வாழ்வுடன் பிரித்துப் பார்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது டீ. உலகிலேயே அதிகமாகத் தேயிலை உற்பத்தி செய்யும் நாடு நம்முடையது; உலகிலேயே அதிகமாக டீ குடிப்பவர்களும் நாமே. ஆனாலும், ஒரு நல்ல டீக்கு நாம் படும் பாடு சொல்லி மாளாதது. அது போகட்டும். சூடான ஒரு கோப்பை டீயை அருந்தும் முன் சுவையான அதன் கதையைக் கொஞ்சம் பார்ப்போம். தேயிலையின் பூர்வீகம் தென்கிழக்கு ஆசியா. இந்தியாவின் வடகிழக்குப் பகுதி, வடக்கு பர்மா மற்றும் தென்மேற்கு சீனாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தேயிலை விளைந்திருக்கிறது. ஆயினும், டீயை முதன்முதலாக பருகத் தொடங்கியவர்கள் சீனர்களே. இந்தியாவில் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்னரே பரவலாக டீ குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தியர்களை டீ ருசிக்கு அடிமையாக்கிவிட்டால் இந்த வியாபாரத்தில் கொழுத்த லாபம் பார்க்கலாம் என்று திட்டமிட்ட ஆங்கிலேயர்கள், ஆரம்பக் காலத்தில் ஊர்ஊராக இனாமாகவே டீ கொடுத்தார்கள். திடீரென ஒரு நாள், “இனி டீக்கு விலையுண்டு” என்று அவர்கள் சொன்னபோதுதான் நம்மாட்களுக்குத் தெரிந்தது நம் நாக்குகள் டீக்கு அடிமையாகிவிட்டன என்று. அப்புறம், தேயிலை விற்பனைக்கு வந்தபோது அதை வாங்கிக் கண்ட கண்ட நேரத்திலும் காய்ச்சிக் குடித்துவிட்டு இரவெல்லாம் கொட்டகொட்ட விழித்துக்கொண்டிருந்த கதையை அந்தக் காலத்துப் பெருசுகளிடம் இன்றைக்கும் கேட்கலாம்.

காபிக்கும் டீக்கும் இடையேயான உலகளாவிய பனிப்போர் உங்களுக்குத் தெரிந்திருக்கும். நம்மூரிலும் 1930-களில் இந்தப் போர் ரொம்பவும் பிரசித்தம். எந்த அளவுக்கு என்றால், ‘தொழிலாளர் வர்க்கத்தின் நண்பன் டீ’ என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்யும் அளவுக்கு. ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. அசாம், டார்ஜிலிங், நீலகிரி தேயிலை ரகங்கள் உலகின் சிறந்த ரகங்களாகக் கருதப்படுகின்றன. காபி தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கிக்கொள்ள, டீயும் ஒரு தனி ராஜ்ஜியத்தை உருவாக்கிக்கொண்டு இரண்டும் சேர்ந்து நம்மை அடிமைப்படுத்திவிட்டன. சரி, நேரமாகிவிட்டது. சூடாக ஒரு நல்ல டீ குடிப்போமா? புறப்படுங்கள். மன்னார்குடிக்குப் போவோம்.

ஏன்?

ஏனெனில், தமிழகத்திலேயே அதிகமாக டீ போடும் க. நேதாஜி அங்குதான் இருக்கிறார். ஒரு நாளைக்கு ஐயாயிரம் டீ போடுகிறார். விஷயம் அது மட்டும் இல்லை. ஐயாயிரம் டீயையும் ஒரே ருசியுடன் தருகிறார். அதிகாலை 4 மணிக்குக் கடையைத் திறக்கிறார். நண்பகல் சில மணி நேரம் ஓய்வு. பிறகு, இரவு 8 மணி வரை சதா சர்வ நேரமும் டீ, டீ, டீ… இத்தனைக்கும், எல்லாக் கடைகளையும்விட இங்கு எப்போதுமே 50 பைசா கூடுதலாகவே டீ விற்கிறார்கள். ஆனாலும், கூட்டத்துக்குக் குறைவே இல்லை.

“சும்மா இல்லை. இத்தனை தரமாக வேறெங்கும் டீ குடிக்க முடியாது” என்கிறார் நேதாஜி. “கறவைப் பால் மட்டுமே வாங்குகிறோம். இரண்டு அடுப்பு. ஒன்று தண்ணீர் கலக்காத பால் கொதிக்க; இன்னொன்று ஒன்றுக்கு மூன்று என்று தண்ணீர் கலந்த பால் கொதிக்க. டிக்காஷனைத் தண்ணீரில் போட மாட்டோம். இரண்டாவது பால் போடுவோம். டிக்காஷன் தயாரானதும் பழுக்கக் காய்ச்சிய முதல் பால் சேர்த்தால் நேதாஜி டீ தயார்” என்கிறார் சிரித்துக்கொண்டே.

டீத்தூள் ஆதிகம் வேகக் கூடாது; பால் நன்கு கொதிப்பேற வேண்டும்- நல்ல டீ போட நேதாஜி தரும் ஆலோசனை இது.

நாம் இன்னும் பேசி முடித்திருக்கவில்லை. அதற்குள் ஒரு பெருங்கூட்டம் அந்தக் கடையின் முன் வரிசை கட்டி நிற்கிறது. ஒரு கோப்பை டீக்கான அந்த நீண்ட வரிசையில், இப்போது நின்றுகொண்டிருக்கிறோம் நாமும்!

தினமணி-2008
‘சாப்பாட்டுப்-புராணம்’ புத்தகத்திலிருந்து…

[samsatmjpg.jpg]

04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.செய்தியாளராகப் பணிபுரிகிறேன். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு? அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன்.

தொடர்புக்கு… writersamas at gmail dot com

நூலின் பெயர்: சாப்பாட்டுப் புராணம்

ஆசிரியர்: சமஸ்
விலை: ரூ.60
புத்தக வெளியீடு :  தான் பிரசுரம்,
திருச்சி.
கைப்பேசி:  94427 07988

தமிழில் சமையல் குறிப்புகள் போன்ற புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் வெளிவந்திருக்கின்றன. ஆனால், நமது உணவுப் பண்பாட்டைப் பதிவு செய்யும், அதன் நவீன கால மாற்றங்கள், பாதிப்புகள் போன்றவற்றை விளக்கும் வகையிலான புத்தகங்கள் அநேகமாக இல்லை என்றே கூறலாம். இத்தகைய சூழலில் வெளிவருகிறது சமஸின் ‘சாப்பாட்டுப் புராணம்’. இந்தப் புத்தகத்தில்  நமது பாரம்பரிய உணவு வகைகளைப் பற்றி மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் மேல் நாடுகளிலிருந்தும் வந்து இங்கு காலூன்றி தனித்துவம் பெற்றுவிட்ட உணவு வகைகளைப் பற்றியும் சமஸ் அழகாக எழுதியுள்ளார். ஒரு குறிப்பிட்ட உணவு வகையைப் பற்றி எழுதும்போது, அதன் வரலாற்றையும் அந்த உணவுப் பொருளுக்கும் குறிப்பிட்ட இடத்துக்கும் இடையிலுள்ள உறவையும் பற்றி இவர் எழுதுவது இவ்வகை எழுத்துக்கு ஒரு புதுப்பரிமாணத்தை அளிக்கிறது. ‘அடையார் ஆனந்த பவன்’, ‘முருகன் இட்லிக் கடை’ போன்ற பெரிய உணவகங்களோடு தெருவோரம் சின்ன மேஜையில் வைத்துப் பால்திரட்டு விற்கும் ‘மாரியப்பன்-ஜோதி தம்பதி கடை’, ‘மலைக்கோட்டைக் கையேந்திபவன்’காரர்கள் என்று யாராலும் அறியப்படாதவர்களையும் பற்றி சமஸ் எழுதியிருக்கிறார். சாப்பாட்டைப் பற்றி இவர் எழுதுவதைப் படிக்கும்போதே சாப்பிட்ட நிறைவு உண்டாகிறது; அதே நேரத்தில் அவர் சொல்லியுள்ள உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும் என்ற ஏக்கமும் உண்டாகிறது. சுருங்கச் சொன்னால் அனுபவித்துச் சாப்பிடுபவர்களுக்குத்தான் இந்தப் புத்தகத்தின் அருமை தெரியும் எனலாம்.

இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் ‘தினமணி’ இணைப்பிதழான ‘கொண்டாட்ட’த்தில் ‘ஈட்டிங் கார்னர்’ பகுதியில் ஓராண்டாக வெளிவந்தபோது சமஸுக்குக் கிடைத்த வாசகர்கள் ஏராளம். அவர்களுக்குக் கையேடுபோல் இப்போது இந்தப் புத்தகம் வெளியாகிறது.

Advertisements

One thought on “ஒரு கோப்பை டீ – சமஸ்

  1. venkat February 25, 2013 at 12:44 AM Reply

    நமது ஊர் டீ போல இங்கே கிடைப்பதில்லை! இங்கே கெட்டியான எருமைப் பாலில் டீத் தூள் போட்டு கொதிக்க வைத்து தான் தருகிறார்கள். அதனால் அவ்வளவு ருசி இருப்பதில்லை! 🙂

    நல்ல புத்தகம் பற்றிய அறிமுகம். சென்னை செல்லும்போது வாங்க வேண்டிய புத்தகங்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s