புத்தகக் கண்காட்சியும் நானும் – அசோகமித்திரன்


சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் டிசம்பர் மாதத்தில் புத்தகக் கண்காட்சி ஆண்டுக்கு ஒரு முறை நடக்கத் தொடங்கிய நாட்களில் நான் துவக்க நாளே போய்விடுவேன். அந்த நாட்களில் நூல்களைக் கொத்துக் கொத்தாக வெளியிடுவது சாத்தியமில்லை. பதிப்பாளர்கள் ஆண்டுக்குப் பத்து நூல்கள் வெளியிட்டால் அதிகம். இன்று சிறு பத்திரிகைகள் நிறைய வெளியிடப்படுகின்றன. புது நூல்கள் வெளிவருதல் இப்பத்திரிகைகள் மூலம் நூல்கள் படிப்பதில் ஈடுபாடு உடையவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அது சாத்தியம் இல்லை. நூல்கள் வாங்க ஒன்று, பதிப்பாளர்கள் அலுவலகத்துக்குப் போக வேண்டும். இல்லை, சென்னை தி.நகர் ‘புக்லாண்டு’ செல்ல வேண்டும்.

பத்து நூல்களுக்கு மத்தியில், தேவைப்படுகிறது என்று ஒன்றைத் தேர்ந்தெடுத்து விடலாம். ஆனால் பத்தாயிரம் நூல்களுக்கு மத்தியில் எவ்வளவு என்று பொறுக்கி எடுக்க முடியும்? என்னால் முடிந்ததில்லை. ஒரு பழமொழி உண்டு. சமர்த்தன் சந்தைக்குப் போனால் கொள்ளவும் மாட்டான், கொடுக்கவும் மாட்டான். நான் சமர்த்தன் இல்லை. எனக்குப் புத்தகம் தபாலில் வருவது இன்றும் ஆர்வத்தைத் தருகிறது. தபாலில் வந்தவை எல்லாவற்றையும் படித்துவிட முடிகிறது. நான் வாங்கிய புத்தகங்கள் பாதிக்கு மேல் படிக்கப்படாமல்தான் கிடக்கும். யாராவது நண்பர் வந்தால் அவரிடம் கொடுத்து விடுவேன். அவர் அதைப் பழைய காகிதமாக விற்று விடுவார்.

கண்காட்சித் துவக்கம் சில ஆண்டுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். ஒரு ஆண்டு, நாராயணசாமி என்ற அமைச்சரின் உரை மிகவும் சிறப்பாக இருந்தது. கண்காட்சி நடக்கும் எல்லா நாட்களிலும் யார் யாரோ வந்து பேசுவார்கள். இதில் பரிசளிப்பு வேறு.

ஓராண்டு, கண்காட்சி தொடங்கிய நாள் மழை ஆரம்பித்தது. கடைசி நாளன்று நின்றது. ஏன், கண்காட்சியை நீட்டிக்கக் கூடாதா என்று கேட்கலாம். ஆனால் காயிதே மில்லத் கல்லூரி திறந்துவிடும். இன்னோர் ஆண்டு தீ விபத்து. சில கடைகள் முழுதும் எரிந்துவிட்டன. அதில் என்னுடைய நூல் வெளியிட்டவர் கடையும் அடக்கம். அந்தப் பதிப்பாளர் அதன் பின் கதை, தொடர்கதை என்று எழுத ஆரம்பித்து வெற்றியும் அடைந்திருக்கிறார். அவர் சொல்லிக்கொள்ளலாம், அக்னிப் பரிட்சையிலிருந்து மீண்டவர் என்று.

என் உடல் நிலை நடக்க முடியாத அளவுக்குக் கொண்டு சென்றபோது கண்காட்சி பூந்தமல்லி சாலைக்குச் சென்றுவிட்டது. நான் ஒரு நூலை வெளியிடுவதாக ஒரு நண்பரிடம் வாக்குக் கொடுத்திருந்தேன். நூலை வெளியிட்டுப் பேசவும் செய்தேன். என்னுடன் என் மகன் வந்திருந்தான். நான் என்ன பேசினேன் என்று என்னைக் கேட்டான். மற்றவர்களும் கேட்டிருப்பார்கள். ஆனால் நான் அரை மயக்க நிலையில் இருந்தேன். என் பதில் மேலும் குழப்பம் தந்திருக்ககூடும்.

ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் வசூலாகிறது என்கிறார்கள். இந்த வசூலில் என் பங்கு மிகவும் குறைவு. இப்போது வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. ஆதலால் பிறர் சொல்வதைத்தான் நான் கேட்டறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

எழுத்தாளர்களைக் காரணம் வைத்து புத்தகக் கண்காட்சிகள் நடத்த முடியாது. என்றும் பயன்படக்கூடிய நூல்கள் எனச் சில உண்டு. எனக்கு வயது 81. என் தகப்பனார் வாங்கிய அகராதிகள் இன்றும் பயன்படுகின்றன. மதுரை புது மண்டபத்தில் அவர் வாங்கிய “ஆயிரத்தொரு இரவுகள்” நூல் நான்கைந்து ஆண்டுகள் முன்பு வரை எங்கள் வீட்டில் இருந்தது. அவர் வாங்கிய “மதனகாமராஜன் கதை,” ”விநோத ரசமஞ்சரி” பிரதிகளை நான் பணி புரிந்த அலுவலகத்தில் கொடுத்தேன். திரும்பி வரவில்லை. இப்போது வேறு பதிப்பகம் வெளியிட்டதை வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால் இவற்றில் “ஐதீகப் படங்கள்” கிடையாது. இன்று ஓவிய மொழியில் சொல்லப்படும் ‘பெர்ஸ்பெக்டிவ்’ அவற்றில் கிடையாது. ஆனால் சிறப்பானவை.

கண்காட்சிக்கு வெளியே நடைபாதையில் பழைய புத்தகங்கள் கிடைக்கும். இரண்டாம் உலக யுத்த காலத்தில் வெளியிடப்பட்ட ‘பெங்க்வின்’  நூல்கள் ஐந்தாறு வாங்கியிருக்கிறேன். அந்த நூல்கள் படை வீரர்களுக்காக மலிவு விலையில் தயாரித்து விற்பனை செய்யப்பட்டன. பெர்னார்டு ஷாவின் ‘பிக்மாலியன்’ பிரதியில் மிகச் சிறப்பான கோட்டு ஓவியங்கள்.

CHENNAI NAMMA CHENNAI

சென்னை நம்ம சென்னை உங்கள் வீடு தேடி வரச் சந்தா செலுத்தி இதழை வீட்டிலிருந்தபடியே பெறுங்கள்.

தனி இதழ் : ரூ. 10
ஆண்டு சந்தா : ரூ. 200

சந்தா செலுத்துவோர் அதற்கான தொகையை NAMMA CHENNAI PUBLICATIONS PVT LTD என்ற பெயருக்கு காசோலை/ பணவிடையை அனுப்ப வேண்டும். உங்கள் தபால் முகவரி, தொலைபேசி எண் ஆகிய விவரங்களை உடன் இணைக்க வேண்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s