கத்திரி புராணம்! — வெங்கடேஷ்


இன்று விக்கிரமன் நடத்தும் “இலக்கியப் பீடம்” இதழ் வந்தது. அதில், லா.ச.ராமாமிர்தத்தின் மனைவி ஹைமாவதி தம் கணவர் பற்றி ஒரு தொடர் எழுதுகிறார். ரசனை தொக்கி நிற்கும் தொடர் அது. இந்த இதழில் லா.ச.ரா.வின் உணவு ரசனையை எழுதி வருபவர், ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார்:

”எண்ணெய் கத்தரிக்காய் மசாலா பொடியில் வேகும் வாசனை தூக்க தூக்க ரெண்டு கன்னத்துலேயும் உள் பக்கம் வேல் குத்தறது என்பவர் இவர்.”

படித்தவுடன் மனத்தில் உற்சாகம். என்னைப் போல், லா.ச.ரா.வும் கத்தரிக்காய் ப்ரியர். ஒத்த ரசனை உள்ள மனிதர்களைப் பார்க்கும் போது ஏற்படும் உற்சாகம் எனக்கு.

உணவில் கத்திரிக்காய் என்னுடைய ஃபேவரிட். கத்திரியில் என்ன செய்தாலும்  கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடுவேன். நான் பார்த்தவரை, நிறையபேருக்கு கத்திரி மேல் பெரிய ஆசை இல்லை. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு டேஸ்ட். மூன்று வேளை கத்திரி சமைத்துப் போட்டாலும் அலுக்காமல் சாப்பிடுவேன்.

பூனாவில் இருந்தபோது, நாக்பூர் கத்திரி அங்கே கிடைக்கும். சின்னச் சின்னதாக இளசாக கிடைக்கும். அதன் வண்ணமே தனி அழகு. உள்ளே விதைகளே இருக்காது. சதை நிறைந்தது. இரவு சப்பாத்திக்கு அதுதான் தொட்டுக்கொள்ள. கத்திரியை நீளவாக்கில் மெல்லிசு மெல்லிசாய வெட்டி, வாணலியில் கொஞ்சமாய் எண்ணெய் விட்டு வதக்கினால் போதும். சப்பாத்திக்கு சரியான தோழன் அது. பூனாவில் இருந்தவரை காலையேனும் மாலையேனும் கத்திரி இல்லாமல் கழிந்ததில்லை. சென்னை வரும்போதெல்லாம், நாக்பூர் கத்திரி வாங்கிவருவேன். இங்கே அப்படிப்பட்ட கத்திரி கிடைப்பதே இல்லை.

திருவல்லிக்கேணியில் இரண்டு சமையல்காரர்கள் மிகவும் பிரபலம். ஒருவர், பட்டப்பா, இன்னொருவர் சம்பத். பட்டப்பா திருமண சமையலில் பொடிபோட்ட கத்திரிக்காய் காயும், தயிர்சாதமும் மிகமிக அற்புதமானவை. எங்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் பட்டப்பாவை எப்படியேனும் நுழைத்துவிடக் காரணம், அவரது பொடிபோட்ட கத்திரிக்காய்தான். பிரமாதத்துக்கு மேல் ஒரு வார்த்தை இருந்தால் சொல்லுங்கள்.

வீட்டில் கத்திரியும் வெங்காயத்தையும் சேர்த்துச் செய்யும் இரவு சப்ஜி ஏ கிளாஸ். வெங்காயம் வெட்டுவதில் நான் நிபுணன். ஒரே சீராக சிறிய சிறிய துகள்களாக வெட்டித்தள்ளுவேன். அதோடு கத்திரியும் சேர்த்து, சப்ஜி செய்தால் போதும். சப்பாத்தி கணக்கே இல்லாமல் உள்ளே இறங்கும்.

கத்திரியில் என்ன சத்து உண்டு என்றெல்லாம் எனக்குத் தெரியாது. கத்திரியை தூர இருந்து பார்த்தே, அதன் தன்மை எப்படி இருக்கும் என்று என் உள்ளுணர்வு கொண்டு சொல்வேன். சென்னையில் கிடைக்கும் நாட்டுக் கத்திரி, வேலூர் கத்திரி எல்லாம் அவ்வளவாக சுவையற்றவை. விதைகள் வேறு துருத்திக்கொண்டு நிற்கும்.

நிதானமாக பொறுக்கியெடுத்து கத்திரி வாங்குவேன். அதைப் பார்க்கும்போதெல்லாம் ஒருவிதப் பாசம் ஏற்படுவதைத் தவிர்க்கவே முடியவில்லை. காசி போனால், பிடித்த காய் ஒன்றை விட்டுவிட்டு வரவேண்டும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

யாராவது என்னை கத்திரியை விடச் சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் காசி பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை!

வெங்கடேஷ் மீண்டும் இணையத்தில் எழுத ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் இத்தருணத்தில் எனக்கும் கத்திரிக்காய் ரொம்பப் பிடிக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்வதில் உளமார்ந்த உவகையெய்துகிறேன்.

தொடர்புடைய பதிவு:
கத்திரிக்காய் பொடிக் கறி

kaththirikkaai podi curry

5 thoughts on “கத்திரி புராணம்! — வெங்கடேஷ்

 1. …ஸ்… …ஸ்… யப்பா…!

 2. vidya (@kalkirasikai) February 12, 2013 at 11:10 AM Reply

  புராணம் எழுதத் தெரியா விட்டாலும் நானும் கத்திரிக்காய் ரசிகை தான். ஏன் ஸார் இப்படி சாதுவா சும்மா இருக்கற நாக்கை உசுப்பி விடறீங்க? பாத்து, வயிற்றை வலிக்கப் போகுது.

 3. vidya (@kalkirasikai) February 12, 2013 at 11:28 AM Reply

  சமீபத்தில் நான் கண்டுபிடித்த எளிய கத்திரி ரெஸிபி. (வேறு யாராவது ஏற்கெனவே முயன்றிருக்கக் கூடுமோ , பாரம்பரிய எண்ணைக்கறி, ரசவாங்கி, பிட்லை ரசிகர்கள் ஒத்துக் கொள்வார்களா என்றெல்லாம் தயக்கங்கள் இருந்தாலும் ஆடின காலும் கமென்ட் டைப் பண்ணின கையும் சும்மா இருக்காது என்று பெரியவர்கள் சொல்லியிருப்பதால் பகிர்ந்து கொள்கிறேன்.)
  கத்திரிக்காயை பிட்லைக்கு நறுக்குவது போல் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியையும் அதே அளவுக்கு நறுக்கிக் கொள்ளவும்.
  வாணலியில் வெறும் கடுகு மட்டும் தாளித்துக் கொண்டு நறுக்கி வைத்த தக்காளி மற்றும் கத்திரிக்காய்களை ஒரே நேரத்தில் சேர்த்தே போட்டுவிட்டு அதன் தலையில் மஞ்சள் பொடியைத் தூவிக் கிளறி மூடி வைத்து (மூடுவது முக்கியம்) ஸிம்மில் வைத்து விட்டு பால் ஹனுமான் தளத்தில் ஓரிரு பதிவுகள் புரட்டி விட்டுத் திரும்பிப் போய்ப் பார்த்தால் கத்திரி தக்காளிக் கூட்டணி மினுமினுப்பாக ஒன்று சேர்ந்திருக்கும்.
  உப்பும் கொஞ்சம் ரசப் பொடியும் போட்டுப் புரட்டி மூடி விட்டு வந்து பால் ஹனுமான் தளத்துக்கு என்னை மாதிரி முந்திரிக் கொட்டைத்தனமாக ஒரு கமென்ட் அடித்துவிட்டு மீண்டும் கிச்சனுக்குள் போனால் ஐட்டம் ரெடி. அதைக் கூட்டு என்பதோ கறி என்பதோ ஸைட் டிஷ் என்று பொதுமைப்படுத்துவதோ அவரவர் விருப்பம். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பொங்கல், தயிர்சாதம், சப்பாத்திக்கு நல்ல பொருத்தமான ஜோடி.

 4. ரெங்கசுப்ரமணி February 12, 2013 at 12:02 PM Reply

  அவனவன் ஹோட்டல்ல கண்டதையும் சாப்பிட்டுட்டு வயித்தெரிச்சல்ல இருக்கும் போது, கத்திரிக்காய் பற்றி கட்டுரை. நேத்து காப்பியை படிச்ச வயித்தெரிச்சல் தீரல. அடுத்தது என்னா பாகற்காய் மோர் குழம்பா?

 5. R. Jagannathan February 13, 2013 at 5:02 PM Reply

  கத்தரிக்காய் பொடிக் கறி செய்முறை தொடர்பு (ஏப்ரல் 2007 பதிவு!!) க்குப் போனால், அங்கும் இன்னொரு லிங்க் – மசாலாப்பொடி செய்முறை! ஆனால் இது இப்போது நீக்கப்பட்டுவிட்டது! இப்போ என் மனைவி அந்த ஸ்பெஷல் ரெசிப்பியை கேட்கிறார். வெங்கடேஷ் அவர்களை எழுதச்சொள்ளவும்! (படம் பார்த்ததிலிருந்து எனக்கு ஜொள்ளு நிற்கவில்லை!) – ஜெ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s