கும்பகோணம்-டிகிரி-காபி—சமஸ்


kumbakonam_degree_coffee

“விருந்தின் பயனெல்லாம் வீணாகும் காபி;
அருந்தத் தராமல்விட் டால்”

இப்படி ஒரு பகடிப் பாடல் உண்டு, தாத்தா காலத்தில். எல்லாம் காபி படுத்திய பாடுதான். தமிழர்களாகிய நம் வாழ்வில் பாழாய்ப்போன இந்த காபி ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் லேசுபாசுபட்டதில்லை. காபி நல்லதா, கெட்டதா என்று ஒரு பக்கம் காலங்காலமாக விவாதம் நடந்துகொண்டிருக்க, “குடிக்கிறதைக்-குடிக்காமல்-வேறென்ன-செய்வதாம்” என்று கேட்டபடி டம்ளர்-டபரா சகிதம் பீப்பாய்பீப்பாயாக காபியை உள்ளே தள்ளிக்கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம்.

 ஆப்பிரிக்கக் காடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட காபி எத்தியோப்பாவிருந்து அரேபியா வழியாக 17-ம்-நூற்றாண்டு-வாக்கில் இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறது. மைசூர் பகுதியில் அக்காலகட்டத்திலேயே காபிக்கொட்டை உற்பத்தி தொடங்கிவிட்டாலும் நம்மாட்களை வந்தடைய மேலும் இரண்டு நூற்றாண்டுகள் ஆயின. 19-ம்-நூற்றாண்டின்-இறுதியில் மெல்லத் தமிழகத்தில் நுழைந்த காபி அடுத்தடுத்த சில ஆண்டுகளில் தமிழர்களை வசியப்படுத்தி தன் கட்டுக்குள் கொண்டுவந்தது. அதுவரை காலையில் எழுந்ததும் நீராகாரத்தையோ தானியக் கஞ்சியையோ குடித்துவந்த நம்மாட்கள் திடீரென ஒரு நாள் காபி குடித்துவிட்டு அப்புறம் காபியே கதி ஏன்று காபி பித்துப்பிடித்துத் திரிய ஆரம்பித்ததைப் பார்த்த வீட்டுப் பெருசுகள் வகைவகையாய் வசைமாரி பொழிந்தார்கள். புலம்பித் தீர்த்தார்கள் (காபி டிக்காஷனில் சில கடைகளில் அபின் கலக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய பெருசுகள்கூட உண்டு). ஆனால், காபி காலப்போக்கில் அவர்களையும் சேர்த்து வாரிச் சுருட்டியது.

ஒரு வகையில் தமிழகத்திலுள்ள இன்றைய உணவகங்களுக்கு எல்லாம் காரணகர்த்தா காபிதான் தெரியுமா?

நாள் முழுவதும் உழைத்தாலும் கேளிக்கைக்கும் கொண்டாட்டத்துக்கும் தனியாக நேரத்தை ஒதுக்குவதில் ஆங்கிலேயர்கள் கெட்டிக்காரர்கள். இந்தியாவை அவர்கள் ஆண்டபோது வெள்ளைக்கார அதிகாரிகள் சாயங்காலத்தில் பொழுதுபோக்க அவரவர் வேலை பார்த்த ஊர்களில் நிறைய கிளப்புகளைத் தொடங்கினார்கள்.

சிட்டி-கிளப்‘, ‘காஸ்மோபாலிடன்-கிளப்‘, ‘டவுன்-ஹால்‘, ‘ஆஃபிஸர்ஸ்-கிளப்‘ என்ற பெயர்களிலெல்லாம் தொடங்கப்பட்ட இந்த ‘கிளப்‘புகளில் விளையாட்டு, கேளிக்கை முடிந்தவுடன் அரட்டை அடித்துக்கொண்டே மது அருந்தும் பழக்கம் ஆங்கிலேயர்களுக்கு இருந்தது.

ஆங்கிலேயர் காலத்தில் புதிதாக ‘ஆஃபிஸர்‘ இன நம்மாட்களுக்கு இந்த “கிளப்‘ கலாச்சாரம் மீது நிறைய பொறாமை இருந்தது. ஆனால், காபி குடிப்பதே பல வீடுகளில் அபச்சாரமாகக் கருதப்பட்ட அந்நாட்களில், மதுவையெல்லாம் நினைக்க முடியுமா என்ன?

ஆகையால், நம்முடைய ‘ஆஃபிஸர்‘கள் ஒரு மாற்று ‘கிளப்‘பை உருவாக்கினார்கள். பெரும்பாலும் வருவாய்த் துறை, நீதித் துறை ‘ஆபிஸர்‘கள் ஆதரவுடன் அந்தந்தத் துறை அலுவலகங்களையொட்டி இப்படித் தொடங்கப்பட்ட ‘காபி-கிளப்‘புகளே தமிழ்நாட்டிலுள்ள இன்றைய உணவகங்களுக்கெல்லாம் முன்னோடி. இந்த ‘காபி-கிளப்‘ புகளில் புகழ் பெற்றதே டிகிரி காபி.

அதென்ன டிகிரி காபி? அதாவது, நன்கு விளைந்த நயமான ‘ஹாசன்-பீபரி‘ காபிக் கொட்டையைத் தெறிக்கும் பதத்தில் வறுத்து, பதமான சூட்டில் அரைத்துத் தூளாக்கி, அதில் வடிந்த டிக்காஷனில் சரி விகிதம் நன்கு காய்ச்சிய பசும்பாலைக் கலந்து, சுல் கசப்பு மறைய மட்டும் ஜீனி சேர்த்து, அது கரையும் முன்னே குடிக்கக் கிடைத்தால், அதுதான் டிகிரி காபி. மற்றொரு பெயரில் ‘கும்பகோணம்-காபி‘ (கூடுதல் ருசிக்கு 80-20 என்று காபித் தூளுடன் சிக்கரித் தூள் கலந்துகொள்வதும் உண்டு). காபியின் சுவை நாக்கு வழியே வயிற்றுக்குள் இறங்கும் முன், காபியின் மணம் மூக்கு வழியே தலைக்கு மேல் கேறி ஏற வேண்டும். அதுதான் பக்குவம்; அதுதான் ருசி!  இந்த ருசிக்காகவே விடிந்தும் விடியாத பொழுதுகளில் ஜட்கா வண்டி பூட்டிக்கொண்டு கும்பகோணம் ‘பசும்பால்-பஞ்சாமி-அய்யர்-கடை‘, மாயவரம் ‘காளியாகுடி‘, மன்னார்குடி ‘உடுப்பி-கிருஷ்ண-பவன்‘ என்று பெயர்பெற்ற ‘காபி-கிளப்‘புகளில் அதிகாலையிலேயே அடைக்கலம் ஆன கூட்டமெல்லாம் நம்மூரில் உண்டு. அது ஒரு காலம்!


சரி. எல்லாம் உடனடிமயம் ஆகிவிட்ட இக்காலத்திலும் இதற்கெல்லாம் என்னும் இடமிருக்கிறதா என்ன? இருக்கிறது ஐயா, இருக்கிறது. தஞ்சாவூரில். இப்போது ‘காபி-பேலஸ்‘ என்ற பெயரில். தஞ்சாவூர் எல்லையம்மன் கோயில் தெரு நடுவில் வீற்றிருக்கும் அந்தக் காலத்து ‘காபி-பேலஸ்‘ கட்டடத்துக்குள் நுழைவதே ஒரு பழுப்பு நிறப் புகைப்படத்துக்குள் நுழைவதுபோல் இருக்கிறது. பழமையைக் கொஞ்சமும் சிதைக்காமல் வைத்திருக்கிறார்கள் கடையில்.

தஞ்சாவூரில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்தக் கட்டடத்தில் இந்தப் பாரம்பரியம் தொடர்கிறது. அந்தக் காலத்தில் இந்தக் கட்டடத்தில் இருந்த கடையின் பெயர் ‘சரவண-பவன்‘. என்.எஸ். வெங்கடாசலம் அய்யர் நடத்தினார். இடையில் ஓர் இடைவெளிக்குப் பின் இங்கு ஆரம்பமானது ‘காபி-பேலஸ்‘ ராஜ்ஜியம். தஞ்சாவூரில் எங்கெங்கோ எதற்கெதற்கோ செல்லும் கூட்டமெல்லாம் ஊருக்கு நடுவில் இருக்கும் இந்தக் கடை காபியிடம்தான் வந்து மூச்சைப் போடுகிறது. தஞ்சையில் இப்போது மூன்று இடங்களில் இயங்குகிறது இந்த ‘காபி-கிளப்‘.

கடையை நிர்வகிக்கும் எஸ். சந்திரசேகர மேத்தா, நந்தகுமார் சகோதரர்கள் கூறுகிறார்கள்: “சின்ன வயதிருந்தே காபி மீது ஒரு பிரியம். அதனால்தான் ‘காபி-கிளப்‘ தொடங்கினோம். பாரம்பரியமான அதே பாணியில்தான் காபி போடுகிறோம். எங்கள் கடைகளுக்கான காபித்தூள் கலவையை நாங்களே தயாரிக்கிறோம். டிக்காஷனை முழுமையாக வடியவிட்டு காலையில் கறந்த பசும்பால் சேர்த்துச் சுடச்சுட காபி கொடுக்கிறோம். வடிந்து இரண்டு மணி நேரத்துக்கு மேலான டிக்காஷனை உபயோகிப்பதில்லை. அதேபோல் ஒரு தூளில் இரு முறைக்கு மேல் டிக்காஷன் எடுப்பதுமில்லை. காபி போடுவதும் ஒரு கலை; கொஞ்சம் பொறுமை வேண்டும். இக்காலத்தில் அதற்கெல்லாம் இடமில்லை. ஊரெங்கும் பாக்கெட் பால் கலாச்சாரமாகிவிட்டது. டிக்காஷன் வடியும் இரண்டு மணி நேரம்கூட காத்திராமல் கரண்டியைவிட்டுக் கலக்கி இறக்குகிறார்கள். பின் எப்படி ருசி வரும்? இன்றும் எங்கள் காபி ருசி தனித்து நிற்கக் காரணம், பாரம்பரியமான தரத்தை அப்படியே நீட்டித்துவருவதுதான்” என்றனர் ‘காபி-பேலஸ்‘ சகோதரர்கள்.

கிளம்புமுன் சுடச்சுட காபி வந்தது. உடன் வந்த நண்பர் சொன்னார்: “அவசரப்படாமல்-அனுபவித்துக்-குடியுங்கள். காபி-குடிப்பதும்-ஒரு-கலை!

தினமணி-2008
‘சாப்பாட்டுப்-புராணம்’ புத்தகத்திலிருந்து…

[samsatmjpg.jpg]

04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.செய்தியாளராகப் பணிபுரிகிறேன். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு? அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன்.

தொடர்புக்கு… writersamas at gmail dot com

நூலின் பெயர்: சாப்பாட்டுப் புராணம்

ஆசிரியர்: சமஸ்
விலை: ரூ.60
புத்தக வெளியீடு :  தான் பிரசுரம்,
திருச்சி.
கைப்பேசி:  94427 07988

தமிழில் சமையல் குறிப்புகள் போன்ற புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் வெளிவந்திருக்கின்றன. ஆனால், நமது உணவுப் பண்பாட்டைப் பதிவு செய்யும், அதன் நவீன கால மாற்றங்கள், பாதிப்புகள் போன்றவற்றை விளக்கும் வகையிலான புத்தகங்கள் அநேகமாக இல்லை என்றே கூறலாம். இத்தகைய சூழலில் வெளிவருகிறது சமஸின் ‘சாப்பாட்டுப் புராணம்’. இந்தப் புத்தகத்தில்  நமது பாரம்பரிய உணவு வகைகளைப் பற்றி மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் மேல் நாடுகளிலிருந்தும் வந்து இங்கு காலூன்றி தனித்துவம் பெற்றுவிட்ட உணவு வகைகளைப் பற்றியும் சமஸ் அழகாக எழுதியுள்ளார். ஒரு குறிப்பிட்ட உணவு வகையைப் பற்றி எழுதும்போது, அதன் வரலாற்றையும் அந்த உணவுப் பொருளுக்கும் குறிப்பிட்ட இடத்துக்கும் இடையிலுள்ள உறவையும் பற்றி இவர் எழுதுவது இவ்வகை எழுத்துக்கு ஒரு புதுப்பரிமாணத்தை அளிக்கிறது. ‘அடையார் ஆனந்த பவன்’, ‘முருகன் இட்லிக் கடை’ போன்ற பெரிய உணவகங்களோடு தெருவோரம் சின்ன மேஜையில் வைத்துப் பால்திரட்டு விற்கும் ‘மாரியப்பன்-ஜோதி தம்பதி கடை’, ‘மலைக்கோட்டைக் கையேந்திபவன்’காரர்கள் என்று யாராலும் அறியப்படாதவர்களையும் பற்றி சமஸ் எழுதியிருக்கிறார். சாப்பாட்டைப் பற்றி இவர் எழுதுவதைப் படிக்கும்போதே சாப்பிட்ட நிறைவு உண்டாகிறது; அதே நேரத்தில் அவர் சொல்லியுள்ள உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும் என்ற ஏக்கமும் உண்டாகிறது. சுருங்கச் சொன்னால் அனுபவித்துச் சாப்பிடுபவர்களுக்குத்தான் இந்தப் புத்தகத்தின் அருமை தெரியும் எனலாம்.

இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் ‘தினமணி’ இணைப்பிதழான ‘கொண்டாட்ட’த்தில் ‘ஈட்டிங் கார்னர்’ பகுதியில் ஓராண்டாக வெளிவந்தபோது சமஸுக்குக் கிடைத்த வாசகர்கள் ஏராளம். அவர்களுக்குக் கையேடுபோல் இப்போது இந்தப் புத்தகம் வெளியாகிறது.

11 thoughts on “கும்பகோணம்-டிகிரி-காபி—சமஸ்

 1. venkat February 11, 2013 at 3:06 AM Reply

  காபி பற்றி படித்தவுடன், எனக்கு ஸ்ரீரங்கத்தின் முரளி காபி நினைவுக்கு வந்தது…. இப்பவே குடிக்கணும்! 🙂

  • BaalHanuman February 12, 2013 at 12:43 AM Reply


   முரளிஸ் காபி பற்றி சமீபத்தில் தேசிகன் கூட எழுதியிருந்தார். அடுத்த முறை ஸ்ரீரங்கம் போகும்போது நிச்சயம் இந்தக் கடைக்குப் போக வேண்டும்.

 2. Jagannathan February 11, 2013 at 8:28 AM Reply

  நல்ல மணமான கட்டுரை! உண்மையில் காபி போடுவது – குடிப்பதை விட – பெரிய கலை தான். ஆத்தில் கூட தினம் ஒரே மாதிரி சுவை கிடைப்பதில்லை! சரவணா பவன் மட்டும் அதை மெயின்டைன் பண்ணுகிறார்கள்! விலை தான் ‘முடியல’! அதனாலேயே இப்போது காபி குடித்தல் கட்டுப்பாட்டில் இருக்கிறது! என் தாத்தா காலத்தில் சொம்பு சொம்பாக (வெள்ளி) கொதிக்க கொதிக்க காப்பி வந்துகொண்டே இருக்குமாம் – திண்ணையில் சீட்டுவிளையாடும் பாழும் பிராம்மணனுக்கு! – ஜெ.

  • BaalHanuman February 12, 2013 at 12:45 AM Reply

   நீங்கள் வர்ணிக்கும் விதத்தில் திண்ணையில் சீட்டு விளையாடும் உங்கள் தாத்தாவே என் கண்ணுக்குத் தெரிகிறார் 🙂

 3. ரெங்கசுப்ரமணி February 11, 2013 at 1:23 PM Reply


  நாக்கை பொசுக்கும் சூட்டில் தரப்பட்ட காபியை, என்ன சுவையிலிருக்கின்றது என்று கூட தெரிந்து கொள்ள முடியாமல் குடித்துக் கொண்டே படித்தால், கும்பகோணம் டிகிரி காப்பியாம். வயித்தெரிச்சல் . பால் மற்றும் டிக்காக்‌ஷனை விட முக்கியமானது சர்க்கரை. அனைத்து ஹோட்டல்களிலும் சரவண பவனிலும் சில சமயம் சர்க்கரையை அள்ளி கொட்டி விடுகின்றார்கள். நல்ல காபி என்றால் சர்க்கரை இல்லாமல் கூட பிரமாதமாக இருக்க வேண்டும்.

  நல்ல காபி கொஞ்சமாகத்தான் இருக்க வேண்டும். ஒரு சிறிய குட்டி டம்ளரில். குடித்த உடன் ஒரு சுறுசுறுப்பு வர வேண்டும். குறைந்தது அடுத்த பதினைந்து நிமிடங்களுக்காவது காப்பியின் கசப்பு நாக்கில் இருக்க வேண்டும். எங்கு போவது அதற்கு. காப்பி குடித்துவிட்டு அடுத்து பாக்கு, பீடா போடுவது போன்ற தீய பழக்கங்கள் உள்ளவர்களை காப்பி மாதா சபிக்கட்டும்.

  வீட்டு காப்பிக்கு பல கன்ஸ்ட்ரெய்ண்ட். காலையில் எழும் போதே “டங் டங்” என்று சத்தம் கேட்டால், அன்றைய காப்பி கப்பி என்று அறிக. முந்தைய நாள் பால் மிச்சமிருந்தால் லேட்டாக எழுந்திருக்கவும், பழைய பால் காப்பி கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கும். மிகவும் லேட்டாக எழுந்தால் புளித்த காப்பி நல்ல வித்தியாசமாக இருக்கும். அனைத்தையும் விட பேசாமல் காப்பி குடிக்காமல் இருப்பதே மேல். உங்களை விட நான் போடும் காபி பிரமாதம் என்று சொன்னால், அம்மாவும் மனைவியும் நம்ப மறுக்கின்றார்கள். சாம்பிள் காட்டி தினமும் காபி போடும் வேலையில் இறங்க தயாராக இல்லை.

  • BaalHanuman February 12, 2013 at 12:50 AM Reply

   அனுபவித்து எழுதியுள்ளீர்கள், ரெங்கசுப்ரமணி… அபாரம்!!

 4. Raju February 16, 2013 at 5:21 AM Reply

  ஸ்ரீ. ஸ்ரீனிவாசன்,

  கும்மோணம் டிகிரி காபி பதிவு படித்தவுடன் ”எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறந்தன ”

  தஞ்சையில் (தாய் மாமன் வீட்டில்)பிறந்து வளர்ந்த எனக்கும் இந்த”டிகிரி காபி ” பைத்தியம் உண்டு .

  விடியற்காலை குமுட்டி பத்த வெச்சு தண்ணீர் சுட்டவுடன் ”சர்ர்ர் ”என்ற சத்தத்துடன் காசுக்கடை முனையில்(வெங்கடேச பெருமாள் கோயில் அருகில்) இருக்கும் ”மணீஸ் காபி ”யில் வாங்கிய பொடியில் நீரை ஊற்றும் போது கிளம்பும் நறுமணம் அபாரம் .குமுட்டியின் புகை மற்றும் அந்தகால (1960s ) குண்டு பல்பு லிருந்து வரும் மஞ்சள் வெளிச்சம் எல்லாம் இன்னும் என்னால் மறக்க முடியவில்லை .Etched in my memory .

  பின்னர் புனே சென்று படித்த நாட்களில் அம்மா காபி என்ற பேரில் ஒரு கழனி தண்ணீர் கொடுப்பார்.அவளை சொல்லி குத்தம் இல்லை .

  கல்லூரி மேற்படிப்பு முடிந்து மீண்டும் சென்னை வந்து CA படிக்க ஆரம்பித்தவுடன் ‘டிகிரி காபி “”பைத்தியம் மீண்டும் தொற்றிக்கொண்டது .

  CA முடித்து வேலைக்கு போக ஆரம்பத்திலேயே அம்மாவின் ‘காபி கடையை” நான் ஆக்கிரமித்து விட்டேன் .கல்யாணம் ஆகி இந்தியாவில்இருந்த காலங்களில் நான் தான் காபி incharge .துபாய் வந்த பிறகும் நல்ல காபிக்கு குறைவே இல்லை. கும்மோணம் ”’மோகன் காபி”போன் செய்து ,அவர்களது icici வங்கி கணக்கில் பணம் செலுத்திவிட்டால் சொன்ன முகவரிக்கு காபிபொடி அனுப்பப்படும் .நண்பர்கள் குழாமிலிருந்து யாரவது ”12B ”பிடித்து பட்டிணபாக்கம் போவது போல்(சென்னைக்கு) போய் வந்து கொண்டு இருப்பார்கள் எல்லோருக்கும் இருக்கும் ஸ்டான்டிங் instruction வரும்போது 500gm *6 pieces மோகன் காபி அல்லது சென்னை brand காபி பொடி கொண்டு வரணும் .அப்புறம் என்ன ,காபிகடை அமோஹமாக நடக்கிறது .

  Leeds லே MS முடித்து விட்டு துபாய் வழியே சென்னை திரும்பிய மகன் சொன்னான் :Dad ,make my coffee real dark -as dark as my heart என்றான் .ஸ்தம்பித்து நின்றேன் .மனைவி சொன்னாள் :”உங்கள் பிள்ளை ,உங்களை போல் “”.decogtion லே பால் கலக்குகிறான் ”.

  நான் நினைத்து கொண்டேன் ….”அவரையை விதைத்தால் துவரையா முளைக்கும் ”என்று

  ராஜூ -துபை

  • BaalHanuman February 17, 2013 at 2:19 AM Reply

   அன்புள்ள ராஜூ,

   உங்கள் காபி அனுபவமே ஒரு கவிதை போல் இருக்கிறதே 🙂

 5. Raju February 16, 2013 at 7:04 AM Reply

  ஸ்ரீ .ஸ்ரீனிவாசன்

  தஞ்சை எல்லையம்மன் தெருவில் இருக்கும் “காபி பாலஸ் ” 1985 வரை (if my memory serves me right ) ”சரவண பவன் ” என்ற பெயரில் இயங்கிக்கொண்டு இருந்தது . பள்ளி நாட்களில் (St .Peters ) தாய்மாமன் தரும் சில்லறை காசுகளை சேகரித்து சரவண பவன் விஜயம் அடிக்கடி செய்வேன்.

  அந்த கால கட்டத்தில் பந்தி பாய் போட்டு கீழே அமர்ந்து சாப்பிட இடம் இருந்து .சுட சுட இட்லியும் ,தோசையும்,சட்னி மற்றும் சாம்பார் உடன் சின்ன வாழை இலையில் பரிமாறுவார்கள் .injection பாட்டில் லே நல்ல எண்ணை கிடைக்கும் (extra charge ) மிளகாய் பொடியுடன் குழைத்து கொள்ள .

  வீட்டுக்கு வந்து உறவினர் மற்றும் விருந்தினர்கள் ”ராஜூ ,எங்கே போலாம் ” என்று கேட்டால் ,நான் தவறாமல் சொல்லும் விடை ”சரவண பவன் லே டிபன் சாப்பிட்டு விட்டு நியூ டவர் லே (New Tower -பிற் காலத்தில் jupiter ) படம் பார்க்கலாம் ” என்று தான் இருக்கும் .

  ராஜு-துபை

  • BaalHanuman February 17, 2013 at 2:16 AM Reply

   அன்புள்ள ராஜூ,

   நீங்கள் அருமையாக வர்ணித்துள்ள சரவண பவன் அனுபவம் அடியேனுக்கும் உண்டு. கும்பகோணம் ‘பசும்பால்-பஞ்சாமி-அய்யர்-கடையில்…

   பலகையில் கீழே அமர்ந்து சுடச் சுட இட்லி, நெய் மாவு தோசை, நெய் ரவா தோசை – .injection பாட்டில் லே நல்ல எண்ணை கிடைக்கும் (extra charge ) மிளகாய் பொடியுடன் குழைத்து கொள்ள . கடைசியாக அப்பாவின் காபியிலிருந்து ஒரு சின்ன டோஸ்.

   இனிமையான அந்த நாட்கள் – நினைத்து அசை போடத் தான் முடியும்.

   இப்போது அப்பாவும் இல்லை. அந்த பஞ்சாமி அய்யர்-கடையும் இல்லை 😦

 6. Raju-dubai February 21, 2013 at 4:53 AM Reply

  Dear Uppliji,

  இப்போது அப்பாவும் இல்லை. அந்த பஞ்சாமி அய்யர்-கடையும் இல்லை

  Very Sad…very poignant.

  raju-Dubai

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s