பத்திரிகை ஓவியங்கள் – இரா.முருகன்


மழையாக இருந்தாலும் இருபது பேர் எப்படியோ வந்து சேர்ந்திருந்த கூட்டம். மணியம் செல்வன் சாஸ்திரத்துக்கு நாலு வார்த்தை பாரம்பரிய சித்திரக் கலை, ரவிவர்மா, கோட்டோவியம், சித்தன்ன வாசல் என்று ஒப்பித்து விட்டு ‘அவை நிறைந்து சாவகாசமாக ஒரு கூட்டம் போடுங்கள், வந்து நிறையப் பேசறேன்’ என தப்பித்திருக்கலாம். வந்திருந்த இருபது பேரையே இருநூறு பேராகப் பாவித்து கிட்டத்தட்ட ரெண்டரை மணி நேரம் உற்சாகத்தோடு சொற்பொழிந்தார் அவர்.

எழுத்தாளர் யாராவது இருபது நிமிடத்துக்கு மேல் பேசினால் முன்னால் உட்கார்ந்து அரை குறையாகக் காதில் வாங்கிக் கொண்டு மொபைலில் மன்மோகன் சிங்கை கிண்டல் செய்து ட்வீட் அனுப்பிக் கொண்டிருக்கலாம்.

ஆனால் ம.செ மொபைலை சட்டைப் பையில் இருந்து எடுக்கவே விடவில்லை. ரெண்டரை மணி நேரம் என்ன, ராத்திரி ரெண்டு வரைக்கும் அவர் பேசினாலும் கேட்கக் கேட்க அலுப்பே தட்டாத பேச்சு. வெறும் பேச்சு மட்டும் இல்லை. லேப்டாப் கம்ப்யூட்டரில் கொண்டு வந்த ஓவியங்களையும் காட்டி நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதால் மனம் தானே ம.செ பொழிந்ததில் லயித்து விட்டது.

மொத்தம் ஐந்து ஓவியர்கள் – மாதவன், எஸ்.ராஜம், சில்பி, கோபுலு, மணியம். அப்புறம் ஆறாவதாக மணியம் செல்வனும். இவர்கள் தான் டாபிக்.

ஒற்றைப் பார்வையில் இவர்கள் எல்லோரும் ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் தொடர்ந்தோ தீபாவளி, பொங்கல் மலர்களில் மட்டுமோ படம் வரைந்த ஓவியர்கள். ‘முப்பது பைசா விலைக்கு விற்கிற பத்திரிகைக்காக’ உசிரைக் கொடுத்து நுணுக்கமாக மரபு ஓவியம் வரைவதில் வல்லவர்கள். அதாவது அறுபதுகளில். இப்போதென்றால் பத்து ரூபாய்க்கு விற்கிற பத்திரிகைகள்.

இலக்கியவாதி எழுத்தாளர்கள் ஜனரஞ்சக எழுத்தாளர்களோடு ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டால் அனாசாரம் என்று வெகு சமீப காலம் வரை நினைத்தது உண்டு. அது போல், ஆர்ட் காலரிகளில் ஓவியக் கண்காட்சி நடத்தி பத்து லட்சம் இருபது லட்சம் விலைக்கு நவீன பாணி ஓவியங்களை விற்று லண்டன் – நியுயார்க் பறக்கிற குறுந்தாடி ஓவியப் பிரபலங்கள் இந்த ஜனரஞ்சக ஓவியர்களை ஒரு பொருட்டாகக் கருதுவது இல்லை. ஓவிய விமர்சகர்ளும் அப்படியே.

ஆனாலும் முப்பது பைசா ஓவியர்களுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது என்பது உண்மை. கதைக்குப் படம் போட்டும், கார்ட்டூன் போட்டும் சராசரி வாசகர்களின் மனதில் இடம் பிடித்தவர்கள் இவர்கள். ‘தமிழ் சரியா படிக்கத் தெரியாது. பத்திரிகையிலே ஜோக் மட்டும் பார்ப்பேன்’ என்று மேட்டுக்குடி தமிழர்கள் போன நூற்றாண்டு முழுக்க ஆடம்பரமாக அறிவித்தது உண்டு. இப்போது நடுத்தர வர்க்கமும் அதே போல் பேச ஆரம்பித்து விட்டது. அவர்களுக்கும் பரிச்சயமான பெயர்கள் மேலே குறிப்பிட்ட எல்லோரும்.

007fig-2

(மேலே உள்ள ஓவியம் – நன்றி சொல்வனம்)

மாதவன் பத்திரிகை ஓவியத்தோடு கூட பிரதானமாக, சினிமா கட் அவுட்டும் பேனரும் வரைந்து பிரபலமான ஓவியர். ஆனாலும், இருபது பேர் வந்த கூட்டத்தில் பத்து பேருக்கு அவரைத் தெரியவில்லை. அறிமுகப்படுத்துகிற வேலையை கச்சிதமாகச் செய்தார் ம.செ. அழுத்தமான நிறங்கள், அழுத்தமான கோடுகள். ஆற்றில் பளிங்கு நீரையும், மேலே நீல வானத்தையும் வண்ணமும் தூரிகையின் துடிப்பும் வெளிப்படுத்த அவர் வரைந்த பத்திரிகை ஓவியங்கள் காலண்டர் ஆர்ட் என்று ரெண்டே வார்த்தையில் தள்ளி விடலாம். நஷ்டம் நமக்குத்தான்.

fig_2a

(மேலே உள்ள ஓவியம் – நன்றி சொல்வனம்)

பேனர் ஆர்ட்டிஸ்களின் கலை வெளிப்பாட்டுச் சூழல் மற்ற கலைஞர்களுடையதை விடக் கஷ்டமானது. பரபரப்பான வீதியில் சாரம் கட்டி உச்சியில் உட்கார்ந்து, எப்படியோ பிரஷ்ஷயும் வண்ணங்களையும் அங்கே பக்கத்தில் இடுக்கி வைத்துக் கொண்டு, உள்ளங்கையில் வைத்திருக்கிற புகைப்படத்தைப் பார்த்து அதைப் பல மடங்கு பிரம்மாண்டமாக அச்சு அசலாக அதேபடிக்கு வரைய வேண்டும். மாதவன் சாரம் கட்டி வரைந்தாரா தெரியவில்லை. ஜெமினியின் இந்தி ‘சந்திரலேகா’வுக்காக அவர் வரைந்து கொடுத்து பம்பாய்க்கு எடுத்துப் போன பேனரில் கதாநாயகி ராஜகுமாரியின் லோலாக்கு மட்டும் ஆறு அடி உயரம் என்றால் பேனரின் நீள அகலம் மற்றும் உயரத்தைக் கணக்குப் போட்டுக் கொள்ளலாம்.

(ஓவியர் எஸ்.ராஜம் புகைப்படம் – நன்றி சுஜாதா தேசிகன்)

எஸ்.ராஜத்தின் பாட்டு மாதிரி ஓவியமும் அடக்கமான அழகு கொண்டது. மாதவன் போல் பளிச்சென்ற நிறங்கள் கிடையாது. கண்ணுக்கு இதமான வண்ணங்கள் பெரும்பாலும். வண்ணங்களோடு மனதில் நிற்பது அவர் பிடிவாதமாகக் கடைப்பிடித்த அஜந்தா ஓவியப் பாணி. சாவி பத்திரிகை மலரில் படம் போட கொஞ்சம் பாணியை மாற்றுங்கள் என்று கேட்டபோது மறுத்து விட்டாராம் இந்த ஓவிய-இசை மேதை. பெரும்பாலும் தீபாவளி மலர்களிலேயே இவர் திறமை வெளிப்பட்டது என்று தோன்றுகிறது. கிட்டத்தட்ட அறுபது தீபாவளிகள்!

ராஜம் இன்னொரு புதுமையும் செய்திருக்கிறார். அமரரான காஞ்சி மூத்த சங்கராச்சாரிய சுவாமிகள், மடத்தில் சிவபூஜை செய்கிற ஓவியத்தை கல்கி தீபாவளி மலருக்காக வரைய ஆரம்பித்தவர் தன் பாணியில் பூஜையில் பிரத்யட்சமான மூன்று தேவியரையும் வரைந்திருக்கிறார். விண்ணுலகத் தேவதைகளை சுலபமாக வரைந்தவர் மண்ணுலக சங்கராச்சாரிய சுவாமிகளின் உருவத்தை அதே பாணியில் வரையத் தயங்கி, மணியம் செல்வத்திடம் ஓவியத்தைக் கொடுத்து பூர்த்தி செய்யச் சொல்லி இருக்கிறார். தலைமுறை இடைவெளி கடந்த இந்த நட்பைச் சொன்னபோது ம.செ நெகிழ்ந்துதான் போனார்.

(சில்பி வரைந்த சுசீந்திரம் அனுமன் – நன்றி சக்தி விகடன்)

ஓவியர் சில்பி தத்ரூபம் என்பதின் மறு பெயர். அவருடைய மயிலைக் கற்பகாம்பாள் ஓவியத்தைக் காட்டினார் ம.செ. கோவில் கர்ப்பகிருஹத்தில் போய் நின்றால் கூட இந்த அற்புத தரிசனம் கிடைக்காது என்று பக்தர்களைக் கன்னத்தில் போட்டுக் கொள்ளவைக்கும் நேர்த்தி. இருக்காதா பின்னே? காலையில் கோவிலுக்குள் போய் வரைய ஆரம்பித்து, உச்சி காலம் முடிந்து கோவிலைப் பூட்டும்போது அவரை உள்ளேயே வைத்துப் பூட்டிப் போய், சாயந்திர பூஜைக்கு திரும்பத் திறந்தபோது முடிந்த ஓவியமாம் அது. முடித்தாலும் திருப்தி இல்லாமல், கற்பகாம்பாளுக்கு அணிவிக்கும் எல்லா நகைகளையும் ஒரு தடவை வாங்கிப் பார்த்து நுணுக்கமான திருத்தங்கள் செய்து தான் சில்பி ஓவியத்தை முடித்தாராம். மரபு ஓவியத்தில் ஒரு மைல்கல் அவர்.

கோபுலுவைப் பற்றித் தனியாகச் சொல்ல ஏதுமில்லை. அந்தப் பெயரைச் சொன்னாலே நமக்கு ஜெயகாந்தனின் சாரங்கனும், ஹென்றியும், கொத்தமங்கலம் சுப்புவின் சிக்கல் சண்முகசுந்தரமும் தில்லானா மோகனாம்பாளும், வாஷிங்டனில் திருமணக் காட்சிகளும் இன்னும் ஏகமான கோட்டோவியங்களும், வண்ண ஓவியங்களும் நினைவில் வரும். முக்கியமாக அந்தக்கால ஆனந்த விகடன் அட்டைப்பட சிரிப்புத் துணுக்குகள்.

காளிமார்க் பானங்களின் அந்நாளைய விற்பனைக்கு கோபுலு டிசைன் செய்து தந்த விளம்பரங்கள் பெரிதும் உதவியுள்ளன. ஒரு சாம்பிள் இங்கே.

மேலே உள்ள கோபுலு ஓவியங்கள் – நன்றி ஆம்னிபஸ்

gopulu

கோபுலு வரைந்த ஆனந்த விகடன் அட்டைப்பட நகைச்சுவை ஓவியத்தை ம.செ காட்டினார். மனதிலேயே நிற்கிறது. 1940-களின் நடுத்தர வர்க்க வீடு. வீட்டு வாண்டுகளுக்கு ‘மாசாந்திர விளக்கெண்ணெய்’ கொடுக்கும் வைபவம். விளக்கெண்ணெய் குடித்த மூன்று குழந்தைகள் விளக்கெண்ணெய் குடித்த மாதிரி மூஞ்சியை வைத்துக் கொண்டு நிற்க, மாட்டேன் என்று அடம் பிடிக்கும் பையனை அப்பா விசிறிக் கட்டையைக் காட்டி மிரட்டுகிறார். பக்கத்தில் அன்பே உருவான பாட்டி சர்க்கரை டப்பாவோடு நிற்கிறாள். வீட்டுக்கு உள்ளே இன்னொரு அறை. ரெண்டு டைமன்ஷன் படத்தில் எப்படி இந்த மேதை இவ்வளவு ஆழத்தைக் கொண்டு வந்தார்?நம்மால் அந்த உள்ளறையை உணர முடிகிறது. இனி படத்தில் வரும் மறக்க முடியாத பாத்திரம் – அடுத்து விளக்கெண்ணெய் குடிக்க வரிசையில் நிற்கும் இன்னொரு குட்டிப் பையன். அவன் முகத்தில் தெரியும் கலவரத்தை கோபுலு தவிர வேறே யாராலும் சித்தரிக்க முடியாது.

கோபுலு இன்னும் நம்மிடையே இருக்கிறார் என்பது தமிழ் கூறும் நல்லுலகத்தின் பெரும் பேறு.

உங்கள் பார்வைக்கு மேலும் சில கோபுலு ஜோக்ஸ் இங்கே…

[DSC_1523.JPG]

(நன்றி – நண்பர் ரெங்கசுப்ரமணி)

https://docs.google.com/file/d/0B6l1aeYka7uwVzBWellpR1FKM1E/edit?pli=1

சேர்க்கச் சேர்க்க சிற்பம், எடுக்க எடுக்க ஓவியம்’ என்றார் மணியம் செல்வன். சிற்பத்தில் இம்மி இடம் கூட விடாமல் நுணுக்கமாகச் செதுக்கும்போது கிடைக்கும் காட்சி அனுபவத்துக்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை ஓவியத்தில் அங்கங்கே வெறும் வெளியை அப்படியே விட்டு கற்பனையில் நிரப்ப வைப்பது. மணியம் இதில் வல்லவர் என்று ம.செ காட்டிய அவருடைய ஓவியங்கள் கூறின.

கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைக் கூட மறந்து விடலாம். ஆனால் மணியன் வரைந்த பழுவேட்டரையரையும் நந்தினியையும் மறக்க முடியுமா என்ன? அவர் மேல் கல்கிக்கு விசேஷப் பிரியம் இருந்திருக்கிறது. ஓவியக் கல்லூரியில் டிப்ளமா முடித்து விட்டு ஆறு மாதம் கழித்து கல்கி பத்திரிகையில் வேலைக்கு சேர்கிறேன் என்று மணியம் சொன்னபோது கல்கி கேட்டிருக்கிறார் – பத்திரிகையில் நீ வேலை பார்க்கப் போறியா, டிப்ளமா வேலை பார்க்கப் போறதா? படிப்பை முடிக்காமலே வேலைக்குச் சேர்ந்த மணியம் அதை ஒரு குறையாகவே கருதினாலும் கல்கி பத்திரிகை வேலையை கடைசி வரை ரசித்தே செய்திருக்கிறார். பத்திரிகைப் பெயர், விலை முப்பது காசு முதற்கொண்டு அட்டைப்பட ஓவியத்தோடு கூட வரைந்து எழுத வேண்டியிருந்த காலம் அது.

மேலே சொல்லிய எல்லா ஓவியர்களின் கலைச் சிறப்பையும் உள்வாங்கிக் கொண்டு அடுத்த தலைமுறை ஓவியரான மணியம் செல்வனின் படைப்புகள் மிளிர்கிறதை அவர் சொல்லாமலேயே உணர்ந்து கொள்ளலாம். சிவராத்திரி நேரத்தில் சிவபிரானை கருப்பு வண்ணத்தில் ஒரு நிழல் போல் தான் வரைந்த ஓவியத்தை ம.செ திரையில் காட்டினார். சிவனுக்கு முக்கண்ணோ, மூக்கோ, செவியோ வாயோ எதுவுமில்லை. ஆனாலும் கற்பனையில் நிரப்பிக் கொள்ள சராசரி பத்திரிகை வாசகன் எந்த கஷ்டமும் படவில்லை.

ஆனாலும் அந்த ஓவியத்துக்கு உள்ளே ஓவியருக்கே தெரியாத ஒரு ரகசியம் இருக்கிறதாம். இதை மணியம் செல்வனுக்குச் சொன்னவரும் ஒரு வாசகரே.

படத்தைத் திருப்பிப் பாருங்க சார்’ என்றாராம் வாசகர் ஓவியரிடத்தில்.

திரையில் வந்த தன் சிவராத்திரி சிவன் ஓவியத்தைத் தலைகீழாகத் திருப்பிக் காட்டினார் மணியம் செல்வன். அங்கே துல்லியமாக ஒரு வினாயகர் தெரிந்தார். மணியம் செல்வனின் டாவின்சி கோட் இது என்று சந்தேகப் படுகிறவர்கள் அவருடைய மற்ற ஓவியங்களையும் தலைகீழாகப் பார்க்கவோ யோகாசனம் செய்தபடி பார்க்கவோ செய்யும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

(எழுதியது – 2010 -திண்ணை)

மேலே குறிப்பிட்டுள்ள ஓவியர்கள் தவிர மற்றும் சில பிரபல ஓவியர்களின் படைப்புகளை கீழ்க்காணும் இணைப்பு மூலம் நீங்கள் காணலாம்…

http://www.indian-heritage.org/painting/illustrators/artists.html

தொடர்புடைய பதிவு:

வானர வைபவம் – கோபுலு ஓவியங்கள்

கோபுலு – கோடுகளால் ஒரு வாழ்க்கை: எஸ்.சந்திரமௌலி

பொங்கல் வாழ்த்தும், ஓவியர் கே.மாதவனும்

sujatha_portrait

கலர்க் கனவுகள் – சுஜாதா தேசிகன் 

15 thoughts on “பத்திரிகை ஓவியங்கள் – இரா.முருகன்

 1. R. Jagannathan December 29, 2012 at 6:11 PM Reply

  ஒரு தேர்ந்த எழுத்தாளரான இரா. முருகன் அந்த ஓவியர்களை கண் முன் கொண்டுவந்து விட்டார். மணியம் செல்வன் மிக மிக மதிக்கத்தகுந்த ஓவியர். திரு ராஜம் அவர்களைப் பற்றிய பாராவுக்குப் பக்கத்தில் உள்ள, மகா பெரியவாள் பூஜை செய்வது போல் இருக்கும் அம்பாள் படத்தில் உள்ள பெரியவாள் மணியம் செல்வன் வரைந்ததா, போட்டோவா? (கட்டுரையில் ராஜம் வரைந்த சிவ பூஜை – 3 தேவிகள் படத்தில் தான் மகா பெரியவாளை ம. செ . வரைந்ததாகச் சொல்கிறார். அதனால் சந்தேகம்.) அது ஓவியம் என்றால் என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள் ம. செ . வுக்கும், பெரியவாளுக்கும்.

  கோபுலு படத்தில் உள் அறையும் பேப்பர் படிப்பவரும் தெரியவில்லை, தாத்தாவின் காலைக் கட்டிக்கொண்டு ஒளிந்து கொள்ளும் குட்டிப் பெண்ணும் சூப்பர்.
  (விசிறியால் விரட்டுவது அப்பா, அம்மா இல்லை!)

  திரு மாதவன் மற்றும் திரு ராஜம் அவர்களின் படங்களை நான் பார்த்தது இல்லை.

  இப்போதும் புஸ்தகங்களில் மாடர்ன் ஓவியர்கள் வரையும் படங்களுடன் கதைகள் வந்தால் எனக்கு கொஞ்சம் ஏன் நிறையவே அலர்ஜி! விகடன் தானே புயலுக்குப் பின் ஒரு ஓவியக் கண்காட்சி நடத்தி அதன் வருமானத்தை பாதிக்கப் பட்டவர்களின் நலனுக்கு உபயோகப் படுத்தியது, அந்தக் கண்காட்சியில் மாடர்ன் ஓவியர்கள் படங்கள் 50,000 / லக்ஷம் என்றும் , ம. செ . போன்றவர்கள் படம் குறைந்த விலையிலும் இருந்ததைப பார்த்து ரொம்ப வருத்தமாயிருந்தது.

  இரா. முருகனுக்கும் ம. செ . வுக்கும் இங்கு பப்ளிஷ் செய்த உங்களுக்கும் நன்றி.

  -ஜெ

  • BaalHanuman December 30, 2012 at 1:28 AM Reply

   அன்புள்ள R.J,

   இங்கே நீங்கள் பார்க்கும் மஹா பெரியவாள் பூஜை செய்யும் படம் ராஜமோ, ம.செ. வோ வரைந்த படம் அல்ல.

   விசிறியால் விரட்டுவது அப்பாதான். அம்மா அல்ல. அதை இப்போது சரி செய்து விட்டேன். அப்பா இங்கே இருப்பதால் அவர் அங்கே உள் அறையில் பேப்பர் படித்துக் கொண்டு இருக்க முடியாது 🙂

   எனக்கு இரா.முருகனின் இந்தக் கட்டுரை மிகவும் பிடித்ததால்தான் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். அதை ரசித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

 2. b.nagamani December 29, 2012 at 8:08 PM Reply

  Thanks a lot. I am ardent fan of Gopulu and Maniyan Selvam from my childhood, but never took efforts to know or appreciate them. This post has given me a chance to show my appreciation to both of them and others mentioned. Can you publish the drawing of Lord Sivaperuman by Maniyan Selvam to see that uniqueness?

  • BaalHanuman December 30, 2012 at 1:21 AM Reply

   அன்புள்ள நாகமணி,

   தங்கள் வருகைக்கும், ஆர்வத்திற்கும் மிக்க நன்றி. இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அந்த சிவபெருமான் படத்தை ஓவியர் மணியம் செல்வன் பகிர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.

 3. பாரதி மணி December 30, 2012 at 6:15 AM Reply

  ஆஹா……அருமையான கட்டுரை. இரா. முருகனுக்கும் பால்ஹனுமான் ஸ்ரீனிவாசனுக்கும் நன்றியோ….நன்றி!

 4. ரெங்கசுப்ரமணி December 30, 2012 at 10:04 AM Reply

  என்னிடம் உள்ள பொ.செ முதல் பாகம் மதுரையில் வாங்கியது. பழைய புத்தகக்கடையில், கல்கியில் வந்த பக்கங்களை தொகுத்து வைத்திருந்தார். ஒரு பகுதி மட்டும் மணியம் வரைந்தது. மற்றவை அனைத்தும் பத்மவாசன் வரைந்தது. அதில் ஆழ்வார்க்கடியான் படம் பிரமாதமாக இருக்கும்.

  கோபுலுவின் ஹென்றி, எனக்கு துப்பறியும் சாம்புவை கொஞ்சம் நினைவுபடுத்து. அதுவும் பழைய புத்தக கடையில் கிடைத்தது. அவரின் ஜோக் ஓவியங்கள், அந்த முக பாவங்கள். அவருக்கு பின் மதனுக்கு மட்டும்தான் அது வாய்த்தது. இப்போது வரையும் ஹரனின் பாவங்கள் சகிக்கவில்லை.

  மணியம் செல்வத்தின் ஓவியங்களை நன்கு கவனித்தது கள்ளிக்காட்டு இதிகாசத்தில். முதல் அத்தியாயத்தில் தேவர் நல்ல கிழவனாராக இருப்பார். கதையை கொஞ்சம் படித்து விட்டு அவருக்கு கொஞ்சம் இளமையை ஏற்றி விட்டார். கிராமத்து மனிதர்களை தத்ரூபமாக கொண்டு வந்திருந்தார். அப்புழுதிக் காட்டுடன்.

  இன்னும் சிலர் மாருதி, எப்படித்தான் இவர் பெண்களுக்கு மாடல் பிடிப்பாரோ, ஜெ, அப்புசாமி பாட்டி (இருவரும் ஒன்றுதான்), கவர்ச்சிகரமான பெண்கள். குமுதத்தின் ஆஸ்தானம்

 5. vathsala December 30, 2012 at 3:48 PM Reply

  Each every one is gem.Particularly,i am an ardent fan of Sri.Shilpi&Sri.Gopulu.In old Ananda Vikatan books,you should see Bala krishna inUmmidi Bangaru Chetti Jewellary advertisement(by Sri.Gopulu)with his twinkling eyes and mesmerising smile(kumin sirippu).Simply outstanding!Who can forget his drawings in’Mr.Vedantham and Srimaan Sudharsanam’ . We can see clearly the ‘jeeva kalai’ in his drawings. A great man indeed!

  • BaalHanuman December 31, 2012 at 6:20 PM Reply

   நன்றி வத்சலா. சில்பி மற்றும் கோபுலுவின் ஜீவ களை ததும்பும் ஓவியங்களுக்கு மனதை பறி கொடுத்த பல பேர்களில் நானும் ஒருவன்.

   காஞ்சி மஹா பெரியவர் இவர்கள் இருவரையும் பற்றி ஒரு முறை குறிப்பிட்டார்.

   “கோபுலு, சில்பி இருவருக்கும் மறுபிறவியே கிடையாது“

   இதை விட இந்த மேதைகளுக்கு வேறு ஆசீர்வாதம் வேண்டுமா என்ன ?

 6. vidya (@kalkirasikai) December 31, 2012 at 1:58 PM Reply

  அருமையான பதிவு. தமிழ்ப் பத்திரிகைகளில் இப்போது கதைகள் குறைந்தது போலவே ஓவியர்களுக்கான ரசிக வட்டமும் காணாமல் போய் விட்டது. 80களை நினைத்து ஏங்கச் செய்கிற எத்தனையோ விஷயங்களில் ஒன்று பத்திரிகை ஓவியங்கள். சுஜாதாவின் ஸ்டைலான எழுத்துகளுக்காகவே படைக்கப்பட்டது போன்ற ஜெ…யின் பாணி, குடும்பப் பாங்கான கதைகளுக்கு மாருதி, ஆசாரமான சீரியஸ் முகங்களுக்கு மாயா…. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அதிலும் மசெ என் மனங்கவர்ந்த ஓவியர்களில் டாப். சிவகாமியின் சபதம் 1990-92ல் கல்கியில் வந்த போது கல்கியின் காவிய எழுத்துகளுக்குச் சற்றும் சளைக்காமல் தமது தூரிகையால் பக்கவாத்தியம் வாசித்தவர் மசெ. மஹேந்திரவர்மரின் கம்பீரம் இன்னும் கண்களுக்குள் நிற்கிறது.அவரது சிவகாமியையும் மாமல்லனையும் (ரதி, சுகர் உட்பட) மறக்கவே முடியாது. நன்றி பால் ஹனுமான். இது போன்ற நினைவுகளை அசைபோட மேடை ஏற்படுத்தித் தரவென்றே எங்கிருந்துதான் பதிவுகளைக் கண்டுபிடிக்கிறீர்களோ! HAPPY 2013! புத்தாண்டிலும் அசத்தல் பதிவுகள் தொடரட்டும்!

  • BaalHanuman December 31, 2012 at 6:15 PM Reply

   நன்றி வித்யா. மிக அழகாகக் கூறியிருக்கிறீர்கள். உங்கள் பின்னூட்டத்தையே ஒரு தனிப் பதிவாக வெளியிடலாம் போலிருக்கிறதே 🙂

   நீங்களோ கல்கி ரசிகை. ஒரு கல்கி பக்தருடன் (கடுகு சார்) சற்று நேரத்துக்கு முன் தொலை பேசிக்கொண்டிருந்தேன். கல்கி மேல் உள்ள அபார பக்தி காரணமாக தன் ஒரே மகளுக்கு ஆனந்தி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தவர் அவர். காடாறு மாதம் நாடாறு மாதம் என்பது போல், சென்னையில் ஆறு மாதம், இங்கே அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் மகள், மாப்பிள்ளை, பேத்தி அருந்ததி இவர்களுடன் ஆறு மாதம் என்று சந்தோஷமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார் இந்த 80 வயது இளைஞர் 🙂 அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் பாவம் நீங்கள். அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் 🙂

   உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றி…

 7. vidya (@kalkirasikai) January 1, 2013 at 2:02 AM Reply

  //அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் பாவம் நீங்கள். அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்//
  இல்லை பால் ஹனுமான். கல்கி அல்லது அவரது ரசிகர்கள் பற்றி நான் எழுத/ பேச ஆரம்பித்தால் மற்றவர்கள் நிலை திண்டாட்டமாகி விடும். கடுகு அவர்கள் கல்கியின் புனைப் பெயரான அகஸ்தியனைத் தாமும் சூடிக் கொண்டு தான் தொச்சு கதைகளை எழுதினார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கமலா, தொச்சு கதைகளை ரசிக்காமல் தீபாவளி மலர் முழுமையாகாது. உட் ஹவுஸின் UKRIIDGE கதைகள் பாணியில் உருவாக்கப்பட்ட தமிழ்ப் பாத்திரம் தொச்சு.

 8. கடுகு January 1, 2013 at 2:10 AM Reply


  படித்தேன்..

  கடைசி பின்னூட்டத்தில் என்னைப் பற்றியும் எழுதி இருக்கிறீர்கள். அவசியம் இல்லை. இருந்தாலும் சந்தோஷமாக இருக்கிறது.

  நீங்கள் எங்கோ இருந்தாலும் உங்கள் மனம் இங்குதான் தாவி வந்து விடுகிறது.

  பி எஸ் ஆர்

 9. E.Bhu.GnaanaPragaasan February 3, 2013 at 9:49 AM Reply

  அற்புதமான கட்டுரை! நன்றி!

 10. sharavathi February 10, 2013 at 12:16 PM Reply

  why aren’t there any details about artist chitalekha (narayanasawmy).. a renowned tamil artist.. and a good friend of gopulu n silpi….

 11. R. Jagannathan February 10, 2013 at 5:11 PM Reply

  இன்று இந்த பதிவை மீண்டும் படித்தேன். ஒரு சந்தேகம்: //சேர்க்கச் சேர்க்க சிற்பம், எடுக்க எடுக்க ஓவியம்’ என்றார் மணியம் செல்வன்.// மாற்றி எழுதப்பட்டிருக்கிறதோ என்று சந்தேகம். – ஜெ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s