ஸ்ரீரங்க பக்தர் சின்ன மௌலானா! — ஔரங்கசீப்


SCM_1

பால் மணம் மறப்பதற்குள் இசை மணத்தைப் பிடித்துக் கொண்டு விட்ட இந்த ஸ்ரீரங்கத்துக்காரருக்கு இசையைத் தவிர வேறெதுவும் தெரியாது.  தாம் உண்டு; தம் இசை உண்டு. ஆறாம் வகுப்பைத் தாண்டாத பள்ளிப்படிப்பு. எல்லாம் அனுபவப் பாடம்தான்.  ஸ்ரீரங்கநாதரிடம் பக்தி கடந்த ஓர்  ஆத்மார்த்தமான சிநேகிதம். அதனால்தான் ஆந்திர மாநிலத்தில் கரவடி என்கிற கிராமத்தில் (ஓங்கூர் மாவட்டம்)முன்னூறு வருஷமாக வாழ்ந்து வந்த வம்சத்தில் முதல் முதலாக இடம் பெயர்ந்த பெயர் இவருக்கு. ஸ்ரீரங்கத்தில் வீடு வாங்கிக் கொண்டு வந்து அமர்ந்தவருக்கு, பிற வித்வான்களைப் போல் சென்னைக்கு இடம் பெயரும் எண்ணம் ஒரு போதும் வந்ததில்லை.  ரங்கநாதரின் அருகில் இருப்பதில் தீராத ஆனந்தம்.
TNR1
ராஜரத்தினம் பிள்ளையைத் தனது மானசீக குருவாகக் கொண்ட சின்ன மௌலானா சாஹிபுக்கு பிள்ளை அவர்களின் இசையின் மேல் ஈடுபாடு வந்ததே ஒரு தனிக் கதை.
சின்ன மௌலானாவின் பரம்பரையே நாகஸ்வர வாசிப்பினால் புகழ் பெற்றது.  அவரது தந்தை காசிம் சாஹிப் அந்நாளில் ஆந்திரா முழுவதும் புகழ் பெற்ற கலைஞர். வயிற்றுக்கு விவசாயம், மனசுக்கு நாகஸ்வரம். அப்பாவிடம் தான் அரிச்சுவடி கற்றார் ஷேக்.
பிறகு நாகஸ்வரத்துக்கென்றே மிகவும் புகழ் பெற்ற சிக்கலூருப்பேட்டைக்குச் சென்று ‘உயர் படிப்பைத்‘ தொடங்கியிருக்கிறார்.  அங்கே இவருக்கு குருவாக அமைந்தவர் ஷேக் ஆதம் சாஹிப்.
தமது பன்னிரண்டாவது வயதில் தனியே சிறு சிறு கச்சேரிகள் வாசிக்கத் தொடங்கியபோது, ஒரு நாள் ரேடியோவில் ஒரு நாகஸ்வரக் கச்சேரியைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது சின்ன மௌலானாவுக்கு.  வாசிக்கப் பட்ட ராகம் தோடி, வாசித்தவர் ராஜரத்தினம் பிள்ளை.  கேட்க வேண்டுமா?  இசையிலேயே கரைந்து கொண்டிருந்த சின்ன மௌலானாவின் மனத்தில் ஒரு கல்லைப் புரட்டி ஊற்றைத் திறந்து விட்டது பிள்ளைவாளின் சங்கீதம்.
TNR2
இது என்ன வாசிப்பு!  இப்படிக் கூட உயிரை உருக்கிப் பொழிய முடியுமா ?  என்று சிலிர்த்துப் போன சின்ன மௌலானா பிறகு தேடித் தேடி ராஜரத்தினம் பிள்ளையின் கிராமபோன் தட்டுக்களைச் சேகரித்துக் கேட்க ஆரம்பித்தார்.
அன்று வரை அவருக்குத் தெரிந்தது ஆந்திர முஸ்லீம் கலைஞர்களின் வாசிப்புப் பாணி மட்டுமே. ராஜரத்தினத்தைக் கேட்ட பிறகு தஞ்சாவூர் பாணி மேல் தனிக் காதல் பிறந்து விட, எப்படியாவது தஞ்சை சென்று அதனைக் கற்றுக் கொண்டு விடத் தணியாத தாகம் ஆர்வம் கொண்டு விட்டார்.
உடனே புறப்பட்டுத் தமிழகம் வந்தவருக்கு குருவாக அமைந்தவர்கள் நாச்சியார்கோவில் ராஜம் – துரைக்கண்ணு சகோதரர்கள்.
இந்தச் சகோதரர்கள் வாசித்தது, கடைந்தெடுத்த ராஜரத்தினம் பிள்ளை பாணியில். கொஞ்சம் அசந்து, கண்ணை மூடிக் கொண்டு விட்டால் வாசிப்பது இவர்களா ? பிள்ளைவாளேதானா ?  என்று சந்தேகம் வந்து விடுமாம்.
TNR3
ராஜரத்தினம் பிள்ளையின் பாணியைக் கற்க இவர்களை விடச் சிறந்த குரு அமைவதற்கில்லை என்று நம்பி, சேர்ந்து விட்டார் ஷேக்.
வருஷத்தில் மூன்று மாதம் குருகுலவாசம்.  பிறகு கரவடிக்குப் போய் கற்றுக் கொண்டதைப் பயிற்சி செய்து மெருகேற்றிக் கொள்வது.  மறுபடி மூன்று மாதம் குருகுலவாசம்.  மறுபடி பயிற்சி. இப்படி தன்னைச் செதுக்கிக் கொண்டார் ஷேக்.
1956-ம் வருடம். சேலம் மாரியம்மன் கோவிலில் முதல்-முழு-பெரிய கச்சேரி.
தாம் கற்ற தஞ்சைப் பாணி வாசிப்பை அங்கேதான் அரங்கேற்றினார்.
ராஜரத்தினம் பிள்ளை இறந்து சில வருடங்களே ஆகியிருந்த காலம் அது.  சின்ன மௌலானாவின் வாசிப்பைக் கேட்ட ரசிகர்கள், “பிள்ளை மறையவில்லை” என்று உற்சாகக் குரலெழுப்பி ரசித்தார்களாம்.
அந்தக் கச்சேரியின் அபார வெற்றி, மௌலானாவை முதல் வரிசை வித்வானாக உயர்த்தியது மட்டுமில்லை, முதல்தர பக்தராகவும் மாற்றியது.
சிறு வயதிலிருந்தே ஸ்ரீரங்கநாதர் மேல் இனம் புரியாத பக்தி மௌலானாவுக்கு.  பிறந்து, வளர்ந்து, வாழ்வதோ இஸ்லாம் மதப் பற்று மிக்க குடும்பத்தாருடன்.  இதை எவ்வகையில் சேர்ப்பது என்கிற குழப்பமெல்லாம் அவருக்கு இருக்கவில்லை. அல்லாஹ்வுக்கும் அரங்கனுக்கும் வித்தியாசமேதும் அவருக்குத் தெரியவில்லை. இந்நிலையில் அரங்கனே தன்னை ஸ்ரீரங்கத்துக்கு அழைப்பதாக அவருக்கு அடிக்கடி தோன்ற ஆரம்பித்தது. அதன்பின் எப்படி ஆந்திரத்தில் வசிப்பது ? ஸ்ரீரங்கத்துக்கு வந்து விட்டார்.
SCM_2
இங்கே வந்த பிறகுதான் எனக்கு எல்லா பெருமையும் வந்து சேர்ந்தன”  என்று வானம் பார்த்து விழி மூடி நினைவு கூர்கிறார் ஷேக் சின்னமௌலானா.

அமைதியான ஊர். அரங்கனின் நிழலில், எளிமையான வீடு. முன்புறம் கூரைச் சரிவு. சிலுசிலுக்கும் காற்று.  பழைய கட்டிலில் அமர்ந்திருக்கும் மௌலானா சாஹிப், கதரைத் தவிர வேறெதுவும் உடுத்துவதில்லை.  ஆபரணங்களோ, அசத்தும் அங்கவஸ்திரமோ, சரிகை ஜாலமோ எப்போதும் கிடையாது.  அவரது வாசிப்பைப் போலவேதான் வாழ்க்கையும். எழில் கொஞ்சும் எளிமை.
இசை பற்றிய இவரது ஆராய்ச்சிகள் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றவை. குறிப்பாக நாகஸ்வர வாசிப்பு – சம்பிரதாயம் பற்றிய இவரது லெக்சர் – டெமான்ஸ்ட்ரேஷன்கள்தாம் வட இந்தியர்களுக்கு நாகஸ்வரம் என்றொரு வாத்தியம் உண்டென்பதையும் அதற்கொரு தனி இலக்கணம் உண்டென்பதையும் அறிமுகப்படுத்தியது.  (அங்கெல்லாம் ஷெனாய்தானே ?)
சின்ன மௌலானாவின் மிகப் பெரிய சாதனை, நாகஸ்வரத்தைப் பாமரனும் ரசிக்கும்வண்ணம் வாசிப்பில் ‘சம்பிரதாயம் மீறாத ஜனரஞ்சகம்‘  என்கிற உத்தியைப் புகுத்தியது.  குறிப்பாகத் தோடி, சிந்து பைரவி, சுபபந்துவராளி போன்ற ராகங்களை சங்கீத ஞானமே இல்லாதார் கூடக் கிரங்கி ரசிக்குமளவுக்கு எளிமையாகக் கையாண்டவர் இவர்.

SCM_3

ஷேக் சாஹிப் வாசிக்க ஆரம்பித்த காலத்தில் சக கலைஞர்களிடத்தில் ஒருவிதமான முணுமுணுப்பு கிளம்பியதாம்.

திருவையாறு தியாகராஜர் உற்சவத்தில் அவர் வாசிக்க வந்தால், ‘ஒரு முஸ்லீம் தியாகப்ரும்ம உற்சவத்தில் கலந்து கொள்வதா?‘  என்று குரல் எழுமாம்.
ஒரு சமயம் உற்சவ சீஸன்.  வரிசையாக நாலைந்து நாகஸ்வர வித்வான்கள் வாசிக்க இருந்தார்கள்.  சின்ன மௌலானாவும் இருந்தார்.
குளித்தலை பிச்சப்பா தர்பார் ராகத்தை எடுத்தார்.
அவர் வாசித்து முடித்ததும் திருச்சேறை கிருஷ்ணமூர்த்திப் பிள்ளை.  அவர் வாசித்ததும் தர்பார்.
அடுத்து வாசித்த ஷேக் சாஹிபும் தர்பாரிலேயே தர்பார் நடத்த, உணர்ச்சி வசப்பட்டு சீனியர் வித்வான்களான ஆலத்தூர் சகோதரர்கள் (ஒரே குருவிடம் பயின்ற ஸ்ரீநிவாச ஐயர் மற்றும் சிவசுப்ரமணிய ஐயர் இருவரும் உண்மையிலேயே உடன் பிறந்த சகோதரர்கள் இல்லை. ஆலத்தூர் சகோதரர்கள் என்ற பெயரில் புகழ் பெற்ற இவர்கள் சங்கீத கலாநிதி விருது பெற்றவர்கள்.)  உரக்கச் சொன்னார்களாம் :  ”மூணுலே எது ஹிந்து தர்பார்?  எது முஸ்லீம் தர்பார்னு யாராவது பிரிச்சி அடையாளம் காட்ட முடியுமா ? சங்கீதத்துல மதத்தை யாரும் கொண்டு வராதீங்க!”
அதற்குப் பிறகு அந்தப் பேச்சே எழவில்லை.

வாஸ்தவத்தில் சின்ன மௌலானாவை ஹிந்துவா? முஸ்லீமா?  என்று பிரித்துப் பார்க்கவே முடியாது.  அவர் வணங்குவது ஸ்ரீரங்கநாதரை என்றாலும் வீட்டு விசேஷங்கள் பாரம்பரிய முஸ்லீம் சம்பிரதாயப்படி தான் நடக்கின்றன.  ”என் மதம் இசை ஒன்றுதான்”  என்று அவர் சொல்வது சினிமா வசனம் போலில்லை. அவரளவில் அதுதான் சத்தியம்.  அவரது பேரன்களும் அப்படியே தயாராகி இருப்பது தான் விசேஷம்.
https://i1.wp.com/www.tamilonline.com/media/Dec2009/4/c648d1eb-e1c9-49e9-acdb-d92d58bd49d9.jpg
“தாத்தாவுக்காவது ரெண்டு மூணு பேர் குருவா இருந்திருக்காங்க.  எங்களுக்கு அவர் ஒருத்தர் தான் குரு. வாசிப்புக்கு மட்டுமில்லை;  வாழ்க்கைக்கும்”  என்கிறார் காசிம் (ஷேக் சின்ன மௌலானாவின் இசை வாரிசு.  அவரது ஒரே மகள் வயிற்றுப் பேரன்)

தமது மானசீக குரு ராஜரத்தினம் பிள்ளையை ஒரு முறையேனும் சந்திக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினார் ஷேக்.  கடைசி வரை அது நடக்காமலே போய் விட்டது.
–ஔரங்கசீப்

ஔரங்கசீப் என்ற புனைபெயரில் கல்கியில் இந்தக் கட்டுரையை 14 வருடங்களுக்கு முன் எழுதியவர் வேறு யாரும் இல்லை.  எனது பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் பா.ராகவன் தான்.

–நன்றி கல்கி (6-12-98)

–நன்றி நண்பர் சிமுலேஷன் (ஆலத்தூர் சகோதரர்கள் படத்துக்கும் தகவலுக்கும்)

தொடர்புடைய பதிவு:
Advertisements

5 thoughts on “ஸ்ரீரங்க பக்தர் சின்ன மௌலானா! — ஔரங்கசீப்

 1. BaalHanuman December 25, 2012 at 7:06 AM Reply

  ? பத்மஸ்ரீ ஷேக் சின்ன மௌலானா கச்சேரி ரசித்தது உண்டா ?

  ! அவர் சின்ன மௌலானா அல்ல. பெரிய மௌலானா. எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சையும் உருக்கி அசைத்து விடும் ஷேக்கின் இன்னிசை. மேலும் ஸ்ரீரங்கத்துக்காரர்.

 2. R. Jagannathan December 25, 2012 at 9:01 AM Reply

  என்னால் ஷேக் சின்ன மௌலானாவின் அபார வாசிப்பை விவரித்து எழுத முடியாது. அந்த பெரியவரின் வீட்டு வாசல் வழியாக எத்தனையோ தடவை போயிருக்கிறேன், அவரைப் பார்த்திருக்கிறேன். என் அப்பாவுக்கு அவரைப் பரிச்சயம் உண்டு. அவரை எனக்குத் தெரிந்து யாரும் முஸ்லிம் என்று பிரித்துப் பார்த்ததில்லை. ஸ்ரீரங்கநாதரின் அருள் அவருக்கு அப்போதும் உண்டு, இப்போது மேல் உலகத்திலும் உண்டு என்பது என் பூரண நம்பிக்கை. – ஜெ .

 3. D. Chandramouli December 25, 2012 at 11:27 AM Reply

  Not sure of this story – I heard that Chinna Maulana once joined Thiruvaiyaru festival, but because he was a Muslim, other Vidwans objected to his participation. Chinna Maulana then went out and performed outside the venue. After a while, drawn to his music, most of the crowd who were in the pandal moved out and joined him to listen to Chinna Maulana. When I was young, Chinna Maulana performed in one of our family weddings. I requested him to play my favorite song Chinnanchiru Kileye. Immediately, he obliged to my request – it was heavenly!

 4. srinivasan (@sathishvasan) December 27, 2012 at 12:17 PM Reply

  இந்த மனிதர் எங்கிருந்து என் பழைய உருப்படிகளைத் தேடிப்பிடிக்கிறார் என்று தெரியவில்லை. http://slate.writerpara.com/ 🙂

  • BaalHanuman December 27, 2012 at 1:02 PM Reply

   நன்றி சதீஷ். நம்முடைய அபிமான எழுத்தாளரே பாராட்டுவது உண்மையிலேயே சந்தோஷமான ஒரு விஷயம் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s