இளையராஜா பற்றி ரா.கி.ரங்கராஜன்…


இளையராஜாவின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவர் என் நெருங்கிய நண்பரும்,  குடும்ப டாக்டருமான ஆர். ரவிச்சந்திரன்.  ஐந்து நிமிடம் பிரஷர் பார்த்து விட்டு, ஐம்பது நிமிடம் இளையராஜாவைப் பற்றிப் பேசுவார்.   அவருடைய எந்தெந்தப் பாட்டு எந்தெந்த விதத்தில் தனித் தன்மையுடன் இருக்கிறது என்பதை ஆராய்ந்து,  நோட்டு நோட்டாக எழுதி வைத்திருக்கிறார்.

டாக்டர் ரவிச்சந்திரனுக்கு வாழ்க்கையில் ஒரே லட்சியம் இசைஞானியை ஒரு முறையேனும் நேரில் சந்திக்க வேண்டும் என்பதுதான்.   அதற்கு ஏற்பாடு செய்யும்படி என்னைக் கேட்டுக் கொண்டேயிருந்தார்.   சினிமா நிருபர் செல்லப்பா மூலமாக, இளையராஜாவின் செக்ரட்டரி கல்யாணத்துக்குத் தெரிவித்து,  ஒரு ஞாயிறன்று பிற்பகல் அப்பாயின்ட்மென்ட்  வாங்கிக் கொண்டேன்.

டாக்டர் ரவிச்சந்திரனுடன் அவருடைய சிநேகிதர் டாக்டர் கௌரிசங்கரும் வந்திருந்தார்.  நானும் சேர்ந்து கொண்டேன்.

https://balhanuman.files.wordpress.com/2010/05/ilayaraja.jpg?w=249

வடபழனியில் ஏவிஎம் ஸ்டுடியோவைக் கடந்து,  சாலிக்ராமம் சாலையில்,  பிரசாத் ஸ்டுடியோவுக்குள் அமைந்திருக்கிறது இளையராஜாவின் ரெகார்டிங் தியேட்டர்.  “வாங்க வாங்க!”  என்று வாய் நிறைய வரவேற்றார்.  (என்னை அவருக்கு நன்கு தெரியும்.)   தரையில் விரித்திருந்த மெத்தையில் அமர்ந்திருந்த இசைஞானி.   எதிரே ஆர்மோனியத்தை  வைத்திருந்தார்.   ஏதோ ஒரு ட்யூனைப் பிடிக்க முயன்று கொண்டிருந்த நேரத்தில் குறுக்கிட்டு விட்டோமோ என்று எனக்குத் தோன்றியது.   வழக்கமான ஒரு வாரத்துத் தாடியுடன்,  கொஞ்சம் இளைத்த மாதிரித் தெரிந்தார்.   உடம்பை ஒட்டினாற்போல வெள்ளை ஜிப்பா,  வெள்ளை நாலு முழ வேட்டி.

சுவரில் ரமணர்,  ஷிர்டி சாய் பாபா,   கோடி ஸ்வாமிகள் படங்கள்.

பற்பல வருடங்களாகத் தன் மனசுக்குள் பூஜித்து வந்திருக்கும் லட்சிய ஹீரோவை நேரில் காணும்போது எந்த ரசிகருக்கும் பேச்சு வராது.   ஆனால் டாக்டர் ரவிச்சந்திரன் சற்று ‘ஹோம் வொர்க்’ செய்து கொண்டு வந்திருந்ததால் பணிவோடு தன் எண்ணங்களைத் தெரிவித்தார்.

எது கேட்டாலும் முதலில் ‘அது சரி’  என்று சொல்கிறார் இளையராஜா.   நல்ல  மேனரிசம் இது.   ‘அது சரி’  என்று முதலில் கூறி விட்டுப் பிறகு தன் கருத்தைச் சொல்கிறார்.  அது நம்மைப் பணிவுடன் கேட்க வைக்கிறது.

“ஓரோர் சமயம் உங்கள் பாட்டைக் கேட்கும்போது அதே ட்யூனை முன்பே வேறொரு பாட்டில் கேட்ட மாதிரி இருக்கிறதே ?”  என்று கேட்டார் ரவிச்சந்திரன்.

“அது சரி.  மொத்தம் இருப்பது ஏழு ஸ்வரங்கள் தான்.  எப்படி ட்யூன் போட்டாலும் ஏதாவது ஓர் இடத்தில் ஏதாவது ஒரு சாயல் வருவது சகஜம்தான்”  என்றவர்,  “வீடு வரை உறவு”  என்ற அடிகளைப் பாடிக் காட்டி,  அதே போல் வரும் வேறு சில பாடல்களையும் பாடினார்.  (ரவை புரளும் சன்னமான சாரீரம் அவருக்கு இருக்கிறது.)

“உங்கள் பாடல்களைப் பல முறை கேட்டு வருகிறேன்.  மெட்டையும்  சாகித்தியத்தையும் தவிர இன்னும் ஏதோ ஒன்று பாட்டுக்குள் இருப்பதாகத் தோன்றுகிறது.  அது என்ன ?”  என்று டாக்டர் கேட்டார்.

இதே கேள்வியை பம்பாயிலிருந்து வந்த ஒரு பெண் என்னிடம் கேட்டாள்.  அது என்னவென்று என்னால் எப்படி விளக்க முடியும் ?  ஆரம்ப காலத்தில்,  நான் கற்றுக் கொண்ட, தெரிந்து கொண்ட,  நாட்டுப்புற  ட்யூன்கள் மொத்தத்தையும் கொட்டிவிட்டேன்.  ஐயோ,  இனிமேல் என்ன செய்யப் போகிறோம் என்று திகைத்திருந்த போது,  தானாகவே பாட்டு வர ஆரம்பித்தது.  சிவாஜி காலமான சமயம் அவருடைய மனைவி என்னிடம் அழுதார்.   ‘அவருக்கு பாத்ரூம் சுத்தமாக இருக்க வேண்டும்.  அன்று என்ன படம் இருக்கிறது,  என்ன நடிக்கப் போகிறோம் என்ற திட்டங்களை பாத்ரூமில் தான் யோசித்து வைத்துக் கொள்கிறேன் என்பார்.  வீட்டில் எந்த இடம் சுத்தமாயில்லாவிட்டாலும்  பாத்ரூம் மட்டும் சுத்தமாக இருக்கும்படி நான் பார்த்துக் கொள்வேன்’  என்று சொல்லி கண்ணீர் வடித்தார்.  எனக்கு அந்த மாதிரி இல்லை.   ஆர்மோனியத்தின் முன்னே உட்கார்ந்ததும் இசை வருகிறது.  பறவை ஒருத்தர் சொல்லியா பறக்கிறது ?  ‘It  happens.  Music  happens “  என்றார் ராஜா.

“உங்களுடைய ஆயிரக்கணக்கான பாடல்களில் உங்கள் உள்ளம் கவர்ந்த பாட்டு எது ?”  என்று நான் கேட்டேன்.  உடனே “ஜனனி ஜனனி“  என்றார்.  ‘கொஞ்சம் பாடிக் காட்டுங்கள்’  என்று நான் கேட்டுக் கொண்டேன்.  ‘சௌந்தர்ய லஹரி‘  ஸ்லோகத்தை முதலில் சொல்லி விட்டு,  ஆர்மோனியத்தின் துணையுடன் பாடினார்.  அப்பப்பா!  அந்த பாட்டு என்ன சுகம்,  என்ன சுகம்!

டாக்டர் கௌரிசங்கர்,  “நீங்கள் ரொம்பப் பிரமாதமான படங்களுக்கும் பாட்டுப் போடுகிறீர்கள்.  சில சமயம் ரொம்ப சாதாரணமான படங்களுக்கும் பாட்டுப் போடுகிறீர்கள்.  அது எதனால் ?”  என்று கேட்டார்.

ராஜா சிரித்தார்.  “இன்னாருக்குப் பாட்டுப் போடுவேன்,  இன்னாருக்குப் போட மாட்டேன் என்று நான் சொல்வதில்லை.  ‘நீங்கள் மியூசிக் போடுகிறீர்கள் என்று சொன்னால் உடனே விநியோகஸ்தர்கள் வாங்கிக் கொள்கிறார்கள்.  அதனால் ஒப்புக் கொள்ள வேண்டும்’  என்று கேட்கிறார்கள்.  ஒப்புக் கொள்கிறேன்.  படம் நன்றாக அமைவதோ,  மோசமாக அமைவதோ அவரவர் கொடுப்பினை.  சிக்னலில் கார் நிற்கிறது.  ஏழையொருவன் வந்து கை நீட்டுகிறான்.  பையில் கையைவிட்டுக் காசை எடுப்பதற்குள் சிக்னல் கிடைத்து,  கார் நகர்ந்து விடுகிறது.  இன்னொரு சிக்னலில்,  வேறொரு ஏழை கை நீட்டுகிறான்.  ஒரு ரூபாய் போடலாம் என்று எடுத்தால் பத்து ரூபாய் நோட்டாக வருகிறது.   போடுகிறோம்.  அதை என்னவென்று சொல்வது ?”

உன்னிகிருஷ்ணன் ரெக்கார்டிங்குக்கு வந்திருப்பதாக இன்டர்காமில் தெரிவித்தார்கள். ராஜா எழுந்து கொண்டு எங்களிடம் கை குலுக்கினார்.  “கொஞ்ச நேரம் உங்கள் ரெகார்டிங்கையும் பார்க்க வேண்டும்”  என்று டாக்டர் ரவிச்சந்திரன் கேட்கவே,  “தாராளமாக வாருங்கள்”  என்று அழைத்துப் போனார்.

உன்னிகிருஷ்ணன் ஜீன்ஸில் கட்டம் போட்ட முழுக்கை ஷர்ட்டை  ‘இன்’ செய்து கொண்டு கல்லூரி மாணவன் போல் இருந்தார்.  பந்தா எதுவும் இல்லை.  பிளாஸ்கிலிருந்து வெந்நீர் எடுத்து சிறிது சிறிதாக உறிஞ்சினார்.   ஸ்டாண்டின் மீது நோட்டுப் புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு,  நின்றபடியே அடி அடியாகப் பாடினார்.  மறுபுறம் கம்ப்யூட்டர் பதிவைப் பார்த்தபடி ராஜா இருந்தார்.

உன்னிகிருஷ்ணன் பாடுவது சரியாக இருப்பதாகத்தான்  எங்களுக்குத் தோன்றியது.  ஆனால் ஒவ்வொரு வரியிலும் ஒரு சுளிவை,  ஒரு நெளிவை,  ஒரு கூட்டலை, ஒரு குறைத்தலை சொல்லித் திருத்தம் வழங்கிக் கொண்டேயிருந்தார் ராஜா.  கூடக்கூட ஸ்வரங்களை சொல்லிப் பாடியும் காட்டினார்.  ஐந்து நிமிடப் பாட்டுக்கு ஒரு மணி நேரம் ஆயிற்று.

http://preethika.files.wordpress.com/2008/02/177630749_8a74fa2897.jpg?w=600

இப்படிக் கடுகத்தனை ‘சங்கதி‘ க்காக இவர் மலையத்தனை சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டுமா என்று நினைத்தேன்.  ஆனால் அப்படியொரு perfectionist ஆக இருப்பதால்தான்  இளையராஜா மகாராஜாவாக இருக்கிறார்.

நாலு மூலை  –  ரா.கி.ரங்கராஜன்  (கிழக்கு பதிப்பகம்)

ஆசிரியர்: ரா.கி. ரங்கராஜன்

தமிழ் வாசிக்கத் தெரிந்த யாரும் ஒரு முறையாவது ரா.கி. ரங்கராஜனின் எழுத்துகளை வாசிக்காமல் நகர்ந்து போயிருக்க முடியாது. நாற்பத்திரண்டு ஆண்டு காலம் குமுதம் வார இதழில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். சிறுகதைகள், நாவல்கள், மொழி பெயர்ப்புகள், கட்டுரைகள், நகைச்சுவை நாடகங்கள் என எழுத்தின் அத்தனை சாத்தியங்களிலும் முத்திரை பதித்தவர்.

ரங்கராஜனின் எழுத்தின் பிரத்தியேக பலம், அவரது உள்ளோடும் நகைச்சுவை உணர்வு. நடையில் மிளிரும் கம்பீரமான எளிமை. மேலான சத்தியம். வெகுஜன எழுத்துத்துறையில், ஒரு பெரிய தலைமுறையையே அவரது படைப்புகள் பாதித்திருக்கின்றன.

கல்கியையும் எஸ்.ஏ.பி.அண்ணாமலையையும் தமது ஆதர்சங்களாகச் சொல்லும் ரா.கி. ரங்கராஜன்,  கும்பகோணத்துக்காரர்.

எழுபத்தெட்டு வயதில், உற்சாகம் குறையாமல் அண்ணாநகர் டைம்ஸ் இதழில் அவர் எழுதும் நாலுமூலை கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

வாரப் பத்திரிகையில் பணிபுரிந்த திறமையான எழுத்தாளர்கள் என்ற தலைப்பில் ஒரு பட்டியல் தயாரித்தால், அதில் ரா.கி.ர.,வுக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. ஒரு பொன் விழாக் காலத்திற்கு மேல் இடை விடாமல் சுவாரஸ்யமாக எழுதும் இவருடைய பணிக்கு இதுவரை யாரும் “விழாத் தோரணம்‘ கூட கட்ட முன் வராதது அதிசயம். ஆச்சர்யம்.

இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் “அண்ணா நகர் டைம்ஸ்‘ தனிச் சுற்று பத்திரிகையில் வெளி வந்து பலர் பாராட்டைப் பெற்றவை. உலகில் அன்றாடம் நடைபெறும் சின்னச் சின்ன சம்பவங்களை நகைச் சுவையுடன் கட்டுரையாக்கியிருக்கிறார் . தலைப்புகள் தேர்வு செய்த அழகு அவர் எழுத்துச் சிறப்பைக் காட்டுகிறது.ரா.கி.ர., படித்து ரசிக்கலாம் ரசித்து படிக்கலாம்.  

Advertisements

One thought on “இளையராஜா பற்றி ரா.கி.ரங்கராஜன்…

  1. venkat December 22, 2012 at 3:20 AM Reply

    சிறப்பான பகிர்வு. ரா.கி. ர அவர்களின் இந்த நூல் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s