1-துர்கா – சுஜாதா


மகாலக்ஷ்மியிடம் சொல்லிவிடத் தீர்மானித்தபின், திவாகருக்கு மனசு சட்டென்று லேசானது. வெள்ளிக்கிழமை காலையிலிருந்து வாட்டியெடுத்துக் கொண்டு இருந்த அலைபாய்ச்சல் ஓய்ந்து, அச்சமும், பதட்டமும் வடிந்து, மன விடுதலை வந்து… இன்றைக்கே சொல்லிவிட வேண்டும். சோமு மறுபடி வரும்போது, ‘போடா போ! யார் கிட்ட வேணாலும் சொல்லிக்கடா பரதேசி! ..ரே போச்சு!’ என்று அவனை செக்யூரிட்டியைக் கூப்பிட்டு கழுத்தைப் பிடித்து தள்ள வேண்டும்!

ஆபீசில் பிரச்னைகள் வரும்போது திவாகர், ‘வொர்ஸ்ட் கேஸ் சினேரியோ’ என்ன என்று அலசுவார். அந்த வகையில், மகாலக்ஷ்மியிடம் சொல்லிவிடுவதில் அதிகபட்ச சிக்கல் என்ன வரும் என்று யோசித்தார். ‘யாரும் என்னை நெரிக்கப் போவது இல்லை. உயிருக்கு பயமில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால், கோபித்துக் கொண்டு, குழந்தைகளுடன் சேலம் போய்விடுவாள். அல்லது, தம்பியிடம் மும்பை போய்விடுவாள். குழந்தைகள் இரண்டும் புரியாமல் விழிக்கும். லக்கியாவது லேசாகப் புரிந்துகொண்டு மௌனமாகிவிடுவாள். காதைப் பொத்திக்கொள்வாள். லோபாவுக்கு, கொஞ்சம் இரைந்து பேசிக்கொண்டாலே அழுகை வந்துவிடும். பிஞ்சு மனசு. இல்லற வாழ்க்கைச் சிக்கல்கள் புரியாத இளம் தளிர்.

வக்கீலைப் பார்த்து நோட்டீஸ் அனுப்பி விடுவாளா ? ம்ஹூம்… செய்ய மாட்டாள்! கோபத்தின் கொள்ளளவைப் பொறுத்து ஒரு மாதம், இரண்டு மாதம், ஆறு மாதம் கழித்து, குழந்தைகளுக்காகத் திரும்பி வரத் தீர்மானிப்பாள். ஆறு மாதம் அவள் இல்லாமல் தவித்தாக வேண்டும். அவ்வளவே! அதற்குள் அவளுக்குக் கடிதங்கள் எழுத வேண்டும். பேசினாலும் பேசாவிட்டாலும் போன் பண்ண வேண்டும். போய்ப் போய்ப் பார்க்கவேண்டும். மன்னிப்பது, மறப்பது போன்ற பெரிய வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்த வேண்டும். தேவைப்பட்டால், முழங்காலில் மண்டியிட்டுக் கெஞ்சவேண்டும். சர்வ சக்தி க்ரூப் கம்பெனியின் சேர்மன்; ஆயிரத்து முந்நூறு கோடி டர்ன் ஓவர். அடுத்த ஆண்டு, இதை இரட்டிப்பாக்க ஏ.டி.ஆர். அறிவிக்கப் போகிற தொழிலதிபர். இருபத்தைந்து நாடுகளில் ஜெட் வேகத்தில் திரிபவர். இந்தியாவின் டாப் டென் வரிசையில் வருஷா வருஷம் இருப்பவர்.

எல்லாம், நாசமாய்ப் போகிற சோமுவால வந்தது. போன வாரம் வரை அமைதியாகச் சென்றுகொண்டு இருந்த இல்லறப் படகு மோசமாக அலைக்கழிக்கப்பட்டது. போர்டு மீட்டிங் முதல் பாதி வெற்றிகரமாக முடிந்து டாரெஸ் – சலாம் – டான்சானியாவுடனான கடினமான ஒப்பந்தத்தை ஒருவழியாக முடிக்க அனுமதி பெற்றுவிட்ட சந்தோஷத்துடன் லஞ்ச் ப்ரேக் வந்தபோது, வெளியே சோமு நாற்காலி விளிம்பில் உட்கார்ந்திருக்கிறான். முதலில் அடையாளம் தெரியவில்லை. முன் முடியெல்லாம் இழந்து, புகையிலைப் பழக்கத்தால் பல்லெல்லாம் பழுப்பாகி, மூன்று நாள் தாடியுடன்… “திவா, என்னைத் தெரியல ? சோமுடா !”

திவா என்று அண்மையில் யாரும் அவரைக் கூப்பிட்டதில்லை.

“எந்த சோமு ?”

“என்னடா, தெரியாத மாதிரி கேக்கற? என்னவெல்லாம் செய்திருக்கோம். என்னவெல்லாம் விளையாடியிருக்கோம்” என்று அவர் தோளில் தட்டினான்.

கோட்டும் சூட்டும் அணிந்த மெம்பர்கள் எல்லோரும் போர்டு ரூமை விட்டு வெளியே வரும்போது சோமு காட்டிய அன்னியோன்யத்தை அந்தச் சூழலுடன் பொறுத்த முடியாமல், அவனை அற்பமாகப் பார்த்தார்கள். செக்ரெட்டரி, “யாருப்பா நீ? கேட்டரிங் ஆளா?” என்றார். “ஏன் இதனை லேட்? எங்கே யூனிஃபார்ம்?”

“திவா, நான் யாருன்னு சொல்லு. அய்யா, நான் திவாவுடைய ஜட்டி தோஸ்த். சொல்றா !” என்றான் இரைச்சலாக.

“சாரி சார் ! கேட்டரிங் கான்ட்ராக்டர் மாதிரி இருந்தார் !”

“பரவாயில்லை. ரொம்ப பிசியா இருக்கே. உன்னோட அஞ்சு நிமிஷம் தனியா பேசணுமே, திவா !”

கலைந்திருந்த போர்டு ரூமில் ஓர் எம்.பி.ஏ. இளைஞன் பவர்பாயிண்ட் ஸ்லைட்களை ஒத்திகை பார்த்துக்கொண்டு இருந்தான். திவாகரைப் பார்த்ததும் மரியாதையாக விலகினான்.

அருகருகே உட்கார்ந்தார்கள். ‘அவுட்லுக்’ இதழில் திவாகரின் அட்டைப் படத்தை கவனித்து, “இந்த மாதிரி பத்திரிகை போட்டோவைப் பாத்துதான் உனக்கு லெட்டர் எழுதினாளாமே? பதிலே வராததால பேசாம இருந்துட்டாளாம்” என்றான்.

“பசிக்கிறது. ஏதாவது டிபன், காபி ஆர்டர் பண்ணேன்!”

“அடுத்த ரூம்ல பஃபே இருக்கு. சாப்டுட்டுப் போ! என்ன விஷயம்? சீக்கிரம் சொல்லு. போர்டு மீட்டிங்கை ரெஸ்யூம் பண்ணனும்.”

“செயலா இருக்கே. வெளிநாட்டுல எல்லாம் பெரிய கம்பெனியாமே! அந்தப் பொண்ணுக்கு ஒரு பதில் போட்டிருக்கலாம். ஏதாவது செஞ்சிருக்கலாம். நான்தான் அப்பப்ப அஞ்சு, பத்து அனுப்பிச்சிண்டிருந்தேன்.”

“எதுக்கு வந்தே சொல்லு?”

“விரட்டாதேப்பா. உன்னைப் பார்த்து, உன் சந்தோஷத்தில் பங்கு கொண்டு பெருமைப்படத்தாம்பா வந்தேன்.”

“பாத்தாச்சில்லே… திங்கக்கிழமை சாவகாசமா வா!”

“திங்கக்கிழமை நான் ஊர்ல இல்லை. பங்களூர் போயிடறேன். டர்பியை மிஸ் பண்ணதே இல்லை. என்னப்பா… நாம ரெண்டு பெரும் எத்தனை அலைஞ்சிருக்கோம்! அகர்தாலா, மோகன்பாரி, மணிப்பூர், இம்பால்னு திரிஞ்சிருக்கோம். மாசேர்லாவில பவர் ஃபெயில் ஆகி, இருட்டிலே அந்தத் தெலுங்குக் குட்டி… ஞாபகம் இருக்கா? போட்டோ கூட எடுத்தமே? சமீபத்துல போய்ப் பார்த்தேன். பையன் வாட்டசாட்டமா வளந்திருக்கான். லெட்டர் எழுதினாளாமே! தெலுங்குல ஒரு கடுதாசி வந்திருக்குமே?”

வயிற்றில் திக்கென்று பட்டாம்பூச்சி பறந்தது.

‘எனக்குத் தெலுங்கு தெரியாது!’

‘பரவாலேதண்டி மஞ்சி மனசு சாலு’

‘யார் மனசு… என் மனசா, உன் மனசா?’

“சோமு, அதெல்லாம் எப்பவோ போன ஜன்மத்து சமாசாரம். நான் மறந்தாச்சு. இப்ப நான் சமூகத்தில் வேற ஆளு. மரியாதைப்பட்ட கம்பெனி சேர்மன்.”

“வெரிகுட்! நல்லா இரு. நீ மறந்தாலும், நான் மறக்கலியே…! உன் பொண்டாட்டி எப்படி இருக்கா? மகாலட்சுமிதானே பேரு? பொருத்தமான பேரு. ரெண்டு பொண்ணுன்னு கேள்விப்பட்டேன். என்ன படிக்கிறா ? அந்தப் பையன் எட்டாவது படிக்கறான். நல்ல மனைவி. அவ அதிர்ஷ்டம்தான் இப்படிக் கொழிக்கறே. என்ன நட்சத்திரம் ? உன் கல்யாணத்துக்கு வந்திருக்கேன். சின்ன வயசுல பாத்திருக்கேன். சிரிச்சா இன்னும் கன்னத்தில் குழி விழுதா ?”

“பாரு சோமு, என் பொண்டாட்டி கன்னத்தை விசாரிக்க நீ வரலை. என்ன வேணும் உனக்கு ? சுத்தி வளைக்காம கேளு.”

“பளிச்சுன்னு புரிஞ்சுண்டுட்டியே! சமத்து. உன்னைப் பத்தி எந்த விவரமும், அட்ரஸ், போக்குவரத்து எதுவுமே அவகிட்ட சொல்லலை. எனக்குப் பத்து லட்சம் ரூபா வேணும்!”

திவாவின் கரங்கள் நடுங்க ஆரம்பித்தன. இறுதியில் இதுதான் கலப்படமில்லாத ப்ளாக்மெயில்!

“கெட் அவுட்! ப்ளாக்மெயில் பண்ண வந்திருக்கேன்னு தெரிஞ்சா…” – இன்டர்காமை இயக்கி, “செக்யூரிட்டியைக் கூப்பிடுங்க சங்கரராமன்… அவுட்!”

“அப்படியா… சரி, சரி !” என்று துரிதமாக எழுந்து, தன் செல்ஃபோனில் எண்களை ஒத்தினான். “மகாலட்சுமி அவங்களைக் கூப்பிடறீங்களா ? என் பேரு சோமசுந்தரம். சோமுன்னு சொல்லுங்க. திவாகருடைய க்ளோஸ் ஃப்ரெண்டுன்னு சொல்லுங்க.”

திவாகர் எழுந்து, அவன் கையிலிருந்த செல்ஃபோனைப் பிடுங்கி எறிந்தார். அது உயிரிழக்காமல் தரையிலிருந்து, “அலோ…யாரு?” என்றது. சிக்னல் தெளிவாகக் கேட்டது.

“இந்த ஃபோனைத் தூக்கி எறிஞ்சுட்டா வெளி ஃபோன். திவாகரா, நான் பத்து லட்சம் கைமாத்தாதானே கேட்டேன் ! என்ன இப்படிக் கோவிச்சுக்கறே ? ஒரு குன்ஸா ஒரு ஜாக்பாட்ல எடுத்துருவேன். பத்து மடங்காக்கிடுவேன். நீ ஏன் தப்புத் தப்பா அர்த்தம் பண்ணிக்கறே ?”

ஸ்தலத்திலேயே அவன் கழுத்தை நெரிக்க வந்த உத்வேகத்தை அடக்கிக்கொண்டு திவாகர், “போனாப் போறது, உன் பரதேசி நிலையைப் பார்த்து பத்தாயிரம் ரூபாய் தரேன். பொறுக்கிண்டு ஓடிப் போ !”

சொன்னது தப்பாயிற்று. சுயரூபத்தைக் காட்டினான்.

“என்னை என்ன பிச்சைக்காரன்னு நினைச்சியா ? எங்கிட்ட இருக்கிற சமாசாரங்களை, ஃபோட்டோக்களை வெளியே விட்டா நாறிப் போயிடுவே! உன் பதவி போய்டும். கம்பெனி ஷேர் விழுந்து இழுத்து மூடிடுவா. பத்தாயிரமாம்… பிச்சைக் காசு ! சாலா! செக் புக் கொண்டு வரலை. இல்லாட்டி நான் தரேன் உனக்கு பத்தாயிரம் !”

திவாகர் தண்ணீர் குடித்து, ஸார்பிட்டால் போட்டுக் கொண்டார். இடது முழங்கையை வலி பிசைந்தது. தாடையில் வலித்தது. படபடப்பாக வரும்போதெல்லாம் வலிக்கும். டாக்டர் சென், ஸ்ட்ரெஸ், இ.சி.ஜி., எக்கோ எல்லாம் எடுத்துவிட்டு, ஆஞ்சியோ எடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். பருப்பு சைஸ் மாத்திரைகள் கொடுத்து, நாக்குக்கு அடியில் அடக்கிக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்.

அவனை நேராகப் பார்த்தார். எப்படி ஆகி விட்டான் ? நானும் இவனும் ஸ்கூலுக்கு ஆடியிருக்கிறோம். லீக் ஆடியிருக்கிறோம். டூர் போயிருக்கிறோம். அருமையாக ஃபாஸ்ட் போலிங் போடுவான். இரண்டு பேரும் சேர்ந்து லீக் மேட்சில் விவேகானந்தா மைதானத்தில் செஞ்சுரி அடித்து பேப்பரில் பேர் வந்திருக்கிறது. சிவந்த கன்னங்களும், அலைபாயும் தலைமுடியுமாக இருப்பான். அவனா இவன் ? எங்கே திசை மாறினான் ?

ஜாக்கிரதை!

“சரி, எனக்கு அவகாசம் கொடு. பத்து லட்சத்தை ஒரு நாள்ல புரட்ட முடியாது !”

“நவ் யூ ஆர் டாக்கிங் சென்ஸ்! இது நியாயம். மொள்ளவே கொடு. இன்னிக்கு அமாவாசை. ஒரு அம்பதாயிரம் கொடு. மிச்சத்தை அடுத்த ஞாயித்துக்கிழமைக்குள்ளே குடுத்துடு.”

“பத்து லட்சத்தோட நிறுத்துவேனு என்ன உத்தரவாதம் ?”

“நல்ல கேள்வி! அதுக்கென்ன, முழு பேமென்ட் ஆனா கையோட எழுதிக் கொடுக்கறேன். ப்ராமிசரி நோட்ல கையெழுத்துப் போட்டுத் தரேன். பழைய நண்பனை இம்சை பண்றதா நினைச்சுக்காதே. திருப்பித் தந்துடுவேன். நான் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவன். தை மாதம் ஒரு பெரிய எமவுன்ட் வரவேண்டியிருக்கு.”

கேஷியரைக் கூப்பிட்டு, “இந்த ஆளுக்கு பெட்டி கேஷ் அக்கௌன்ட்டிலிருந்து அம்பதாயிரம் குடுங்க!”

“அத்தனை இருக்காதே ! செக்கா கொடுக்கலாமா ?”

“எப்படி வேணா” என்றான். “க்ராஸ் பண்ணாம, பேரர் செக்கா கொடுத்தா நல்லது !”

“நேம் அண்ட் அட்ரஸ் குடுங்க. டேக்ஸ் கழிச்சுக்கணுமா ?”

“என்ன வேணா கழியுங்க. அம்பதாயிரம் நிகரமா வந்தா சரி !” – சிரிப்பு வந்தது.

“பேங்க் தொறந்திருக்குமில்லே ? இதான் என் அட்ரஸ்” என்று மூலை மடங்கின ஒரு விசிட்டிங் கார்ட் கொடுத்தான்.

“என்ன செலவு அயிட்டத்தில் போட ?” என்று கேஷியர் பயத்துடன் கேட்டார்.

“என்டர்டைன்மெண்ட் எக்ஸ்பென்ஸ்ல போடுங்க. அதுதான் சரி !” என்றான்.

‘துர்கா, உன் முழுப் பேர் என்ன ?’

‘துர்கேச நந்தினி’

‘இவப்பா பங்கிம், சரத் சந்திரர் நாவல்களைத் தெலுங்கில் மொழி பெயர்த்தவர் !’

‘வியாகர்ணத்திலே பெரிய ஸ்காலர். சாருக்கு பலுக்கெ பங்கார வாயினா ஆடிக்காட்டு, கண்ணு !’

‘துர்கா என்னமா சமைப்பா தெரியுமா ? ஒரு கோங்குரா அயிட்டம் வைப்பா பாரு… காரம் ரெண்டு காதிலேயும் பல்பு எரியும். ஒரு உப்புமா, தோசை வைப்பா பாரு… நளன் இவ சித்தப்பா !”

செக்கை வாங்கிக்கொண்டு, ரெண்டாக மடித்துப் பையில் போட்டுக் கொண்டு, “தேங்க்ஸ், நண்பன்னா நீதாண்டா !” என்று சொல்லிவிட்டு சோமு புறப்படும்போது, “ஒரு நிமிஷம் சோமு! பத்து லட்சத்தோட நிறுத்திடுவேனு என்ன உத்தரவாதம் ?”

அவன் புன்னகைத்தான். “பத்து லட்சம்னா சொன்னேன் ?” என்று கண்சிமிட்டிவிட்டுச் சென்றான்.

இந்தக் கதையின் தொடர்ச்சி…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s