மஹா பெரியவரின் ஆசி பெற்ற டாக்டர். அழகப்பா அழகப்பன்…


செட்டிநாட்டின் கானாடுகாத்தானில் பிறந்து சுவாமிமலையிலும், சென்னையிலும் வளர்ந்தவர். நியூயார்க்கிற்குச் சென்று தமிழன் பெருமையைப் பரப்பியவர். ஐ.நா. சபையில் பணியேற்று, 96 நாடுகளுக்கு மேல் பயணம் செய்தவர். லண்டனில் படித்த போது பி.பி.சி. தமிழ்ச் சேவைக்காகப் பணியாற்றியிருக்கிறார். தி ஹிந்து இதழுக்காக இதழியல் பணிகள் செய்திருக்கிறார். வாடிகனுக்குச் சென்று போப்பைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். அமெரிக்காவின் முதலும் முன்னோடியுமான ‘வல்லப மஹா கணபதி‘ ஆலயத்தை நிறுவியவர். லண்டனில் பாரிஸ்டர் ஆஃப் லா படித்தவர். புகழ்பெற்ற நியூயார்க் யுனிவர்சிடியில் டாக்டர் பட்டம் பெற்றவர். பல்வேறு ஆலயப் பணிகளையும் சமூகப் பணிகளையும் பொறுப்பேற்றுச் செய்தவர்.

வாழ்க்கைப் பயணமும் அதற்கு அப்பாலும்‘ என்ற நூலை எழுதியிருக்கிறார். 

மெரிக்காவில் சிறிதும் பெரிதுமாக சுமார் ஆயிரம் கோயில்கள் இருந்தாலும், முதலில் கட்டப்பட்ட இந்துக் கோயில் என்ற பெருமையைப் பெற்றது… நியூயார்க் மாநகரில் அமைந்துள்ள மஹாவல்லப கணபதி திருக்கோயில்! காஞ்சி மஹாபெரியவரின் ஆசியுடனும் ஆலோசனையுடனும் 1977-ல் கட்டப்பட்டது இந்தக் கோயில்.

1970-ஆம் ஆண்டில் ஐ.நா. சபையின் மிக உயரிய பணியில் இருந்த சி.வி. நரசிம்மன் மற்றும் ஐ.நா. சபையில் பணியாற்றிய முனைவர் அழகப்பா அழகப்பன் முயற்சியால் உருவான கோயில் இது! சென்னை பெசன்ட் நகர் அறுபடை வீடு உள்ளிட்ட பல கோயில்களைக் கட்டியவர், நியூயார்க்கில் வாழ்ந்து வரும் அழகப்பா அழகப்பன். நியூயார்க்கில் ஃபிளஷ்ஷிங் பகுதியில் விலைக்கு வந்த, பழைய சர்ச் கட்டடம் ஒன்றை விலைக்கு வாங்கி அங்கே கட்டப்பட்டதுதான் இந்த மகா வல்லப கணபதி தேவஸ்தானம்.

அரவிந்த் சுவாமிநாதன் அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து….

?கே: இப்போதுள்ளது போன்ற வசதிகள் இல்லாத சூழலில் எப்படி அதைச் செய்ய முடிந்தது?

!ப: இதற்கு நான் மட்டுமே காரணம் அல்ல. பலரும் ஒத்துழைத்தார்கள். குறிப்பாக ஆந்திர முதலமைச்சர், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், ஸ்தபதிகள், கமிஷனர் புருஷோத்தம நாயுடு எனப் பலர் இதற்காக உழைத்தார்கள். இவை எல்லாவற்றையும் விடப் பெரிய விஷயம் மஹா பெரியவாளின் ஆசி. நான் பொறுப்பேற்றுப் பணிகளைச் செய்து கொண்டிருக்கும் போது, என்னுடன் ஐ.நா.வில் பணியாற்றிய ஒரு நண்பர் எதிர்ப்புத் தெரிவித்தார். காரணம், நான் அசைவம் சாப்பிடுபவன், பார்ட்டிகளில் மது அருந்துபவன் என்பதால். அவர் நினைத்ததும் ஒருவிதத்தில் சரிதான். நமக்கு குடும்பம், குழந்தைகள் என்று இருக்கிறது. அதனால் காஞ்சி மஹா பெரியவரைச் சந்தித்து, அவர் உத்தரவின்படிச் செய்யலாம் என நினைத்தேன். அதன்படி எதிர்த்த நண்பரையும், மகாமகோபாத்யாய உ.வே.சாமிநாதையரின் சிஷ்யர் விஸ்வநாத ஐயரையும் அழைத்துக் கொண்டு பெரியவரைப் பார்க்கப் போனேன்.

என்னுடைய ஆல்பத்தை எடுத்துப் பெரியவர் பக்கத்தில் வைத்த விஸ்வநாதனின் மாமனார் என்னைப் பற்றி, நான் செய்யும் கோயில் பணிகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். உடனே தீர்க்கமாக அவரை ஒரு பார்வை பார்த்த பெரியவர், “நீங்கள் எல்லாம் தள்ளிப் போங்கோ. டேய், இங்க வாடா, வந்து இங்க உட்கார்” என்று என்னை கூப்பிட்டார். நானும் பயபக்தியுடன் அவர் அருகில் போய் அமர்ந்தேன். கோவில் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன் எனச் சொல்ல நினைத்து நான் பேச்சை எடுக்கும் முன்பேயே, அவர் மிகவும் உற்சாகமாக, ஆலயம் பற்றி, அதன் அமைப்பு பற்றி, எது எது எப்படி எல்லாம் அமையவேண்டும் என்பது பற்றியெல்லாம் சொல்ல ஆரம்பித்தார். பல உபதேசங்கள் செய்தார். கோயில் பணி செய்ய என்னை ஆசிர்வதித்ததுடன் அது நல்லபடியாக நிறைவேறப் பல ஏற்பாடுகளையும் செய்தார். கோயில் சிறப்பாகக் கட்டி முடிக்கப்பட்டு, 1977, ஜூலை 4ல் கும்பாபிஷேகம் நடந்தது. அருள்திரு பன்றிமலை சுவாமிகள் வந்து நடத்திக் கொடுத்தார்.

?கே: சென்னையிலும் ஒரு கோவில் கட்டியிருக்கிறீர்களே….

!ப: ஆமாம். இரண்டு வருஷங்களுக்கு ஒருமுறை விடுமுறைக்கு இந்தியா வரும்போதெல்லாம் மஹா பெரியவாளைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள்வது வழக்கம். அப்படி ஒருமுறை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, “முருகனுக்கு ஆறுபடை வீடுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஓரிடத்தில் இருக்கிறது. ஆறுபடை வீடுகளும் ஒரே இடத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்” என்றேன். உடனே பெரியவர் சிரித்துக் கொண்டே, “ஆமாம். நன்னாத்தானிருக்கும். நீ கட்டு. நான் உனக்கு நிலம் வாங்கித் தருகிறேன்” என்றார்.

பின் அப்போதைய முதல்வர் எம்ஜிஆரிடம் சொல்லி பெசன்ட் நகர் அருகே கடற்கரையையொட்டி ஒரு ஏக்கருக்கும் அதிகமான நிலத்தைக் கோயிலுக்கு அளிக்கச் செய்தார். அங்குதான் முழுக்க முழுக்கக் கல்லால் ஆன அறுபடை வீடு கோயில் தற்போது இருக்கிறது. கட்டிமுடிக்க 25 வருடங்கள் ஆயின. அருகிலேயே பாம்பன் சுவாமிகளின் சமாதி ஆலயம் இருக்கிறது. அந்தக் கோவிலை என்னுடைய சகோதரர், சகோதரி ஆகியோர் பொறுப்பில் விட்டுவிட்டேன். இப்போது அதை நிர்வகிக்கும் டாக்டர். சுந்தரம் Royal Science Society உறுப்பினர். சர். சி.வி. ராமனின் மாணவர். மிகப் பெரிய விஞ்ஞானி.

–சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன் (இது பேட்டியின் ஒரு சிறு பகுதி தான்.  முழுப் பேட்டியையும் படிக்க நீங்கள் விரும்பினால் கீழ்க்காணும் சுட்டியில் படிக்கலாம்…)

நன்றி தென்றல் டிசம்பர் 2012 மாத இதழ்

Advertisements

One thought on “மஹா பெரியவரின் ஆசி பெற்ற டாக்டர். அழகப்பா அழகப்பன்…

  1. mahesh April 12, 2014 at 4:16 PM Reply

    Reblogged this on Sage of Kanchi.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s