2-துர்கா – சுஜாதா


இதன் முந்தைய பகுதி…

மத்தியானம், போர்டு மீட்டிங்கில் தொடரும்போது, துர்காவின் கரிய பெரிய விழிகளின் குறுக்கீட்டால், ஆயாசம் வெளிப்படையாகத் தெரிந்தது. ‘‘ஆர் யூ ஆல்ரைட் திவாகர்?’’ என்று தாராப்பூர்வாலா கேட்டார்.

‘‘ஐ டோண்ட் ஃபீல் வெல்!’’ மற்ற ரொட்டீன் மேட்டர்களை அவரைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, தன் மேசைக்கு வந்தார். ஒரு காகிதத்தை எடுத்து எழுதினார். எது சரி?

1. கொடுத்துக்கொண்டே இருப்பது.

2. கொல்வது.

3. சொல்வது.

– என்று எழுதி, கொல்வதை அடித்துவிட்டு யோசித்தார். பிறகு, கொடுத்துக்கொண்டே இருப்பதையும் அடித்தார். காகிதத்தைக் கிழித்துப் போட்டார். கோல்ஃப் ஆடச் சென்றுவிட்டார். ஒரு அப்ரோச் ஷாட் அருமையாக வர, சற்று நிதானம் அடைந்தார்.

வீட்டுக்கு வந்ததும், மகா லட்சுமி சூடாக காபி கொடுக்க, மண்டையிடி குறைந்தது. லக்கியும், லோபாவும் ‘அப்பா’ என்று காலைக் கட்டிக் கொள்ள, இருவரையும் அணைத்து உச்சி மோந்ததும், ரூபி போட்டிக்கு தன்னைத் திணித்துக் கொள்ள… டி.வி-யில் அவர்களுடன் போகோ பார்க்க அழைத்தபோது, மிச்சமிருந்த கலக்கமும் குறைந்தது.

மகாலட்சுமி ஆல் இண்டியா ரேடியோவின் ஏ கிரேடு ஆர்ட்டிஸ்ட். வயலின் கற்றுக்கொள்ள வந்திருந்த சீனியர் மாணவிகள் சேர்ந்து வாசித்தது இன்பமாக இருந்தது. இப்படித்தான் பிசிறில்லாம வாசிக்கணும். ப்ராக்டிஸ்… ப்ராக்டிஸ்… ப்ராக்டிஸ்!

அவள் மன்னிப்பதாக இருந்தால், இத்தாலியிலிருந்து வயலின் வாங்கித் தரவேண்டும். மேசையில் மேரி பிஸ்கட்டுகளையும், பொரியையும் தட்டில் வைத்துவிட்டு, ‘‘உங்க ஃப்ரெண்டு மறுபடியும் போன் பண்ணினார். எனக்கு அவர் யாருன்னே தெரியலை. சாமுவோ சோமுவோ சொன்னார். கல்யாணத்துக்கு வந்திருக்கேங்கறார். என்ன பேசணும்ங்கறார்? எங்கூட என்ன பேச இருக்கும் முன்னப் பின்ன தெரியாதவருக்கு?’’

‘‘என்ன சொன்னான்?’’

‘‘தனியா பேசணுமாம். சும்மா வந்து என்னையும் குழந்தைகளையும் பார்க்கணுமாம். உங்க வீட்டுக்காரர்கூட சின்ன வயசுல நிறைய விளையாடியிருக்கேம்மான்னார்!’’

‘‘கிரிக்கெட்டைச் சொல்றான்.’’

‘‘ரொம்பப் பணிவோட அக்கறையா விசாரிச்சார். என் கன்னத்தில குழி விழறதைக்கூட ஞாபகம் வெச்சிண்டிருக்கார். அவரை ஒரு நாள் கூப்பிட்டு டின்னர் கொடுக்கலாமே! தன்னைப் பத்தி நிறையச் சொன்னார். உங்க பால்ய சிநேகிதா யாரும் உங்களைப் பார்க்க வர்றது இல்லையே, ஏன்?’’

‘‘அவன்கிட்ட ஜாஸ்தி வெச்சுக்காதே, மகா!’’

‘‘ஏன்?’’

கோபத்துடன், ‘‘ஜாஸ்தி வெச்சுக்காதேன்னா..!’’ என்று அதட்டினார்.

அவள் முகம் சுருங்கியது. ‘‘தெரியறது. என்னை விசாரிச்சது உங்களுக்குப் பிடிக்கலை.’’

‘‘அதில்லம்மா… வேற காரணம்!’’

‘‘உங்களுக்கு எப்பவும் உங்களைப் பத்தி உசத்தியா பேசினாத்தான் பிடிக்கும். கவனிச்சிருக்கேன்!’’

‘‘சேச்சே! அப்படியில்லை.’’

லோபா கழுத்தைக் கட்டிக்கொண்டு, ‘‘அம்மாக்கூட சண்டை போடாதேப்பா’’ என்றது.

சந்தர்ப்பம் சரியில்லை. ராத்திரி சொல்லிவிடலாம். இல்லை, ஒரு கடிதமாக எழுதிவிடலாம்.

‘தெலுங்குல எழுதியிருக்கு, சார்!’

‘தெரியும். என்ன எழுதியிருக்கு, படி!’

‘ஸ்ரீமான் வித்யாசாகர்காரிகி துர்பாக்கியவதி துர்கா நமஸ்காரமண்டி… யாரோ ஆந்திராவில் எம்ப்ளாயி க்ரீவன்ஸ் லெட்டர் மாதிரி தெரியுது, சார்! பர்சனல் டிபார்ட்மென்ட்டுக்கு அனுப்பிடறேன்!’

‘வேண்டாம். வெச்சுட்டுப் போ! நான் விசாரிக்கிறேன்.’

ராத்திரி கேஷியர் போன் செய்தார். ‘‘மத்தியானம் வந்தாரே, சோமுன்னு ஒருத்தர்… அவருக்குக் கொடுத்த செக் கேஷ் ஆகலை.’’

‘‘ஏன்?’’

‘‘பேங்க் சனிக்கிழமை அரை நாள் க்ளோஸ் ஆகியிருந்தது.’’

‘’அவர் போன் பண்ணினா, திங்கள் கிழமைகாலைல போனா கிடைக்கும்னு சொல்லுங்க.’’

அப்போது வாசல் மணி அடித்தது.

‘‘யாரோ சோமசுந்தரமாம். அவசரமா எஜமானைப் பாக்கணும்கிறார்’’ என்றான் காவல்காரன்.

‘‘அய்யா வீட்டுல இல்லைனு சொல்லிடு’’ என்றார்.

அதற்குத் தேவையின்றி, சோமு உள்ளே வந்திருந்தான். ‘‘என்னப்பா உள்ள இருந்துண்டே இல்லைங்கறே? பெரிய மனுசனாய்ட்டல்ல..!’’

‘‘யோவ்! உன்ன யாரு உள்ள வரச் சொன்னது?’’ என்று அவனைக் காவல்காரன் வேகமாகத் தள்ள…

‘‘ஜோசப், நீ போ! வா சோமு, உக்காரு.’’

‘‘நான் உக்கார வரலை. நீ கொடுத்த செக் போடறதுக்குள்ள பேங்க் க்ளோஸ் ஆய்டுத்து. அந்த கேஷியர் ராஸ்கல் சொல்ல வேண்டாமோ? இந்த நாய் கடிக்குமா?’’

‘‘திங்கள்கிழமை காலைல போட்டுக்க!’’

‘‘எனக்கு இன்னிக்கே பணம் வேணுமேப்பா! வீட்டுல இருந்தா கொடுத்துடேன். சௌக்கியமாம்மா? நான்தான் போன் பண்ணேன். சோமு, உங்க ஃபேமிலி ஃப்ரெண்டு!’’

மகாலட்சுமி ‘‘வாங்க’’ என்று முகம் மலர்ந்தாள். ‘‘உக்காருங்க.’’

‘‘உக்கார வரலைம்மா. அவசரமா மெயிலைப் புடிச்சு பங்களூர் போகணும். என்னப்பா திவா, வெய்ட் பண்ணட்டுமா?’’

சுற்றுமுற்றும் பார்த்தான். ‘‘பேலஸ்டா! இந்த வீடே மூணு சி இருக்குமே! அதும், க்ரீன்வேஸ் ரோட்ல!’’ மகாலட்சுமியை ஏற இறங்கப் பார்த்தான். ‘‘அப்படியே அன்று கண்டமேனிக்கு அழிவில்லாம இருக்கே! இவன்தான் டொங்கு விழுந்துட்டான். டயபடீஸ் உண்டா?’’

‘‘எல்லாம் உண்டு. டயபடீஸ், ஹார்ட் ப்ராப்ளம்…’’ என்றாள், திவாகரின் கோபப் பார்வையைக் கவனிக்காமல்.

‘‘நினைச்சேன். பேசறப்ப மூச்சு வாங்கறதிலேயே தெரியறது.’’

‘‘மகாலட்சுமி, சோமுவுக்குக் காபி கொண்டு வா.’’

‘‘உக்காரும்மா, காபிக்கு அவசரமில்லை. ராத்திரி பத்தரைக்குதான் ரயில். சாப்ட்டுட்டே போறேன். ஒரு அர்ஜென்ட் மேட்டரை செட்டில் பண்ணிட்டு, சாவகாசமா பேசலாம். குழந்தைகள் எங்கே?’’

‘‘பாட்டு கிளாஸ் போயிருக்கா.’’

‘‘லக்ஷ்மி’’ என்று ஒரு பார்வை பார்த்தார். அந்தப் பார்வையின் அர்த்தம் அவளுக்கு நன்றாகவே தெரியும்.

அவள் உள்ளே சென்றதும், ‘‘வீட்டுக்கு வந்து ஏன் இம்சை பண்றே?’’

‘‘நான் என்னப்பா பண்றேன்… எனக்கு உண்டான பணத்தைக் கொடுத்துடு. போய்டறேன்.’’

‘‘உண்டான பணமா? என்ன கதையாயிருக்கு.’’

‘‘நாளைக்கு ஞாயித்துக்கிழமை. அதனாலதான் வந்தேன்.’’

‘‘வீட்ல அவ்வளவு பணம் வச்சுக்கறதில்லை.’’

‘‘தட்ஸ் யுவர் ப்ராப்ளம். என் ப்ராப்ளம், ராத்திரி போறதுக்குள்ள அம்பதாயிரம் வேணும். முக்கியமான செலவினம்.’’

‘‘குதிரை ரேஸ்தானே?’’

‘‘கண்டுபிடிச்சுட்டியே! பாருப்பா, உன் இல்லற அமைதியைக் கலைக்கிறது என் நோக்கம் இல்லை. பணத்தைக் கொடு. பயத்தை விடு. போய்டறேன்.’’

‘‘சரி, எட்டு மணிக்கு வா!’’

‘‘ஏம்பா, நீ கேட்டா மூடியிருந்த பேங்க்கை திறந்து கொடுப்பாங்களே. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஏடிஎம்… எத்தனை இருக்கு!’’

‘‘நீ போப்பா! எட்டு மணிக்கு வா. ஏற்பாடு செய்யறேன். உன்னையெல்லாம் நடுக்கூடத்தில் வெச்சுக் குளிப்பாட்ட வேண்டியிருக்கு பாரு. விதி!’’

‘‘பொண்டாட்டிகிட்ட சொல்லிடு. தப்பா நினைச்சுக்கப்போறா. சாவ காசமா சாப்பிட வரேன். வெரிகுட் லேடி… வெரி கல்ச்சர்டு!’’

அவன் போனதும் திவாகர் போனை எடுத்து கேஷியரைக் கூப்பிட்டு, ‘‘சங்கரராமன், உடனே அம்பதாயிரம் புரட்டி வீட்டுக்குக் கொண்டு வாங்க. அந்தாளு தொந்தரவு செய்யறான். உங்க ஏடிஎம் லிமிட் என்ன?’’

‘‘பதினஞ்சாயிரம்!’’

‘‘என் கார்டையும் ஒய்ஃப் கார்டையும் வாங்கிட்டுப் போங்க.’’

‘‘டோன்ட் ஒர்ரி சார்! கொண்டு வந்துர்றேன். சார், இஸ் தேர் எனி ப்ராப்ளம் வித் தட் பர்ஸன்?’’

‘‘அப்புறம் சொல்றேன்.’’

‘‘கமிஷனருக்குப் போன் பண்ணணுமா சார்?’’

‘‘வேண்டாம், இது பிரைவேட் மேட்டர்.’’

மகாலட்சுமி அருகே நின்றுகொண்டு இருப்பதைக் கவனித்து, திடுக்கிட்டார்.

‘‘எங்கே அவர்?’’

அழகான கோப்பையில் காபியும், முறுக்கு, தட்டை சமாசாரங்களும் கொண்டு வந்திருந்தாள்.

‘‘போய்ட்டான். எட்டு மணிக்கு வருவான்.’’

‘‘சாப்பிட வருவாரா?’’

‘‘வரலாம்!’’

‘‘அம்பதாயிரம் யாருக்கு?’’

‘‘யாருக்காயிருந்தா உனக்கென்ன?’’

அவள் முகம் சுருங்கியது. ‘‘சரி, சொல்லவேண்டாம்.’’

‘‘அவன் ஏதோ பணமுடைன்னான். பால்ய சிநேகிதன். டாட்டருக்கு கல்யாணம்னான்!’’

‘‘எங்கிட்ட பேசறப்ப கல்யாணம் ஆகலைன்னாரே?’’

‘‘டாட்டருக்கோ, தங்கைக்கோ சரியா ஞாபகம் இல்லே. அம்பதாயிரம் கேட்டான்.’’

‘‘உங்களுக்குப் பொய் சொல்ல வரலை. எங்கிட்ட நாப்பதாயிரம் இருக்கு. சமன்லால்ல நகை வாங்க எடுத்து வச்சிருந்தேன்.’’

மகாலட்சுமி அவரருகில் உட்கார்ந்து தோளை அமுக்கிக் கொடுத்தாள். முகத்தைத் திருப்பி, ‘‘என்னவோ மறைக்கிறீங்க. கண்ணுக்குக் கண் பார்த்துப் பேசமாட்டேங்கறீங்க. ஏதாவது ப்ராப்ளமா?’’

அவளது அப்பழுக்கற்ற, தெளிவான முகத்தை நோக்கும்போது, அவரது தயக்கங்கள் எல்லாம் கழன்றுகொண்டுவிட்டன.

மகாலட்சுமியிடம் சொல்லிவிடத் தீர்மானித்தபின், திவாகருக்கு மனசு சட்டென்று லேசானது.

‘‘குழந்தைகள் வந்தாச்சா?’’

‘‘ஆச்சு.’’

‘‘பைத்தியக்கார டிவியை அணை, முதல்ல! உங்கிட்ட மனசு விட்டுக் கொஞ்சம் பேசணும்.’’

ஆம். இதுதான் நேரம். பிளாக்மெயில் செய்பவனுக்கு எதற்காகப் பயப்பட வேண்டும்? பயம் எப்போது விலகும்? உண்மை வெளிப்படும்போது, அதன் அதிகபட்ச விளைவு என்ன என்பது தெரிந்துவிட்டால், விலகிவிடும். மனைவியிடம் சொல்லிவிடுவதில் இடைக்கால சச்சரவுகள் இருந்தாலும், இது ஒரு சர்ஜரி போலத்தான். வெட்டப்படுவது விரல் வரையா, முழங்கை வரையா… தெளிவாகிவிடும். பயப்படாதே, சொல்… சொல்!

‘‘மகா, இந்த சோமசுந்தரம் இருக்கானே, என்னுடைய பால்ய சிநேகிதன். காலைல எதிர்பாராம வந்தான். மாசேர்லாவில துர்கானு ஒரு பொண்ணைச் சந்திச்சானாம்…’’

‘‘சரிதான், புரிஞ்சுபோச்சு! பொம்மனாட்டி சமாசாரத்துல மாட்டிண்டிருக்கார்.’’

அட, இப்படி ஒரு கோணம் உள்ளதா?

அப்போது டெலிபோன் ஒலித்தது.

‘‘நான் ஆர்.ஏ.புரம். எஸ்.ஐ. முத்துக் குமார் பேசறேங்க. அய்யா, கொஞ்சம் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு வரீங்களா? சோமசுந்தரம்னு ஒருத்தர் சட்டைப்பைல உங்க அட்ரஸ், போன் நம்பர் இருந்தது…’’

‘‘என்ன ஆச்சு?’’

‘‘நீங்க வாங்க. ஆள் ஆக்ஸிடென்ட்ல ஸ்பாட் டெட்!’’

உள்ளத்தில் வெள்ளம்போல இன்பப் பிரவாகம் பரவியது.

மகாலட்சுமி அவரைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

‘‘என்ன கேட்டே?’’

‘‘உங்க ஃப்ரெண்டு ஏதாவது பொம்பளை விவகாரத்துல மாட்டிண்டு இருக்காரா? அதுக்காகப் பணம் கேட்கிறாரா?’’

‘‘ஆமாம்.’’

திவா, உனக்குக் குருட்டு அதிர்ஷ்டம்டா! எந்தச் சிக்கலாக இருந்தாலும், திடீர்னு இப்படி ஒரு எதிர்பாராத திருப்பம் வந்து காப்பாத்திடும். டான்சானியா டீல்ல, விப்ரோ டேக் ஓவர்ல, வைத்தியநாதன் கோர்ட் கேஸ்ல, ப்ரிஃபரன்ஷியல் ஷேர்கள்ல… இப்ப, மாசேர்லா துர்கா!

‘உன் கை எவ்வளவு சாஃப்டா இருக்கு. எங்க தொட்டாலும் சாஃப்டா இருக்கே, எப்படி?’

‘தெலியலேதண்டி.’

‘‘என் உயிர் நண்பன் சோமுவுக்கு ஏதோ ஆக்ஸிடென்ட்டாம். ஆஸ்பத்திரிக்குக் கூப்பிடறாங்க. போய்ப் பார்த்தாதான் தெரியும். ராத்திரி வந்து சொல்றேன்’’ என்று டிரைவரை அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.

‘‘அப்ப, பணம் வேணாமா?’’

‘‘வேணாம். தேவை இல்லை.’’

காரில் செல்லும்போது, எஜமான் தனக்குள் சிரிப்பதை டிரைவர் கவனித்தான். ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில், சோமசுந்தரத்தை காரிடாரில் சக்கரப் படுக்கையில் வைத்து, உடல் போர்த்தியிருந்தது. இன்ஸ்பெக்டர் அந்த இரவு நேரத்திலும், அப்போதுதான் குளித்ததுபோல் தோன்றினார். நல்ல வெளிச்சம் இருந்தது. மீசை மிடுக்காக இருந்தது. திவாகர் யாரென்று இதற்குள் தெரிந்திருக்க வேண்டும். விறைப்பாக சல்யூட் அடித்தார். இறந்தவனைத் திறந்து காட்டினார். வாய் பாதி திறந்து, ஏதோ சொல்ல வந்து, பாதி வார்த்தையில் உறைந்திருந்தது.

‘‘ஆட்டோரிக்ஷா திருப்பியிருக்காங்க. தண்ணி லாரி மோதி மூணு தடவை உருண்டு, டிரைவர் பிழைச்சுட்டாரு. இந்தாள் ஸ்பாட் டெத்தாயிட்டார். இவர் வீட்டு விலாசம் இருக்குங்களா?’’

‘‘இருக்கு, என் கேஷியர்கிட்ட! கொடுக்கச் சொல்றேன்.’’

‘‘உங்க நண்பரா?’’

‘‘ஆமாம். சின்ன வயசிலிருந்து நண்பன்.’’

‘‘பெங்களூருக்கு டிக்கெட் வச்சிருந்தார். போஸ்ட்மார்ட்டம் பண்ணி, மதியத்துக்குள்ள ரிலீஸ் பண்ணிக் கொடுத்துருவோம் பாடியை.’’

சங்கரராமன் வந்துவிட்டார். சுற்றுப்பட்ட சிப்பந்திகளை, போலீஸ்காரர்களையெல்லாம் விளித்து ஏற்பாடுகள் பேசினார்.

அவரருகில் வந்து நின்று, ‘‘எவ்ரிதிங் அரேஞ்ச்டு சார். நீங்க வீட்டுக்குப் போகலாம்.’’

‘‘இவன் வீட்டு அட்ரஸ் இருக்கில்லே… காரியங்களை நல்லபடியா செய்து, அவன் ஃபேமிலிக்கு செலவுக்குப் பணம் கொடுத்து, யாருக்காவது கம்பெனில வேலை போட்டுக் கொடுக்கணும்னா குடுங்க.’’

‘‘எல்லாம் நான் பாத்துக்கறேன். நீங்க வீட்டுக்குப் போங்க. தி ஸ்டார்ம் இஸ் ஓவர்!’’

‘‘இவன் எதுக்காகப் பணம் கேட்டான் தெரியுமா, சங்கரராமன்?’’

‘‘எனக்கு அந்த விவரம் வேண்டாம், சார்!’’

பெசன்ட் நகர் கிரிமடோரியம், பூங்கா போல பசுமையான செடி கொடிகளுடன் சுத்தமாக இருந்தது. சோமு கறுப்பு வண்டியில் வந்து மூன்றாவது சடலமாகக் காத்திருந்தபோது, திவாகர் மெர்சிடஸ் வண்டியில் மகா லட்சுமியுடன் வந்து இறங்கினார்.

‘‘இன்னும் அரைமணியாவது ஆகும் சார். ரெண்டு பாடி காத்திருக்கு’’ என்றார் சங்கர ராமன்.

‘‘பரவால்லை.’’

‘‘ஃபேமிலியை சந்திச்சுருங்க.’’

மௌனமாக அழுதுகொண்டு இருந்த உறவினர்களிடம் சென்று வெயில் கண்ணாடியைக் கழற்றிவிட்டு, நாசூக்காக ஆறுதல் சொன்னார்.

‘‘சின்ன வயசில் சோமுவும் நானும் நிறைய கிரிக்கெட் ஆடியிருக்கோம்.’’

‘‘நாங்க மூணு பேர் பிரதர்ஸ், ஒரு சிஸ்டர். இவன் கல்யாணமே பண்ணிக்கலை.’’

மகாலட்சுமி அந்தப் பெண்மணியின் கையைப் பற்றிக் கொண்டாள்.

‘‘அய்யோ… சோமு போனப்புறம் எல்லாரும் வரீங்களே! அவன் உசிரோட இருக்கறப்ப இவ்வளவு பெரிய மனுஷனைச் சந்திக்காம போய்ட்டமே!’’ ‘‘மனசைத் தேத்திக் குங்கம்மா. உங்களுக்கு ஏதாவது உதவி தேவைன்னா பி.ஆர்.ஓ கிட்ட சொல்லுங்கம்மா. என் ஆழ்ந்த அனுதாபங்கள்மா! மகா, போலாமா?’’

மேடை மேல் க்யூவில் காத்திருந்த சோமுவின் சடலம் உள்ளே செலுத்தப் பட்டு, மெல்ல ஆரஞ்சு நிறப் பிழம்புக்குள் நுழைந்தது. சோமுவுடன் எல்லாம் எரிந்து, வெந்து தணிந்தன.

‘‘வெரி க்ளீன் சார்! பதினஞ்சு நிமிஷத்தில் எல்லாம் ஓவர்!’’ என்றார் சங்கரராமன்.

திவாகர் காரை நோக்கி நடந்தார்.

‘‘நீங்கதான் திவாகர் சாரா?’’

திடுக்கிட்டுத் திரும்பினார். ஒரு நிமிஷம் பேதலித்துப் போனார். சோமசுந்தரம் சாகவில்லையா என்ன? அப்படியே அச்சு அசல் அவனைப் போன்ற உருவத்தில், அதே குரலில்..!

‘‘என் பேர் கல்யாணசுந்தரம். சோமுவோட தம்பி.’’

‘‘அப்படியா… நீங்க என்ன பண்றீங்க?’’

‘‘கேபிள் டி.வி, மேரேஜ் கேட்டரிங் கான்ட்ராக்ட், எஸ்டீடி பூத்… கொட்டிவாக்கத்தில் நாங்க மூணு பேர் பிரதர்ஸ். சோமு கல்யாணம் பண்ணிக்கலை. நல்ல ஆத்மா. அக்கா குழந்தைகளை எடுத்து வளர்த்தான். ஊரு ஊரா அலைவான், பங்களூரு, மாசேர்லானு… கொஞ்சம் ரேஸ் பைத்தியம். செலவாளி. இப்படி அல்பாயுசா போவான்னு யாரும் எதிர்பார்க்கலைம்மா. விதி யாரைவிட்டது!’’

‘‘சரி, வரோம்!’’ காரின் கண்ணாடி. பெருமூச்சுவிட்டு மூடுவதற்குள், முன் இடைவெளியில் முகத்தை நுழைத்துப் பேசினான்…

‘‘ஒரு நிமிஷம்! சோமு உங்களைப் பத்தி எங்கிட்ட நிறைய சொல்லியிருக்கான்!’’

– வெளியான தேதி: 19 மார்ச் 2006

Advertisements

10 thoughts on “2-துர்கா – சுஜாதா

 1. venkat December 15, 2012 at 3:21 AM Reply

  இந்த நாட்டை வைத்து அடுத்த கதை எழுத நினைத்திருப்பாரோ… கடைசி வரியைப் பார்த்தால் அப்படித் தோன்றியது.

  • BaalHanuman December 15, 2012 at 4:06 PM Reply

   வெங்கட்,

   அப்படியா நினைக்கிறீர்கள் ? எனக்கென்னவோ இது சுஜாதாவின் வழக்கமான கடைசி வரி டச் என்று தான் தோன்றுகிறது 🙂

 2. BaalHanuman December 15, 2012 at 4:11 PM Reply

  ஒரு சிறிய தவறு நிகழ்ந்து விட்டது 😦

  மன்னிக்கவும்.

  ‘துர்கா’ கதையின் இரண்டாம் பகுதியை தவறுதலாக முதலில் பிரசுரித்து விட்டேன் 😦

  முதல் பகுதி விரைவில் உங்கள் பார்வைக்கு…

 3. vathsala December 16, 2012 at 2:29 PM Reply

  The last line has Sujatha’s touch.

 4. BaalHanuman December 16, 2012 at 5:23 PM Reply

  நன்றி வத்சலா. I agree with you 🙂

 5. Raajoo December 19, 2012 at 7:24 AM Reply

  I am sure that others might have also noticed. One can read part 2 , which on its own strength ,is a complete story-without reference to part 1.

  That is the greatness of sujatha.

  Raju-Dubai

  • BaalHanuman December 19, 2012 at 4:07 PM Reply

   அன்புள்ள ராஜு சார்,

   வெகு நாட்களுக்குப் பிறகு உங்களை இங்கே சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

   நீங்கள் கூறியிருப்பது முற்றிலும் உண்மை.

   I’ve not even received one single complaint about the incomplete Durga story (part 2) even from ardent Sujatha fans 🙂

   ஆனால் சிறிது நாட்களுக்கு முன் இங்கே பிரசுரித்த ‘முதல் மனைவி’ (விகடனில் வெளி வந்தது) கதையில் தவறுதலாக விட்டுப் போன முதல் பாராவைப் பற்றி ரவி என்கிற அன்பர் உடனே என் கவனத்துக்குக் கொண்டு வந்தார் 🙂

 6. Raajoo December 20, 2012 at 6:25 AM Reply

  அன்புள்ள நண்பரே,

  என்னை ஞாபகம் வைத்து விசாரித்ததில் எனக்கு கர்வம் கலந்த மகிழ்ச்சி.
  தினமும் “பாலஹனுமனை ” சேவித்துவிட்டு தான் அலுவலக வேலைகளை தொடங்குகிறேன்.

  வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  ராஜூ -துபை

 7. ஆம், தலைவரின் கடைசி லைன் பஞ்ச்! வெளியிட்டதிற்கு நன்றி. எந்த பத்திரிக்கையில் வெளிவந்தது?

  • BaalHanuman December 20, 2012 at 6:07 PM Reply

   அன்புள்ள சிவா,

   இந்தக் கதை உயிர்மை வெளியிட்டுள்ள ‘சில்வியா‘ குறுநாவலுடன் இடம் பிடித்துள்ள ஏழு சிறுகதைகளுள் ஒன்று. தான் அவ்வப்போது தீபாவளி மலர்களுக்கும், சிறப்பிதழ்களுக்கும் எழுதிய சிறுகதைகள் இந்த ஏழும் என்று சுஜாதா முன்னுரையில் குறிப்பிடுகிறார்..

   இத்தொகுப்பில் இடம் பிடித்துள்ள மற்ற சிறுகதைகள்…

   கொல்லாமலே
   ஏழையின் சிரிப்பு
   திருப்பங்கள்
   மற்றொரு பெண் ஜனனம்
   ஜோதியும் ரமணியும்

   அயோத்தியா மண்டபம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s