சில வித்தியாசங்கள் – சுஜாதா


வாங்குகிற முந்நூற்றுச் சொச்சம் 25 தேதிக்குள் செலவழிந்துவிடுவது சத்தியம். இன்றைய தேதிக்கு என் சொத்து – ஒரு டெரிலின் சட்டை, பெட்டி நிறையப் பிரமாதமான புத்தகங்கள், ராஜேஸ்வரி. கடைசியில் குறிப்பிட்டவள் என் மனைவி. இவளைப் பற்றிக் கம்பராமாயண அளவில் புகழ் பாடலாம். அதிகம் பேசாதவள். என் வக்கிரங்களையும், பணமில்லாததால் வரும் அர்த்தமற்ற ஆத்திரத்தையும், என் புத்தக ஆசையையும், வீட்டின் ‘பட்ஜெட்’டையும், சித்தார்த்தனின் அழுகையையும் சமாளிக்கும் சாமர்த்தியம் படைத்த இவள், என் வாழ்வின் ஒரே அதிர்ஷ்டம்! ஜாய்ஸின் ‘யூலிஸிஸ்’ வாங்க விரும்புகிறான் கணவன் என்று தன் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்த மனைவியை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? இவள் மற்ற நகைகளையும் விற்றாகிவிட்டது. எல்லாம் என் ஆர்வத்தில் ஓர் இலக்கியப் பத்திரிகை தொடங்கி இரண்டு மாதம் நடத்தினதில் போய்விட்டது. அதற்காக நான் அவமானப்படுகிறேன். இலக்கியப் பத்திரிகை நடத்தினதற்காக அல்ல; மனைவியின் சொற்ப நகைகளை விற்றதற்காக!

இன்று தேதி 29. என் கையில் இருப்பது மூன்று ரூபாய். எனக்குத் தேவை 325 ரூபாய். எதற்கு? சென்னைக்கு விமான டிக்கெட் வாங்க. என் அம்மாவின் உடல்நிலை கவலைக் கிடமாக இருக்கிறது. தந்தி வந்திருக்கிறது. அவளைப் பார்க்க உடனே செல்லவேண்டும்.

என் அம்மாவுக்கு இதயத்தில் கோளாறு. 58 வருஷம் அடித்து அடித்து அலுத்துப்போய் திடீரென்று நின்று விடலாமா என்று யோசிக்கும் இதயம். அவளுக்கு உடம்பு பதறும்; சில்லிட்டு விடும். இந்த மாதிரி மூன்று தடவை வந்திருக்கிறது. இந்தத் தடவை தீவிர மாக இருந்திருக்க வேண்டும். என் தம்பி அடித்த தந்தியின் சுருக்கமான வாசகங்கள்… ‘அம்மா கவலைக்கிடம். உடனே வா!’

இதுவரை நான் மேம்போக்காகவே எழுதி வந்திருக்கிறேன். என் உள்ளத்தின் பதற்றத்தைச் சமாளிக்க, என் அம்மாவுக்கு ஒன்றும் ஆகியிருக்காது என்ற நம்பிக்கையை வலியுறுத்த இப்படி எழுதிக்கொள்கிறேன். என் மனத்தின் ஆழத்தில் என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் ‘அம்மா அம்மா அம்மா’ என்று அடித்துக்கொள்வதை யும், என்னுள் இருக்கும் சில இனம் தெரியாத பயங்களையும் நம்பிக்கைகளையும் வார்த்தைகளில் எழுதுவது கஷ்டம். யட்சன் போலப் பறந்து சென்று அவளை உடனே பார்க்க வேண்டும். ‘அம்மா, உன் டில்லி புத்திரன் இதோ வந்துவிட்டேன். ஏரோப்ளேனில் உன்னைப் பார்க்கப் பறந்து வந்திருக்கிறேன். இதோ, உன் அருகில் உன் தலையைத் தடவிக் கொடுக்கிறேன். உனக்குக் குணமாகி விடும்’ – பக்கத்து வீட்டு சாரதாவிடம் ‘என் பிள்ளை பிளேனில் வந்தான்’ என்று பெருமை அடித்துக்கொள்வதற்காகவாவது பிழைத்துகொள்வாள். அதற்கு எனக்கு ரூபாய் 325 தேவை.

எங்கே போவேன் பணத்திற்கு? யார் தருவார்கள்? என் நண்பர்களைப் போய் 29-ம் தேதி கேட்டால் ஹாஸ்யம் கேட்டதுபோல் சிரிப்பார்கள். என் மனைவியிடம் நகைகள் கிடை யாது. என் சொத்தைப் பற்றி முன்னமேயே தெரிவித்திருக்கிறேன். அதனால்தான் ராமநாதனிடம் கேட்கலாம் என்று தீர்மானித்தேன்.

ராமநாதன் எனக்குக் கிட்டத்திலும் அல்லாத, தூரத்திலும் அல்லாத உறவினர். என்ன உறவு என்கிற விவரங்கள் அநாவசியம். செக்ரட்டரியாக இருக்கிறார், முக்கியமான மந்திரிக்கு. சர்க்கார் எத்தனையோ மில்லியன் டன் கோதுமை கடன் வாங்கும்போது, இவர்தான் வெள்ளைக்காரர் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு ஜோடியாகக் கையெழுத்துப் போடுவார். போகாத தேசமில்லை. டில்லியில் நான் எட்டு வருஷங்கள் இருந்திருக்கிறேன். இரண்டு தடவை இவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். இரண்டு தடவையும் நடந்தது, எழுதும்படியாக இல்லை. நானும் இவரும் இருப்பது வேறு வேறு மட்டங்களில். உறவுப் பிணைப்பை வைத்துக்கொண்டு இந்த வித்தியாசத்தை இணைப்பது சாத்தியமாகாது என்று அறிந்து, மரியாதையாக ஒதுங்கிவிட்டேன். தற்போது என் பணத் தேவை, அந்த அவமானங்களை எல்லாம் மறக்கச் செய்துவிட்டது. அவரைப் பார்க்கக் கிளம்பினேன்.

ஹேஸ்டிங்ஸ் ரோடில், அமைதியில் பச்சைப் புல்தரை ஏக்கர்களுக்கு மத்தியில், நாவல் மரங்களின் நிழலில், ஏர்கண்டிஷனர், நாய், அம்பாஸடர் கார் சகிதம் இருந்தது அவர் வீடு. வீட்டு வாசலில் கதர் அணிந்த சேவகர் என்னைத் தடுத்து நிறுத்தி விசாரித்தார். என் பெயர் சொல்லி, நான் அவர் உறவுக்காரர் என்பதையும் சொன்னேன். என்னை ஏதோ நாய் கொண்டு வந்து போட்ட வஸ்துவைப் போலப் பார்த்து, உள்ளே போகுமாறு சொன்னார் சேவகர் (‘ர்’ மரியாதையைக் கவனிக்கவும்).

ராஜகுமாரன் மாளிகையில் ‘சிண்ட்ரெல்லா’ நுழைவதுபோல் உணர்ந்தேன், உள்ளே செல்லும்போது.ஒரு ஹால்… தவறு, ஹா££ல்! கீழே கம்பளம். பக்கத்தில் ‘டெலிஃபங்கன்’ கம்பெனியின் ரேடியோகிராம் (ராமநாதன் அவர்கள் மேற்கு ஜெர்மனி சென்றிருக்கிறார்). டிரான்சிஸ்டர், மடங்கிப் படுக்கையாகத் தயாராக இருக்கும் சோபா. ரெஃப்ரிஜிரேட்டர் திறந்திருந்தது. அதில் அழகாக அடுக்கி வைக்கப்பட்ட சாராய பாட்டில்கள். மேலே காந்தி படம்.

ரேடியோகிராமிலிருந்து பலமாக கிதார் சங்கீதம் கேட்டுக்கொண்டிருந்தது. அதன் துடிப்பிற்கு ஏற்ப கால்களால் தாளம் போட்டுக்கொண்டு ஓர் இளைஞன், சோபாவில் முக்கால்வாசி படுத்துக் கொண்டு, ‘ப்ளேபாய்’ வாசித்துக்கொண்டிருந்தான். நான் வந்ததையோ, நின்றதையோ கனைத்ததையோ கவனிக்கவில்லை. அருகே சென்று, தாழ்வாக இருந்த நடுமேஜையில் ஒரு தட்டு தட்டினேன். கவனித்தான்.

”யெஸ்..?” என்றான் பையன். ராமநாதனின் ஒரே பையன்.

”அப்பா இருக்கிறாரா?”

”ஹி இஸ் டேக்கிங் பாத். ப்ளீஸ் வெய்ட்” என்றான்.

அவனுக்கு முடிவெட்டு தேவையாய் இருந்தது. அணிந்திருந்த சட்டை, பெண்கள் அணியவேண்டியது. போட்டிருந்த பேன்ட்டில் நுழைவதற்கு அசாத்திய சாமர்த்தியம் வேண்டும்.

”ஐம் ராஜேஷ்” என்று என்னை நோக்கிக் கையை நீட்டினான்.

”என் பெயர் ராஜாராமன். நான் உங்களுக்கு ஒரு விதத்தில் உறவு” என்றேன். நான் தமிழை விடுவதாக இல்லை.

”இஸ் இட்?” என்றான்.

”நீ அவர் பையன்தானே?”

”யெஸ்!”

”தமிழ் தெரியுமா?”

”யெஸ்!”

”பின் தமிழில் பேசேன்!”

”ஹான்ஸ்ட்லி ஐ லாஸ்ட் டச்” என்று சிரித்தான். எனக்கு லேசாகத் தலைவலிக்க ஆரம்பித்தது. மெதுவாக எழப்போகும் கோபத்துக்கு அறிகுறி.

”நீ என்ன படிக்கிறே?”

”ப்ளேபாய்”

”இதில்லை. எத்தனாவது படிக்கிறே?”

”சீனியர் கேம்பிரிட்ஜ்!”

ராமநாதன் உள்ளேயிருந்து வந்தார். நேராக இடப்பக்கம் இருந்த அறையை நோக்கி நடந்தார்.

”நமஸ்காரம் சார்!”

தயங்கி என்னைப் பார்த்தார். கண்களில் அவர் ஞாபகத்தில் என்னைத் தேடுவது தெரிந்தது… ”ஓ, ஹலோ! வாப்பா ராமச்சந்திரன்.”

”ராஜாராமன் சார்!”

”ஓ, எஸ்! ராஜாராமன், சௌக்யமா? ஒரு நிமிஷம்” என்றபடி மறைந்தார்.

ஓர் அசிங்கமான தயக்கம். ராஜேஷ் என் எதிரில் நகத்தைக் கடித்துக்கொண்டிருந்தான். அவன் வயதில் நான் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் கோல்ட்ஸ்மித் படித்துக்கொண்டு இருந்தேன். இவன் ட்விஸ்ட் சங்கீதமும், ஓர் இடத்திலும் தேங்காத இந்த யுகத்தின், இந்த நிமிஷத்தின் அமைதியற்ற துடிப்புமாக, என்னை மியூசியம் பிறவியாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

ராமநாதன் அறையை விட்டு வெளியே வந்தபோது, வெளியே கிளம்புவதற்குத் தயாராக முழுக்க உடையணிந்திருந்தார். பீர் அதிகம் எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட இளம் தொந்தி. கண்ணாடி, அலட்சியம், புன்னகை, அபார உயரம், கீழ் ஸ்தாயிப் பேச்சு எல்லாம் வெற்றிக்கு அடையாளங்கள்.

”ஸோ..?” என்றார், என்னைப் பார்த்து. மேஜை மேல் வைத்திருந்த சிகரெட் பெட்டியை எடுத்து, தேவ் ஆனந்த் போல் ஒரு தட்டுத் தட்டி வாயில் பொருத்தினார். ”ஸ்மோக்..?” என்றார். ”இல்லை” என்றேன். லைட்டரின் ‘க்ளிக்’கில் ஜோதி எம்பிப் பற்ற வைத்துவிட்டுத் தணிந்தது.

ராஜேஷ், ”டாட்! கேன் ஐ டேக் தி கார்?” என்றான்.

”நோ, ராஜ்! எனக்கு ஒரு கான்ஃபரன்ஸ் போக வேண்டும்.”

”ஐ வில் ட்ராப் யூ” என்றான் கெஞ்சலாக.

”ஓ.கே! ஒரு அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணு. பெட்ரூமில் சாவி இருக்கிறது. அம்மாவை எழுப்பாதே. அவள் தூங்கட்டும்!”

நான் மரமண்டை இல்லை. எனக்கு ஐந்து நிமிஷம் கொடுத்திருக்கிறார். அதற்குள், வந்த காரியத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.

”யெஸ்… ராமச்சந்திரன், எப்படி இருக்கே? ஜானகி எப்படி இருக்கா?”

”ராஜாராமன், சார்!”

”என்ன?”

”என் பெயர் ராஜாராமன், சார்!”

”யெஸ்! ராஜாராமன். இல்லை என்று யார் சொன்னார்கள்! ஒருவரும் அதை மறுக்கவில்லையே!” என்று சிரித்தார்.

”சரி, ஜானகி எப்படி இருக்கா?”

”ஜானகி செத்துப் போய் இரண்டு வருஷங்கள் ஆச்சு!”

”ஓயெஸ்… ஓயெஸ்… ஐ ரிமெம்பர் நௌ. இட்ஸ் எ பிட்டி. அவளுக்கு எத்தனைக் குழந்தைகள்?”

”ஒரே பையன். இரண்டு வயசுப் பையன்.”

”ஆமாம்… ஜானகி தம்பி ஒருத்தன் டில்லியிலே செக்ரடேரியட்டிலே வேலையாயிருக்கிறான் இல்லையா?”

‘விண் விண்’ என்று தலைவலி தெறித்தது எனக்கு. கோபம் கலந்த தலைவலி!

”நான்தான் சார், ஜானகி தம்பி!”

”ஸோ ஸாரி! எனக்கு ரொம்ப மோசமான மெமரி. நம்ம ரிலேஷன்ஸ் கூட டச்சே விட்டுப்போச்சு! சௌக்கியமா இருக்கிறாயா?”

”சௌக்கியம் சார்!”

”இப்ப என்ன வேணும் உனக்கு?”

அந்த நேரம் வந்துவிட்டது. திடீரென்று இரண்டடி உயர மனிதன் போல் உணரும் நேரம். இந்திரன் போல் கூச்சப்பட வேண்டிய நேரம். பணம் கேட்க வேண்டிய நேரம்.

”எனக்கு 350 ரூபாய் பணம் வேணும், சார்! எங்க அம்…”

”நினைச்சேன்! எப்ப வேணும்?”

”இப்ப சார்! எங்க அம்மா…”

”இரு, என்கிட்ட பணமா இருக்கானு பார்க்கிறேன்” என்று பர்சை எடுத்தார். பிரித்தார். எட்டிப்பார்த்தார். ”மஹும்! இல்லை. ‘செக்’ எழுதித் தருகிறேன். ஸ்டேட் பாங்கிலே மாத் திக்கிறாயா?”

”சரி, சார்! ரொம்ப வந்தனம். எங்க அம்மாவுக்கு…”

”திருப்பித் தருவாயா?”

”கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பி விடுகிறேன், சார்! எங்க அம்…”

எழுந்துபோய்விட்டார், ‘செக்’ புஸ்தகம் கொண்டுவர.

‘மடையனே, என்னைப் பேச விடேன்! எனக்கு இந்தப் பணம் எதற்கு என்று சொல்ல விடேன்! என் அம்மாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால்தான் உன்னிடம் வந்து தொங்குகிறேன் என்று பேச விடேன்!’

‘செக்’ புஸ்தகம் கொண்டு வந்தார். பேனாவைப் பிரித்தார்.

”உன் முழுப்பெயர் என்ன?”

சொன்னேன்.

”ஸ்பெல்லிங்..?”

சொன்னேன்.

‘செக்’ எழுதி கையில் கொடுத்தார். கொடுக்கும்போது, ”நான் இதை அடிக்கடி செய்யறதா எனக்குப் படுகிறது” என்றார்.

”எதை சார்?”

”இந்த மாதிரி உறவுக்காரங்களுக்கு ‘செக்’ எழுதறதை!”

”இல்லை, சார்! என் கேஸிலே ரொம்ப அவசரமான தேவை. எங்க அம்மாவுக்கு சீரி…”

”அது சரி, தேவை எல்லாருக்கும் தான் இருக்கு. இந்தத் தேசத்துக்கே பணம் தேவை. உன் கேஸையே எடுத்துக்கலாம். இத்தனை நாள் டில்லியிலே இருந்திருக்கே. எத்தனை தடவை வீட்டுக்கு வந்திருக்கே?”

என் கோபம், என்னைப் பதில் சொல்ல விடவில்லை.

”எப்போ வருகிறாய்? உனக்குப் பணம் தேவையாக இருக்கும்போது! நான்தான் இருக்கேனே ‘செக்’ எழுதுகிற மிஷின்! என் கழுத்தில் போர்டு போட்டுத் தொங்கவிட்டிருக்கு இல்லையா, ‘ஏமாளி’ என்று. நம்ம சவுத் இண்டியன் மென்ட்டாலிட்டியே அப்படி! நான் பொதுவாகத்தான் சொல்கிறேன். உன்னைத் தனியாகச் சொல்லவில்லை…”

அவர் மேலே பேசப் பேச, என் கோபம் ‘போயிங்’ விமானம் புறப்படும் சப்தம் போல் மெதுவாக ஆரம்பித்து, உலகத்தையே சாப்பிடும் வேதனை எல்லை வரை உயர்ந்தது.

”அன்னிக்கு அப்படித்தான் ரெண்டு பேர் வந்தாங்க… நாங்க ரெண்டு பேரும் உங்களுக்கு உறவு…”

பாதியில் நிறுத்திவிட்டார். ஏன்? நான் அவர் கொடுத்த ‘செக்’கை அவர் முகத்தின் முன்னால் நாலாகக் கிழித்துப் பறக்கவிட்டேன். ”சார்! உங்க பணம் எனக்கு வேண்டாம். உங்களுக்கு ட்ரபிள் கொடுத்ததுக்கு மன்னிச்சுக்குங்க. உங்க கிட்டே வந்ததே தப்பு. தேவை, மிக மோசமான தேவை.இல்லைன்னா உங்களுக்குத் தொந்தரவு கொடுத்திருக்க மாட்டேன். நீங்க கான்ஃபரன்ஸூக்குப் போங்க. இந்த தேசத்தைப் பரிபாலனம் பண் ணுங்க!”

அவர் முகம் மாறியது. ”ராஜாராமன், கடன் வாங்க வந்தவனுக்கு இவ்வளவு கோபம் உதவாது! நீ இப்படிக் கேவலமாக நடந்துகொண்டதற்கு உன்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவேண்டும். மரியாதையாகப் போயிடு. கெட் லாஸ்ட் யூ பாஸ்டர்ட்!”

”கெட் ரிச் யூ பாஸ்டர்ட்!” என்று சிரித்தேன்.

”மன்ஸாராம்!” என்று சேவகனைக் கூப்பிட்டார்.

மன்ஸாராம் வருவதற்குள் ராஜாராம் கழண்டுகொண்டேன்.

வெளியில், வெயிலில் வந்து நின்ற என் நிலைமையைப் பாருங்கள். கௌரவம், மானம் என்பதெல்லாம் பணமுள்ளவர்களுக்கு உரியவை. எனக்கு ஏன்? அவர் சாதாரணமாகத் தான் பேசினார். அவர் வெறுப்பு அவருக்கு. அந்த வார்த்தைகளைப் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்து விட்டு, ‘செக்’கை வாங்கி மாற்றி டிக்கெட் வாங்கியிருக்கலாம்.

ஆனால், அந்தச் சமயம் நான் செய்த முற்றிலும் எதிர்பாராத செயலில், அந்த ஒரு தருணத்தில் பூர்ணமாக வாழ்ந்தேன் நான்.

நீங்கள் இவ்வளவு பொறுமையாக இதுவரை படித்ததற்கு நன்றி! கடனாக 325 ரூபாய் கொடுங்களேன். கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிக்கொடுத்து விடுகிறேன். என் அம்மாவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. அவளை உடனே போய்ப் பார்க்க வேண்டும், ப்ளீஸ்!

– 29-06-1969

Sila Vithyasangal

முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய சிறுகதைகளை இப்போது மறுபடி நோக்கும்போது கதையின் கவலைகள் எதையும் திருத்தத் தேவையில்லை என்பது திருப்தி அளிக்கிறது. முப்பது வருடங்களில் விலைவாசி தான் உயர்ந்திருக்கிறது முப்பது மடங்காக.

– சுஜாதா

Advertisements

7 thoughts on “சில வித்தியாசங்கள் – சுஜாதா

 1. BaalHanuman December 13, 2012 at 1:53 AM Reply

  சில வித்தியாசங்கள்‘ சுஜாதாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு.பல பதிப்புகள் கண்ட பின் புதிய பதிப்பாக வெளிவருகிறது.சுஜாதா 60களிலும், 70களிலும் எழுதிய இந்தக் கதைகளில் விலைவாசியை தவிர மற்ற விஷயங்கள் எல்லாம் இன்றும் செலாவணியில் இருப்பதாக சுஜாதா சொல்லியிருக்கிறார்.இதிலுள்ள ‘ஒரே ஒரு மாலை‘,’ரஞ்சனி‘,’சில வித்தியாசங்கள்‘ போன்ற கதைகள் இன்றும் பலரின் நினைவில் நிலைத்திருக்கின்றன. இப்போது ஒரு புதிய இளைய சமுதாயம் இந்தக் கதைகளை வாசிக்கும் போது சுஜாதாவின் சிறுகதை திறமையும் 60களில் முதலில் எழுத வந்த போது அவர் கொண்டு வந்த மாற்றங்களையும் முதல் விஞ்ஞான கதைகளையும் உணர்ந்து கொள்வர்.

 2. rathnavelnatarajan December 13, 2012 at 2:26 AM Reply

  அருமை.

  ”அது சரி, தேவை எல்லாருக்கும் தான் இருக்கு. இந்தத் தேசத்துக்கே பணம் தேவை. உன் கேஸையே எடுத்துக்கலாம். இத்தனை நாள் டில்லியிலே இருந்திருக்கே. எத்தனை தடவை வீட்டுக்கு வந்திருக்கே?”

  • BaalHanuman December 14, 2012 at 1:13 AM Reply

   நன்றி அய்யா!

 3. venkat December 13, 2012 at 3:19 AM Reply

  அருமையான கதை. வார்த்தைகள் பிரயோகம், அமைப்பு என அனைத்திலும் அசத்துகிறார் தலைவர்…..

  • BaalHanuman December 14, 2012 at 1:14 AM Reply

   உண்மைதான் வெங்கட். அவர் 1969-ல் எழுதிய கதை இன்றும் படிக்க எவ்வளவு fresh ஆக இருக்கிறது ?

 4. பாரதி மணி December 14, 2012 at 10:33 AM Reply

  எனக்கும் இந்தக்கதையில் ஒரு ஒட்டுதல் உண்டு. இதே மாதிரி எனக்கும் நடந்திருக்கிறது. ஆனால் பணவிஷயமல்ல.

  தில்லிக்குப்போன புதிதில் விலாசமில்லாமல் ஒரு சாதாரணனாக இருந்த நேரம். என் தூரத்து உறவு IAS ஆபீசரின் வீட்டுக்கல்யாணத்துக்குப்போய், இதேபோல் அவர் இடக்காகப்பேச, அவமானப்பட்டு, மனதுக்குள் impotent anger கொப்புளிக்க, பரிசுப்பொருளைக்கொடுத்துவிட்டு, அக்கா வீட்டுக்கு வந்து சாப்பிட்டேன்!

  பல வருடங்களுக்குப்பிறகு, எனக்கு கார், பங்களா வசதி வந்தபிறகு, என் வீட்டுக்கு மாலை விருந்துக்கு வந்தவரிடம், பத்துப்பேர் முன்னாடி, அந்த சம்பவத்தை சொல்லிக்காட்டி, மன்னிப்பும் கேட்கவைத்தேன்!

  அந்த வகையில் இந்தக்கதை எனக்கு மிகவும் பிடித்தது

 5. Suresh December 14, 2012 at 2:17 PM Reply

  பாரதி மணி Sir. I don’t know when i read this story, Somehow i remembered you. The reason might be, I have been reading all your posts and the name ‘Delhi’ stays in my mind.
  Thanks
  Suresh

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s