11-எழுத்து-படிப்பு – சுஜாதா


இதன் முந்தைய பகுதி…

https://balhanuman.files.wordpress.com/2010/05/logotimepass.jpg?w=300sujathavaik_kelungal

 24 ரூபாய் தீவு

மலர்க்கொடி, காஞ்சிபுரம்.

? நீங்கள் ஏன் தொலைகாட்சி தொடர்களுக்கு கதை எழுதுவதில்லை ?

! அண்மையில் ‘சித்தி’ பாஸ்கருடன் பேசிக்கொண்டிருந்தேன். தொலைக்காட்சி தொடர் என்பது பாசஞ்சர் ரெயில் போல என்றேன். அவர், ‘அது மட்டும் இல்லை, எப்ப வேணா ட்ராக் மாத்தலாம், யாரை வேணா நிறுத்தி இறக்கி விடலாம், மறுபடியும் ஏத்திக்கலாம். மெல்லப் போகும் பாசஞ்சர்’ என்றார். ‘உங்களுக்கு வராது’ என்றார். என் ‘24 ரூபாய் தீவை‘ சினிமாவாக எடுக்கப் போகிறார்.

 உள்ளம் துறந்தவன்

சௌந்தர்யா, திருச்சி.
? பெண்களை சுவாரசியமாக வர்ணிக்கும் நீங்கள், ஆண்களை அப்படி வர்ணிப்பதில்லையே, ஏன் ?

! வர்ணித்திருக்கிறேன். உங்களுக்கு ஞாபகமில்லை. அவ்வளவுதான். அண்மையில் எழுதிய ‘உள்ளம் துறந்தவ‘னில் (கல்கி) அழகேசன் ஒரு உதாரணம். என்ன, கொஞ்சம் அல்பாயுசாகச் செத்துப் போய்விடுகிறான், அவ்வளவுதான்.

 ரத்தம் ஒரே நிறம்

ஜி.ஜோசப்ராஜ், புதுக்கோட்டை.
? டான் ப்ரௌனின் ‘டாவின்சி கோட்’ படித்தீர்களா ? தமிழில் ஏன் அது மாதிரியான புது நாவல் முயற்சிகள் வருவதில்லை ?

! தமிழில் அவ்வகையான நாவல்கள் எழுத உலகப்புகழ் பெற்ற ‘லாஸ்ட் சப்பர்’ போன்ற சித்திரம் தமிழ் நாட்டில் வேண்டும். ஐகனா கிராஃபி பற்றிய ஆராய்ச்சி தெரிந்தவர்கள் வேண்டும். அவர்களுக்கு ஜெட் வேகத்தில் செல்லக் கூடிய தமிழ் நடை வேண்டும். நிறைய நிறைய ஓய்வும், பண பலமும் வேண்டும். டாவின்சி ரேஞ்சுக்கு இல்லாவிட்டாலும், சிப்பாய் கலகத்தை ஆராய்ச்சி செய்து, அதில் ஒரு தமிழன் கலந்து கொள்வதாக, ‘கருப்பு சிவப்பு வெளுப்பு‘ என்ற ஒரு தொடர்கதை ஆரம்பித்தேன். ‘கையை வெட்டுவேன் நிறுத்து’ என்றார்கள். எனக்கு இடது கையால் ஷேவ் செய்து பழக்கமில்லாததால் நிறுத்தி விட்டேன். என்னதான் ‘ரத்தம் ஒரே நிறம்‘ என்று எழுதினாலும் ஆரம்ப உற்சாகத்தை இழந்து விட்டேன்.

ஒரு யோசனை தோன்றுகிறது. ராஜாரவிவர்மாவின் லக்ஷ்மி, சரஸ்வதி சித்திரங்களுக்கு யார் மாடலாக உட்கார்ந்தார்கள் என்று ஆராய்ந்து ஒரு நாவல் எழுதலாம்.

சி.கார்த்திகேயன், சாத்தூர்.
? மணிரத்னம் படத்திற்கு வசனம் எழுதுவதற்கும், ஷங்கர் படத்திற்கு வசனம் எழுதுவதற்கும் என்ன வித்தியாசம் ?

! மணிரத்தினம் லைன் ஆர்டர் மட்டும் தருவார். ஒரு முறை அதைச் சுருக்கமாக விளக்குவார். அதன்பின் இதை நீங்கள் சீனாகப் பார்த்தால் எப்படி எழுதுவீர்கள், அதை எழுதித் தாருங்கள் என்பார். சிலவேளை சிறுகதையாகக் கூட எழுதச் சொல்வார். எழுதியதிலிருந்து அவர் தேர்ந்தெடுத்து அவருடைய வர்ஷனை எழுதி எனக்கு திருப்பி அனுப்புவார். பொதுவாக, அவர் எழுதியது இன்னும் கூர்மையான காட்சியாக இருக்கும்.

https://balhanuman.files.wordpress.com/2010/10/shankar.jpg?w=276

ஷங்கர் ஒவ்வொரு சீனையும் ஒரு டேப்பில் பதிவு செய்து அனுப்புவார். முக்கியமான வசனங்கள் அதிலேயே இருக்கும். அவற்றை நான் சற்று மாற்றி சுருக்கி எழுதி அனுப்புவேன். இரண்டு பேருடைய சீன்களையும் அருகருகே வைத்துக் கொண்டு மூன்றாவது பதிவு ஒன்றை எனக்கு அனுப்புவார். அதை ஓகே சொன்னதும் மாற்ற மாட்டார்.

sujathavaik_kelungal

கேள்வி பதில் தொடரும்…

 24 ரூபாய் தீவு

ஓர் அப்பாவி நிருபனின் வாழ்க்கையில் யதேச்சையாக இடறுகிறது ஓர் அழகுப் பெண்ணின் சடலமும், ஷோக்குக் கவிதைகள் எழுதிய டயரியும்…! நொடி நாழிகை கண்ணுக்குத் தென்பட்டு காணாமல் போன டயரியின் காரணமாகவே விறுவிறுப்பாகிறது ஆட்டம். அடி உதை ரத்தம், தொடங்கி அரசியல் கரங்கள் ஆட்டுவிக்கும் மாயச் சுழலில் சிக்கி அல்லல்படுகிறான் அந்த நிருபன். கண்ணுக்குத் தெரியாத எதிரிகளால் பந்தாடப்படும் நிருபனின் அவஸ்தைகள், வலிகள், வேதனைகள் நடுவே உண்மைகளை சளைக்காமல் தேடும் அவனது விடாப்பிடியான போராட்டத்தை விவரிக்கும் ‘24 ரூபாய் தீவு’ ஒரு ஜெட் வேக கதை.

 உள்ளம் துறந்தவன்

கல்கி இதழில் தொடராக வந்து வாசகர்களின் உள்ளம் கவர்ந்தது இந்த ‘உள்ளம் துறந்தவன்.‘ இன்சாஃப் என்கிற மகா பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தி ராகவேந்தர். அவரது வளர்ப்பு மகள் மஞ்சரி, ஏழையான அழகேசனைக் காதலிக்கிறாள். இன்சாஃபின் பெரும்பாலான ஷேர்கள் அவள் பெயரில் உள்ளன. ராகவேந்தர் திடீரென உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்படுகிறார். அவருக்கு உடனடியாக இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய நிர்பந்தம். இந்தச் சூழலில் ராகவேந்தரின் உறவுகள் அவரது கம்பெனியைக் கைப்பற்ற சூழ்ச்சி செய்கிறார்கள். அதில் மஞ்சரி நிறையவே இழப்புகளைச் சந்திக்கிறாள். போராடுகிறாள். வீழ்த்துகிறாள்.

உள்ளம் துறந்தவன்” கல்கி இதழில் தொடர்கதையாக வந்தபோது வாசகர்களின் பேராதரவைப் பெற்றது கல்கியின் ஆசிரியர் சீதா ரவி அவர்களும் மற்ற ஆசிரியர் குழுவினரும் அவ்வப்போது என்னை உற்சாகப் படுத்தினார்கள்.ஒரு முக்கியமான வார பத்திரிக்கையிலும் இணைய தளத்திலும் சிறப்பாக  வெளியிடப்பட்ட இந்த நாவல் உடனே புத்தக வடிவில் வெளிவருவதற்கு விசா பப்ளிகேஷன் திருப்பதி அவர்கள் ஆர்வமாக இருந்தார்.

உள்ளம் துறந்தவ“னில் இதயமாற்று சிகிச்சை தொடர்பான செய்திகளில் கற்பனை எதுவும் இல்லை.மாற்றுவதற்கான சூழ்நிலையும் காதலும் அதைச் சார்ந்த  இழப்பும் தான் கதைக்கு வலுவூட்டுவது.

அழகேசனின் தாயைப் போல் மனவலிமை படைத்த ஏழைகள் பலர் நம்மிடையே உள்ளனர்.

 ரத்தம் ஒரே நிறம்

சிப்பாய்க் கலகம் என்று அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரின் பின்புலத்தில் எழுதப்பட்டது. சுஜாதாவின் ‘ரத்தம் ஒரே நிறம்.‘ இந்தியா ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்த இக்காலகட்டத்தின் பச்சை ரத்தப் படுகொலைகளும் குரூரங்களும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து உயிர்த்தெழுகின்றன. தனிமனித விருப்பு வெறுப்புகளும், இலட்சியவாதமும் ஒன்றிணையும் புள்ளியின் உணர்ச்சிப் பெருக்கையும் துயரங்களையும் பிரமாண்டமாகச் சித்தரிக்கும் சுஜாதா சரித்திரப் புனைகதை வடிவிற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறார். குமுதத்தில் ‘கறுப்பு சிவப்பு வெளுப்பு‘ என்ற பெயரில் சில அத்தியாயங்கள் வெளிவந்து கடும் சர்ச்சைகளைத் தோற்றுவித்ததால் நிறுத்தப்பட்டு மீண்டும் ‘ரத்தம் ஒரே நிறம்‘ என்ற பெயரில் எழுதப்பட்டது இந்த நாவல்.

Advertisements

3 thoughts on “11-எழுத்து-படிப்பு – சுஜாதா

 1. Mohankumar December 7, 2012 at 4:40 AM Reply

  ஷங்கர் Vs மணிரத்னம் படங்கள் ஒப்பீடு சுவை.

  24 ரூபாய் தீவு படமாய் எடுக்கப்படவே இல்லை 😦

  • BaalHanuman December 7, 2012 at 5:26 AM Reply

   ஒண்டித்வனி-(24-ரூபாய்-தீவு)-பற்றி-சுஜாதா….

   குமுதத்தில் வெளிவந்த மற்றொரு தொடர்கதை ‘24 ரூபாய் தீவு‘ . ஓர் இளம் பத்திரிகை நிருபரைப் பற்றியது. அவன் கையில் ஒரு டயரி கிடைக்கிறது. அதில் ஓர் அரசியல்வாதியைப் பற்றிய அந்தரங்கமான விஷயங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி எழுதப் போவதாகச் சொல்லியிருக்கிற வேளையில், டயரியைத் தொலைத்துவிடுகிறான். அதைத் தேடி மூர்க்கர்கள் அவன் வீட்டுக்கு வந்து வீட்டையும் அவன் வாழ்க்கையையும் கலைத்துப் போடுகிறார்கள். அவர்களுடன் அவனும் அந்த டயரியைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டியது அவசியமாகிறது.இந்தக் கதை முதலில் மலையாளத்தில் எனது நண்பர் காலஞ்சென்ற வேணு கொடுங்காளூர் மொழிபெயர்ப்பில் வந்தது. அப்போது கன்னடத்திலும் மொழிபெயர்ப்பில் என் கதைகள் ‘கர்மவீரா’ , ‘சுதா’ என்ற பத்திரிகைகளில் வந்துகொண்டிருந்தன. இதைப்பற்றி கேள்விப்பட்ட நாகாபரணா என்கிற பிரபல இயக்குனர், அதைத் திரைப்படமாக எடுக்க விரும்பி, என்னை வந்து சந்தித்தார்.

   கன்னடத் திரைப்பட உலகம் அப்போது ஆரோக்கியமாக இருந்தது. ராஜ்குமார், விஷ்ணுவர்தன், அம்பரீஷ், ஸ்ரீநாத் போன்றவர்கள் ஒரு பக்கம் குடும்பப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தாலும், கிரீஷ் கர்னாட், பி. வி.காரந்த், சந்திரசேகர், கம்பார் போன்றவர்கள் ‘சம்ஸ்காரா’ , ‘வம்சவர்ஷா’ போன்ற படங்கள் மூலம் அதை தேசிய அளவுக்கு உயர்த்தியிருந்தார்கள். நாகாபரணா அந்தப் புதிய கன்னட சினிமாவின் இயக்குனர்களில் ஒருவர். தியேட்டர் பின்னணியிலிருந்து வந்தவர். ‘மைசூரு மல்லிகே’, ‘நாகமண்டலா’ போன்ற நல்ல படங்களை இயக்கியவர். அதனால் சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டேன். தமிழில்தான் என் நாவல்கள் சரியாக வரவில்லை. கன்னடத்தில் ஜொலிக்கப் போகிறது. தேசிய அளவில் அடையாளம் பெற்று டில்லியில் அவார்ட் கிடைக்கப் போகிறது. அதற்கு என்ன சட்டை போட்டுக் கொள்ளலாம் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். விதி ஒரு ஓரத்திலிருந்து மெல்ல நகைத்துக்கொண்டிருந்தது.

   ‘ஒண்டித்வனி‘ (தனிக்குரல்) என்ற பெயர் வைத்து நாகாபரணா படப்பிடிப்பைத் துவங்க பூஜை போட்டார்கள்.

   24 ரூபாய் தீவு‘ கதையைப் பற்றி, அப்போது முன்னணியில் இருந்த நடிகர் அம்பரீஷ் கேள்விப்பட்டார். ‘ஒள்ளே கதே’ என்று தன்னிச்சையாக அதில் நடிக்கிறேன் என்று முன்வந்தார். அதில் நடிக்கவிருந்த சுந்தர்ராஜன் உடனே நீக்கப்பட்டார். கதைக்குக் கேடுகாலம் துவங்கியது. கன்னட நடிகை மஞ்சுளாவும் ‘நானும் உண்டு’ என்று சேர்ந்து கொண்டார்.

   தயாரிப்பாளருக்கு இரட்டிப்பு சந்தோஷம்.‘ஒண்டித்வனி‘ -யின் நடிகர்கள் பட்டியல் திருத்தப்பட்டது. அம்பரீஷ் ஒரு வகையில் சூப்பர் ஸ்டார் கேட்டகெரி — 2 அந்தஸ்தில் இருந்தார். (ராஜ்குமார் நம்பர் — 1 ) ‘அம்பரீஷுக்கேற்ப சின்ன மாற்றங்களும் சமரசங்களும் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு சின்ன Fight சீனு, சிஸ்டர் வச்சு ஒரு சாங் அவ்வளவுதான்’ என்று தயாரிப்பாளர் சொன்னார். ‘படப்பிடிப்பு பெங்களூரிலிருந்த மைசூர் ராஜா பேலஸில் நடந்து கொண்டிருக்கிறது, வந்து பாருங்கள்’ என்றார். போனேன்….. நாகரா அலற, மஞ்சுளா நடனமாட சுற்றிலும் திண்டு போட்டு சேட்டுகள் வீற்றிருந்து நோட்டுகளை தலையைச் சுற்றி விசிறிக்கொண்டிருந்தார்கள். நான் ‘இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது ?’ என்று என்னுடைய பழக்கமாகிவிட்ட கேள்வியைக் கேட்டேன். ‘அம்பரீஷ் நடிப்பதால் கொஞ்சம் கமர்ஷியல் விஷயங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. மற்றபடி நீங்கள் எழுதியபடியே எடுத்திருக்கிறோம்’ என்றார்.

   படம் வெளிவந்து கினோ தியேட்டரில் பார்த்தேன். உயிரோட்டமுள்ள ஒரு கதையை இயன்ற அளவுக்கு விகாரப்படுத்தி இருந்தார்கள். வெளியே வந்த ரசிகர்கள், ‘கதே பரிதவனு யாவனப்பா ?’ என்று அதட்டிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் மப்ளரால் முகத்தை மறைத்துக்கொண்டு விலகினேன். ரசிகர்களாலும் நிராகரிக்கப்பட்டு ஒரு வாரத்தில் தூக்கப்பட்டது.

   நாகாபரணா திறமையுள்ள டைரக்டர்தான் . ஏழோ, எட்டோ தேசிய விருதுகள் வாங்கியவர். அப்பேற்பட்ட டைரக்டராலும் அந்தப் படத்தைக் காப்பாற்ற முடியவில்லை.

   நீதி: ஒரு கதையை சினிமா எடுத்துக் கெடுக்க நிறைய மார்க்கங்கள் உள்ளன.

   உங்களுடைய ‘இருபத்தி நான்கு ரூபாய் தீவு’ கன்னட பதிப்பில் நடித்தது .இப்போது காவிரி பிரச்னைக்காக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அம்பரீஷா ? ‘ என்று சில சந்தேக வாசகர்கள் ஈ-மெயில் அனுப்பியிருந்தார்கள். அவரேதான்.அன்று படத்தைக் குழப்பினார். இன்று காவிரியை.

 2. Nanji September 10, 2015 at 11:46 AM Reply

  சுஜாதாவின் எழுத்தை 20 வருடங்கள் கழித்து மறுபடி படிக்கையில் அதில் இழையோடும் மெலிதான நகைச்சுவை freshஆக இருக்கிறது. இந்தக் கட்டுரையில் அவருடைய trademark comedy பல இடங்களில் மிளிர்கிறது. படமாக எடுத்து அவர் கதையை கெடுத்துக் குட்டிச்சுவராக ஆக்கின சம்பவங்கள் tragedy என்றாலும் hilarious! சும்மாவா சொன்னார்கள் tragedy is comedy plus time என்று.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s