சுஜாதாவின் ‘கடவுள் வந்திருந்தார்!’


சுஜாதா தேசிகன் கூறுகிறார்…

டிவியில் சில படங்கள் எப்போது போட்டாலும் கொஞ்ச நேரம் பார்க்க தோன்றும். அதை போல தான் சுஜாதா எழுதிய ‘கடவுள் வந்திருந்தார்’ நாடகமும். எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காது.

‘கடவுள் வந்திருந்தார்’ நாடகத்தை முதலில் படித்த போது இதை நாடகமாக பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை. சென்னைக்கு வந்த பிறகு இந்த நாடகம் எங்கு நடந்தாலும் போய் பார்த்துவிடுவேன். கடவுள் வந்திருந்தார் நாடகத்தில் எதிர்கால மனிதன் வந்தால் எப்படி இருக்கும் என்று பூர்ணம் நினைக்க, திடுதிப் என்று எதிர்கால மனிதன் ’ஜோ’ வந்துவிடுவார்.. சுஜாதாவுடனே இரண்டு மூன்று முறை பார்த்திருக்கிறேன். நாடகம் முழுக்க பூர்ணம் தான் இருப்பார், மற்றவர்கள் எல்லாம் தெரியவே மாட்டார்கள். எவ்வளவு முறை பார்த்தாலும் அதில் வரும் நகைச்சுவைக்கு சிரிக்காமல் இருக்க முடியாது. சுஜாதா கூட பல இடங்களில் சிரிப்பதை பார்த்திருக்கிறேன். காரணம் பூர்ணம்.

பூர்ணம் மறைவிற்கு பிறகு திரு.மூர்த்தி அந்த பாத்திரத்தை ஏற்று நடித்தார். மிகவும் நன்றாகவே அதை செய்தார். பூர்ணம், சுஜாதா மறைவிற்கு பிறகு அவர் நினைவாக ஒரு நாடகம் போட வேண்டும் என்று விரும்பினாராம். ஆனால் அந்த ஆசை நிறைவு பெறுவதற்கு முன்பே அவரும் உடல்நலம் குன்றி, காலமானார். அதனால் அவருடைய இறுதியாத்திரையில் தகனம் செய்ய எடுத்துச் செல்லும்போதும் அவருக்கு நாடக மேக்கப் போட்டே தகனத்துக்கு எடுத்துப் போனார்கள் என்று சொன்னார் அவர் மனைவி.

இந்த நாடகம் வீடியோ வடிவில் இருக்கிறதா என்று தெரியவில்லை. இருந்தால் சொல்லுங்கள் இன்னொரு முறை பார்க்கலாம்.

–சுஜாதா தேசிகன்
Desikan Narayanan

பாரதி மணி கூறுகிறார்…

சுஜாதா சித்தரித்த முக்கிய நாடகப்பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, அவர்களை ரசிகர்கள் முன்னே அறிமுகப்படுத்தும் பேறு சென்னையில் பூர்ணம் விசுவநாதனுக்கும் தில்லியில் எனக்கும் தான் கிடைத்தது. உண்மையிலேயே நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். சுஜாதா நாடகங்களில் நாங்கள் தான் ’ஹீரோ‘!

நான் தில்லியில் அரங்கேற்றிய ’கடவுள் வந்திருந்தார்’  நாடகத்தில்,  நிஜவாழ்க்கையில் படுத்தியது போதாதென்று,  மேடையிலும் எனக்கு மனைவியாக நடித்தார் திருமதி ஜமுனா மணி! என் மூத்தமகள் ரேவதி இந்த நாடகத்திலும், இளையவள் அனுஷா ’டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு‘  நாடகத்திலும் நடித்திருக்கின்றனர்.

கடவுள்….‘  நாடகத்துக்கு,  ’60 Laughters a Minute!‘ என்று தலைப்பிட்டு விமர்சகர் சுப்புடு தில்லி ஸ்டேட்ஸ்மனில் அட்டகாசமான விமர்சனம் எழுதியிருக்கிறார்.

சென்னையில் ஒருதடவை பூர்ணத்தின் ’கடவுள் வந்திருந்தார்‘ நாடகத்தைப்பார்க்க நானும் சுஜாதாவும் மயிலை R.R.சபாவுக்குப் போயிருந்தோம்.  தில்லி ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றி வந்த     விசுவநாதனின் தங்கை பூர்ணம் லக்ஷ்மியும் நாடகம் பார்க்க வந்திருந்தார். அவர் மனதில் தோன்றியதை வெடுக்கென்று பேசுபவர். நாடகம் முடிந்து க்ரீன் ரூமில் பூர்ணத்திடம், ‘அண்ணா, உங்க நாடகத்தைவிட மணி  நாடகம் தான் technically perfect‘ என்று சுஜாதா முன்னால் பட்டென்று சொன்னது என்னவோ போல் இருந்தாலும் மனதுக்கு மகிழ்ச்சியாகவிருந்ததை மறுக்கமுடியாது.

’கடவுள் வந்திருந்தார்’ நாடகத்தை தில்லியில் நான் ஐம்பது தடவைகளுக்கு மேல் மேடையேற்றியிருக்கிறேன். ரஜினி கூற்றுப்படி, தில்லியில் ஒரு தரம் போட்டா, சென்னையில் பத்து தரம் போட்ட மாதிரி! இங்கு பூர்ணம் விசுவநாதன் நடித்த சீனிவாசன் பாத்திரத்தை தில்லியில் நான் செய்திருக்கிறேன்.

சென்னையில் சில நண்பர்கள் சேர்ந்து அடுத்த பெப்ருவரி மாதம் வரும் சுஜாதா நினைவு நாளுக்கு ‘கடவுள் வந்திருந்தார்!’ நாடகம் போட தீர்மானித்திருக்கிறோம். திருமதி சுஜாதா அனுமதி தந்துவிட்டார். நண்பர்கள் 25 வருடங்களுக்கு முன் நான் நடித்த சீனிவாசன் பாத்திரத்தில் நானே நடிக்கவேண்டுமென்று விரும்பினார்கள்.

வயசாகிவிட்டதென்று சொல்லி மறுத்துப்பார்த்தேன். பிறகு சென்னையில் கடைசித்தடவையாக – as a Swan Song – மேடையேறலாமென இருக்கிறேன். பெப்ருவரி மாதம் கடைசிவாரத்தில் ஐந்து நாட்கள் சென்னையில் ‘கடவுள் வந்திருந்தார்!’ நாடகம் மேடையேற்றப்படும். நாடக ஆர்வலர்களுக்கு இது ஒரு செய்தி!

பாரதி மணி

லட்சுமி:…ஏன்னா ஏதாவது சாப்பிடறேளா?

சீனிவாசன் :சாப்பிடறேன்

லட்சுமி: என்ன சாப்பிடறேள்?

சீனிவாசன் :ரத்தம்

லட்சுமி: அம்மாடி!

[கடவுள் வந்திருந்தார்]

இந்நாடகம் 1975-ஆம் வருடத்தில் இருந்து பூர்ணம் விஸ்வநாதனின் New Theatreஆல் 250 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்ட ஒன்று.

Kadavul Vanthirunthar

திரை விலகும்போது மேலிருந்து ஒரு நீல ஸ்பாட் விளக்கு மட்டும் நடுவே நின்று கொண்டிருக்கும்.  சீனிவாசன் மேல் விழுகிறது.  பின்னணியில் இருட்டு.  (சீனிவாசன் சபையினரைப் பார்த்து நிற்கிறார்.  கையில் ஒரு கோட்டு, காலர் இல்லாத சட்டை, இடுப்பிலே பெல்ட் வேஷ்டி, வயது 55) நமஸ்காரம்.  எல்லாரும் வந்தாச்சுன்னு நினைக்கிறேன்..

இவ்வாறு தொடங்கி விறுவிறுப்பாகச் செல்கிறது நாவல்.

கடவுள் வந்திருந்தார்” அறிவியல் புனைவின் பூச்சு கொண்ட சமூக பகடி.  இந்நாடகம்ஒரு நகைச்சுவை நாடகமாக இது முழுமையான கேளிக்கை அனுபவத்தையும் தரலாம். ஒரு தனிமனிதன் தன்னைச் சூழ்ந்துள்ள ஆதமார்த்தமான தனிமையை உணர்ந்து கொள்ளும் பிரச்சினையும் பேசப்படுகிறதுஅந்நிலையின் வெறுமையைகசப்பைகைவிடப்படலைப் பேசும் சூட்சுமமான பகுதி வெளிப்படையாகக் காட்டப்பட இல்லை என்பதே சுஜாதாவின் மிகப்பெரிய சாமர்த்தியம்

அதாவது மையப்பாத்திரமான ஸ்ரீனிவாசன் ஓய்வு பெற்ற பின் சிறுகச் சிறுக குடும்ப உறவுகளின் மரியாதையைசமூக பயன்பாட்டு வாழ்வின் மீதான பிடிப்பை இழந்து வரும் மனிதர்துயரம் என்னவென்றால் அவர் அதை மிக துல்லியமாய் உணர்ந்து கொள்கிறார் அல்லது மிகச் சரியாக ஏற்கனவே எதிர்பார்த்து இருந்துள்ளார்.தீமையைப் போன்று தனிமை நம் வெகுஅருகில் எப்போதுமே காத்திருக்கிறது.மிகப்பலர் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் தனது இடம் காலியாக உள்ளதைஅதன் விளைவாக தனிமைப்பட்டுப் போவதை உள்ளார்ந்து உணர்வதில்லைஉணர்ந்தால் கூட ஏற்றுக் கொள்வதில்லை

இந்நாடகத்தில் ஸ்ரீனிவாசனுக்கு வேலையில் இருந்து ஓய்வு தனது உள்ளார்ந்த தனிமையைச் சுட்டும் போதிமரமாக உள்ளதுஅவர் கிடைக்கிற பொழுதில்மனைவிமகள் இல்லாத வீட்டின் தனிமையில்சுஜாதா (நாடகத்துள் வரும் எழுத்தாளர்)எழுதிய “எதிர்காலமனிதன்” என்ற விஞ்ஞான புனைகதையைப் படிக்கிறார்.இங்கே ஸ்ரீனிவாசன் படிப்பது செய்தித்தாளோஎளிய பாகவத சுருக்கமோ அல்ல என்பது முக்கியம்.

அறிவியல் புனைவுகளில் கணிசமானவை விண்வெளி மனிதன் பற்றிய அலாதியான கற்பனை சித்திரங்களால் உருவாக்கப்பட்டவைவெறுமனே விண்வெளியின் தன்மை என்றல்லாமல்விண்வெளியின் உயிர் சாத்தியப்பாடுகளே அறிவியல் புனைவிலக்கியம் அல்லது விண்வெளி ஆய்வின் ஒரு பிரதான தேடலாக உள்ளது

தனது கட்டுரை ஒன்றில் இந்தத் தேடலைப் பற்றி அவதானிக்கும் சுஜாதா அண்டத்தில் தான் மட்டுமே ஒரே மனித இனம் என்ற எண்ணம் தரும் தனிமையுணர்வுகோடானுகோடி கோளங்கள் பூமியைச் சுற்றி அனாதையாகச் சுற்றுவது என்பது மனிதனுக்கு மிகுந்த பிரயாசை தரும் எண்ணமாக இருக்கலாம் என்கிறார்இந்த விண்வெளித் தனிமையை ஜீரணிக்க முடியாமல்தான் மனிதன் ஒரு சககோள உயிரைக் கற்பிக்கவோ கண்டறியவோ முனைகிறான்.

ஸ்ரீநிவாசன் படிக்கும் அறிவியல் புனைகதையில் காலப் பயணம் குறித்துப் பேசப்பட்டுள்ளது.அதாவது 2080-ல் மனிதன் காலஎந்திரங்களில் எந்த நூற்றாண்டுக்கு வேண்டுமானாலும் சென்று வர முடியலாம்அப்படியான ஒரு மனிதன் இந்த நூற்றாண்டுக்கு வந்தால் அவனிடம் எதிர்காலம் குறித்துஅம்மனிதர்களின் கலாச்சாரம்பழக்கவழக்கங்கள் குறித்து விசாரிக்கலாமே என்று அவர் சத்தமாக யோசிக்கிறார்அப்போது 2080-ல் இருந்து ஒரு மனிதன் நிஜமாகவே இந்த நூற்றாண்டுக்கு ஒரு காலஎந்திரத்தில் வந்து அவர் வீட்டுக்குள் குதித்து விடுகிறான்

அவனால் உருவாகும் சிக்கல்களும்குழப்பங்களுமே நாடகத்தின் பிற அங்கங்களை நகர்த்துகின்றனஉறவாட ஒரு எதிர்கால மனிதன் வரும் அளவுக்கு முதியவர் வாழ்வின் விளிம்புக்கு நகர்த்தப்பட்டுள்ளார்ஆரம்பத்தில் எதிர்கால மனிதன் மீது வெறுப்பு காட்டி,அவனைத் துரத்த முயன்றாலும் அவன் மீது அவர் கொள்ளும் தீவிர பிடிப்பு ஒவ்வொரு காட்சியினூடும் சுஜாதாவால் நுட்பமாகக் காட்டப்படுகிறது.முதியவர் ஆரம்பத்தில் எதிர்கால மனிதனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார்மனிதப்பெயர் வைக்க வேண்டுகிறார்எண்கள் மட்டுமே அடையாளமாய் கொண்ட எ.காமனிதனுக்கு ஜோ என்று பெயர் முடிவாகிறது.

பூஜை மணியால் ஒரு முறை கிணுக்கினால் அவன் தோன்ற வேண்டும் .இரண்டு முறை என்றால் அவன் மறைந்து விட வேண்டும்பிறர் முன்னிலையில் அவனிடம் பேசுவது சங்கடமாகவும்பிரச்சினைகள் தருவதாகவும் இருப்பதால் இந்த ஏற்பாடு என்கிறார் ஸ்ரீனிவாசன்அதனால அவர் தனியாக இருக்கும் போது ஒரு மணிச்சத்தம் எழுப்புவார்

ஜோ தனியா என்றால் என்ன என்கிறான்தனது அகராதியில் தேடி அது ஒரு மளிகைப் பொருளாச்சே என்கிறான்முதியவர் இல்லை இல்லைஇது lonely” என்கிறார். “இங்கே எல்லாரும் லோன்லி லோன்லி தான்  என்கிறார். மேலும் இது நாடகத்தின் சாவி போன்ற வசனம்இறுதியில் எ.காமனிதன் தன் காலத்துக்குத் திரும்ப வேண்டி வருகையில் ஸ்ரீனிவாசன் தடுமாறிப் போகிறார்.அவனைத் தடுக்கமேலும் தங்கிட வைக்கப் போராடுகிறார்அவன் கிளம்பின உடன் பழைய மணியை எடுத்து அடித்துப் பார்க்கிறார்

இந்தக் கையறு நிலைமை நாடகத்தின் மையக் கரு.காமனிதனால் விளையும் லௌகீகப் பயன்களை முதியவர் தன்னுடைய சுயவசதிக்காகப் பயன்படுத்திக் கொள்வதில்லைஅவனுடைய பிரிவு ஒரு லௌகீக இழப்பல்லஆதமார்த்த நிலையில் தனக்கான ஒரு பிடிப்பைஅணுக்கமான இருப்பைபாசாங்கற்ற உறவை இழந்து விட்டதாக உணர்கிறார்இது தான் அவரது பெரும் ஆற்றாமைஅடுத்து ஜோ எனப்படும் இந்த எ.காமனிதன் ஒரு மின்சாரம் உண்டு வாழும்கணினியால் இயக்கப்படும் எந்திரம் என்ற குறிப்பு சுவாரஸ்யமானது

அதாவது நவீன மனிதன் ஒரு எந்திரத்துடன் உறவாடும்படியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளான் என்பது எத்தனை முக்கியமான அவதானிப்புஇந்த நெருக்கடியின் உருவகம்தான் ஸ்ரீனிவாசன்.அவர் ஒரே நிலையில் மக்களால் பைத்தியமாகவும் கடவுள் அவதாரமாகவும் பார்க்கப்படுகிறார்இந்த முரண்பாடுகளால் பிளவுபடும் சமூகமும் வேறொரு நிலையில் தனிமைப்பட்டு தான் உள்ளதுஅறுபதுகளில் எந்திர விலைமாதுகள்மீடியா சாமியார்கள் மற்றும் விர்ச்சுவல் காமப் பரிவர்த்தனையின் இன்றைய காலகட்டத்தில் சுஜாதா பேசிய இச்சங்கதியை நாம் மேலும் மேலும் காத்திரமாக உணர்ந்து வருகிறோம்.

நாடகம் முழுக்க ஸ்ரீனிவாசன் பேசும் தன்னுரைகள் மேலும் முக்கியமானவை.அவர் எ.காமனிதனிடம் பேசும்போது அடுத்தவர்களுக்கு அவனது உருவமோ,குரலோ பார்க்க முடியாதுகேட்காதுஇதனால் முதியவ்ர் தனக்குத் தானே பேசிக் கொள்வதாய் தவறாய்ப் புரிந்துகொண்டு அவரைப் பைத்தியம் என்று முடிவு கட்டுகின்றனர்இந்த பைத்திய வசனங்களும் ஒருவித தன்னுரைகள்தாம்

அடுத்து ஸ்ரீனிவாசனின் அறிவார்ந்த நகைச்சுவை வசனங்கள்சதா தான் எதிர்கொள்ளும் மனிதர்களின் போலித்தனங்களை,அசட்டு பாவனைகளைப் பகடி செய்து கொண்டே போகிறார்அவரது நெருக்கடிகள் தீவிரம் ஆக ஆக இந்தப் பகடியும் கேலியும் மிகுதியாகியபடி செல்கின்றனஇது ஏன்மக்கள் ஏன் உண்மையைத் தொடர்ந்து மறுக்கிறார்கள் என்ற வருத்தமே இந்த நகைச்சுவை தோலுரிப்பில் வெளிப்படுகிறதுஒரு துன்பியல் பாத்திரமாக அவர் தோற்றம் கொள்ளாமல் காப்பாற்றுவது இந்த அங்கதச்சுவை மிக்க வசனங்கள்தாம்ஸ்ரீனிவாசனின் துயரம் கண்டு பார்வையாளன் உள்ளார்ந்து நுட்பமாய் இரங்கிமனம் கலங்கினாலும் அவன் காணும் பிரதான ரசம் வேடிக்கையும்,மகிழ்ச்சியும்தான்

மேலோட்டமான தளத்தில் கடவுள் வந்திருந்தார் ஒரு எளிய வேடிக்கை நாடகமாகhorse playஆக தெரிவதற்கான நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளனமருத்துவர்போலீஸ்காதலன்காது டமாரமான கிழம் என்று தட்டையானதேய்வழக்கு கதாபாத்திரங்கள் மற்றும் இவர்கள் உருவாக்கும் நகைச்சுவை சந்தர்ப்பங்கள் ஆகியன உயர்தர நாடகத்துக்கு உரியன அல்லஆனால் ஒரு எளிய ஷெரிடன்காங்கிரீவ் அல்லது நம்மூர் கிரேசி மோகன் பாணியிலான குணாதிசய நகைச்சுவை நாடகமாக (comedy of manners) தாழ்ந்து விடாமல் உயர்த்துவது மேற்சொன்ன துன்பியல்நகைச்சுவை அம்சம்தான்

இருக்கையில் இருந்து துள்ளித் துள்ளி சிரித்தவர்களில் நுண்ணுணர்வு கொண்டவர்களை ஆழமாய் அலைக்கழிக்கும் ஒரு இருத்தலியல் துயரம் ஸ்ரீனிவாசனின் வரிகளிலும்அவர் சந்திக்கும் நூதனமானமிகுகற்பனை சூழல்களிலும் உண்டுஆனால் ஒரு தீவிர நாடகத்தின் எந்தத் தோற்றமும் ஏற்பட்டு விடாமல் சுஜாதா கவனமாக எழுதியுள்ளார்.

சுஜாதாவின் ‘கடவுள் வந்திருந்தார்’ : தனிமையும் எந்திர நட்பும் — ஆர்.அபிலாஷ்

(நன்றி உயிரோசை – உயிர்மை வழங்கும் இணைய வார இதழ்)

15 thoughts on “சுஜாதாவின் ‘கடவுள் வந்திருந்தார்!’

 1. Raajoo December 6, 2012 at 4:20 AM Reply

  Dear Sri. Mani,

  Good Luck and best wishes.

  Warm Regards,

  Raajoo-Duabi

 2. ரெங்கசுப்ரமணி December 6, 2012 at 9:06 AM Reply

  பாரதிமணி அவர்களின் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். வித்தியாசமான குரல். இவர் திரைப்படங்கள் மூலமாக மட்டும்தான் தெரியும். புதுப்பேட்டையில் மட்டும் இவரது குரல் மனோபாலா குரல் போல இருந்தது. நிஜமாகவே அவர்தான் குரல் குடுத்தாரோ என்னவோ (நல்ல வேலக்காரேன், அந்த இளுவை வித்தியாசமானது). இவர் எழுத்தாளர், நாடக நடிகர் என்பது எல்லாம் இ.வடை தான் சொன்னது. அனுபவங்களைப் படிப்பது ஒரு நல்ல அனுபவம். கதைகளை விட அவை சுவாரஸ்யமானவை.

  சார் ஒரு சின்ன யோசனை தவறாக நினைக்க வேண்டாம், பதிவுகளில் படங்களுக்கு பக்கத்தில் கொஞ்சம் வெற்றிடம் இருக்கின்றது. தொடர்ச்சியாக படித்துக் கொண்டு வரும் போது, அவ்வெற்றிடம் படிக்கும் வேகத்தை மாற்றுகின்றது. அவ்வெற்றிடத்தை நிரப்பினால் படிக்கும் போது எவ்வித தொந்தரவும் இருக்காது என்று நினைக்கின்றேன். சில படங்கள் பெரிதாக இருப்பதால் நிறைய வெற்றிடம் இருப்பதாக தோன்றுகின்றது.

 3. Venkat December 6, 2012 at 3:34 PM Reply

  Good One. Read the Story long time back. Will try to read it again.

  Thanks for sharing.

 4. பாரதி மணி December 6, 2012 at 3:47 PM Reply

  ரெங்கசுப்ரமணி: நீர் ஞானஸ்தன்யா! ஆமாம்….புதுப்பேட்டை டப்பிங்கின்போது நான் தில்லியில் இருந்தேன். டைரக்டர் செல்வராகவன் தன் தந்தை கஸ்தூரி ராஜாவை விட்டு எனக்கு குரல் கொடுக்கச்செய்தார். பிறகு கஸ்தூரி ராஜா, ‘சார்! உங்களுக்கு டப் பண்ணுவது அத்தனை சுலபமல்ல. தாளத்தில் வருவதைப்போல, நீங்கள் ஒரு இடம் தள்ளி எடுக்கிறீர்கள். ஆனால் சமத்தில் முடித்து விடுகிறீர்கள். இது எல்லோருக்கும் வராது!’ என்று பாராட்டினது நினைவிருக்கிறது!

  நன்றி!

 5. R. Jagannathan December 6, 2012 at 5:44 PM Reply

  Thanks to you BH and of course Sujatha Desikan, Sri Bharathi Mani and Abhilash!

  Abhilash’s review of the drama gives a fine impression of the play as one is watching it. Sujatha Desikan was blessed – what else one can add! Sri Bharathi Mani’s portion in this post makes me respect him more and more. I think he is talking about Feb. 2013. I have to protest his use of the term ‘swan song’. It will be a fresh beginning of second innings for him and a long innings too. How I wish I can hear and enjoy the drama! – R. Jagannathan

 6. Suresh Seenu December 7, 2012 at 1:07 AM Reply

  அய்யா வணக்கம். பூர்ணம் நடித்து சுஜாதா நாடகங்களைப் பார்த்துள்ளேன். உங்கள் நடிப்பில் அந்த சீனுவாசன் என்னமாய் வெளிப்படப்போகிறார் என காண ஆவல். கடல் கடந்திருக்கும் என் போன்றோருக்கு உங்கள் நாடகத்தின் காணொளியை பகிர வேண்டுகிறேன்!

 7. Yadartha K Penneswaran December 7, 2012 at 1:08 AM Reply

  மணி சார்,

  என்னதான் ரஜினி கணக்காக இருந்தாலும் ஐம்பது வரவில்லையே. ஒருவேளை ரஜினி தான் ஒருமுறை சொன்னால் ஐம்பது முறை சொன்னதாக அர்த்தம் என்று சொல்லியிருப்பாரோ? AIFACS அரங்கில் ஒருமுறை தக்ஷிணபாரத நாடக சபை இந்த நாடகத்தை மேடையேற்றியிருக்கிறார்கள். அதில் பிரமாதமாக நடித்து இருந்தீர்கள். நீங்கள், உஙகள் துணைவியார், மகள் ரேவதி ஆகியோரும் இருந்தனர். அதன் பிறகு அந்த நாடகம் டெல்லியில் எங்கும் மேடையேறியதாகத் தெரியவில்லை. ஒருவேளை நான் விடுமுறையில் ஊருக்குப் போயிருந்தபோது எப்போதாவது மேடை ஏறியிருக்கலாம். நன்றாக நினைவுபடுத்திப் பாருங்கள் மணி சார்.

  இன்னொரு விஷயம் எழுத மறந்து விட்டேன். சுஜாதாவின் ஊஞ்சல் உங்களை வைத்து மேடையேற்ற வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். இன்று வரை நிறைவேறவில்லை.

 8. Bharati Mani December 7, 2012 at 1:16 AM Reply

  Yadhartha Penneswaran அன்புள்ள கே.பி:

  ரஜினி கணக்கு சரியில்லையென்றாலும் ’மணி கணக்கு’ சுமாராக சரியாக இருக்கும்! எண்பதுகளின் தொடக்கத்தில், நீ தில்லி வருவதற்கு முன்பாக, முதன்முறையாக, நீ பார்த்திராத நண்பன் தாயப்பன் ‘ஜோ’ வாகவும், நான் சீனிவாசனாகவும் நடித்து கடவுள் வந்திருந்தார் நாடகம் AIFAC-ல் நான்கு முறையும், பின்னர் தில்லி தமிழ்ச்சங்கம், செளத் இந்தியன் சமாஜ், ஃபரீதாபாத், சண்டிகர், லக்னோ, ஜனக்புரி போன்ற இடங்களில் முதல்சுற்று போட்டுமுடித்தோம். அதன்பிறகு பத்துவருடங்களுக்கு அப்புறம் தில்லி கர்நாடக சங்கீத சபா இதே நாடகம் வேண்டுமென்றதால், தாயப்பனுக்கு பதிலாக கிருஷ்ணமூர்த்தியை நடிக்கச்செய்து ஒருதரம் 1992ல் கடைசித்தடவையாக மேடையேறியது. அது தான் நீ பார்த்த நாடகம். பிறகு Shri Ram Centre-ல் மேடையேறிய சுஜாதாவின் ‘டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு’ நாடகத்துக்கு நீயும் டாக்டர் ரவீந்திரனும் Lighting-ல் உதவி செய்ததும் எனக்கு மறக்கவில்லை!

  இனிமேல் ஊஞ்சல் நாடகத்தை என்னால் மேடையேற்றமுடியுமென்று தோன்றவில்லை! நாமிருவரும் மேலே போனபிறகு, அங்கே ஒரு ஆடிட்டோரியம் தேடி சுஜாதாவின் ஊஞ்சல் நாடகத்தை நீ இயக்கி, நான் நடித்து, ஜமாய்த்துவிடுவோம்!

 9. Ks Suka December 7, 2012 at 1:17 AM Reply

  பெப்ருவரி மாதம் கடைசி வாரத்தில், எனக்கு எப்படியாவது வெளியூருக்குப் போக வேண்டிய ஜோலி வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன். என் எதிர்பார்ப்பு நிறைவேற உங்கள் ஆசி வேண்டும், ‘பாட்டையா ‘.

 10. Bharati Mani December 7, 2012 at 1:18 AM Reply

  வெளியூருக்கோ பரலோகத்துக்கோ போனாலும், நீ எனது ‘கடவுள் வந்திருந்தார்!’ நாடகத்தை பார்க்கக்கடவது!

 11. Ks Suka December 7, 2012 at 1:18 AM Reply

  நம்ம ஊர்ல ‘சவம் எங்கெ போனாலும் துன்பம் விடாது போலுக்கெ’ ம்பாங்களெ! அது இதானோ?

 12. Bharati Mani December 7, 2012 at 1:19 AM Reply

  ஆமலே….அதுவே தான்!

 13. Yadartha K Penneswaran December 7, 2012 at 1:20 AM Reply

  அப்புறம் எம தர்மராஜன் நம்மை மீண்டும் அன்றே கீழே அனுப்பி விடுவான். அல்லது எந்த நாடகத்தையும் இனிமேல் எக்காரணம் கொண்டும் நரகத்தில் மேடையேற்றக்கூடாது என்று நம் இருவரிடமும் எழுதி வாங்கி வைத்துக் கொள்வான். சுஜாதா, சி.சு.செல்லப்பா எல்லோரும் அவனிடம் முறையிடுவார்களே. அதனால் இங்கிருந்து கிளம்புவதற்கு முன்பே ஒருமுறை கீழே இருப்பவர்களை டார்ச்சர் செய்வோம் சார். எல்லோரையும் பழிக்குப் பழி வாங்கின மாதியும் ஆனது. எனக்கும் நாடக ஒத்திகைகளின் போது எங்க ஊர் கெட்ட வார்த்தைகள் பேசி ரொம்ப நாளாச்சு. :))

 14. Bharati Mani December 7, 2012 at 1:22 AM Reply

  என் சென்னை நண்பர்களுக்கு ஒரு சேதி:

  நான் கே.பி. என்று அழைக்கும் யதார்த்தா பென்னேஸ்வரன் இயக்கத்தில் சி.சு. செல்லப்பாவின் ’முறைப்பெண்’ நாடகத்தில் நானும், என் மனைவியும், மகள் ரேவதியும் நடித்தோம். மதராசிப்பள்ளியில் மாலை நேரம் ரிகர்ஸல் நடக்கும். அப்போது சிறுமியாக இருந்த என் இரண்டாவது மகள் அனுஷாவையும் ரிகர்ஸலுக்கு கூட்டிச்செல்வோம். ரிகர்ஸல் நடக்கும்போது, குழந்தை அனுஷாவை பெரியசாமி போன்றவர்கள் தூக்கிச்சென்று ஸ்கூல் கான்டீனில் கிடைக்கும் லாலிபாப், புளிமிட்டாய், பென்சில் மிட்டாய் என்று வேண்டாதவைகளை வாங்கிக்கொடுத்து கெடுப்பார்கள். பென்னேஸ்வரனுக்கு, பஞ்சாபிகளுக்கும் மேலாக, ஒரு வாக்கியத்தில் இரண்டு மூன்று கெட்டவார்த்தைகளில்லாமல் பேசத்தெரியாது. பாவம்!

  ஒரு வாரத்துக்குப்பிறகு ரிகர்ஸல் முடிந்து, காரில் வீடு திரும்பும்போது குழந்தை அனுஷா திடீரென்று, ‘————’னா என்னப்பா?’ என்று கேட்டாள். திடுக்கிட்ட நான்…’யாரும்மா சொன்னா? என்று கேட்டதற்கு, ‘கே.பி. மாமா யாரையோ திட்டினா!’ என்றாள். அடுத்தநாள் அவனிடம் கோபத்துடன், ‘கே.பி. இனி ஒருதடவை ரிகர்ஸலின்போது, உன் வாயிலிருந்து ஒரு வார்த்தை வந்தா, உடனே குடும்பசகிதம் வீட்டுக்குப்போயுடுவேன். இது பயமுறுத்தல் அல்ல!’ என்று கத்தினேன். இருந்தாலும் என்ன………நாய் வாலை என்னால் இதுவரை நிமிர்த்தமுடியவில்லை

 15. Yadartha K Penneswaran December 7, 2012 at 1:24 AM Reply

  மணி சார்…

  நினைவுபடுத்திப் பாருங்கள். நீங்களே ஒருமுறை கெட்ட வார்த்தையில் என்னைத் திட்டினீர்கள். “அயோக்கியத் —————டா நீ. என்னை திட்ட முடியலைன்னு பெரியசாமியையும் வெங்கட்டையும் திட்டறே. எல்லாம் புரியறதுடா” என்றும் சொன்னீர்கள்.

  உங்கள் தகவலுக்காக.. இப்போது கெட்ட வார்த்தை எதுவும் பேசுவது இல்லை. கோபம் வந்தாலும் திட்டுவது இல்லை. மற்றவர்கள் எல்லோரும் இப்போது என்னைத் திட்டிக் கொண்டிருப்பதால் நான் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறேன். :))-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s