சுஜாதா கொடுத்த டைரி – சுஜாதா தேசிகன்


புது வருஷத்துக்கு வந்த டைரிகளில் இருந்ததிலேயே பெரிசாக எடுத்துக் கொண்டு ஒண்ணாம் தேதியிலிருந்து எழுத ஆரம்பித்தேன்.

(அந்தரங்கம் – இந்த டைரியை என் அனுமதி இல்லாமல் யாரும் படிக்கக் கூடாது… மீறினால் போலீசார் வசம் ஒப்படைக்கப்படுவார்கள்.)


1-1-2003
இன்று புது வருஷம். இன்றிலிருந்து தினம் டைரி எழுதுவதாகத் தீர்மானித்தேன். அன்றாடம் கவனித்த சம்பவங்களையும், அவற்றைப் பற்றிய என் ஆத்ம விசாரங்களையும், படித்த சுவாரஸ்யமான விஷயங்களையும் ஒளிக்காமல், மறைக்காமல் அப்பட்டமாக எழுதுவது என்று தீர்மானித்தேன். இந்த டைரியை யாரும் படிக்கப் போவதில்லை என்பதால் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் எழுதுவது என்று தீர்மானித்தேன். பார்க்கலாம்.

2-1-2003
யாரும் படிக்கப் போவதில்லை என்றால், எதற்காக டைரி எழுத வேண்டும் என்ற கேள்வி இன்று எழுந்தது. யாராவது இன்றோ, என்றோ ஒரு நாள் படிக்கத்தானே போகிறார்கள். இல்லை, வருஷக் கடைசியில் இதைக் கிழித்துப் போட்டுவிடலாமா ? அது விரயம். என் ஒரு வாசகனுக்காகத் தான் இந்த டைரி என்றால், இதை எழுதுவானேன். எனவே மற்ற பேரும் படிக்கும்படியாக எழுதலாம் என்று தீர்மானித்தேன்.

3-1-2003
மற்ற பேர் படிக்கும்படியாக என்றால், எதற்கு அதை டைரியில் எழுத வேண்டும்? ‘கற்றதும் பெற்றதும்’ மில் அதைதானே செய்கிறேன் என்று யோசித்தேன், பார்க்கலாம்.

4-1-2003
இன்று மிமி லேசாக நொண்டியது. டாக்டரிடம் காண்பிக்க வேண்டும் என்று மனைவி சொன்னாள்.

5-1-2003
இன்று அடை டிபன்

6-1-2003

7-1-2003

இதன் பின் வெறும் பக்கங்கள்.

–சுஜாதா (கற்றதும் பெற்றதும் பாகம் 2)

புது வருஷத்தில் எனக்கு தேதி கிழிக்கும் காலண்டர்களும் அகலமான டயரிகளும் அனுப்பிய அத்தனை அன்பர்களுக்கும் நன்றி. தேதி கிழிக்கும் காலண்டர் எனக்கு கொட்டை எழுத்தில் 11.1.2004 ஜனவரி ஞாயிறு என்னும் செய்திக்கு மட்டும்தான் பயன். மற்றபடி தேய்பிறை, சதுர்த்தி, மகம் சங்கடஹரணம், விஷ்ணு ஆலயங்களில் ‘கூடாரவல்லி’ உற்சவம், நல்ல நேரம், கௌரி நல்ல நேரம், சுபகிரக ஓரைகள், சந்திராஷ்டமம், குளிகை என்று எறும்பு எழுத்துகளில் எழுதி இருப்பதெல்லாம் எனக்கு ஒரு பயனும் இல்லை.

போன வருஷம் முதல் தேதி போல் இந்த வருஷமும் டயரி எழுதியே தீருவது என்று தீர்மானிப்பேன். புதுசான டயரியை வாசனையோடு பிரித்தவுடன் இத்தனை அருமையான, வழவழப்பான விஸ்தாரமான வெள்ளைப் பக்கத்தில், ‘இன்று குழாய் அடைத்துக்கொண்டு பிளம்பர் வந்து ரிப்பேர் செய்தார்’ போன்ற லோகாயதமான விஷயங்களை எதற்கு எழுதவேண்டும் என்று வாளா இருந்துவிடுவேன். டயரி எழுதுவது ஒரு கற்பழிப்பு போல இருக்கும். டயரி எழுதப்படாமல் தூங்கும். முதல் மாசத்தில் ஆப்தர்கள் யாராவது வந்தால் அவர்களிடம் கொடுத்துவிடுவேன். சந்தோஷமாக வாங்கிக்கொண்டு போவார்கள்.
ஒரு மாதம் கழித்து, ‘‘என்ன சார், டயரி எழுதறீங்களா?’’.
‘‘எழுத விருப்பம்தாங்க! என்ன எழுதறது… எழுத்தாளர் நீங்க சொல்லுங்களேன்.
’’‘‘ஏதாவது எழுதுங்களேன்… போர்வெல் அடைச்சுட்டு ரிப்பேர் செய்தது, மெட்ராஸ்ல தூத்தல் போட்டது… ஏதாவது.
’’‘‘காயிதத்தைப் பார்த்தா மனசு வரலங்க.
–சுஜாதா (கற்றதும் பெற்றதும் பாகம் 2)
தனிமை கொண்டு‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் தொகுதியில் 20-ஆவது கதையாக இடம் பிடித்துள்ளது. (இத்தொகுப்பில் மொத்தம் 60 கதைகள்)

இந்தக் கதையில் பாதிக்குமேல் என் தங்கை மாலாவின் டயரியிலிருந்து எடுக்கப்பட்ட வரிகள். என் தங்கை மாலா தற்போது இல்லை. இறந்து விட்டாள்.

அவள் டயரியின் பக்கங்களைப் படியுங்கள். இந்தப் பக்கங்களை நான் படிக்கும் வாய்ப்பு எனக்கு அவள் இறந்ததும்தான் ஏற்பட்டது. இந்தப் பக்கங்கள் என்னைச் சிரிக்க வைத்தன. தேம்பி அழ வைத்தன. மற்றும் சில இனம் புரியாத உணர்ச்சிகளை என் மனதிலும் வயிற்றின் ஆழத்திலும் ஏற்படுத்தின.

மாலாவின் டயரியைப் பற்றிய ஒரு முன் குறிப்புத் தேவை. சுதந்திரமாக, தேதி போடாமல் எழுதியிருந்தாள். அதை நான் திருத்தவில்லை. முன் பின்னாகக் கோர்வையாக அமைத்திருக்கிறேன். சில கொச்சைகளை இயற்கையாக விட்டிருக்கிறேன், அவைகளின் வேகத்துக்காக. எழுதியவள் ஒரு பெண். பதினேழு வயது முடிந்தவள்.

இந்த டயரியை என் அனுமதி இல்லாம திருட்டுத்தனமா படிக்கறவா 25,000 வருஷம் நரகத்திலே தலைகீழாத் தொங்குவா.

இந்த டயரியை யாருக்காக எழுதறேன்? இப்படி டயரியே எழுதக் கூடாது. எப்படி? மற்ற பேர் பிற்காலத்திலே படிக்கப் போறா என்று நினைச்சுக் கொண்டே எழுதறேன். இது கூடாது. என் மனசிலே நானே என்னை முன்னாலே வெச்சிண்டு சொல்ல நினைக்கிற விஷயங்களைத்தான் எழுதணும், இல்லையா ?

— 

இந்த ‘தனிமை கொண்டு‘ சிறு கதையைத் தான் பின்னர் விரிவாக ‘நைலான் கயிறு’ என்ற நாவலாக–எழுதினார்.
 நைலான் கயிறு

சுனந்தாவின் டயரியிலிருந்து…

18-09-65

எனக்கு இன்று பதினெட்டு வயசாகிறது…. எத்தனை மாறியிருக்கிறேன்! போன வருடம் தைத்த ப்ளவுஸ் எல்லாம் பிடிக்கிறது. உயரமாக வளர்ந்திருக்கிறேன். கண்ணாடிக்கு முன்னாலே விதம் விதமா டிரஸ்லேயும் அன்டிரஸ்லேயும் நின்று என்னையே பார்த்துக்கறபோது வெட்கமாகவும் இருக்கிறது. தொடர்ந்து பார்த்துக் கொள்ள ஆசையாகவும் இருக்கிறது. ரேடியோ சிலோன் கேட்டு அலுத்துப் போய் விட்டது. வராந்தாவில் உட்கார்ந்து ஆண்களைப் பார்த்து ஒவ்வொருவருக்கும் மார்க் போட்டுக் கொண்டிருக்கிறேன். எல்லாரையும் அவருடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். இந்த ஒரு வாரத்திலே என் உடம்பில் புதுசா ரத்தம் ஓடுகிறார் போலத் தெரிகிறது! எதுக்கோ விதவிதமாக அலங்காரம் செய்து கொள்கிறேன்.

என் அருமை சுனந்தா! நீ ஒரு பைத்தியம். எப்படிப்பட்ட பைத்தியம்? எழுதாதே! அந்த வார்த்தையை உபயோக்கிக்காதே!

அவர் கொடுத்த புஸ்தகத்தைப் படிக்க ஆரம்பித்து விட்டேன் ரகசியமாக!

 24 ரூபாய் தீவு
ஓர் அப்பாவி நிருபனின் வாழ்க்கையில் யதேச்சையாக இடறுகிறது ஓர் அழகுப் பெண்ணின் சடலமும், ஷோக்குக் கவிதைகள் எழுதிய டயரியும்…! நொடி நாழிகை கண்ணுக்குத் தென்பட்டு காணாமல் போன டயரியின் காரணமாகவே விறுவிறுப்பாகிறது ஆட்டம்.அடி உதை ரத்தம், தொடங்கி அரசியல் கரங்கள் ஆட்டுவிக்கும் மாயச் சுழலில் சிக்கி அல்லல்படுகிறான் அந்த நிருபன். கண்ணுக்குத் தெரியாத எதிரிகளால் பந்தாடப்படும் நிருபனின் அவஸ்தைகள், வலிகள், வேதனைகள் நடுவே உண்மைகளை சளைக்காமல் தேடும் அவனது விடாப்பிடியான போராட்டத்தை விவரிக்கும் ‘24 ரூபாய் தீவு’ ஒரு ஜெட் வேக கதை.
 24 ரூபாய் தீவு
குமுதத்தில் வெளிவந்த மற்றொரு தொடர்கதை ‘24 ரூபாய் தீவு‘ .  ஓர் இளம் பத்திரிகை நிருபரைப் பற்றியது. அவன் கையில் ஒரு டயரி கிடைக்கிறது. அதில் ஓர் அரசியல்வாதியைப் பற்றிய அந்தரங்கமான விஷயங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி எழுதப் போவதாகச் சொல்லியிருக்கிற வேளையில், டயரியைத் தொலைத்துவிடுகிறான். அதைத் தேடி மூர்க்கர்கள் அவன் வீட்டுக்கு வந்து வீட்டையும் அவன் வாழ்க்கையையும் கலைத்துப் போடுகிறார்கள். அவர்களுடன் அவனும் அந்த டயரியைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டியது அவசியமாகிறது.
 காயத்ரி

காயத்ரியைச் சந்திக்கு முன், சென்னைக்கு வரும்போதெல்லாம் நான் மூர் மார்க்கெட் செல்வேன். அங்கே ஒரு ‘பாய்’ எனக்குப் பரிச்சயம். பழைய புத்தகக் கடை பாய். எத்தனைதான் மக்கிளிடையே இலக்கிய உணர்வும், மறுமலர்ச்சியும், விழிப்பும் இருந்தாலும் பணத்தேவை என்று ஒன்று இருக்கிறதே! எனவே மூர்மார்க்கெட்டில் சில அபூர்வ இலக்கியங்கள் எனக்குக் கிடைக்கும். நான் இந்தத் தடவை மூர் வந்தது ஒரு பிரபலப் பத்திரிகையின் இரண்டு வருஷம் பழைய ஒரு இதழுக்காக. அதில் என் கதை வந்திருந்து, புத்தகமாக வெளியிடுகையில் விட்டுப் போய் விட்டது. எனவே மூர் மார்க்கெட் பாய் அந்தப் பத்திரிகை அடுக்கை என் முன் தள்ளி, “பொறுக்கிக்கிடுங்க அய்யரே” என்றான். தேதி வாரியாக இல்லாத ஐந்து வருஷச் சரக்கில் ஒரு வருஷத்தின் ஒரு மாதத்தின் ஒரு வாரத்தைத் தேடுவது ஏறக்குறைய இயலாத காரியம். முயற்சியைக் கைவிடுகிற சமயம் அந்தப் பத்திரிகைகளின் நடுவே அந்த நீல நிற நோட்டுப் புத்தகம் தலை காண்பித்தது. நூறு பக்க நோட்டு. பைண்டு பண்ணி இருந்தது. அதைத் திறந்ததும் –

அவசரம்!
அவசியம்!

என்று சிவப்பில் இரண்டு வார்த்தைகளைப் பார்த்துத் திடுக்கிட்டேன். அதன் கீழ் திருக்குறள் போல் இரண்டு வரிகள் –

அவசியம் நீங்கள் இதைப் படிக்க வேண்டியது.

அவசரம் நீங்கள் உடனே வர வேண்டியது.

புரட்டினேன்.

காயத்ரி ராஜரத்னம் 18-1-76

புரட்டினேன்.

சின்னச் சின்ன நெருக்கமான கையெழுத்து. பெண்மை நிச்சயம் தெரியும், மல்லாந்த, சற்று இடது பக்கம் சாய்ந்த கையெழுத்து. ஆரம்பப் பக்கங்கள் ஸ்பஷ்டமாக இருந்தன. போகப் போக எழுத்து குளறிக் கொண்டே வந்தது. கடைசியில் ரொம்ப மோசம்.

“என்ன! கிடைச்சுதா அய்யரே?”

“இல்லே பாய். வேறு ஏதோ கிடைக்குது.”

“இன்னாது தொடர் கதியா? பைண்டு பண்ணதா?”

“அதெல்லாம் இல்லை. இது புது தினுசு கதை.”

“ஸ்கூல் நோட்டு! இது எப்படி இதிலே கலந்தது?”

“பாய், இந்த நோட்டை விலைக்குக் குடுப்பியா?”

“இப்படிக் கொண்டா.”

பாய் தன் கண்ணாடியை ‘அஜிஸ்ட்’ செய்துகொண்டு அந்த நோட்டைப் புரட்டி ஒரு பக்கத்தை மாதிரி பார்த்தான். அதைப் புத்தகத்தில் சேர்ப்பதா, தொடர் கதையா என்று தீர்மானிக்காமல் என் ஆர்வத்தை அளக்கிற ரீதியில்-

“ஒண்ணார் ரூபா கொடுத்துட்டுப் போய்க்கினே இரு. இப்பதான் போணியாவது.”

“ஒண்ணரை ரூபாயா! வேண்டாம் பாய்.”

“எடுத்துக்க. கையால கஷ்டப்பட்டு எளுதியிருக்கிறது.”

“ஒண்ணரை ரூபாய் அக்கிரமம் பாய்!” முதல் பக்கத்தின் வரிகளை மாதிரி படித்தேன்.

“ஸ்டேஷனுக்கு விஜி, ராஜு, அப்பு, அம்மா, அப்பா எல்லாரும் வந்திருந்தார்கள். அவர் சைடிலிருந்து ராமகிருஷ்ணன் என்கிற ஒரே ஒரு மீசை சிநேகிதர் வந்திருந்தார். ஹனிமூனுக்கு அத்தனை பேர் வழியனுப்ப வந்திருந்தது எனக்கு வெட்கமாக இருந்தது…”

“இந்தா பாய் ஹனிமூன்.”

“என்னது?”

“இந்தா பணம் ஒண்ணரை ரூபாய்.”

ஓவர் டு சுஜாதா தேசிகன்…

Desikan Narayanan

2004 -ல் சுஜாதாவை ஒரு நாள் சந்திக்கும் போது டைரி பற்றி அவர் கற்றதும் பெற்றதும்-ல் எழுதியதைப் பற்றிய பேச்சு வந்தது. உள்ளே சென்று அவர் ரூமிலிருந்து கொண்டு ஆர்.எம்.கே.வியின் அகலமான டைரியை என்னிடம் கொடுத்து “இது தான் அது. வீட்டுக்கு போகும் போது எடுத்துக்கொண்டு போ” என்றார்.

“எனக்கும் டைரி எழுதும் பழக்கம் இல்லை. அழகான இருந்தால் எனக்கும் மனசு வராது. அதுவும் இது சைடுல எல்லாம் தங்க கோட்டிங் போட்டிருக்கு. கஷ்டம்…”

“ஏன் ஆபிஸில் எல்லாம் எழுதுவது இல்லையா ? ”

“இல்லை. என் தாத்தா எழுதுவார் ஆனால் அவர் இப்போது உயிருடன் இல்லை…. அவருடைய டைரி படித்திருக்கிறேன். சின்மயானந்தா கீதை சொற்பொழிவு… இன்று மோர் குழம்பு… இஸ்திரி வாங்க வேண்டும்..” என்று எல்லாம் இருக்கும்.

சிரித்துவிட்டு “சரி யாருக்காவது கொடு…” என்றார்.

சுஜாதா நம்மை விட்டுப் போன பிறகு அவருடைய இரங்கல் கூட்டத்துக்குச் சென்றுவிட்டு கோயம்பேடு பெங்களூர் பஸ்ஸில் இருந்தேன். ஒரு ஃபோன் கால் வந்தது.

“சார் உங்களை பார்க்க முடியுமா ?”

“இப்ப கேபிஎன் பஸ்ஸில் இருக்கேன்…”

பத்து நிமிஷத்தில் அந்த நபர் பஸ்ஸுக்குள் வந்தார். கொஞ்ச நேரம் சுஜாதா பற்றிப் பேசிவிட்டுப் போகும் போது… கொஞ்சம் சங்கோஜமாக  “இதை நீங்கள் வாங்கிக்கொள்ள வேண்டும்… உங்களுக்காக வாங்கினேன்”

“இதெல்லாம் எனக்கு வேண்டாம்” என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சின்ன பையைக் கொடுத்துவிட்டுப் போனார். உள்ளே ஒரு அழகான சின்ன டைரி.

Desikan Narayanan

Advertisements

2 thoughts on “சுஜாதா கொடுத்த டைரி – சுஜாதா தேசிகன்

 1. snehamohankumar November 23, 2012 at 2:08 AM Reply

  ஜனவரியில் நாம் சந்திக்கும் போது உங்களுக்கு ஒரு டயரி தரவா :))

  நைலான் கயிறு சிறு வயதில் படித்து பிரமித்து போன கதை ; சுஜாதா ரசிகன் ஆக வைத்த கதைகளுள் அதுவும் ஒன்று

  ப்ளாக் புது டெம்பிளேட் நன்றாக இருக்கிறது

 2. BaalHanuman November 23, 2012 at 3:24 AM Reply

  >>ஜனவரியில் நாம் சந்திக்கும் போது உங்களுக்கு ஒரு டயரி தரவா ?

  Sure 🙂

  >>ப்ளாக் புது டெம்பிளேட் நன்றாக இருக்கிறது

  நன்றி…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s