இசைமயமாய் ஒரு சந்திப்பு – கல்கி 17.8.1997


இசை மட்டும்தான் இளையராஜாவின் மொழி என்பதில்லை.  அவர் கேமரா மூலமும் பேசுகிறார். ஆம். அவர் மிகச்சிறந்த புகைப்படக் கலைஞரும் கூட.  அவர் பத்திரிகையாளர்களிடம் அதிகம் பேசுவதில்லை என்கிற எண்ணம் பொய்யாகும்படி நம்மிடம் சுமார் இரண்டரை மணி நேரம் பேசினார்.  தாம் எடுத்த புகைப்படங்களைக் காட்டினார்.  தமக்குப் பிடித்த பாடல்களையும் நம்மிடம் பாடிக்காட்டினார்…
கல்கி: ‘தேவதை’ படம் பார்த்தோம்.  ரீ-ரெக்கார்டிங்கிலேயே அப்படத்தின் கதையைச் சொல்லியிருக்கிறீர்கள்.  Fantasy விஷயங்கள் என்றாலே நீங்கள் நாலு கால் பாய்ச்சலில் பாய்கிறீர்கள்.. குறிப்பாக fantasyயின் மேல் உங்களுக்கு ஒருவித லயிப்பு வருவதற்கு என்ன காரணம்?
♫         Fantasy தவிர மற்ற விஷயங்களில் நான் நாலு காலில் பாயவில்லை என்கிறீர்களா?
கல்கி: அப்படிச் சொல்லவில்லை.  Fantasy மேல் உங்களுக்கு ஒரு தனி லயிப்பு இருப்பதாக உணர்கிறோம்.
♫         நீங்கள் வியக்கிற அளவுக்கு அதில் ஒரு வியப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  இந்தப் பதில் உங்களுக்கு ஒரு மனநிறைவை அளிக்காது என்பது எனக்குத் தெரியும் (சிரிப்பு). உண்மையைச் சொல்லப்போனால் ஒரே படத்துக்கு ஆயிரம் விதமாக இசையமைக்கலாம்.  நான் இப்போது செய்திருக்கிற படத்தில்தான் நாலுகால் பாய்ச்சலில் செய்திருக்கிறேன்.  மற்ற படங்களில் மூன்று கால் பாய்ச்சலில்தான் செய்திருக்கிறேன் என்று நீங்கள் சொல்வது உங்கள் மனக்கற்பனையே தவிர, வேறில்லை.  என்ன முடியும் என்ன முடியாது என்பதற்கு Sky is the limit to create something.. இசை என்பது வானம் மாதிரி ஒரு விரிந்த விஷயம்.  எந்த ஸ்வரத்தை – எந்த வாத்தியத்தை வேண்டுமானாலும் எந்த இடத்திலும் கையாளலாம்.
கல்கி: அப்படியானால் நாங்கள் உபயோகப்படுத்திய ”நாலு கால் பாய்ச்சல்” என்பதை எந்தப்படத்தில் நீங்கள் கையாண்டிருப்பதாக நீங்கள் சொல்வீர்கள்?
♫        இதுவரைக்கும் நான் அப்படியெல்லாம் பாயவில்லை. இதுவரைக்கும் நான் செய்திருப்பதெல்லாம் வெறும் அப்பளமும் ஊறுகாயும்தான்.
கல்கி: நீங்கள் அறுசுவை உணவையே பரிமாறுகிறீர்கள் என்றுதான் நாங்கள் உணர்கிறோம்.
♫         வெறும் அப்பளம் ஊறுகாய்க்கே இப்படிச்சொல்கிறீர்கள் என்றால் நான் அறுசுவை உணவை நிஜமாகவே பரிமாறினால் நீங்கள் என்ன ஆவீர்கள் (சிரிப்பு).  அப்படியெல்லாம் பரிமாறுகிற சந்தர்ப்பம் எனக்கு இன்னும் வரவில்லை.
கல்கி: என்ன இப்படிச் சொல்கிறீர்கள்?
♫         சினிமா என்பது ஒருவித ஃபார்முலாவாகப் பழகிப்போன விஷயம்.  இதற்குத்தான் மக்கள் தலையாட்டுவார்கள்.  என்னிடம் கொண்டுவரப்படுகிற பாத்திரம் காலியாக இருந்தால்தானே நான் அதில் ஏதாவது போட முடியும்? நீங்கள் கொண்டுவருகிறபோதே எதையாவது போட்டு நிரப்பித்தான் கொண்டு வருகிறீர்கள்.  அதற்கு மேலும் அதில் நான் எதைப்போட முடியும்? எல்லா சினிமாவிலும் லவ் சாங் வருகிறது.  கிண்டல் பண்ணுகிற பாடலும் வருகிறது. இதில் யார் என்ன புதுமை செய்துவிட முடியுமென்று கருதுகிறீர்கள்?
கல்கி: அப்படி ஒரு ஆதர்சமாக ஒரு படம் பண்ணவேண்டும் என்ற கனவு உங்களுக்கு இருக்கிறதா?
♫         சினிமா என்பது ஒரு வரையறைக்குட்பட்டதுதான்.  இரண்டு மணி நேரத்தில் முடிந்து விடுகிற ஒரு விஷயம்.  அதில் வருகிற ஒரு மூன்று நிமிஷப் பாடலில் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்துக் கட்டிப்போடவேண்டுமானால்,  அதற்கான கதையோட்டமும் காட்சியமைப்பும் அந்தப் படத்தில் இருக்கவேண்டும் அல்லவா?
கல்கி: இதுமாதிரியான வரையறைகள் சினிமாவில் எப்போதும் இருக்கும்தானே?
♫    இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் உங்கள் மனத்தை இழுத்திருக்கிறேனல்லவா?  எத்தனையோ ஆன்மீகவாதிகள் சொல்லியும் கட்டுப்படாத உங்கள் மனது அந்த மூன்று நிமிஷ நேரம் கட்டுப்பட்டிருக்கிறதல்லவா?
கல்கி: அதை இன்னும் பூரணமாகச் செய்யவேண்டும் அல்லவா?
♫         அதற்கான சாத்தியக்கூறுகள் சரியாக அமையவேண்டும். அப்போதுதான் செய்யமுடியும்.  நான் எது போடவேண்டுமென்றாலும் ஒரு பாத்திரத்தில்தான் போடவேண்டியிருக்கிறது.  நான் போடுகின்ற எதுவும் அந்தந்தப் பாத்திரத்தின் வடிவைத்தான் எடுத்துக்கொள்கின்றன.  தண்ணீரை எந்தப் பாத்திரத்தில் ஊற்றுகிறோமோ, அந்தப் பாத்திரத்தின் வடிவையே தானும் எடுத்துக்கொள்கிற மாதிரி… ஊற்றுவது தண்ணீரோ, பாலோ, அமுதமோ.. அதை வாங்கியவனுக்கு அது உடலில் சேரவேண்டும்.
கல்கி: இத்தனை கட்டுப்பாடுகளை மீறி, எது செய்தாலும் அழகாகச் செய்யவேண்டும் என்று தேடித்தேடிக் கொடுக்கிற முத்துக்களையே உங்கள் பாடல்களில் பார்க்க முடிகிறது… அனுபவிக்க முடிகிறது. ஆனால் சினிமா என்பது எல்லா நேரங்களிலும் அழகாக இருப்பதில்லை.  சில நேரங்களில் கொடுமையாகவும் ஆபாசமாகவும் இருக்கிறது.  அழகையே தேடிக்கொண்டிருக்கிற உங்களால் எப்படி இது மாதிரியான சந்தர்ப்பங்களில் மனச்சாந்தியோடு செயல்பட முடிகிறது?
♫         படத்தில் முரடர்கள் வந்தாலும், வன்முறைக்காட்சிகள் வந்தாலும் நான் சப்தஸ்வரங்களோடு மட்டும்தானே பேசிக்கொண்டிருக்கிறேன்?  அவர்களோடு நான் பேசுவதில்லையே..! அதனால் மனதில் எந்தவிதமான வேறுபாடுகளோ, அழுத்தமோ இல்லை.  எப்போதும் இயல்பாக ஓடிக்கொண்டிருக்கிற நதியின் ஓட்டம்தான் என்னில் இருக்கிறது.
கல்கி: அதாவது ஓரளவு விலகியிருந்து செய்வதாகத்தான் சொல்கிறீர்கள்..?
♫         அப்படியில்லை.  படத்துக்கு என்ன தேவையோ அதை செய்துவிட்டுப்போவதுதானே புத்திசாலித்தனம்?
கல்கி: ஒருவகையில் நீங்கள் தத்துவார்த்தமாக விலகியிருக்கிறீர்கள் இல்லையா?
♫         அப்படியில்லை.  படத்தின் இறுதியில் படத்தில் என்ன மிஸ் ஆகிறது.. எதைச் சரிபண்ணவேண்டும் என்பது உங்களை விட எனக்கு நன்றாகத் தெரியும்.  விலகியிருந்தால் ஈடுபாடு எப்படி வரும்?  ஈடுபாடில்லாமல் செய்யும் எந்தக் கலையும் பார்க்கிறவர்களையோ, கேட்கிறவர்களையோ ஈர்க்காது உயிரற்ற உடல்போலாகிவிடும்.  அப்படி ஒரு படைப்பு நமக்குத் தேவையா? விலகியிருந்தால் வேலை நடக்காது.  ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.  ஆனால் அது பெரிய விஷயமில்லை.  வாழ்க்கை ரொம்ப முக்கியம்.  படைப்பும் ரொம்ப முக்கியம்.  மனதுக்குப் பிடிக்கிறது.. பிடிக்கவில்லை; நன்றாயிருக்கிறது.. நன்றாயில்லை… அது அதுக்கப்புறம்.
கல்கி: எந்தப் படத்திலாவது உங்களுக்கு மிகவும் ஏமாற்றமாய் இருந்தது என்று சொல்ல முடியுமா?
♫         ஆரம்ப காலங்களில் எத்தனை எத்தனையோ..
கல்கி: இப்போது?
♫         இப்போது பழகிப்போய்விட்டது (சிரிப்பு).
கல்கி: ஏமாற்றம் பழகிப்போய்விட்டதா அல்லது ஏமாற்றம் இல்லாமல் செய்வது பழகிப்போய்விட்டதா?
♫         ஏமாற்றம் பழகிப்போய்விட்டது (சிரிப்பு)
கல்கி: சினிமா என்கிற எல்லைகளுக்கு அப்பாற்பட்டு – உங்கள் சொந்த ஆத்ம திருப்திக்கேற்ப ‘சிம்பொனி’ பண்ணுகிற வாய்ப்பு கிடைத்ததே?
♫         ஆத்மாவுக்குத் திருப்தி என்பது தேவையில்லை.  திருப்தி அதிருப்திக்கெல்லாம் அப்பாற்பட்டது ஆத்மா.
கல்கி: ரொம்பவும் தத்துவார்த்தமாகப் போகவேண்டாம்.  உங்களுக்கு நிறைவானது என்று வைத்துக்கொள்ளலாம்.
♫         அதுதான் உயர்ந்த இசை என்பதில்லை.  மட்டமானது, உயர்ந்தது என்று மனிதர்களுக்குண்டான குணாதிசயங்கள் இசைக்குக் கிடையாது.  இசை என்பதே ஒரு மென்மையான் உணர்வு.  அந்த உணர்வை இங்கு கொடுக்கமுடியவில்லையே என்பதில் எனக்கு வருத்தம் இல்லை.  இங்கு அதன் அளவு நிர்ணயிக்கப்பட்டது  என்ன செய்தாலும் அதற்குள்தான்.  இங்கு வருகிற லவ் டூயட்டில் நாற்பது பேர் கூட வருகிறார்கள்.  டூயட் முடிந்ததும் அவர்கள் போய்விடுகிறார்கள். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்; எங்கே போனார்கள் என்பதே தெரிவதில்லை.  கதை நாயகன் க்ளைமாக்ஸில் மாட்டிக்கொண்டிருக்கிற நேரத்தில் அந்த நாற்பதுபேரும் வந்து காப்பாற்றுவதில்லை.  பாடலுக்கு மாத்திரமே அவர்கள் வந்துவிட்டுப்போகிறபோது, அதில் என்ன வெரைட்டி கொடுக்க முடியும்? என்ன புதுமை செய்துவிடமுடியும்? இங்கே ஒரு சிந்தனையாளன் தேவையில்லை.  மெக்கானிக்கல் ரீ-ப்ரொடக்‌ஷன் செய்கிற ஒரு ஆள் போதும்.  இதெல்லாம் தவறு என்றும் நான் சொல்லவில்லை.  தங்கள் சொந்தக் கவலைகளை மறப்பதற்காகத் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களிடம் மேலும் அவர்கள் கவலைப்படுகிற மாதிரியான விஷயங்களைச் சொல்வதைவிட இப்படி கையைக் காலை ஆட்டி டூயட் பாடுவது நல்லதுதானே! (சிரிப்பு).
கல்கி: சினிமாவில் இருந்து இப்படி விலகி நின்று பேசும் உங்களால் எப்படி இதிலேயே தொடர்ந்து இருக்க முடிகிறது?
♫         வேலை செய்கிறபோது என் கவனமெல்லாம் வேலையில்தானே இருக்கும்?  இதிலெல்லாம் கவனம் இருக்க முடியுமா என்ன? அதெப்படி நான் விலகியிருப்பதாக மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள்?
கல்கி: உங்கள் இசை சம்பந்தமாகச் சொல்லவில்லை.  சினிமா பற்றி இப்படி நுணுக்கமான ஒரு பார்வையை வைத்துக்கொண்டு..
♫         ஆரம்பத்தில் இருந்தே எனது பார்வை இப்படித்தான். என்னுடைய வேலையில்தான் நான் கண்ணும் கருத்துமாக இருந்துகொண்டிருக்கிறேன்.  ஏனெனில் தயாரிப்பாளர்களுக்கு போட்ட பணம் கிடைக்க வேண்டும் என்கிற நிலை.  அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் ஒரு நம்பிக்கையோடு செய்கிறபோது, நான் அந்த நம்பிக்கையைக் குலைக்கக் கூடாது.  அவர்கள் நம்பிக்கைபோலவே படம் சிறப்பாக வரலாமே. யார் கண்டது?  ஆனால் அதற்கும் எனது பார்வைக்கும் சம்பந்தமில்லை. வெளிநாடுகளிலெல்லாம் ஒரு சிறு உணர்வை மையமாக வைத்துக்கூட எவ்வளவு அழகாகச் செய்கிறார்கள். மலையாளப் படங்களில் கூட சிறப்பாகச் செய்கிறார்கள். நான் இசையமைக்காத சில மலையாளப் படங்களைக்கூட அண்மையில் பார்க்கிற வாய்ப்புக் கிடைத்தது. நன்றாகச் செய்கிறார்கள். அங்கேயும் நமது படங்கள் போல பாடல் காட்சிகளும் வரத்தான் செய்கின்றன.  ஆனாலும் இதையெல்லாம் மீறி கதையும் கதையோட்டமும் கதையமைப்பும் பாத்திரத் தன்மையும் கெடாமல் நன்றாகச் செய்கிறார்கள்.
கல்கி: கலையம்சம் இருக்கிறது… ..
♫         அந்தக் கலையம்சம் இயல்பாக இருக்கவேண்டும் என்பது ரொம்பவும் முக்கியம்.  படத்தில் வருகிற ஒவ்வொரு கேரக்டரும் அந்தந்தக் கேரக்டர்களுக்கான செயல்களைத்தான் செய்யவேண்டுமே தவிர, நம்முடைய புத்திசாலித்தனம் அந்தக் கேரக்டர்களில் வெளிப்பட்டுவிடக்கூடாது. அப்படி வெளிப்பட்டால், அது அந்தக் கேரக்டர் செய்கிற மாதிரி இருக்காது.  நான் அவனுடைய உடம்பில் ஆவியாகப் புகுந்து கொண்டு செய்வதுபோல்தான் இருக்கும். கலையம்சம் என்பது வேண்டுமென்றே செய்வதுதான் என்றாலும் கூட அதுவும் இயல்பாக இருக்கவேண்டும்.  ஆறு அழகாகத் தெரிவதற்குக் காரணம் அது இயல்பாகச் செல்வதால்தான்.
கல்கி: இசை என்பது மென்மையான உணர்வு என்று சொன்னீர்கள். ஆனால் மென்மையான உணர்வுகள் இல்லாத படங்களிலும் எப்படி உங்களால் இசை மென்மையானது என்று வேலை செய்ய முடிகிறது? உதாரணத்திற்கு ஒன்று.. ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ என்ற பாடலுக்கும், ’நேத்து ராத்திரி யம்மா’ பாடலுக்கும் உணர்வுபூர்வமாக நிறைய வித்தியாசம் இருக்கிறதே?
♫         இசை மென்மையான உணர்வுதான். படங்கள் அதை வெளிப்படுத்தினாலும், இல்லாதுபோனாலும் இசை மென்மையான உணர்வுதான்.  ஆனால் அதன் அழுத்தம் எதற்கும் இருக்காது. ‘அம்மா என்றழைக்காத’ பாடவேண்டிய சூழ்நிலையில் ‘நேத்து ராத்திரி யம்மா’வைப் பாடவில்லையே..! (சிரிப்பு)
கல்கி: இரண்டு பாடல்களும் இருவேறு உணர்வைத் தூண்டுகிறவை. அப்போது உங்கள் மனோநிலை எப்படியிருக்கும்?
♫         எல்லா மனிதர்களுக்குள்ளும் ஆசாபாசங்கள் உண்டு.  என்னை மாத்திரம் துறவியாகக் கற்பனைபண்ணிக்கொண்டு இப்படிக் கேட்கிறீர்கள் என்று கருதுகிறேன்.  நகைச்சுவை உணர்வு, பாலுணர்வு என்று எல்லாமே எனக்குள்ளும் உண்டு.  எனக்குப் பாலுணர்வின்மேல் நாட்டமில்லாமல் இருந்திருக்கலாம்.  ஆனால் அப்படியொரு சூழ்நிலைக்கு இசையமைக்கிறபோது அதையொரு வடிகால் மாதிரி வெளிப்படுத்தித்தானே ஆகவேண்டும்? இது எல்லோருக்கும் இருப்பதுதானே?
கல்கி:  இருப்பதுதான்.  ஆனாலும் பல நேரங்களில் It is not good taste என்று ஆகிவிடுகிறதல்லவா?
♫         வெறும் இலக்கியத்தை மட்டும் பார்த்தால் எப்படி பத்திரிக்கை நடத்த முடியாதோ அப்படித்தான் இதுவும்.  எதுவும் இலைமறைவு காய்மறைவாகவும், கொச்சையாக இல்லாமலும் இருக்கவேண்டும். கொச்சையாக ஒரு பாடல்வேண்டும் என்று ஒரு சூழ்நிலை உருவாக்கப்படும்போது, அதையும் நான் நூறு சதவீத ஈடுபாட்டுடன்தான் செய்யவேண்டியிருக்கிறது.  அப்படி நான் செய்யவில்லையென்றால், என்னுடைய Creation’ல் தப்பு இருக்கிறதாக ஆகிவிடுமே?
கல்கி: அப்படியொரு சூழ்நிலைக்கு இசையமைக்கவேண்டியிருக்கிறதே என்று நீங்கள் வருத்தப்படமாட்டீர்களா?
♫         அழகான சிற்பத்தை வடிக்கும் சிற்பி, அம்மி வடிக்கத் தெரியாதவனாயிருப்பானா?  அல்லது அம்மி வடிக்கத்தான் வருத்தப்படுவானா?  அந்தப் பொருள் எல்லோர் வீட்டிலும் உபயோகப்படுகிறதே என்று நினைக்க மாட்டானா?  இருந்தாலும் ஒரு நூறு அம்மி செய்து முடித்ததும் ஒரே ஒரு சிற்பமாவது செய்ய சந்தர்ப்பம் வராதா என்ற வருத்தம்  ஒரு உண்மையான சிற்பிக்கு இருக்கும்.  அதைத்தான் மக்கள் விரும்பிக்கேட்கும்போது என்ன செய்வது?
கல்கி:  எவ்வளவோ நல்ல விஷயங்களை விட்டுவிட்டு இந்த மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்கிற வருத்தமும் வருமே?
♫         உண்டு.. உண்டு.. உண்டு.. இதைத்தான் பழகிப்போய்விட்டது என்று நான் முன்பே கூடச் சொன்னேன்.
கல்கி: நீங்கள் மிகவும் விரும்பி ரசித்துச் செய்த பாடல் ஏதாவது மக்கள் மத்தியில் எடுபடாமல் போய்விட்ட சம்பவம் ஏதும் இருக்கிறதா?
♫         படங்கள் வேண்டுமானால் ஓடாமல் போயிருக்கலாமே தவிர, நல்ல பாடல்கள் எதுவுமே மக்களால் விரும்பப்படாமல் போனதில்லை.  நல்ல பாடல்கள் இருந்தும் படம் ஓடாவிட்டால் வருத்தம் இருக்கத்தான் செய்யும்.
கல்கி: ஒரு காலகட்டத்தில் எல்லாப் பிரபல டைரக்டர்களுமே உங்களிடம்தான் வந்தார்கள்.  நீங்கள் இல்லாத படங்களே இல்லை என்று கூடச்சொல்லலாம்.  பிறகு அந்த நிலை மாறி, பிரபல டைரக்டர்களுக்கு இளையராஜா இசையமைப்பதில்லை என்ற நிலையும் வந்தது.  அதுக்குறித்துப் பல்வேறு விதமான வதந்திகளும் வந்தன. ஆனால் உங்கள் தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலுமே சொல்லப்படவில்லை. அந்த நிலைக்கு என்னதான் காரணம்?
♫         இந்தக் கேள்வியை நீங்கள் அவர்களிடம்தான் போய் கேட்கவேண்டும். அவர்கள்தான் பதிலும் சொல்லவேண்டும். என்னிடம் ஒரு காரணமும் இல்லை (சிரிப்பு)
கல்கி:  How to Name it, Nothing But Wind என்று இரண்டு ஆல்பம் கொடுத்தீர்கள். அப்புறம் ஏன் கொடுக்கவில்லை?
♫         அதற்கான நேரம் ஒதுக்கமுடியாததுதான் காரணம்.
கல்கி:  How to Name it’ல், I met Bach in my House’ பாடலில் ஒருவர் வீட்டுக்குள் வருகிற மாதிரியும், அவரைக் கட்டித் தழுவி வரவேற்கிற மாதிரியும் காட்சி ரூபமான ஒரு விஷயத்தை இசையின் மூலமாகவே கண்முண் கொண்டு வந்திருக்கிறீர்கள். அதை எப்படிச் செய்தீர்கள்?
♫         அது Original Composition of Bach.  அதில் வருகிற Indian Melody மட்டும்தான் என்னுடைய Composition.  அதில் ஒளிந்திருக்கக்கூடிய ராகங்களை மட்டும்தான் நான் வெளியே கொண்டுவந்தேன்.  அந்த ராகங்களுக்கு அந்த வடிவங்கள் இருக்கிறதென்பது மேற்கத்தியர்களுக்குத் தெரியாது.  மேற்கத்திய இசையில் உள்ள ராகங்களை எனக்குத் தெரிந்தவரை வெளியே கொண்டுவந்திருக்கிறேன்.  16ம் நூற்றாண்டில் Bach அதை உருவாக்கியபோதே இருந்ததுதான் அது.  இன்னின்ன இடத்தில் இன்னின்ன ராகங்கள் இருக்கின்றன என்பதை அடிக்கோடிட்டுக்காட்டிய பணிதான் என்னுடையது.
கல்கி: உங்களுடைய பாடல்களைச் சிலர் வெளிப்படையாகக் காப்பியடிக்கும்போது உங்களுடைய உணர்வு எப்படியிருக்கும்?
♫         இல்லாதவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.  அதுபற்றி என்ன இருக்கிறது? (சிரிப்பு)
கல்கி:  உங்களுக்கு என்று விருப்பமான ராகங்கள் எதுவும் உண்டா? எதன்மீதாவது உங்களுக்கு அதீத லயிப்பு உண்டா?
♫         அப்படியெல்லாம் எதுவும் இல்லை.  எல்லாமே Music.. Music.. Music.. அதில் எப்படிப் பிரித்துப் பார்க்கமுடியும்?
கல்கி: இசை என்பது ஒரு இனிமையான விஷயம்தான்.  ஆனால் ஒரு சமயத்தில் உங்களுடைய இசை, பாடல் வரிகளை, வார்த்தைகளைக் கேட்க முடியாமல் Dominate செய்ததாக ஒரு சர்ச்சை எழுந்தது.  அது உண்மையும் கூட… …
♫         எந்தப் பாடல் என்று சொல்லுங்களேன்..??
கல்கி:  நிறையப் பாடல்கள்.  இசைதான் கேட்குமே தவிர வார்த்தை புரியாது.
♫         புரியாததை ஏன் நீங்கள் கேட்கிறீர்கள்?  அந்த வார்த்தைகள் புரியக்கூடாது. அவ்வளவு மட்டமாக எழுதியிருக்கிறார்கள் என்பதற்காகக்கூட அப்படிச் செய்திருக்கலாமில்லையா? (சிரிப்பு)
கல்கி:  அதுபோன்ற கவிஞர்களை நீங்கள் ஏன் ஊக்குவிக்க வேண்டும்?
♫         ஏதோ காலம்!
கல்கி:  நீங்கள் நினைத்தால் இதற்கு நான் இசையமைக்க முடியாது என்று சொல்லலாமே?
♫         அப்படியல்ல… ஒரு பாடல் வரிகளோ, வார்த்தைகளோ கேட்காமல் போவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. Original’ல் இருந்து Copy செய்யப்பட்ட Recording சரியில்லாமல் இருக்கலாம்.  நீங்கள் கேட்கும் டேப்போ, டேப் ரிக்கார்டரோகூட சரியில்லாமல் இருக்கலாம்.  எல்லாவற்றிற்கும் இசையமைப்பாளரே காரணம் என்று சொல்லிவிடமுடியாது.  யார் என்ன செய்தாலும் அதை ஏற்றுக்கொள்வதும், நிராகரிப்பதும் மக்கள் கைகளில்தான் இருக்கிறது.  அப்படி நிராகரித்துவிட்டால் அதுபோன்ற பாடல்கள் வராதே..!
கல்கி: சரி. மீண்டும் உங்கள் ஆல்பத்துக்கு வருவோம். யானி, மைக்கேல் ஜாக்ஸன் ஆகியோரது ஆல்பத்தைக் கேட்கும்போதும் உங்களுடையதைக் கேட்கும்போதும், பாமர ரசிகர்களாகிய எங்களுக்கு எந்தவித வித்தியாசமும் தெரியவில்லை.  அதாவது இசையின் தரத்தைச் சொல்கிறோம்.  ஆனாலும் அவர்களுடைய ஆல்பம் பாப்புலரான அளவுக்கு இசையில் எந்தவிதத்திலும் தரம்குறையாத உங்களுடைய ஆல்பங்கள் பாப்புலராகாததற்கு என்ன காரணம்? உலகத்தரம் என்று ஏதாவது இருக்கிறதா என்ன?
♫         அது வெளிப்படுகிற இடத்தைப் பொறுத்து இருக்கிறது. இந்தியாவில் வெளிப்படுகிறபோது அப்படி இருக்கிறது.
கல்கி: எதனால் அப்படி?
♫        உலகத்தரம் என்று பார்க்கிறபோது, முதலில் ரெக்கார்டிங் தரத்தைத்தான் பார்க்கிறார்கள். அப்படிப்பார்த்தால் என் இரண்டு ஆல்பமுமே அந்தத் தரத்திற்குக் கீழேதான்.. நிறைய தவறு இருக்கிறது.
கல்கி:  நீங்கள் குறிப்பிடுகிற இந்த டெக்னிகலான தவறுகள் எங்களுக்குத் தெரியவில்லையே?
♫         இந்த டெக்னிக்கல் தவறுகள் இல்லாமல் நான் கொடுக்கிறபோது அந்த இசை இன்னும் எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.  இவ்வளவு குறைகள் உள்ள ஒன்றையே இத்தனை நிறைவாக இருக்கிறதென்று நீங்கள் பேசுகிறீர்கள் என்றால் இன்னும் fine sound’ல் கொடுத்தால் எப்படி உணர்வீர்கள்! இதிலெல்லாம் அவர்கள் ரொம்பவும் தேர்ச்சி பெற்றவர்கள்.  இருபத்து நான்கு மணி நேரத்தில் அவர்கள் பன்னிரண்டு மணி நேரம் சாதகம் செய்கிறார்கள்.  அப்படி சாதகம் செய்பவர்கள் ஒரு ஸட்ஜமம் வாசித்தாலே போதும். கேட்டுக்கொண்டே இருக்கலாம்.  இங்கு அப்படியில்லை.. Learning’ஐ விட Earning அதிகமாகிவிட்டது.  கர்நாடக சங்கீதத்தில் கூட பத்துக்கீர்த்தனைகளைக் கற்றுக்கொண்டதுமே கச்சேரி செய்யத்தான் ஆசைப்படுகிறார்கள். மேலும் மேலும் கற்றுக்கொள்வது குறைந்துபோகிறது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி நாம் டெக்னிக்கலாக அவர்களது தரத்துக்குப் போக முடியும்?
கல்கி: நீங்கள் இசையை எழுதுகிறீர்கள் என்று சொல்கிறார்கள். அது எப்படி?
♫         மனதில் கேட்பதை அப்படியே எழுதுகிறேன்.
கல்கி: அதற்கு ஏதேனும் தனிப்பயிற்சி எடுத்துக்கொண்டீர்களா?
♫         இசை, இசை, இசை.. என்று பைத்தியமாகவே ஆகவேண்டும்.. (சிரிப்பு)
https://i1.wp.com/1.bp.blogspot.com/_WlSO8SuGLb8/S7rRpYkfL0I/AAAAAAAAAIY/0ETUi7HFozQ/s1600/A-R-Rahman.jpg
கல்கி: ஒரு சீனியர் என்ற முறையில் ரஹ்மானின் இசையமைப்பு எப்படி என்று சொல்லுங்களேன்.
♫         நன்றாகச் செய்கிறார்.  நானும் உங்களைப்போல இசைக்கு ரசிகன்தானே?
கல்கி: உங்கள் மகன் கார்த்திக்ராஜா?
♫         அவனும் நன்றாகவே செய்கிறான்
கல்கி:  ’இசை என்பது வெறும் ஏமாற்று வேலை’ என்று நீங்கள் முன்பு சொல்லியிருக்கிறீர்கள்.  ஆனால் இசையின் மூலம் இறைவனை அடைவது சுலபம் என்று கூறுகிறார்கள். இசை, இறைவனுக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு விஷயம் என்கிறார்கள்..
♫         பக்கத்தில் மட்டுமல்ல.  இறைவனுக்கு அடுத்த நிலையில் இருப்பது இசைதான். ஒரு விஷயத்தில் நீங்கள் கொண்டிருக்கும் கருத்துக்கு மாறான கருத்தை இன்னொருவர் சொல்லக்கூடாதா? அது ஒரு வேலையாகச் செய்யப்படுகிறபொழுது வெறும் வித்தைக்காரன் வேலைதான். அதிலேயே மூழ்கிவிட்டாலோ…
கல்கி: இசை ஏமாற்று வேலையாக இருந்தால், இறைவனுக்கு அடுத்த நிலையில் அது இருக்க முடியுமா?
♫         நான் ஏமாற்றுவேலை என்று சொன்னது, இசையை நாம் ஏமாற்றுகிறோமா அல்லது இசை நம்மை ஏமாற்றுகிறதா என்று புரிந்துகொள்ள முடியாத ஒரு நிலையைத்தான்.  ஏனெனில் நான் முன்பே சொன்ன மாதிரி அது வானம்போல விரிந்தது.
கல்கி: உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார்?
♫         வடஇந்தியாவில் எனக்குப் பிடித்தவர்கள்.. ஸ்ரீராமச்சந்திரா, நௌஷாத், எஸ்.டி.பர்மன், மதன்மோகன்.. இவர்களெல்லாம் சினிமாவுக்காகத் தங்களைச் சேதப்படுத்திக்கொள்ளாதவர்கள். ‘அனார்கலி’ படத்துக்கு இசையமைக்கவேண்டும் என்று நௌஷாத்தை அணுகினார்கள்.  தமக்கு ஒரு லட்ச ரூபாய் தரவேண்டுமென்றார். அப்போது அது பெரிய தொகை. சரி என்றார்கள்.  அந்தப் படத்துக்கு இசையமைக்கத் தமக்கு இரண்டு ஆண்டுகள் ஆகுமென்றார். அத்தனை காலம் தங்களால் காத்திருக்கமுடியாது என்பதால், அவர் தரத்துக்கு இசையமைக்கக்கூடிய இன்னொருவரை அவரே சிபாரிசு செய்யவேண்டும் என்றார்கள்.  அவர் ஸ்ரீராமச்சந்திராவை சிபாரிசு செய்தார். அவரை அணுகியபோது, ‘நான் ஒரே மாதத்தில் இசையமைத்துத் தருகிறேன்.  ஆனால் நீங்கள் நௌஷாத்துக்கு ஒரு லட்ச ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டதால், எனக்கு ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் தரவேண்டும்’ என்றாராம்.  அதன்படியே தந்தார்கள். படம் வந்தது. அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்ஸ்..! (’ஜிந்தகி’ என்று துவங்கும் ‘அனார்கலி’ படப்பாடலைப் பாடிக்காட்டுகிறார்)
ரோஷன் ஒரு படத்துக்கு இசையமைக்கும்போது, பாடலில் ஒரு கேள்வியை வைப்பார்.  மதன்மோகன் தமது படத்துக்கு இசையமைக்கும்போது, தமது பாடலில் முன்னவர் வைத்த கேள்விக்கு பதில் சொல்லுவார்.  முன்னவர் இறந்தபோது, பின்னவர் வந்து, “இனி யாருக்கு நான் பதில் சொல்லுவேன்” என்று அழுதார். இசையமைப்பாளர்கள் என்றால் அப்படியல்லவா இருக்கவேண்டும்.
கல்கி: உங்களுக்கு இசை தவிர ஃபோட்டோகிராபியிலும் ஆர்வம் உண்டு என்று கேள்விப்படுகிறோம்.
♫         ஆமாம். கோயில்களுக்குச் செல்லும்போது கேமிராவையும் உடன் எடுத்துக்கொண்டு போவேன்.. (தாம் எடுத்த படங்களைக் கொண்டு வந்து காட்டுகிறார்.. அத்தனையும் கோயில்கள், இயற்கைக் காட்சிகள்.. என்று சிறப்பான படங்கள்).
கல்கி: எல்லாப்படங்களுமே சிறப்பாக இருக்கின்றன..
♫         இன்றைக்கு அருமையான கேமிராக்கள் வந்துவிட்டன. என் பங்கு குறைவுதான்.
கல்கி: கேமிரா படம்தான் எடுக்கும்.  ஆனால் நீங்களோ ஒவ்வொரு படத்தையும் இசை போலவே சிற்பமாகக் கம்போஸ் செய்து எடுத்திருக்கிறீர்கள். பிரசுரத்திற்குச் சில படங்களைத் தரமுடியுமா?
♫         இந்தப் புகைப்படங்களைக்கொண்டு ஒரு புகைப்படக் கண்காட்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.  அது முடிந்ததும் தருகிறேன்.
அட்டை வண்ணப்படமும் படங்களும்: பிரவீண்குமார்.

கல்கி சார்பாக பேட்டி கண்டவர்கள்:
திரு. பா.ராகவன் மற்றும் அவரது இதழியல் முன்னோடியான திரு. இளங்கோவன்.

6 thoughts on “இசைமயமாய் ஒரு சந்திப்பு – கல்கி 17.8.1997

 1. rakshith November 16, 2012 at 12:43 AM Reply

  அழகிய சந்திப்பு… நன்றி…

  • BaalHanuman November 16, 2012 at 6:16 AM Reply

   வாங்க ஸ்கூல் பையன்…

 2. T.N.MURALIDHARAN November 16, 2012 at 1:02 AM Reply

  தற்போது குமுதத்தில் வாசகர்களின் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் சமயத்தில் பழைய பேட்டியை பதிவு செய்து அசத்திவிட்டீர்கள்.

  • BaalHanuman November 16, 2012 at 6:15 AM Reply

   உங்கள் முதல் வருகைக்கும், ஆதரவிற்கும் நன்றி முரளிதரன்…

 3. R. Jagannathan November 16, 2012 at 5:26 PM Reply

  I prefer Ilayaraja’s music over his ‘over the head’ speeches. I really wonder if he himself understands what he says as answers and it is surprising that no interviewer has the guts to tell him to be straight forward in his replies. In the latest issue of Kumudam, he replies as ‘en piRappu’ to a question which in my opinion is in bad taste. He is too head strong in my opinion. I will have MSV any day for his music and humility. Apologies if my views hurt you / other readers. – R. J.

  • BaalHanuman November 17, 2012 at 1:26 AM Reply

   Dear R.J,

   I totally agree with you…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s