கங்கா ஸ்னானம் ஆச்சா?


“கங்கா ஸ்னானம் ஆச்சா கிருஷ்ணசாமி.”

“ஆச்சு. . . ஆச்சு. . . ராமசாமி. . .” ரொம்ப குதூகலத்தில் இருந்தார் கிருஷ்ணசாமி.

“ராமசாமி. ரொம்ப நாளா ஒரு சந்தேகம் மனசிலே இருந்துண்டே இருக்கு. தீபாவளி அன்னிக்கு அது என்ன கங்கா ஸ்னானம் ஆச்சான்னு கேட்கறது வழக்கமா இருக்கு. குளிக்கறதோ வீட்டிலே பாத்ரூமிலே, போர்வெல் வாட்டரில் . . . இன்று மட்டும் தண்ணீர் கங்கையா மாறிடறதா என்ன.”

“ஆமாம் கிருஷ்ணசாமி. நீ சொன்னது சரிதான். . . தீபாவளி அன்று மட்டும் எல்லோராத்திலும் கங்கை வருகிறாள் என்பது ஐதீகம்தான். வா. நம்ம ஜோஸ்யராத்துக்குப் போய் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிண்டு இதைப் பற்றியும் கேட்போம்.”

“வாங்கோ. . . வாங்கோ. . . கங்கா ஸ்னானம் ஆச்சா.” வரவேற்றார் ஜோஸ்யர்.

“ஆச்சு. . உங்க ஆசிர்வாதம் வேண்டி வந்தோம். அப்படியே. . .” இழுத்தார் ராமசாமி.

“வழக்கம் போல் சந்தேகமா”

“ஆமாம். ஆனா இந்தத் தடவை ஜோதிஷ ரீதியா இல்லை. ஆன்மிக ரீதியாக.”

“அப்படியா. சொல்லுங்கோ. எனக்குத் தெரிஞ்சத சொல்றேன். . .”

“கங்கா ஸ்னானம் தாத்பர்யம் பற்றி தான் சந்தேகம்.”

அட, இவ்வளவுதானா. ஆரம்பித்தார் ஜோஸ்யர். “உங்களுக்கு இதைச் சொல்றதுக்கு முன்னாடி ஒரு கேள்வி கேட்கிறேன். அதுபற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கான்னு பார்ப்போம். இந்த உலகத்திலே பகவான் எல்லாத்தையும் இரண்டு இரண்டாகப் படைத்து இருக்காறே. அதன் தாத்பர்யம் உங்களுக்குத் தெரியுமா.”

“இரண்டு இரண்டு என்றால், ஆண் பெண், உண்மை பொய், வெயில் நிழல், வானவெளியில் நக்ஷத்ரம் கிரகங்கள் இது போன்று பகவான் இரண்டு இரண்டாகப் பாகுபடுத்தி உள்ளதைச் சொல்றேளா.”

“ஆமாம். அதேதான். உங்கள் உடம்பில்கூடப் பாருங்கள். இரண்டு கைகள், இரண்டு கால்கள், கண்கள். காதுகள் இப்படி எல்லாமே இரண்டு இரண்டாக. ஆனால் தெய்வம் மட்டும் ஒன்று என்றே சொல்றோமே நம் உடம்பில் உள்ள மூளையைப் போல்.”

“இதற்கும் கங்கா ஸ்னானத்துக்கும் என்ன சம்பந்தம். புரியலையே…” இழுத்தார் கிருஷ்ணசாமி.

“இருக்கு கிருஷ்ணசாமி. இப்போ உங்களுக்கு கங்கையை மட்டும்தானே தெரியும். அந்த கங்கை யமுனையோடு அலகாபாத்தில் சங்கமிக்கும் இடத்திலே இன்னுமொரு நதி திரிவேணி சங்கமா சங்கமிக்கிறதே கண்ணுக்குத் தெரியாமல் தெரியுமா.”

“தெரியும். சரஸ்வதி நதிதானே. ஆனால் கண்ணால் பார்த்ததே இல்லை எவரும்.”

“சரியாச் சொன்னேள் கிருஷ்ணசாமி. இரண்டு தெரிகின்றது. மூன்றாவது ஒன்று இந்த இரண்டுக்குள் புலப்படாமலே இருக்கிறதல்லவா. இரண்டின் தத்துவமே தெரியாத அந்தப் பரம்பிரம்மத்தைப் பற்றிப் புரிந்துகொள்ளத்தான். இரண்டு இரண்டாகப் படைத்ததே அந்தப் பரம்பொருளை நீங்கள் உணர்ந்து கொள்ளத்தான். இரண்டு என்பதே ஒன்றை ஒன்று வேறுபடுத்திக்காட்டவும் (Differentiate) ஒன்றுடன் ஒன்றைப் பாகுபடுத்திக் காட்டவும் (Compare) ஒன்றுடன் ஒன்று சேரும்போது மற்றொன்று உருவாகும் என்பதைக் காட்டவும் உணரவும் ஆண்டவன் செய்த திருவிளையாடல்.”

“காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு ஒன்றை திரு. ரா. கணபதி அவர்கள் அற்புதமாக விவரித்துள்ளார்கள். இதைப் புரிந்துகொண்டால் பகவான் தன்னை உணர இரண்டை எப்படிப் பயன்படுத்திக்கொண்டுள்ளார் என்பது உங்களுக்குப் புரியும்.”

“தீபாவளி சமயம். எனக்கு என்னமோ பகீரதனை விட, நரகாசுரனே உயர்ந்தவன். ரொம்ப பிடிச்சிருக்கு அவனை என்று ஆரம்பித்தார் பரமாச்சார்யாள்.”

கூடியிருந்த அனைவருக்கும் பெரியவா என்ன சொல்லப் போறா என்பதில் ஆர்வம் கூடியது. பகீரதனையும் நரகாசுரனையும் compare பண்ணிப் பேசப் போறாங்கறது மட்டும் புரிந்தது.

“பகீரதன் பெரிய தபஸ்வி. அவன் பட்ட கஷ்டங்கள் எடுத்துக்கொண்ட சிரத்தையால்தான் கங்கை நம் பாரதத்துக்குக் கிடைத்தது. ஆனால் நரகாசுரனோ பெரிய கொடுமைகள் மாபாதகங்கள் பலவும் செய்தவன். என்னடா. இப்பேர்ப் பட்ட பாபியை நான் உசந்தவன்னு சொல்றேன்னு பார்க்கிறேளா.”

“தபஸ், பித்ரு பக்தி, சிரத்தை இதுக்கெல்லாம் பகீரதனைப் போற்ற வேண்டும். ஆனாலும் Comparitiveஆ அந்த அசுரன் லோகம் பூராவும் சந்தோஷமா தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடனும்னு வரம் வாங்கித் தரும் அளவுக்கு அந்திம காலத்திலே அடிபோட சேஞ்ச் ஆனதுக்கு அவனை ஜாஸ்தி கொண்டாடனும் இல்லையா. ஒன்றின்னு எடுத்துண்டா இருவரையும் compare பண்ண முடியாது.”

பெரியவா என்ன சொல்ல வரா என்று எவருக்குமே கொஞ்ச நாழி புரியலே..

“உத்தேசித்துப் பண்ணினாலும் உத்தேசிக்காமல் பண்ணினாலும் பண்ணியவருக்கு நன்றி சொல்றதுதான் நம் பண்பாடு. இல்லையா. . . அப்படிப் பார்த்தா நரகாசுரனுக்குத்தான் அதிகமா நாம் நன்றி சொல்லணும். கடன் பட்டா திருப்பிக் கொடுக்கணும். இல்லாட்டா சட்டப்படி குற்றம். தானதர்மம் பண்றது அப்படி இல்லே. பண்ணிணா புண்யம். பண்ணாட்டா பாவம் ஆகாது. குற்றம்னு யாரும் கேஸ் போட முடியாது. அதே மாதிரிதான் பகீரதனுக்கு நன்றி சொன்னா புண்யம், சொல்லாட்டா குத்தம் இல்லே. அது Optional ஆனால் நரகாசுரனுக்கு நன்றி சொல்ல வேண்டியது Obligatary. அவசியம்.”

“பகீரதன் கங்கையை பாரதத்தில் ஓடவிட்டது உபகாரம்தான். ஆனால் அவன் அனைத்து ஜனங்களையும் உத்தேசித்துக் கொண்டு வரலே. பாதாள லோகத்திலே பலவருஷமா கிடந்த தன்னோட பித்ருக்களுக்குச் சொர்க்கம் கிடைக்கவே கொண்டு வந்தான். இதைத் தன்னலம்னுகூடச் சொல்லலாம். பகீரதன் செஞ்சது incidental, intentional இல்லே.”

“ஆனால், நரகாசுரனோ ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவோட சுதர்ஸன சக்ரத்தாலே கழுத்து அறுபட்டு ப்ராணன் போற சமயத்திலேகூடத் தன்னோட க்ஷேமத்தையோ தன்னுடைய பந்துக்கள், பித்ருக்கள் க்ஷேமத்தையோ நினைக்காமல் லோக க்ஷேமத்துக்காகத் தன்னோட இறந்த நாளை என்னென்னிக்கும் கங்கையோட ஸாந்நித்யம் எல்லாத் தீர்த்தத்திலேயும் பூர்ணிமா கிடைச்சு, ஜனங்களோட அனைத்துப் பாவங்களும் பூர்ணமா போகணும்னு ப்ரார்த்தனை செய்து வரன் பெற்றான். அன்னிக்கு ஸ்னானம் பண்ற எந்த ஜலமானாலும் அதிலே கங்கை ஆவிர் பவித்துவிடுகிறாள். கங்கா ஸ்னானம் ஆகி ஆனந்தமா பண்டிகைக் கொண்டாடும் எல்லோருமே மோக்ஷம் பெற வேண்டும் என்று வரம் பெற்றான். ஆனால் தனக்கு மோக்ஷம் வேணும்னோ அல்லது ஒசத்தியான வேறு ஜென்மம் வேணும்னோ கேட்கவே இல்லை.”

“பகீரதன் கொண்டுவந்த கங்கையை நாம் வடதேசம் தேடிச் சென்றுதான் ஸ்னானம் பண்ண வேண்டும். ஆனா நரகாசுரனோ லோக க்ஷேமத்துக்காகத் தீபாவளியன்று எல்லார் வீட்டிலுமே கங்கை ப்ரவாஹிக்க வேண்டும். அந்த நாளில் எல்லா ஜலமும் கங்கையாக ஆகி எல்லா ஜனங்களும் புண்யத்தைப் பெற வேண்டும் என்று ப்ரார்த்தித்தானே அவன் உசத்தியா! அல்லது பகீரதன் உசத்தியா! ஆக நாம் நரகாசுரனுக்குத்தான் அதிகம் நன்றி செலுத்த வேண்டும். தீபாவளி அன்று அவனை ஜாஸ்தியா பூஷிச்சு ஸ்தோத்ரம் பண்ணனும்.” சொல்லி முடித்தார் பரமாச்சார்யாள்.

“இப்படி ஒரு தபஸ்வியையும் ஒரு அரக்கனையும் ஆக இரண்டு எதிர்மறை நோக்கம் கொண்டவர்களை பெரியவா compare பண்ணியதன் விளக்கத்தில் இருந்து நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்.”

ஒன்றும் சொல்லத் தெரியாமல் விழித்தார்கள் இருவரும். எப்படி கங்கை யமுனை இந்த இரண்டு நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் கண்ணுக்குத் தெரியாமல் சரஸ்வதியும் திரிவேணி சங்கமமாகப் பிரவாஹித்து இருப்பதுபோல இப்படிப்பட்ட விளக்கங்கள் பகவானால் மட்டுமே சொல்ல இயலும் என்பதைப் புரியவைத்துள்ளாரே அந்த பிரத்யஷ பரமேச்வர ஸ்வரூபம். இரண்டைப் புரியவைக்க மூன்றாவது ஒரு சக்தி தேவைபடுகிறதல்லவா. அந்த தெய்வ சக்தியை அங்கு கூடியிருந்தவர்கள் பரமாச்சார்யாள் மூலம் உணர்ந்தார்கள். பரவசமடைந்தார்கள் இல்லையா. அந்தக் கண்ணுக்குத் தெரியாத ஆனந்தம்தான் இந்த இரண்டின் விசேஷம்.

கிருஷ்ணசாமிக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை. “பெரியவா மாறுபட்ட இரண்டு பேரை compare பண்ணினது புரிந்தது. நீங்கள் சொன்ன மூன்றாவது ஒன்று புரியவில்லையே.”

“கிருஷ்ணசாமி. பகவான் எல்லாமே இரண்டாகப் படைத்ததன் நோக்கம் அதன் மூலம் மூன்றாவது ஒன்றை நீங்கள் உணர வேண்டும் என்பதே.”

கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன். . .

“இப்போ உங்களுக்கு இரண்டு கைகளைக் கொடுத்திருக்கான் ஆண்டவன். இரண்டு கைகளையும் சேர்த்துத் தட்டுங்கள். சப்தம் வருகிறதா. உங்கள் பேரன் பட்டாஸையும் வத்திக்குச்சியையும் இணைக்கும்போது வெடிசப்தம் கேட்கிறதா. இந்த சப்தம் உங்களால் உணர முடிகிறதே தவிர அதை உங்களால் படம்போட்டுக் காட்ட முடியுமா. இன்னும் விளக்கமாச் சொல்றேன். தீபாவளிக்கு உங்காத்து மாமி ஸ்வீட் பண்ணி இருக்காளா.”

“ம். . . பண்ணி இருக்கா. ரவா லாடு. . .”

“சரி. ரவா லாடு இருக்கு. அதை எடுத்து உங்கள் வாயில் போடும்போதுதானே இனிப்பு என்ற உணர்ச்சியை. சந்தோஷத்தை நீங்கள் பெறுகின்றீர்கள். அந்த இனிப்பு என்கிற சுவையான ஆனந்தத்தை உணர முடிகின்றதே ஒழிய உங்களால் என்ன என்று காட்ட இயலுமா. தீபாவளி வரப்போகின்றது என்று ஒரு மாதம் முன்பே எல்லோரும் ஆனந்தப்படுரோமே . எல்லோர் மனதிலும் ஒரு குதூகலம் நிலவுகிறதே. அந்த ஆனந்தத்தை உணர்வுபூர்வமாகத்தானே உணர முடிகிறது. . .”

“கங்கையைப் பகீரதன் கொண்டுவந்தாலும் அதை பரிபூர்ணமாக அனுபவிக்கச் செய்து அதன் மூலம் புண்ணியம் என்ற கண்ணுக்குத் தெரியாத ஒன்றை உங்களுக்குப் பெற்றுத் தந்துள்ளானே நரகாசுரன். தீபாவளி அன்று நாம் எல்லோருமே அனைத்துப் பாபங்களையும் போக்கி, புண்ணிய ஆத்மாக்களாக ஆகிவிடுகின்றோம் என்பதை பாரதம் பூராவும் அன்று நிலவும் ஆனந்தம், மகிழ்ச்சி நமக்கு உணர்த்துகின்றதே. இந்த ஆனந்தத்தையும் புண்யத்தையும் பெற்றுத் தந்த அந்த நரகாசுரனைப் போற்ற வேண்டும் என்று உணரவைத்த பெரியவாளும் பரபிரம்மஸ்வரூபமே. சாக்ஷாத் பரமேச்வரனான அவரை ஆத்மார்த்தமாக அனுபவித்தவர்களுக்கே ஆனந்தம் என்றால் என்ன என்று புரியும்.”

கங்கையில் மறுமுறை நனைந்த சுகத்துடன் இருவரும் வீடு திரும்பினார்கள். பகீரதன், நரகாசுரன் இருவரும் கங்காஸ்னானத்தின் மூலம் தம்மைப் புண்ணிய ஆத்மாக்களாக மாற்றி விட்டதாகவே நினைத்தார்கள்.

“தீபாவளியும் அதுவுமா எங்கே ஊரைச் சுற்றிவிட்டு வருகிறீர்கள்.” கடிந்துகொண்டார் கிருஷ்ணசாமியின் மனைவி.

நினைத்துப்பார்த்தார் கிருஷ்ணசாமி. எப்படி இத்தனை நாள் இவளுடன் குடித்தனம் நடத்திக்கொண்டு வருகிறேன். நானோ கொஞ்சம் சமத்து. இவளோ ஊருக்கே தெரியும் ரொம்பவே சமத்து. எப்படி எங்கள் இருவருக்கும் சத்தான அதிபுத்திக் கூர்மை உடைய பையனும் பொண்ணும் பொறந்தது. இரண்டின் தத்துவம் எங்கோ உதைக்கிறதே. விடை புரியாமல் தவித்தார் கிருஷ்ணசாமி. இது பரபிரம்மத்துக்கு மட்டுமே புரிந்த விஷயம் என்று நாமும் விட்டுவிடலாம்.

எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Advertisements

5 thoughts on “கங்கா ஸ்னானம் ஆச்சா?

 1. அருமை… நன்றி…

  தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

 2. Jagannathan November 13, 2012 at 10:11 AM Reply

  Wonderful anecdote! Thank you! A nice piece of article appropriate to this special day.

  – R. J.

  • BaalHanuman November 14, 2012 at 3:44 AM Reply

   அன்புள்ள R.J,

   உங்கள் உயர்ந்த ரசனைக்குத் தலை வணங்குகிறேன்…

 3. Ravi November 14, 2012 at 7:46 PM Reply

  When BJP lead compared Swami Vivekanandha and Dawood to show this (Differentiation), people made a hue and cry. May be they all should read this article (including idly vadai).

  Happy Deepavali to Balhanuman and his followers

  • BaalHanuman November 16, 2012 at 6:18 AM Reply

   உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி ரவி…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s