3-கம்பராமாயணம் – சுஜாதா


இதன் முந்தைய பகுதி…

ராமாயணத்தில் வேதியியல் இருக்கிறது.

“துள்ளியின் இரதம் தோய்ந்து தொல்நிறம் கரந்து வேறாய்
வெள்ளிபோல் இருந்த செம்பும் ஆம் என வேறுபட்டார்”

என்னும்போது, பாதரசத்தின் ஒரு துளி பட்டால் வெள்ளியும் செம்பும் வேறுபடுத்தி விடலாம் என்ற ரசாயன செய்தி வருகிறது.

நம் நாட்டு நவீன போர்களில் போல் ஒற்றர்களை அனுப்பும் முறையும் தெரிய வருகிறது. ராவணன் அனுப்பிய ஒற்றன் வந்து,

“அளவு நோக்கி குரங்கென உழல்கின்றான்”

என்னும்போது எதிரிகள் போல வேஷம் மாற்றி அனுப்பும் வழக்கம் தெரிகிறது.

அந்த ஒற்றனை வீடணன் சுலபத்தில் கண்டுபிடித்து விட, அவனைக் கொன்று விட வேண்டும் என பலர் வற்புறுத்த, இராமன்,

“தாம் பிழை செய்தா ரேனம் தஞ்சம் என்று அடைந்தார் தம்மை
நாம் பிழை செய்யலாமோ நலியலீர் விடுதீர்”

என்று விடுவிக்க அந்த ஒற்றனைப் பார்த்து,

“நோக்கினீர் தானை எங்கும் நுழைந்தனிர் இனி வேறு ஒன்றும்
ஆக்குவது இல்லை ஆயின் அஞ்சல் என்று அவனை
போக்குமின் விரைவின் என்று அனுப்பி விட
“உய்ந்தனம்” என்று போனார்.

அம்மாதிரி போர்க் கைதிகளைக் கொல்லாத ஜெனீவா கன்வென்ஷனின் சாயல் இதில் தென்படுகிறது.

ராஜ்ஜியம் எப்படி நடத்த வேண்டும் என்று இராமன் கூறும் அறிவுரைகள் இன்றைய ஹர்ஷத் மேத்தா விவகாரம் வரை செல்லுபடியாகிறது.

“புகையுடைத்து என்னின் உண்டு பொங்கு அனல் அங்கு என்று உண்ணும்
மிகை உடைத்து இவ்வுலகம் நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே
பைக உடை சிந்தை யார்க்கும் பயன் உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை ஆகி இன் உரை நல்க”

என்று சுக்ரீவனுக்கு அறிவுரை கூறும்போது, அரசியலில் உள்ளவர்கள் முக்கியமாகப் பகைவர்களைப் பார்த்து கொஞ்சம் சிரிக்க வேண்டும் என்று சொல்கிறார்.

அந்த காலத்து “சிவில் இன்ஜினியரிங்” முறைகள் யுத்த காண்டத்தில் இலங்கைக்கு அணை கட்டும்போது தெரிகிறது.

குரங்குகள் சேர்ந்து அணை கட்டினால் எப்படி இருக்கும்?

“பேர்த்தன மலை சில பேர்க்கப் பேர்க்க நின்று
ஈர்த்தன சில சில சென்னி ஏந்தின
தூர்த்தன சில சில தூர்க்கத் தூர்க்க நின்று
ஆர்த்தன சில சில ஆடிப் பாடின”

இந்தக் காலத்தில் பெரிய கட்டடம் கட்டும்போது ஏறக்குறைய இதுதான் நிகழ்கிறது. சிலர் பேர்க்கிறார்கள்; சிலர் இழுக்கிறார்கள்; சிலர் சும்மா சப்தம் போடுகிறார்கள். சிலர் ஐலசா பாடுகிறார்கள்.

“காலிடை ஒரு மலை உருட்டி கைகளின்
மேலிடை மலையினை வாங்கி விண்தொடும்
சூலுடை மழை முகில் சூழ்ந்து சுற்றிய
வாலிடை ஒருமலை ஈர்த்து வந்தவால்”

கம்பர் பக்கத்தில் இருந்து பாலம் கட்டுவதைப் பார்த்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

கம்பர் விவரிக்கும் மாயமான் ஒரு ‘ரோபாட்’ போல இயங்குகிறது.

“காயம் கனகம், மணி கால் செவி வால்,
பாயும் உருவொடு இது பண்பலாம் மாயம்”

என்று இலக்குவன் அதைச் சொல்ல இராமன்,

“நில்லா உலகின் நிலை நேர்மையினால்
வல்லாரும் உணர்ந்திலர் மன்உயிர்தாம்
பல்லாயிரம் கோடி பரந்துளதால்
இல்லாதன இல்லை இலக்குமரா”

என்று கம்பர் அந்த நாட்களிலேயே எதிர்காலத்து அதிசயங்களுக்கு வழி வகுத்துள்ளார்.

தொடரும்…

கட்டுரைகள் எழுதுவது எனக்கு எப்போதும் பிடித்த விஷயம். கட்டுரைகளில் தான் வெளிப்படையாக எழுத்தையும் மற்ற விஷயங்களையும் பற்றி வெளிவாக கருத்துச் சொல்ல முடிகிறது. இருந்தும் மக்கள் கட்டுரைகளை விட கதைகளை விரும்பி நாடுவது கொஞ்சம் சோகமே. அதற்குக் காரணம் கட்டுரைகளை பலர் கடினமாக எழுதும் பழக்கம் இன்றும் நிலவுகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s