தளையற்ற, வன்முறை எழுத்துக்கள் பயன் தராது — அசோகமித்திரன்


 

சாகித்ய அகாதமி விருது பெற்ற அசோகமித்திரன்  தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கியப் படைப்பாளிகளில் ஒருவர். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் படைப்பிலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது படைப்புகள். அமெரிக்க இலக்கியங்கள் உள்படப் பிறமொழி இலக்கியங்ளைத் தமிழில் அறிமுகம் செய்தவர். ஆங்கிலம், இந்தி உட்படப் பல மொழிகளில் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதிவரும்  அசோகமித்திரன், அயோவா பல்கலைக்கழகத்தில் நடந்த இலக்கியக் கருத்தரங்குகளில் முதன்முதலில் தென்னிந்தியாவிலிருந்து சென்று கலந்து கொண்ட பெருமைக்குரியவர். டால்மியா மத நல்லிணக்க விருது (1995), தேவன் விருது (1997) போன்ற பல விருதுகள் பெற்றவர்.

கே: எழுத வேண்டும் என்ற உந்துதல் எப்படி ஏற்பட்டது?

ப: என்னுடைய கண்ணோட்டத்தில் சொன்னால் எழுதுவதில் மகிழ்ச்சி இருப்பதால்தான் எல்லோரும் எழுதுகிறார்கள். இண்டர்நெட், பிளாக் என்று இக்காலத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எழுதும் விருப்பம் இருந்தால் நீங்கள் எழுதுவீர்கள். அதை யாரேனும் படித்து, பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இருந்தால் எழுதுவீர்கள்.

கே: முதலில் பிரசுரமான படைப்பு குறித்து…

ப: நான் சிறுவயது முதலே எழுதிக் கொண்டு வந்தாலும், 1957ல் கலைமகள் பத்திரிகையில் வெளியான ‘நாடகத்தின் முடிவு‘ என்ற சிறுகதைதான் தமிழில் என் முதல் சிறுகதை. ஆனால் அதற்குச் சில ஆண்டுகள் முன்பு வானொலிக்காக ‘அன்பின் பரிசு‘ என்ற ஒரு மணி நேர நாடகம் ஒன்று எழுதினேன். அதற்குப் பரிசும் கிடைத்தது.

கே: ஜெமினி ஸ்டூடியோவில் பணி புரிந்த அனுபவம்தான் ‘கரைந்த நிழல்க‘ளாக உருமாற்றம் பெற்றதா, அந்த அனுபவங்கள் குறித்துச் சொல்லுங்களேன்!

ப: இல்லை. எனது வாழ்க்கை அனுபவத்திற்கும் ‘கரைந்த நிழல்கள்‘ நூலுக்கும் அதிக சம்பந்தமில்லை. அந்த அறிவு பயன்பட்டது. அங்கிருந்த பரிச்சயங்கள் அதற்குப் பயன்பட்டன. நான் நேரடியாக வேலை செய்யாத பல துறைகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். ‘தீபம்‘ இதழுக்காக எழுதப்பட்ட கதை அது. கரைந்த நிழல்கள் பலருடைய கதை. ஒருவருடைய கதை மட்டுமே அல்ல.

கே: ‘கணையாழி‘ பத்திரிகையில் பணிபுரிந்த அனுபவம் குறித்துச் சொல்லுங்களேன்!

ப: அது எதேச்சையான ஒன்று. ஆனால் அதுமாதிரியான ஒரு நிர்ப்பந்தத்திற்கு நான் உட்பட்டிருக்கக் கூடாதோ என்னவோ? தயை, தாட்சண்யத்தினால் அதற்கு உடன் பட நேர்ந்தது. முழு நேரமும் அதில் ஈடு பட்டேன் என்றாலும் பல சங்கடங்களை நான் சந்திக்க நேர்ந்தது. ஒவ்வொன்றிற்கும், யார் யாருக்கெல்லாமோ நான் பதில் சொல்லியாக வேண்டி இருந்தது. உண்மையில் பல விஷயங்களுக்கு நான் பொறுப்பாளியே அல்ல. வேறு பலவற்றைச் செய்துதான் நான் பிழைக்க வேண்டியிருந்தது. நான் சம்பந்தப்பட்டவரை தரம் இருக்க வேண்டும், கண்ணியம் இருக்க வேண்டும் என்று நினைப்பவன். ஆனால் பலமுறை அதில் தோற்றுப்போயிருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். என் வாழ்க்கையில் பல நிர்ப்பந்தங்கள் இருந்தன.

கே: எழுத்தே வாழ்க்கை என்று வாழ்ந்தவர் நீங்கள். அது குறித்துச் சொல்லுங்களேன்!

ப: அது மிகவும் கடினமானது. அது போன்ற ஒரு பைத்தியக்காரத்தனம் வேறு எதுவும் கிடையாது. நான் எல்லோரிடமும் சொல்வது அதைத்தான். ஆனால் இக்காலம் போல அக்காலம் இல்லை. வேலை கிடைப்பது மிகவும் சிரமமான காலகட்டம். நான் பிறந்து வளர்ந்த ஹைதராபாதில் ஜாதி வித்தியாசம் கிடையாது. ஆனால் இங்கே நம்மைப் போன்ற மனிதர்கள் ஒருவரை ஒருவர் கீழே தள்ளுவதும், பயன்படுத்திக் கொண்டு, பலனை வேறு ஒருவர் அனுபவிப்பதும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் முகமற்றவனாக ஆங்கிலத்தில் எழுதி, அதன்மூலம்தான் என் வாழ்க்கை நடந்தது. அதில் எனக்கு எந்தவித வருத்தமுமில்லை.

கே: அமெரிக்காவின் அயோவா பலகலைக்கழகத்தில் நடந்த இலக்கியக் கருத்தரங்குகளில் கலந்து கொண்ட முதல் தென்னிந்திய எழுத்தாளர் நீங்கள். அந்த அனுபவம் குறித்துச் சொல்லுங்களேன்!

ப: ஆங்கிலத்தில் என்னுடைய பல படைப்புகள் Thought என்ற பத்திரிகையில் வெளியாகின. நல்ல பல இடங்களுக்கும் அது சென்று சேர்ந்தது. அதில் அயோவாவும் ஒன்று. தென்னிந்தியாவிலிருந்து என்னை அழைத்திருந்தனர். அது ஒரு நல்ல அனுபவம். பலருடன் பரிச்சயம் கிடைத்தது. அங்கிருந்த ஏழு மாதங்களில் ஆறு மாதங்கள் குளிர்காலம். நண்பர்களின் உதவியால் ஓரளவு சமாளிக்க முடிந்தது. அங்கும் எந்தத் தமிழரும் என்னை நெருங்கவில்லை. அவ்வாறு நெருங்கியவர்களுக்கும் நான் முக்கியமானவனல்ல. இப்போது நான் அங்கு சென்றால் கூட என்ன முக்கியத்துவம் இருக்கும் என்று எனக்குத் தெரியாது.

கே: தற்போது வெளிவரும் இலக்கியப் பத்திரிகைகள் குறித்து உங்கள் கருத்து என்ன? அக்காலத்தில் வெளியான எழுத்து, மணிக்கொடி, கசடதபற போன்றவற்றிலிருந்து இவை எவ்வாறு வேறுபடுவதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

ப: தற்போது வெளிவரும் எல்லா இலக்கியப் பத்திரிகைகளுக்கும் ஒரு குறைந்தபட்ச தரம் இருக்கிறது. அந்தக் காலத்து நிலைமையே வேறு. ‘மணிக்கொடி‘யில் நல்ல படைப்புகளும் இருக்கும். மகா மோசமான படைப்பும் பக்கத்திலேயே இருக்கும். கல்கி, அவர்கள் பத்திரிகையில் எது வெளிவர வேண்டும், எதற்கு வரவேற்பு இருக்கும், எதை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடும் என்பதையெல்லாம் பற்றி நன்கு தெரிந்து வைத்து வெளியிடுவார். ஆனால் ‘மணிக்கொடி’ அப்படிக் கிடையாது. தற்போது வரும் பத்திரிகைகளை மிகவும் திட்டமிட்டு, தயாரித்து வெளியிடுகிறார்கள். இப்போது எல்லோரும் நன்கு எழுதக் கற்றுக் கொண்டு விட்டார்கள். அப்பொழுதெல்லாம் எங்களுக்கு முன்னோடி என்று யாரும் கிடையாது. உ.வே.சாமிநாதயர் ஒரு முன்னோடி. அவர் வேறு மொழிக் கலப்பில்லாமல் தமிழிலேயே பல விஷயங்களைச் சாதித்திருக்கிறார். அதைச் செய்ய நாம் முயற்சி செய்ய வேண்டும். அவர் காலத்து வாழ்க்கை வேறு. அவர் சிலர்மீது காட்டிய மரியாதையை, பணிவை, இப்போது காட்டினால் நீங்கள் ஏதோ அடிமையாவதற்குத் தயாராக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

கே: தற்போது பத்திரிகைகளில் சிறுகதை, நாவல்கள் வெளிவருவது முற்றிலுமாகக் குறைந்து விட்டது. வாசகர்களிடையே வரவேற்பில்லை என்று காரணம் கூறப்படுகிறது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

ப: அப்படிச் சொல்ல முடியாது. தற்காலத்தில் எல்லாவற்றிலும் ஒருவிதப் பரபரப்பு தேவைப்படுகிறது. நீங்கள் கட்டுரைகளில் ஏதாவது கருத்துக் கூறிவிட்டால் அதற்கு மறுப்புச் சொல்ல நிறையப் பேர் வருவார்கள். ஆனால் ஒரு நல்ல கதையை எழுதினால் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. ஒரு படைப்பு பயன்தரக்கூடியது, நிறைவு தருவது என்ற உணர்வு, தன்னிறைவு வாசகனுக்கு வர வேண்டும். அவன் அதற்காக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

கே: தற்போது படைப்பிலக்கியங்களை விடக் கட்டுரைகளே அதிகம் வெளியாகின்றன. இலக்கிய வளர்ச்சிக்கு இந்தப் போக்கு ஆரோக்கியமானது தானா?

ப: ஆரோக்கியம், ஆரோக்கியம் அல்ல என்பதல்ல. ஒவ்வொரு காலத்திற்கும் உரிய பணிகள் சில இருக்கின்றன. இந்தக் காலத்திற்குரிய பணி இது. இக்காலகட்டத்திற்கான இலக்கியப் பங்களிப்பாக இதனைக் கூறலாம். நிறைய நல்ல கட்டுரைகளைப் பலர் எழுதியிருக்கின்றனர். ஆனால் அவர்களையே கதை எழுதச் சொன்னால் மிகவும் கஷ்டப்படுவார்கள். சிலர் திணறுவதும் எனக்குத் தெரிகிறது. கட்டுரை இலக்கியம் காலத்தின் தேவை.

கே: உங்களது சமகால மற்றும் தற்கால எழுத்தாளர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள் யார், யார், ஏன்?

ப: என்னைக் கவர்ந்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். எனக்கு அதைச் சொல்வதில் தயக்கம் ஏதும் இல்லை. எனது சமகால எழுத்தாளர்களில் ஜி. சுவாமிநாதன், ஐராவதம் என்ற ஆர். சுவாமிநாதன் என இருவர் என் மனம் கவர்ந்தவர்கள். தற்காலத்தில் ஜெயமோகன். ஒருமுறை ஜெயமோகன் கணையாழிக்கு இரண்டு படைப்புகளை ஒன்றாக அனுப்பியிருந்தார். நான் அவரிடம் சொன்னேன். ‘நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள். ஆனால் பத்திரிகைகளுக்கு இரண்டு கதைகளை அனுப்பி வைத்தால் அவர்கள் உடனே ஒன்றைத் திருப்பி அனுப்பி விடுவார்கள். அதுதான் அவர்களுக்குச் சுலபமான காரியம். ஆகவே அப்படிச் செய்ய வேண்டாம்’ என்று சொன்னேன். நான் ஓர் இடைவெளி விட்டு மற்றதைப் பிரசுரம் செய்தேன்.

வண்ணநிலவன், வண்ணதாசன் ஆகியோரைப் பிடிக்கும். எனக்குப் பிடித்தமான பல படைப்பாளிகள் இருக்கிறார்கள்.

 

கே: உங்கள் எழுத்துக்களிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்தது எது என்று சொல்ல முடியுமா?

ப: ‘நானும் ஜே.ராமகிருஷ்ண ராஜூவும் சேர்ந்து எடுத்த திரைப்படம்’ என்ற ஒரு சிறுகதை எனக்கு மிகவும் பிடித்தது. ‘அப்பாவின் சிநேகிதர்’ என் மனம் கவர்ந்த ஒன்று. (அப்பாவின் சிநேகிதர் என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக 1996 ஆண்டின் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.) ‘உத்தர ராமாயணம்’ என்ற சிறுகதை, ‘பதினெட்டாவது அட்சக்கோடு‘ போன்றவையும் என் மனம் கவர்ந்தவை தான். ‘ராஜாவுக்கு ஆபத்து’ என்ற சிறுகதையைப் பலர் படித்திருக்கக் கூட மாட்டார்கள். ஆனால் அதை ஒரு முக்கியமான சிறுகதையாக நான் கருதுகிறேன். எனக்குப் பிடிக்காதது என்றால் ‘தண்ணீர்’, ‘கரைந்த நிழல்கள்‘ ஆகியவற்றைச் சொல்லலாம். என்னவோ அவற்றை எழுதி விட்டேன்.

கே: உங்களைக் கவர்ந்த பிற எழுத்தாளர்களது படைப்புகள் என்றால் எதைச் சொல்வீர்கள்?

ப: புதுமைப்பித்தனின் ‘சித்தி’ கதை எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால் பல கதைகளில் அவரிடம் ஒருவித அலட்சியப் போக்கு இருக்கும். நாம் அப்படி இருக்கக் கூடாது. மனிதர்களை மதித்துத்தான் நாம் செயல்பட வேண்டும். ஆல்பர்ட் பிராங்க்ளின் என்பவர் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தை ஆராய்வதற்காக வந்தார். அவர் சொன்னார், ‘இது போன்ற சில முரண்பாடுகள் படைப்பாளிகளிடம் இருக்கக்கூடும். அது ஒன்றும் அசாதாரணம் அல்ல’ என்று. ஆனால் அது எனக்கு பழக்கப்பட்டது அல்ல. ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதாவின் படைப்புகளைச் சொல்லலாம். சுஜாதா மிக நல்ல மனிதர். ஆனால் தாட்சண்யம் அவரிடம் அதிகம். நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டு அவர் பல காரியங்கள் செய்திருக்கிறார் என்பதுதான் என்னுடைய அனுமானம். அவரது மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது.

கே: திரைப்படத்துறையில் அந்தக் காலத்திற்கும், இந்தக் காலத்திற்கும் நீங்கள் என்ன வேறுபாட்டைக் காண்கிறீர்கள்?

ப: நானே திரைப்பட தணிக்கைக் குழுவில் இருந்திருக்கிறேன். ஜாதி, அரசியல் எல்லாவற்றையும் மீறி அப்போது நல்ல தேர்வு நடந்தது. நல்ல கண்டிப்பும் இருக்கும். அவ்வளவு எளிதில் சர்டிபிகேட் கிடைக்காது. ஆனால் திரைப்படத்தில் தேர்ந்தவர்கள் நிறையப் படங்களைக் காலத்துக்கேற்றவாறு எடுப்பார்கள். உதாரணமாக ஏவி.எம் அப்போது வேதாள உலகம், நாமிருவர் என்று எடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அவர்கள் எடுப்பதே வேறு. இதை நாம் கவனித்தாலே மாறுபாடு தெரியும்.

கே: வாசகனால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத குழப்பமான நடை கொண்ட படைப்புகள் குறித்தும், வன்முறை எழுத்துக்கள் பற்றியும் உங்கள் கருத்து என்ன?

ப: வன்முறை எழுத்துகள், தளைகளற்ற எழுத்துக்கள் எல்லாம் உயர்ந்த எழுத்துக்கள் ஆகாது. உண்மையைப் பார்க்கப் போனால் தரமான வாழ்க்கை என்பது சிறுசிறு கட்டுப்பாடுகள் கொண்டதாகும். மகாத்மா காந்தியை விட ஒரு நிறைவான வாழ்க்கையை யாரும் வாழ்ந்திருக்க முடியாது. எனவே வாழ்க்கையிலும் சரி, படைப்பிலும் சரி கட்டுப்பாடுகள் தேவை. மிருகங்களிலும் கூட சில கட்டுப்பாடுகள் உண்டு. அவற்றை மீறினால் அவை சேர்த்துக் கொள்ளாது. அதனால் இவ்வகை எழுத்துக்கள் ஒன்றும் விசேஷ நன்மை பயக்காது. ஆனால் இதெல்லாம் ஒரு பேஷன் தான். நானும் இதுமாதிரி எழுதியிருக்கிறேன் என்று காட்ட இவை உதவுமே தவிர, இதை ஒரு சாதனை என்று சொல்ல இயலாது. இதைப் படிப்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் ஆண்கள் அதிகம் படிப்பவையாக இவை இருக்குமே தவிர எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளப்படுவதாய் இருக்காது. ஒரு முறை ஒரு கூட்டத்தில் சுந்தரராமசாமி பேசும் போது, “இவருடைய கதையில் வரும் அதிகபட்ச ஆயுதம் அரிவாள்மணைதான்” என்று சொன்னார். உண்மைதான். என்னுடைய நோக்கம் ஒரு சின்னக் குழந்தை கூடப் படிப்பதாய் இருக்க வேண்டும் என்பதுதான். அதற்குப் புரியாததாய் இருக்கலாம். ஆனால் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. எனது சுயதர்மம் அதுதான்.

கே: புதுமையை நோக்கிச் செல்லுதல், கட்டுடைத்தல் என்பது குறித்து உங்கள் கருத்து என்ன?

ப: ‘கட்டுடைத்தல்’ என்பது சில அடிப்படைகளை வைத்து De-construction செய்வது. அது ஒருவிதமான இலக்கிய வகைமை. திறனாய்வு. இலக்கிய விமர்சனத்தில் ஒரு பாணிதான் De-construction. ஆனால் இது எவ்வளவு தூரம் வரும் என்று சொல்ல முடியாது. தற்போது ஒரு மாதிரியான ஜாதி அமைப்பு நிலவுகிறது. இதுதான் சிலவற்றிற்குக் காரணம் என்று சொல்கிறார்கள். ஆனால் ஐம்பது வருடம் கழித்து இதே ஜாதி அமைப்பு இருக்கும் என்று சொல்ல முடியாது. வேறு மாதிரியாக இருக்கும். முழுக்க முழுக்க மாறி இருக்கும். அப்போது இதே வகை criticism பயன் தராது. ஆனால் படைப்பு இருக்கும். ஆக, திறனாய்வு என்பது காலத்தைச் சார்ந்தது. உதாரணமாக யுத்த காலத்திற்குப் பிறகு பிரான்ஸ் போன்ற தேசங்களில் ஒருவித இலக்கியப் போக்கு நிலவியது. ஆலன் ரோப்கிரியே என்பவர் ஆரம்பித்தார். அந்தக் காலத்தில் அவர் தியரியை வைத்து மைசூர் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு எல்லாம் கூட நடந்தது. நானும் அதில் கலந்து கொண்டேன். ஆனால் அவர் பெயரே தற்போது பலருக்குத் தெரியாது. இதெல்லாம் மாறக் கூடியது.

கே: விருதுகள் குறித்து உங்கள் கருத்து என்ன?

ப: விருதுகள் நமது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில்லை. அது கிடைத்தால் மகிழ்ச்சி. கிடைக்கவில்லை என்பதற்காக நாம் வருத்தப்பட வேண்டியதில்லை. எனக்குத் தெரிந்த சிலர் எவ்வளவோ முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. சிலர் முயற்சிகள் செய்து வாங்கிவிடுவர். அந்த முயற்சியிலேயே கிடைக்காமல் இறந்து போனவர்களும் உண்டு. ஆக, விருதுகளுக்கு நாம் அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை.

கே: மூத்த எழுத்தாளர்கள் பற்றி, அவர்களுடனான உங்களது அனுபவங்கள், உங்களுக்கு நேர்ந்த பாதிப்புகள் பற்றிச் சொல்ல முடியுமா?

ப: ஒரு எழுத்தாளன் எந்த விதமான பாதிப்புக்கும் உட்பட்டு விடக் கூடாது. சுயமாகத்தான் இருக்க வேண்டும். செய் நேர்த்தியை மட்டுமே பிறரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஜானகிராமன் ஒருமுறை எழுதியதை திரும்பிக் கூடப் படிக்கமாட்டார். பக்கம் பக்கமாக எழுதி அப்படியே கொடுத்து விடுவார். அவரது மனக்கட்டுப்பாடு அவ்வாறு இருந்தது போலும். பிச்சமூர்த்தியுடன் எனக்கு நல்ல பரிச்சயம் உண்டு. நல்ல மனிதர். செல்லப்பா தேவையற்ற சர்ச்சைகளில், விருப்பு, வெறுப்புகளில் சிக்கிக் கொள்பவர். ஆனால் மிகமிக மனக் கஷ்டப்பட்டவர் அவர். இப்படி நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஒரு புத்தகக் காட்சியின் போது மாலதி மைத்ரி என்பவர் என்னைக் கட்டிக் கொண்டு ‘நீங்கள் தானே என்னை முதலில் வெளியிட்டவர், அறிமுகப்படுத்தியவர்’ என்று சொல்லி பரவசப்பட்டார். இதை என்னிடமும் சொல்ல வேண்டும் என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது. இன்னும் பல பேரிடமும் அவர் சொல்வார். ஆனால் இதையெல்லாம் எதிர்பார்த்து நான் எதுவும் செய்யவில்லை. நா.பார்த்தசாரதியின் படைப்புகளையெல்லாம் பெரிதாக தற்போது நினைப்பது கிடையாது. ஆனால் அவர் அச்சுக்குக் கொடுக்கும் போது, ஒரு இடத்தில்கூட அச்சுக்கோர்ப்பவருக்குச் சங்கடமே இருக்காது. இது போன்ற செய்நேர்த்தியை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். எனக்குப் பெரிய ஆதர்சம் உ.வே. சாமிநாதையர் அவர்கள்.

கே: உங்களைப் பற்றி அம்ஷன் குமார் ஒரு ஆவணப் படம் எடுத்திருக்கிறார் அல்லவா?

ப: ஆம். அவர் அதனை மிகவும் விரும்பி ஆத்மார்த்தமாகவே செய்தார். எனது நலம் விரும்பி அவர். அவருடைய அன்பு அதில் தெரியும். எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது.

கே: படைப்பை விமர்சனம் செய்வதை விடுத்து, படைப்பாளியை விமர்சனம் செய்வது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், உங்களுக்கே அது போன்ற அனுபவங்கள் நேர்ந்திருக்கின்றன அல்லவா?

ப: ஆம். உண்மைதான். அதையும் காலத்தின் கட்டாயம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் காலத்திலும் அப்படித்தான் நடக்கிறது. என்னை இரண்டு புத்தகங்களை வெளியிட வேண்டும் என்று அழைத்தார்கள். நானும் நல்லெண்ணத்தினால் அங்கு சென்றேன். ஆனால் அங்கிருந்த கூட்டமே வேறு. திட்டமிட்டே திட்டுகிற மாதிரி இருந்தது. திட்டினால் திட்டிவிட்டுப் போகட்டும் என்று பேசாமல் இருந்து விட்டேன். என்ன செய்வது, இம் மாதிரி அனுபவங்கள் பலருக்கு நேர்ந்திருக்கிறது.

கே: உங்களது வாழ்க்கையை பின்னோக்கிப் பார்க்கும் போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

ப: எனக்கு வருத்தம் எதுவும் கிடையாது. வருத்தங்கள் வைத்துக் கொள்ளவும் கூடாது. நடந்தது நடந்து விட்டது. என்னால் எது சாத்தியமோ அதை என்னால் முடிந்த அளவிற்குச் செய்திருக்கிறேன். சில படைப்புகளைப் பார்க்கும் போது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

கே: உங்களது எழுத்துப் பணிக்கு குடும்பத்தினரின் உறுதுணை எப்படி இருந்தது?

ப: மிகவும் கஷ்டம். பல சிரமங்களை அனுபவிக்க வேண்டி வந்தது. பல இழப்புகளை அவர்கள் சந்திக்க நேர்ந்தது. குறிப்பாக எனது மகன்களுக்குப் பல இழப்புகள். அவர்கள் அதை வெளிப்படையாகச் சொன்னதில்லை.

எழுபத்தேழு வயதிலும் சிரமம் பாராமல் நமது கேள்விகளுக்கு பொறுமையுடன் பதிலளித்த அசோகமித்திரன் அவர்களுக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.

இலக்கியம் ஒரு சுதந்திரப் பறவை

சிற்றிதழ்கள் என்றாலே குறுகிய கண்ணோட்டம் என்றாகாது. ஒவ்வொரு இதழுக்கும் எழுதுவதற்கு என எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அந்தப் பணியைச் செய்கிறார்கள்.இலக்கியம் என்பது சுதந்திரப் பறவை. அதை வலுக்கட்டாயமாக நான் வளர்த்துத்தான் தீருவேன் என்று யாரும் செயல் பட முடியாது. கலைகள் தாமாகவே வளர்ந்து கொண்டுதான் இருக்கும். இன்று இசைத்துறையை எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை இளைஞர்கள், எவ்வளவு அற்புதமாகப் பாடுகிறார்கள்! புல்லாங்குழல், வயலின் வாசிக்கிறார்கள். முன்பு இசைத்துறையே அவ்வளவுதான் என்று சொன்னார்கள். ஆனால் இன்று நிலைமை மாறி இருக்கிறது. வெளிப்பாடுகள் வேறு விதமாக இருக்கலாம். கலைகள் வளர்ந்து கொண்டுதான் இருக்கும்.

–அசோகமித்திரன்

அச்சம், பிரமிப்பு

ஆச்சரியமாக இருக்கிறது. ஒரே நாளில் 10, 15 புத்தகங்கள் வெளியிடுகிறார்கள். எப்படி என்பது தெரியவில்லை. தட்டச்சு, தாள், பைண்டிங் என்று பல செலவுகள் இருக்கும் போது எப்படி சாத்தியமாகிறது என்றும் புரியவில்லை. முன்பெல்லாம் புத்தகம் கொடுத்தால் ஒரு வருடம் கழித்துத்தான் வெளியாகும். இப்படித் தான் தெரியாத்தனமாக ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் போய் மாட்டிக் கொண்டேன். மேடையில் 15 புத்தகங்கள். 15 ஆசிரியர்கள். 15 பிரதிகளை வெளியிடுபவர்கள். 15 பிரதிகளைப் பெற்றுக் கொள்பவர்கள். நான் மேடையில் ஒரு ஓரமாக மாட்டிக் கொண்டேன். எப்பொழுது கீழே விழப் போகிறேனோ என்று பயந்து கொண்டே இருந்தேன். வாசகர்கள் எப்படி இவற்றைத் தரம் பிரிப்பார்கள்? இன்றைய தமிழ்ப் பதிப்பகச் சூழல் எனக்கு ஒருவித பிரமிப்பையும், பயத்தையும் தருகிறது.

–அசோகமித்திரன்

கஜினி‘யும் செல்லமேயும்!

கட்டுப்பாடும் பொறுப்பும் அற்ற வாழ்க்கையின் மீதுள்ள ஆசையின் வெளிப்பாடுதான் தற்போதைய திரைப்படங்கள். உதாரணத்துக்கு கஜினியை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் தமிழில் வந்தது. இப்போது ஹிந்தியில் வந்திருக்கிறது. இதை ஆராய்ந்தீர்கள் என்றால் ‘எப்படி இவனால் அப்படி இருக்க முடிகிறது, எப்படி அந்தப் பெண் இவ்வளவு சுதந்திரமாக எந்தவிதக் கட்டுப்பாடும், பொறுப்பும் இல்லாமல் இருக்க முடிகிறது? இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமே யில்லையே!’ என்றுதான் தோன்றும்.

செல்லமே‘ என்று ஒரு படம். மிக விறுவிறுப்பாக இருக்கும். அடுத்தது என்ன என்று மிக ஆர்வமாக இருக்கும். ஆராய்ந்து பார்த்தால், என்ன பைத்தியக்காரப் படம் அது! பெண்ணை இழுத்துக் கொண்டு போகிறான். ஒரு வீட்டில் அடைத்து வைக்கிறான். நம் வீட்டில் ஒரு சாதாரண எலக்ட்ரிக் வேலை செய்வதற்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் படத்தில் வீட்டைச் சுற்றி எலக்ட்ரிக் ஷாக் வைக்கிறான். இதெல்லாம் எப்படி சாத்தியம்? மனிதர்களின் அளவுக்கு மீறிய சுதந்திர வேட்கையே இது போன்ற திரைப்படங்களாகிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது.

–அசோகமித்திரன்

Feb 2009, தென்றல் மாத இதழில் வெளியான நேர்காணல்…

சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்

Advertisements

8 thoughts on “தளையற்ற, வன்முறை எழுத்துக்கள் பயன் தராது — அசோகமித்திரன்

 1. 2009..! பகிர்ந்து கொண்டதற்கு நன்றி…

 2. rathnavelnatarajan October 20, 2012 at 7:46 AM Reply

  திரு அசோகமித்திரன் அவர்களின் நேர்காணல்; மனம் திறந்து பேசியிருக்கிறார். எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி திரு BALHANUMAN’S BLOG

  • BaalHanuman October 23, 2012 at 2:02 AM Reply

   இந்த அருமையான நேர்காணலை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி…

 3. R. Jagannathan October 20, 2012 at 12:22 PM Reply

  An interview straight from the heart without any pretensions. Thanks for sharing. But, I don’t know if it is really worth living the entire life by only writing – particularly when it is not a greatly paying profession in India- and putting your family into hardships. Probably such writers are satisfied with fame alone, not worrying about their living with financial woes.

  • BaalHanuman October 23, 2012 at 2:06 AM Reply

   மனதில் தோன்றும் கருத்தை மிக வெளிப்படையாகவும், எளிமையாகவும் கூறும் அசோகமித்திரன் உங்களையும் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை…

 4. ரெங்கசுப்ரமணி October 22, 2012 at 1:47 PM Reply

  //. என்னுடைய நோக்கம் ஒரு சின்னக் குழந்தை கூடப் படிப்பதாய் இருக்க வேண்டும் என்பதுதான். அதற்குப் புரியாததாய் இருக்கலாம். ஆனால் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. எனது சுயதர்மம் அதுதான்// இது ஒன்று போதும் நல்ல எழுத்தை அடையாளப்படுத்த. சுஜாதாவைப் பற்றி அவர் கூறியது சரி என்றுதான் படுகின்றது.

  • BaalHanuman October 23, 2012 at 2:07 AM Reply

   அன்புள்ள ரெங்கசுப்ரமணி,

   உங்கள் கருத்துடன் எனக்கு முழுக்க உடன்பாடே…

 5. kahanam April 11, 2014 at 1:47 PM Reply

  “ஒரு படைப்பு பயன்தரக்கூடியது, நிறைவு தருவது என்ற உணர்வு, தன்னிறைவு வாசகனுக்கு வர வேண்டும். அவன் அதற்காக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.” Superb. This article is an example.Asokamithran and Sujatha are Greats in their own individuality. Thanks for posting.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s