அசோகமித்திரனின் ‘தண்ணீர்’


“சுருண்டோடும் வாழ்க்கைநதியின் சித்திரத்தை அசோகமித்திரன் படைப்புகள் நமக்குத் தருவதில்லை. அவை துளியில் ஆழ்ந்துவிடும் தன்மை உடையவை. அத்துளிகளில் நதியின் பிரம்மாண்டத்தை எப்போதும் அடக்கிக் காட்டுவதில் அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார்” என்கிறார் ஜெயமோகன்.

அதற்கு சரியான எடுத்துக்காட்டு அவரது ‘தண்ணீர்‘  நாவல். நதியின் பரபரப்பான வேகமின்றி, சிறு ஓடை ஒன்றின் பாம்பின் ஊர்தல் போல நாவல் மெதுவாக நகரத் தொடங் குகிறது. ஆனால் போகப்போக கீழே வைத்துவிட முடியாதபடி வேகம் கொண்டு நாவல் பிரவகிக்கிறது. பிரச்சினை நாம் தினசரி வாழ்வில் எதிர் கொள்வதுதான். தண்ணீர்ப் பிரச்சினை – நாவலில் காட்டப்படும் களமான சென்னை என்றில்லாமல் இப்போது நாடு முழுதும் – ஏன் உலகம் முழுதும் வியாபித்துள்ளது. இது சென்னை போன்ற பெரு நகரங்களில் மிகவும் கூர்மையாக மக்களின் உறவுகளைப் பாதிப்பதாக இருப்பதை – பார்ப்பதற்குத் துளியாகத் தோன்றினாலும் ஒருபெரு வெள்ளத்தைப்போல் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுவதைக் குறியீடாக நாவல் சித்தரிக்கிறது.

~~~~~~~~~~~~
மாறுதல்களை குறியீட்டுத் தன்மையுடன் ஆசிரியர் நகர்த்துவதில்லை; மாறுதல்களைச் சித்தரிப்பதுடன் நின்று விடுகிறார். ஆனால் நாம் தான் அதன் குறியீட்டுத் தன்மையை உணர்கிறோம். தண்ணீர்ப் பிரச்சினை தீர்ந்த பிறகு உறவுகள் சுமுகமாகி விடுவதும், பிரச்சினை வரும்போது உறவுகள் கசந்து போவதுமான யதார்த்தத்தை அலட்டல் இன்றி ஆரவாரமற்று மனதில் பதிய வைத்துவிடுவதில் ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். தண்ணீர் வறட்சியைச் சொல்லுகிற அதே சமயத்தில் மனிதர்களின் பொதுவான மன வறட்சியை நாவல் சுட்டுவதாகக் கொள்ளலாம்.

தண்ணீர்‘ என்பது நாவலின் தலைப்பானாலும், தண்ணீர்ப் பிரச்சினை விரிவாகச் சொல்லப்பட்டாலும் தண்ணீர் இந்நாவலின் மையமில்லை. நாவல் முழுதும் நகரின் வறட்சியும், தண்ணீருக்காக மக்கள் அல்லல் படுவதும் வெளிக்
கோடாக இருப்பினும் உள் வரைவாக ஜமுனா என்பவளின் வாழ்க்கை வருகிறது. அவள்தான் நாவலின் மையம். அவள் தன் தங்கை சாயாவுடன் ஒரு வீட்டின் ஒண்டுக் குடித்தனம் இருக்கிறாள். அவளை, சினிமாவில் நடிக்கும் ஆசை காட்டி பாஸ்கர்ராவ் என்பவன் குடும்பச் சூழலிலிருந்து அழைத்துப்போய் நாசம் செய்து விடுகிறான். அவனது தொடர்பை விரும்பாத தங்கை சாயா அவளை விட்டுப் பிரிந்து ஹாஸ்டலுக்குப் போய்விடுகிறாள். அவளது பிரிவாலும் பாஸ்கர்ராவின் சுயநலப் போக்காலும் தடுமாற்றத்தில் இருக்கும் ஜமுனா தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். அதையறிந்த அவள் குடியிருக்கும் வீட்டுக்காரி அவளைக் காலி செய்யச் சொல்லுகிறாள். அநாதரவான நிலையில் – குழாயடியில் பரிச்சயமான டீச்சர் ஒருத்தி, அவளைத் தேற்றி ஆதரவாய்ப்பேசி வாழ்வுக்கான பார்வையை, உரத்தை அளிக்கிறாள். அவளால் மேல் பிரக்ஞை பெறும் ஜமுனா துன்பங்களை மன முதிர்ச்சியுடன் ஏற்கும் மனப்பக்குவத்தை அடைகிறாள்.

நாவலில் வரும் வீட்டு உரிமையாளரான பெண்மணி, டீச்சரின் மாமியார், ஜமுனாவின் பாட்டி ஆகியவர் குரூரமான மனுஷிகளாய் அவளைப் பாதிக்கிறார்கள். நாவலில் வரும் எல்லோருமே அப்படி இருக்கவில்லை. தனது வாழ்க்கை வறட்சியும் வெறுமையுமாய் இருந்த போதும் டீச்சர் ஜமுனாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டுபவளாய் இருக்கிறாள். இருத்தலியலை நிலைநாட்டுவதாக அவளது பேச்சு இருக்கிறது. அதனால் ஜமுனா அவளுள் விரிவடைகிறாள். ஜமுனாவின் தங்கை சாயா, பாஸ்கர்ராவுடனான அவளது தொடர்பை வெறுத்தாலும் அவள் அதனால் தாய்மை அடைந்தபோது மீண்டும் அவளுக்கு ஆதரவாய் ஹாஸ்டலை விட்டு வந்து அவளுடன் வசிக்கத் தொடங்குகிறாள். ஜமுனாவின் மாமா அவளுக்கு ஆதரவாகவும் எப்போதும் புன்னகைப்பவராகவும் இருக்கிறார். இதனாலெல்லாம் ஜமுனாவும் ஒரு குரூர மனுஷியாகாமல் தப்பிக்கிறாள்.

அசோகமித்திரனின் எழுத்தில் இயல்பாகவே வாழ்க்கையை ஒரு எள்ளல் தொனியுடன் பார்க்கும் பார்வையைக் காணலாம். இந்த நாவலிலும் அதனைக் காணலாம். ‘அசோகமித்திரனிடம் இயங்கும் எள்ளல் தொனி வாழ்க்கையை ஒரு நாடகம் போல விளையாட்டைப் போல நமக்குக் காட்சிப் படுத்துகிறது. ‘இந்த எள்ளல் தொனி மூலம் சித்தரிக்கப் படும் மனிதர்கள் நம்மில் இழிவுணர்வை ஏற்படுத்துவதில்லை‘ என்கிறார் கோவை ஞானி. ஏனெனில் வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது. நமக்குப் பழகிவிட்ட விஷயம் அது. போலி உணர்வுகளை, அசட்டு உருக்கங்களை உருவாக்கி அவற்றுள் நம்மை அசோகமித்திரன் ஒரு போதும் திணிப்பதில்லை. இவரது பாத்திரங்கள் கற்பனையானவை அல்ல. அவை அசலானவை. நாம் தினமும் எங்காவது சந்திக்கிற எதார்த்தங்கள். இவர் காட்டும் காட்சிகளும் நாம் தினமும் சந்திப்பவைதாம். அவர் சித்தரிக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியும், சிலிர்ப்பும் பச்சாதாபமும் ஏற்படுத்துபவை.

குழாய்களில் தண்ணீர் வராதபோது நகராட்சி ஆட்கள் தெருவைக் கண்டமேனிக்கு அகழ்ந்து போட்டுவிட்டுப்போவதும் அதில் கார், லாரி போன்றவை சிக்கி மக்கள் நடமாட்டத்துக்கு இடைஞ்சலாகிவிடுவதும், அப்படிப் பள்ளம் வெட்டும்போது கழிவு நீர்க்குழாயைச் சேதப்படுத்திவிட்டு அலட்டிக் கொள்ளாமல் பதில் சொல்லுவதுமான வாதையை அசோகமித்திரன் சித்தரிக்கும்போது அது நமக்கு அந்நியமாகத் தோன்றுவதில்லை. ஏனெனில் தண்ணீர்ப் பிரச்சினை வரும்போதெல்லாம் சென்னைவாசிகள் சந்திக்கும் நிஜமான அவலம் அது. அந்நேரங்களில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகையில் அந்த லாரி டிரைவர் அப்போதைக்கு முக்கியமான பிரமுகர் ஆவதும் அவர் அப்பணிக்காகத் தெருவாசிகளிடம் பணம் பிடுங்கும் சுரண்டலும் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. விரிவான வாழ்க்கைப் பரப்பும் அதன் முரண்களும், அவை வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் முயற்சியும் நாவலில் காட்டப்படுவது ஆசிரியரது பாசாங்கற்ற நேரிய பார்வையைக் காட்டுவதாக உள்ளது.

அசோகமித்திரனது நாவல்களில் உரையாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவ்வுரையாடல் கள் கருத்துப் பரிமாற்றச் சாத்தியப்பாடுகள் கொண்டவை. இந்நாவலில் டீச்சரம்மாவுக்கும் ஜமுனாவுக்கும் இடையே
நடைபெறும் உரையாடல் முக்கியமானது. அதனால் ஜமுனாவின் வாழ்க்கைப் பார்வையே மாறுகிறது.

அவரது படைப்புகளில் உள்ளடக்கத்தை விட மொழி நடையே அவரது ஆளுமையைக் காட்டுவதாக உள்ளது. அவரது மொழிநடை தத்துவ நோக்கத்தை அடிப்படையாய்க் கொண்டவை. வாழ்க்கை, பிரபஞ்சம் பற்றிய விகாசங்கள், ஆண் பெண் உறவின் யதார்த்தமான இருத்தல் ஆகியவற்றை உள்ளீடாகக் கொண்டவை. புற உலகின் நிகழ்வுகள் மட்டுமின்றி அகவுலகும் காட்சிப் படிமங்களாகத் தோன்றுகின்றன. காட்சிகளைக் கண் முன் நிறுத்திவிட்டுத் தான்  அவற்றில் பட்டுக் கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்வதும் அவரது சிறப்பு. அவரது படைப்புகளில் அவரது பிரசன்னம் உறுத்துவதில்லை.

அசோகமித்திரனது பாத்திரப் படைப்புகளும் அலாதியானவை. வறுமை, ஆசை, நிராசை, விரக்தி, கையாலாகாத கோபம் போன்ற பலவித உணர்ச்சிகளுக்கு அதிக இடம் கொடுப்பவை அவரது பாத்திரங்கள். இந்நாவலில் வரும் பாத்திரங்களான ஜமுனா, சாயா, டீச்சர், அவளது மாமியார், பாஸ்கர்ராவ், வீட்டுச்சொந்தக்காரி அனைவருமே இத்தகைய உணர்வுகளைப் பிரதிபலிக்கிறார்கள்.

ஜமுனா பாஸ்கர்ராவ் உறவால் குற்றவுணர்வு கொண்டவளாக, தெருவிலும் உறவினரிடையேயும் தலைநிமிர்ந்து நடக்க முடியாதவளாக இருக்கிறாள். வாழ்க்கையே அவளுக்கு நிலையற்றதாக – பாஸ்கர்ராவின் உறவை விடமுடியாமலும், அவனது அழைப்பைத் தடுக்கமுடியாததுமான தடுமாற்றத்தில் இருக்கிறது. தன்னம்பிக்கையும் தைரியமும் இழந்தவளாய் விரக்தியுற்று தற்கொலை முயற்சிவரை போகிறாள்.

அவளது தங்கை சாயா ஜமுனாபோல, வாழ்க்கையைக் கண்டு அஞ்சுபவள் அல்லள். கணவன் ராணுவத்தில் இருப்பதால் சென்னையில் தனிக்குடித்தனம் வைக்கமுடியாமல் தனது ஒரே மகனை மாமா வீட்டில் விட்டு வைத்து ஜமுனாவுடன் ஒண்டுக் குடித்தனத்தில் இருக்கிறாள். தாங்கள் இரண்டு பேர் மகள்கள் இருந்தும் நோயாளியான தாயைத் தங்களுடன் வைத்துக் கொள்ள முடியாமல் மாமாவின் வீட்டில் விட்டிருப்பதும் அவளுக்குக் குற்ற உணர்வைத் தருகிறது. இடையில் ஜமுனாவின் சீரழிவைக் கண்டு எச்சரிக்கை செய்தும் பாஸ்கர்ராவை விரட்டியடித்தும் அவளைக் காப்பாற்ற முயன்று முடியாமல் போக அவளை விட்டுப் பிரிந்து ஹாஸ்டலுக்கு போகிறாள். பின்னர் ஜமுனாவின் இறைஞ்சலைத் தவிர்க்க முடியாது மீண்டும் அவளுடனேயே வசிக்க வருகிறாள். கண்டிப்புடன் ஈர நெஞ்சும் கொண்டவளாகவும் அவள் இருக்கிறாள்.

பாஸ்கர் திருமணமானவன். ஜமுனாவை சினிமா ஆசை காட்டி அழைத்துப் போய் ஆந்திரத் தடியர்களிடம் விட்டு அவளை நாசம் செய்கிறான். ஜமுனாவை அழைக்க வரும்போதெல்லாம் சாயாவின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் தவிக்கிறான். ஜமுனா கர்ப்பிணியான நிலையிலும் அவளுக்கு வாழ்க்கை தர அவன் முயற்சிக்கவில்லை. சினிமா உலகின் மோசடிப் பேர்வழிகளுக்கு உதாரணமாய் இருக்கிறான்.

ஜமுனா குடியிருக்கும் வீட்டுக்காரி சென்னையில் வாடகைக்கு விடும் சொந்தவிட்டுக்காரர்களின் பேராசைக்கு உதாரணமாய் விளங்குபவள். தண்ணீர் தட்டுப்பாடு வரும்போது போர் குழாயை ஆழப்படுத்திக் கொடுப்பது அவளது கடமையாக இருந்தும் குடியிருப்பவர்களிடம் அந்தச் செலவை வசூலிக்கிறாள். ஜமுனா தற்கொலை முயற்சியை அறிந்து அவளைக் காலி செய்யச் சொல்லி வருத்துகிறாள்.

டீச்சரின் மாமியார் மருமகள்மீதுள்ள கோபத்தை அவளுக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத ஜமுனாவிடம் காட்டுகிறாள். டீச்சர் தன்னைவிட மிகவும் மூத்த – எப்போதும் இருமிக் கொண்டிருக்கிற, மனைவியைச் சதா கரித்துக்
கொட்டுகிற தாயைத் தடுக்கமுடியாத கணவனையும் கொடுமைபேசும் மாமியாரையும் விட்டுவிட முடியாத அவல வாழ்வில் உழன்றாலும், ஜமுனாவுக்கு ஆதரவாய் வாழ்வில் அவளுக்கு நம்பிக்கையூட்டி அவளது மீட்பராகவும் இருக்கிற மனிதநேய மனுஷியாகவும் இருக்கிறாள்.

இப்படி நாவலில் வரும் எல்லா பாத்திரங்களுமே பல்வேறு குணவியல்பினர்களாக, நாம் வாழ்வில் தினமும் பார்க்கிற அசலான மனிதர்களாய்க் காட்டப்பட்டுள்ளார்கள். தேவையும் பற்றாக்குறையுமே இவர்களது மனங்களைக் கட்டமைக்கும் மூல காரணிகள் என்பதை ஆசிரியர் காட்டுகிறார். அவரது மற்ற நாவல்களைப் போலவே, ‘மனித மனங்களின் அடி ஆழத்திலிருந்து கனிவையும், ஈரத்தையும், கருணையையும் வெளிக் கொணர்ந்து அவை காலங்காலமாக ஜீவ நதியாய்ப் பெருகுவதைக்‘ காட்டுறது இந்நாவலும்.

தமிழில் குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதப்படும் இந்நாவல் முதலில் 1991-ல்கணையாழி‘யில் தொடராக வந்து பின்னர் 1993-ன் நூல் வடிவம் பெற்று, 1985-லும், 1998-லும் மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. இப்போது ‘கிழக்கு பதிப்பகம் இதனைச் செம்பதிப்பாக சிறப்பாக வெளியிட்டு, இந்தத் தலைமுறையினருக்கும் அசோகமித்திரனின் இலக்கிய ஆளுமையை அறிமுகம் செய்யும் பாராட்டுக்குரிய சீரிய பணியைச் செய்துள்ளது.

https://balhanuman.files.wordpress.com/2010/08/saba03.jpg?w=172

–  வே. சபாநாயகம்

சென்ற நூற்றாண்டில் தமிழில் நிகழ்த்தப்பட்ட குறிப்பிடத்தக்க சாதனைகளுள் ஒன்று, அசோகமித்திரனின் தண்ணீர் . புதுவித நாவல், குறியீட்டு நாவல் என்று எப்படி அழைத்தாலும் தனது சகல அடைமொழிகளையும் களைந்துவிட்டு வாசிப்பவர் மனத்தோடு ஒட்டிக் கொண்டுவிடக்கூடிய சிறப்பு இப்படைப்புக்கு உண்டு. அதனால்தான் எழுதப்பட்டு முப்பத்தைந்து ஆண்டுகள் கடந்தபிறகும் இன்று எழுதப்பட்டதொரு படைப்பு போலவே தோற்றம் தருகிறது. மேலோட்டமான கதைப்போக்கு, சென்னையின் தண்ணீர்ப் பிரச்னை தொடர்பானதாகத் தோற்றமளித்தாலும் இந்நாவலின் மையப்புள்ளி தண்ணீர்ப் பிரச்னை மட்டுமல்ல. மனித மனத்தின் அடியாழங்களிலிருந்து அசோகமித்திரன் வெளிக்கொண்டு வருகிற கனிவும் ஈரமும் கருணையும் ஜீவநதியாகக் காலம் கடந்து பெருகக்கூடியவை.

மனுபாரதியின் நூல் அறிமுகம்…  (தென்றல் மாத இதழில்)

இன்னிக்கும் வாட்டர் வரலையா? நான் எப்ப குளிச்சு காலேஜுக்குக் கிளம்பறது..”

“இங்க குடிக்க சமைக்கவே தண்ணிய காணும். கார்ப்பரேஷன் பம்புல தண்ணி வந்து மூணு நாள் ஆச்சு. மைனருக்குக் குளிக்கத் தண்ணி கேக்குதோ..? நாலாவது பிளாக்குல தண்ணி லாரி வருது… பிடிச்சுக்கிட்டு வர சொன்னா…”

“அப்பா என்ன பண்ணறாங்க..? எனக்குப் பாடமெல்லாம் இல்லையா..?”

“ஆகா எனக்குத் தெரியாதா? உன் கேர்ள் பிரண்டு.. ஷீலாவோ ஷீனாவோ..”

“அது ஷீபாம்மா..”

“யாரோ ஒருத்தி.. அங்க இருக்குற அவளுக்கு முன்னாடி தண்ணித் தவலையத் தூக்குறது ஐயாக்கு அவமானம். இப்படி டீஸென்ஸி பாத்தா தண்ணி எங்கேயிருந்து கிடைக்கும்?”

சென்னைவாசிகளாக இருந்தவர்களுக்கு, இன்றும் இருப்பவர்களுக்கு இதெல்லாம் பழகிப்போன அன்றாடம் காதில் விழும் குடும்ப வாக்குவாதங்கள். தண்ணீர் என்பது மிகவும் விலைமதிக்க முடியாத ஒரு சமாச்சாரம் சென்னையைப் பொறுத்தவரை. கோடைக்காலம் மட்டும் என்றில்லாமல் வருடத்தில் பாதிக்கும் மேல் தண்ணீர் தட்டுப்பாடுடன்தான் சென்னை கடந்த பல வருடங்களாக கஷ்டப்படுகிறது. கார்ப்பரேசன் தண்ணீருக்கான தவம், லாரிகளில் வரும் தண்ணீரைப் பிடிக்க நான் நீ என்ற போட்டி, மூன்று நான்கு தெரு தள்ளியிருக்கும் வீட்டின் ஆழமான கிணற்றில் மட்டும் இன்னும் வற்றாத சொற்பமான நீரை கெஞ்சிக் கேட்டு நிரப்பி தூக்கமுடியாமல் தூக்கி நடக்கையில் அழுத்தும் சுமை, “150 அடி போட்டா இங்கலாம் தண்ணி வருமான்னு கேரண்டி கிடையாது ஸார்.. 200 அடி போட்டுக்கிடுங்க.. கொஞ்சம் கூட ஆனாலும் தண்ணிக்கு நான் கேரண்டி ஸார்..” என்று பூமியை ஆழமாய்த் துளைக்கத் தூண்டும் போர்வெல் ஆட்களின் உத்தரவாதம், “தண்ணியா..? மினரல் வாட்டர் தான் இருக்கு.. ட்வெண்டி ருபீஸ்.. வாங்கிக்றீங்களா..?” என்று வேக உணவு (·பாஸ்ட் புட்) கடைகளில் இருந்து ஆரம்பித்துப் பெட்டிக்கடைகள் வரை எங்கும் கிடைக்கும் பதில்.. இந்த கஷ்டங்களுக்கு எல்லாம் நடுவில் ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் சென்னைவாசிகளின் வாழ்க்கையும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இது சாகித்ய அகாதெமி விருது பெற்ற திரு.அசோகமித்திரன் அவர்களின் “தண்ணீர்” என்ற நாவலில் மிக நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கிறது.

தண்ணீர்”-இல் வரும் கதாபாத்திரங்கள் எல்லாமே சாதாரண நடுத்தர வர்க்க மனிதர்கள். நாம் தினம் தினம் பார்த்த அடுத்த வீட்டு, எதிர்வீட்டு மனிதர்கள். எழுத்தாளர் சுஜாதா பெயர் வைத்த ‘மத்யமர்கள்’. அவரவர்க்கான கடமைகளுடன், கஷ்டங்களுடன் (தண்ணீர் கஷ்டமும் அடக்கம்), போராட்டங்களுடன், பலவீனங்களுடன் வாழ்க்கையை ஓட்டும் தனி மனிதர்கள் மற்றும் குடும்பங்கள். வேறுபாடே இல்லாமல் இவர்கள் அனைவரின் வாழ்க்கையையும் பாதிக்கும் தண்ணீர் பிரச்சனை கூட இந்த நாவலில் ஒரு பாத்திரமாய் மாறி விடுகிறது.

ஜமுனா என்பவளின் வாழ்க்கையில் நாளை என்பதே பெரிய கேள்விக்குறி. அவளது சினிமாவில் நடிக்கும் ஆசைக்கு பாஸ்கரராவ் உதவுவதாக சொல்லிக்கொண்டு வருகிறான். அவன் மூலம் கிடைக்கும் படத் தயாரிப்பாளர்கள் மற்றும் அவர்களுக்கான தரகர்களின் அறிமுகங்களுக்கு அவள் கொடுக்கும் விலை அவளை சமூகத்து சராசரி நிலையிலிருந்து மேலும் கீழே தள்ளுகிறது. கூடத் தங்கியிருந்த அவள் தங்கை சாயாவே இழிவாகப் பேசிவிட்டு ஹாஸ்டலில் போய் தங்குகிறாள். உடல், மற்றும் புத்தி சரியில்லாத அவள் அம்மா மாமா வீட்டில்.. அங்கே ஜமுனாவையும் சாயாவையும் அண்ட விடாமல் வெறுக்கும் பாட்டி… எல்லாம் ஜமுனாவை எங்கோ கொண்டு தள்ளுகின்றன. தீராத தண்ணீர் கஷ்டம் அந்த காலனி வாசிகளையே தவிக்க வைப்பது போல் தவித்துத்தான் போகிறாள்.

ஜமுனாவின் கஷ்டங்கள்தான் பிரதானமாய் சொல்லப்பட்டிருக்கிறது என்றாலும் பட்டாளத்திருந்து மாற்றல் கிடைக்காமல் திரும்பாத புருசனுக்குக் காத்திருக்கும் சாயா, மிகவும் வயதான இருமல் ஆஸ்துமாக்காரரைக் பதினைந்து வயதிலேயே கட்டிக்கொண்ட டீச்சரம்மா, மாமியாருக்கு பயந்துகொண்டு இரண்டு படி பயறை நின்றுகொண்டே சிறிய வயதில் அரைத்தக் கஷ்டத்தை புத்தி சுவாதீனம் இழந்த நேரத்தில் திரும்ப திரும்பச் சொல்லி புலம்பும் ஜமுனாவின் அம்மா இன்னும் பெயர் தெரியத் தேவையே இல்லாத எல்லாப் பெண்களும் அவரவருக்கான கஷ்டங்களுடன் வாழ்ந்துகொண்டிருப்பதும் சமமாய்த்தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு சில நிமிடங்களே வந்து நடுத்தெருவில் தண்ணீர்த் தவலையுடன் விழும் அந்த வயதான ஆச்சாரமான தெலுங்கு பிராமணத்தி கூட நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டுத்தான் போகிறாள். யாரோ தொட்டுவிட்டார்கள் என்பதால் தூக்கமுடியாமல் தூக்கி வந்த தண்ணீர்த்தவலையில் கொட்டாமல் மிச்சமிருந்த கொஞ்சம் நீரையும் கொட்டிவிட்டுச் செல்லும் அவளின் வைராக்கியம் அதிரத்தான் வைக்கிறது.

இத்தனை கஷ்டங்களுக்கு நடுவிலும், “எதுவும் இன்னையோட முடியல.. நாளைன்னு ஒண்ணு இருக்கு இல்லையா?” என்ற நம்பிக்கையை இந்த புதினம் விதைக்காமல் நிற்கவில்லை. தன் கஷ்டத்தை மட்டும் பார்க்காமல் மற்றவரின் கஷ்டங்களையும் பார்க்கக் தூண்டும் இதன் பாத்திரங்கள், இரு கோடுகள் போல மற்றவரின் கஷ்டங்களைப் பார்த்துத் தம்முடையதைத் தாங்கிக்கொள்ளும் பக்குவத்தை அடைகின்றன. தன்னை மீறி ஒரு கை கொடுத்து வாழ்க்கை என்னும் தண்ணீர் தவலையைத் தூக்க உதவுகின்றன.

1970-இன் தொடக்கத்தில் ஒரு தொடர்கதையாய் கணையாழியில் வெளியிடப்பட்டு பின் நாவலாய்ப் பதிப்பிக்கப்பட்ட படைப்பு இது. அன்றிலிருந்து இன்றும் தொடரும் சென்னையின் தண்ணீர்ப் பிரச்சனை இந்த நாவல் இன்றெழுதப்பட்டது போல் அப்படி பொருந்திப் போக வைக்கிறது. சென்னை என்றில்லாமல் தண்ணீருக்குக் கஷ்டப்படும் எந்த நகரத்து வாழ்க்கையையும் இதனுடன் தொடர்பு படுத்திப் புரிந்துகொள்ளமுடிவது இதன் வீச்சைக் காட்டுகிறது.

அசோகமித்திரன் அவர்களின் எழுத்து மிகவும் எளிமையான எழுத்து. யாருமே எளிதில் படித்துப் புரிந்துகொள்ளக் கூடிய எழுத்து. அந்த எளிமையிலேயே அவருகே உரித்தான நையாண்டியுடன் சாதாரண மனிதர்களின் யதார்த்த வாழ்க்கையினை அவர் படம்பிடித்திருப்பதை எந்த வாசகனும் உணர்ந்துகொள்ள முடியும். இவரின் சிறப்பே இவர் சொல்லாமல் விட்டவற்றில் ஒளிந்துகொண்டிருக்கும் கதையையும், பாத்திரங்கள் பேசுவதை விட அவர்கள் காக்கும் மௌனத்திலேயே நமக்கு அவர்களின் உணர்ச்சிகளையும் உணர்த்திவிடுவதுதான்.

இலக்கியம் என்பது நிஜ வாழ்க்கையைச் சார்ந்து, அதையே பிரதிபலிக்கும் ஒரு கலை. இந்த நாவலில் அந்தப் பிரதிபலிப்பு மிகவும் இயல்பாக அமைந்திருப்பது சிறப்பு எனலாம். நம் காலகட்டத்தில் இருக்கும் சமூகத்தை யதார்த்தமாய்ப் பதித்திருப்பதும் இன்னொரு சிறப்பு எனலாம்.

குறை என்று சொல்லப்போனால் இதன் அத்தியாயங்கள் உதிரிப்பூக்களாய்த் தனித்தே நிற்கின்றதைச் சொல்லலாம். சிறுகதையாக ஆரம்பிக்கப்பட்ட படைப்பு இது என்று அதற்கான காரணத்தையும் ஆசிரியரே சொல்கிறார்.

“தண்ணி முதல்ல சாக்கடைத் தண்ணி மாதிரி வந்தது. ஆனா அதெல்லாம் சரியாயிடும். தண்ணி வந்துடுத்து. அதான் முக்கியம்.” என்ற ஜமுனாவின் நம்பிக்கை கலந்த வாக்கியத்தைப் படிக்கையில் நமக்கும் நம் வாழ்க்கை சம்பந்தமாக ஏதோ நம்பிக்கை பிறப்பதை இதைப் படித்தால் ஒத்துக்கொள்வீர்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s