திருவானைக்கா – ஒரு ஜோடி நெய் தோசை


திருவானைக்கா, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாற்றையும், அற்புதமான கோயிலையும் தன்னகத்தே அடக்கி நிற்கும் ஊர். சிற்றூர்களின் அடையாளங்களை விழுங்கி விடும் மாநகரங்களுக்கே உரிய துர்குணத்தால் இன்று திருவானைக்காவும் திருச்சி மாநகரின் ஒரு பகுதியாகி விட்டது. ஒருபுறம் காவிரியாலும் மறுபுறம் கொள்ளிடத்தாலும் சூழப்பட்டிருக்கும் திருவானைக்காவில் இரண்டு விஷயங்கள் பிரசித்தம். ஒன்று – கருவறையில் சிவலிங்கத்தைச் சுற்றி எப்போதும் நீர் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கும் ஜம்புகேஸ்வரர் கோயில். மற்றொன்று திரும்பத்திரும்ப சாப்பிட அழைக்கும் ‘பார்த்தசாரதி விலாஸ்‘ ஒரு ஜோடி நெய் தோசை.

***
தமிழர்கள் வாழ்வில் அலுக்காத விஷயங்களில் ஒன்று தோசை. தோசையை விரும்பாதவர்கள் யார் இருக்கிறார்கள் ? பக்கத்து வீட்டில் முறுகும் வாசம் பிடித்து எனக்கும் தோசை வேண்டும் என அடம் பிடிக்காத குழந்தைப் பருவம் யார் வாழ்வில் இல்லாமல் இருந்திருக்கிறது? ‘என் பிள்ளைக்கு மூன்று வேளை தோசை கொடுத்தாலும் சாப்பிடும்’ என்ற வசனத்தை நாம் எல்லோருமே ஏதோ ஒரு காலகட்டத்தில் கடந்து வந்திருக்கிறோம். வீட்டில் ஒரு பள்ளிக்கூடமே நடத்தும் அளவுக்குக் கூட்டத்துடன் இருந்த நம் மூத்த தலைமுறையைக் கேட்டுப் பாருங்கள். யாருக்கும் தெரியாமல் அம்மாவிடம் கேட்டு தான் மட்டும் திருட்டுத் தனமாய் தோசை தின்ற கதையைச் சொல்வார்கள்.
***
ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு நாள் வந்திருக்கும். வீட்டில் நெய்யும், தோசை சுடுபவருக்குப் பிரியமும் ஒன்று கூடி வந்த ஒரு நாள். அந்நாளில் அருமையான நெய் முறுகல் தோசைகளை நாம் சாப்பிட்டிருப்போம். ஒரு தோசை சட்னி தொட்டு, ஒரு தோசை ஜீனி தொட்டு, ஒரு தோசை வெறும் தோசையாய் என்று அந்நாளில் பிரமாதப்படுத்தியிருப்போம். பின்னர், அத்தகைய தோசை நமக்குக் கிடைப்பதேயில்லை.
***
காலமெல்லாம் சுற்றித் திரியும்போது எங்காவது ஒரு நாள் மீண்டும் கிடைக்கும். அப்படியொரு தோசை – ‘பார்த்தசாரதி விலாஸ்‘ நெய் தோசையைப் போல. சாப்பிட்டுவிட்டு பின்னர் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்போம். ஆனால், திருவானைக்காக்காரர்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. நினைத்த போதெல்லாம் சாப்பிடுகிறார்கள்.
***
திருவானைக்கா கோயில் சுற்றுச்சுவரையொட்டி இருக்கிறது மேல விபூதி பிராகாரம். வீதியின் மையத்தில்,    ‘பார்த்தசாரதி விலாஸ்‘. 1943-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கடை, இன்றும் நாற்பதுகளில் உள்ள உணவகத்தின் அதே தோரணையில் இருக்கிறது. அதே கட்டடம், அதே மேஜைகள், அதே இருக்கைகள், அதே அடுக்களை, அதே விறகடுப்பு, அதே தோசைக்கல், அதே ருசி.. சாப்பிட வருபவர்களிடம் ஒரு சம்பிரதாயமாக ‘என்ன வேண்டும்?‘ என்று கேட்கிறார்கள். அவர்களும், சம்பிரதாயமாக, ‘நெய் தோசை‘ என்று சொல்கிறார்கள். ஆனால், கடைக்குள் ஆள் நுழைந்தவுடனேயே தோசைக்கல்லில் மேலும் இரண்டு தோசைகள் போட்டு விடுகிறார் சமையல்காரர்.
***
பொன்னிறத்தில் ஒரு குழல்போல சுருட்டி இலையில் வைக்கிறார்கள். சமையல்காரரின் கைப்பக்குவம் ரேகையாய் தோசையில் ஓடுகிறது. தொட்டுக்கையாகத் தேங்காய்ச் சட்னி, காரச் சட்னி, வெங்காய சாம்பார் தருகிறார்கள். ஆனால், முதல் தோசைக்கு இவை எதுவுமே தேவையில்லை. நெய் மணத்தைத் தொட்டுக் கொண்டே சாப்பிட்டு விடலாம். ஒரு ஜோடி தோசை. ஒன்று நெய் மணத்தைத் தொட்டுக் கொண்டு; மற்றொன்று சட்னி சாம்பார் தொட்டுக் கொண்டு. திவ்யானுபவத்தை உணர்வீர்கள்.
***
அக்காலத்தில்  திருச்சிக்கு வரும் கச்சேரிக்காரர்களும் நாடகக்காரர்களும் இந்த திவ்யானுபவத்துக்காகவே கடைக்காரர்களுக்கு முன்னதாகவே சொல்லி விடுவார்களாம். அவர்களுக்காக மாவு எடுத்து வைத்து, வந்தவுடன் தோசை சுட்டுக் கொடுப்பார்களாம் கடைக்காரர்கள்.
***
கடையை  ஆரம்பித்த கே.எஸ். அனந்தநாராயணன், சுப்ரமண்யன் சகோதரர்கள் இன்று இல்லை. அவர்களுடைய மகன்கள், ஏ.வைத்திய நாதனும், எஸ்.மணிகண்டனும் கடையை நிர்வகிக்கிறார்கள். தோசை பற்றிச் சொல்கிறார்கள்: “நான்கு பங்கு புழுங்கல் அரிசிக்கு ஒரு பங்கு உருட்டு உளுந்து. இந்தக் கலவைதான். கையில் அள்ளினால் வழியாத பதத்தில் மாவை அள்ளி விடுவோம். அதே பதத்தில் கல்லில் ஏறும். ஆறு இழுப்பு. தோசையில் பாருங்கள், ரேகை சொல்லும். வேக்காடு தெரியும் நேரத்தில் நெய்யை ஊற்றுவோம். தரமான வெண்ணையாக வாங்கிப் பொங்கும் பதத்தில் உருக்கப்பட்ட நெய். மாறாத பக்குவமே மறக்க முடியாத தோசையாகிறது.” என்கிறார்கள் தோசை சகோதரர்கள்.
நெய் தோசை தந்த சிறு வயது நினைவுகளோடு ஜம்புகேஸ்வரர் கோயிலுக்குப் போனோம். பிரசாதம் பிரமாதமாக இருக்கும் என்றார்கள். அன்று நமக்குப் பிரசாதம் கிடைக்கவில்லை. ஜம்புகேஸ்வரிடமே முறையிட்டு விட்டோம்: “தினம் தினம் நீர் சாப்பிடுவது இன்றொரு நாள் கூட எமக்குக் கிடைக்காதா?”  நமுட்டுச் சிரிப்புடன் சொன்னார் ஜம்புகேஸ்வரர்: “இடத்தைக் காலி பண்ணும். நான் தினம் தினம் சாப்பிடுவதை நீர் ஏற்கனவே சாப்பிட்டாயிற்று!”

சமஸ் அவர்கள் எழுதியது.

இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் தினமணி இணைப்பிதழான கொண்டாட்டத்தில், ஈட்டிங் கார்னர் பகுதியில் 2007-09 காலகட்டத்தில் வெளிவந்தவை. அப்போது சமஸுக்குக் கிடைத்த வாசகர்கள் ஏராளம். அவர்களுக்குக் கையேடுபோல் இப்போது இந்தப் புத்தகம் வெளியாகிறது.

5 thoughts on “திருவானைக்கா – ஒரு ஜோடி நெய் தோசை

 1. வெங்கட் September 16, 2012 at 6:54 AM Reply

  படிக்கும்போதே சாப்பிடணும்-னு தோணுதே…. அடுத்த திருச்சி பயணத்தின் போது நிச்சயம் இங்கே செல்ல முடிவுபண்ணிட்டேன். அதுவும் ஒரு வாரத்தில் திருச்சி செல்வதால் நிச்சயம் உண்டு!

  ஆனா இப்ப பசிக்கு என்ன பண்றது? :)) சரி சரி சாதம் சாப்பிட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்…

  • BaalHanuman September 18, 2012 at 1:09 AM Reply

   அன்புள்ள வெங்கட்,

   உங்கள் நெய் தோசை அனுபவத்தை எதிர்பார்க்கிறோம். உங்கள் திருச்சி பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

 2. கிரி October 16, 2012 at 9:19 AM Reply

  அருமை 🙂 தோசைக்கு நான் தீவிர ரசிகன்.

  • BaalHanuman October 16, 2012 at 9:01 PM Reply

   சூப்பர் கிரி. நீங்களும் ஒரு தோசை ரசிகரா ?

 3. chandhu January 15, 2014 at 2:24 AM Reply

  Nice

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s