2- சிவப்பு மாருதி — சுஜாதா


இதன் முந்தைய பகுதி…


“பாட்டி இந்த சீட்டுக்கட்டுல ஒரு சீட்டு எடுத்து பாத்து வெச்சுக்கோ!”

“பாத்தாச்சு… ஏழு ஆட்டின்!”
“எடுத்த கார்டை சொல்லாதே பாட்டி!  நான் கண்டுபிடிக்கறேன்!”
“அம்மா, நீ சீட்டாடிருக்கியா?”
“நிறைய!  உங்கப்பா சொல்லிக் கொடுத்திருக்கார்.  கழுதை ஆட்டம்தான்.  எப்பவும் நான்தான் தோக்கணும்.  தப்பித் தவறி ஜெயிச்சுட்டா  கோவிச்சுண்டு ஒரு வாரம் பேச மாட்டார்!”
“அவர் எப்படி இருப்பார்மா…?”
“இதோ இவன் இருக்கானே.. இதே மூக்கு, இதே கோபம். நேரம் கொஞ்சம் குறைச்சல்.  என் கை பக்கத்திலே தன் கையை வெச்சுண்டு, ‘யார் சேப்பு, யார் சேப்பு’னு கேட்டுண்டே இருப்பார்.  கொஞ்ச நாளைக்கு இட்லர் மீசை வெச்சுண்டிருந்தார்.  அது என்ன மூக்குக்குக் கீழே என்னவோ கருப்பா இருக்கே, அழிங்கோன்னு வேடிக்கைக்குச் சொல்லி சிரிச்சுட்டேன்.  வந்ததே கோபம்.  கேலியா பண்றேன்னு பண்ருட்டிக்கு அடுத்த ரயிலேற்றி அனுப்பிச்சுட்டார்.  நானும் விட்டுக் கொடுக்கலை.  உங்களுக்கா எப்ப தோன்றதோ அப்ப வந்து அழைச்சுண்டு போங்கோன்னு வந்துட்டேன்.  ரெண்டு பேரும் பிடிவாதம்.  உம்மாதிரி தழைஞ்சு போகவே மாட்டேன்.  ஒருவாரம் கழிச்சு ஓட்டல் சாப்பாடு சரிப்படலைன்னு வந்துட்டார்.  அப்பத்தான் உன்மாதிரியே முதல்து பொறந்து தவறிப் போனப்புறம் மூர்த்தியை உண்டானேன்!  லட்சுமி, இவன் என் வீட்டுப் பிள்ளையா இருந்தாலும் சொல்றேன்.  நிறையப் படிச்சிருக்கே.  பயப்படக்கூடாது!  பணிஞ்சு பணிஞ்சு போறே.  அதனாலே தான் இவன் இந்த எகிறு எகிர்றான்.  பயமே கூடாது!”
“இதப் பார்ரா, மாமியார் மருமகளுக்கு கொடுக்கிற உபதேசம்!”
“ஒண்ணே ஒண்ணுக்குத்தான் பயப்படணும்.  இருபத்து நாலு வயசிலே போய்ட்டாரே… மூர்த்திக்கு பத்து வயசு. இவனுக்கு எட்டு.  பிறந்தவீடுன்னு கிடையாது.  உலகமே இருட்டின மாதிரி இருந்தது.  யோசிச்சேன்.  எதுக்காகப் பயப்படணும்?  எதிர்காலம் தெரியாததனாலதானே பயம்?  அப்பல்லாம் ஒரு நாளைக்கு என்ன செலவு… அஞ்சு ரூபாயா?  எப்படியும் எச்சில் எலை எடுத்தாவது சம்பாதிச்சுடலாம்னு தைரியம் வந்துடுத்து.  அண்ணாகிட்டயும் இல்லை.  மன்னிக்கும் எனக்கும் சரிப்படலை.  கிஷ்ணசாமி அப்பப்ப வந்து பார்த்துப்பார்.  எல்லாரும் கதை கட்டி விட்டா, நான் அவரை வச்சிண்டிருக்கிறதா?  பயப்படலையே….எதுக்கு?  மனசாட்சி ஒண்ணுக்குத் தான் பயப்படணும். தெளிவு இல்லாம இருந்தா பயம் வரும்.  தப்பு பண்ணா பயம் வரும்!”
“பாட்டி… யானை!”  என்று குமார் கத்தினான்.  ரோட்டோரத்தில்
மணியோசையுடன் ஆடி அசங்கி  ஒரு யானை சென்று கொண்டிருந்தது.
“கோயிலுக்குப் போறது!  ராமு, நாம காஞ்சிபுரம் போயிட்டுத்தானே போறம்?”
“என்னது..?  காஞ்சிபுரமா?  இது என்ன புதுசா…?”  என்றார்.
“லட்சுமி, நீ சொல்லலையா…?”
எனக்கு மறுபடி பயம் வந்தது.  மற்றொரு சண்டையின் துவக்கம்.  என்னிடம் எதும் சொல்லவில்லை.
“காஞ்சிபுரமும் இல்லை.  கீஞ்சிபுரமும் இல்லையம்மா…”
“போறப்ப வந்து வரதராஜப் பெருமாளை சேவிக்கறதா வேண்டிண்டுட்டேண்டா.  போற வழியிலேதானேடா இருக்கு?”
“போற வழி இல்லைம்மா.  அதிலிருந்து விலகி ஒரு பத்து கிலோ மீட்டர் உள்ளே போகணும்.  இருட்டிடும்.  அப்புறம் நைட் டிரைவிங் ஆயிடும்!”
“மணி என்ன இப்ப..?”
“மணி என்னவா இருந்தாலும் நாம காஞ்சிபுரம் போகலை. திரும்பி வரப்ப வேணா போயிட்டு வரலாம்!”
“போய்டலாமே… வேண்டிடுட்டேண்டா…  தெய்வ குற்றமாய்டும்டா!”
“யாரைக் கேட்டு வேண்டிண்டே… பாரும்மா, நீ மனசுக்குள்ள வேண்டிக்கறதெல்லாம் என்னால நிறைவேற்ற முடியாது!”
“லட்சுமி… உங்கிட்ட சொன்னேனேம்மா…?”
“சொல்லவில்லை.  “போயிட்டுத்தான் வந்துரலாமே…!”  என்றேன்.
“சும்மாரு.  நாம கல்யாணத்துக்குப் போறோம்.  காஞ்சிபுரத்துக்கு இல்லை.சாயங்கால ஜானவாசத்துக்குள்ள போகணும்.  பெங்களூர் திரும்பி போறப்ப வேணா போகலாம்.  அம்மா, வரதராஜப் பெருமாள்கிட்ட சொல்லிடு என்ன…?”
“வேண்டிண்டுட்டேனே… ஐயோ!”
“இப்ப சும்மா இருக்கப் போறியா இல்லையா!”
“பாட்டி நம்ம கார் மாதிரியே கார் போறது பாரு”  குமார் அம்மாவின் கவனத்தைக் கலைத்தது.
“அப்பா..  நம்ம காரைப் போலவே சிவப்பு மாருதிப்பா!”
“என்ன இவ்வளவு வேகமாப் போறான்.  மாருதி இந்த வேகம் தாங்காதே”  ஒரு மின்னல் போலத்தான் அந்த சார் எங்களை அசுர வேகத்தில் கடந்து சென்றது.
“என்ன ஃபாஸ்டா போறான் பாருப்பா, நீயும் இருக்கியே”  என்றான் பாலாஜி.
சற்று நேரத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எங்களைத் தொடர்ந்து வந்தன.  இவர் கை நீட்டி வழி விட்டாலும் எங்களுடனே சமமாக வந்தன.  சன்னலருகில் அந்த இளைஞன் “காரை நிறுத்துய்யா… ஓரங்கட்டுய்யா” என்று அதட்டினான்.
அவர்கள் ஒட்டிய விதம் எங்கள் காருக்குக் குறுக்கே அவ்வப்போது வருவது போல் அபாயகரமாக இருந்தது.  இவர் வேகம் குறைத்து நிறுத்தினார்.  அவர்களும் திருப்பி நிறுத்தினார்கள்.  சற்று நேரத்தில் ஒரு டெம்போவில் ஆறு பேர் வந்தார்கள்.
“வாட்ஸ் த மேட்டர்?”
“தப்பிச்சுடலாம்னு பாக்கறியா ?  இறங்குடா.”
“என்ன சொல்றீங்க?”
“மேக்கால தொரப்பாக்கத்துல சைக்கிள் மேல ஏத்திட்டுப் போனியே, அந்த ஆள் செத்துட்டான்!”
“என்னது?  நானா ?”
“ஆமாம்.  துரத்தறோம் இல்லை… நிறுத்தாமப் போறியே?  எங்களால பிடிக்க முடியாதுன்னு நெனைப்பா ?”
“இதே சிகப்பு காருதான் அண்ணே!”
அவருக்கு நிலைமை புரிந்து, “பாருங்க… தமிழ்நாட்டில் ஆயிரம் சிவப்பு மாருதி கார் இருக்கும்.”
“அண்ணே,  இந்தாளுதாங்க.  கறுப்புக் கண்ணாடி போட்டிருந்தான்.முன்னாடி பின்னாடி நாலு உருப்படிங்க உக்காந்துகிட்டு..”
“அவனோட என்ன பேச்சு?  எறங்குடா முதல்ல.”
பின்சீட்டில் அம்மா, “எதுக்காக இறங்கணும்?”  என்றாள் விரோதமாக.
“அம்மா!  சும்மாரும்மா”  என்று அதட்டினார்.  “பாருப்பா… நாங்க…”
“எதுக்காகன்னா உங்க டிரைவரு சைக்கிள்ள போய்ட்டிருந்த எங்க கிராமத்து ஆளை அடிச்சுப் போட்டுட்டு நிக்காம வந்துட்டாரு.  அதுக்காக.”
“நாங்க எந்த சைக்கிளையும் ஆக்ஸிடெண்ட் பண்ணலை!”  என்றாள்.
“பெங்களுர்லருந்து ஃபேமலியோட ஒரு கல்யாணத்துக்குப் போறம்பா.  நான் டிரைவர் இல்லை.  குடும்பத் தலைவன்.”
“நீ எங்க போனா என்ன… இடிச்சுட்டு நிக்காம போன…”
“நான் இல்லையா அது…”

“இவங்கதாங்க… பின்னாலேயே வந்தமே… அதே சிவப்பு மாருதி, ரத்த துளி மாதிரி!”
“ஐயோ!  நான் எப்படி விளக்குவேன் ?”
“விளக்கம் ஒண்ணும் வேண்டாம்.  எறங்கிரு.  பாப்பா இதை ஒரு முடிவு பண்ற வரைக்கும் வண்டி போவாது.”
“என்ன முடிவு ?”
“இறந்து போனவனுக்கு காம்பன்சேஷன் ஒரு அம்பதாயிரம் கொடுத்துட்டுப் போ…”
“ஸ்கூல் வாத்தியாருங்க, கைல குழந்தை.  போன வருஷம் தான் வேலூர்ல போய்ப் பொண்ணு எடுத்து வந்தான்.  ஒரு சைடே தெரியாம அதுங்கிப் போய் அடிபட்டிருக்காங்க….”
ஜெயந்தி என் முழங்கையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.
“கொஞ்ச நேரம் உடம்பு துடிச்சுக்கிட்டு இருந்துச்சு”
ஜெயந்தி, “ஐயோ அம்மா”  என்றாள்.
“எறங்குய்யா அப்புறம் பொல்லாப்பாயிரும்.”
“ஏதாவது கொடுத்துட்டுப் போ…”
“யு ஆர் மிஸ்டேக்கன்.”
“”இங்கிலீசு பேசாதே, வவுறு எரியுது.  இப்ப வரியா இல்லையா?”
“எங்க வரணும் ?”
“ஸ்பாட்டுக்கு வந்து அந்தாளை கொன்னுட்டியே,  அந்தக் குடும்பத்துக்கு ஏதாவது செய்துட்டுப் போ.  முதல்ல காரை விட்டு எறங்குங்க.”
ஜெயந்தியின் தரப்புக் கதவைத் திறந்து அவளை “வெளியே வா பாப்பா”  என்றார்கள்.  “பாட்டியம்மா, எறங்கு.  எல்லாரும் எங்களுக்குப் பதில் சொல்லாம ஒரு அடி நவுர முடியாது.  கார் போவாது!”
அம்மா, “என்னடா உளர்றீங்க?  நாங்க என்ன செஞ்சோம்?  எந்த சைக்கிளையும் நாங்க அடிக்கலைங்கறோம்.  அதையே திருப்பித் திருப்பிச் சொல்லிண்டு…”
“கெளவி…’டா’  போட்டுப் பேசாத.. மரியாதையாப் பேசு…”
“அம்மா, ப்ளீஸ்… லட்சுமி ஹாண்டில் திஸ்!”
“பாலாஜி, ஜெயந்தியைப் பார்த்துக்கோ… நீ குமாரைப் பார்த்துக்கோ!”  என்று அவர் வெளியே இறங்கினார்.  நான் குமாரை எடுத்து மார்மேல் அணைத்துப் போர்த்திக் கொண்டேன்.  உடம்பு சூடாகியது.
“ஜெயந்தி, டோண்ட் கெட் அவுட்… டோண்ட் கெட் அவுட்” என்றார். “ஒதுங்கிப் போய்டும்மா.”
“எங்க போற பாப்பா… இங்கயே இருக்கணும்” என்று அவள் கையை ஒருவன் பிடிக்க… பாலாஜி, “லீவ் ஹர் அலோன்” என்று அவனை அடிக்க, அவன் திருப்பி அடித்ததில் சுருண்டுவிட்டான்.  அவர்கள் சற்றே வன்முறையுடன் அவனை வெளியே இழுக்க முற்பட… அவன் அதை எதிர்க்க… சட்டை பட்டன்கள் சிதற இழுத்தார்கள்.  எனக்கு முகம் பூரா சூடாகப் பயம் பரவியது.
“ஜெயந்தி ஒரு கல்லை எடுத்துக்கோ”  என்றாள் அம்மா.
“அம்மா!”
“பாரு, என்னைத் தொட்ட அப்புறம்…”
இவர் கைகள் நடுங்கின.  பயத்தில் வியர்த்திருந்தார்.  சிறிது சிறிதாக அவரை நெக்கி நெக்கித் தள்ளினார்கள்.
“போலீஸ் ஸ்டேஷனுக்குத்தான் வருவேன்”  என்றார்.
“முதல்ல ஸ்பாட்டுக்கு வா!”
“இங்கருந்து எவ்வளவு தூரம்பா?”  என்று அம்மா யதார்த்தமாகக் கேட்டாள்.
“மூணு பர்லாங்கு இருக்கும் மேக்க…”
அம்மா, “ராமு!  இங்கயே இரு.  நான் போய்ப் பார்த்துட்டு வர்றன்”  என்றாள்.  “ஏம்பா!  பாடி எங்க கிடக்குது?”
“அம்மா நீ வேற இப்ப குழப்பாதே… கொஞ்ச நேரம் சும்மாரு.”
“பாட்டிம்மா நீ எதுக்கு?  ஓட்டனவரு வரட்டும்… பைசல் பண்ணிட்டுப் போவட்டும்.”
“கொஞ்சம் இருப்பா.. பர்ஸை எடுத்துக்கறேன்”  என்று முன்பக்கம் ஏறிக் கொண்டார்.  பாலாஜியின் காதில் ஏதோ சொன்னார்.  பாலாஜி திடீர் என்று ஒரு காரியம் செய்தான்.  எங்கள் எல்லாரையும் உள்ளே தள்ளி டிரைவர் ஸீட்டில் பாய்ந்து காரைக் கிளப்பி ஒரே வேகமாக ஓடவிட்டான்.
“ஏய்!  தப்பிச்சு ஒடறாண்டா!  பிடிடா… பிடிடா!”
எனக்கு இதயம் படபடத்தது. அவர்கள் பின்னால் மோட்டார் சைக்கிளைக் கிளப்பித் தொடர்வதற்கு முன் நாங்கள் கொஞ்ச தூரம் வந்துவிட்டோம்.
கண்ணாடியில் பார்த்தோம்.  பின்தங்கியிருந்தார்கள். சட்டென்று திரும்பிவிட்டார்கள்.  பாலாஜி வேகம் அதிகரித்து பேயாக ஓட்டினான்.
“நேரா மெட்ராஸ் போயிடலாம்.  நிக்கவே வேண்டாம்”  என்றார்.  “அப்பாடா… தப்பிச்சோம்.”
“அம்மா, பாட்டி எங்க?”  என்றாள் ஜெயந்தி.
“பாட்டி இல்லையா?”  “அம்மா பின்னால் இல்லையா?”
“எப்ப இறங்கினா ?”
“எதுக்கு இவ முந்திரிக்கொட்டை மாதிரி கார்லருந்து எறங்கணும்?  எப்பவுமே இப்படித்தான் அவ…சே!”
“ஐயோ!  அவாகிட்ட மாட்டிண்டிருப்பாளே”  என்று அலறினேன்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s