சிங்கவரம் ஸ்ரீரெங்கநாதர் — சி.கே. கரியாலி (முன்னாள் ஐ.ஏ.எஸ்)


செஞ்சி நகரத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள சிங்கவரத்தில், நூற்றைம்பது அடி உயரமுள்ள ஒரு குன்றில் ஸ்ரீரங்கநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்குதான் ஸ்ரீமஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தார் என்பதால் இக்கோவில் ஆதிவராகர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள மூலவர் விக்ரகம் பல்லவர் காலப் பாணியில் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. இதர கோபுரம், மண்டபம் போன்றவை விஜயநகரப் பாணியை ஒத்திருக்கின்றன. இதன் பாரம்பரிய கட்டடப் பணி, மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது. (இவர் விஜயநகர மன்னர். செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு கொள்ளிடத்திற்கும், நெல்லூருக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை ஆட்சி செய்தவர்)

மூலவரான ஸ்ரீரங்கநாதர் பாம்பணை மீது துயில்கிறார். இது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இருபத்து நான்கு அடி நீளச் சிலை. இது திருவரங்கத்திலுள்ள சிலையைவிடப் பெரியது. இச்சிலையின் தனித்தன்மை என்னவென்றால் இவர் தலையை வேறுபக்கமாகத் திருப்பிக் கொண்டிருப்பதுதான். மூலவர், நாலுகால் மண்டபம், இதர சிறு சிலைகளும் அதே கல்லில் செதுக்கப்பட்டவைதான்.

செஞ்சியின் ராஜபுத்திரத் தலைவனான ராஜா தேசிங்கின் குலதெய்வம் சிங்கவரம் ஸ்ரீரங்கநாதர். போரில் சதாத்துல்லாகானை எதிர்த்துப் போரிடலாமா என்று தேசிங்கு ஸ்ரீரங்கநாதரிடம் ஆலோசனை கேட்க, ரங்கநாதர் அதற்கு வேண்டாம் என்று ஆலோசனை சொல்ல, தேசிங்கு, ராஜபுத்திர வீரனானதால் என்ன ஆனாலும் சரி என்று போர்க்களம் செல்ல முடிவு செய்கிறார். அதனால் துயரத்தில் மூழ்கிய மூலவர், தன் தலையைத் திருப்பிக் கொண்டுவிட்டதாக ஒரு கதை இருக்கிறது. ரங்கநாதர் சொன்னது போலவே போரில் ராஜா தேசிங்கு உயிர் துறந்தான்.

இக்கோவில் செஞ்சிக் கோட்டையுடன் சுரங்கப் பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளது. யார் கண்ணிலும் படாமல் தெய்வ வழிபாட்டிற்காக தேசிங்கு மட்டும் போய்வர அந்தப் பாதை பயன்பட்டதாம். இந்தக் கோவிலில் மிக அபூர்வமான பல பஞ்சலோகச் சிலைகள் உள்ளன. காஞ்சி காமகோடி பீடம் பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இக்கோவிலுக்கு வருகைதந்தபோது, இங்கு வழிபாட்டிற்கு வரும் பக்தர்கள், அங்குள்ள அரச மரத்தின் முன்பு அமர்ந்து சிறிது நேரம் தியானிக்குமாறு அறிவுரை கூறியதாகக் கோவிலின் தலைமை அர்ச்சகர் கூறுகிறார். ஒருகாலத்தில் கணக்கற்ற முனிவர்கள், ரிஷிகள் அங்கு இருந்ததால் அவ்விடம் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

ஸ்காட் வாரிங் கூறுகிறார்: “விஷ்ணு செஞ்சி பிரபலமாகி அபிவிருத்தி அடைந்து வருகிறது. ஏராளமான யாத்ரீகர்கள் கூடும் இடமாக உள்ளது. தென்னிந்தியாவில் செஞ்சி, முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.” பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து ரங்கநாதர் கோவில் தென்னிந்தியாவின் முக்கியமான ஆன்மீக மையமாக இருந்தது தெரியவருகிறது. ஆனால் இக்கோவில் அநேகமாக மறக்கப்பட்டுவிட்டது பரிதாபகரமானது.

–நன்றி – தென்றல் மாத இதழ் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s