ஒரே ஒரு மாலை — சுஜாதா


ந்தக் கதை எழுதுகிற எனக்கு, இதைப் படிக்கிற உங்களைவிட அதிகமாக ஆத்மாவையும் இந்துமதியையும் தெரியும். அவர்களைப் பற்றி என்ன சொல்ல வேண்டும், என்ன சொல்லக் கூடாது என்று பாகுபடுத்தும் உரிமை என்னிடம் இருக்கிறது. இந்த ‘கேஸி’ல் கொஞ்சம் சங்கடமான நிலைமையாக இருக்கிறது.

பாருங்கள், இருவரும் புதிதாகக் கல்யாணம் ஆனவர்கள். புதிதாக என்றால், மிகப் புதிதாக. கையில் கட்டிய கயிறும், சங்கிலியில் தெரியும் மஞ்சளும், ஒருவரைப் பற்றி ஒருவர் அதிகம் தெரியாத ஆர்வமும், பயமும், ஒருவரை ஒருவர் தொடும்போது ஏற்படும் பிரத்யேகத் துடிப்பும் கலையாத சமயம். இந்தச் சமயத்தில் நடப்பது முழுவதும் சொல்வது கடினமான காரியம். மேலும், சில வேளை அநாகரிகமான காரியம்… அவர்கள் நடந்துகொண்ட புது நிலையை வர்ணிக்கப் புதிதாய்க் கல்யாணம் ஆன ஒருவனால்தான் முழுவதும் இயலும். என் கல்யாணம் முடிந்துவிட்டது. அந்த நாட்கள் என் ஞாபகத்தில் ஆறு வருஷம் பின்னால் இருக்கின்றன.

oom_1

ஆனால், என் சங்கடம் இதில் இல்லை. இந்தக் கதையில் என் பொறுப்பு ஒன்று இருக்கிறது. ஒரு நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அது அதை எப்படிச் சொல்வது, எங்கே சொல்வது அல்லது, சொல்லாமல் விட்டுவிடலாமா என்பதுதான் என் குழப்பம். அதைப் பற்றி நான் இன்னும் தீர்மானிக்கவில்லை.

ஆத்மா, ஹல்வாராவில் விமானப் படையில் வேலை பார்க்கும் ஒரு பறக்காத ‘பைலட் ஆபீஸர்‘. பதினைந்தே நாள் லீவு எடுத்துக்கொண்டு புயலாகச் சென்னைக்கு வந்து ரயில் மாறி, திருச்சி வந்து, சத்திரத்தில் மாடியில் இறங்கி, அவசரமாக க்ஷவரம் செய்துகொண்டு, சட்டை மாற்றி, சூட் அணிந்துகொண்டு, பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் ‘லோக்கல்‘ சின்னப்பன் நாயனத்துடன் ஒரு பழைய எம்.டி.ஒய். காரில் ‘டாப்‘பை விலக்கி, ஊர்வலம் போய் உட்கார்ந்து, மந்திரங்களின் மத்தியில் புகைக் கண்ணீரில் அருகே இருப்பவளைப் பார்க்கச் சந்தர்ப்பமில்லாமல் மணம் செய்துகொண்டவன்.

இந்துமதி பி.யூஸியைப் பாதியில் நிறுத்திவிட்டு, ஒரு நாள் திடீரென்று தனக்கு வந்த முக்கியத்துவத்தில், புடவை சாகரத்தில், எவர்சில்வர் மத்தியில், வைர ஜொலிப்பில், வரிவரியாக ஜரிகைப் பட்டுப் புடவையின் ஜாதிக்கட்டின் அசௌகரியத்தில், மாலையின் உறுத்தலில், மையின் கரிப்பில் அம்மா அவ்வப்போது தந்த ‘ஆர்டர்’களில், மாமாவின் கேலியில் மணம் செய்துகொண்டவள்.

ஆத்மாவை நிமிர்ந்து ஒரு தடவை பார்த்ததில்லை. பார்த்தது போன மாத போட்டோ ஒன்று; மார்பு வரை எடுத்த, எதிரே பார்க்கும் போட்டோ. அப்போது கல்யாணம் நிச்சயமாகுமா என்பது சரிவரத் தெரியாததால் அம்மா அதை அதிகம் பார்க்க அனுமதிக்கவில்லை. பார்த்து என்ன நினைப்பது என்று தெரியாத தவிப்பு. அழகான முகமா என்று அலசுவதற்கு உரிமையில்லாத சமயம். நினைவில் தேக்கிக்கொள்ள முடியாத தவிப்பு. கல்யாணம் முடிந்துவிட்டது. முடிந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. தூரத்து உறவினர் படுக்கைகளைச் சுருட்டிக்கொண்டு தேங்காய்களைக் கவர்ந்துகொண்டு விலகிவிட்டனர். ஆத்மா அவளை உடன் அழைத்துச் செல்வதற்கு ஆறு நாட்கள் இருந்தன. பந்தங்கள் பிரிந்தன.

oom_2

முறையாக அவர்கள் அரைஇருட்டில் சந்தித்தாகிவிட்டது. இந்துமதிக்கு ஓர் ஆணின் தொடுகை எப்படிப்பட்டது என்று தெரிந்துவிட்டது. அந்த எழுபத்திரண்டு மணி நேரங் களில் விதம்விதமான அனுபவங்கள் இருவருக்கும். ஆத்மாவின் கல்யாணத்துக்கு வர முடியாத பெரியப்பாவைச் சேவித்துவிட்டு வந்தார்கள். கோயில்களுக்குப் போய் வந்தார்கள். அவனுடன் நடக்கும்போதே, அந்த வெயில் படாத பாதங்களையும், செருப்பையும், ஜரிகைக் கரையின் அறுப்பையும், நிழலையும் பார்த்துக்கொண்டே உடன் நடக்கும்போதே இந்துமதிக்குச் சந்தோஷம் திகட்டியது. எனினும், அவன் ஒவ்வொரு தடவையும் அவளைத் தொடும்போது அவளுக்குப் புல்லரிப்பைவிட பயம்தான் தெரிந்தது. இதை ஆத்மா உணர்ந்தான். ஸ்பரிசத்தில் உள்ளுக்குள் அவள் உடம்பின் தசைகள் மிக மெலிதாக இறுகுவதை அவன் கவனித்தான். பெண் புதியவள், மிகப் புதியவள் என்று எண்ணிக்கொண்டான். மேலும் மேலும் அவனுள் ஓர் அச்சம் இருந்தது. அடிக்கடி அவளை தொடுவதில் தயக்கம் இருந்தது.

முக்கியமாகப் பெண்ணுக்கு செக்ஸில் பயம் ஏற்படுத்தக் கூடாது. மிக ஜாக்கிரதையாக அணுக வேண்டும். பசித்த புலி இரை தேடுவதை ஞாபகப்படுத்தக் கூடாது. மேலும், எனக்கே எவ்வளவு தெரியும்? நான் படித்த புத்தகங்கள் வழங்கும் உபதேசம் சரியா, தப்பா?

‘நம் கல்யாண அமைப்பு குரூரமானது. திடீரென்று ஓர் ஆணிடம் ஒரு பெண்ணைக் கொடுத்து, இவள் உன்னுடையவள் என்று வசதி செய்து கொடுப்பது கொடுமை’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான் ஆத்மா.

இருந்தும்…

கவிதையிலோ, உரைநடையிலோ வார்த்தைகளால் சொல்லவே முடியாத மிக அபாரமான தருணங்கள் அவர்களின் புதிய உறவில் இருந்தன. (இந்தத் தருணங்கள் எல்லாக் கல்யாணங்களிலும் இருக்கின்றன யோசித்துப் பாருங்கள் ‘நீடித்து இருக்கின்றன‘ என்பதற்கு நான் ‘கேரண்டி‘ இல்லை. முதலில்? நிச்சயம்.) அந்தத் தருணங்கள் இவர்களுக்கு ஒரு சிவாஜிகணேசன் படத்தின் இருட்டில் இருந்தன. சூப்பர் மார்க்கெட் செல்லும்போது முன் பஸ்ஸின் பின்புறத்தில் ‘இரண்டு அல்லது மூன்று போதுமே‘ என்ற விளம்பரம் துரத்தித் துரத்தி அடித்தபோது, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டபோது இருந்தன.

பெட் ரூமில் அரசாங்கம் புகுந்துவிட்டது” என்பான் ஆத்மா.

oom_3

அப்புறம் மாடியில் இவர்கள் தனிப் படுக்கை சம்பிரதாயத்தில்… எவ்வளவு பாடு இந்துமதிக்கு! ஆத்மா முதலில் போய்விடுவான். இவள், எல்லோரும் தூங்கிய பிறகு, வாசல் விளக்கை அணைத்துவிட்டு அந்தப் பாழாய்ப்போகிற மெட்டி சப்தமிடாமல், திண்ணையில் தூங்குகிறவர்களின் கனமான மௌனத்தைத் தாண்டி, மரப்படியேறி… எவ்வளவு சஸ்பென்ஸ்!

அதன்பின், அதன்பின், அதன்பின்!

தருணங்கள்! அபாரமான தருணங்கள்!

நான் சொல்ல வந்தது ஒரே ஒரு மாலை நேரத்தைப் பற்றி. இரண்டு பேரும் மெதுவாக வீட்டின் சந்தடியிலிருந்து விடுபட்டு நடக்கிறார்கள். தெற்கு வாசல் தாண்டி, பஸ் ஸ்டாண்ட் தாண்டி, அம்மா மண்டபம் வந்து தனியான இடம் தேடுகிறார்கள்.

நதிக் கரை, காவிரி நதி, ஆடி மாத ஆரம்பம். மேட்டூர் அணை நிரம்பி வழிந்த பழுப்புத் தண்ணீர். இங்கிருந்து அந்தக் கரை வரை நிரம்பி, அவர்கள் புதிய உறவு போல் உற்சாகமாக நழுவிக் கொண்டிருந்த நதி. இந்துமதி போல் அந்த நதி. சிறிய சிறிய பையன்கள் குதித்துக் குதித்து, எதிர்த்து எதிர்த்து நீந்திக் கரைக்கு மறுபடி வருகிறார்கள். இந்துமதிக்கு அதைப் பார்க்க ஆசை. ஆத்மாவுக்கு மாந்தோப்பின் கரையில் தனியிடம் தேட ஆசை. அவளை அணைத்து அழைத்துச் சென்று தனியாக உட்காருகிறான். ”உன்னிடம் நிறையப் பேச வேண்டியது இருக்கிறது. நாம் இரண்டு பேரும் முழுவதும் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டும். கல்யாணம் என்கிறது ஒரு ‘லைஃப் டைம்‘ சமாசாரம்…”

(அவன் பேச்சில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். அவர்கள் சம்பாஷணையைப் பின்னால் தொடர உத்தேசம். அதற்குள் நான் முன்பு சொன்ன என் பொறுப்பு குறுக்கிடுகிறது. சொல்வதற்கு இதுதான் சமயம் என்று எனக்குப் படுகிறது. சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்.) அவர்கள் சுமார் அரை மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அதன் பிறகு இந்துமதி ஆத்மாவைக் கேட்டாள்…

”உங்களுக்கு நீந்தத் தெரியுமா?”

”ஓ! நன்றாக நீந்துவேன். உனக்கு?”

”எனக்கும் கொஞ்சம் தெரியும். அப்பா கேரளத்தில் இருந்தபோது கற்றுக்கொண்டேன். சுமாராகத் தெரியும்.”

”கிரேட்! ஹெள எபவுட் நௌ?”

”இப்பவா? ம்ஹூம்! இந்த நதியில் எல்லாம் எனக்கு நீந்திப் பழக்கமில்லை.”

”பயமா?”

”ஆம்.”

”நான் இருக்கிறேன். ஹரித்வாரில் கங்கையில் நீந்தியிருக்கிறேன். ஹல்வாரா போனதும் உன்னை அழைத்துப் போகிறேன். அந்த நதியின் வேகத்தைவிடவா! சீறும் கங்கை! வா. நீந்தலாம்.”

”நான் மாட்டேன். நீங்களும் வேண்டாம்.”

”கம்ஆன் டியர்!” ஆத்மாவுக்குத் தன் மனைவியை நனைந்த உடைகளில் பார்க்க வேண்டும் என்கிற இச்சை பிடிவாதமாக மாறியது.

”இங்கே ஒருத்தரும் இல்லை.”

”சே…சே! என்ன கஷ்டமாகப் போய்விட்டது. எதற்குப் பேச்சை எடுத்தோம் என்று ஆகிவிட்டது.”

”வர மாட்டாய்?”

”ம்ஹூம், நீங்களும் போகக் கூடாது.”

‘அப்படியா?” என்று தன் டெரிலினைக் கழற்றினான் ஆத்மா. பனியனைக் கழற்றினான். சிறிய டிராயரில் வந்து கரைக்குச் சென்று குதித்தான். தண்ணீர் ஒரு துளி தெறிக்கவில்லை. அம்பு போலப் பாய்ச்சல். மிக அழகாக நீந்தினான். ஆற்றை எதிர்க்காமல் ஒரு பக்கம் வாங்கி, இருபத்தைந்து அடி தள்ளிக் கரை சேர்ந்து, தலையைச் சிலிர்த்துக்கொண்டான். மிகப் புனிதமாக, அழகாக இருந்தான். அவன் முடிகளிலிருந்து தங்கமாகச் சொட்டின தண்ணீர்த் துளிகள். இந்துமதிக்கு அவன் உடம்பின் தசைகளையும், (சூரியன் உபயம்) அவன் சிரித்துக்கொண்டே நடந்து வருவதையும் பார்க்க மிகப் பெருமையாக இருந்தது. ஆனால், முதல் தடவையாகத் தெரிந்த அவன் பிடிவாதம் அவளைப் பயப்படுத்தியது.

”போதும், சளி பிடித்துக்கொள்ளும்” என்றாள்.

”நீ வர மாட்டாய்?”

”நான் வர மாட்டேன். போதுமே நீந்தினது.”

”இன்னும் ஒரு தடவை, அவ்வளவுதான்.”

குதித்தான். மறுபடி அழகான குதிப்பு. நீந்தினான். மறுபடி அழகான நீச்சல். கரையிலிருந்து முப்பதடி போயிருப்பான். ஆழமான, இதமான சற்றுக் குளிர்ந்த தண்ணீர். அப்போதுதான் அவனுக்கு ‘க்ராம்ப்ஸ்‘ ஏற்பட்டது. காலின் தசைகள் பிடித்துக்கொண்டன. காலை அசைக்க முடியவில்லை.

க்ராம்ப்ஸ்‘ வருவது அவனுக்கு முதல் தடவை. நண்பர்கள் எச்சரித்திருக்கிறார்கள். ”வந்தால் கலவரப்படாதே. மித!” கலவரப்படாமல் இருக்க முடியவில்லை. ஆற்றின் வேகம் அவனைத் தள்ளிக்கொண்டு சென்றது. காலை அசைக்க முடியவில்லை. மேலும் மேலும் கைகளை அடித்துக்கொள்ள முயன்றான். ஒரு தடவை முழுகித் தண்ணீர் ஏகப்பட்டது உள்ளே இறங்கியது. நதி அவனைக் கடத்திக்கொண்டிருந்தது. இந்துமதியைக் கூப்பிட முயன்றான். பயம் அவனை நிரப்பியது.

தூர தூரமாகத் தன் கணவன் செல்வதையும் சீராக அவன் நீந்தாமல் பதற்றமாக அடித்துக்கொள்வதையும் பார்த்த இந்துமதி, திகைக்காமல், யோசிக்காமல் ஒரே பாய்ச்சலாகப் பட்டுப் புடவையுடனும் நகைகளுடனும் குதித்தாள்.

இரண்டு நாள் கழித்து அவர்கள் இருவரும் கொள்ளிடம் சேரும் கல்லணையில் கண்டெடுக்கப்பட்டனர்.

குறுக்கிட்டதற்கு மன்னிக்கவும். அவர்கள் அரை மணிக்கு முன் பேசிக்கொண்ட பேச்சைத் தொடர்வோம்…

ஆத்மா, ”கல்யாணம் என்பது லைஃப் டைம் சமாசாரம். நாம் ஒருவரையருவர் மெதுவாகத் தெரிந்துகொள்வோம். நிறைய ‘டயம்‘ இருக்கிறது. ஒருவிதத்திலே அது ஒரு ‘காம்பிள்’. நம் சுதந்திரம் கொஞ்சம் பறிபோகிறது. இனி மேல் நமக்கு ஒரு பொறுப்பு. அதுவும் எனக்கு ஒரு பொறுப்பு. உன்னைத் தனியாக அழைத்துக்கொண்டு போய், பாஷை தெரியாத காட்டில், ஒரு வீட்டில் அடைக்கப் போகிறேன். அங்கே நாம் இரண்டு பேரும்தான். சந்தோஷமாக இருக்க முயல வேண்டும். சந்தோஷமாக இருக்க வேண்டும். ‘கன்னா பின்னா‘ என்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடாது. இரண்டு வருஷம் ‘இடைவெளி’. என்ன?”

இந்துமதி சிரித்தாள். தலைகுனிந்து கன்னங்கள் நிறம் மாறின.

”அப்புறம் சில புத்தகங்கள் தருகிறேன். படிக்கணும். இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். அப்புறம் என்கிட்டே என்ன பிடிக்கிறது… என்ன பிடிக்கவில்லை என்று சொல்லு.”

மௌனம்.

”ம்… சொல்லு…”

”உங்களை எனக்கு நாலு நாளாகத்தானே தெரியும்!”

”நாலு நாளிலே என்ன என்ன பிடிக்கவில்லை சொல்லேன். என்னிடம் நீ ஃப்ரீயாக இருக்க வேண்டும்.”

”…”

”டாமிட்! சொல்லேன். ஏதாவது இருக்குமே!”

”டாமிட்… டாமிட் என்று நீங்கள் அடிக்கடி சொல்கிறது பிடிக்கலை” என்றாள் தயக்கமாக.

”வெரிகுட். அப்புறம்?”

”ம். யோசிக்கிறேன்.”

”யோசி.”

”தலையை இப்படிப் படியாமல் வாரிக்கொள்வது…”

”ஓ மை காட்!” என்று தலையைக் கோதிக்கொண்டான்.

”என்கிட்ட என்ன பிடிக்கலை உங்களுக்கு?”

”ஒன்றே ஒன்றுதான் பிடிக்கவில்லை.”

”என்ன?” என்றான் ஆவலுடன்.

”என்ன…. நீ இரண்டு மூன்று தடவை ‘அத்தான்‘ என்று கூப்பிட்டது. அத்தான் என்பது என் அகராதியில் ஆபாச வார்த்தை. சினிமா எக்ஸ்ட்ராக்களை ஞாபகப்படுத்தும் வார்த்தை.”

”எப்படி உங்களைக் கூப்பிடுவது என்று எனக்குத் தெரியவில்லையே!”

”ஆத்மா என்று.”

”முடியாது… செத்தாலும் முடியாது.”

”சொல்லு, ஆ…”

”ஆ…”

”த்…”

”த்…”

”மா…”

”மா…”

”ஆத்மா!”

சிரித்தாள். ”ஹூம்” என்று தலையாட்டினாள். அவன், அவளை மார்பில் தொட்டான். பனி போல் உறைந்தாள்.

”நான் தொட்டால் பயமாக இருக்கிறதா?”

”இல்லை, வெட்கமாக!”

”உன்னைத் தொடுவதற்கு எனக்கு லைசென்ஸ் இருக்கிறதே?”

”இப்படி லைசென்ஸ் என்று சொல்வது எனக்குப் பிடிக்கவில்லை. என்னை உங்களுக்குப் பிடிக்கிறதா?”

”இது என்ன கேள்வி?”

”என்னை உங்களுக்குப் பிடிக்கிறதா?”

”பாதாதிகேசம் ஒவ்வொரு சதுர மில்லி மீட்டரும் பிடிக்கிறது.”

”நான் உங்களுக்குத் தகுதியானவளா?”

”எல்லா விதத்திலும்.”

”அதிகம் படிக்கவில்லையே?”

”ஸோ வாட்?”

”எனக்கு முன்னால் எத்தனை பெண்களைப் பார்த்தீர்கள்?”

36,621.

”வேடிக்கை வேண்டாம். நிஜமாகச் சொல்லுங்கள்.”

”நான் பார்த்து ஆமோதித்த ஒரே, முதல் பெண் நீ.”

”என்னைப் பார்த்தபோது, முதலில் பார்த்தபோது என்ன தோன்றியது உங்களுக்கு?”

”உன்னைப் பார்க்கவேயில்லையே! நீதான் குனிந்த தலை நிமிரவில்லையே!”

”பின் எதற்காகக் கல்யாணம் செய்துகொண்டீர்களாம்?”

இதற்காக” என்று சொல்லிவிட்டு, அவன் அவளைத் தொட்டதை அவள் விரும்பவில்லை. கோபித்துக்கொண்டாள். பொய்க் கோபம்.

”உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?”

”டேக் ஹோம் பே 621. அதில் 300 ரூபாய் உனக்கு வீட்டுச் செலவுக்குக் கொடுத்துவிடுவேன். போதுமா?”

”நான் 300 ரூபாய் நோட்டுக்களைச் சேர்த்தாற்போல் பார்த்ததில்லை இதுவரை.”

”பார்க்கப் போகிறாயே…”

”உங்களுக்கு ஆக்ட்டர்ஸ் யாரார் பிடிக்கும்?”

”சிவாஜி கணேசன், பால்நியூமன்.”

”அப்புறம்?”

”கே.ஆர்.விஜயா.”

இந்துமதிக்கு கே.ஆர்.விஜயாவின் மேல் பொறாமை ஏற்பட்டது.

”உனக்கு என்ன புத்தகம் பிடிக்கும்?”

”எனிட் பிளைட்டன்.”

பதினைந்து வயதுப் பெண்கள் படிக்கிற புத்தகம் அது.”

”எனக்கு என்ன வயசு?”

பதினைந்தா?

”என்னப் பார்த்தால் என்ன வயது மதிப்பிடுவீர்கள்?”

நான்கு.’

கோபித்துக்கொண்டாள். ”நான் சத்தியமாக உங்களுடன் பேசவே போகிறதில்லை.”

ஆத்மா சிரித்தான். அதில் உண்மையான சந்தோஷம் நிலவியது. அதன் பின் அவர்களிடையே பிரமாதமான, பூராவும் ஒருவரை ஒருவர் உணர்ந்த, பேச்சுக்கு அவசியமில்லாத கொஞ்ச நேரம் அற்புத மௌனம் நிலவியது. அவர்களும் அந்தச் சூரியனும் அந்த இடத்து மூன்று பெரிய உண்மைகளாக… அதன் பிறகு இந்துமதி ஆத்மாவைக் கேட்டாள்…

”உங்களுக்கு நீந்தத் தெரியுமா?”

நன்றி – விகடன்

சுஜாதா கூறுகிறார்… (விமர்சனங்கள் – என் அனுபவம்)


ரொம்ப நாள் முன்னால் என் சிறு கதையான ‘ஒரே ஒரு மாலை‘  ஆனந்த விகடனில் வெளி வந்த போது, மூத்த விமர்சகரான க.நா.சுப்ரமண்யம் அந்தக் கதையைக் குறிப்பிட்டு, ‘இந்தக் கதை என்னைப் பிரமிக்க வைத்தது.  இந்த எழுத்தாளர் பிற்காலத்தில் பெரிய ஆளாக வருவார்’  என்று எழுதி விட்டார்.  அதற்கு பல பேர் அவரைக் கோபித்துக் கொண்டிருக்க வேண்டும் — ‘என்ன விமர்சகன் நீ!  சுஜாதா கதையைப் போய் நன்றாக இருக்கிறது என்கிறாயா ?  மஹா பாவம் அல்லவா ?’  என்று.  அதன்பின் க.நா.சு. என்னைப் பற்றி எழுதுவதையே நிறுத்திவிட்டார்.  டில்லியில் எதாவது கூட்டத்தில் பார்த்தால், அவர் கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டு வெளியே ஜன்னலைப் பார்த்துக் கொண்டிருப்பார்.  இன்றும் பல க.நா.சுக்கள் இருக்கிறார்கள்.


4 thoughts on “ஒரே ஒரு மாலை — சுஜாதா

 1. BaalHanuman April 19, 2011 at 7:23 PM Reply

  சுஜாதா கூறுகிறார்… (விமர்சனங்கள் – என் அனுபவம்)

  ரொம்ப நாள் முன்னால் என் சிறு கதையான ‘ஒரே ஒரு மாலை‘ ஆனந்த விகடனில் வெளி வந்த போது, மூத்த விமர்சகரான க.நா.சுப்ரமண்யம் அந்தக் கதையைக் குறிப்பிட்டு, ‘இந்தக் கதை என்னைப் பிரமிக்க வைத்தது. இந்த எழுத்தாளர் பிற்காலத்தில் பெரிய ஆளாக வருவார்’ என்று எழுதி விட்டார். அதற்கு பல பேர் அவரைக் கோபித்துக் கொண்டிருக்க வேண்டும் — ‘என்ன விமர்சகன் நீ! சுஜாதா கதையைப் போய் நன்றாக இருக்கிறது என்கிறாயா ? மஹா பாவம் அல்லவா ?’ என்று. அதன்பின் க.நா.சு. என்னைப் பற்றி எழுதுவதையே நிறுத்திவிட்டார். டில்லியில் எதாவது கூட்டத்தில் பார்த்தால், அவர் கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டு வெளியே ஜன்னலைப் பார்த்துக் கொண்டிருப்பார்.

  இன்றும் பல க.நா.சுக்கள் இருக்கிறார்கள்.

 2. BaalHanuman July 10, 2011 at 12:34 PM Reply

  சுஜாதா கூறுகிறார்…. (கற்றதும் பெற்றதும்…)

  ஒரே ஒரே மாலை‘ கதையில் ஒரு புதிய உத்தியைக் கடைப்பிடித்தேன். கதையின் சோகமான முடிவை பாதியில் குறுக்கே புகுந்து சொல்லி விட்டு கதையைத் தொடர்ந்தேன். அதனால் அந்தக் கதையின் பிற்பகுதியின் உருக்கம் அதிகமாகியது. இருவரும் செத்துப் போகப் போகிறார்கள். ‘உனக்கு எத்தனை சம்பளம்…? என்ன கலர் பிடிக்கும்?’ என்றெல்லாம் அற்ப விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்களே என்ற ‘ஐயோ பாவம்’ கிடைத்தது.
  Ka.Naa.Su.
  க.நா.சுப்பிரமணியம் அவர்கள் இந்தக் கதையைப் படித்துவிட்டு ஒரு விமரிசனக் கட்டுரையில் இதைக் குறிப்பிட்டு ‘இந்தப் பையன் பின்னால் பெரிசாக வருவான்‘ என்று எழுதியிருந்தார். அதன்பின் க.நா.சு. அவர்களைக் கவரும்படியான கதைகளை நான் எழுதவில்லை. நல்ல எழுத்தும் ஜனரஞ்சகமான எழுத்தும் விரோதிகள் என்ற பிடிவாதமான எண்ணம் கொண்டவர்களில் ஒருவர் அவர். மக்களுக்குப் பிடித்தால், அது நல்ல இலக்கியமல்ல என்று இன்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் எப்போதும் நெற்றியைச் சுருக்கிக்கொண்டு நான்கு நாள் தாடியுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது எனக்குச் சரிப்பட்டு வரவில்லை.

 3. Raju-dubai July 11, 2011 at 7:37 AM Reply

  Amazing story

  எவ்வளவு தடவை படித்தாலும் மனம் படபடக்கிறது. ஐயோ ரெண்டு பேரும் அநியாயமாக சாகப்போறாங்களே என கலங்குகிறது. மெய்யாலுமே சுஜாதாவின் one of the best stories.

  ராஜு-துபாய்

 4. BaalHanuman July 12, 2011 at 2:58 AM Reply

  அன்புள்ள ராஜு-துபாய்,

  நிச்சயமாக. பல பேர் நினைவில் இன்றும் பசுமையாக உள்ள கதை இது. அவருடைய சிறந்த படைப்புகளில் ஒன்று.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s