இரா.முருகன் — ஓர் எளிய அறிமுகம்


தமிழில் பல்வேறு எழுத்தாளர்கள், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு விதமான பரிசோதனைகளைச் செய்து பார்த்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். இயக்கம் சார்ந்தவர்கள், குழு சார்ந்தவர்கள், பல்வேறு சித்தாங்களைக் கொண்டவர்கள் என்று பல தரப்பட்ட படைப்பாளிகளின் மத்தியில் தனது வித்தியாசமான நடையின் மூலமும், சிறப்பான மொழி ஆளுமை மூலமும், கதை சொல்லும் உத்தி மூலமும் தமிழ் வாசகர்களைத் தன் பக்கம் ஈர்த்தவர்களுள் மிக முக்கியமானவர் இரா. முருகன்.

1977-ல் கணையாழியில் முதல் படைப்பாக ஒரு புதுக் கவிதை பிரசுரமானதோடு முருகனின் எழுத்துலகப் பயணம் தொடங்கியது. அது சுஜாதாவினால் பாராட்டப்பட்டு, பரவலான அறிமுகத்தைத் தந்தது. முதலில் கவிஞராக அறியப்பட்டு பின் சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக, கட்டுரையாளராக முகிழ்த்தார். மென்பொருள் துறைபற்றி இவர் எழுதிய ‘மூன்று விரல்‘ நாவல்தான் இவரது முதல் நாவலாகும். மென்பொருளாளர்களின் வாழ்க்கையை, அவர்களது மகிழ்ச்சியை, சோகத்தை, அவலத்தைத் தனது சுவையான கதை சொல்லும் பாணி மூலமும், யதார்த்தமான உரையாடல் மூலமும் வெளிப்படுத்தி ஒரு சிறந்த நாவலாக அதனை அவர் உருவாக்கியிருந்தார். இவரது எழுத்துக்களில் சோகமும் நையாண்டியும் தொனிப் பொருளாக நிற்குமே அன்றி உரத்துக் கூவாது.

சிறுகதையாகட்டும், நாவலாகட்டும், கட்டுரைகளாகட்டும் – தனக்கென்று ஒரு தனித்த நடையில் மைய இழையோடு பல கொசுறுச் செய்திகளையும் பின்னிச் செல்லும் பாங்கை இரா.முருகன் கொண்டுள்ளார். சுஜாதாவைப் போலவே வெகு சுவாரஸ்யமாக, நவீனக் களங்களை எடுத்துக் கையாளும் பாங்கின் காரணமாக இவரைச் ‘சின்ன வாத்தியார்‘ என்று செல்லமாக இவரது ரசிகர்கள் அழைப்பதுண்டு. தமிழில் மாந்திரீக யதார்த்தக் கதையாடலாக இவர் எழுதிய ‘அரசூர் வம்சம்‘ நாவல் திண்ணை இணைய இதழில் தொடர்ந்து வெளியாகிப் பின்னர் புத்தகமாக உருவானது. பரவலான வரவேற்பைப் பெற்ற அந்நாவல், பின்னர் ‘கோஸ்ட்ஸ் ஃப் அரசூர்‘ என்ற பெயரில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. ‘நெ.40 ரெட்டைத் தெரு‘, ‘ராயர் காபி கிளப்’, ‘குட்டப்பன் கார்னர் ஷோப்’ போன்ற கட்டுரைகள் அவரது நகைச்சுவை கலந்த எழுத்துக்கும், பல்துறை அனுபவத்துக்கும் சான்றுகள்.

சுஜாதாவிற்குப் பிறகு, தொழில்நுட்ப விஷயங்களை சுவாரஸ்யமாகவும், புரியும்படியும் சொல்வதில் பெரும் வெற்றி பெற்றவர் இரா. முருகன்தான்.

‘ராயர் காபி கிளப்’ என்ற பெயரில் இவரும் நண்பர்களும் இணைந்து நடத்திய யாஹூ குழுமம் மிகவும் புகழ் பெற்றது. அதில் பல்வேறு பரிசோதனைகளை முயற்சிகளைச் செய்து பார்த்த இரா. முருகன், பல துறை இளைஞர்களை இலக்கியத்தின் பக்கம் கொண்டு வந்திருக்கிறார். பா. ராகவன், ஆர். வெங்கடேஷ், என். சொக்கன், நாகூர் ரூமி என எழுத்துத் துறையில் கால்பதித்த பல இளைய தலைமுறையினரின் கருத்துப் பரிமாற்றக் களமாக ‘ராயர் காபி கிளப்’ விளங்கியது.

“முருகனின் எழுத்தில் ஒரு புது மலரின் வரவைக் காண்கிறேன். சட்டென்று காட்சிகள் மாறும் எம்.டி.வி நடை” என்று இவரது எழுத்தைப் பாராட்டியிருக்கிறார் சுஜாதா.“சுஜாதாவிற்குப் பிறகு, தொழில்நுட்ப விஷயங்களை சுவாரஸ்யமாகவும், புரியும்படியும் சொல்வதில் பெரும் வெற்றி பெற்றவர் இரா. முருகன்தான். காரணம், இருவருமே மின் பொறியாளர்கள். கம்ப்யூட்டர் எஞ்சினியர்கள். இருவரது தமிழிலும் கிண்டலும், கேலியும் வேறு எவரது எழுத்திலும் இல்லாத புத்துணர்வும் கவர்ச்சியும் உண்டு. இருவரும் தம் கதையுலகக் கற்பனைகளில் விஞ்ஞானத்தையும் கலந்து கொடுத்தவர்கள். அவை சமூக, விஞ்ஞானக் கதைகளாயினும் சரி; மென்பொருள் பற்றிப் பேசும் கட்டுரைகளாயினும் சரி; மனித உறவுகளையும், வாழ்க்கை இருப்பையும் எப்போதும் பேசுகின்ற காரணத்தால் அவை என்றும் இலக்கியமாகப் போற்றத்தக்கவை” என்பது இலக்கிய விமர்சகர்களின் கூற்றாக உள்ளது. முருகனுடைய எழுத்தை ‘இன்றைய தலைமுறை எழுத்து’ என்று வர்ணிக்கிறார் எஸ். ஷங்கரநாராயணன்.

இவர் ஆனந்தவிகடனில் எழுதிய ‘உலகே உலகே உடனே வா’ தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் பரவலான வாசக கவனத்தையும் பெற்றது. பிரபல எழுத்தாளர் விட்டல்ராவ், தான் தொகுத்த இந்த நூற்றாண்டின் சிறந்த சிறுகதைகளுள் ஒன்றாக முருகன் எழுதிய ‘உத்தராயணம்’ சிறுகதையையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனை விருது, கதா விருது, பாரதியார் பல்கலைக்கழக விருது, என்.சி.ஈ.ஆர்.டி விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் முருகன், மலையாளத்திலிருந்து குறிப்பிடத் தகுந்த படைப்புகளைத் தமிழில் பெயர்த்திருக்கிறார். அருண் கொலாட்கரின் அனைத்து மராட்டியக் கவிதைகளையும் ஆங்கிலம் வழியே தமிழாக்கியுள்ளார்.

‘சைக்கிள் முனி’, ‘தகவல்காரர்’, ‘தேர்’, ‘ஆதம்பூர்க்காரர்கள்’, ‘சிலிக்கன் வாசல்’, ‘அரசூர் வம்சம்‘ என சிறுகதை, குறுநாவல், கதை, கட்டுரை என படைப்பிலக்கியத்தின் பல தளங்களிலும் இதுவரை சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை இரா. முருகன் எழுதியிருக்கிறார். தற்போது அரசூர் வம்சத்தின் தொடர்ச்சியாக ‘விஸ்வரூபம்’ நாவலை எழுதிக் கொண்டிருப்பதுடன், கமல்ஹாசன் இயக்கிய  ‘உன்னைப் போல் ஒருவன்‘ படத்துக்கு வசனமும் எழுதியிருக்கிறார்.  தனது எண்ணங்களை www.eramurukan.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து வருகிறார்.

இரா. முருகன் போன்ற எழுத்தாளர்கள் தமிழ் இலக்கியத்தை அதன் புத்திலக்கியப் பரிணாமத்தில் வேறு ஒரு தளத்திற்கு மேலேடுத்துச் செல்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

அரவிந்த் சுவாமிநாதன்

நன்றி – தென்றல் மாத இதழ் — ஜூலை, 2009

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s