இரா.முருகனின் ‘அரசூர் வம்சம்’


https://www.nhm.in/img/arasur_vamsam_b.jpg
1948ல் இந்தியாவில் திரையிடப்பட்ட ஷேக்ஸ்பியரின் ‘ஹாம்லட்‘ படத்துக்கு ‘ஆனந்த விகடனி’ல் விமர்சனம் எழுதிய பேராசிரியர் கல்கி அவர்கள் இப்படி எழுதினார்: ‘அற்புதமான படம். ஒரு தடவை பார்த்தவர்கள் என்றும் மறக்க முடியாதபடி மனதில் ஆழ்ந்து பதிந்துவிடும் படம். மனித குலத்தின் மகோன்ன தத்தையும் நீசத்தனத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தும் படம். மனித உள்ளத்தில் புதைந்து கிடக்கும் அற்புத ரத்தினங்களையும், ஆபாச பயங்கரங்களையும் எடுத்துக் காட்டும் படம்.’

– இந்த விமர்சனத்தில் ‘படம்‘ என்று வருகிற இடங்களில் எல்லாம் ‘நாவல்‘ என்று போட்டுக்கொண்டால் மிகையாகி விடாது – என்று திரு. இரா. முருகன்அவர்களின் ‘அரசூர் வம்சம்’ என்ற நாவலைப் படித்து முடித்ததும் எனக்குத் தோன்றியது. ‘கொஞ்சம்போலத் தெரிந்த வரலாறு, துண்டு துணுக்காய்த் தெரிந்த பரம்பரையின் வேர்கள் சட்டம் அமைத்துக் கொடுக்க’ ஒரு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட அரசூர் வம்சத்தின் கதையை மிக அற்புதமாக தனக்கே உரிய நகைச்சுவையும் நையாண்டியும் கூடிய சுகமான நடையில் முருகன் இந்த நாவலை எழுதியுள்ளார். தமிழ்நாடு, கேரளம் என்கிற ‘இரு மாநிலங்களை, இரண்டு மொழிப் பிரதேசங்களைத் தொட்டு, துளி நிஜம் நிறையக் கற்பனை இவற்றில் அடிப்படையில்‘ அந்தக்காலத்து மனிதர்களின் பெருமைகளையும் – சிறுமைகளையும், சாமர்த்தியங்களையும் – அசட்டுத்தனங்களையும் அவர்களது அசலான கொச்சையும், ஆபாசமும் மிக்க பேச்சுக்களோடு கொஞ்சமும் பாசாங்கின்றி – பிறந்தமேனிக்கு, முகம் சுளிக்கச் செய்யாமல் ரசமாகப் படைத்துள்ளார். ஆங்காங்கே மாந்திரீக யதார்த்தம் போலத் தோன்றும் சில பதிவுகளுடன் வாசகனைப் பிரமிக்கவும் புருவம் உயர்த்தவும் செய்யும் படைப்பு. ‘என்னுரை’யில் அவர் ஆசைப்படுகிற மாதிரி அவரது அனுபவத்தையும், மகிழ்ச்சியையும், மன நிறைவையும் படித்து முடித்ததும் நாமும் பகிர்ந்து கொள்ள முடிகிறதுதான்.

கதை இதுதான்: அரசூர் வம்சம் என்பது சுப்ரமணிய அய்யர் மற்றும் அவரது இரு மகன்கள்சாமிநாதன், சங்கரன் ஆகியோரைக் கொண்டது. அவர்கள் புகையிலை வியாபாரம் செய்து பணக்காரர்கள் ஆகி மாடி வீடு கட்டிக் கொண்டவர்கள். பக்கத்தில் இருந்த ஒரு பவிஷை இழந்த ஜமீந்தார் பொறாமைப்படுகிற மாதிரி வளர்ந்த வம்சம் அது. மூத்த மகன் சாமிநாதன் மனநிலை பிறழ்ந்தவன். இளையவன் சங்கரன் அப்பாவின் புகையிலை வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி வருபவன். அவனுக்கு மலையாளக்கரையில் பெண் பார்க்க, குடும்பத்தோடு போயிருக்கையில் புகையிலைக் கிடங்குடன் கூடிய சுப்பிரமணிய அய்யரின் வீடு தீப்பிடித்து எரிந்து போகிறது. திரும்பிவந்து பார்த்த சுப்பிரமணிய அய்யர் ராஜாவுக்கு மானியம் வழங்கும் துரைத்தனத்தாருக்குப் புகார் செய்ய, அவர்கள் வந்து விசாரித்து தீப்பிடித்ததற்கு ராஜாதான் காரணம் என்று ராஜா நஷ்டஈடு தரத் தீர்ப்பளிக்கிறார்கள். ஆனால் சுப்பிரமணிய அய்யர் தம் சொந்த செலவில் வீட்டைப் புதிதாகக் கட்டிக் கொள்கிறார். நஷ்ட ஈட்டுக்குப் பதிலாக, ராஜா தன் அரண்மனையில் ஒரு பகுதியைப் புகையிலைக் கிடங்காகத் தர நேர்கிறது. சங்கரன் தன் புதுமனைவியோடு புது வீட்டில் குடியேறி அரசூர் வம்சத்தை வளர்க்கிறான். வெகு நாட்கள் கருத்தரிக்காதிருந்த ராணியும் கருத்தரித்து ஜமீந்தாரின் வம்சத்தை வளர்க்கிறாள்.

கதா பாத்திரங்கள் வட தமிழ்நாட்டுக்குப் புதியவர்கள். பாலக்காட்டுப் பிராமணர்களும் கேரளக் கரையினரும். அதனால் அவர்களது கலாச்சாரமும், பேச்சு நடையும் பல புதிய சுவாரஸ்யங்களைத் தருகின்றன. பாத்திரங்களின் நடமாட்டமும் வித்தியாசமானவை.

கதையில் வரும் ஜமீன்தார் அரசுமானியம் பெறும் பெருங்காயம் வைத்த டப்பா. தான் தன் பிரஜைகளால் மதிக்கப்படுவர் இல்லை என்பதை அறிந்தவர். அற்ப கேப்பைக் களிக்காக நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு, சதா போகம் பற்றியும், சாப்பாட்டைப் பற்றியுமே சிந்தனை. பக்கத்து வீட்டில் இசைக்கும் பாட்டுப் பெட்டியில் ஒரு மயக்கம். அவரதுமுன்னோர்கள் அவரது எல்லா நடவடிக்கைகளிலும் அரூபமாய்த் தலையிடுவதாகப் பிரமை. ‘டான் குவிக்ஸாட்‘ போன்ற ஒரு அசட்டுக் கேலிச் சித்திரமாகவே கதை நெடுக வருகிறார்.

குழந்தை இல்லாத அவரது ராணி சாதாரணப் பெண் போலப் பேனை நசுக்கி சுவரில் கோடு போடுகிறவள். பக்கத்து மாடி வீட்டிலிருந்து கொண்டு யாரோ தான்குளிக்கும்போது பார்ப்பதாக ராஜாவிடம் புகார் செய்துகொண்டே இருப்பவள். ராஜாவின் கையாலாகத்தனத்தை அறிந்தும் ‘ஒரு ராஜாவாகக் கட்டளை போட்டு அந்த வீட்டை இடித்துப் போடச்’ சொல்லுபவள்.

சகோதரர்கள் இல்லாவிட்டாலும் அவர்களது உடை பாணிக்காக ‘பனியன் சகோதரர்கள்‘ என்று அழைக்கப்படுகிற இரட்டையர்கள் கதையில் அடிக்கடி தென்படுகிறவர்கள். மாடி வீட்டுக்கு பாட்டுப் பெட்டியை அறிமுகப்படுத்தியவர்கள். ராஜாவின் ருசி அறிந்து அவருக்கும் பாட்டுப் பெட்டி, படமெடுக்கும் பெட்டி, நூதன வாகனம், மேல்நாட்டு கொக்கோகப் படங்கள் கொண்ட புத்தகங்கள், பின்னால் வரப்போகிற அறிவியல் அதிசயங்களையும் சொல்லி ராஜாவுக்கு ஆசைகாட்டிப் பணம் பறிப்பவர்கள்.

கல்யாணமான மறு வருஷமே நிர்க்கதியாய் விட்டுவிட்டு வேதாந்தப் பித்துடன் வடக்கே ஓடிப்போன கணவனைப் பற்றி, கிழவியான பின்னும் ஏதும் தகவல் கிடைக்காத நித்திய சுமங்கிலி சுப்பம்மா ஒரு மறக்கவியலாத பாத்திரம். சுமங்கலிப் பிரார்த்தனையின் போது வாழ்த்துப் பாடல் பாடுகிறவள். ‘அவளுக்கு ஏழு தலைமுறைப் பெண்டுகளைத் தெரியும். அவர்களோடு சதா சம்பந்தம் இருப்பதாலோ என்னவோ அவர்களுடைய ஆசீர்வாதத்தில், நினைத்த மாத்திரத்தில் பாட்டுக் கட்டிப் பாட வரும்’. சுப்பிரமணிய அய்யர் குடும்பத்துக்கு மிகுந்த ஒத்தாசையாக இருப்பவள்.

மூத்தமகன் சாமிநாதன் வேதவித்து – ஆங்கிலக் கல்வியும் பெற்றவன். மனநிலை பிறழ்ந்து, முன்னூறு ஆண்டுகளுக்கு முன் பிறந்திருந்த ஒரு குருக்கள் பெண்ணோடு ஆவிபோகம் செய்கிறவன். தம்பி சங்கரனுக்குப் பெண் பார்க்க எல்லோரும் போயிருக்கையில் தீப்பிடித்து எரிந்த வீட்டில் இருந்த அவனும் அதில் கருகிப் போகிறான்.

அப்பாவின் புகையிலை வியாபாரத்தைக் கவனித்துக் கொள்ளும் இளையமகன் சங்கரன் விடலைப் பருவத்தினருக்கே உரிய பாலியல் வக்கிரச் சிந்தனையோடு மாடியிலிருந்தபடி பக்கத்து அரண்மனை ராணியின் குளியலை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பார்க்கிறவன். துருக்க வியாபாரி ஒருவனிடம் தொழில் வித்தை கற்றுக்கொள்ளச் சென்னை செல்கிறவன் அங்கே கற்றுக் கொள்வது – கப்பலில் சந்திக்கும் வெள்ளைக்காரிகளிடமிருந்து புணர்ச்சி வித்தைகள். திரும்பி வந்து பகவதிக்குட்டியைக் கல்யாணம் செய்து கொண்டு வியாபாரத்தையும் வம்சத்தையும் பெருக்குகிறான்.

சங்கரனுக்குப் பெண் கொடுக்கும் அம்பலப்புழை துரைசாமி அய்யன் சகோதரர்கள் கூட்டுக் குடும்பத்தில் பெண்டாட்டிகளோடு சேரக்கூட இட வசதியும் சந்தர்ப்பமும் வாய்க்காமல் அவஸ்தைப் படுகிறவர்கள். தங்கை பகவதிக்குட்டியை சங்கரனுக்கு மணம் முடித்துக் கொடுத்த பிறகு கடைசி சகோதரன் கிட்டாவய்யன் தனியாக ஓட்டல் நடத்தப் பணம் கிடைப்பதால் குடும்பத்தோடு கிறிஸ்தவத்திற்கு மாறுகிறான்.

இன்னும் யந்திரங்களுக்குள் தேவதைகளைப் பிரதிஷ்டை செய்து கொடுத்து பரிகாரம் செய்யும் ஜோசியன் அண்ணாசாமி அய்யங்கார், வெண்பா இயற்றுவதில் வல்லவளான சகலகலாவல்லி கொட்டக்குடிதாசி, கிட்டாவய்யன் மனைவி சிநேகாம்பாள், ஜமீந்தாரின் மைத்துனன் புஸ்திமீசைக்காரன், சங்கரனுக்குத் தொழில் கற்றுத்தரும் சுலைமான்பாய் என்று ரகம் ரகமான, உயிர்த்துடிப்புடனான பாத்திரங்கள் இரா.முருகனின் பாத்திரப் படைப்புத் திறனுக்குச் சான்று பகர்பவை.

இரா. முருகனுக்கென்று ஒரு தனி கதை சொல்லும் திறனும், நடையும் அமைந்திருப்பதை இந்த நாவலும் உறுதிப் படுத்துகிறது. ஆரம்ப காலத்தில் சுஜாதாவின் சாயல் நடையில் தென்பட்டாலும் பிற்காலத்தில் அது மறைந்து, தஞ்சை மண்ணின் குறும்பும் நையாண்டியும் மிக்க உரையாடல் நிறைந்த தி.ஜானகிராமனின் சரசரவென ஓடும் ரசமான நடை போல – பாலக்காட்டுப் பிராமணப் பேச்சு ருசியுடன் இந்த நாவலின் நடை அமைந்து விட்டிருக்கிறது. அந்தக் காலகட்டத்து அந்தப் பிராந்தியத்து மக்களின் போஜனம் – பப்படமும்,  பிரதமனும், சோறும் கறியும் கேரள வாசனையோடு வாசிப்பில் மணக்கிறது. நாவலை முழுதும் வாசிப்பதன் மூலமே இரா. முருகனின் எழுத்து காட்டும் கலைடாஸ்கோப் வண்ணஜாலங்களை முழுமையாக ரசிக்க முடியும். சில இடங்களில் ஆனந்தரங்கம் பிள்ளையின் டைரிக் குறிப்பின் வசனப் பிரயோகங்களை¨யும் காண்கிறோம்.

சொல்லாமல் சொல்லி புன்னகைக்க வைக்கிற சாமர்த்தியத்தை நாவல் முழுதும் பார்க்கிறோம். சொல் செட்டும், சின்னச் சின்ன வாக்கிய அமைப்பும் கொண்ட – வாசகனைத் தலைசுற்ற வைக்கும் பின்னல் நடை இல்லாத – எளிய லகுவான நடை காரணமாய் நாவலின் நானூற்றுச் சொச்சம் பக்கங்களும் இறக்கை கட்டிப் பறப்பது போல வாசிப்பு சுகமாய் ஓடுகிறது. ஒளிவு மறைவற்ற பட்டவர்த்தனமான, உள்ளதை உள்ளபடியே சொல்லுவதில் போலிக் கூச்சமில்லாத வெளிப்பாட்டினால் கதாமாந்தரின் இடக்கு மற்றும் அருசியான பாலியல் பேச்சுகள் நமக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தவில்லை. அநேகமாக, கதையில் வரும் எல்லா ஆண்களுமே –  ஜமீன்தார், சங்கரன், அவன் அண்ணன் சாமிநாதன், கிட்டாவய்யன் என்று எல்லோருக்கும் எப்போதும் பாலியல் சிந்தனைதான். ‘கலாச்சாரம் என்பது நல்லது, கெட்டது, நறுமணம், நிணநாற்றம் சேர்ந்த ஒரு கலவை‘ என்பதே இந்நாவலின் மௌனச் சங்கேதம் என்கிறார் பி.ஏ.கிருஷ்ணன் தன் முன்னுரையில்.

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் போய், அந்தக் காலகட்டத்தில் சமூகத்தில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டு இருந்த அத்தனை கலை, இலக்கிய, சமூக அரசியல் மாற்றங்களையும் உள்வாங்கிய அனுபவங்களை நாவலில் காண்கிறோம். அந்தக் கட்டத்து மாந்தர்களின் சமுக, பொருளாதார நிலைக்கு ஏற்றபடி செய்யப்பட்ட யதார்த்த சித்தரிப்பில் நாவல் வெற்றி பெற்றுள்ளது. காலமாறுதலான இன்றைய நிலையிலும் கதையைப் படிக்க முடிகிறது என்பதும் நாவலின் சிறப்பாகும். திரு.பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் சொல்வதுபோல ‘காலத்தை முன்னும் பின்னும் ஓடச் செய்கிற முயற்சி‘யில் வெற்றி கண்டு, ‘பழைமையில் எதிர்காலத்தின் வித்துக்கள் இருக்கின்றன’ என்கிற மயக்கத்தை நாவல் ஏற்படுத்துகிறது.

–வே.சபாநாயகம்

இரா. முருகன்
எண்பதுகளில் தமிழ் இலக்கிய உலகம் பெற்ற நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் இரா. முருகன். இன்னும் எழுதமாட்டாரா என ஏங்கவைக்கும் உரைநடை. இன்னும் எதையாவது மிச்சம் வைத்திருக்கிறாரா என்று ஆராயத் தோன்றும் தகவல் விவரச் சேர்க்கைகள். இதற்குமேல் ஒன்றுமில்லை என்று தீர்மானம் கொள்ளவைக்கிற மனித மன ஊடுருவல் வித்தை.

கணையாழி, தீபம் என்று தொடங்கி, கல்கி, விகடன் வரை அணிவகுத்த முருகனின் சிறுகதைகள், அவை வெளியான காலத்தில் வாசகர்கள் மத்தியில் உண்டாக்கிய எதிர்வினைகள் விசேஷமானவை. தேர்ந்த வாசகர்களின் விருப்பத்துக்குரிய எழுத்தாளராக எப்போதும் அவர் இருந்துவந்திருக்கிறார். எழுத்தைச் சங்கீதமாக்குகிற மிகச் சில சாதனையாளர்களுள் அவரும் ஒருவர்.

51 வயதான இரா. முருகன், இதுவரை ஏழு சிறுகதைத் தொகுப்புகளையும் இரண்டு நாவல்களையும் வெளியிட்டிருக்கிறார். பெருமைக்குரிய ‘கதா’ விருது பெற்றவர். இவரது ‘அரசூர் வம்சம்‘ நாவல், திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் பரிசைப் பெற்றது. ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அதிகாரியாகத் தற்சமயம் முருகன் பணியாற்றுவதும் வசிப்பதும் இங்கிலாந்தில்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s