1- சிவப்பு மாருதி — சுஜாதா


மகாகவி பாரதியின் ‘புதிய ஆத்திசூடி’ வரிகளுக்குப் பொருத்தமாக, 1987-ம் ஆண்டில் ‘பரசுராம் பிஸ்வாஸ்’ என்னும் புனைபெயரில் 22 சிறப்புச் சிறுகதைகளை வெளி யிட்டது விகடன். அப்போது கதை வடிவம் கொடுக்கப்பட்ட வரிகள் அல்லாமல், வேறு 22 வரி களுக்குப் பொருத்தமாகப் பிரபல எழுத்தாளர்களின் ‘புதிய ஆத்தி சூடி’க் கதைகளை இந்த ஆண்டு (1998) வெளியிட்டுள்ளது. முதல் சிறு கதையை எழுதியுள்ளவர் சுஜாதா. ‘சிவப்பு மாருதி’ என்னும் இந்தக் கதைக்குப் படம் வரைந்துள்ளவர் ஓவியர் ஸ்யாம். இதிலிருந்து விகடனில் தொடங்குகிறது ஸ்யாம்ராஜ்ஜியம்!

ஆனந்த விகடன் தீபாவளி ஸ்பெஷலில் (18 -10 -98 )  வெளிவந்த சுஜாதாவின் புதிய ஆத்திசூடி கதை (அச்சம் தவிர்)

சித்ராவின் கல்யாணத்துக்காக மிக உற்சாகமாகத் துவங்கிய பயணம் மெள்ள மெள்ள ஒரு கெட்ட கனவாக மாறியது.  பெங்களூரிலிருந்து சென்னைக்கு ஆயிரத்தெட்டு ரயில்களும், பஸ்களும் இருக்க, இவருக்கு, எல்லாருக்குமே பிக்னிக் போல காரில் போகலாம் என்று தோன்றியது விதிதான்.மூர்த்தி வீட்டில் அம்மா ஒரு மணி நேரம்கூட இருக்க முடியாதது என்று சொல்லி விட்டாள்.  “எல்லோருமே மாருதியில் போக முடியுமா?” என்று சொல்லிப் பார்த்தேன்.  “முன்னால் ஜெயந்தியும், அவள் மடியில் குமாரும் உட்காரட்டும்.  பின்னால் நீ, அம்மா, பாலாஜி.  அவ்வளவுதானே ”  என்று எளிதாகச் சொல்லி விட்டார்.”எல்லாம் சரிதான் அப்பா.  பயணம் பூரா பாபநாசம் சிவன் பாட்டாகப் பாடி அறுப்பீங்களே…”  என்று சிரித்தாள் ஜெயந்தி.  என்னைத் தவிர எல்லோரும் உற்சாகமாக இருந்தார்கள்.  எனக்கென்னவோ இந்தப் பயணத்தில் எச்சரிக்கை இருப்பது போல வயிற்றில் ஒரு பட்டாம்பூச்சி பறந்தது.  முதல் குழந்தை பிறந்து இறந்தபோது பறந்த அதே பட்டாம்பூச்சி.  சொன்னால் என்மேல் பாய்வார் என்று உற்சாகத்தில் கலந்துகொண்டேன்.  இரண்டு நாளைக்கு அதிக சாமான் கட்ட வேண்டாம் என்று பார்த்தால் எட்டு அயிட்டமாகி விட்டது.எங்கள் குடும்பத்தைப் பற்றி உங்களுக்கு ஐடியா கிடைத்திருக்கும்.  மூத்தவள் ஜெயந்தி.  மகாராணி காலேஜில் பி.ஏ. கார்ப்பரேட் படிக்கிறாள்.  அப்புறம் பாலாஜி  பிளஸ் டூ.  அப்புறம் நீண்ட இடைவெளிக்கப்புறம் ஒரு அசந்து மறந்த ராத்திரியால் பிறந்த குமார்  ஃபர்ஸ்ட்  ஸ்டாண்டர்ட்.  அம்மா என்று நான் அழைப்பது என் மாமியாரை.  அம்மாவுக்கும் பிள்ளைக்கும் சரிப்பட்டு வராது.  பத்து நிமிஷத்துக்குள் சண்டை வந்து விடும்.  “இந்த முசுடுடன் எப்படிக் குடித்தனம் பண்ணுகிறாயோ… எனக்கென்ன தலைவிதியா ?  இதோ மூர்த்தியிடம் போகிறேன்”  என்று சொல்வாளே தவிர போக மாட்டாள்.”எதற்கெடுத்தாலும் ரெண்டு அர்த்தம் வச்சுப் பேசி மூஞ்சியைக் காட்டினா யார் அவகிட்ட இருப்பா ?”    இத்தனைக்கும் மூர்த்தியின் மனைவி ரமாமணி நல்லவள்தான்.  கொஞ்சம் படபடவென்று பேசி விடுவாள்.  (‘அந்த கிழத்துக்கு நீதாம்மா சரி’).  சில சமயம் ரொம்பப் பிடிவாதம் பிடித்தாலும் சோதித்தாலும் எனக்கு அம்மாவுடன் எந்தப் பிரச்னையும் இல்லை.  கணவருக்குத்தான்!

எப்போதும் எங்களுடன்தான் இருந்தாள்.  எழுபது வயதுக்கு நல்ல ஆரோக்கிய தேகம்…  கொட்டைப் பாக்கு வைரத் தோட்டைக் கழற்றாமல்  காது தொங்கிப் போயிருந்தது.  நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு.  கணவர் இறந்தபோது சொல்லிட்டுப் போயிருக்கிறாராம்.  எனக்கு அவர்கள் குடும்பத்தில் கெட்ட பெயர்.  எல்லாம் சொத்து நகைக்குத்தான் அவளை வைத்துக் கொண்டாடுகிறேனாம்.  நான் கவலைப்படுவதில்லை.

அதிகாலை புறப்பட்டோம்.  எங்கள் கார் சிவப்பு மாருதி.  போஸ்ட் ஆபீஸ் சிவப்பு.    இந்த வண்ணம் அத்தனை முக்கியத்துவம் பெறப் போகிறது என்று தெரிந்திருந்தால் இரவோடிரவாக மாற்றியிருப்போம்.

முதல் நாளே காராஜ் போய் பாட்டரி லெவல்,  ஃபேன்பெல்ட்  ஸ்டெப்னியில் காற்று  எல்லாம் பார்த்துவிட்டு வந்தார்.  பாலாஜிக்குக் கொஞ்ச தூரம் ஓட்ட ஆசை.

“அப்பாகிட்ட சொல்லும்மா. ஹைவே தானேம்மா… சொல்லும்மா”  என்று நச்சரித்தான்.

“நீயே கேளேன்!”

“தரமாட்டார்.  அப்பாவைவிட நல்லா ஓட்டுவேன்”  என்றான்.

ஓட்டப் போகிறான் என்று அப்போது தெரியவில்லை. என் கணவர் வேகமாக ஓட்ட மாட்டார்.  “ராமு,  மெள்ளப்பா ராமு!  ஒண்ணும் அவசரமில்லை.  ஒவ்வொரு முறையும் லாரியைத் தாண்டும் போது எனக்குப் படபடன்னு வரது”  என்றாள் அம்மா.

“மெள்ளத் தாம்மா போயிட்டிருக்கேன்.”

‘தத்வ மறிய தரமா’  என்று பாட ஆரம்பித்தார்.  “ராமு ஒண்ணு ஒட்டு. இல்லை பாடு… ரெண்டும் வேண்டாம்ப்பா…” சொல்லிவிட்டு,

“காஸெட் போடுறி”  என்றாள் அம்மா.

‘அடடா அல்வாத் துண்டு  — இடுப்பு உன் இடுப்பு ,  அழகா பத்திக்கிச்சு நெருப்பு தூள் கிளப்பு….’

“என்னடா பாட்டு இது ?”

“பாட்ஸ்…  இப்ப எல்லாப் பாட்டும் இப்படித்தான் இருக்கு.  ‘மெட்டாலிக்கா’  கேக்கறியா,  தூளு..”  என்று பாப் சங்கீதம் போட்டான்.

“என்ன இது ராட்சசர்கள் பாடறா அடித்தொண்டையிலே ?  ஏம்மா திருவரங்கம்னு ஒரு காஸெட் இருந்ததே…”

“அதை பாலாஜி ஒளிச்சு வெச்சுட்டான் பாட்டி”  என்றான் குமார்.

“பாட்டி,  நான் ரைம்ஸ் சொல்லட்டுமா ? பாட்டகேக் பாட்டகேக்  பக்கர்ஸ் மேன்”  என்று ஆரம்பித்த குமாரை வேண்டாம் என்று குடும்பமே ஒரே குரலில் அதட்டியது.

“குழந்தை ஆசையா பாடறேங்கறது…பாடட்டுமே!”

“பாட்டி,  சூச்சூ வரது.  அப்பாவை நிறுத்தச் சொல்லு”  என்றான் சிறுவன்.

“பேசப்படாது,  சித்தூர் போறவரை…”

“எனக்குக்கூட போகணும் ராமு…. கொஞ்சம் நிறுத்து காரை.”

“என்னம்மா !  புறப்படற போதே ப்ளாடரை காலி பண்ணுங்கன்னு எல்லாருக்கும் சொன்னேனா இல்லையா ?”

“அப்பவும் போனேன்.  இப்பவும் வரதே…. என்ன பண்ண ?”

“சித்தூர் பக்கத்துல பிரேக்ஃபாஸ்டுக்கு நிறுத்தறேன்… அங்க போய்க்கலாம்.”

“இப்ப நிறுத்தப்போறியா இல்லை இந்த சீட்டிலேயே போயிடவா ?”

“ஐயோ!  ரோதனைம்மா உன்னோட.  எங்க போனாலும் லக்கேஜ் மாதிரி கூட வந்தாகணுமா?  மூர்த்தி கிட்ட இரண்டு நாள்…இரண்டே நாள் இருக்கக் கூடாதா ?  என்ன ஒரு தாயார் நீ ?”

அம்மா மௌனமானாள்.

“அழாத பாட்டி”  என்றான் குமார்.  “சூச்சூ வந்தா அடக்கிக்கோ  பாட்டி!”

சட்டென்று ப்ரேக் போட்டு நிறுத்தினார்.

“எல்லாரும் போங்கோ”  என்று வெடித்தார்.  நான் அவரைக் கண் கொட்டாமல் பார்த்தேன்.  என் எதிர்ப்பைத் தெரிவிக்கும் ஒரே ஆயுதம் அது.  அம்மாவைக் கைத்தாங்கலாக அழைத்துப் போனோம்.  சுற்றுமுற்றும் பார்த்தாள்.

“ஏண்டா,  பொட்டைக் காட்டுல நிறுத்தினா எப்படி ?  மறைவா ஒரு இடம் பார்க்க மாட்டியோ… புதர்ல இறங்கினா பாம்பு பிடுங்கும்!”

“உனக்காக ஜனானா கட்ட முடியாதும்மா…”

ஜெயந்தியும் நானும் பவானி ஜமக்காளத்தை திரைபோலப் பிடித்துக் கொள்ள வேண்டியிருந்தது.  அப்புறம் மர நிழலைப் பார்த்து நிறுத்தி ஜமக்காளத்தை விரித்து இட்லி சமாசாரங்களைப் பிரித்து எல்லோரும் சாப்பிட்டோம்.  அம்மா “மோர் இல்லையா ?”  என்றாள்.

நான் பதட்டத்துடன் அவரைப் பார்த்தேன்.

“திஸ் இஸ் தி லிமிட்!  அம்மா மோர் இல்லை”  என்றார் சுருக்கமாக.

“பக்கத்தில் கடை கண்ணி இல்லையா லட்சுமி.  நான் மோர் சாப்பிடுவேனே தெரியாதா உனக்கு ? ”  என்றாள்.

“பாரும்மா  இன்னிக்கு ஒரு நாள் எங்களை மன்னிச்சுடு!  பூந்தமல்லி வந்த கையோட உனக்குன்னு ஆச்சி மோர் ஆறு பாக்கெட் வாங்கித் தரேன்.  பொறுத்துக்கம்மா…”

“ராமு,  எதுக்காக இவ்வளவு கோபப்படறே ?  நான் லட்சுமியைத்தானே கேட்டுண்டிருந்தேன் ?”

“ரொம்ப லொள்ளு பண்றேம்மா நீ, ஏதோ போற இடத்துலே கோ ஆப்பரேட் பண்ணாம!”

“மோர் இருக்கான்னு கேட்டது தப்பா ?”

“ஆமாம்!  ரொம்ப டென்ஷன் பண்ற என்னை நீ.”

“உனக்கு ஆஃபீஸ்ல வேற ஏதோ கோபம்னு நினைக்கிறேன்.”

“ஆமாம்… மெட்ராஸ் வரைக்கும் வாயை மூடிண்டு சும்மா வரயா ?”

“அப்படியே உங்கப்பா”  என்றாள்.  இதற்கு மூர்த்தி பரவால்ல.  அந்தப் பிசாசு இல்லைன்னா அங்க போய் இருந்துக்கலாம்.  சாக்கடைக்குப் போக்கிடம் ஏது ?”  என்றாள் அழுகைக் குரலில்.

“அம்மா”  என்று அதட்டினார்.  வாய் தவறிப் போய், “இந்த மாதிரி தொண தொணன்னு ஆரம்பிச்சே, இங்கேயே விட்டுப் போயிடுவேன்”  என்றார்.

“விட்டுட்டுப்  போயேன்.  எனக்கு என்ன பயமா ?  என்னால தனியா சமாளிக்க முடியாதுன்னு நெனைச்சியா ?  உங்கப்பா என்னை விட்டுட்டுப் பரலோகத்துக்கே போயிட்டார் இருபத்துநாலு வயசில!”

“ஐயோ!  அதை ஆயிரம் தடவை சொல்லியாச்சும்மா….”

அம்மா அதைக் கவனிக்காமல், “ரெண்டு குழந்தைகளையும் வெச்சு வளர்க்கலையா ?  விட்டுட்டுப் போயேன்.  யாரையாவது அப்பா தாயேன்னு கெஞ்சி லாரியைப் பிடிச்சு ஏறிண்டு வந்துடுவேன்.  கோயில்ல போய் உக்காந்துக்கறேன்.  நன்றியில்லாத ரெண்டு பிள்ளைகளை வளர்த்தன்னு கையை நீட்டினா யாராவது உண்டைக்கட்டி போடறா!”

“பாட்டி…  கட்டைவிரலை இப்டி உசத்தி காட்டினா லாரில ஏத்திப்பா பாட்டி”  என்றான் குமார்.

நான் அவரைத் தனியா கூப்பிட்டு,  “கொஞ்சம் பொறுமையா இருக்கக் கூடாதா …. அப்புறம் ஓட்டறதில் கவனம் போய்டும்.  அம்மா அப்படித்தான்னு தெரியாதா உங்களுக்கு ?”

“என்ன டென்ஷன் பண்றா பாரு..  திஸ் இஸ் தி லிமிட்! ”

“பாலாஜி, நீ பாட்டி கிட்ட பேச்சு கொடுத்துண்டு இரு”   இதனிடையில் அம்மா தனியாகப் போய் ஒரு கல்லில் உட்கார்ந்து கொண்டாள்.  விரோதமான திசையில் பார்த்துக் கொண்டு.  எனக்கு சிரிப்புதான் வந்தது.

“அம்மா ஏதோ படபடப்பில் தப்பா பேசிட்டார்.”

“கோவிச்சுக்காத பாட்டி!”

“ஜெயந்தி!  உன் வயசில இருக்கறப்ப எனக்கு ரெண்டு பிள்ளை கொடுத்துட்டுப் போய்ட்டார்.”

“எல்லாம் சரிதாம்மா வா”  என்று அவள் கையைப் பிடித்து அழைத்து வந்தார்.

“நான் இனிமே பேசவே இல்லைப்பா!  ராமு மாத்திரை சாப்ட்டியா ?”

“சாப்ட்டன்மா!”

பயணம் தொடர்ந்தது.

தொடரும்…

Advertisements

4 thoughts on “1- சிவப்பு மாருதி — சுஜாதா

 1. Rithvik December 30, 2010 at 9:13 PM Reply

  Hello,

  Can you get the second part too. Suspense is too much in part 1. Eagerly waiting for it.

  Wish you a Happy New Year

 2. BaalHanuman December 31, 2010 at 4:24 PM Reply

  அன்புள்ள Rithvik,

  உங்கள் ஆர்வத்துக்கு நன்றி. விரைவில் மற்றப் பகுதிகள் வெளிவரும்.

 3. sathish January 1, 2011 at 7:23 PM Reply

  I too wait for the second part.even though I know the full story. I always have pleasure reading Sujatha’s stories in this blog. You are doing marvelous job Uppili.

  Cheers,
  sathish

  • BaalHanuman January 3, 2011 at 5:13 AM Reply

   Dear Sathish,

   Thanks for your encouraging words.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s