நகரம் — சுஜாதா


”பாண்டியர்களின் இரண்டாம் தலைநகரம் மதுரை. பண்டைய தேசப் படங்களில் ‘மட்ரா’ என்று காணப்படுவதும், ஆங்கிலத்தில் ‘மதுரா’ என்று சொல்லப்படுவதும், கிரேக்கர்களால் ‘மெதோரா’ என்று குறிப்பிடுவதும் இத்தமிழ் மதுரையே யாம்!”

-கால்டுவெல் ஒப்பிலக்கணம்

சுவர்களில் ஓரடி உயர எழுத்துக்களில் விளம்பரங்கள் வித விதமாக ஒன்றி வாழ்ந்தன. நிஜாம் லேடி புகையிலை ஆர்.கே.கட்பாடிகள்எச்சரிக்கை! புரட்சித் தீ! சுவிசேஷக் கூட்டங்கள் ஹாஜி மூசா ஜவுளிக்கடை (ஜவுளிக்கடல்)30.09.73 அன்று கடவுளை நம்பாதவர்கள் சுமக்கப் போகும் தீச்சட்டிகள்.

மதுரையின் ஒரு சாதாரண தினம். எப்போதும் போல ‘பைப்’ அருகே குடங்கள் மனிதர்களுக்காக வரிசைத் தவம் இருந்தன. சின்னப் பையன்கள் ‘டெட்டானஸ்’ கவலையின்றி மண்ணில் விளை யாடிக்கொண்டு இருந்தார்கள். பாண்டியன் போக்குவரத்துக் கழக பஸ்கள் தேசியம் கலந்த டீசல் புகை பரப்பிக்கொண்டு இருந்தன. விறைப்பான கால்சராய் சட்டை அணிந்த, ப்ரோட்டீன் போதா போலீஸ்காரர்கள் ‘இங்கிட்டும் அங்கிட்டும்’ செல்லும் வாகன மானிட போக்குவரத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தார்கள். நகரின் மனித இயக்கம் ஒருவித ப்ரௌனியன் இயக்கம்போல் இருந்தது (பௌதிகம் தெரிந்தவர்களைக் கேட்கவும்.) கதர் சட்டை அணிந்த மெல்லிய, அதிக நீளமில்லாத ஊர்வலம் ஒன்று சாலையின் இடதுபுறத்தில் அரசாங்கத்தை விலைவாசி உயர் வுக்காகத் திட்டிக்கொண்டே ஊர்ந்தது. செருப்பில்லாத டப்பாக் கட்டு ஜனங்கள், மீனாட்சி கோயி லின் ஸ்தம்பித்த கோபுரங்கள், வற்றிய வைகை, பாலம் மதுரை!

நம் கதை இந்த நகரத்துக்கு இன்று வந்திருக்கும் ஒரு பெண்ணைப் பற்றியது. வள்ளியம்மாள் தன் மகள் பாப்பாத்தியுடன் மதுரை பெரியாஸ்பத்திரியில் ஓ.பி. டிபார்ட்மென்ட்டின் காரிடாரில் காத்திருந்தாள். முதல் தினம் பாப்பாத்திக்கு ஜுரம். கிராம பிரைமரி ஹெல்த் சென்ட்டரில் காட்டிய தில் அந்த டாக்டர் பயங்காட்டி விட்டார். ”உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போ” என்றார். அதிகாலை பஸ் ஏறி…

பாப்பாத்தி ஸ்ட்ரெச்சரில் கிடந்தாள். அவளைச் சூழ்ந்து ஆறு டாக்டர்கள் இருந்தார்கள். பாப் பாத்திக்குப் பன்னிரண்டு வயது இருக்கும். இரண்டு மூக்கும் குத்தப் பட்டு ஏழைக் கண்ணாடிக் கற்கள் ஆஸ்பத்திரி வெளிச்சத்தில் பளிச் சிட்டன. நெற்றியில் விபூதிக் கீற்று. மார்புவரை போர்த்தப்பட்டுத் தெரிந்த கைகள் குச்சியாய் இருந் தன. பாப்பாத்தி ஜுரத் தூக்கத் தில் இருந்தாள். வாய் திறந்து இருந்தது.

பெரிய டாக்டர் அவள் தலையைத் திருப்பிப் பார்த்தார். கண் ரப்பையைத் தூக்கிப் பார்த்தார். கன்னங்களை விரலால் அழுத்திப் பார்த்தார். விரல்களால் மண்டைஓட்டை உணர்ந்து பார்த்தார். பெரிய டாக்டர் மேல்நாட்டில் படித்தவர். போஸ்ட் கிராஜுவேட் வகுப்புகள் எடுப்பவர். புரொஃபஸர். அவரைச் சுற்றிலும்இருந் தவர்கள் அவரின் டாக்டர்மாண வர்கள்.

Acute case of Meningitis. Notice the…

வள்ளியம்மாள் அந்தப் புரியாத சம்பாஷணையினூடே தன் மகளையே ஏக்கத்துடன் நோக்கிக்கொண்டு இருந்தாள். சுற்றிலும் இருந்தவர்கள் ஒவ்வொருவராக வந்து ஆஃப்தல்மாஸ்கோப் மூலம் அந்தப் பெண்ணின் கண்ணுக்குள்ளே பார்த்தார்கள். டார்ச் அடித்து விழிகள் நகருகின்றனவா என்று சோதித்தார்கள். குறிப்புகள் எடுத்துக்கொண்டார்கள்.

பெரிய டாக்டர், ”இவளை அட்மிட் பண்ணிடச் சொல்லுங் கள்” என்றார்.

வள்ளியம்மாள் அவர்கள் முகங்களை மாற்றி மாற்றிப் பார்த்தாள். அவர்களில் ஒருவர், ”இத பாரும்மா, இந்தப் பெண்ணை உடனே ஆஸ்பத்திரியில் சேர்க்கணும். அதோ அங்கே உட்கார்ந்திருக்காரே, அவர்கிட்ட போ. சீட்டு எங்கே?” என்றார்.

வள்ளியம்மாளிடம் சீட்டு இல்லை.

”சரி, அவரு கொடுப்பாரு. நீ வாய்யா இப்படி பெரியவரே!”

வள்ளியம்மாள் பெரிய டாக்டரைப் பார்த்து, ”அய்யா, குளந்தைக்குச் சரியாய்டுங்களா?” என்றாள்.

”முதல்லே அட்மிட் பண்ணு. நாங்க பார்த்துக்கறோம். டாக்டர் தனசேகரன், நானே இந்தக் கேஸைப் பார்க்கிறேன். ஸீ தட் ஷி இஸ் அட்மிட்டட். எனக்கு கிளாஸ் எடுக்கணும். போயிட்டு வந்ததும் பார்க்கறேன்.”

மற்றவர்கள் புடை சூழ அவர் ஒரு மந்திரி போல் கிளம்பிச் சென்றார். டாக்டர் தனசேகரன் அங்கிருந்த சீனிவாசனிடம் சொல்லிவிட்டுப் பெரிய டாக்டர் பின்னால் விரைந்தார்.

சீனிவாசன் வள்ளியம்மாளைப் பார்த்தான்.

”இங்கே வாம்மா. உன் பேர் என்ன..? டேய் சாவு கிராக்கி! அந்த ரிஜிஸ்தரை எடுடா!”

”வள்ளியம்மாள்.”

”பேஷன்ட் பேரு?”

”அவரு இறந்து போய்ட்டாருங்க.”

சீனிவாசன் நிமிர்ந்தான்.

”பேஷன்ட்டுன்னா நோயாளி… யாரைச் சேர்க்கணும்?”

”என் மகளைங்க.”

”பேரு என்ன?”

”வள்ளியம்மாளுங்க.”

”என்ன சேட்டையா பண்றே? உன் மக பேர் என்ன?”

”பாப்பாத்தி.”

”பாப்பாத்தி! அப்பாடா. இந்தா, இந்தச் சீட்டை எடுத்துக்கிட்டுப் போயி இப்படியே நேராப் போனின்னா அங்கே மாடிப் படிக்கிட்ட நாற்காலி போட்டுக்கிட்டு ஒருத்தர் உட்கார்ந்திருப்பார். வருமானம் பாக்கறவரு. அவருகிட்ட கொடு.”

”குளந்தைங்க?”

”குளந்தைக்கு ஒண்ணும் ஆவாது. அப்படியே படுத்திருக்கட்டும். கூட யாரும் வல்லையா? நீ போய் வா… விஜயரங்கம் யாருய்யா?”

வள்ளியம்மாளுக்குப் பாப்பாத்தியை விட்டுப் போவதில் இஷ்டமில்லை. அந்த க்யூ வரிசையும் அந்த வாசனையும் அவளுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. இறந்து போன தன் கணவன்மேல் கோபம் வந்தது.

அந்தச் சீட்டைக் கொண்டு அவள் எதிரே சென்றாள். நாற் காலி காலியாக இருந்தது. அதன் முதுகில் அழுக்கு இருந்தது. அருகே இருந்தவரிடம் சீட்டைக் காட்டினாள். அவர் எழுதிக்கொண்டே சீட்டை இடது கண்ணின் கால்பாகத்தால் பார்த்தார். ”இரும்மா, அவரு வரட்டும்” என்று காலி நாற்காலியைக் காட்டினார். வள்ளியம்மாளுக்குத் திரும்பித் தன் மகளிடம் செல்ல ஆவல் ஏற்பட்டது. அவள் படிக்காத நெஞ்சில், காத்திருப்பதா… குழந்தையிடம் போவதா என்கிற பிரச்னை உலகளவுக்கு விரிந் தது.

‘ரொம்ப நேரமாவுங்களா?’ என்று கேட்கப் பயமாக இருந்தது அவளுக்கு.

வருமானம் மதிப்பிடுபவர் தன் மருமானை, அட்மிட் பண்ணிவிட்டு மெதுவாக வந்தார். உட்கார்ந்தார். ஒரு சிட்டிகைப் பொடியை மூக்கில் மூன்று தடவை தொட்டுக்கொண்டு கர்ச்சீப்பைக் கயிறாகச் சுருட்டித் தேய்த்துக்கொண்டு சுறுசுறுப்பானார்.

”த பார். வரிசையா நிக்கணும். இப்படி ஈசப்பூச்சி மாதிரி வந்தீங்கன்னா என்ன செய்யறது?”

வள்ளியம்மாள் முப்பது நிமிஷம் காத்திருந்த பின் அவள் நீட்டிய சீட்டு அவளிடமிருந்து பிடுங்கப்பட்டது.

”டாக்டர்கிட்ட கையெழுத்து வாங்கிக்கிட்டு வா. டாக்டர் கையெழுத்தே இல்லையே அதிலே!”

”அதுக்கு எங்கிட்டுப் போவ ணும்?”

”எங்கேருந்து வந்தே?”

”மூனாண்டிப்பட்டிங்க!”

கிளார்க் ”ஹத்” என்றார். சிரித்தார். ”மூனாண்டிப்பட்டி! இங்கே கொண்டா அந்தச் சீட்டை.”

சீட்டை மறுபடி கொடுத்தாள். அவர் அதை விசிறிபோல் இப்படித் திருப்பினார்.

”உன் புருசனுக்கு என்ன வருமானம்?”

”புருசன் இல்லீங்க.”

”உனக்கு என்ன வருமானம்?”

அவள் புரியாமல் விழித்தாள்.

”எத்தனை ரூபா மாசம் சம்பாதிப்பே?”

”அறுப்புக்குப் போனா நெல்லாக் கிடைக்கும். அப்புறம் கம்பு, கேவரகு!”

”ரூபா கிடையாதா!… சரி சரி. தொண்ணூறு ரூபா போட்டு வெக்கறேன்.”

”மாசங்களா?”

”பயப்படாதே. சார்ஜு பண்ணமாட்டாங்க. இந்தா, இந்தச் சீட்டை எடுத்துக்கிட்டு இப்படியே நேராப் போய் இடது பக்கம் பீச்சாங்கைப் பக்கம் திரும்பு. சுவத்திலே அம்பு அடையாளம் போட்டிருக்கும். 48ம் நம்பர் ரூமுக்குப் போ.”

வள்ளியம்மாள் அந்தச் சீட்டை இரு கரங்களிலும் வாங்கிக் கொண்டாள். கிளார்க் கொடுத்த அடையாளங்கள் அவள் எளிய மனதை மேலும் குழப்பியிருக்க, காற்றில் விடுதலை அடைந்த காகிதம் போல் ஆஸ்பத்திரியில் அலைந்தாள். அவளுக்குப் படிக்க வராது. 48ம் நம்பர் என்பது உடனே அவள் ஞாபகத்திலிருந்து விலகி இருந்தது. திரும்பிப் போய் அந்த கிளார்க்கைக் கேட்க அவளுக்கு அச்சமாக இருந்தது.

ஒரே ஸ்ட்ரெச்சரில் இரண்டு நோயாளிகள் உட்கார்ந்துகொண்டு பாதி படுத்துக்கொண்டு மூக்கில் குழாய் செருகி இருக்க அவளைக் கடந்தார்கள். மற்றொரு வண்டியில் ஒரு பெரிய வாயகன்ற பாத் திரத்தில் சாம்பார் சாதம்நகர்ந்து கொண்டு இருந்தது. வெள்ளைக் குல்லாய்கள் தெரிந்தன. அலங் கரித்துக்கொண்டு, வெள்ளைக் கோட் அணிந்துகொண்டு, ஸ்டெதாஸ்கோப் மாலையிட்டு, பெண் டாக்டர்கள் சென்றார்கள். போலீஸ்காரர்கள், காபி டம்ளர்காரர்கள், நர்ஸ்கள் எல்லோரும் எல்லாத் திசையிலும் நடந்துகொண்டு இருந்தார்கள். அவர்கள் அவசரத்தில் இருந்தார்கள். அவர்களை நிறுத்திக் கேட்க அவளுக்குத் தெரியவில்லை. என்ன கேட்பது என்றே அவளுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு அறையின் முன் கும்பலாக நின்று கொண்டு இருந்தார்கள். அங்கே ஓர் ஆள் அவள் சீட்டுப் போலப் பல பழுப்புச் சீட்டுக்களைச் சேகரித்துக்கொண்டு இருந்தான். அவன் கையில் தன் சீட்டைக் கொடுத்தாள். அவன் அதைக் கவனமில்லாமல் வாங்கிக்கொண்டான். வெளியே பெஞ்சில் எல் லோரும் காத்திருந்தார்கள். வள்ளியம்மாளுக்குப் பாப்பாத்தியின் கவலை வந்தது. அந்தப் பெண் அங்கே தனியாக இருக்கிறாள். சீட்டுக்களைச் சேகரித்தவன் ஒவ்வொரு பெயராகக் கூப்பிட்டுக்கொண்டு இருந்தான். கூப்பிட்டு வரிசையாக அவர்களை உட்கார வைத்தான். பாப்பாத்தியின் பெயர் வந்ததும் அந்தச் சீட்டைப் பார்த்து, ”இங்க கொண்டு வந்தியா! இந்தா,” சீட்டைத் திருப்பிக் கொடுத்து, ”நேராப் போ,” என்றான். வள்ளியம்மாள், ”அய்யா, இடம் தெரியலிங்களே” என்றாள். அவன் சற்று யோசித்து எதிரே சென்ற ஒருவனைத் தடுத்து நிறுத்தி, ”அமல்ராஜ், இந்த அம்மாளுக்கு நாற்பத்தி எட்டாம் நம்பரைக் காட்டுய்யா. இந்த ஆள் பின்னாடியே போ. இவர் அங்கேதான் போறார்” என்றான்.

அவள் அமல்ராஜின் பின்னே ஓட வேண்டியிருந்தது.

அங்கே மற்றொரு பெஞ்சில் மறொரு கூட்டம் கூடியிருந்தது. அவள் சீட்டை ஒருவன் வாங்கிக்கொண்டான். வள்ளியம்மாளுக்கு ஒன்றும் சாப்பிடாததாலும், அந்த ஆஸ்பத்திரி வாசனையினாலும் கொஞ்சம் சுற்றியது.

அரை மணி கழித்து அவள் அழைக்கப்பட்டாள். அறையின் உள்ளே சென்றாள். எதிர் எதிராக இருவர் உட்கார்ந்து காகிதப் பென்சிலால் எழுதிக்கொண்டுஇருந்தார்கள். அவர்களில் ஒருத்தன் அவள் சீட்டைப் பார்த்தான். திருப்பிப் பார்த்தான். சாய்த்துப் பார்த்தான்.

”ஓ.பி. டிபார்ட்மென்டிலிருந்து வரியா?”

இந்தக் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

”அட்மிட் பண்றதுக்கு எளுதி இருக்கு. இப்ப இடம் இல்லை. நாளைக் காலையிலே சரியா ஏழரை மணிக்கு வந்துடு. என்ன?”

”எங்கிட்டு வரதுங்க?”

”இங்கேயே வா. நேரா வா, என்ன?”

அந்த அறையைவிட்டு வெளியே வந்ததும் வள்ளியம்மா ளுக்கு ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் தனியாக விட்டு வந்துவிட்ட தன் மகள் பாப்பாத் தியின் கவலை மிகப் பெரிதாயிற்று. அவளுக்குத் திரும்பிப் போகும் வழி தெரியவில்லை. ஆஸ்பத்திரி அறைகள் யாவும் ஒன்றுபோல் இருந்தன. ஒரே ஆசாமி திரும்பத் திரும்ப பல்வேறு அறைகளில் உட்கார்ந்திருப்பதுபோல் தோன்றியது. ஒரு வார்டில் கையைக் காலைத் தூக்கி, கிட்டி வைத்துக் கட்டி, பல பேர் படுத்திருந்தார்கள். ஒன்றில் சிறிய குழந்தைகள் வரிசையாக முகத்தைச் சுளித்து அழுதுகொண்டு இருந்தன. மிஷின்களும், நோயாளிகளும், டாக்டர்களுமாக அவளுக்குத் திரும்பும் வழி புரியவில்லை.

”அம்மா” என்று ஒரு பெண் டாக்டரைக் கூப்பிட்டு தான் புறப்பட்ட இடத்தின் அடையாளங்களைச் சொன்னாள். ”நிறைய டாக்டருங்க கூடிப் பேசிக்கிட்டாங்க. வருமானம் கேட்டாங்க, பணம் கொடுக்க வேண்டாம்னு சொன்னாங்க. எம் புள்ளையை அங்கிட்டு விட்டுட்டு வந்திருகேன் அம்மா!”

அவள் சொன்ன வழியில் சென்றாள். அங்கே கேட்டுக்கதவு பூட்டியிருந்தது. அப்போது அவளுக்குப் பயம் திகிலாக மாறியது. அவள் அழ ஆரம்பித்தாள். நட்ட நடுவில் நின்றுகொண்டு அழுதாள். ஓர் ஆள் அவளை ஓரமாக ஒதுங்கி நின்று அழச் சொன்னான். அந்த இடத்தில் அவள் அழுவது அந்த இடத்து அஸெப்டிக் மணம்போல் எல்லோருக்கும் சகஜமாக இருந்திருக்க வேண்டும்.

”பாப்பாத்தி! பாப்பாத்தி! உன்னை எங்கிட்டுப் பாப்பேன்? எங்கிட்டுப் போவேன்!” என்று பேசிக்கொண்டே நடந்தாள். ஏதோ ஒரு பக்கம் வாசல் தெரிந்தது. ஆஸ்பத்திரியைவிட்டு வெளியே செல்லும் வாசல் தெரிந்தது. ஆஸ்பத்திரியைவிட்டு வெளியே செல்லும் வாசல். அதன் கேட்டைத் திறந்து வெளியே மட்டும் செல்லவிட்டுக்கொண்டுஇருந்தார்கள். அந்த வாசலைப் பார்த்த ஞாபகம் இருந்தது அவளுக்கு.

வெளியே வந்துவிட்டாள். அங்கிருந்துதான் தொலைதூரம் நடந்து மற்றொரு வாசலில் முதலில் உள் நுழைந்தது ஞாபகம் வந்தது. அந்தப் பக்கம் ஓடினாள். மற்றொரு வாயிலை அடைந்தாள். அந்த மரப்படிகள் ஞாபகம் வந்தது. அதோ வருமானம் கேட்ட ஆசாமிகள் நாற்காலி காலியாக இருக்கிறது. அங்கேதான்!

ஆனால், வாயில்தான் மூடப் பட்டு இருந்தது. உள்ளே பாப்பாத்தி ஓர் ஓரத்தில் இன்னும் அந்த ஸ்ட்ரெச்சரில் கண்மூடிப் படுத்திருப்பது தெரிந்தது.

”அதோ! அய்யா, கொஞ்சம் கதவைத் திறவுங்க. எம்மவ அங்கே இருக்கு.”

”சரியா மூணு மணிக்கு வா. இப்ப எல்லாம் க்ளோஸ்.” அவனிடம் பத்து நிமிஷம் மன்றாடினாள். அவன் பாஷை அவளுக்குப் புரியவில்லை. தமிழ்தான், அவன் கேட்டது அவளுக்குப் புரிய வில்லை. சில்லறையைக் கண்ணில் ஒத்திக்கொண்டு யாருக்கோ அவன் வழிவிட்டபோது அந்த வழியில் மீறிக்கொண்டு உள்ளே ஓடினாள். தன் மகளை வாரி அணைத்துக்கொண்டு தனியே பெஞ்சில் போய் உட்கார்ந்துகொண்டு அழுதாள்.

பெரிய டாக்டர் எம்.டி. மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துமுடிந்த தும் ஒரு கப் காபி சாப்பிட்டு விட்டு வார்டுக்குச் சென்றார். அவருக்குக் காலை பார்த்த மெனின்ஜைடிஸ் கேஸ் நன்றாக ஞாபகம் இருந்தது. B.M.J-யில் சமீபத்தில் புதிய சில மருந்துகளைப் பற்றி அவர் படித்திருந்தார்.

”இன்னிக்குக் காலையிலே அட்மிட் பண்ணச் சொன்னேனே மெனின்ஜைடிஸ் கேஸ். பன்னிரண்டு வயசுப் பொண்ணு எங்கேய்யா?”

”இன்னிக்கு யாரும் அட்மிட் ஆகலையே டாக்டர்?”

”என்னது? அட்மிட் ஆகலையா? நான் ஸ்பெஸிஃபிக்காகச் சொன்னேனே! தனசேகரன், உங்களுக்கு ஞாபகம் இல்லை?”

”இருக்கிறது டாக்டர்!”

”பால்! கொஞ்சம் போய் விசாரிச்சுட்டு வாங்க. அது எப்படி மிஸ் ஆகும்?”

பால் என்பவர் நேராகக் கீழே சென்று எதிர் எதிராக இருந்த கிளார்க்குகளிடம் விசாரித்தார்.

”எங்கேய்யா! அட்மிட் அட்மிட்னு நீங்க பாட்டுக்கு எழுதிப் புடறீங்க. வார்டிலே நிக்க இடம் கிடையாது!”

”ஸ்வாமி! சீஃப் கேக்கறார்?”

”அவருக்குத் தெரிஞ்சவங்களா?”

”இருக்கலாம். எனக்கு என்ன தெரியும்?”

”பன்னண்டு வயசுப் பொண்ணு ஒண்ணும் நம்ம பக்கம் வரலை. வேற யாராவது வந்திருந்தாக்கூட எல்லாரையும் நாளைக்குக் காலை 7.30க்கு வரச் சொல்லிட்டேன். ராத்திரி ரெண்டு மூணு பெட் காலியாகும். எமர்ஜன்ஸின்னா முன்னாலேயே சொல்லணுமில்லை. பெரியவருக்கு அதிலே இன்ட்ரஸ்ட் இருக்குன்னு ஒரு வார்த்தை! உறவுக்காரங்களா?”

வள்ளியம்மாளுக்கு மறுநாள் காலை 7.30 வரை தான் என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியவில்லை. அவளுக்கு ஆஸ்பத்திரியின் சூழ்நிலை மிகவும் அச்சம் தந்தது. அவர்கள் தன்னைப் பெண்ணுடன் இருக்க அனுமதிப்பார்களா என்பது தெரியவில்லை. வள்ளியம்மாள் யோசித்தாள். தன் மகள் பாப்பாத்தியை அள்ளி அணைத்துக்கொண்டு மார்பின் மேல் சார்த்திக்கொண்டு, தலை தோளில் சாய, கைகால்கள் தொங்க, ஆஸ்பத்தியைவிட்டு வெளியே வந்தாள். மஞ்சள் நிற சைக்கிள் ரிக் ஷாவில் ஏறிக்கொண்டாள். அவனை பஸ் ஸ்டாண்டுக்குப் போகச் சொன்னாள்.

What nonsense! நாளைக்குக் காலை ஏழரை மணியா? அதுக்குள்ள அந்தப் பெண் செத்துப்போய்டும்யா! டாக்டர் தனசேகர், நீங்க ஓ.பியிலே போய்ப் பாருங்க. அங்கேதான் இருக்கும்! இந்த ரெச்சட் வார்டிலே ஒரு பெட் காலி இல்லைன்னா நம்ம டிபார்மென்ட் வார்டிலே பெட் இருக்குது. கொடுக்கச் சொல்லுங்க. க்விக்!”

”டாக்டர், அது ரிசர்வ் பண்ணிவெச்சிருக்கு!”

I don’t care. I want that girl admitted now. Right now!

பெரியவர் அம்மாதிரி இதுவரை இரைந்ததில்லை. பயந்த டாக்டர் தனசேகரன், பால், மிராண்டா என்கிற தலைமை நர்ஸ் எல்லோரும் வள்ளியம்மாளைத் தேடி ஓ.பி.டிபார்ட்மென்ட்டுக்கு ஓடினார்கள்.

‘வெறும் ஜுரம்தானே? பேசாமல் மூனாண்டிப்பட்டிக்கே போய்விடலாம். வைத்தியரிடம் காட்டிவிடலாம். கிராம ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டாம். அந்த டாக்டர்தான் பயங்காட்டி மதுரைக்கு விரட்டினார். சரியாகப் போய்விடும். வெள்ளைக்கட்டி போட்டு விபூதி மந்திரித்துவிடலாம்.’

சைக்கிள் ரிக் ஷா பஸ் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டு இருந்தது. வள்ளியம்மாள், பாப்பாத்திக்குச் சரியாயப் போனால் வைதீஸ்வரன் கோயிலுக்கு இரண்டு கை நிறையக் காசு காணிக்கையாக அளிக்கிறேன் என்று வேண்டிக்கொண்டாள்!

நன்றி – விகடன்

Advertisements

3 thoughts on “நகரம் — சுஜாதா

 1. Ducks September 12, 2010 at 7:52 AM Reply

  Welcome back Balhanuman. You came back after a break with one of the master piece of Sujatha ( lot of people say this story his best). Now we can go back to our routine

 2. BaalHanuman September 15, 2010 at 11:59 AM Reply

  சுரேஷ் கண்ணன்: நீங்கள் பல சிறுகதைகளை எழுதியிருந்தாலும் பெரும்பான்மையினர் தங்களுக்கு பிடித்ததாக கூறும் சிறுகதை ‘நகரம்‘. அதை நிதானமாக திட்டமிட்டு எழுதினீர்களா? அல்லது பத்திரிகைகளின் துரத்தல்களுக்கேற்ப அவசரமான மனநிலையில் எழுதினீர்களா?”

  சுஜாதா: “மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவரை பார்க்கச் சென்றிருந்த போது, அங்கு பார்க்க நேர்ந்த காட்சிகளின் தாக்கத்தில் உடனடியாக எழுதப்பட்ட கதை அது.”

 3. BaalHanuman May 17, 2011 at 2:01 AM Reply

  எஸ். ராமகிருஷ்ணனின் நூறு சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இந்தக் கதையும் (நகரம் -சுஜாதா) உண்டு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s