சுஜாதாவும் பாலுமகேந்திராவும் — சுரேஷ் கண்ணன்


https://balhanuman.files.wordpress.com/2010/05/logotimepass.jpg?w=300
சுஜாதாவின் ‘பரிசு‘ என்கிற சிறுகதையை உங்களில் பலபேர் படித்திருக்கக்கூடும்.

ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவருக்கு ஏதோ ஒரு போட்டியில் கலந்து கொண்டு, டெல்லி,  ஆக்ரா சென்று குடும்பத்துடன் தங்கிவரும் முதற்பரிசு கிடைக்கிறது. குடும்பமே சந்தோஷத்தோடு அதற்கான முஸ்தீபுகளில் இறங்க,  அக்கம்பக்கத்தினரும் தங்கள் பங்குக்கு சில பொருட்களை வாங்கிவரச் சொல்கின்றனர். நிதிப்போதாமை காரணமாக, கணவன் எங்குமே வெளியில் அழைத்துச் செல்லவில்லையே என்று மறுகிக் கொண்டிருக்கும் அந்த அப்பாவி மனைவிக்கு இது பெருத்த அதிர்ஷ்டமாக தோன்றுகிறது.

இறுதியில் அந்தக் கணவனின் பல்வேறு பொருளாதார பிரச்சினைக்கு ஈடுகட்ட அந்த பிரயாணத்திற்குப் பதில் பணம் வாங்கி விட்டு, மனைவியையும் உருக்கத்துடன் சம்மதிக்கச் செய்கிறான்.

நடுத்தர குடும்பத்தினருக்கே உரிய எலலா பிரத்யேக அம்சங்களுடன் தன் வழக்கமான பாணியில் இந்தச் சிறுகதையை சிறப்பாக எழுதியிருப்பார் சுஜாதா.

நேற்று இரவு இந்திய நேரம் 8.30 மணிக்கு பொதிகை தொலைக்காட்சியில் மேற்குறிப்பிட்ட சிறுகதை இயக்குநர் பாலுமகேந்திராவால் குறும்படமாக இயக்கப்பட்டு  ஒளிபரப்பப்பட்டது. முன்னுரையில் சுஜாதா தோன்றி,  வாசகனின் பங்கில்லாமல் எந்தவொரு படைப்பும் முழுமையடைவதில்லைஎன்றார் மென்மையாக.

பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு திறமையை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. ஆனால் ஒரு சிறுகதையை எவ்வாறு திரைக்கதையாக சொல்வது என்பது அவருக்கு தெளிவாக தெரிந்திருக்கிறது. வேறு யாராவது என்றால் நாலு பேரை ஒரு பிரேமிற்குள் நிற்க வைத்து பக்கம் பக்கமாக வசனம் பேசி இதை ஒரு அசட்டுநாடகமாக்கி இருப்பார்கள். ஆனால் பாலுமகேந்திரா இந்தச் சிறுகதையின் தேவையான பகுதிகளை மட்டும் வெட்டி எடுத்துக் கொண்டு, தன் திரைக்கதையில் திறமையாக பிசைந்திருக்கிறார். வசனங்களையும் மிகக்குறைந்த அளவே பயன்படுத்திக் கொண்டு, தன்னுடைய வசனங்களில் சமீபத்திய நிகழ்வுகளையும் செருகியுள்ளார்.

இந்தக் குறும்படத்தின் முதற்காட்சியே அந்தக் குடும்பத்தலைவி குடிநீர் லாரியில் கூட்டத்தில் மிகுந்த சிரமப்பட்டு தண்ணீர் பிடிக்கிற ஒரு மிட் ஷாட்டில் ஆரம்பிக்கிறது. அந்த நடுத்தரக் குடும்பத்தின் பின்னணி காட்சிகள்,  எங்கிருந்தோ கேட்கும் ஒரு ரேடியோவின் பாடல் ஒலிகளினாலும்,  குழந்தை அழுகிற சத்தங்களினாலும் மிகத்திறமையாக சொல்லப்படுகிறது.

#

ஆனால் சிறுகதையில் இல்லாத சம்பவங்களையும் இணைத்து அதனை சலிப்படைகிற வகையில் சொல்லியிருப்பதை தவிர்த்திருக்கலாம். உதாரணமாக அந்தப் போட்டியில் வென்ற தம்பதிகளை தங்களுடைய விளம்பரங்களில் உபயோகித்துக் கொள்ள மறுநாள் வந்து புகைப்படம் எடுக்க அழைத்துச் செல்வதாக கூறுகிறார் அந்தப் போட்டி நடத்திய விளம்பரக் கம்பெனியின் அதிகாரி. ஆனால் அடுத்த நாளில்,  தங்களுடைய பிராண்டை அந்த குடும்பத்தலைவி உபயோகிப்பதாக சொல்லச் சொல்லி விளம்பரப்படம் எடுக்கப்படுகிற படப்பிடிப்புக் காட்சிகள் காண்பிக்கப்படுகிறது. இதுவரை கேமராவையே பார்த்திராத அந்தக் குடும்பத்தலைவி வசனங்களை தாறுமாறாக சொல்லி இயக்குநரின் எரிச்சலால் அழ ஆரம்பிப்பதை நகைச்சுவையாக சொல்ல முயன்றிருக்கிறார். நடிகை மெளனிகா இந்தக்காட்சியை மிக சிறப்பாக செய்திருந்தாலும், கதைக்கு சம்பந்தமில்லாமல் ஒரு திணிப்பாகவே இது தெரிகிறது.

#

நடுத்தர குடும்பங்களுக்கே உரிய அந்த அசட்டுத்தனங்களை நடிகர் மோகன்ராம் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். உதாரணமாக இந்தக் காட்சியை பாருங்கள்.

மனைவி: ஏங்க ஃபிளைட்லயா போறோம். அப்ப வரும் போது…….?

கணவன்: வரும் போது மாட்டுவண்டியிலயா அழைச்சிட்டு வருவாங்க.  ஃபிளைட்லதான் வருவோம்.

ஆனால் இதை எல்லாந்தெரிந்த ஏகாம்பரம் போல் சொல்லி விட்டு,  பின்பு அவருக்கே நம்பிக்கையில்லாமல்,  விளம்பரக்கம்பெனி நிர்வாகியை பார்த்து சந்தேகமாக கேட்கிறார்.

சார்,  அப்படித்தானே?…..

இன்னொரு காட்சியில் மனைவி,  ஏ.ஸி. காரில் பயணிக்கும் போது

“எப்படிங்க இவ்வளவு குளிரா இருக்குது?”

என்று ஏ.ஸியைப் பற்றி கேள்வி கேட்க,  இவர்,

“ஏ.ஸின்னா…….. என்று பதில் சொல்கிறாற் போல் உயர்ந்த குரலில் ஆரம்பித்து விட்டு “ஏ.ஸி.தான்” என்று அவசரமாக சொல்லிவிட்டு ஜன்னலில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்.

#

இந்த குறும்படத்தை பார்த்தவுடனே,  அந்த ஒரிஜினல் கதையையும் படித்து இரண்டையும் ஒப்பிட்டுப்பார்க்க ஆர்வமேற்பட்டது. ஆனால் என் வீட்டில் இருந்த புத்தகக்குவியலில் சம்பந்தப்பட்ட கதை அடங்கிய புத்தகத்தை தேடியெடுக்க முடியாமல் ஏமாற்றமடைந்தேன்.

நைட்டு பத்து மணிக்கு ஷெல்ஃப்  மேலே ஏறி என்னத்த குடையறீங்க,  தூங்கவிடாமஎன்று ஆரம்பித்த என் மனைவியின் முணுமுணுப்பினால் இந்த முயற்சியை கைவிடவேண்டியதாயிருந்தது.

என்றாலும் ஞாபகமிருந்த வரை,  நடுத்தர குடும்பங்களுக்கேயுரிய குணாதிசயங்களுடன் எழுதப்பட்ட அந்தக் கதையின் ஜீவன் இந்த குறும்படத்தில் வந்திருக்கிறதா என்றால்….

இல்லை.

#

குலுங்குகிற கதாநாயகிகளின் மார்புகளை கண்களை உறுத்துகிறாற் போல் குளோசப்பில் காட்டும் பாட்டுக்களையும்,  வெங்காயம் அரியும் போது கூட கண்கலங்காத குடும்பத்தலைவிகளை கலங்க வைக்கும் அழுவாச்சி தொடர்களையும் தொடர்ச்சியாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் தனியார் தொலைக்காட்சிகளும் இந்த மாதிரியான முயற்சிகளுக்கு ஒரு அரைமணிநேரம் ஒதுக்கலாம். முன்பு சன் தொலைக்காட்சியில் பாலுமகேந்திராவின் கதை நேரம் என்கிற நிகழ்ச்சியில் பல தரமான சிறுகதைகள் படமாகின. அந்த மாதிரியான முயற்சிகள் தொடர்ந்து செய்யப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

#

பொதுவாகவே திரைக்கலைஞர்களுக்கு பாடி லாங்வேஜ் ரொம்ப முக்கியம்.

வசனங்களில் சொல்ல முடியாத அல்லது சொல்லக்கூடாத விஷயத்தை இந்த உடல் மொழிகளினாலே சிறந்த கலைஞர்களினால் வெளிப்படுத்த முடியும்.

உதாரணமாக இந்த குறும்படத்தில் மெளனிகா அவ்வாறு சிறப்பாக தன் உடல்மொழியை வெளிப்படுத்திய காட்சியை விவரிக்க முயல்கிறேன்.

#

கணவன் எழுதிய அந்த ஸ்லோகனுக்கு பரிசு வந்திருப்பதாக விளம்பரக் கம்பெனி அதிகாரி சொன்னவுடன், அந்தக் கணவன் தன் மனைவியிடம் உடனே இதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறான். தன் 10 வயது மகனிடம் விசாரிக்க,  அவள் பக்கத்துவீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பதாக தகவல் வருகிறது. உடனே அழைத்து வரச் சொல்கிறான். அந்தச் சிறுவன் விஷயத்தை கூறாமலே வரச் சொல்லியிருப்பான் போலும். மனைவி,  எதற்கோ வரச் சொல்லுகிறார் என்று மிக இயல்பாக வீட்டினுள்  நுழைந்தவள்,  கூடத்தில் அமர்ந்திருக்கும் அந்த அன்னியனை (விளம்பரக் கம்பெனி அதிகாரியை) எதிர்பாராமல் அதிர்ந்து போய் பார்த்து,  விழிவிரிய,  மிரட்சியுடன் ஒரு அடி பின்னோக்கி நகர்கிறாள்,

#

இந்தக் காட்சியைப் பார்த்து நான் பிரமித்துப் போனேன். அந்த நகர்வை இயக்குநரே சொல்லித் தந்தாரா, அல்லது மெளனிகாவே இயல்பாக செய்தாரா என்று தெரியவில்லை. ஆனால் அவர் காட்டிய முகபாவமும், பின்னோக்கி நகர்ந்த விதமும் சிறப்பானவை.

#

நாடகக்கலைஞர்களுக்கு மிக அவசியமாக சொல்லித்தரப்படுவது இந்த உடல்மொழி பற்றிய பயிற்சி. உதாரணமாக நிறைய பேருக்கு மேடையில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாது. தொங்க விடுவதா,  மடித்துக் கொள்வதா என்று குழப்பமாக இருக்கும். அனுபவித்தவர்களுக்குத்தான் நான் சொல்வது புரியும். பேருந்து நிலையங்களில் நிற்கும் மனிதர்களை உற்றுக் கவனித்திருக்கிறேன். நிற்பவர்கள் அனைவரும் கைகளை மடக்கிக் கொண்டோ,  சுவற்றில் சாற்றி வைத்துக் கொண்டோ,  இரு கைகளினாலும் பையை இறுக்கி பிடித்துக் கொண்டோதானிருப்பார்கள். இயல்பாக இரண்டு கைகளையும் தொங்கவிட்டிருப்பவர்களை காண்பது அரிது.

அடுத்த முறை கவனித்துப் பாருங்கள்.

(சில வருடங்களுக்கு முன்னால் பாலுவின் ‘கதை நேரம்’ தொடர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சமயத்தில் எழுதினது)

சுரேஷ் கண்ணன்

[sk.JPG]

Advertisements

4 thoughts on “சுஜாதாவும் பாலுமகேந்திராவும் — சுரேஷ் கண்ணன்

 1. லகுட பாண்டி December 26, 2010 at 12:10 PM Reply

  அந்த கதை மத்யமர் என்னும் தொகுப்பில் இருக்கிறது.

  இந்நேரம் கிடைத்திருந்தால் பரவாயில்லை.

  ஒருவேளை கிடைக்காதபட்சத்தில் “மத்யமர்” என்னும் புத்தகத்தை தேடிப் பிடிக்கவும்.

  நட்புடன்,
  லகுட பாண்டி

  lagudapaandi.blogspot.com

 2. BaalHanuman December 29, 2010 at 2:11 PM Reply

  அன்புள்ள லகுட பாண்டி,

  நீங்கள் சொல்வது சரிதான். இந்தக் கதை ‘மத்யமர்‘ தொகுப்பில் மற்றும் சுஜாதாவின் ‘தேர்ந்தெடுத்த சிறுகதைகள்மூன்றாம் தொகுதியிலும் உள்ளது.

 3. vidya (@kalkirasikai) November 26, 2011 at 5:52 PM Reply

  பரிசு 1990களில் கல்கியில் வெளிவந்த போது படித்தது. இன்னும் ஞாபகம் இருக்கக் காரணம் சுஜாதாவின் முத்திரை வசனங்கள். கல்கி, சுஜாதா இருவரின் படைப்புகளுமே திரைப்படுத்தப் படும் போது ஏமாற்றத்தையே தருகின்றன. காரணம் அவர்களுடைய முத்திரை அதில் காணாமல் போகிறது. ‘பரிசை‘ எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்.

 4. Bharati Mani July 27, 2012 at 2:04 AM Reply

  அருமையான பதிவு, சுரேஷ் கண்ணன். அதிலும் Body Language பற்றி சொன்னதை ரசித்தேன், ஒரு நடிகன் என்ற முறையில். இதெல்லாம் இயக்குநர் சொல்லிக்கொடுத்து வருவதில்லை. மானிட்டரில் முதலில் நாம் நடிக்கும்போது, சில விஷயங்களை –சில சமயங்களில் நாமே கவனிக்காதது — சுட்டிக்காட்டி, ‘அதை வச்சுக்குங்க’ என்று விஷயம் தெரிந்த இயக்குநர்கள் சொல்வார்கள். ஒரு நடிகனுக்கு Body Language என்பது மிக முக்கியம்!

  பாரதி மணி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s