வாய்மையே சில சமயம் வெல்லும் – சுஜாதா


[fb_pic.png]

1984ல் சுஜாதா ஆனந்த விகடனில் “வாய்மையே சில சமயம் வெல்லும்” என்று ஒரு தொடர்கதை எழுதினார். அது பின்னர் தூர்தர்ஷனில் சீரியலாக வரத் தொடங்கியது. யாவரும் நலம் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில், தூர்தர்ஷன் டைரக்டர் நடராஜன் சுஜாதாவுக்குப் போன் செய்கிறார் அவசரமாக. அந்தச் சீரியலுக்கு சில மாதர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றும், எனவே அவர் உடனே நிலையத்திற்கு வர வேண்டுமென்றும் சொல்கிறார்.

தொடரை உடனே நிறுத்த வேண்டும். இல்லையேல் சாகும் வரை உண்ணாவிரதமோ அல்லது சாலை மறியலோ செய்யப்போவதாகச் சொல்கிறார்கள் தூர்தர்ஷன் அலுவலகத்தில் வீற்றிருந்த மாதரசிகள். சுஜாதாவை கண்ணகி பார்வை பார்க்கிறாரகள்.

“இந்தக் கதை தொடர்கதையாக வந்தபோது லட்சக்கணக்கான வாசகர்களால் படிக்கப் பெற்று, அதன்பின் புத்தகமாக நான்கு பதிப்புகள் வந்துவிட்டது. இதுவரை யாருமே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே! இதுதான் ஆச்சரியமாக இருக்கிறது!” சொல்லியிருக்கிறார் வாத்யார். அவர்கள் கவலைப்படவில்லை. கதை நிறுத்தப்பட வேண்டும். இல்லை திருத்தப்பட வேண்டும். அவ்வளவுதான். பீரியட்!

நடராஜன் ஓர் அரசாங்க அதிகாரியின் சாமர்த்தியத்துடன் தீர்ப்பளித்தார். “இதை நான் டில்லிக்கு ரிப்போர்ட்டாக அனுப்புகின்றேன். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்து தக்க நடவடிக்கை எடுக்கலாம்,” என்றார். டில்லிக்குப் போய் திரும்பி வருவதற்குள் அந்த சீரியலின் குறுகிய வாழ் நாளான பதிமூன்று வாரம் முடிந்து விட்டது. அதன்பின் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை.

மேற்கண்ட விஷயத்தை சுஜாதாவின் 2ஆம் ஆண்டு நினைவுநாளில் நம்மோடு பகிர்ந்து கொண்டவர், மேற்படி தூர்தர்ஷன் டைரக்டர் நடராஜனேதான்.

இப்படி பல எதிர்ப்புகளை மீறி தூர்தர்ஷனில் வந்தது சுஜாதாவினுடைய எந்தக் கதை என்று எண்ணிக்கொண்டிருக்கும்போதுதான் அதே கதையான “வாய்மையே சிலசமயம் வெல்லும்” குறுநாவலைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. (தூர்தர்ஷனில் “மறக்க முடியுமா?” என்ற டைட்டிலில்)

முதல் அத்தியாயத்திலேயே சுஜாதாவின் தீவிர விவரிக்கும் பாணி துவங்கிவிடுகின்றது.

“கதை ஆரம்பிக்கும் ஜூன் மாதம் பதிமூன்றாம் தேதி கெட்ட காரியங்கள் பண்ணிய சென்னை நகரத்தைப் பவுன் கலர் சூரியன் எழுப்பியது. தூக்கம் நனைந்த கண்களுடன் தொண்ணூறு சதமானம் பதிவிரதா ஸ்தீகள் ப்ளாஸ்டிக் பால் வாங்கப் போனார்கள். தேர்தல் எழுதிய சுவரொட்டிகளை வாக்காளர்கள் நின்றபடி நனைத்துக் கொண்டிருந்தார்கள். கண்ணம்மாப்பேட்டை பெண்கள் இரவில் குடித்த கணவர்களை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார்கள். மெயின் ரோடின் விளிம்பில் வயதானவர்கள் நீண்ட ஆயுளை வேண்டி கான்வாஸ் கால்களில் ஓடினார்கள். பிள்ளையார் கோயில் தாண்டி மூசாசேட் தெருவில் நுழைந்து, கேபி பிக்சர்ஸ் போர்டைக் கடந்து மத்தியதர மொட்டை வீடுகள் சிலவற்றில் மஞ்சள் வர்ணம் அடித்த பழைய காலத்து வீடு தெரிகிறதே, அதன் கேட்டுக் கதவைக் திறந்துகொண்டு உள் நுழையுமுன் நாய் குரைக்கிறது. பாதகமில்லை. அந்த நாய் அப்பிராணி. ஏதோ சாஸ்திரத்துக்குக் குரைக்கும்; மோர்க் குழம்பு நக்கும். அப்பளம் தின்னும். பெயர் சீனு. ரங்கசாமி அய்யங்காரின் வீட்டில் ஒரு நாள் வந்து ஒட்டிக்கொண்டு விட்ட நாய். ஒரு ஜம் பிஸ்கட் போட்டால் பெற்ற தாயையும் பிறந்த பொன்னாட்டையும் காட்டிக் கொடுக்கும். பார்த்தீர்களா…! குரைத்துவிட்டு, உடனே பரிபூரண அந்நியரான உங்களைப் பார்த்து வாலாட்டுகிறது. அதைக் கடந்து இடது பக்கம் வந்தால் அறை வாசலில் ஏவி.விஜயகுமார் என்று போர்ட் போட்டிருக்கிரதே. அங்கேதான் நமக்கு ஜோலி. கதவைத் தட்ட வேண்டாம். திறந்தே இருககிறது. ஏவி.வி முகச்சவரம் செய்து முடிக்கும் வரை அறையைப் பார்க்கலாம்.”

கதாநாயகன் விஜயகுமாரைப் பற்றி அறிமுகம் செய்ய இவ்வளவு விவரங்கள் தருகின்றார். ஆனால் எதுவுமே போரடிக்கவில்லை. கதைச் சுருக்கம் என்னவென்றால் ஏவி.வி குடியிருக்கும் வீட்டின் சொந்தக்காரரின் பதின்மவயது மகளை ஒரு தடியன் டூரின் போது பொய் சொல்லிக் கூட்டிக் கொண்டு போய் ஆபாசப் படங்கள் எடுத்துவிடுகின்றான். ஏண்டா எடுத்தான் என்றால் அவனுக்குள் ஒரு ‘சிவப்பு ரோஜாக்கள்‘ கதை. கதாநாயகன் உதவியால் விஷயம் அமுக்கி வாசிக்கப்படுகின்றது. ஆனால் சமூக சேவகர்களும், ஊடகங்களும் சும்மா இருக்க மாட்டேங்கிறார்கள், தங்கள் தேவைக்காக விஷயத்தைப் பெரிது பண்ணுகின்றன. நாயகி விஜியின் எதிர்காலம் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை.

கதையின் ஆரம்பத்தில் ஓரிரு சம்பவங்கள் நகைச்சுவையுடன் துவங்குகின்றது. இந்தப் பத்தியைப் படிக்கும்போது சிரிப்பை அடக்க முடியவில்லை.

ரங்கசாமி அய்யங்கார் தனது மகள் சூர்யாவுக்கு கணக்குப் பாடம் சொல்லி கொடுத்துக் கொண்டிருகின்றார். சூர்யா மழலையுடன், “ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒரு வேலையை ஒரு மணிநேரத்தில் செய்தால், இரண்டு ஆணும், இரண்டு பெண்ணும் அதே வேலையை எத்தனை மணி நேரத்தில் செய்வார்கள்?” என்று அப்பாவைப் பார்த்தாள். அய்யங்கார் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு, “ஒரு ஆணும், ஒரு பெண்ணும் செய்யறதை ‘எக்ஸ்‘ னு வெச்சுக்கோ…” என்றார். உள்ளே நுழைந்த மனைவி, “இதெல்லாம்தான் குழந்தைக்குச் சொல்லித் தரதா?” என்றாள். ‘என்னடி பண்றது. பொஸ்தகத்தில் போட்டிருக்கே…?”

மேற்படி நகைச்சுவை சமாச்சாரங்களுக்குப் பிறகு எடுக்கிறது எக்ஸ்பிரஸ் வேகம்.  டூர் போகும் விஜியை வினோத் திட்டம் போட்டு அழைத்துப் போகும் நேரத்தில் படிக்கும் அனைவருக்கும் பதைபதைக்கும். சமூக சேவகர்களும், ஊடகங்களும் எப்படிப் பொறுப்பற்று இயங்கி, விஜியின் கையறு நிலைக்குக் காரணமாகின்றன என்று தெரியும்போது சுஜாதா எப்படி வாசகர்களைப் பாதிக்கிறார் என்று புரிகின்றது.

சிறுகதை என்றால் மட்டும்தான் நச்சென்ற முடிவு அவசியமா? குறு நாவல்களிலும் இது சாத்தியமே என்று இறுதி அத்தியாயத்தில் சுஜாதா தனது முத்திரையைப் பதித்து  தலைப்பை நியாப்படுத்துகின்றார்.

பை தி வே, இந்தத் தொடருக்கு மாதர் சங்கங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவித்தன என்று சுஜாதா போலவே நாமும் குழம்பிப் போகின்றோம். ஒரு பெண்ணை ஆபாசப் படம் எடுத்ததற்கா? இல்லை தகாத உறவு வைத்திருக்கும் சில பாத்திரங்களுக்காகவா? புரியவில்லை. புரியாதுதான். ஆசிட் முட்டை, அருவருக்கத்தக்க உறவுகள் இல்லாத டி.வி. சீரியல்களே இல்லை என்னும் இந்தக் காலத்தில் இருக்கும் மக்களுக்கு இருபது வருடங்கள் பின்னோக்கிப் பயணிப்பது கடினம்தான்.

நன்றி – சிமுலேஷன்

[123.jpg]

வாய்மையே சில சமயம் வெல்லும்
வாய்மையே சில சமயம் வெல்லும்’ முதலில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் தொலைக்காட்சித் தொடராக வெளி வந்த போது இதற்குச் சில சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. இன்றைய மாறுபட்ட சூழ்நிலையில் இந்த எதிர்ப்புகள் வலுவிழந்துவிட்ட நிலையில் கதையின் அடிப்படையில் உள்ள மனித நேயமும் சமூக யதார்த்தங்களும் மாறவில்லை.
— சுஜாதா

One thought on “வாய்மையே சில சமயம் வெல்லும் – சுஜாதா

  1. BaalHanuman April 7, 2011 at 11:58 PM Reply

    ‘வாய்மையே சில சமயம் வெல்லும்’ முதலில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் தொலைக்காட்சித் தொடராக வெளி வந்த போது இதற்குச் சில சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. இன்றைய மாறுபட்ட சூழ்நிலையில் இந்த எதிர்ப்புகள் வலுவிழந்துவிட்ட நிலையில் கதையின் அடிப்படையில் உள்ள மனித நேயமும் சமூக யதார்த்தங்களும் மாறவில்லை.
    — சுஜாதா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s